February 01, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பரமாய-பதிவு-4




        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பதிவு-4
      
                           “”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தைப் பற்றியும் , அதன் மகிமையைப் பற்றியும் , அதன் தன்மைகளைப் பற்றியும் , அதன் சிறப்புகளைப் பற்றியும் இயேசு கிறிஸ்து பல்வேறு உவமைகள் மூலம் விளக்குகிறார்.

பரலோக ராஜ்யம் :
பரம் என்றால் நேர்  இல்லாதது ; உவமை இல்லாதது ;அதற்கு இணை என்ற ஒன்று இல்லாதது; என்று பொருள் .
பரலோக ராஜ்யம் என்றால் அதற்கு இணையான ஒன்று இல்லை என்று பொருள் .


 வசனங்கள்-1:
இத்தகைய சிறப்பு மிக்க பரலோக ராஜ்யத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து கீழ்க்கண்ட வசனங்களின் மூலம் விளக்குகிறார்:

பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது;.அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
                                                                                  மத்தேயு-13:31

பரலோக ராஜ்யத்தைப் பற்றி பல்வேறு நிலைகளில் , பல்வேறு விதங்களில், பல்வேறு வசனங்களின் மூலம் உவமைகளாக விளக்கிக் கூறிய இயேசு,
பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு உவமையாக கூறுகிறார்.


பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை நேரடியாக கூறாமல் ,மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு அந்த பொருளின் தன்மைகளை அறிந்து , உணர்ந்து விளங்கிக் கொள்வதன் மூலம்,
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளை உணர முடியும் என்ற காரணத்திற்காகவே பரலோக ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஒப்பிட்டு கூறுகிறார்.

ஒப்பிடுதல் என்பது தமிழ் இலக்கணத்தில் உவமைத் தொகை எனப்படுகிறது. உவமைத் தொகை என்றால் என்ன என்பதையும் அது எதை விளக்குகிறது என்பதையும் பார்ப்போம் .

உவமைத் தொகை:
ஒரு பொருளை அப்படியே கூறின் சிறப்பன்று . அதனோடு ஒத்த இன்னொரு பொருளோடு சேர்த்துக் கூறின் அப் பொருளுக்குச் சிறப்பு ஏற்படும். பொருளும் நன்கு விளங்கும்.
சிறப்புப் பொருளும் தெளிவாக அமைவதற்காகத் தொடர்புடைய பொருளை உவமையாக்கிக் காட்டி விளக்குவர்.
உவமைக்கும் , உவமிக்கப்படும் பொருளுக்கும் , இடையில் போல , போன்ற,  நிகர , அன்ன என்னும் உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத் தொகை எனப்படும்.

எடுத்துக் காட்டு:
மலர்ப்பாதம்
மலர்ப்பாதம் என்றால் மலரைப் போன்ற பாதம் என்று பொருள் .

                        மலர்----------------உவமை
                     போன்ற-------உவம உருபு
                        பாதம்---------உவமேயம்

மலர்  என்பது அதன் தன்மையில் எப்படி மென்மையாக இருக்குமோ, அதைப் போன்றே பாதங்களும் மலரைப் போல மென்மையாக இருக்கின்றன .

மலரைப் பற்றி முதலில் கூறி , மலரின் சிறப்புக்களைப் பற்றி , மலரின் தன்மைகளைப் பற்றி முதலில் கூறி , மலரைப் பற்றி விளக்கி விட்டு , பிறகு மலருடன் பாதங்கள் ஒப்பிட்டு விளக்கப் படுகிறது .
இதுவே உவமைத் தொகை எனப்படும்.

அதைப் போல் இயேசுவும் முதலில் கடுகு விதையின் பண்புகளை , அதன் தன்மைகளை , அதன் சிறப்புகளை நேரடியாக விளக்கி விட்டு பிறகு கடுகு விதையுடன் பரலோக ராஜ்யத்தை ஒப்பிட்டு விளக்குகிறார்.


அறிவில் முதிர்ச்சி அடைந்து , ஆன்மீக விளக்கம் பெற்று , தெளிவான மனநிலையை அடைந்து,
ஞான விளக்கத்தைப் பெற்றவர்கள் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் மறை பொருளாக மறைத்து வைத்து இருக்கின்றனர்.

உண்மை உணர்ந்தவர்கள் இந்த ரகசியங்களை நேரடியாக இந்த சமுதாயத்திற்கும் மக்களுக்கும் உணர்த்தாமல்,
உவமைகளாகவும் , வார்த்தை ஜாலங்களையும் பயன்படுத்தித் தான் எழுதி வைத்து இருக்கின்றனர் , பேசி இருக்கின்றனர்.
தாங்கள் உணர்ந்தவைகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த பிரபஞ்ச ரகசியங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூட்சும ரகசியங்களாக எழுதி வைத்து விட்டு சென்று விட்டனர்.

