December 24, 2019

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்-25-12-2019


    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்-25-12-2019

அன்பிற்கினியவர்களே !

“நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் இருக்கிறேன் “

------யோவான் - 14 : 6

வழியும் :

“வழி என்றால் ஒரு
இடத்திற்கு எப்படி
செல்வது என்பதை
சுட்டிக் காட்டி
விளக்குவது
என்று பொருள் “

“ஒரு இடத்திற்கு
செல்வதற்குரிய வழி
யாருக்கு
தெரிந்திருக்கிறதோ
அவரால் மட்டுமே வழி
தெரியாதவருக்கு வழி
காட்ட முடியும் “

“ஒரு இடத்திற்கு
செல்வதற்குரிய வழி
எது என்று தெரியாமல்
இருப்பவர்கள்
வழி தெரியாதவர்களுக்கு
வழி காட்ட முடியாது “

“நான் வழியாய்
இருக்கிறேன் என்றால்
நான் வழியைக் காட்டக்
கூடியவனாய் இருக்கிறேன்
என்று பொருள் “

சத்தியமும் :
“சத்தியம் என்றால்
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
பொருள் “

“இந்த உலகத்தில்
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
அழைக்கப்படுவது
ஒன்றே ஒன்று தான்
அது ஆண்டவர் மட்டுமே
அதனால் தான் ஆண்டவரை
சத்தியம் என்கிறோம் “

“நான் வழியும்
சத்தியமுமாய்
இருக்கிறேன் என்றால்
நான் சத்தியமாய்
இருக்கக்கூடிய
ஆண்டவரை
காட்டக்கூடிய
வழியாய் இருக்கிறேன்
என்று பொருள் “

ஜீவனுமாய் :
“ஜீவனுமாயிருக்கிறேன்
என்றால் உயிரோடு
பிறந்து வந்திருக்கிறேன்
என்று பொருள் “

“இந்த செயலைச்
செய்வதற்காகத் தான்
தாங்கள் பிறந்து
வந்திருக்கிறோம் என்பதைத்
தெரிந்து கொண்டவர்கள்
அவர்கள் எதற்காக
பிறந்து வந்தார்களோ
அதற்குரிய செயலைச்
செய்கிறார்கள் “

“இந்தச் செயலைச்
செய்வதற்காகத் தான்
தாங்கள் பிறந்து
வந்திருக்கிறோம்
என்பதைத் தெரிந்து
கொள்ளாதவர்கள்
அவர்கள் எதற்காக
பிறந்து வந்தார்களோ
அதற்குரிய செயலைச்
செய்யாமல் தேவையற்ற
செயலைச் செய்து
கொண்டிருக்கிறார்கள் “

“இயேசு கிறிஸ்து தான்
இதற்காகத் தான் பிறந்து
வந்திருக்கிறேன் என்பதை
இந்த சமுதாயத்திற்கு
உணர்த்தினார்”

“நானே 
வழியும்
சத்தியமும்
ஜீவனுமாய்
இருக்கிறேன் என்றால்
நான் சத்தியமாய்
இருக்கக்கூடிய ஆண்டவரை
அடையக்கூடிய வழியை
காட்டுவதற்காக பிறந்து
வந்திருக்கிறேன்
என்று பொருள் “

“அதாவது

நான் எதற்கு
வழியாய்
இருக்கிறேன் என்றால்

பாவம் செய்து
பாவத்தில் வாழ்க்கையை
ஓட்டிக் கொண்டிருக்கும்
மக்களை பாவத்திலிருந்து
விடுவித்து
உண்மையானது என்றும்
அழிவில்லாதது என்றும்
என்றும் இருந்து
கொண்டிருப்பது என்றும்
அழைக்கப்படும்
சத்தியமுமாய்
இருக்கக் கூடிய
ஆண்டவரை
அடையக்கூடிய
வழியாய் இருக்கிறேன்

அதற்காகத் தான்
நான் ஜீவனுமாய்
பிறப்பெடுத்து
வந்திருக்கிறேன் என்கிறார்
இயேசு கிறிஸ்து “

“இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரையும்
பாவத்திலிருந்து
விடுவித்து ஆண்டவருடன்
இணைப்பதற்கு
பிறப்பெடுத்து வந்து
தன் இரத்தத்தால்
அன்பு விதையை
விதைத்து விட்டு சென்ற
இயேசு கிறிஸ்துவை
அவருடைய
பிறந்த நாளான
25-12-2019  - அன்று
வணங்குவோம்”

“கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்”

--------என்றும் அன்புடன்

--------K.பாலகங்காதரன்
--------25-12-2019

//////////////////////////////////////////

December 23, 2019

பரம்பொருள்-பதிவு-104


          பரம்பொருள்-பதிவு-104

(தனி அறைக்குள்
துரியோதனனும்
சகாதேவனும்
இருக்கிறார்கள்.

துரியோதனன்
பேசத் தொடங்கினான்)

துரியோதனன் :
"சகாதேவா நீ
பல சாஸ்திரங்களையும்
கற்றுத் தேர்ந்தவன் ;
உனக்கு தெரியாதது
சாஸ்திரங்களில்
எதுவும் இல்லை ;
என் மனதில்
எழுந்துள்ள சில
கேள்விகளுக்கு
சோதிட
சாஸ்திரத்தின்படி
பதில்
பெறுவதற்காக
இங்கு வந்திருக்கிறேன்
தம்பி ! "

"என்னுடைய மனம்
திருப்தி அடையும்
வகையில்
என்னுடைய
கேள்விகளுக்கு பதில்
சொல்வாயா ? "

சகாதேவன் :
"சோதிட சாஸ்திரம்
என்ன சொல்கிறதோ
அதை அப்படியே
சொல்கிறேன் ;
தெரிந்ததை
மறைக்காமல்
சொல்கிறேன்
அண்ணா ;"

துரியோதனன் :
"நடக்கவிருக்கும்
போரில் நான்
வெற்றி பெற
வேண்டும்
என்பதற்காக
களப்பலி கொடுக்க
தீர்மானம்
செய்திருக்கிறேன் ;
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
எந்த நாள்
என்று எனக்கு
சொல்ல வேண்டும் ;"

சகாதேவன் :
(சோதிட
நூல்களை
ஆராய்ந்து
பார்க்கிறான்
சகாதேவன்

பிறகு பேச
ஆரம்பிக்கிறான்)

"வருகின்ற
அமாவாசை
தினமே
களப்பலி
கொடுப்பதற்கு
உகந்த நாள்
அண்ணா ! "

துரியோதனன் :
"அன்றைய தினத்தில்
களப்பலி கொடுத்தால்
வெற்றி நிச்சயம்
தானே தம்பி ! "

சகாதேவன் :
"வருகின்ற
அமாவாசை
தினத்தன்று
களப்பலி
கொடுப்பவர்
தான் வெற்றி
பெறுவார் அண்ணா !"

"அன்றைய
தினத்தில் களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும்
வெற்றி கொள்ள
முடியாது அண்ணா ! "

"களப்பலி
கொடுத்தவர்களை
எதிர்த்து நின்று
யார் போரிட்டாலும்
அவர்கள்
தோல்வியைத் தான்
தழுவுவார்கள்
என்பது உறுதி
அண்ணா !"

துரியோதனன் :
"மிக்க மகிழ்ச்சி
தம்பி !
களப்பலியாகக்
கூடியவர் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டிருக்க
வேண்டும்
என்பதையும் ;

"களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தகுதி உடையவர்கள்
இந்த உலகத்தில்
எத்தனை பேர்
இருக்கிறார்கள்
என்பதையும்  :

"அவர்களுடைய
பெயர்கள் என்ன
என்பதையும்
எனக்கு சொல்ல
வேண்டும் தம்பி !"

சகாதேவன் :
"ஒருவரை களப்பலி
கொடுக்க வேண்டும்
என்றால்
களப்பலியாகக்
கூடியவர்  
32 லட்சணங்கள்
உள்ளவராக
இருக்க வேண்டும் ;
எதிர்ரோமம்
படைத்தவராக
இருக்க வேண்டும். ;"

"இத்தகைய
இரண்டு  
தன்மைகளையும்
கொண்டவர் யார்
இருக்கிறாரோ
அவரைத் தான்
காளி தேவிக்கு
முன்பு களப்பலி
கொடுக்க வேண்டும் "

"களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதி
வாய்ந்தவர்கள்
மொத்தமே மூன்று
பேர்கள் தான்
ஈரேழுலோகத்திலும்
உள்ளனர் அண்ணா !"

