March 16, 2020

பரம்பொருள்-பதிவு-156


                ஜபம்-பதிவு-404
               (பரம்பொருள்-156)

உலூபி :
“என்ன வார்த்தை
சொல்லி விட்டாய்
என் மகனே ! “

“இந்த வார்த்தையை
உன்னால் எப்படி
சொல்ல முடிந்தது ? “

“என்னைப் பற்றித்
தெரிந்திருந்தும்
எப்படி இப்படி ஒரு
வார்தையை சொன்னாய் ? “

“நீ !  சொன்ன
வார்த்தைகளைக்
கேட்டு விட்டு - என்
இதயம் இன்னும்
வெடிக்காமல் இருக்கிறதே ? “

“நான் இன்னும்
இறக்காமல் 
இருக்கிறேனே ! “

“ஐயோ! நான்
என்ன செய்வேன் ?”

“என்னைச் சுற்றி
உள்ளவர்கள் அனைவரும்
என்ன வார்த்தைகளை
பேசக்கூடாதோ ? - அந்த  
வார்த்தைகளை எல்லாம்
பேசியதைக் கேட்டும்
என்னுடைய மனம்
கலக்கமடையவில்லை “

“ஆனால் நீ சொன்ன
இந்த ஒரு வார்த்தை
என்னுடைய மனதை
கலக்கமடையச்
செய்து விட்டது “

“உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்
உலகத்தில் உள்ள
எந்தத் தாயாவது
தன்னுடைய மகனின்
வாழ்க்கையை
முடித்து வைப்பாளா ? “

“மகனின் உயிருக்கு
ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனுடைய வாழ்க்கையை
காப்பாற்றத் தானே எந்தத்
தாயும் முயற்சி செய்வாள்  

“இந்த உலகத்தில் உள்ள
எந்த ஒரு தாயையும்
எடுத்து கொண்டால்
தன்னுடைய மகனுடைய
உயிருக்கு ஆபத்து என்றால்
தன்னுடைய உயிரைக்
கொடுத்தாவது தன்னுடைய
மகனின் உயிரை காப்பாற்றத்
தானே முயற்சி செய்வாள்
அதையே தானே
நானும் செய்தேன் “

“அப்படி இருக்கும் போது
எப்படி தாயான என்னை
உன்னுடைய வாழ்க்கையை  
முடித்து வைக்கச் சொல்கிறாய் “

“பத்து மாதம் உன்னை
கஷ்டப்பட்டு பெற்றெடுத்து
மார்பிலும் தோளிலும்
போட்டு வளர்த்தது
எதற்காக ?
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலிக்கு அனுப்பி
வைப்பதற்காகவா ? “

“நீ பேசிய பேச்சிலும்  ;
சிந்திய சிரிப்பிலும் ;
செய்த சேட்டையிலும் ;
என்னுடைய கணவர்
என்னுடன் இல்லாததை
மறந்து இருந்தேனடா
எதற்காக ?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகத்தில்
எனக்கு ஆதரவாக
யாருமே இல்லாத
போதும் நீ ஒருவன்
எனக்காக இருக்கிறாய்
என்று கவலையை
மறந்து உனக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்கு காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“இந்த உலகமே நீ
தான் என்று - நீ
விடும் சுவாசக்
காற்றில் வாழ்ந்து
கொண்டிருக்கிறேனே
எதற்காக?
இதற்குக் காரணமான
உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைத்து உன்னை
களப்பலியாக அனுப்பி
வைப்பதற்காகவா ?”