இயேசுவும் அவ்வாறே மிக உயர்ந்த , மதிப்புமிக்க , ஈடு இணையற்ற, ஒப்பிட்டுக் காட்ட முடியாத, பரலோக ராஜ்யத்தை உவமைகளாக சொல்லி மறைபொருள்களை வெளிப்படுத்துகிறார்.

முதலில் இயேசு பரலோக ராஜ்யத்தை கடுகு விதையுடன் ஒப்பிடுகிறார். பிறகு இயேசு கடுகு விதையின் சிறப்புகளை தன்மைகளை விளக்குகிறார்.
அதாவது கடுகை வைத்து என்ன செயல் செய்யப்படுகிறது என்பதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
கடுகை எடுத்து ஒருவன் நிலத்தில் விதைத்தான் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-2:
எந்த காரணத்திற்காக கடுகை அவன் நிலத்தில் விதைத்தான், அதில் உள்ள தத்துவம் என்ன , அதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன , இதன் மூலம் இயேசு சொல்ல வரும் கருத்து என்ன , என்பதை இயேசு அடுத்த வசனத்தில் சொல்கிறார்:

அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும் , வளரும் போது,  சகல பூண்டுகளிலும் பெரிதாகி , ஆகாயத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து அடையத் தக்க மரமாகும் என்றார்
                                                                                மத்தேயு-13:32

கடுகு விதையானது எல்லா விதைகளுடன் , மற்ற விதைகளுடன் ஒப்பிடும் பொழுது சிறிய அளவில் இருக்கிறது.
ஆனால் அது வளரும் பொழுது பெரியதாகி , மரமாகி , கிளைகள் பலவற்றை தன்னகத்தே கொண்டு , இலைகள் பலவற்றை பெற்று , ஓங்கி வளர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
அதன் தன்மையை அறிந்து,
அதன் இயல்புகளை உணர்ந்து,
அதன் வளர்ச்சியால் கவர்ந்து,
அதன் வசீகரத்தால் இழுக்கப்பட்டு,
பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்குகின்றன.


இத்தகைய சிறப்பு மிக்க நிலையை சிறிய கடுகானது மரமான பின்பு அடைகிறது.
கடுகு விதை என்று பார்க்கும் பொழுது அது மிகச் சிறியதாக இருக்கிறது.
ஆனால் அது விதைக்கப்பட்டு வளரும் பொழுது , பெரியதாகி , மரமாகி, கிளைகள் இலைகள் கொண்டு, பறவைகள் வந்து தங்கும் அளவுக்கு பெரியதாகிறது .
இவைகள் அனைத்தும் அந்த கடுகு விதைக்குள் மறைந்து இருக்கிறது. பார்த்தால் தெரிவதில்லை.
கடுகு விதை வளர்ந்து , முதிர்ச்சி அடையும் பொழுது , கடுகு விதைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ,அனைத்தும் காலத்திற்கு தகுந்தவாறு பருவகாலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படுகிறது.

அதாவது சூட்சும விஷயங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.
காலம் வரும் பொழுது வெளிப்படுகிறது.


அதைப் போல்,
பரலோக ராஜ்யம் - பிரபஞ்சம் , பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள் , உயிர்கள், உயிர்களின் மாற்ற நிலைகள் , போன்ற பல்வேறுபட்ட நிலைகளை
தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது இறைவன் பரலோக ராஜ்யத்தின் வாசல்களைத் திறந்து படைப்புகளை உருவாக்குகிறார்.

கடுகு எவ்வாறு தன்னுள் இருக்கும் சூட்சும ரகசியங்களை காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறதோ அதைப் போலவே,
பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை இறைவன் காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறார்  என்கிறார் இயேசு.



ஓவையார்:
      “”பரமாய சக்தியுட் பஞ்சமாபூதந்
         தரமாறிற் றோன்றும் பிறப்பு”””
                                -----------ஔவையார்--------ஔவைக்குறள்-------
பரம் என்று சொல்லப் படுகின்ற ஆதிநிலை,  முதல்நிலை , மூல நிலை,  இருப்பு நிலை , இயக்க நிலையாக மாற்றம் அடைந்து , பரிணாமம் அடையும் பொழுது விண் என்ற முதல் பூதமும் அதனைத் தொடர்ந்து வரிசையாக,
விண் , காற்று , நெருப்பு,  நீர்,  நிலம் என்று வரிசையாக ஐந்து பூதங்களாக பஞ்ச பூதங்களாக தோன்றுகிறது .

மனிதன் முதலில் நிலத்தைக் கண்டான் .
பிறகு நிலத்தை தோண்டும் பொழுது நீரைக் கண்டான்.
அதனுள் மறைந்து கொண்டு இருந்த நெருப்பு வெளிப்படும் பொழுது நெருப்பைக் கண்டான் .
மேலும் ஆராய்ந்து நோக்கும் பொழுது அவற்றில் காற்று ஊடுருவி நிரம்பி இருப்பதைக்  கண்டான்.
இவைகள் அனைத்தும் விண்ணிலிருந்து தோன்றுகிறது என்பதை உணர்ந்தான்.
விண் என்ற முதல் பூதம் தான் இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் என்பதை உணர்ந்து கொண்டான்.