துரியோதனன் :
" ஈரேழுலோகத்திலும்
மொத்தமே
மூன்று பேர்கள்
மட்டும் தான்
உள்ளனரா ?"

சகாதேவன் :
"ஆமாம் அண்ணா ! "

துரியோதனன் :
"யார் அவர்கள்
அவர்களுடைய
பெயர்கள்
என்ன தம்பி ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------  23-12-2019
//////////////////////////////////////////

December 22, 2019

பரம்பொருள்-பதிவு-103


           பரம்பொருள்-பதிவு-103

(பாண்டவர்களின்
மாளிகைக்குள்
நுழைகிறான்
துரியோதனன் ;

மாளிகைக்குள்
பஞ்ச பாண்டவர்கள்
மற்றும்
கிருஷ்ணன்
இருந்தனர் ;

கிருஷ்ணன்
துரியோதனனை
தடுத்தி
நிறுத்தி பேசத்
தொடங்கினான் ; )

கிருஷ்ணன்  :
“வழி தவறி வந்து
விட்டாயா
துரியோதனா ? “

துரியோதனன் :
“கிருஷ்ணா நீ !
இங்கு தான்
இருக்கிறாயா ?”

கிருஷ்ணன் :
“நான் எல்லா
இடத்திலும் இருந்து
கொண்டு தான்
இருக்கிறேன்
துரியோதனா ?
நீ தான் என்னை
கவனிப்பதே
இல்லை ;”

துரியோதனன் :
“தேவையில்லாத
விஷயங்களில்
எல்லாம்
நான் கவனம்
செலுத்துவதில்லை
கிருஷ்ணா “

கிருஷ்ணா :
“எது தேவையுள்ள
விஷயம்   ;
எது
தேவையில்லாத
விஷயம் ; என்பது
உனக்கு
தெரியாத
காரணத்தினால் தான்
தேவையில்லாத
விஷயங்களைச்
செய்து
தேவையற்ற
பிரச்சினைகளில்
மாட்டிக்
கொள்கிறாய்
துரியோதனா “

துரியோதனன் :
“கிருஷ்ணா உன்
அறிவுரைகளை
கேட்பதற்காக
நான் இங்கு
வரவில்லை ;
எனக்கு நிறைய
வேலை இருக்கிறது ;
யாரேனும்
வேலையில்லாமல்
இருந்தால்
அவர்களிடம்
சென்று உன்
அறிவுரைகளை
வழங்கு “

கிருஷ்ணன் :
“நீ பாண்டவர்களைத்
தானே பார்க்க
வந்திருக்கிறாய்
துரியோதனா ?”

துரியோதனன் :
“ஆமாம்”

கிருஷ்ணன் :
“நானும் அவர்களில்
ஒருவன் தான்”

துரியோதனன் :
“பாண்டவர்கள்
ஐவர் தானே”

கிருஷ்ணன் :
“யார் என்னை
கள்ளம் கபடம்
இல்லாமல்
மனதார
நேசிக்கிறார்களோ ?
அவர்களில்
நானும் ஒருவன்  ;
அதனால் தான்
பாண்டவர்களில்
நானும் ஒருவன்
என்று சொன்னேன் ;”

துரியோதனன் :
(துரியோதனனுக்கு
கோபம் வந்தது
கோபத்தை
அடக்கிக் கொண்டு
சாகாதேவனை
நோக்கி பேசத்
தொடங்கினான்)

“சகாதேவா
நான் உன்னிடம்
கொஞ்சம்
தனிமையில் பேச
வேண்டும்
வருகிறாயா?”

