November 30, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-அடுத்து-பதிவு-57




         இயேசு கிறிஸ்து-ஔவையார்-அடுத்து-பதிவு-57


                  “”பதிவு ஐம்பத்துஏழை விரித்துச் சொல்ல           


                                            ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இயேசு கிறிஸ்து :

 பரலோகராஜ்யம் புறத் தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் , தன் ஊழியக்காரரை அழைத்து , தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தது போல் இருக்கிறது.”

                                     ----மத்தேயு - 25 : 14

அவனவனுடைய திறமைக்குத் தக்கதாக , ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும் , ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும் , ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து , உடனே பிரயாணப்பட்டுப் போனான்.”

             ----மத்தேயு - 25 : 15
               
ஐந்து தாலந்தை வாங்கினவன் போய் ,அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி , வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.”

             ----மத்தேயு - 25 : 16

அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும் , வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.”

             ----மத்தேயு - 25 : 17

ஒரு தாலந்தை வாங்கினவனோ ,போய் , நிலத்தைத் தோண்டி தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.”

            ----மத்தேயு - 25 : 18

வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து , அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.”

            ----மத்தேயு - 25 : 19

அப்பொழுது , ஐந்து தாலந்தை வாங்கினவன் , வேறு ஐந்து தாலந்தை கொண்டு வந்து : ஆண்டவனே , ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே ; அவைகளைக் கொண்டு இதோ , வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.”

             ----மத்தேயு - 25 : 20

அவனுடைய எஜமான் அவனை நோக்கி : நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே , கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் , அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் , உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.”

             ----மத்தேயு - 25 : 21

இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து , ஆண்டவனே இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே ; அவைகளைக் கொண்டு, இதோ , வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.”

             ----மத்தேயு - 25 : 22

அவனுடைய எஜமான் அவனை நோக்கி : நல்லது உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே , கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய் , அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் ; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.”

             ----மத்தேயு - 25 : 23

ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து : ஆண்டவனே நீர்  விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும் , தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.”

              ----மத்தேயு - 25 : 24

ஆகையால்,  நான் பயந்து போய் , உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் ; இதோ உம்முடையதை வாங்கிக் கொள்ளும் என்றான்.”

              ----மத்தேயு - 25 : 25

அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக : பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே , நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் , தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.”

              ----மத்தேயு - 25 : 26

அப்படியானால் , நீ என் பணத்தைக் காசுக்காரர்  வசத்தில் போட்டு வைக்க வேண்டியதாயிருந்தது ; அப்பொழுது , நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக் கொள்வேனே , என்று சொல்லி

              ----மத்தேயு - 25 : 27

அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து , பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.”

             ----மத்தேயு - 25 : 28

பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப் போடுங்கள் ; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.”

             ----மத்தேயு - 25 : 30


வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தில் இரண்டு நிலைகள் உள்ளது:

ஒன்று     : வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பம்

தன் வாழ்வை உயர்த்துவதற்கான வழி என்பதை உணர்ந்து

அதைப் பயன் படுத்திக் கொண்டு உயர்வது

மற்றொன்று : வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பம்

தன் வாழ்வை உயர்த்துவதற்கான வழி என்று உணராமல்

அதனைப் பயன் படுத்திக் கொள்ளாமல் தவறவிட்டு தாழ்வது


சந்தர்ப்பத்தை உணர்பவன் உயர்கிறான் ;

சந்தர்ப்பத்தை உணராதவன் தாழ்கிறான் ;

சந்தர்ப்பத்தை உணர்பவனால் மட்டுமே  ,

அதைப் பயன் படுத்திக் கொள்ள முடியும் .

சந்தர்ப்பத்தை உணர முடியாதவனால்  ,

அதைப் பயன் படுத்திக் கொள்ள முடியாது .



தன் வாழ்வை மாற்றக் கூடிய  ,

ஓடி ,ஓடி அலைந்தாலும் கிடைக்காத சந்தர்ப்பம்

தேடித், தேடி அலைந்தாலும் கிடைக்காத சந்தர்ப்பம்

வாடி ,வாடி வருந்தினாலும் கிடைக்காத சந்தர்ப்பம்

என்பதை உணர்ந்து கொள்பவனால் மட்டுமே

அதைப் பயன் படுத்தி வாழ்வில்

உயர்  நிலை அடைய முடியும் ;

சிறப்பு நிலை எட்ட முடியும்;

மகிழ்ச்சி கடலில் நீந்த முடியும்;

உயர்வின் அரியணையில் அமர முடியும் ;

வெற்றியின் ஏகாந்தத்தில் களிக்க முடியும் ;

இன்பத்தின் சுவாசத்தை சுவாசிக்க முடியும் ;

முன்னேற்றத்தின் படிகளில் ஏற முடியும் ;


வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை

தன் வாழ்வின் நிலையை மாற்றக் கூடிய

ஓர்  அரிய சந்தர்ப்பம் என்பதை உணர முடியாதவனால்

பயன் படுத்திக் கொள்ள தெரியாதவனால் ,

தவற விட்டவானால் ,

வாழ்வில் உயர்நிலை அடைய முடியாது .