ஆனால் மனிதன் எவ்வாறு , எந்த நிலையில் , பஞ்ச பூதங்களை உணர்ந்து கொண்டானோ , அதே நிலையிலேயே பஞ்ச பூதங்களை வரிசைப் படுத்தி விட்டான்.
நிலம் , நீர் ,  நெருப்பு , காற்று ,விண்
என்ற நிலையில் ஐந்தாக வரிசைப் படுத்தி விட்டான்.


இந்த பஞ்ச பூதங்கள் தான் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கூடி ,கால மாற்றத்திற்கு ஏற்றவாறு உயிரினம் உருவாக காரணம் ஆகிறது.
உயிர்கள் தோற்றம் உருவாக காரணம் ஆகிறது ,ஆதாரம் ஆகிறது, அடிப்படையாக இருக்கிறது. அதாவது,

இருப்பு நிலை அசைந்து,
விண் என்ற இயக்க நிலையாகி,
விண் பஞ்சபூதங்களாகி ,
உயிரினங்களாக பரிணாமம் அடைகிறது.

ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றம் அடைகிறது.
அதாவது ஒன்று அதன் இயல்பில் மாற்றம் அடைந்து மற்றொன்றாக உருமாற்றம் அடைகிறது.
இதனையே ஔவையார்  தரம் மாறுதல் என்கிறார்.

தரம் மாறுதல் என்றால் இயல்பில் அமைப்பில் வடிவத்தில்  என்று பல்வேறு தரப்பட்ட நிலைகளில் மாற்றம் அடைகிறது என்று பொருள்.
                      இருப்பு நிலையில் - தான்
                     இயக்க நிலையாகிய விண்,
                    விண்ணின் கூட்டாகிய பஞ்சபூதம் ,
                     பஞ்சபூத கூட்டாகிய உயிரின மாற்றம்,
ஆகியவை அடங்கி இருக்கிறது.

இருப்பு நிலை என்று சொல்லப்படுகின்ற பரம் , அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது.

காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறது. ஒவ்வொன்றாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

அதனால் தான் ஔவையார்,
           “”””பரமாய சக்தியுள்”””””
இருப்பு நிலையான பரத்தில் மறைந்திருக்கும் இயக்க நிலையாகிய விண் என்ற சக்தி,

             “”””பஞ்சமா பூதம்”””””
பஞ்ச பூதங்களாக உருவாகி,

         “”””தரம் மாறித் தோன்றும் பிறப்பு””””
உயிரினமாக பிறப்பெடுக்க பரம் பல்வேறு தரப்பட்ட நிலையில் மாற்றம் அடைகிறது என்கிறார்.




இயேசு கிறிஸ்து – ஔவையார்:
பரலோக ராஜ்யத்தில் உள்ளவைகளை இறைவன் எவ்வாறு காலம் வரும் பொழுது வெளிப்படுத்துகிறாரோ,

அவ்வாறே
ஔவையாரும் இருப்பு நிலை காலம் வரும் பொழுது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்

                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                         போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

January 28, 2012

இயேசு கிறிஸ்து- திருவள்ளுவர்-தீயினாற்-பதிவு-3




       இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-பதிவு-3
      
                              “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
 இயேசு கிறிஸ்து:
 வசனங்கள்-1
இயேசு ஜனங்களை வரவழைத்து , அவர்களை நோக்கி , மனுஷனைத் தீட்டுப்படுத்தக் கூடியவை எவை என்பதையும் , தீட்டுப் படுத்தாதவை எவை என்பதையும் கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப் படுத்தாது ,  வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப் படுத்தும் என்றார் .“
                                                                      மத்தேயு - 15 : 11

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை மனிதனை களங்கப்படுத்தாது, அவனை அசுத்தப் படுத்தாது ,
வாய்க்குள்ளே செல்பவைகள் மனிதனுடைய பசியைத் தீர்ப்பதற்காகத் தான் உள்ளே செல்கிறதே தவிர ,
அவைகளால் மனிதனுக்கு எந்த விதமான கெட்ட பெயர்களையும் , அவமானத்தையும் ஏற்படுத்தக் கூடிய நிலையை ஏற்படுத்தாது ,  
சூழ்நிலையை உருவாக்காது .

