December 21, 2011

போகர் -7000- சாயா தரிசனம்-செய்யும் முறை- பதிவு-5




போகர் -7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -5

“”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:

பாடல் -1
சாயா தரிசனத்தின் வரலாற்றையும் , சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் சக்திகளையும் , பலன்களையும் தன் பாடல்களின் மூலம் விளக்கிய போகர் ,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் எவை என்பதைப் பற்றியும் ,
சாயா தரிசனத்தை செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை விஷயங்கள் எவை என்பதைப் பற்றியும்,  
போகர்  சொல்லியவற்றை பின்வரும் பாடல்களில் பார்ப்போம்

      
     “”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு
                                 வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
                துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                                 துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்
               சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண
               பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                 பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே
                                                                                        ------போகர் ---- 7000-----


“”””””வரியான புலிப்பாணி கண்ணேகேளு””””
என்னுடைய சீடனாகிய புலிப்பாணியே  நான் சொல்ல வருவனவற்றை பொறுமையுடனும் , நிதானமாகவும் கேட்பாயாக என்று,
சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறைகளைப் பற்றி போகர்  தன் சீடனாகிய புலிப்பாணியிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் .




               “”””””வாகுபெற ஆகாய தெரிசனந்தான்
        துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு
                        துப்புரவாய்ச் சாதனங்கள் உரைப்பேன்கேளாய்”””””
போகர்  ஆகாய தரிசனம் என்று குறிப்பிடுவது சாயா தரிசனத்தைத்தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

சாயா தரிசனத்தை , ஆகாய தரிசனம் என்று போகர்  குறிப்பிடுவதற்கு என்ன காரணம் என்பதை பின்வரும் பாடல்களின் மூலம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம் .
சாயா தரிசனத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு விதமான நன்மைகளை தனக்குள் அடக்கியதும் ,
                            அதிசயங்களையும்,
                           ரகசியங்களையும் ,
                          சித்துவேலைகளையும்
தன்னுள் கொண்டதுமான சாயா தரிசனத்தை செய்வதற்கு
எந்த முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்,
எந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்றும் ,
எந்த சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ,
சொல்கிறேன் கேட்டுக் கொள்வாயாக என்று போகர்  தன் சீடனான புலிப்பாணியிடம் கூறுகிறார் .


வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்குரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்று பொருள் .

துரிதமுடன் வையகத்தில் இருப்பதற்கு என்றால் ,
இந்த உலகத்தில் நன்மை எது? தீமை எது? என்பதையும் நாம் வாழும் காலத்தில்
நல்லது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
கெட்டது நடப்பதற்கு காரணம் என்னவென்றும் ,
ஆராய்ந்து அறிவதற்கும்,
இந்த உலகத்தில் இறப்பு அற்று வாழ்வதற்கு உரிய ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது என்றும் பொருள் .


இத்தகைய சிறப்பு வாய்ந்த ரகசியங்களை தன்னுள் கொணடுள்ள பயிற்சியான தவமான சாயா தரிசனத்தை செய்வதற்கு உரிய முறைகள் எவையென்று கூறுகிறேன் கேட்பாயாக என்கிறார்  போகர். 
               


சாயா தரிசனம் பயிற்சி முறை ஆரம்பம்:

                “””””சரியான பூமிதனில் மேடுபள்ளம்
                                         சட்டமுடன் ஆராய்ந்து சரிதைகாண””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்வதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.     
சாயா தரிசனம் செய்வதற்கு தேர்ந்து எடுத்த இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவர்  நிற்கும் பூமிக்குரிய இடம் மேடு பள்ளங்கள் இல்லாமல் , சமதளமாக இருக்க வேண்டும் என்கிறார்  போகர்.




            “””””பிரியமுடன் செங்கதிரோன் கிழக்குதிக்க
                                       பிசகாமல் மேற்குமுகந் தன்னைக்காணே””””
சூரியன் காலையில் கிழக்கு திசையில் உதிக்கும் பொழுது சாயா தரிசனம் செய்பவர்  மேற்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும் .
மேற்கு திசையில் தன்னுடைய முகம் இருக்கும் படி அதாவது மேற்கு திசையை நோக்கியபடி நின்று கொள்ள வேண்டும் .

மேற்கு திசையில் தன்னுடைய முகத்தைக் காட்டிக் கொண்டும் ,
கிழக்கு திசையில் அதாவது சூரியன் இருக்கும் திசையில் முதுகை காட்டிக் கொண்டும் ,
இருக்கும் படி நின்று கொள்ள வேண்டும் .

               

                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”

போகர்-7000- சாயா தரிசனம்- பலன்கள்- பதிவு-4




              போகர்-7000- சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு -4

“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
பாடல் - 5

          “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                             அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
               குன்றான மலைதனிலே இருக்கலாகும்
                            குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
              வென்றிடவே தேவாதி ரிடிகள்தம்மை
                           விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
                                                                             --------போகர் --7000---------
    “”””அன்றாட தரிசனத்தைக் கண்டமாண்பர்
                          அவனியில் தானும்ஒரு சித்தனைப்போல்
           குன்றான மலைதனிலே இருக்கலாகும்”””””
சாயா தரிசனத்தை அனுதினமும் தொடர்ந்து விடாமல் செய்து , சாயா தரிசனத்தைக் கண்டவர்கள் , சாயா தரிசனத்தைச் செய்தவர்கள் பல்வேறு சக்திகளைப் பெற்று படிப்படியாக ஆன்மீக உலகில் உயர்வார்கள் .
ஆன்மீக உலகில் ஒருவர்  உயர்ந்து கொண்டே வர அவருடைய உறவு முறைகள் பந்தங்கள் அறுந்து கொண்டே போகும் .
உறவு முறைகள் ஒவ்வொன்றாக அறுந்து கொண்டே வரும் , இறுதியாக யாரும் துணைக்கு கூட இல்லாமல் தனியாக இருக்கக் கூடிய நிலை கூட வரும் .
எல்லாவற்றையும் இழந்த நிலையில் , எல்லா பந்தங்களும் அறுந்த நிலையில் ,
மனது தெளிவு பெறும் ,
அறிவு விளக்கம் பெறும் ,
ஞானம் உதிக்கத் துவங்கும் .