தாழ்நிலை தான் அடைய முடியும் .


பயன் படுத்தும் சந்தர்ப்பத்தில் இரண்டு நிலைகள் உண்டு :

ஒன்று                : வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும்
                                    
                  சந்தர்ப்பம்

மற்றொன்று : வாழ்வில் திரும்ப திரும்ப பயன் படுத்தும் வகையில்

                                     எதிர்ப்படும் சந்தர்ப்பம்


வாழ்வில் ஒரே ஒரு முறை எதிர்ப்படும்

சந்தர்ப்பத்தைத் தவற விடுபவனுக்கு

மீண்டும் ஒரு சந்தர்ப்பம் , அத்தகைய ஒரு சந்தர்ப்பம் ,

அத்தகைய ஒரு அரிய சந்தர்ப்பம் ,

அத்தகைய ஒரு முக்கியமான சந்தர்ப்பம் ,

மீண்டும் கிடைக்கவே கிடைக்காது .

இதனைத் தவறவிடுபவன் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றை ,

ஒரு புதையலை , ஒரு பொக்கிஷத்தை இழந்தவனாகிறான் .


தன்னைப் பாலுhட்டி,  சீராட்டி , காத்து வளர்த்த தாய் - தந்தையை

அவர்கள் முடியாத நிலையில் இருக்கும் போது ,

அவர்கள் தள்ளா வயதில் இருக்கும் போது ,

அவர்கள் உடல்நிலை குன்றிய நிலையில் இருக்கும் போது ,

வறுமை நிலையில் சிக்குண்டு தவிக்கும்  போது ,

ஆதரவற்ற நிலையில் துயரத்தில் துன்பப்படும் போது ,

உறவினர்கள் கைவிட்ட நிலையில் தன்னந் தனியாக தவிக்கும் போது ,

சமுதாயத்தால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி ,

மன வேதனைக்கு உட்பட்டு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு ,

நிராயுத பாணியாய் கண்ணில் கண்ணீருடனும் ;

இதயத்தில் கவலையுடனும் ; மனதில் குழப்பத்துடனும் ;

சிந்தனையில் தடுமாற்றத்துடனும் இருக்கும்

பெற்றோர்களைக் காக்கும் சந்தர்ப்பம் அவர்களைப் பராமரிக்கும் ,

அவர்களுக்கு பணிவிடை செய்யும் ,

அவர்களை மனம்வருத்தப் படாமல் வைத்துக் கொள்ளும் ஒரு நிலை

ஒரு மகனுக்கோ அல்லது ஒரு மகளுக்கோ ஏற்பட்டால்

அதைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களுக்கு சேவை செய்பவன்

புண்ணியத்தை அதிக அளவில் சேர்த்துக் கொள்கிறான் .

அதைத் தவறவிடுபவன் பாவமூட்டையைச்

சுமந்து வாழ்வில் தள்ளாடுகிறான்.

இத்தகைய சந்தர்ப்பம் வாழ்வில்  

ஒரு முறை தான் எதிர்ப்படும் அரிய சந்தர்ப்பம்

பெற்றோர்கள் இறந்த பிறகு இந்த சந்தர்ப்பம்  

மீண்டும் ஏற்படவே ஏற்படாது.

பெற்றோர்கள் தனக்கு செய்ததை நினைவில் கொண்டு

அதற்கு கைமாறாக கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி

அவர்களுக்கு சேவை செய்பவன் உயர்நிலை அடைகிறான் ;

செய்யாதவன் தாழ்நிலை அடைகிறான் ;

இந்த சந்தர்ப்பம் வாழ்வில் அரிதாக ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று


வாழ்வில் திரும்ப ,திரும்ப ஏற்படும் சந்தர்ப்பங்கள்  நிறைய உள்ளன.

ஒருவன் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில்  

தோல்வி அடைந்து விட்டால்

அந்த தேர்வில் அவனால் வெற்றி பெற முடியாமல் போய் விட்டால்

அடுத்து நடத்தப்படும் தேர்வு எழுதி

தவற விட்ட வெற்றியை பெற்றுக் கொள்ளலாம்.

அதுவும் முடியாவிட்டால் அடுத்து அடுத்து நடத்தப்படும் தேர்வுகளில்

முயற்சி செய்து உழைத்து படித்து வெற்றி பெறலாம்.

