January 01, 2012

உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-2



             உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-2

                           “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பாடல் - 3 :
           “””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
                                    பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
                  முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே
                                    முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்
                  வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்
                                    வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்
                 கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
                                     கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
                                        --------------- உரோமரிஷி ----- பஞ்சபட்சி சாஸ்திரம்--
      “””””பத்தான இந்தநுhற்கிணை யேயில்லை
                                      பண்பான தனங்கோடி ஈந்தாலுந்தான்
             முத்தான சாஸ்திரத்தை வெளிவிடாதே””””””
உலகத்தில் பொது அறிவை ஊட்டும் எத்தனை விதமான புத்தகங்கள் வந்தாலும் ,
அறிவைத் திறந்து ஊக்கம் ஊட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆன்மீகத்தை விளக்கும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஞானத்திற்கான வழியைக் காட்டும் புத்தகங்கள் வந்தாலும் ,
முக்திக்கான வித்தை தன்னுள் கொண்ட புத்தகங்கள் வந்தாலும் ,
நான் யார்  என்பதை வெளிக்கொணரும் புத்தகங்கள் வந்தாலும் ,
ஆதி , அந்தம் சூட்சுமங்களை தன்னுள் அடக்கிய பல்வேறு புத்தகங்கள் வந்தாலும் ,

இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்திருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் வந்துகொண்டிருந்தாலும் ,
இந்த உலகத்தில் எத்தகைய புத்தகங்கள் இனி வந்தாலும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு இணையான இணை என்று சொல்ல முடியாத புத்தகம் என்ற ஒனறு கிடையாது .


இத்தகைய சிறப்பு வாய்ந்த ,
அதி சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
ஞானத் திறவுகோலை தன்னுள் கொண்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
கோடிக் கண்க்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கிறேன் , எனக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கற்றுக் கொடு என்று யார்  கேட்டாலும் சொல்லிக் கொடுக்கக் கூடாது .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அணு அளவு ரகசியங்களை சொல்லக் கூடாது என்கிறார்   உரோமரிஷி .



               ””””””””முன்னோர்கள் மனதடக்கம் செய்துவைப்பார்”””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து , பயன்படுத்தி , வாழ்க்கையில் வெற்றி கண்டு , அதன் பலனை அனுபவித்து,  சுவைத்த ,நம்முடைய முன்னோர்கள்
தான் அனுபவித்து  சுவைத்த பலன்களை இந்த உலகத்தில் உள்ளவர்கள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி கண்டு இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கில்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அதி சூட்சும ரகசியங்களை எல்லாம் தாங்கள் இயற்றிய பாடல்களில் மறைமுகமாக எழுதி வைத்துள்ளனர் .



“”””””வித்தான பொருள்களெல்லாம் இதிலேதோன்றும்”””””
வித்து என்றால் மூலம் என்று பொருள் .
அதைப் போல மரத்திற்கு வித்து என்பது விதை .

உலகியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
அருளியல் நிலை என்று எடுத்துக் கொண்டாலும் ,
இத்தகைய இரண்டு வேறுபட்ட நிலைகளுக்கும்  மூல வித்தாக இருந்து அதாவது
வாழ்க்கையில் துன்பம் நீக்கி இன்புற்று வாழவும் ,
ஞானத்திற்கான திறவுகோலை பெற்று பிறப்பு , இறப்பு அற்று வாழவும் ,
தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்ட வித்தாக இருக்கிறது.

அதாவது வாழ்க்கையை இன்பமாக வாழவும் ,ஞானத்தை அடையவும் தேவையான மூல ரகசியங்களை தன்னுள் கொண்டுள்ளது பஞ்ச பட்சி சாஸ்திரம் .