ஆனால் மனிதனுடைய வாயிலிருந்து வெளிவருபவை அதாவது மனிதனுடைய வார்த்தைகள் ,
அவன் பேசும் பேச்சுக்கள் ,அவன் வெளிவிடும் சொற்கள்,
அவைகள் தவறானவைகளாக இருந்தால் ,
தீய சொற்களைக் கொண்டவைகளாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை வருத்தப்பட வைக்கக் கூடியதாக இருந்தால் ,
மற்றவர்களுடைய மனதை புண்படுத்துவதாக இருந்தால்,
தன்னுடைய சொற்களால் , தன்னுடைய வார்த்தைகளால் , தன்னுடைய பேச்சுக்களால் , தனக்கே அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவைகளாக இருந்தால் ,
அவைகள் தான் மனிதனுக்கு கெட்ட பெயரையும்,
தீர்க்க முடியாத களங்கத்தையும் உண்டாக்கி விடும் என்கிறார்  இயேசு .



 வசனங்கள்-2 
மனிதனை களங்கப் படுத்துபவை எவை என்றும் , மனிதனை களங்கப் படுத்தாதவை எவை என்றும் கூறிய இயேசு கிறிஸ்து,
வாய்க்குள்ளே செல்பவை எந்த காரணங்களுக்காக மனிதனை களங்கப்படுத்தாது என்பதைப் பற்றி விளக்கமாக கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:


வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசன வழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? ”
                                                                      மத்தேயு - 15 : 17

மனிதனுடைய வாய்க்குள்ளே செல்பவை அதாவது மனிதன் சாப்பிடும்  எல்லா உணவுப் பொருட்களும் அவனுடைய வயிற்றுக்குள் சென்று ஜீரணம் ஆகி விடும்.

அவ்வாறு ஜீரணம் ஆகிய உணவானது ஏழு தாதுக்களாக மாற்றம் அடைகிறது,
அவைகளாவன : இரசம் , இரத்தம்,  சதை , கொழுப்பு,  எலும்பு,  மஜ்ஜை ,
ஆண்-சுக்கிலம்; பெண்-சுரோணிதம் ஆகியவை ஆகும்

ஜீரணமானவை தவிர ஜீரணமாகாதவை அதாவது தேவையற்றவை கழிவு பொருட்களாக ஆசனவாய் வழியாக வெளியே சென்று விடும் என்ற உண்மையை ,

நீங்கள் அறிந்தும் , அறியாதது போல் இருக்கிறீர்களா ,
உணர்ந்தும் , உணராதது போல் இருக்கிறீர்களா ,
தெரிந்தும் , தெரியாதது போல் இருக்கிறீர்களா ,
என்று ஜனங்களை நோக்கி இயேசு கேட்கிறார்



 வசனங்கள்-3 :
வாயிலிருந்து வெளிப்படுபவை எவ்வாறு மனிதனை களங்கப்படுத்தும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் இயேசு விளக்குகிறார்:

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இதயத்திலிருந்து புறப்பட்டு வரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப் படுத்தும்.”
                                                                                                மத்தேயு - 15 : 18
 மனிதனுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் அவனுடைய வாயிலிருந்து நேரடியாக வெளிவருவது இல்லை.
அந்த சொற்களுக்குரிய அதாவது,
                    அதனுடைய மூலம்,
                    அதனுடைய ஆதாரம்,
                    அதனுடைய வேர்,
                    அதனுடைய அடிப்படை,
                    எங்கே இருக்கிறது என்றால்
                     இருதயத்தில் இருக்கிறது.

இருதயத்தைப் பாதித்த நிகழ்வுகள்,
வருத்தப் பட வைத்த துன்பங்கள்,
கனன்று கொண்டிருக்கும் எரிமலைகள் ,
நீக்க முடியாத கவலைகள்,
அடக்கி வைக்கப்பட்டு இருதயத்தில் கொதித்து கொண்டிருக்கும் விஷயங்கள்,
ஆகியவை
இருதயத்திலிருந்து நேராக புறப்பட்டு வெளியே வாய் வழியாக வந்து,
எதிரே இருப்பவரை பாதிக்கும் விதத்திலும்,
எதிரே இருப்பவரை மனம் வருத்தப்பட வைக்கும் விதத்திலும்,
போன்ற செயல்களைச் செய்வது மட்டுமில்லாமல்,
தனக்கும் அவமானத்தை உண்டாக்கும் வகையிலும் இருக்கும்.

இவ்வாறு வாயிலிருந்து ஆவேசமாக வெளிப்படும் வார்த்தைகள் ,மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் அறிவில்லாமல் சொற்களாக வெளிப்படும் .
அவைகளே மனிதனை களங்கப்படுத்தும் என்கிறார்  இயேசு.



