January 07, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்- யாருக்கு சொல்லக் கூடாது - பதிவு-5




உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்லக் கூடாது -                                                        பதிவு-5

                         “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் -யாருக்கு சொலலக் கூடாது:

பாடல்-1
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  எத்தகைய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும்  உபதேசிக்க வேண்டும் என்று சொன்ன உரோமரிஷி .
யாருக்கு , எத்தகைய தன்மைகள் கொண்டவர்களுக்கு , பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லக் கூடாது .
யாருக்கு எத்தகைய குணநலன்கள் கொண்டவர்களுக்கு வெளி விடக் கூடாது,
சொன்னால் என்ன நடக்கும் ,
என்பதைக் கீழ்க்கண்ட பாடல்களில் உரோமரிஷி விளக்குகிறார் .

    “””””””””செப்பினதோர் சாஸ்திரத்தை உலகமீதில்
                                          ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                   தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                          தன்குலத்தை நாசமது செய்யும்பாரு
                  கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                                        குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்
                  இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                         ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
     
                                                 -------உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரதம்---

     “”””””””செப்பினதோர்  சாஸ்திரத்தை உலகமீதில்
                                        ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                 தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                        தன்குலத்தை நாசமது செய்யும்பாரு””””””””
பாவத்தின் விளைவுகளை உணர்ந்து செயல்படும் ,
தன்னலம் இல்லா உள்ளம் கொண்டு இயங்கிடும் ,
மற்றவர்  துன்பம் கண்டு வருந்திடும் ,
வறுமையின் தாக்கம் கண்டு இளகிடும் ,
அறியாமையின் நிலை கண்டு கலங்கிடும் ,
தனக்கு மற்றவர்கள் எத்தகைய கெடுதலான செயல்களைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு செய்யாமல் இருந்திடும் ,
இளகிய மனம் கொண்ட தன்னலம் இல்லா உள்ளங்களுக்கு மட்டுமே பஞ்ச பட்சி சாஸ்திரத்தைச் சொல்ல வேண்டும் .

இத்தகைய தன்மை இல்லாத ,உலகத்தில் உள்ள மக்களுக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொன்னால் 18 சித்தர்களுடைய சாபம் அவர்களுக்கு உண்டு.


18 சித்தர்களுடைய சாபமானது அவர்களுடைய பரம்பரையை வம்சத்தை இல்லாமல் அழித்து விடும் .
வம்சமானது வேரோடு அழிந்து விட்ட காரணத்தால் மீண்டும் தழைக்கவே முடியாது என்கிறார்  உரோமரிஷி .



 ””””கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                     குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்”””
தனது வாழ்க்கையை ஓட்டுவதற்கும் ,
தனது பசியை தீர்த்துக் கொள்வதற்கும்,
இரை தேடுவதற்கும் ,
ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரம் தாவி குதித்து ஓடும் குரங்கின் வாழ்க்கையைப் போல ,

பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான மனிதர்களிடம் சொல்பவர்களின் வாழ்க்கையானது ,
அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டு , நிலையில்லாத ஒரு வாழ்க்கையாக அலைக்கழிந்து , துன்பத்துடனும் ,துயரத்துடனும் கவலையுடனும் இருக்கும் .

இத்தகைய நிலையானது ஒவ்வொரு ஜென்மத்திலும் இருக்கும்.
ஜென்மம் ஜென்மமான இத்தகைய துன்ப நிலையே தொடரும் என்கிறார் உரோமரிஷி .



       “””””””””இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                           ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு வாலைத்தாயின் சாபம் அவர்களுக்கு உண்டு .
அதாவது வாலைத்தாயின் சாபமானது அவர்களை வந்து சேரும் .
வாலைத்தாயின் சாபத்திற்கு ஈடான சாபம் என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை என்கிறார் உரோமரிஷி .

வாலைத்தாய்
வாலைத்தாய் என்றால் என்ன , யார் என்பதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் , இந்த தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள் .

இருப்பு நிலை , அசைந்து இயக்க நிலை தோன்றுவதற்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படுகிறது . அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாய் என்கின்றனர். அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாயாக உருவகம் செய்கின்றனர்.

