February 01, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பரமாய-பதிவு-4




        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பதிவு-4
      
                           “”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தைப் பற்றியும் , அதன் மகிமையைப் பற்றியும் , அதன் தன்மைகளைப் பற்றியும் , அதன் சிறப்புகளைப் பற்றியும் இயேசு கிறிஸ்து பல்வேறு உவமைகள் மூலம் விளக்குகிறார்.

பரலோக ராஜ்யம் :
பரம் என்றால் நேர்  இல்லாதது ; உவமை இல்லாதது ;அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது; என்று பொருள் .
பரலோக ராஜ்யம் என்றால் அதற்கு இணையான ஒன்று இல்லை என்று பொருள் .


 வசனங்கள்-1:
இத்தகைய சிறப்பு மிக்க பரலோக ராஜ்யத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் விளக்குகிறார்:

பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது;.அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
                                                                                  மத்தேயு-13:31

பரலோக ராஜ்யத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் , பல்வேறு விதங்களில், பல்வேறு வசனங்களின் மூலம் உவமைகளாக விளக்கிக் கூறிய இயேசு,
பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு உவமையாக கூறுகிறார்.


பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை நேரடியாக கூறாமல் ,மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு அந்த பொருளின் தன்மைகளை அறிந்து , உணர்ந்து விளங்கிக் கொள்வதன் மூலம்,
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை உணர முடியும் என்ற காரணத்திற்காகவே பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்.

ஒப்பிடுதல் என்பது தமிழ் இலக்கணத்தில் உவமைத் தொகை எனப்படுகிறது. உவமைத் தொகை என்றால் என்ன என்பதையும் அது எதை விளக்குகிறது என்பதையும் பார்ப்போம் .

உவமைத் தொகை:
ஒரு பொருளை அப்படியே கூறின் சிறப்பன்று . அதனோடு ஒத்த இன்னொரு பொருளோடு சேர்த்துக் கூறின் அப் பொருளுக்குச் சிறப்பு ஏற்படும். பொருளும் நன்கு விளங்கும்.
சிறப்புப் பொருளும் தெளிவாக அமைவதற்காகத் தொடர்புடைய பொருளை உவமையாக்கிக் காட்டி விளக்குவர்.
உவமைக்கும் , உவமிக்கப்படும் பொருளுக்கும் , இடையில் போல , போன்ற,  நிகர , அன்ன என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத் தொகை எனப்படும்.

எடுத்துக் காட்டு:
மலர்ப்பாதம்
மலர்ப்பாதம் என்றால் மலரைப் போன்ற பாதம் என்று பொருள் .

                        மலர்----------------உவமை
                     போன்ற-------உவம உருபு
                        பாதம்---------உவமேயம்

மலர்  என்பது அதன் தன்மையில் எப்படி மென்மையாக இருக்குமோ, அதைப் போன்றே பாதங்களும் மலரைப் போல மென்மையாக இருக்கின்றன .

மலரைப் பற்றி முதலில் கூறி , மலரின் சிறப்புக்களைப் பற்றி , மலரின் தன்மைகளைப் பற்றி முதலில் கூறி , மலரைப் பற்றி விளக்கி விட்டு , பிறகு மலருடன் பாதங்கள் ஒப்பிட்டு விளக்கப் படுகிறது .
இதுவே உவமைத் தொகை எனப்படும்.

அதைப் போல் இயேசுவும் முதலில் கடுகு விதையின் பண்புகளை , அதன் தன்மைகளை , அதன் சிறப்புகளை நேரடியாக விளக்கி விட்டு பிறகு கடுகு விதையுடன் பரலோக ராஜ்யத்தை ஒப்பிட்டு விளக்குகிறார்.


அறிவில் முதிர்ச்சி அடைந்து , ஆன்மீக விளக்கம் பெற்று , தெளிவான மனநிலையை அடைந்து,
ஞான விளக்கத்தைப் பெற்றவர்கள் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் மறை பொருளாக மறைத்து வைத்து இருக்கின்றனர்.