 வசனங்கள்-4 
இருதயத்திலிருந்து வாய்வழியாக வெளிப்படும் வார்த்தைகள் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும் என்று சொன்ன இயேசு ,
அவைகள் எத்தகைய விதத்தில் களங்கப்பட்டு இருக்கும் ,அசுத்தமடைந்து இருந்தும் ,தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கும், என்பதை பின்வரும் வசனங்களில் கூறுகிறார்:

எப்படியெனில் ,இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும் , விபசாரங்களும் , வேசித் தனங்களும் , களவுகளும், பொய்ச் சாட்சிகளும், துhஷணங்களும் புறப்பட்டு வரும்.”
                                                                                மத்தேயு - 15 : 19
இருதயத்தில் வைக்கப்பட்டிருப்பவை ,
புதைத்து வைக்கப் பட்டிருப்பவை,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருப்பவை ,
எவைகள் என்று கணக்குப் பார்ப்போமாகில்,

இழிவுகளைத் தன்னகத்தே கொண்ட பொல்லாத சிந்தனைகள்,
இரக்கத் தன்மைகள் அற்ற எதற்கும் அஞ்சாத கொலை பாதகங்கள் ,
களங்கங்களைப் பற்றிக் கவலைப் படாத வேசித் தனங்கள்,
நல்லவை , கெட்டவை ஆகியவற்றை வேறுபடுத்தி பார்க்காத களவுகள் ,
பாதிப்பு யாருக்கு என்று நினைத்துப் பார்க்காத பொய்ச் சாட்சிகள்,
அருவெறுக்கத் தக்க நினைவுகளைச் சுமந்த துhஷணங்கள்,
ஆகியவை இதயத்தில் இருக்கும் .இவை வெளியே சொற்களாக வெளி வரும் பொழுது,

மற்றவருடைய மனதை பாதிக்கும் வகையில் வெளி வரும்.
மற்றவருடைய மனதை துன்பப் படுத்தும் வகையில் வெளிவரும்.
இவைகள் தான்  , இந்த சொற்கள் தான்,
வாயிலிருந்து வெளிப்படும் கொடூரத் தன்மைகள் கொண்ட இவைகள் தான்,
சொல்பவரையும் , கேட்பவரையும் மனது வருத்தப்பட வைக்கும் என்கிறார் இயேசு  .



திருவள்ளுவர்:

     “”””தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
            நாவினாற் சுட்ட வடு “””
                                                                ----திருவள்ளுவர்----திருக்குறள்----
உடம்பின் மேல் புறத்தில் நெருப்பினால் ஏற்படக் கூடிய காயங்களையும், வடுக்களையும் , மருத்துவ உதவிகள் பெற்று , மருந்துகள் போடுவதன் மூலம்  உடம்பின் மேல் ஏற்படும் காயங்களைச் சரிப் படுத்திக் கொள்ளலாம்.
அதாவது உடம்பின் புறத்தே ஏற்படக் கூடிய காயங்களை சரி செய்து கொள்ளலாம்.

அதைப் போல் அந்தக் காயத்தினால் ஏற்பட்ட வலிகளும் ,மனத்திற்கு ஏற்பட்ட கவலைகளும் , துன்பங்களும் வெளியில் உண்டாகிய காயங்கள் மறையும் பொழுது ஆறும் பொழுது உள்ளுக்குள் வலியும் ஆறிவிடும். துன்பங்களும் கரைந்து விடும்.

ஆனால் ஆறாத ஒன்று உண்டு ,ஆற்ற முடியாத ஒன்று உண்டு. அது என்னவெனில் , அது வாயிலிருந்து வெளிப்படும் சொற்களே ஆகும்.
அத்தகைய வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் ,தேவையற்ற சொற்கள், துன்பத்தை விளைவிக்கக் கூடிய சொற்கள் ,மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கக் கூடிய சொற்கள் வெளிப்படும் பொழுது,
மற்றவர்  மனதை வருத்தப்பட வைக்கும் பொழுது ,துன்பப் பட வைக்கும் பொழுது, அவைகள் ஆற்ற முடியாத துன்பத்தை மற்றவர்  மனதில் உண்டாக்கி விடும்.

நம் வாயிலிருந்து வெளிப்பட்டவை யாரை வருத்தப் பட வைக்க பேசப்பட்டதோ  அவரை வருத்தப் பட வைக்கும்.
பிறகு நமது மனது குழப்பம் நீங்கி , தெளிவு பெற்று , அமைதி பெறும் பொழுது, யோசித்துப் பார்த்தால் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணர்வோம் .
அந்த நிலையில் ,அந்த கால கட்டத்தில்  நம்முடைய மனதிலும் ஆற்ற முடியாத கவலைகளும், துன்பங்களும் உண்டாக்கி விடும் .
வாயிலிருந்து வெளிப்படும் சொற்கள் , தன்னையும் பிறரையும் மனது வருத்தப்பட வைப்பதோடு மட்டுமில்லாமல் ஆற்ற முடியாத துன்பத்தையும் கொடுத்து விடும் என்கிறார்  திருவள்ளுவர்.



இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்:
வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப்படுத்தும் என்றார்  இயேசு.

அவ்வாறே
திருவள்ளுவரும் வாயிலிருந்து வெளிப்படுபவை மனிதனை களங்கப் படுத்தும் என்கிறார்.