               “”””””””வேதாந்த சுழிமுனையு மிதுவேயாகும்”””””””
வேதாந்தம்
வேதம் +   அந்தம்  = வேதாந்தம்
வேதம் என்றால் பஞ்சபூதங்கள் என்று பொருள் .
அந்தம் என்றால் முடிவான நிலை , மூலநிலை என்று பொருள் .
பஞ்ச  பூதங்களுக்கு முடிவான நிலையாக , மூல நிலையாக உள்ளது எது என்று கண்டபோது வேதாந்தம் உண்டாயிற்று .

மனிதன் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , விண் என்ற ஐந்து பஞ்சபூத பிரிவுகளுக்குள் உலகம் , இயக்கமண்டலம் , உயிர்கள் அனைத்தும் அடங்கக் கண்டான் . இந்த ஐந்து பஞ்ச பூதங்களைப் பற்றிய தொகுப்பு தான் வேதம் .
மனிதன் வேதத்தில் விண்ணின் கூட்டான பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டான் .
விண் என்பது இயக்க நிலையின் முதல் கட்டம் என்பதை அறிந்து கொண்டான் .
அது இருப்பு நிலையிலிருந்து பிரிந்தது என்பதை உணர்ந்து கொண்டான் .

ஆகவே மனிதன் இருப்பு நிலையை ஆதி என்றும் , அனாதி என்றும், பிரம்மம் என்றும் , கடவுள் என்றும் , இறைவன் என்றும் ,பூரணம் என்றும் ,பல்வேறு பெயர்களை அதற்கு சூட்டி வேதத்திற்கு முடிவாக முதற்பொருளாக கண்ட அறிவின் விளக்கத்துக்கு வேதாந்தம் என்று பெயரிட்டான் .

உலகத் தோற்ற ரகசியங்களைத் தன்னுள் கொண்ட வேதாந்தத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது .



       “””””””கொத்தான அடிகொடுத்து குடிவரைக்கும்
                                        கூறினேன் வாழ்வதற்காய்க் கூறினேனே””””””
 பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சக்திகள் , மகிமைகள் , நன்மைகள் ஆகியவற்றை வார்த்தைகளால் ரகசியமாகவும் , சூட்சுமமாகவும் கூறியிருக்கின்றேன் .
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் படித்து பயன்பெற்று சகலவிதமான இன்பங்களையும் , வெற்றிகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக கூறினேன் என்கிறார்  உரோமரிஷி .


பாடல் - 4 :
             “”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
                                         பாராமல் போனதினாலே பழுதேயாகும்
                      கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
                                        குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே
                    வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
                                        வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை
                    நச்சிவித்தை யிதற்குநிகர்  ஒன்றுமில்லை
                                         நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
                                                -----------உரோமரிஷி----பஞ்சபட்சி சாஸ்திரம்--
     “”””””பட்சிவித்தை ஒருபோதும் பழுதேயில்லை
                              பாராமல் போனதினாலே பழுதேயாகும்””””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி எந்த காரியத்தைச் செய்தாலும் அந்த காரியம் தோல்வியில் முடியாது .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் தோல்வியில் முடிந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன் படுத்தி செய்த செயல் கவலையைத் தந்தது ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப்  பயன் படுத்தி செய்த செயல் இழப்புகளைத் தந்தது,
என்று யாராவது சொல்வார்களேயானால் அவர்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து இருக்கவில்லை என்று பொருள்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்குரிய நேரங்களை சரியாக அறிந்து , சரியான காலத்தில் , சரியான உபகரணங்களைக் கொண்டு , சரியான முறையில் பயன்படுத்த தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே பஞ்ச பட்சி சாஸ்திரம் தவறாகுமே ஒழியே ,
முறைப்படி ஒழுங்காக பஞ்ச பட்சி சாஸ்திரம் பயின்று பயன்படுத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை என்கிறார்  உரோமரிஷி .