சகாதேவன் :
“வாருங்கள்
அண்ணா”

(என்று சொல்லிக்
கொண்டே
துரியோதனனை
தனி அறைக்குள்
அழைத்துக்
கொண்டு
சென்றான்
சகாதேவன்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 22-12-2019
//////////////////////////////////////////

December 20, 2019

பரம்பொருள்-பதிவு-102

                  பரம்பொருள்-பதிவு-102

சகுனி :
"சகாதேவன் "

துரியோதனன் :
"பாண்டவர்களில்
ஒருவனா? "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"நம்முடைய எதிரிகளில்
ஒருவனான சகாதேவனா "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"பாவம்
அமைதியானவன்  ;
ஒன்றும் அறியாதவன் ;
பரிதாபத்திற்குரியவன் ; "

சகுனி :
"எதிரியின் திறமையை
குறைவாக மதிப்பீடு செய்யக்
கூடாது மருமகனே ! "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு
செய்யத் தெரியாதவன்
எதிரியிடம் தோற்கத்
தான் வேண்டும் "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரிந்தவனால் மட்டுமே
எதிரியை வெல்ல முடியும்
என்பதை நினைவில்
வைத்துக் கொள் மருமகனே ! "

"சகாதேவன்
சாதாரணமான
ஆள் இல்லை  ;
சோதிட சாஸ்திரத்தில்
ஆதி முதல் அந்தம் வரை
அறிந்து வைத்திருப்பவன் ;
சோதிட சாஸ்திரத்தின்
அனைத்து சூட்சும
விஷயங்களையும்
ஐயமின்றி கற்றுத்
தேர்ந்தவன் ;
திரிகால ஞானத்தை
முறைப்படி பயன்படுத்தும்
முறை அறிந்தவன் ;

"உலகிலுள்ள அனைத்து
உயிர்களுக்கும்
இறந்த காலம் எதிர்காலம்
ஆகியவற்றை சோதிடத்தின்
மூலம் துல்லியமாகக்
கணித்து சொல்லக் கூடிய
திறமை இந்த உலகத்தில்
சகாதேவனைத் தவிர
வேறு யாருக்கும் இல்லை"

"களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாள் எந்த
நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதியான
ஆள் யார் என்றும் ;
சகாதேவன் குறித்து
கொடுத்து அதை நாம்
செயல்படுத்தி விட்டோம்
என்றால் மூவுலகமும்
சேர்ந்து வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
மூம்மூர்த்திகளே
ஒன்றாக வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
நம்மை யாராலும்
தோற்கடிக்க முடியாது
மருமகனே !"

"வெற்றி நமக்குத் தான் !"

துரியோதனன் :
"ஆனால் சகாதேவன்
எதிரியாயிற்றே  !"

"அவன் எப்படி நாம்
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
குறித்துக் கொடுப்பான் "

"அப்படியே குறித்து
கொடுத்தாலும்
உண்மையைத் தான்
சொல்வான் என்பதை
நாம் எப்படி நம்புவது : "

சகுனி :
"சோதிட சாஸ்திரத்தில்
முக்கியமான இரண்டு
விதிகள் இருக்கிறது
மருமகனே ! "

" சோதிடம் பார்க்க
வருபவர் எதிரியாக
இருந்தாலும் அவர்
கேட்கும் கேள்விகளுக்கு
உண்மையை மறைக்காமல்
சொல்ல வேண்டும்
என்பது முதல்விதி "

"அதைப்போல சோதிடம்
பார்ப்பவர் சோதிடத்தை
யாருக்கு பார்க்கிறாரோ
அவரைப் பற்றிய
தகவல்களை யார்
கேட்டாலும் சொல்லக்
கூடாது என்பது
இரண்டாவது விதி "

"இந்த இரண்டு
விதிகளையும் உண்மையாக
யார் பின்பற்றுகிறாரோ
அவர் தான் சோதிட
சாஸ்திரம் அறிந்த
உண்மையான சோதிடர்  "

"இந்த இரண்டு
விதிகளையும் உயிரென
கடைபிடிப்பவன் சகாதேவன் "

"சகாதேவன்
எதிரியாயிற்றே என்று
நினைக்காமல் சகாதேவனை
நேரில் போய் சந்தித்து
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
கேட்டு அறிந்து கொண்டு
வா மருமகனே ! "

துரியோதனன் :
"அப்படியே ஆகட்டும்
மாமா "

(துரியோதனன்
சகாதேவனை
சந்திப்பதற்காக
செல்கிறான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 20-12-2019
//////////////////////////////////////////