உண்மை உணர்ந்தவர்கள் இந்த ரகசியங்களை நேரடியாக இந்த சமுதாயத்திற்கும் மக்களுக்கும் உணர்த்தாமல்,
உவமைகளாகவும் , வார்த்தை ஜாலங்களையும் பயன்படுத்தித் தான் எழுதி வைத்து இருக்கின்றனர் , பேசி இருக்கின்றனர்.
தாங்கள் உணர்ந்தவைகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பிரபஞ்ச ரகசியங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூட்சும ரகசியங்களாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டனர்.

இயேசுவும் அவ்வாறே மிக உயர்ந்த , மதிப்புமிக்க , ஈடு இணையற்ற, ஒப்பிட்டுக் காட்ட முடியாத, பரலோக ராஜ்யத்தை உவமைகளாக சொல்லி மறைபொருள்களை வெளிப்படுத்துகிறார்.

முதலில் இயேசு பரலோக ராஜ்யத்தை கடுகு விதையுடன் ஒப்பிடுகிறார். பிறகு இயேசு கடுகு விதையின் சிறப்புகளை தன்மைகளை விளக்குகிறார்.
அதாவது கடுகை வைத்து என்ன செயல் செய்யப்படுகிறது என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
கடுகை எடுத்து ஒருவன் நிலத்தில் விதைத்தான் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-2:
எந்த காரணத்திற்காக கடுகை அவன் நிலத்தில் விதைத்தான், அதில் உள்ள தத்துவம் என்ன , அதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன , இதன் மூலம் இயேசு சொல்ல வரும் கருத்து என்ன , என்பதை இயேசு அடுத்த வசனத்தில் சொல்கிறார்:

அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் , வளரும் போது,  சகல பூண்டுகளிலும் பெரிதாகி , ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து அடையத் தக்க மரமாகும் என்றார்
                                                                                மத்தேயு-13:32

கடுகு விதையானது எல்லா விதைகளுடன் , மற்ற விதைகளுடன் ஒப்பிடும் பொழுது சிறிய அளவில் இருக்கிறது.
ஆனால் அது வளரும் பொழுது பெரியதாகி , மரமாகி , கிளைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டு , இலைகள் பலவற்றை பெற்று , ஓங்கி வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
அதன் தன்மையை அறிந்து,
அதன் இயல்புகளை உணர்ந்து,
அதன் வளர்ச்சியால் கவர்ந்து,
அதன் வசீகரத்தால் இழுக்கப்பட்டு,
பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்குகின்றன.


இத்தகைய சிறப்பு மிக்க நிலையை சிறிய கடுகானது மரமான பின்பு அடைகிறது.
கடுகு விதை என்று பார்க்கும் பொழுது அது மிகச் சிறியதாக இருக்கிறது.
ஆனால் அது விதைக்கப்பட்டு வளரும் பொழுது , பெரியதாகி , மரமாகி, கிளைகள் இலைகள் கொண்டு, பறவைகள் வந்து தங்கும் அளவுக்கு பெரியதாகிறது .
இவைகள் அனைத்தும் அந்த கடுகு விதைக்குள் மறைந்து இருக்கிறது. பார்த்தால் தெரிவதில்லை.
கடுகு விதை வளர்ந்து , முதிர்ச்சி அடையும் பொழுது , கடுகு விதைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ,அனைத்தும் காலத்திற்கு தகுந்தவாறு பருவகாலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுகிறது.

அதாவது சூட்சும விஷயங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
காலம் வரும் பொழுது வெளிப்படுகிறது.


அதைப் போல்,
பரலோக ராஜ்யம் - பிரபஞ்சம் , பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள் , உயிர்கள், உயிர்களின் மாற்ற நிலைகள் , போன்ற பல்வேறுபட்ட நிலைகளை
தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது இறைவன் பரலோக ராஜ்யத்தின் வாசல்களைத் திறந்து படைப்புகளை உருவாக்குகிறார்.

கடுகு எவ்வாறு தன்னுள் இருக்கும் சூட்சும ரகசியங்களை காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறதோ அதைப் போலவே,
பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை இறைவன் காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறார்  என்கிறார் இயேசு.



