December 30, 2011

உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-1





          உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-சிறப்புகள்-பதிவு-1

                      “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                      ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””;

அரிய கலைகளில் விளங்கிக் கொள்ள முடியாத சூட்சுமமாகவும்,
காணக் கிடைக்காத பொக்கிஷங்களில் மதிப்பிட முடியாதததாகவும்,
ஆன்மீகவாதிகளால் மறைக்கப்பட்ட வெற்றியின் திறவுகோலாகவும்,
ஆன்மீக கோயிலுக்கு கருவறையாகவும் ,
ஞானத் தேடலின் நுழைவு வாயிலாகவும்,
பஞ்ச பட்சி சாஸ்திரம் இருக்கிறது .


மிகச் சிறந்த , மிக அரிய கலையாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரம் உலக மக்களிடையே அறியப் படாத ஒரு கலையாகவே இருந்து வருகிறது .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கோடியில் ஒருவர்  மட்டுமே சரியாகக் கணிக்கத் தெரிந்தவராகவும் , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்தவராகவும் , அதனைப் பிழையில்லாமல் பயன்படுத்தத் தெரிந்தவராகவும் , அதன் பலன்களை அடைந்தவராகவும் இருப்பர்.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறியாது கணிதம் , சோதிடம் முதலிய பல சாஸ்திரத்தில் வல்லவராக இருந்தாலும் முகூர்த்த தினம், நல்ல நேரம் ஆகியவைகளை சரியாக கணிக்க முடியாது .

ஆனால் எந்த வித சாஸ்திரத்தில் பயிற்சியும் இன்றி பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் வல்லவர்கள் முகூர்த்த தினம் ,நல்ல நேரம் போன்றவைகளை சரியாக கணிக்க முடியும் என்பது உண்மை .
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சரியாக கணித்து செய்யப்படும் எந்த வேலையும் தோல்வியில் முடியாது 100 சதவீதம் வெற்றியாகத் தான் முடியும் .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உரோமரிஷி கீழ்க் கண்டவாறு சொல்கிறார் .


பாடல் -1
          ””””போகுமே அஷ்டகன்மம் இதற்கீடல்ல
                                      பொல்லாங்கு கருத்தொழிலும் இதற்கீடல்ல
               ஆகுமே சல்லியங்கள் ஒட்டியங்கள்
                                     அணுகாது தொட்டியத்தில் அவர்க்கெல்லாந்தான்
              சாகுமே மந்திபறம் கெணங்கள்பூதம்
                                     சண்டாள பிசாசுமுதல் ஐயன்துற்கை
             வேகுமே பட்சிவித்தை கண்டபோதே
                                   மேலான வித்தையென்று மெச்சினாரே”””””””
                                   ------உரோமரிஷி-----பஞ்ச பட்சி சாஸ்திரம்-----
           “””””போகுமே அஷ்டகன்மம் இதற்கீடல்ல”””””
முதலில் அஷ்ட கன்மங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் .
அஷ்ட கன்மங்கள் எனப்படுபவை ,
              1 .வசியம்                   5 ஆகர்ஷணம்
              2 மோகனம்              6 மாரணம்
              3 ஸ்தம்பனம்          7 வித்வேஷணம்
              4 உச்சாடணம்         8 பேதனம்
ஆகியவை ஆகும் .

மந்திரம் , யந்திரம், தந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பெறப்படும் மேலே சொல்லப் பட்ட அஷ்டகன்மங்களும் பஞ்ச பட்சி சாஸ்திரத்திற்கு இணை கிடையாது .



    “”””””””””””பொல்லாங்கு கருத்தொழிலும் இதற்கீடல்ல
       ஆகுமே சல்லியங்கள் ஒட்டியங்கள்
                       அணுகாது தொட்டியத்தில் அவர்க்கெல்லாந்தான்”””””
நம்மேல் பகை கொண்டவர்கள் , நம் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் நம்மேல் பிரயோகிக்கும் தவறான முறைகள் , தவறான செயல்கள், தவறான தொழில்கள்

என்று சொல்லப் படக்கூடிய ஏவல் ,பில்லி சூனியம் மட்டுமில்லாமல் சல்லியம் , ஒட்டியம் ,தொட்டியம் இவையெல்லாம் பஞ்ச பட்சி சாஸ்திரம் கற்று தன் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டவனை அணுக முடியாது , ஒன்றும் செய்யாது , ஒன்றும் செய்யவும் முடியாது .



             “””””””சாகுமே மந்திபறம் கெணங்கள் பூதம்
                                         சண்டாள பிசாசுமுதல் ஐயன்துற்கை
                        வேகுமே பட்சிவித்தை கண்டபோதே
                                          மேலான வித்தையென்று மெச்சினாரே”””””””
 நம்மேல் பகை கொண்டவர்கள் , நம் முன்னேற்றத்தை விரும்பாதவர்கள், நம்மை அழிக்க நினைப்பவர்கள், பூதங்கள் ,ஆவிகள் ,பிசாசு ,பேய் முதல் எல்லாவிதமான தீய சக்திகளையும் ,
நமக்கு எதிராக பயன்படுத்தினாலோ ,
நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தினாலோ ,
நம்முடைய முன்னேற்றத்தை தடுக்க நினைத்து பயன்படுத்தினாலோ,
அல்லது
மேலே சொல்லப்பட்ட தீய சக்திகளால் பாதிப்பு அடையக் கூடிய நிலை நம் வாழ்க்கையில் ஏற்பட்டாலோ ,
பஞ்ச பட்சி சாஸ்திரம் கற்றவனை நெருங்கிய அளவிலேயே வெந்து போகும், எரிந்து சாம்பலாகிப் போகும்.