இருப்பு நிலையே அசைவதற்கு காரணமாக இருப்பதால் ,
இருப்பு நிலை இயக்க நிலையாக மாற்றமடைவதற்கு அடிப்படையாக இருப்பதால் ,
இருப்பு நிலை பரிணமித்து இயக்க நிலையாக தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பதால் ,

வாலைத்தாய் உயர்ந்த , ஒரு சக்தி வாய்ந்த , தெய்வமாக கருதப்படுகிறது .
இத்தகைய வாலைத்தாயின் சாபத்தைத் தான்  நீக்க முடியாத சாபம் என்கிறார்  உரோமரிஷி .



பாடல் -2

           “””””””சூழுமே இருபத்தோர்  தலைமுறைக்கும்
                                            சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                     மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்
                                          மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
                   நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                         நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
                  வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                        மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””
                             
                                                     -----உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரம்---

        “””””””சூழுமே இருபத்தோர் தலைமுறைக்கும்
                                       சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                   மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்”””””””

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு பாவமானது 21 தலைமுறை வரைக்கும் தொடரும் .
பாவத்தின் பலனானது 21 தலைமுறைகளை துன்பக் கடலில் ஆழ்த்தி, சோகத்தில் மிதக்க விட்டு , நிலையில்லாத வாழ்க்கையைக் கொடுத்து, அலைக்கழிக்கும் .

இந்த பாவத்தை ,
நிவர்த்தி செய்ய பரிகாரங்களோ ,
நிவர்த்தி செய்ய சக்தி கொண்டவர்களோ ,
நிவர்த்தி செய்வதற்கு உரிய முறைகளோ எதுவும் கிடையாது .
பாவத்தின் பலனை 21 தலைமுறைகள் அனுபவித்துத் தான் தீர வேண்டும் .

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுடைய குலம் அழிந்து, ஒன்றுமில்லாமல் போகும் என்கிறார்  உரோமரிஷி .



                 “””””””””மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
           நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
          வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””

எண்ணம் , சொல் , செயல் ஆகிய அனைத்தையும் ,
எப்பொழுதும் சிவனின் மேல் செலுத்த வேண்டும் .
எப்பொழுதும் சிவனுடைய சிந்தனையாகவே இருக்க வேண்டும் .

சிவ சிந்தை என்றால் ,
ஆதி நிலை , முதல் நிலை, மூல நிலை என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலையின் மேல் மனதை வைக்க வேண்டும் என்று பொருள் .
அத்தகைய மனதை உடையவர்களுக்கே பஞ்சபட்சி சாஸ்திரம் பலிக்கும் .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் அதாவது மையமான கருப்பொருள் எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,

ஒவ்வொரு நாளும் பஞ்ச பட்சிகள் செய்யும் தொழிலுக்குரிய நேரங்களை தனித்தனியாக பிரித்து அவை எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது உண்டாக்கக் கூடிய நன்மைகள் தீமைகள் எவை என்பதையும் ,

ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது பயன்படுத்தப் பொருள் எவை என்பதையும் ,
அவற்றிற்கு உரிய மூலிகைகள் , மந்திரங்கள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து அவை எவை என்பதையும்,

வேறுபடுத்தி தனித்தனியாக விளக்கி , எளிதாக பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக , முறைப்படுத்தி , ரகசியங்களை அவிழ்த்து கூறுகிறேன் .

இத்தகைய சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை உலகத்தில் உள்ள நயவஞ்சக எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு சொல்லாதே ,
அப்படி சொன்னால் மேலே சொல்லப் பட்டது போல பாவமானது 21 தலைமுறை வரை பாதிக்கும் என்கிறார்  உரோமரிஷி .


பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும்,  யாருக்கு சொல்லக் கூடாது என்று பார்த்தோம்.

அடுத்து மிக உயர்ந்த கலையாகிய , பஞ்ச பட்சி சாஸ்திரம் இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறியாமல் இருப்பதற்கான
காரணங்கள் எவை என்பதை பற்றி அடுத்து காண்போம் .


                      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                          போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”