இயேசு போதனைகளில் சிறப்பான போதனை ஒன்றை அடுத்துப் பார்ப்போம்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”

January 26, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-காடே திரிந்தென்ன-பதிவு-2




            இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-பதிவு-2
      
                     “”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                                                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இந்த அவனியில் வாழும் மக்கள் அனைவரும்
அறிவில் விளக்கம் அடைந்து ஆன்ம ஒளி பெற்று வாழ ,
இல்லறத்தில் இல்லாமையை நீக்கி இனிமையுடன் வாழ ,
துன்பங்கள் , கவலைகள் ஆகியவற்றை விலக்கி மகிழ்ச்சியுடன் வாழ ,
பாவங்களை கழித்து உயர்ந்த பண்புகளைப் பெற்று சுகமுடன் வாழ ,
எந்தவிதமான குறைகளும் இன்றி நலம் பல பெற்று வளமுடன் வாழ ,
பல்வேறு கருத்துகளை உவமைகளாகக் கூறிய இயேசு ,

ஜெபம் பண்ணும் பொழுது ,
எவ்வாறு செய்ய வேண்டும் ,
எந்த விதத்தில் செய்ய வேண்டும் ,
எந்த முறையில் செய்ய வேண்டும் ,
எந்த வழிமுறைகளைப் பின் பற்றி செய்ய வேண்டும் ,
என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார்:

நீயோ ஜெபம் பண்ணும் போது , உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி , அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ; அப்பொழுது , அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். “
                                                                                     மத்தேயு – 6: 6

வாழ்வில் ஆற்றொணாத் துயரை அளித்துக் கொண்டு இருக்கும் மனக்குறைகள் ,
வாழ்க்கைக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் அத்தியாவசிய தேவைகள்,
நிறைவேற்றத் துடிக்கும் விலக்க முடியாத , கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் ,
பெற வேண்டிய இன்பங்கள் , துறக்க துடிக்கும் துன்பங்கள்,
ஆகியவற்றை பெற வேண்டும் என்றால்
ஆண்டவனிடம் ஜெபம் பண்ண வேண்டும்.
கோரிக்கை வைக்க வேண்டும் .
தன் கோரிக்கையை நிறைவேற்ற சொல்ல வேண்டும்.
அவ்வாறு ஜெபம் பண்ணும் பொழுது எவ்வாறு பண்ண வேண்டும் என்று இயேசு கீழ்க்கண்டவாறு சொல்கிறார் :

ஜெபம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் , ஜெபம் செய்பவர் ஜெபம் செய்வதற்காக , தன்னுடைய வீட்டுக்குள் சென்று தன்னுடைய வீட்டுக்குள் இருந்த படியே ஜெபம் பண்ண வேண்டும் .
தன்னுடைய வீட்டினுள் ஜெபம் பண்ணுவதற்கு என்று தனியாக ஒதுக்கி வைக்கப்பட்ட அறைக்குள்ளோ அல்லது தனிமையுடன் அமைதியாக இருக்கும் அறைக்குள்ளோ அல்லது ஜெபம் செய்வதற்கு என்று ஒதுக்கி வைக்கப் பட்ட அறைக்குள்ளோ  சென்று ஜெபம் செய்ய வேண்டும் .


அமைதியாக இருக்கும் அறைக்குள் தனிமையாக எந்த விதமான ஆள் அரவமும் இல்லாத அறைக்குள் செல்ல வேண்டும்.
அந்த அறைக் கதவைப் பூட்டிக் கொள்ள வேண்டும் .

இந்த உலகை இயக்க ஒழுங்கு மாறாமல் நடத்திக் கொண்டிருக்கும் ,
இந்த பிரபஞ்சத்தைப் படைத்து , காத்து , அழித்துக் கொண்டிருக்கும் ,
இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் இறைவனை நோக்கி இறைவனை நினைத்து ,
தன் தேவைகளை தன் கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி ஜெபம் பண்ண வேண்டும் .

ஜெபம் செய்பவருடைய தேவைகள் நியாயமானதாக இருந்தால் ,
துhய்மையானதாக இருந்தால்,
மற்றவர்களை பாதிப்பு அடையச் செய்யாமல் இருந்தால் ,
தீயவைகளை விளைவிப்பதாக இல்லாமல் இருந்தால் ,
நன்மைகளை தருவதாக இருந்தால்,
ஜெபம் செய்பவருக்கு அத்தேவைகள் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால்,
இறைவனாகிய பிதா ஜெபம் செய்பவருடைய தேவையை நிறைவேற்றுவார் என்கிறார்  இயேசு .



