December 17, 2019

பரம்பொருள்-பதிவு-100


          பரம்பொருள்-பதிவு-100

கிருஷ்ணன் :
"அர்ஜுனா ! நீ எப்போதோ
விதைத்து விட்டு வந்த
விதை ஒன்று இப்போது
மரமாக வளர்ந்து
அரவான் என்ற பெயரில்
பலன் தர உன்னைத் தேடி
நேரில் வந்து இருக்கிறது. "

"நீ ! யாருக்கும் தெரியாது
என்று செய்து விட்டு
வந்த செயலுடைய
விளைவானது உன்
முன்னால் அரவான்
என்ற பெயரில்
நிற்பதிலிருந்து
தெரிந்து கொள்………………?
செயலைச் செய்து விட்டு
விளைவிலிருந்து யாரும்
தப்ப முடியாது என்பதை !
நீ செய்து விட்டு
வந்த செயலுக்குரிய
விளைவாக அரவான்
உன் முன்னால்
வந்து நிற்கிறான் "

"அரவான் செய்யப் போகும்
வீரச் செயலை - இந்த
உலகத்தில் - இது
வரை யாரும் செய்து
இருக்க மாட்டார்கள்  ;
இனிமேலும் யாராலும்
செய்யவே முடியாது ; '"

"அரவான் செய்யப் போகும்
தியாகச் செயலைக் கண்டு
இந்த உலகமே
அரவானைப் பார்த்து
தலை தாழ்த்தி
வணங்கத் தான் போகிறது  "

"குருஷேத்திரப் போரின்
அஸ்திவாரமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
தர்மம் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
தன்னையே
தரப் போகிறவன்
அரவான் !
அதர்மத்தை அழிப்பதற்காக
மிகப்பெரிய
தியாகச் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் அழியாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக யாராலும்
செய்ய முடியாத
யாரும் செய்யவும்
யோசிக்கக் கூடிய
மிகப் பெரிய செயலை
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தாலும்
இத்தகைய ஒரு
தைரியமான மனத்தைக்
கொண்டவனை
பார்க்க முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !"

" நாளை இந்த உலகம்
கிருஷ்ணன் என்ற
கடவுளைக் கூட மறந்து
போய் இருக்கலாம்  ;
அர்ஜுனன் என்ற
ஒருவன் இருந்தானா
என்பதை தேடுவதற்காக
ஒரு கும்பலே
அலைந்து திரிந்து
கொண்டிருக்கலாம் ;
ஆனால் இந்த உலகம்
அழியும் வரை
அரவானை நினைத்துக்
கொண்டிருக்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானுக்காக கண்ணீர்
வடிக்கக் கூடியவர்கள்  
இந்த உலகத்தில் இருந்து
கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வசித்துக் கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;"

"அரவான்
நாளைய உலகத்தின்
விடிவெள்ளி !
எதிர்காலத்தின்
நம்பிக்கை நட்சத்திரம் !
இருண்ட வீட்டில்
ஒளி விளக்கு !
கோடை காலத்தின்
குளிர் நிலவு !
என்பதை நினைவில்
கொண்டால்
அரவானின் பெருமை
உனக்குப் புரியும் "

அர்ஜுனன்  :
"கிருஷ்ணா ! அரவான்
எத்தகைய வீரச்
செயலை புரிவான்  ;
எத்தகைய தியாகச்
செயலைச் செய்வான் ;
என்பதை அறிவதற்கு
என் மனம்
ஆவலால் துடிக்கிறது ;
எனக்கு அதை விவரமாகச்
சொல்வாயா கிருஷ்ணா "

கிருஷ்ணன்  :
"நாளை என்ன
நடக்கப்போகிறது
என்பதை அறிந்தால்
இன்றைய வாழ்க்கை
நரகமாகி விடும் என்ற
காரணத்தினால் தான்
நாளை நடக்கப்
போகிறவைகள்
மறைபொருளாக
வைக்கப்பட்டிருக்கிறது ;  
இன்று நடக்கப்
போகிறவைகளைப்
பற்றி சிந்தி அர்ஜுனா !
நாளை நடக்கப்
போகிறவைகளை நான்
பார்த்துக் கொள்கிறேன் ! "

"ஆனால் ஒன்று அர்ஜுனா
நாளை இந்த உலகம்
அர்ஜுனனின் மகன்
யார் என்று கேட்காது  ?
அரவானின் தந்தை
யார் என்று தான்
கேட்கப் போகிறது ?
என்பதை மட்டும்
நினைவில் கொள்
அர்ஜுனா !"

அர்ஜுனன்  :
(கிருஷ்ணன் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்த
அர்ஜுனன் அரவானைப்
பற்றிய சிந்தனையில்
ஆழ்ந்தான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 17-12-2019
//////////////////////////////////////////