ஓவையார்:
      “”பரமாய சக்தியுட் பஞ்சமாபூதந்
         தரமாறிற் றோன்றும் பிறப்பு”””
                                -----------ஔவையார்--------ஔவைக்குறள்-------
பரம் என்று சொல்லப் படுகின்ற ஆதிநிலை,  முதல்நிலை , மூல நிலை,  இருப்பு நிலை , இயக்க நிலையாக மாற்றம் அடைந்து , பரிணாமம் அடையும் பொழுது விண் என்ற முதல் பூதமும் அதனைத் தொடர்ந்து வரிசையாக,
விண் , காற்று , நெருப்பு,  நீர்,  நிலம் என்று வரிசையாக ஐந்து பூதங்களாக பஞ்ச பூதங்களாக தோன்றுகிறது .

மனிதன் முதலில் நிலத்தைக் கண்டான் .
பிறகு நிலத்தை தோண்டும் பொழுது நீரைக் கண்டான்.
அதனுள் மறைந்து கொண்டு இருந்த நெருப்பு வெளிப்படும் பொழுது நெருப்பைக் கண்டான் .
மேலும் ஆராய்ந்து நோக்கும் பொழுது அவற்றில் காற்று ஊடுருவி நிரம்பி இருப்பதைக்  கண்டான்.
இவைகள் அனைத்தும் விண்ணிலிருந்து தோன்றுகிறது என்பதை உணர்ந்தான்.
விண் என்ற முதல் பூதம் தான் இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் என்பதை உணர்ந்து கொண்டான்.

ஆனால் மனிதன் எவ்வாறு , எந்த நிலையில் , பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டானோ , அதே நிலையிலேயே பஞ்ச பூதங்களை வரிசைப் படுத்தி விட்டான்.
நிலம் , நீர் ,  நெருப்பு , காற்று ,விண்
என்ற நிலையில் ஐந்தாக வரிசைப் படுத்தி விட்டான்.


இந்த பஞ்ச பூதங்கள் தான் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கூடி ,கால மாற்றத்திற்கு ஏற்றவாறு உயிரினம் உருவாக காரணம் ஆகிறது.
உயிர்கள் தோற்றம் உருவாக காரணம் ஆகிறது ,ஆதாரம் ஆகிறது, அடிப்படையாக இருக்கிறது. அதாவது,

இருப்பு நிலை அசைந்து,
விண் என்ற இயக்க நிலையாகி,
விண் பஞ்சபூதங்களாகி ,
உயிரினங்களாக பரிணாமம் அடைகிறது.

ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் அடைகிறது.
அதாவது ஒன்று அதன் இயல்பில் மாற்றம் அடைந்து மற்றொன்றாக உருமாற்றம் அடைகிறது.
இதனையே ஔவையார்  தரம் மாறுதல் என்கிறார்.

தரம் மாறுதல் என்றால் இயல்பில் அமைப்பில் வடிவத்தில்  என்று பல்வேறு தரப்பட்ட நிலைகளில் மாற்றம் அடைகிறது என்று பொருள்.
                      இருப்பு நிலையில் - தான்
                     இயக்க நிலையாகிய விண்,
                    விண்ணின் கூட்டாகிய பஞ்சபூதம் ,
                     பஞ்சபூத கூட்டாகிய உயிரின மாற்றம்,
ஆகியவை அடங்கி இருக்கிறது.

இருப்பு நிலை என்று சொல்லப்படுகின்ற பரம் , அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொன்றாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் ஔவையார்,
           “”””பரமாய சக்தியுள்”””””
இருப்பு நிலையான பரத்தில் மறைந்திருக்கும் இயக்க நிலையாகிய விண் என்ற சக்தி,

             “”””பஞ்சமா பூதம்”””””
பஞ்ச பூதங்களாக உருவாகி,

         “”””தரம் மாறித் தோன்றும் பிறப்பு””””
உயிரினமாக பிறப்பெடுக்க பரம் பல்வேறு தரப்பட்ட நிலையில் மாற்றம் அடைகிறது என்கிறார்.




இயேசு கிறிஸ்து – ஔவையார்:
பரலோக ராஜ்யத்தில் உள்ளவைகளை இறைவன் எவ்வாறு காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறாரோ,

அவ்வாறே
ஔவையாரும் இருப்பு நிலை காலம் வரும் பொழுது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்

                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                         போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”