ஜெபம் செய்யும் பொழுது எந்த வழிமுறைகளைப் பின் பற்றி ஜெபம் செய்ய வேண்டும் என்று சொன்ன இயேசு ,
ஜெபம் செய்யும் பொழுது எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி செய்ய வேண்டும் என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் கூறுகிறார் :

அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும் போது , அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள் , அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப் படுமென்று நினைக்கிறார்கள்.”
                                                                                                  மத்தேயு - 6 : 7

நீங்கள் ஜெபம் செய்யும் பொழுது ,
அறிவற்ற வீணர்களைப் போல,
அறியாமை நெஞ்சம் உடையவர்களைப் போல ,
ஒன்றும் தெரியாத முட்டாள்களைப் போல ,
ஜெபம் பண்ணும் பொழுது வீண் வார்த்தைகளை , தேவையற்ற வார்த்தைகளை , ஒன்றுக் கொன்று தொடர்புகள் இல்லாத வார்த்தைகளை, அருவெறுக்கதக்க வார்த்தைகளை ,மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன் படுத்தி ஜெபம் செய்யாதீர்கள் .

அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி , சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி ,
மாயஜால வார்த்தைகளைப் பயன்படுத்தி , மற்றவர்களை வசியப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ,
ஜெபம் பண்ணினால் தன்னுடைய தேவைகளை இறைவன் ஏற்றுக் கொண்டு செயல் படுத்துவார்  என்று தவறாக நினைத்து கொண்டு ,
தவறான முடிவை மனதில் இருத்திக் கொண்டு ஜெபம் செய்கிறார்கள் என்கிறார்  இயேசு .



ஜெபம் பண்ணும் பொழுது , தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி , ஜெபம் பண்ணாமல் எந்த வார்த்தைகளைப் பயன் படுத்தி , ஜெபம் செய்ய வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தில் இயேசு கூறுகிறார்:

அவர்களைப் போல் நீங்கள் செய்யாதிருங்கள் ; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர்  அறிந்திருக்கிறார்.”
                                                                                           மத்தேயு - 6 : 8

தங்கள் தேவையை நிறைவேற்றச் சொல்லி தேவையற்ற வார்த்தைகளைப் பயன் படுத்தி , முறையற்ற விதத்தில் ஜெபம் பண்ணுகிறவர்களைப் போல, நீங்கள் தவறான முறையில் ஜெபங்களைப் பண்ணாதீர்கள் .

நீங்கள் ஜெபம் பண்ணி , உங்களுடைய தேவையை நிறைவேற்றச் சொல்லி, இறைவனிடம் கேட்க வேண்டிய அவசியம் என்பது இல்லை .
ஏனென்றால் நீங்கள் ஜெபம் பண்ணுவதற்கு முன்பாகவே உங்களுடைய தேவைகள் என்ன தேவை என்பதை இறைவன் அறிந்து இருக்கிறார்.
உங்களுக்கு தேவையானது என்ன என்றும் ,அவைகள் உங்களுக்கு அத்தியாவசியமான தேவை தானா என்றும் ,அவைகள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கக் கூடியவைகள் தானா என்றும் ,அவைகளை எந்த காலத்தில் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் ,
போன்ற அனைத்து காரணங்களையும் ,இறைவன் அறிந்திருக்கிறார். அவற்றை தக்க காலத்தில் உங்களுக்கு அவைகளை அளிப்பார்  என்கிறார்  இயேசு .



பட்டினத்தார் :
               “காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கந்தை சுற்றி
                ஓடே எடுத்தென்ன உள்ளன்பிலாதவர் ஓங்கு விண்ணோர்
                நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
                வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
                                                                            --------------பட்டினத்தார்-------------

                  “””””காடே திரிந்தென்ன”””””     
துன்பம் நீக்கி இன்பம் பெற வேண்டும் .
கவலை நீக்கி மனது அமைதி நிலையை அடைய வேண்டும் .
வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் .
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற வேண்டும் .
பிறப்பு , இறப்பற்ற நிலையை அடைய வேண்டும் .
என்பதை மனதில் நிறுத்தி ,

வீட்டைத் துறந்து,
குடும்பத்தைத் துறந்து ,
சுற்றத்தைத் துறந்து ,
வாழ்க்கையைத் துறந்து ,
ஊர்  ஊராகச் சுற்றுவது ,
காடுகள் பலவற்றை தேடி அலைந்து ,
காட்டில் அமர்ந்து தவம் இயற்றினால் , சக்திகள் பலவற்றைப் பெறலாம் என்பதை மனதில்  நினைத்துக் கொண்டு ,
காட்டில் உள்ள குகைகளில் அமர்ந்து தவம் இயற்றுகிறார்கள் .


                       “””””காற்றே புசித்தென்ன”””””
அன்னத்தை மறந்து,
விரதம் இருந்து உடலை வருத்திக் கொண்டு ,
காற்றையே உணவாக உட்கொண்டு தவம் இயற்றி சக்திகளைப் பெறலாம் என்ற கருத்தை மனதில் இருத்திக் கொண்டு தவம் இயற்றுகின்றனர் .


