January 14, 2012

பொங்கல் திருநாள்- சூட்சும ரகசியங்கள்




     பொங்கல் திருநாள்- சூட்சும ரகசியங்கள்

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் உணர்த்துவது எதை ,
மனிதர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்றவாறு விளக்குவது எதை ,
பாரம்பரியமான முறைகளின் மூலம் சொலல வருவது எதை,
சமுதாய நோக்குடன் குறிப்பிடுவது எதை ,
கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் காப்பாற்றி வருவது எதை ,
சிந்தனை சிதைந்து போகாமல் செதுக்கி வருவது எதை ,
உணர்வுகளில் பிரிந்து போகாமல் காப்பாற்றி வருவது எதை ,
இரத்த நாளங்கள் மரத்து போகாமல் சூடேற்றி வருவது எதை ,
மானிட சமுதாயம் மாண்டு போகாமல் உயிர் ஊட்டி வருவது எதை ,
மாக்களை மக்களாக்க முயற்சி செய்வது எதை ,
அநித்தியத்தை நித்தியமாக்க கனவு காண்பது எதை ,
பிரேதத்தை உயிருடன் உலா விட முயற்சிப்பது எதை ,
கானல் நீரில் கரைந்து போகாமல் காப்பாற்றி வருவதை எதை ,
சுயமரியாதை உள்ளவனையும் சிந்திக்க வைப்பது எதை ,
நாத்திகவாதியின் அறிவுத் திறனையும் சோதிக்க வைப்பது எதை ,
சமதர்ம சமுதாயத்தைப் பற்றி யோசிக்க வைப்பது எதை ,

என்று யோசித்து ,

உலகிலுள்ள மதங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தோமேயானால் ,
உணவு , உடை , வணக்க முறை வித்தியாசப்படும் , மற்ற படி மனிதன், மனிதனாக இருந்து , மனிதனை , மனிதன் நேசிக்க வேண்டும்,  என்று தான் அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன .


ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன .
அந்த பண்டிகைகளை நன்கு ஆராய்ந்தோமானால் ,அதில் பல்வேறு கருத்துக்களும் , சமுதாயத்திற்கு தேவையான பல்வேறு நடைமுறை செயல்பாடுகளும் மறைந்து இருப்பதை உணர்ந்து கொள்ளலாம் .

அத்தகைய பண்டிகைகள் பலவற்றில் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகையான  பொங்கல் பண்டிகையை நாம் எடுத்துக் கொள்வோம் .
பொங்கல் பண்டிகை கீழ்க்கண்ட நான்கு நாட்களில் நான்கு வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவையாவன ,

                       1.   போகி பண்டிகை
                      2.  பொங்கல் பண்டிகை
                      3.   மாட்டுப் பொங்கல்
                      4.   காணும் பொங்கல்

என நான்கு நாட்கள் தொடர்ந்து கொணடாடப்படுகிறது .

அந்த பண்டிகைகளின் உள் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தோமானால், அதில் உள்ள சூட்சும ரகசியங்கள் ,
இந்த சமுதாயம் நலம் பெற வேண்டி நமது முன்னோர்கள் செய்து வைத்து விட்டு போன ,
சமுதாய நோக்குடன் கொண்ட பொது நலன்கள்,
அதில் பிரதிபலிப்பதை நாம் நன்றாக உணரலாம் .


வருடா வருடம் நாம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறோம் ,
அந்த பண்டிகைகள் எதை சொல்ல வருகின்றன ,
எத்தகைய காரணங்களை விளக்குவதற்காக கொண்டாடப் படுகின்றன ,
எத்தகைய செயல்களை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுகின்றன ,
என்பதை இவ்வளவு காலம் நாம் சிந்திக்கா விட்டாலும் , உணரா விட்டாலும், அறியா விட்டாலும் இப்பொழுது நாம் அதை உணர்ந்து கொள்வோம் .


இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியமிக்க  பொங்கல் பண்டிகை எதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது என்று இப்பொழுது பார்ப்போம்.



போகி பண்டிகை :
விவசாயிகள் உழுது பயிரிட்டு ,அறுவடை செய்து, களத்து மேட்டில் குவித்து, நெல்லை காற்றில் துhற்றுவார்கள் .
அவ்வாறு துhற்றுவதால் காற்றானது மாசுபடும் .
காற்றில் பல்வேறு கிருமிகள் கலந்துவிடும் . பல்வேறு அசுத்தங்கள் காற்றில் கலந்து விட வாய்ப்புக்கள் உண்டு
அதை சுவாசிப்பது உடல் நலத்திற்கு கேட்டை உருவாக்கும் . மிகப் பெரிய தீங்கினை கொண்டு வர வாய்ப்புகள் உண்டு .
எனவே துhற்றிய பதர்களை ஒன்றாக குவித்து எரித்து விடுவார்கள் .
மேலும் , சில மூலிகைகளையும் சேர்த்து எரித்து விடுவதால் காற்றில் கலந்த கிருமிகள் இறந்து விடும் . அவைகள் நம்மை பாதிக்காது.
இதனால் மனிதர்களுக்கு எந்தவிதமான தீங்கான செயல்களோ , உடல்நலக் குறைபாடுகளோ ஏற்பட வாய்ப்பு இல்லாமல் தடுக்கப்படுகிறது .
இத்தகைய ரகசியத்தைத் தன்னுள் கொண்டது தான் போகிப் பண்டிகை .
இதைத் தான் போகி பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம் .