இது தவற விட்ட வெற்றியை அல்லது

தவற விட்ட வாழ்வின் முன்னேற்றத்தைத்

தவற விட்ட வாழ்வின் உயர்வை

அடுத்து அடுத்து வரும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி வெற்றி பெறுவது .


அடுத்து அடுத்து வரும் சந்தர்ப்பத்தை விட

ஒரே ஒரு முறை வரும் அரிய சந்தர்ப்பத்தைப்

பயன் படுத்திக் கொள்பவன் வாழ்வில் சிறப்படைகிறான்.

அத்தகைய ஒரு அரிய சந்தர்ப்பம்

 மூன்று பேரின் வாழ்க்கையில் எதிர்ப்பட்டது .

வெளி நாட்டுக்கு புறப்பட்ட முதலாளி ஒருவன்

திறமையின் அடிப்படையிலும் ,

உழைப்பின் தன்மையிலும் ,

முயற்சியின் வெளிக்காட்டுதலிலும் ,

சிறப்பிடம் பெற்றவர்களுக்கு

அவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு

ஒருவனிடம் ஐந்து தாலந்து ,

ஒருவனிடம் இரண்டு தாலந்து ,

ஒருவனிடம் ஒரு தாலந்து ,

கொடுத்து விட்டுப் போனான் .

தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை உணர்ந்தவன்

அதன் மதிப்பை தெரிந்தவன்

அதன் மூலம் வாழ்வை வளமாக்கலாம் ; உயர்வுகள் பெறலாம் ;

செல்வங்கள் சேர்க்கலாம் ;

சமுதாயத்தில் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ளலாம் ;

நிலையில்லாத தன் வாழ்வை நிலை பெறச் செய்யலாம் ;

என்பதை நினைவில் கொண்டு ,

சிந்தனை செய்து திட்டங்கள் வகுத்து

செயல்கள் பகுத்து வியாபாரம் செய்து

ஐந்து தாலந்து வாங்கியவன் மேலும் ஐந்து தாலந்து சம்பாதித்தான்.

இரண்டு தாலந்து வாங்கியவன் மேலும்  

இரண்டு தாலந்து சம்பாதித்தான் .


கிடைத்த சந்தர்ப்பத்தை வாழ்வை மாற்றும் சந்தர்ப்பம்

வாழ்வை வளப்படுத்தும் சந்தர்ப்பம்

வாழ்வை உயர்த்தும் சந்தர்ப்பம் என்பதை உணராதவன் ,

ஒரு தாலந்து வாங்கியவன்

அதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல்

தன் அறிவுக் கேற்றபடி , தன் திறமைக்கு உகந்தபடி ,

வியாபாரம் செய்து அதை பெருக்காமல்

தன் நிலையை உயர்த்திக் கொள்ளாமல்

அரிய சந்தர்ப்பத்தை உணராமல்

கிடைத்த ஒரு தாலந்தை நிலத்தில் குழி தோண்டி

அதில் அந்த தாலந்தை புதைத்து வைத்தான் .

சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தாமல் விட்டு விட்டான் ; தவற விட்டான் ;


வெகு காலம் கழித்து வெளிநாடு சென்று திரும்பி வந்த முதலாளி  

அந்த தாலந்து கொடுத்த மூவரையும் அழைத்து ,

தான் கொடுத்த தாலந்தைப் பற்றியும்,

அதனை அவர்கள் எந்த விதத்தில்

 பயன் படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் ,

அதற்காக அவர்கள் உழைத்த உழைப்பைப் பற்றியும் ,

அதனால் அவர்கள் பெற்ற லாப - நஷ்டங்கள் பற்றியும் ,

அதற்காக அவர்கள் செலவிட்ட நேரத்தைப் பற்றியும் ,

அதற்காக அவர்கள் தீட்டிய திட்டங்கள் பற்றியும் ,

அதற்காக அவர்கள் செயல்படுத்திய முறைகள் பற்றியும் ,

அதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும் ,

தெரிந்து கொள்ளும் நோக்கில் ,

அறிந்து கொள்ளும் நோக்கில் ,

தான் கொடுத்த தாலந்தைப் பற்றி கேட்டார் .


அதற்கு ஐந்து தாலந்தைப் பெற்றவன்

தாங்கள் கொடுத்த ஐந்து தாலந்தை வைத்து மேலும்

ஐந்து தாலந்தைச் சம்பாதித்து உள்ளேன் என்றான்.

அவனுடைய பதிலின் மூலம் அவன் உழைத்த உழைப்பை

காட்டிய ஆர்வத்தை உணர்ந்து கொண்ட முதலாளி

உன் பதில் கேட்டு மகிழ்ந்தேன் .