இந்த உலகத்தில் உள்ள சாதாரண மனிதர்களுடன் இணைந்து இருக்க மாட்டார்கள் . 
இந்த உலக வாழ்க்கையிலிருந்து விலகி , உறவு முறைகளிலிருந்து விலகி , பந்தங்களை அறுத்து விட்டு தனியாக தனித்து வாழ்வதற்காக மனிதர்கள் யாரும் இல்லாத இடம் தேடி சென்று விடுவார்கள் .


அதனால் அவர்கள் மலைகளிலும் , குகைகளிலும் , தனித்து வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள் .
சித்தர்  என்ற நிலை அவர்களுக்குள் உருவாகி படிப்படியாக பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் .
தன்னுள் ஏற்படக் கூடிய மாற்றங்களை உணரத் தொடங்குவார்கள் .
ஞான விளக்கம் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரிவார்கள் .


இவ்வாறாக எல்லாவற்றையும் இழந்து உண்மையான சித்தர்களாக இருப்பவர்களை , இந்த உலகத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார்கள் .
உண்மையான சித்தர்  என்றால் யார் ?  அவர்  எப்படி இருப்பார்  என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் மன நிலையில் இந்த உலகத்தில் உள்ளவர்கள் இல்லை .


எல்லாவற்றையும் இழந்த நிலையில் தான் ஞானம் கிடைக்கும் என்பதையும், சித்தராக முடியும் என்பதையும்,  யார்  ஒருவர்  உணர்ந்து கொள்கிறாரோ அவரே ஞானம் அடையத் தகுதி உடையவர்.
அவரால் மட்டுமே ஞானம் அடைய முடியும் . 


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டு ஞானம் அடைவது என்பது கடினமான காரியம் .
ஆனால் உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைய உலகில் பிறந்த அனைத்து மனிதர்களாலும் முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


உலகியல் வாழ்க்கையில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்து விட்டார்கள் .
சூட்சும ரகசியங்களை மறைத்து விட்டார்கள் .
இதற்கு முக்கியமான காரணமாக கீழ்க்கண்டவை சொல்லப்படுகிறது
1 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமைப்படுத்தும் குணம்.
2 ஒரு சில மனிதர்களிடம் உள்ள அடிமையாக இருந்து பழக்கப்பட்டுப் போன மனம் .
3 ஞானம் அடையக் கூடிய வழிகளை அறிய ஆவல் உள்ளவர்களை இந்த உலகம் அறிய விடுவதில்லை .
4 ஞானம் அடைந்தவர்களை இந்த உலகம் சொல்ல விடுவதில்லை .
5 ஞானம் அடைந்து சொல்ல வந்தவர்களை இந்த உலகம் மதிப்பதில்லை அவமானப் படுத்துகிறது .
6 ஒரு சில உண்மை ஞானிகளை கொன்று விடுகிறது .
7 இவை எல்லாவற்றையும் மீறி சொல்ல வந்தவர்களின் கருத்துக்களை மதிக்காமல் அவர்களை அவமானப் படுத்தியதால் தான் அடைந்த ஞானத்தை பாடல்களில் மறைபொருளாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டார்கள் .


மேற்கண்டவை தான் உலகியலில் இருந்து கொண்டே ஞானம் அடைவதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டதற்கான காரணங்கள் ஆகும்


மேலே சொல்லப்பட்ட பல்வேறு காரணங்களால் தான் சாயா தரிசனம் செய்பவர்கள் இந்த உலகியல் வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு சித்தனைப் போல் குகைதனிலே , குகைகளிலே வாழக் கூடிய ஒரு நிலையை உண்டாக்கி விடுகிறது என்று போகர்  கூறுகிறார் .


     

      ”””””””குவலயத்தில் நீயும்ஒரு சித்தனைப்போல்
      வென்றிடவே தேவாதி  ரிடிகள்தம்மை
                     விண்ணுலகில் காண்பதற்கு இடம்உண்டாகும்”””””
விண்ணுலகம்
விண் என்றால் உயிர் . உயிரை உணர்ந்தவர்கள் விண்ணவர்கள் எனப்படுவர்.
இந்த உடலுக்குள் எப்படி அந்த விண் உயிராக இருக்கிறது . இந்த பிரபஞ்சம் முழுவதும் அந்த விண் எப்படி ஆற்றலாக இருக்கிறது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் விண்ணவர்கள்.
அந்த விண்ணவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் .
அதாவது உயிரை உணர்ந்தவர்கள் வாழும் உலகம் விண்ணுலகம் எனப்படும்.


சாயா தரிசனம் தொடர்ந்து விடாமல் செய்து சித்தர்  என்ற ஒரு உயர்ந்த நிலையை அடைந்தால்    தேவர்களும் , ரிஷிகளும் வசிக்கும், இருக்கும் இடமாகிய விண்ணுலகில் அவர்களை காண்பதற்கும் ,
அவர்கள் சாயா தரிசனம் செய்து சித்தர்  என்ற உயரிய நிலையை அடைந்தவர்களை காண்பதற்கும் உரிய ஓர்  உயரிய இடம் சாயா தரிசனம் செய்தவருக்கு கிடைக்கும் என்கிறார்  போகர்.

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                             போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”