பொங்கல் பண்டிகை:
மறுநாள் எல்லா இடங்களையும் , அனைத்து இடங்களையும்,  துhய்மை செய்கின்றனர்.
தான் வாழ்வதற்கு தேவையான , வாழ்வாதாரத்தைக் கொடுக்க காரணமான, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

தாங்கள் கஷ்டப்பட்டு பல்வேறு இடையூறுகளுக்கிடையில்,  பல்வேறு துன்பங்களுக்கிடையில் , பல்வேறு விதமான மன உளைச்சல்களுக்கு இடையில் ,
உழுது பயிரிட்டு விளைவித்த நெல்லை , பொங்கல் செய்து சாப்பிடும் பொழுது , தாங்கள் பட்ட கஷ்டங்கள் , துன்ப ரேகைகள் , கவலைகள், மன உளைச்சல்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகுகிறது .

இன்பத்திற்கு உகந்த அந்த நாளை புத்தாடை உடுத்தி மனமகிழ்வுடன் பொங்கள் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
அதைத் தான் நாம் பொங்கள் பண்டிகை என்று கொண்டாடுகிறோம் .



மாட்டுப் பொங்கல் :
தனது விவசாயத்திற்கு உதவி புரிந்த மாட்டிற்கு நன்றி தெரிவிக்கும் நாள் மாட்டுப் பொங்கல் என்ற பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது .
மாட்டை அலங்கரித்து , அதற்கு பூஜை செய்து , கடவுளாக கும்பிட்டு ,அது விருப்பப்படும் உணவை சாப்பிடக் கொடுத்து , அதை சுதந்திரமாக ஊரைச் சுற்றி வலம் வரும் படி விட்டு விடுவார்கள் .
மாடும் சுதந்திரமாக சுற்றித் திரியும் .
மாட்டை சிறப்பிக்கும் இந்த நாளைத் தான் நாம் மாட்டுப் பொங்கல் தினமாக கொண்டாடுகிறோம் .



காணும் பொங்கல்:
இரத்தத்தை நிலமாக்கி ,
சிந்தனையை விதையாக்கி ,
உழைப்பை உரமாக்கி ,
கவலைகளை தண்ணீராக்கி ,
உழுது பயிரிட்டு விவசாயம் செய்து ,
களைத்து போன உழவர்கள் தாங்கள் உழுது பயிரிட்ட நெல்லை எடுத்து கொண்டு , வேறு ஊரில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று தங்கள் நெல்லை அவர்களுக்கு கொடுப்பார்கள் .
வேறு ஊரில் வாழும் உறவினர்களுடைய வேறு வகையான நெல்லை வாங்கி வருவார்கள் .

உறவினர்கள் ஒருவருக்கொருவர்  கூடி மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பார்கள் .
அந்த நாளைத் தான்,
ஒருவரை ஒருவர்  காணும் நாளாக அதாவது காணும் பொங்கலாக கொண்டாடுகிறோம் .


வேறுபட்ட பெயர்களில் உள்ள மாறுபட்ட பண்டிகைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்வோம் .

                                மனது சிறப்புற கொண்டாடுவோம் ,
                                சூத்திரங்களைப் பயன் படுத்துவோம் ,
                                சூட்சும ரகசியங்களை உணர்வோம் .

       கால தேவனின் நற்கருணையால்,
       கற்பனைக்கு எட்டாத சக்திகளை ,
       காலத்தே பெற்று மகிழ்வோம்.

                             நல்ல மனம் படைப்போம்,
                            நல்ல செயல்களைச் செய்வோம்,
                            நல்லோர்  களுக்கு உதவுவோம் ,
                           மனிதத் தன்மையை உணர்த்துவோம்,

     கால மாற்றத்தை அறிவோம் ,
     கருத்துக்களை மனதில் நிறுத்துவோம் ,
    அனுபவங்களை சிந்தனையில் செதுக்குவோம் ,

                         பகைநெஞ்சம் கொண்ட மாற்றாரின்
                                       குறுக்கு புத்தியை அறிவோம்,
                       தள்ளி நின்று அவருடன்
                                   பகை   மையைத் தவிர்ப்போம் .
                        உறவாடிக் கெடுப்போரை உதறுவோம் ,

      நயமாகப் பேசி நயவஞ்சகம்
                  செய்து வாழ்வோரை நசுக்குவோம் .
      எதிரிகளை வீழ்த்தும் உபாயம்அறிந்து
                    வீழ்த்தி வெற்றி பெறுவோம் .

                    
அண்டிப் பிழைத்து வருவோரை
                                     அரியணை ஏற மாட்டோம்.
                     அடிமையாக இருந்து காலத்தை
                                    வீணாய் கழிக்க  மாட்டோம்.


உறவுகளை மதித்து நடப்போம்,
உரிமையை விட மாட்டோம்,
தலைதாழல் செய்ய மாட்டோம்,


                              சுடர்  விழி காட்டுவோம் ,
                             சூழ் பகையை உடைப்போம் ,
                             ஆறாவதுஅறிவை விழிப்படையச் செய்வோம் ,
                              மனிதனாக இருக்க முயற்சிப்போம்,
                               மனித நேயம் வளர்ப்போம்,   


மானிடரை வழி நடத்துவோம்
சிந்திப்போம் சீர்துhக்குவோம் செயல்படுவோம்,
புத்துணர்ச்சி பெற்று உயர்வோம்,
புது உலகைப் படைப்போம்,

                         உழைப்பை உயிராக்கி விதைப்போம் ,
                         விடாமுயற்சி உரத்தை துhவுவோம் ,
                          தன்னம்பிக்கை நீரைப் பாய்ச்சுவோம்,
                          கர்மவினைக் களைகளைக் களைவோம்,
                           வெற்றியை அறுவடை செய்வோம்,
                           இன்பத் திரு நாளாம்,

                         தைப் பொங்கலை கொண்டாடுவோம்,
                         பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

                                         ---------கவிதைகள்--
                                ----பாலகங்காதரன்----