உன் செயலின் மூலம்   நீ உத்தமன் என்பதையும் ,

நீ நேர்மையானவன் என்பதையும் ,

நீ உண்மையானவன் என்பதையும் ,

நீ விசுவாசமானவன் என்பதையும் ,

உணர்ந்து கொண்டேன் .

உன்னை உயர்  அதிகாரியாக்குவேன் ;

உயர் நிலைக்கு கொண்டு செல்வேன் ;

உன் மதிப்பை உயர்த்துவேன் ;

நீ செய்த செயல் என் மனதை குளிர்வித்தது

என்னுடைய பாராட்டுதல்களை ஏற்றுக் கொள் என்றார்.


முதலாளியிடம் இரண்டு தாலந்துகளைப் பெற்று மேலும்

இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்தவனும்,

முதலாளியிடம் ஐந்து தாலந்துகளைப் பெற்றவன்

எத்தகைய பாராட்டுதல்களைப் பெற்றானோ

அத்தகைய பாராட்டுதல்களையும் ,வாழ்த்துகளையும் பெற்றான் .


ஒரு தாலந்து வாங்கியவன் முதலாளியிடம்

நீங்கள் விதைக்காமல் அறுவடை செய்ய பார்க்கிறீர்கள் ;

உழைக்காமல் செல்வம் சேர்க்க பார்க்கிறீர்கள் ;

மற்றவர்  உழைப்பை சுரண்டி நீங்கள்

உங்கள் நிலையை  உயர்த்தப் பார்க்கிறீர்கள்  ;

மற்றவர்களை அடிமையாக வைத்து

நீங்கள் உங்கள் எண்ணத்தை முடித்துக் கொள்ள பார்க்கிறீர்கள் ;

மற்றவர்  அறிவை மழுங்க வைத்து  

அவரை நீங்கள் ஆளத் துடிக்கிறீர்கள் ;

உழைக்காமல் உயர்வை அடைய விரும்புகிறீர்கள்  ;

இத்தகைய எண்ணத்தினால் காசை எங்களிடம் கொடுத்து

அதை நாங்கள் உழைத்து கஷ்டப்பட்டு

வியர்வை சிந்தி சம்பாதித்த செல்வத்தை

எந்த வித உழைப்பும் கொடுக்காமல் அபகரிக்கும் நோக்கத்திலேயே

அதை உங்கள் வசம் ஆக்கிக் கொள்ளும் மனப்பாங்கினிலே

எங்களுக்கு தாலந்தை கொடுத்தீர்.   


நீர்  விதைக்காமல் அறுவடைச் செய்ய பார்க்கிறீர்

உங்கள் உள் நோக்கத்தை புரிந்து கொண்ட நான்

உங்கள் தவறான எண்ணத்தை உணர்ந்து கொண்ட நான்

அந்த தாலந்தைப் பூமியிலே புதைத்து வைத்து விட்டேன் .


நீங்கள் எனக்கு கொடுத்த அந்த தாலந்து

இது தான் என்று அவரிடம் கொடுத்தான் .

அவனுடைய இயலாமையை , அவனுடைய தவறான எண்ணத்தை ,

அவன் தன்னைத் தவறாக புரிந்து கொண்ட

 தன்மையை உணர்ந்த முதலாளி

ஒன்றும் தெரியாதவனே ; முட்டாளே ; சோம்பேறியே ;

 நான் தான் சுயநலவாதி

மற்றவர்  உழைப்பில் வாழத் துடிப்பவன்

மற்றவர் உழைப்பைச் சுரண்டுபவன்

மற்றவரை ஏமாற்றி தன் நிலையை உயர்த்திக் கொள்பவன்

என்று நீ என்னை நினைத்திருந்தால் ,

என்று என்னை புரிந்து கொண்டிருந்தால் ,

அந்த ஒரு தாலந்தை ஏன் காசுக்காரரிடத்திலே போட்டு வைக்க வில்லை.


அவரிடம் போட்டு வைத்திருந்தால் அந்த

ஒரு தாலந்துக்குரிய வட்டியாவது கிடைத்திருக்குமே 

அதைக் கூட செய்யாமல் மண்ணில் புதைத்து வைத்து

காலத்தை வீணாக்கி விட்டாய் என்று அவன் மேல் கோபம் கொண்டார்.


அவன் மேல் கொண்ட கோபத்தால் , கோபத்தின் விளைவால் ,

ஒரு தாலந்தை அவனிடத்தில் இருந்து பிடுங்கி

ஐந்து தாலந்தை வைத்து மேலும் ஐந்து தாலந்தை சேர்த்து

மொத்தம் பத்து தாலந்து வைத்து இருந்தவனிடம்

கொடுக்கும் படி கட்டளை இட்டான் .


பயனற்ற வேலைக்காரனை கிடைத்த சந்தர்ப்பத்தைப்

பயன் படுத்தாத வேலைக்காரனை இருட்டறையிலே தள்ளி விடுங்கள் .

