December 26, 2011

போகர்-7000-சாயா தரிசனம்-பொதுவானமுறை-பதிவு-8



       போகர் -7000- சாயா தரிசனம் - பொதுவான முறை - பதிவு -8

                       “”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                                                   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - பொதுவான முறை:

போகர் - 7000 - என்ற புத்தகத்தில் , போகர்  சொல்லிய படி சாயா தரிசனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று கண்டோம் .
இந்த உலகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களால்  பின்பற்றப்பட்டு, செய்யப்பட்டு வரும் சாயா தரிசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இப்பொழுது காண்போம் .


சாயா தரிசனம் இரண்டு நிலைகளில் செய்யப்படுகிறது,
        1.  ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை .
        2.   வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய வேண்டிய நிலை .


1.  ஆரம்ப கட்டத்தில்  உள்ளவர்கள் செய்ய வேண்டிய நிலை :

ஆரம்ப நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை :
1.   கண்டிப்பாக காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது 10-48 மணிக்குள் தான் செய்ய வேண்டும் .
2.   காலை சூரிய ஒளியில் தான் செய்ய வேண்டும் .
3.   மேலே சொல்லப்பட்ட இரண்டு விதி முறைகளை பின் பற்றாவிட்டால் தீயவைகளை விளைவிக்கக் கூடிய கெட்ட ஆவிகளின்  தொற்றுதல் ஏற்பட்டு கெடுதல்களை விளைவிக்க  வாய்ப்புகள் உண்டு .
4.   சாயா தரிசனம் செய்வதற்கு முனபு காப்பு மந்திரம் போட்டுக் கொள்ள வேண்டும் .
5.   காப்பு மந்திரம் தெரியாதவர்கள் திக்கு கட்டு , உடல் கட்டு போன்ற மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும் .


ஆரம்ப நிலையில் - செய்ய வேண்டியவை :
 1.  காலை இரண்டு சாமத்திற்குள் அதாவது காலை 10.48 மணிக்குள் ஒரு நேரத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .
2.   கிழக்கு திசையில் முதுகைக் காட்டிக் கொண்டும் , மேற்கு திசையில் முகத்தைக் காட்டிக் கொண்டும் நின்று கொள்ள வேண்டும் .
3.    நமது நிழலை தொடர்ந்து 15 நிமிடம் ( அல்லது ) 20 நிமிடம் தொடர்ந்து பார்க்க வேண்டும் .
4.   முதலில் தலை முதல் பாதம் வரை படிப்படியாக பார்க்க வேண்டும் .
5.    பிறகு முழு உருவத்தையும் கண் இமை கொட்டாமல் தொடர்ந்து பார்க்க வேண்டும் .
6.   சாயா தரிசனம் செய்பவர்  நிழல் முழுவதும் முழுமையாக வெண்மையாக அதாவது   வெண்மை நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .
7.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .
8.   நம்முடைய உயரத்தை விட ஒரு உயர்ந்த உருவம் நம் எதிரே தோன்றும் .
9.  அந்த உருவத்தின் தோற்றம் முழுவதும் வெண்மை நிறமாக இருப்பதைக் காணலாம் .
10.   சாயா தரிசனத்தை செய்யும் காலம் அதிகரிக்க , அதிகரிக்க அதாவது 4 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் கழித்து நாம் என்ன உடை உடுத்தி இருக்கிறோமோ அந்த உடையுடன் உருவம் தெளிவாகவும் தெரியும் .


2. வளர்ச்சி அடைந்தவர்கள் செய்ய
வேண்டிய நிலை :

வளர்ச்சி நிலையில் - கடைப்பிடிக்க வேண்டியவை:
1.    வளர்ச்சி நிலை எதைக் குறிக்கும் என்றால் சாயா தரிசனம் 5 ஆண்டுகள் ( அல்லது ) 6 ஆண்டுகள் செய்தவர்களைக் குறிக்கும் .

2.    ஒரு நாளில் எந்த சாமத்திலும் சாயா தரிசனம் செய்யலாம் அதாவது எந்த நேரத்திலும் பகல் , மதியம் , இரவு என்று எந்த நேரத்திலும் செய்யலாம்.
3.     சூரிய ஒளியில்  மட்டுமின்றி மின் விளக்கிலும் செய்யலாம் .
4.     சாயா தரிசனத்தை செய்வதற்கு முன்பு உடல் கட்டு , திக்கு கட்டு மந்திரங்களைப் போட்டுக் கொள்ள வேணடும் .



வளர்ச்சி நிலையில் - செய்ய வேண்டியவை :
1.   இரவு நேரத்தில் செய்ய வேண்டும் .
2.    வீட்டிற்குள் செய்யக் கூடாது .
3.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு செய்ய வேண்டும் .                 
4.     மின் விளக்கை பொருத்தி எரிய வைத்து சாயா தரிசனத்தைச் செய்ய வேண்டும் .
5.    பௌர்ணமி நிலவு ஒளியிலும் சாயா தரிசனத்தைச் செய்யலாம் .
6.    வீட்டின் மாடியில் நின்று கொண்டு பார்ர்க்கும் பொழுது நம்மைச் சுற்றி, அந்த இடத்தைச் சுற்றி , இருள் நிறைந்த நிலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் .
7.    மாடியின் ஒரு சுவரில் ஒரு மின் விளக்கை மட்டும் பொருத்தி அதை எரியவைக்க வேண்டும் .
8.     மின் விளக்கை நோக்கி நம் முதுகை காட்டும் படி நின்று கொள்ள வேண்டும் .
9.    தரையில் தெரியும் நிழலை நன்கு உற்று நோக்கி பார்க்க வேண்டும் .
10.   நிழல் முழுவதும் வெண்மை நிறமாக மாற்றம் அடையும் .
11.   கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே தனது உருவப் பிம்பம் தோன்றும் அல்லது சாயை தோன்றும் .
12.  ஆண்டுகள் பல கடந்து சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர வெண்மை நிறமாக தெரிந்த உருவம் ஒவ்வொரு நிறமாக மாற்றம் அடைவதைக் காணலாம் .

13.  பிறகு நம்முடைய உருவமே பனையளவு நிற்பதை நாம் காணலாம் .


சாயா தரிசனத்தைத் தொடர்ந்து செய்து வர நடக்கும் நிகழ்வுகளும், கிடைக்கும் சக்திகளும், பலன்களும் போகர்  - 7000 என்ற புத்தகத்தில் போகர் சொன்னவாறே நடக்கும் .

சாயா தரிசனத்தைச் செய்து அத்தகைய பலன்களை அடைந்தவர்கள் தமிழ்நாட்டிலேயே உள்ளனர் .
அத்தகையவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டு அவர்கள் சீடனாக இருந்து சாயா தரிசனத்தை செய்த அனுபவமும் எனக்கு உண்டு .
அந்த அனுபவங்களை வார்த்தைகளில் எழுத முடியாது , சொற்களில் சொல்ல முடியாது .

ஒவ்வொருவரும் சுயமாக சாயா தரிசனத்தைச் செய்து அதன் பலன்களை அனுபவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .


             “”””நீயாக அனுபவிக்காததைப் பிறர் சொற்களில்
                   திருப்பிச் சொல்லாதே””””
என்ற வார்த்தையின் படி நான் செய்து அனுபவித்ததால் சாயா தரிசனத்தை எழுதினேன் .


சாயா தரிசனம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில் காணும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் ,
அந்த மாற்றங்கள் என்ன ரகசியத்தைச் சொல்ல வருகின்றன என்பதையும் தொடர்ந்து பார்ப்போம் .


                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஎட்டு  ந்தான்முற்றே “”