                     “”””கந்தை சுற்றி””””””
உடலில் ஆடைகள் ஏதும் அணியாமல் ,
மானத்தை மறைப்பதற்கு மட்டும் கந்தை ஆடை அணிந்து எளிமையாக இருக்கிறேன் , எல்லாவற்றையும் துறந்த நிலையில் இருக்கிறேன் என்ற கருத்துக்களை மனதில் இருத்தி தவம் இயற்றுகின்றனர் .


              “”””””ஓடே எடுத்தென்ன”””””””
தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்காக , தன்னுடைய பசியை தீர்த்துக் கொள்வதற்காக , கைகளில் ஓடுகளை ஏந்திக் கொண்டு வாழ்க்கையை நடத்தி தவம் இயற்றுகின்றனர் .

அதாவது காட்டில் இருந்து கொண்டு உணவை உண்ணாமல் காற்றையே உணவாகக் கொண்டு , கந்தை ஆடைச் சுற்றிக் கொண்டு கைகளில் ஓட்டை எடுத்துக் கொண்டு , இந்த உலகத்தில் அலைந்து திரிந்து கொண்டு , தவம் இயற்றி வாழ்க்கை நடத்துக்கின்றனர் .  


            “”””உள்ளன்பிலாதவர்  ஓங்கு விண்ணோர்””””
உள்ளத்திலே அன்பு இல்லாமல்,
கருணை இல்லாமல்,
பிறர்  துன்பம் கண்டு வருந்தும் மனது இல்லாமல் ,
பிறரை வருத்தப்பட வைக்கும் செயல் இல்லாமல் ,
தவம் செய்தால் மட்டும் தான் தவம் செய்தலின் உண்மை பலன் கிடைக்கும் .
தன் தேவையை வலியுறுத்தி செய்யப்பட்ட செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும் .
இத்தகைய பண்புகள் இல்லாதவர்களுக்கு தவத்தின் பலன் கிடைக்காது. 


      “”நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர்  நாரியர்பால்
         வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே”””””
நாட்டிலே இருந்து மனைவியுடனும் , குழந்தைகளுடனும் இருந்து கொண்டு, குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டு, தவத்தை செய்வதால் தவத்தின் பலன் கிடைக்காது என்று நினைத்துக் கொண்டு, அனைத்தையும் துறந்து விட்டு காட்டிற்குள் அமர்ந்து தவம் செய்கின்றனர்.

வீட்டிற்குள் இருந்த படியே குடும்பம் , மனைவி , மக்கள், நட்பு , சுற்றம் என்ற நிலையில் இருந்து கொண்டு தவங்கள் செய்வதில்லை.
இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது என்னவெனில்,
தவங்கள் செய்து அதன் சக்திகளை , பலன்களைப் பெற வேண்டுமானால் முக்கியமாக பெண்கள் தங்கள் வாழ்க்கையில் இடம் பெறக் கூடாது என்று நினைக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற் போல் ஆதி காலம் முதல் பெண்ணின் பால் மனதை செலுத்தினால் தவத்தின் பலன் பெற முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது.
தன் மனைவியிடம் மட்டும் தான் தன் உயிர் , உடல் இரண்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டதே ஒழியே ,
பிற பெண்களை நினைவால் கூட தொடக் கூடாது என்று வலியுறுத்தப் பட்டதே ஒழிய ,
பெண்களையே நினைக்கக் கூடாது , தொடக் கூடாது என்று கூறவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .

நாரியர் பால் என்றால் தவறான பெண்களிடம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
மனைவியைத் தவிர்த்து பிற பெண்களிடம் உறவு கொள்ளக் கூடாது என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.


வீட்டினுள் இருந்து கொண்டே,
இல்லற சுகங்களை அனுபவித்துக் கொண்டே,
இல்லறத்தில் வாழ்ந்து கொண்டே ,
தவங்கள் இயற்றி மெய்ஞ்ஞான நிலையை ,
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது,
ஏன் வீட்டைத் துறந்து வெளியில் சென்று அலைந்து திரிந்து ,
குகைகளில் வாழ்ந்து கொண்டு,
பிச்சை எடுத்து வாழ்க்கை ஓட்ட வேண்டும்.
வீட்டில் இருந்த படியே , ஞானத்தை அடையும் வழிமுறைகளை முறையாக அறிந்து கொண்டு , வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி அதன் பலன்களைப் பெற வேண்டும்  என்கிறார் பட்டினத்தார்.



இயேசு கிறிஸ்து - பட்டினத்தார் :
இயேசு கிறிஸ்து எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகளை வீட்டில் இருந்த படியே ஜெபம் செய்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்கிறாரோ,

அவ்வாறே,
பட்டினத்தாரும் வீட்டில் இருந்த படியே தவங்கள் இயற்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்   .
   
இயேசு கிறிஸ்துவின் கருத்தாழம் மிக்க வசனங்களில் நமக்கு தேவைப்படும் வாழ்க்கைக்கு உபயோகப்படும் ஒரு வசனத்தை அடுத்து பார்ப்போம்.


                           “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”