அங்கே அவன் துன்பத்தை அனுபவிக்கட்டும் ;

வேதனையால் அவதியுறட்டம்  ;

அழுகையால் கவலையுறட்டும்  ;

துன்பத்தால் துயர் அடையட்டும் என்றான்.


வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை உணர்ந்து

இந்த சந்தர்ப்பம் தன் வாழ்வை மாற்றுவதற்கான ,உயர்த்துவதற்கான ,

ஒரு சந்தர்ப்பம் என்பதை புரிந்து கொண்டு

அதைப் பயன் படுத்திக் கொள்பவன்

வாழ்வில் உயர்நிலை அடைகிறான் ;

இதனை புரிந்து கொள்ளாமல் பயன் படுத்தாமல் தவற விடுபவன்

வாழ்வில் தாழ்நிலை அடைகிறான் ;

இழிநிலைக்கு தள்ளப் படுகிறான் என்கிறார்  இயேசு .



ஓளவையார்:

      ““அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

          எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

          உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

          பருவத்தால் அன்றிப் பழா””

                                ------ஓளவையார்----மூதுரை----


ஒரு சந்தர்ப்பம் நம் வாழ்வில் எதிர்ப்படும் போது

இதை விட நல்ல சந்தர்ப்பம் வரும்

இதை விட உயர்வான சந்தர்ப்பம் வரும்

இதை விட வாழ்வை மாற்றக் கூடிய சந்தர்ப்பம் வரும்

இதை  விட நம் மதிப்பை உயர்த்தக் கூடிய சந்தர்ப்பம் வரும் - என்று

வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்

தட்டிக் கழித்துக் கொண்டே ,

புறக்கணித்துக் கொண்டே ,

ஒதுக்கி வைத்துக் கொண்டே வரக்கூடாது .

கிடைக்கும் சந்தர்ப்பத்தை

தன் தகுதிக்கு ஏற்றது இது இல்லை என்று ஒதுக்கி வைக்காமல் ,

தன் திறமைக்கு ஏற்றது இது இல்லை என்று தள்ளி வைக்காமல் ,

தான் கற்பனை செய்தது இது இல்லை என்று விலக்கி வைக்காமல் ,

வாழ்வில் கிடைத்த சந்தர்ப்பத்தை

வாழ்வில் எதிர்ப்பட்ட சந்தர்ப்பத்தை

தனக்கு ஏற்றபடி உருவாக்கிக் கொள்ள வேண்டும் ;

தனக்கு உகந்தபடி மாற்றிக் கொள்ள வேண்டும் ;

தன் நிலைக்கு ஏற்றபடி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் ;

தன் உயர்வுக்கேற்றபடி உருமாற்றிக் கொள்ள வேண்டும்

என்பதே

“”சந்தர்ப்பத்திற்காக காத்திராதே


  சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்””

என்பதற்கு விளக்கமாக இருக்கிறது .


சந்தர்ப்பங்களை நாமே உருவாக்க முடியாது .

ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களை

நமது முயற்சியைப் பயன்படுத்தி

நம் வாழ்விற்கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம் ;

நம் தேவையை நிறைவேற்ற பயன் படுத்திக் கொள்ளலாம் ;

நம் ஆசையை பூர்த்தி செய்ய உபயோகப் படுத்திக் கொள்ளலாம் ;


சந்தர்ப்பத்திற்கும், முயற்சிக்கும் வேறுபாடு இருக்கிறது .

சந்தர்ப்பம் வெளியில் இருந்து வருவது

முயற்சி உள்ளுக்குள் மலர்வது

சந்தர்ப்பம் புறத்தில் வருவது ;முயற்சி அகத்தில் மலர்வது


ஒருவனுக்கு வெளிநாட்டில் வேலை செய்ய வாய்ப்பு  வருகிறது

இரண்டு லட்சம் கட்டினால் வேலை கிடைக்கும்

என்ற நிலை வரும் போது

பணத்திற்காக முயற்சிகள் செய்து

வீட்டை அடமானம் வைத்து

நகைகளை விற்று பணத்தை வட்டிக்கு வாங்கி

இரண்டு லட்சத்தை கஷ்டப்பட்டு திரட்டி பணத்தை கட்டி

வெளிநாட்டு வேலையில் சேர்ந்து பயன் பெறுகிறான் .


இரண்டு லட்சம் கட்டினால் வெளிநாட்டில் வேலை என்பது

அவன் வாழ்வில் எதிர்ப்படும் ஒரு சந்தர்ப்பம்

இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டால்

வாழ்க்கை வளம் பெறும் என்று சிந்தித்து

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக

இரண்டு லட்சத்தை திரட்டுவது முயற்சி.

இரண்டு லட்சத்திற்கு வெளிநாட்டு வேலை என்று சந்தர்ப்பத்தை

நாமே உருவாக்க முடியாது .