இத்தகைய சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து அதனை வாழ்க்கையில் முறைப்படி பயன்படுத்தி வாழ்க்கையில் அதன் இன்பத்தை அனுபவித்தவர்கள் ,
அதன் பலன்கள் ,சக்திகள் ,மகிமைகள் ஆகியவற்றை உணர்ந்தவர்கள் ,
அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து சுவைத்தவர்கள் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை விட உயர்வான ஒரு சாஸ்திரம் கிடையாது. அதற்கு இணையானது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது என்று போற்றிப் புகழ்வார்கள்
என்று பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உரோமரிஷி கூறுகிறார்.



பாடல் - 2
            “”””மெச்சினார்  பதினெண்பேர்  சித்தரெல்லாம்
                                     வெகுகோடி ரிஷிகளெல்லாம் மெச்சினார்கள்
                 கொச்சினார்  உலகத்தில் அனந்தங்கோடி
                                    கூர்மையுள்ள மணமுள்ளோர்  காணவேணும்
                பட்சியென்ற தொழிலைத்தான் பார்த்தபேர்க்கு
                                   பகையில்லை யொருநாளும் பகைத்தோரில்லை
              லட்சியென்றஆயுதம் மனதடக்கஞ் செய்தால்
                                  மற்றைவித்தைநிமித்தில் வரும்பார்  நவிலுவேனே”””””””
                                             ----------உரோமரிஷி---பஞ்ச பட்சி சாஸ்திரம்------
            “”””மெச்சினார்  பதினெண்பேர்  சித்தரெல்லாம்
                                    வெகுகோடி ரிஷிகளெல்லாம் மெச்சினார்கள்””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து 18 சித்தர்கள் போற்றி புகழ்ந்தார்கள் .
கோடிக்கணக்கான ரிஷிகளும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் மகிமையை அறிந்து போற்றி புகழ்ந்தார்கள் .



   “”””””கொச்சினார்  உலகத்தில் அனந்தங்கோடி
                             கூர்மையுள்ள மணமுள்ளோர்  காணவேணும்”””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை,  அதன் மகிமையை ,உணர்ந்த சித்தர்களும், ரிஷிகளும்
இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்  கோடி கணக்கில் உள்ள மக்களில் ,

கூர்மையான உயர்வான மனத்தை கொண்டவர்கள் ,
அறிவாற்றலில் சிறந்த நிலை அடைந்தவர்கள் ,
இளகிய மனம் கொண்டவர்கள்,
மற்றவர்  துன்பம் கண்டு வருத்தப்படுபவர்கள்,
மற்றவர்களை கெடுக்க நினைக்காதவர்கள் ,
நல்ல பழக்க பழக்கங்களைத் தன்னகத்தே கொண்டவர்கள் ,
எந்தவிதமான தீய குணங்களும் இல்லாதவர்கள்,

போன்ற சிறப்புகளைப் பெற்றவர்களுடைய வாழ்க்கை இன்பமாகவும் , துன்பம் அற்றதாகவும் , கவலைகள் நீங்கியதாகவும் , வாழ்க்கையில் தோல்விகளைக் களைந்து வெற்றிகளைப் பெற்று இன்பங்களைப் பெற்று வாழ்வதற்காகவும்,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை வார்த்தைகளில் எழுதியும் சூட்சும ரகசியங்களை குரு சீடர் -- பரம்பரை மூலமாக மறைத்தும் வைத்தும் இருக்கின்றனர்.



”””””பட்சியென்ற தொழிலைத்தான் பார்த்தபேர்க்கு
                    பகையில்லை யொருநாளும் பகைத்தோரில்லை”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி கற்று அதன் சூட்சும ரகிசயங்களை அறிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை தன் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் ,
அதன் இன்பங்களைச் சுவைத்தவர்கள்  ,
போன்ற சிறப்புகளைப் பெற்றவர்களுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க முடியாது .
அப்படி எதிரிகள் உருவானால் இந்த உலகத்தில் அவர்கள் உயிரோடு இருக்க முடியாது .



””””லட்சியென்றஆயுதம் மனதடக்கஞ் செய்தால்
               மற்றைவித்தைநிமித்தில் வரும்பார்  நவிலுவேனே”””””””
பஞ்ச இந்திரியங்களை தன் வசப்படுத்துவதன் மூலம் தன் மனதை அறிந்து, தன் வழி செயல்படுத்தும் முறையை உணர்ந்து வைத்துக்கொண்டு, தன் வாழ்க்கையில் கடைபிடித்து செயல்படுத்துபவர்,

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து  ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் நன்மைகளை அறிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்திகளை புரிந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டு  ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்த சரியான குருவைத் தேடிப்பிடித்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அத்தகைய குருவிடம் முறைப்படி பயின்று ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை வாழ்க்கையில் முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டவர்களுக்கு ,
உலகில் உள்ள மற்ற வித்தைகள் அதாவது உலகில் எவ்வளவு வித்தைகள் உண்டோ அவ்வளவு வித்தைகளும் நிமிடத்தில் அவருக்கு வசமாகி விடும் என்கிறார்  உரோமரிஷி .

இதிலிருந்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம் .
    
                                                                                                                                     
                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”