“உன்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு - இந்த
உலகத்தில் உள்ளவர்கள்
பல்வேறு நியாயங்களைக்
கற்பிக்கிறார்கள் ;
நீதி என்கிறார்கள் ;
நியாயம் என்கிறார்கள் ;
தர்மம் என்கிறார்கள் ;
ஆனால் யாரும் என்னுடைய
மனதை புரிந்து கொள்ளாமல்
என்னுடைய மனதை
புண்படுத்தும்படித் தான்
பேசிக் கொண்டிருக்கிறார்கள் “

“அவர்களைப் போலவே
நீயும் என்னைப் புரிந்து
கொள்ளாமல் உன்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்கச் சொல்கிறாய்  ;
களப்பலிக்கு ஆசிர்வாதம்
கேட்கிறாய் ; “

“நீ பேசும் பேச்சு
ஒரு தாயினுடைய மனதை
எந்த அளவிற்கு
பாதிப்பை ஏற்படுத்தும்
என்பது உனக்குத்
தெரியாதா மகனே ! “

“தெரிந்திருந்தால் நீ
இப்படி பேசி
இருக்க மாட்டாய் ? “

“இந்தத் தாயைப்
புரிந்து கொள் மகனே ! “

“இந்தத் தாயின் மனதைப்
புரிந்து கொள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 14-03-2020
//////////////////////////////////////////

March 13, 2020

பரம்பொருள்-பதிவு-155


              ஜபம்-பதிவு-403
            (பரம்பொருள்-155)

உலூபி  :
“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களிடம் என்னுடைய
அம்மா சம்மதித்தால்
மட்டுமே - நான்
களப்பலியாவேன்
என்று நீ சொல்லி
இருக்க வேண்டும் “

“அவ்வாறு சொல்லி
விட்டு என்னுடைய
கருத்தைக் கேட்டிருந்தால்
அரவானைக்
களப்பலியாகக் கொடுப்பதற்கு
எனக்கு சம்மதமில்லை
என்று அன்றே
என்னுடைய கருத்தைச்
சொல்லி இருப்பேன் “

“உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்களால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட களப்பலியை
முளையிலேயே கிள்ளி
எறிந்து இருப்பேன் “

“களப்பலியாக உன்னை
கொடுப்பதிலிருந்து
தடுத்திருப்பேன் “

“களப்பலியையே
தடுத்திருப்பேன்”

அரவான்  :
“நான் களப்பலியாவதை
யாராலும் தடுக்க
முடியாது அம்மா ? “

“இந்த உலகத்தில்
மனிதர்கள் அனைவரும்
பிறக்கிறார்கள் ;
வாழ்கிறார்கள் ;
இறக்கிறார்கள் ;
மனிதனாக பிறந்த
ஒவ்வொருவரும் தாங்கள்
இந்த உலகத்தில்
ஏன் பிறந்தோம்  ?
எதற்காக வாழ்கிறோம் ?
என்ன காரணத்திற்காக
இந்த உலகத்திற்கு
வந்தோம்? - என்று
தெரியாமல் தன்னுடைய
பிறவியின் நோக்கத்தை
அறிய முடியாமல்
இறந்து விடுகின்றனர் “

“தாங்கள் எதற்காக
இந்த உலகத்தில்
பிறந்து வந்தோம்
என்பதற்கான காரணத்தை
அறிந்து கொள்ளாமல்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம் “

“ஆனால் நான் பிறந்ததே
களப்பலியாகத் தான்
என்பதை நான்
அறிந்து வைத்திருக்கிறேன் “

“என்னுடைய பிறவியின்
நோக்கமே களப்பலியாவது
தான் என்பதை நான்
உணர்ந்து வைத்திருக்கிறேன் ‘

“களப்பலியாவதற்குத்
தான் நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
என்பதையும்
களப்பலியாகத் தான்
போகிறேன் என்பதையும்
நான் தெரிந்து
வைத்திருக்கிறேன் “

“நான் எதற்காக பிறந்தேன்
என்னுடைய பிறவியின்
நோக்கம் என்ன
என்பதைத் தெரிந்து கொண்ட
காரணத்தினால் தான்
பரந்தாமன் கிருஷ்ணன்
தர்மம் இந்த உலகத்தில்
நிலைபெற்று இருக்க
வேண்டும் என்பதற்காக
பாண்டவர்கள் சார்பாக
என்னை களப்பலியாகக்
கொடுப்பதற்கு என்னிடம்
ஒப்புதல் பெற்று
நாளைய தினத்தை
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளாக
தேர்ந்தெடுத்து
வைத்திருக்கிறார் ‘