ஆனால் இரண்டு லட்சத்தை திரட்ட முடியும் .

இந்த இரண்டு லட்சத்தை திரட்டுவதே முயற்சி.


சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியாது

ஆனால் முயற்சியை நாம் உருவாக்க முடியும்.

அதே சமயத்தில் எதிர்பார்க்கப்படும் சந்தர்ப்பத்திற்காக காத்திராமல்

எதிர்ப்பட்ட சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்றபடி உருமாற்றிக் கொள்ள முடியும்

நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திராமல்

கிடைத்த சந்தர்ப்பத்தை நமக்கு ஏற்றபடி

நல்ல சந்தர்ப்பமாக உருமாற்றிக் கொள்ள முடியும் .


ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்

பல்வேறு சந்தர்ப்பங்கள் ,

பல்வேறு கால கட்டங்களில் ,

பல்வேறு நிலைகளில் ,

பல்வேறு தருணங்களில் ,

வெளிப்பட்ட வண்ணம் இருக்கும் ;

வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ;


ஒவ்வொருவருடைய வாழ்விலும்

எதிர்ப்படும் சந்தர்ப்பம் என்பது

குறிப்பிட்ட காலத்தில் ,

குறிப்பிட்ட இடத்தில் ,

குறிப்பிட்ட நேரத்தில் ,

குறிப்பிட்ட சமயத்தில் ,

மட்டுமே வெளிப்படும் .


இத்தகைய சந்தர்ப்பங்கள்

 ஒருவருடைய வாழ்க்கையின் போக்கையே

மாற்றக்கூடியதாக இருக்கலாம் .

வாழ்க்கையை ஒரு உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும்

ஒரு சந்தர்ப்பமாக கூட இருக்கலாம் .


வாழ்வில் வெளிப்படும் சந்தர்ப்பங்கள் என்பது

ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது

ஒரு குறிப்பிட்ட முறைக்கு கட்டுப் பட்டது .

நடக்க வேண்டியவை

நடக்க வேண்டிய காலத்தில்

நடக்க வேண்டும என்பதின் பொருட்டே

சந்தர்ப்பங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எதிர்ப்படுகிறது

சந்தர்ப்பங்கள் ஒருவருடைய வாழ்வில் வெளிப்படுவது என்பது

அவரவர் செய்த பாவ-புண்ணியங்களுக்கு ஏற்றபடி ,

கர்ம வினைகளுக்கு உகந்தபடி ,

கருமைய பதிவுகளின் படி ,

இயற்கையின் நியதிப் படி ,

கால ஒழுங்கின் படி,

பிறப்பு- இறப்பு  சுழற்சியின் படி ,

மறை பொருளின் சூட்சுமப் படி ,

முதற் பொருளின் ரகசியத்தின்  படி ,

உண்மைப் பொருளின் உருவகப் படி ,

பரம் பொருளின் திட்டப்படி ,

நித்தியப் பொருளின் கணக்குப் படி ,

தான் வெளிப்படும்.


தேடித் தேடி அலைந்தாலும் ,

ஓடி ஓடி களைத்தாலும் ,

வாடி வாடி வெறுத்தாலும் ,

முயற்சிகள் பல எடுத்தாலும் ,

எங்கே ? எப்பொழுது? எந்த இடத்தில்?

எந்த நேரத்தில்? எந்த செயல் நடைபெற வேண்டுமோ?

அந்த செயல் அதற்குரிய காலத்தில்

அதற்குரியவரைக் கொண்டு காலமானது செய்து முடிக்கும் .


நான் கண்டு பிடித்தேன் ; நான் எழுதினேன் ;

நான் செய்தேன் ; என்பதே தவறு

வெளிப்பட வேண்டிது யார்  மூலமாக வெளிப்பட வேண்டுமோ

அவர் மூலமாக வெளிப்பட்டது  , வெளிப்படுத்தப் பட்டது ;

கண்டுபிடிக்கப்பட வேண்டியது அவர்  மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது ;

எழுதப்பட வேண்டியது அவர்  மூலமாக எழுதப்பட்டது ;

சொல்லப்பட வேண்டியது அவர்  மூலமாக சொல்லப்பட்டது ;

வெளிப்படுத்தப் பட வேண்டியது அவர்  மூலமாக வெளிப்படுத்தப் பட்டது ;

விளக்கப் பட வேண்டியது அவர்  மூலமாக விளக்கப்பட்டது ;

அறிவிக்கப்பட வேண்டியது அவர்  மூலமாக அறிவிக்கப்பட்டது ;

வழிநடத்தப்பட வேண்டியது அவர்  மூலமாக வழிநடத்தப் பட்டது ;

காப்பாற்றப்பட வேண்டியது அவர்  மூலமாக காப்பாற்றப்பட்டது ;

என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

என் மூலமாக செய்யப்பட்டது என்பதை

நினைவில் நிறுத்த வேண்டும் .