   “””””””கொச்சிவித்தை பலிப்பதுதான் ஏனோலே
                                  குறிகுணங்கள் நேரமங்கே குறைவிதாலே”””””””
காலங்கள் நம்மை துன்பச் சகதியில் தள்ளி விட்டாலும் ,
நேரங்கள் நம்மை அழித்து முன்னேற்றத்தை தடுத்தி நிறுத்தினாலும் ,
நம் மேல் பகை கொண்ட , வெறுப்பு கொண்ட , வஞ்சக நெஞ்சம் கொண்ட, மனிதர்களால் செய்யப்படும் மந்திரம் , யந்திரம் போன்றவை பலித்து நம்மை நம் வாழ்க்கையை துயரக் கடலில் தள்ளி விடக் காரணம்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறையாக அறிந்து பயன்படுத்தத் தெரியாததே காரணம் என்கிறார்  உரோமரிஷி .   



””””””வச்சிவித்தை கருக்குருவும் கண்டபேர்க்கு
                              வணங்குமடா பட்சிவித்தை மயக்கமில்லை”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரம் சரியான முறையில் இயங்க வேண்டுமென்றால் அதன் மையக் கருவான சில விஷயங்கள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் முக்கியமானவை :

1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தல் முறையாக பயன் படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 மூலிகையின் அவசியமும் , ரகசியமும் தெரிந்து இருக்க வேண்;டும் .
4 மந்திரம் , யந்திரம் , தந்திரம் உபயோகம் தெரிந்து இருக்க வேண்டும்

இவைகளைத் தவிர வேறு சில முக்கியமான விஷயங்களும் தெரிந்து இருக்க வேண்டும் .

பஞ்சபட்சி சாஸ்திரத்தின் ரகசியங்களை எல்லாம் ஐயம் இன்றி தெரிந்து கொண்டு முறையாக பயன்படுத்தி யார்  ஒருவர்  வெற்றிகொள்ளும் முறைகளை அறிந்து இருக்கிறாரோ ,
அவர்  எந்த காலத்தில் எத்தகைய செயல்களைச் செய்தாலும் , அவருக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் வெற்றியையே தரும் தோல்வியைத் தராது என்கிறார்  உரோமரிஷி .



””””” நச்சிவித்தை யிதற்குநிகர்  ஒன்றுமில்லை
                              நாட்டிலேயித் தொழிலைச் சொல்லொண்ணாதே””””””
மனிதனின் தவறான செய்கைகளினால் நம் இன்பங்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டாலும் ,
காலம் நம் வாழ்க்கையை நசுக்கி எள்ளி நகையாடினாலும் ,
துன்பத்தின் துயர ரேகை நம் முகத்தில் படர்ந்தாலும் ,
தோல்வியே நம் வாழ்க்கையின் தாரக மந்திரமானாலும் ,
கிரகங்களின் பார்வை நம்மை எரித்தாலும் ,
பிரபஞ்ச விதிகள் நம்மை நசுக்கினாலும் ,
கர்மவினையின் பாதிப்புகள் நம்மை அலைக்கழித்தாலும் ,
கடவுளின் கருணைப் பார்வை நமக்கு இல்லாவிட்டாலும் ,

இவைகள் அனைத்தையும் களைந்து , இவற்றின் தாக்கத்தைத் தனித்து, இன்பத்தை நமக்கு அளித்து ,
வெற்றி என்னும் எட்டாக்கனியை நாம் சுவைப்பதற்கு கொடுக்கக் கூடிய ஒரு சாஸ்திரம் உலகத்தில் உண்டு என்றால் அந்த சாஸ்திரம் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டும் தான் என்கிறார்  உரோமரிஷி.

இத்தகை சிறப்பு வாய்ந்த வாழ்க்கையை வளமாக்க தேவையான அதி அற்புதமான சூட்சும ரகசியங்களைத் தன்னுள் கொண்ட சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கும் சொல்லிக் கொடுக்காதே,
சொல்வது பாவம் என்கிறார்  உரோமரிஷி .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளைப் பார்த்தோம் அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் வரலாற்றைப் பார்ப்போம் .

                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”