“பாண்டவர்கள் சார்பாக
நாளைய தினத்தில் நான்
களப்பலியாவதால்
களப்பலியாவதற்கு முன்
தங்களிடம் ஆசிகள்
பெற்று விட்டு செல்லலாம்
என்று வந்தேன் அம்மா ‘

உலூபி  :
“நான் எப்படியடா
உன்னை
ஆசிர்வதிக்க முடியும் ?”

அரவான்  :
“நீங்கள் தான் அம்மா
என்னை ஆசிர்வதிக்க
வேண்டும் “

“என்னை ஆசிர்வதிக்கும்
முழு உரிமையும்
உங்களுக்கு மட்டும்
தான் இருக்கிறது ;”

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“நான் இந்த
உலகத்தை பார்ப்பதற்கு
காரணமாக இருந்தவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய வாழ்க்கைக்கு
ஆதாரமாக இருந்து
கொண்டிருப்பவர்
நீங்கள் தான் ! “

“என்னுடைய ஆரம்பத்திற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
முடிவுக்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னுடைய பிறப்பிற்கு
காரணமாக இருந்த
நீங்கள் தான் என்னுடைய
இறப்பிற்கும் காரணமாக
இருக்க வேண்டும் “

“என்னை பிறக்க வைத்து
என்னுடைய வாழ்க்கையை
ஆரம்பித்து வைத்த
நீங்கள் தான் களப்பலியாகப்
போகும் என்னை
ஆசிர்வதித்து வழியனுப்பி
வைத்து என்னுடைய
வாழ்க்கையை முடித்து
வைக்க வேண்டும் “

“என்னை ஆசிர்வதித்து
என்னை களப்பலிக்கு
என்னை அனுப்பி
வையுங்கள் அம்மா “

“ஆமாம், என்னுடைய
வாழ்க்கையை ஆரம்பித்து
வைத்த நீங்களே
என்னுடைய வாழ்க்கையை
முடித்து வையுங்கள் அம்மா!“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 13-03-2020
//////////////////////////////////////////

March 12, 2020

பரம்பொருள்-பதிவு-154


               ஜபம்-பதிவு-402
             (பரம்பொருள்-154)

(தன்னுடைய தாயான
உலூபியின் அறைக்குள்
நுழைகிறான் அரவான் ;
அரவானைக் கண்டதும்
உலூபி பேசத்
தொடங்குகிறாள் ; )

உலூபி  :
“ஏன் வந்தாய் ? - நான்
உயிரோடு இருக்கிறேனா
என்பதை பார்த்து விட்டு
போகலாம் என்று வந்தாயா ? “

அரவான்  :
“ஐயோ! அம்மா ஏன்
இவ்வாறு பேசுகிறீர்கள் ? “

உலூபி  :
“வேறு எவ்வாறு பேச
வேண்டும் என்கிறாய் ? “

“என் மேல் உனக்கு
உண்மையான
அன்பு இல்லை  

“என் மேல்
உண்மையான அன்பை
நீ வைத்திருந்தால்
உன்னுடைய பெரிய
தந்தை துரியோதனன்
அவர்கள் உன்னை நேரில்
சந்தித்து அவருக்காக - நீ
களப்பலியாக வேண்டும்
என்று உன்னை வந்து
கேட்ட போது நீ
என்ன சொல்லி
இருக்க வேண்டும்
என்னுடைய அம்மாவிடம்
கலந்து ஆலோசித்து
பிறகு முடிவு
சொல்கிறேன் என்று
அல்லவா நீ சொல்லி
இருக்க வேண்டும் “