இயக்குவது சூட்சுமமாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது ;

நான் இயங்கிக் கொண்டு இருக்கிறேன் .

இயக்குவது எங்கோ சூட்சுமமாக இருக்கிறது ;

நான் வெறும் இயங்கும் பொருள் தான் .

ஆட்டுவிப்பவன் ஒருவன் ; ஆடும் பொருள் நான் .

என்ற உணர்வு  , என்ற அறிவு நமக்கு வர வேண்டும் .


அனைத்தும் ஒரு குறிப்பிட் நியதிக்குள்

எழுதப்பட்ட வரையறைக்குள்

இயங்கிக் கொண்டிருக்கிறது.

நம்மிடம் எதுவும் இல்லை.

முழுமை இயக்குகிறது ;பகுதி இயங்குகிறது;

என்று நாம் தெளிவு பெறவேண்டும்.


விதைக்கப்பட்ட விதையானது உடனே மரமாகி விடுவதில்லை.

பூவாகி , செடியாகி , மரமாகி , காயாகி , கனி கொடுக்கிறது .

இது ஒரு குறிப்பிட்ட கால வட்டத்திற்குள் இயங்குகிறது .

மரங்கள் எவ்வளவு தான் ஓங்கி வளர்ந்து நின்றாலும்

அவை பருவத்திற்கு ஏற்றபடி தான் ;

கால நியதிக்கு கட்டுப்பட்டுத் தான் ;

இயக்க ஒழுங்குக்குள் இருந்து கொண்டு தான் ;

பழங்களைக் கொடுக்கும் .

காலத்திற்கு ஏற்றபடி , பருவத்திற்கு உகந்தபடி ,

பழங்களைக் கொடுக்கும் .

மற்ற நேரங்களில் பழங்களைக் கொடுக்காது .


பனிரெண்டாம் வகுப்பு  படிப்பவர்கள் மருத்துவராக வேண்டும்

என்று பெரும்பாலானவர்கள் நினைத்தாலும்

குறிப்பிட்ட எண்ணிக்கையினர்  மட்டுமே

குறைவான எண்ணிக்கையில் மட்டுமே

குறைவானவர்களுக்கு மட்டுமே

மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது .

அதைப் போல பொறியியல் படிப்பு ; பட்டப் படிப்பு ;

படிக்கும் வாய்ப்பும் ;குறிப்பிட்ட துறைகள் படிக்கும் வாய்ப்பும் ;

குறிப்பிட்டவர்களுக்கே கிடைக்கிறது .


விருப்பப்பட்ட படிப்பு ,

விருப்பப்பட்ட துறை ,

விருப்பப்பட்ட தொழில் ,

விருப்பப்பட்ட துணை ,

விருப்பப்பட்ட வாழ்க்கை ,

எல்லாருக்கும் கிடைப்பதில்லை .


விருப்பப்பட்டது எல்லாம் எனக்கு கிடைத்தது என்றோ ?

விருப்பப்பட்டவைகளை எல்லாம் நான் அனுபவிக்கிறேன் என்றோ?

விருப்பப்பட்டபடி என் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்றோ?

முழுமையான திருப்தி கொண்டு

வாழ்வை நடத்துபவர்  யாருமேயில்லை .

நாளையாவது நல்ல நாளாக இருக்காதா?

நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக இருக்காதா?

நாளைய விடியலாவது எனக்கு மகிழ்ச்சியாக விடியாதா?

என்று கற்பனைகளுடன் காலத்தை ஓட்டுபவர்  தான் அதிகம் .


கஷ்டமில்லாமல் இருக்கிறேன் ;

கவலையில்லாமல் துயில்கிறேன் ;

பசியில்லாமல் வாழ்கிறேன் ;

கண்ணீரில்லாமல் சிரிக்கிறேன் ;

வருத்தமில்லாமல் சுகிக்கிறேன் ;

துயரமில்லாமல் மகிழ்கிறேன் ;

இழப்பில்லாமல் உயர்கிறேன் ;

தோல்வியில்லாமல் முன்னேறுகிறேன் ;

இழப்பில்லாமல் களிக்கிறேன் ;

என்று சொல்பவர்  யாருமில்லை.


ஒவ்வொருவருக்கும்  ,

இருப்பவருக்கும்- இல்லாதவருக்கும்

உள்ளவனுக்கும் - இல்லாதவனுக்கும்

வாழ்வில் குறைகள் இருந்து கொண்டு தான் இருக்கும் .

குறைகள் இல்லாத மனிதர்  இந்த அவனியில் யாருமில்லை .


வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை புரிரிந்து கொண்டு

தனக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்பவன்

தன் வாழ்வில் உள்ள குறைகளை

பெரும்பாலும் நீக்கிக்கொள்வதன் மூலம் உயர்வடைகிறான் .


அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவன்

தன் நிலைக்கேற்றபடி உபயோகப் படுத்திக் கொள்ளாதவன்

தன் வாழ்வுக்கேற்றபடி உபயோகப் படுத்திக் கொள்ள தெரியாதவன்

தாழ்நிலை அடைகிறான் .


ஒருவருடைய வாழ்வில் சந்தர்ப்பம் எதிர்ப்படுவது

எப்படி கர்மவினைப் படியோ

அப்படியே அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவதும் .


எப்படி தான் முயற்சி செய்தாலும் உழைப்பை செலவிட்டாலும்

நடக்க வேண்டியது நடக்க வேண்டிய காலத்தில் தான் நடக்கும் .


எதிர்ப்பட வேண்டியது ,

நடக்க வேண்டியது ,

முடிய வேண்டியது ,

அந்த அந்த காலத்திற்குள் தான்

அதற்குரிய காலத்திற்குள் தான்

அதற்கென்று ஒதுக்கப்பட்ட காலத்திற்குள் தான்

அதற்கென்று குறிக்கப்பட்ட கர்மவினை

பதிவுக்கேற்றபடி தான் நடக்கும்  .


எந்த ஒரு செயலும் நடக்க வேண்டிய காலத்தில்

நடக்க வேண்டிய நேரத்தில் நடந்தே தீரும் .

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை புரிந்து

பயன்படுத்த வேண்டும் முயற்சி செய்ய வேண்டும் .

எதிர்பார்க்கும் முடிவு வரும் வரை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் .


எதிர்பார்த்த வெற்றி ஒரு சந்தர்ப்பத்திலும் ,

பலமுறை முயன்ற பின்னும் கிடைக்கலாம் .

அதை நாம் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தினாலும் ,

தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டாலும் ,

அதிகப் படியான உழைப்பை தந்தாலும் ,

அதிகப் படியான சிந்தனையை செலவிட்டாலும் ,

ஒரு செயல் முடிய வேண்டிய

நாள் வந்தால் தான் முடியும் .

செயலுக்குரிய பயனைத் தரும் .


கிடைத்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி முயற்சி செய்து

வெற்றி பெற நினைக்க வேண்டுமே ஒழிய ,

வெற்றி கண்டிப்பாக கிடைக்கும் என்ற நினைப்பில்

கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடாமல்

பயன்படுத்திக் கொண்டே வர வேண்டும் .

அதற்குரிய காலமும் - நேரமும் வரும் போது

நாம் எதிர்பார்க்கும் வெற்றி நமக்கு கிடைக்கும் .


படர்ந்து விரிந்து வளர்ந்த மரங்கள்

குறிப்பிட்ட பருவ காலத்தில் தான் பழங்களைத் தரும்.

அதைப் போல நாம் எவ்வளவு தான் கிடைத்த சந்தர்ப்பத்தை

பயன்படுத்தி முயற்சி செய்தாலும் ,

கிடைக்க வேண்டிய வெற்றி

கிடைக்க வேண்டிய காலத்தில் தான் கிடைக்கும்

என்கிறார்  ஔவையார் .



இயேசு கிறிஸ்து -ஔவையார் :

இயேசு ,

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு

பயன்படுத்திக் கொள்பவன் உயர்வடைகிறான்

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பத்தை புரிந்து கொள்ளாமல்

பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விடுபவன்

வாழ்வில் தாழ்வடைகிறான் என்கிறார் .


அவ்வாறே  ,

ஔவையாரும் ,

வாழ்வில் தொடர்ந்து எதிர்ப்படும் சந்தர்ப்பங்களைப்

பயன்படுத்தி தோல்வியுற்றாலும் ,தோல்வி கண்டு துவண்டு விடாமல் ,

காலம் கனியும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்ற

தொலைநோக்கு பார்வையுடன்

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்பவன்

உயர்நிலை அடைகிறான்


வாழ்வில் தொடர்ந்து எதிர்ப்படும் சந்தர்ப்பங்களை

பயன்படுத்தி தோல்வியுற்றவன்

தோல்வியினால் மனம் வெறுத்து

தோல்வி என்பது நிரந்தரமல்ல

காலம் கனியும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்

என்ற தொலைநோக்கு பார்வை இல்லாமல்

வாழ்வில் எதிர்ப்படும் சந்தர்ப்பங்களை

பயன் படுத்திக் கொள்ளாமல் தவற விடுபவன்

தாழ்நிலை அடைகிறான் என்கிறார் .



                 “””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்


                                போற்றினேன் பதிவுஐம்பத்துஏழு ந்தான்முற்றே “”