“அவ்வாறு நீ சொல்லி
இருந்தால் என் மேல்
நீ உண்மையான அன்பு
வைத்திருக்கிறாய் என்று
எடுத்துக் கொள்ளலாம்”

“ஆனால் நீ அவ்வாறு
சொல்லவில்லை”

“நீ அவ்வாறு
சொல்லாமல் வருகின்ற
அமாவாசை தினத்தன்று
உன்னுடைய பெரிய தந்தை
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் “

“இதை எப்படி நீ
என் மேல் அன்பு
வைத்திருக்கிறாய் என்று
எடுத்துக் கொள்ள முடியும்”

“நீ செய்த செயல் - நீ
என் மேல் வைத்த
அன்பையா
காட்டுகிறது இல்லையே “

அரவான்  :
“ஆமாம் அம்மா
ஆமாம் “

“நான் செய்த செயல்
நான் உங்கள் மேல்
வைத்த அன்பைத்
தான் காட்டுகிறது “

“பணக்காரராக இருந்தாலும்
ஏழையாக இருந்தாலும்
யாராக இருந்தாலும்
கையேந்தி யாசகம்
என்று கேட்டு விட்டால்
யாருடைய சம்மதமும்
பெற வேண்டிய
அவசியம் இல்லை ;
நம்மிடம் என்ன
இருக்கிறதோ அதை
யாசகமாக கேட்பவருக்கு
எந்தவிதமான
யோசனையும்
செய்யாமல் உடனே
கொடுத்து விட வேண்டும்
என்று நீங்கள் தானே
எனக்கு சொல்லிக்
கொடுத்து இருக்கிறீர்கள்”

“அதனால் தான் நாட்டை
ஆளும் மன்னனின்
மகனான பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
என்னை நேரில்
சந்தித்து களப்பலியாக
என்னுடைய உயிரை
யாசகமாக கேட்டபோது
எந்த விதமான மறுப்பும்
சொல்லாமல்
பெரிய தந்தை
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக உடனே
வாக்கு கொடுத்தேன் “

“நான்  உங்கள் மேல்
வைத்த அன்பின்
காரணமாகத் தான்
இந்த செயலைச்
செய்திருக்கிறேன் “

“நீங்கள் எனக்கு என்ன
சொல்லிக் கொடுத்தீர்களோ
அதைத் தானே
செய்திருக்கிறேன் “

“நீங்கள் எனக்கு காட்டிய
தர்மத்தின் பாதையில்
தானே நடந்திருக்கிறேன் “

“இதிலிருந்து
தெரியவில்லையா அம்மா
நான் உங்கள் மேல்
எவ்வளவு அன்பு
வைத்திருக்கிறேன் என்று “

“நான் செய்த செயலை
எதற்காக செய்திருக்கிறேன்
என்று நீங்கள் புரிந்து
கொண்டால் நான் உங்கள்
மேல் வைத்த அன்பின்
மதிப்பு தெரியும் அம்மா “

உலூபி  :
“உ,ன்னுடைய செயலை
நியாயப்படுத்துவதற்கு
நீ எத்தகைய
காரணங்களைச்
சொன்னாலும் அதை என்
மனம் ஏற்றுக் கொள்ளும்
நிலையில் இல்லை ;
உன்னை களப்பலியாகக்
கொடுக்காமல் இருப்பதற்கு
ஒரே ஒரு வழி
தான் இருந்தது அந்த
வழியையும் நீ சரியாகப்
பயன்படுத்தவில்லை ; “

“அந்த வழியை நீ
சரியாகப் பயன்படுத்தி
இருந்தால் இத்தகைய
ஒரு நிலை உனக்கு
ஏற்பட்டிருக்காது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 12-03-2020
//////////////////////////////////////////

March 11, 2020

பரம்பொருள்-பதிவு-153


              ஜபம்-பதிவு-401
            (பரம்பொருள்-153)

கிருஷ்ணன் :
"தாங்கள் வாழ வேண்டும்
என்பதற்காக என்னிடம்
வரங்களைப் பெற்று ;
வாழும் காலத்தில்
வாழ்க்கையை
வாழாமல்
வாழ்க்கையைத்
தொலைத்து விட்டு ;
புகழை இழந்து விட்டு ;
மக்கள் மனதில்
இடம் பெறாமல்
காலத்தால் காணாமல்
போனவர்கள் தான் ;
இந்த உலகத்தில் அதிக
எண்ணிக்கையில் உண்டு"

"ஆனால் நீ கேட்ட
வரங்களை - நான் உனக்கு
அளிப்பதன் மூலம்
உன்னுடைய வாழ்க்கை
முடிந்த பிறகும் - இந்த
உலகம் இருக்கும் வரை
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவருடைய
மனதிலும் இடம் பெற்று
காலத்தால் காணாமல்
போகாமல் இறவாப்
புகழுடன் இருக்கக்கூடிய
பாக்கியம் இந்த உலகத்தில்
உனக்கு மட்டுமே
கிடைக்கப் போகிறது "

"பேரறிவே பரிணமித்து
படைப்புகளாகி
இருக்கும் நிலையில்
அந்த படைப்புகளில்
உள்ள பேரறிவை
சாட்சியாக வைத்து
கிருஷ்ணனாகிய நான்
அரவானாகிய உனக்கு
நீ கேட்ட இரண்டு
வரங்களை அளிக்கிறேன் "

“அரவான் நீ
களப்பலி ஆனாலும்
உன்னுடைய வெட்டுப்பட்ட
தலையில் உள்ள
கண்களின் வழியாக
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்ப்பாய் என்ற
முதல் வரத்தை
உனக்கு அளிக்கிறேன் “

“நீ ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அந்த
பெண்ணுடன் ஒரு
இரவு தாம்பத்ய சுகம்
அனுபவிப்பாய் என்ற
இரண்டாவது வரத்தையும்
அளிக்கிறேன் “

"தான் இறக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக பல்வேறு
வார்த்தைகளைப்
பயன்படுத்தி என்னிடம்
வரங்களைக்
கேட்டுப் பெற்றும்
இறந்தவர்கள் தான்
இந்த உலகத்தில் அதிகம்
பேர் இருக்கிறார்கள் "

"ஆனால் இறக்கப்
போகிறோம் என்று
தெரிந்தும் நீ கேட்ட
வரத்தின் மூலம்
நீ இறந்தாலும்
உன்னுடைய புகழ்
இந்த உலகத்தில்
இறக்காமல் வாழ்ந்து
கொண்டிருக்கத் தான்
போகிறது "

"இந்த உலகத்தில்
வாழ்ந்த யாருக்குமே
கிடைக்காத மிகப்
பெரிய புகழ் - நீ
இறந்த பிறகு உனக்கு
கிடைக்கப் போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னுடைய புகழ்
அழியாமல் நிலைத்து
நிற்கப்போகிறது "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உன்னை கடவுளாக
வணங்கக் கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"இந்த உலகம்
இருக்கும் வரை
உனக்காக கண்ணீர்
சிந்தி கதறி
அழக்கூடியவர்கள்
இருந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் "

"யாருமே செய்ய
முடியாத மிகப்
பெரிய தியாகத்தைச்
செய்யப்போகும் உனக்கு
இந்த உலகமே
நன்றிக்கடன் பட்டிருக்கிறது
அரவான் நன்றிக்கடன்
பட்டிருக்கிறது "

அரவான்  :
“பரந்தாமா ! நீங்கள் எனக்கு
அளித்த வரங்களும் ;
உங்களுடைய
வார்த்தைகளும் ;
என்னுடைய மனதை
மகழ்வித்தது “

கிருஷ்ணன்  :
“உன்னுடைய மனம்
மகிழ்ந்ததற்கான காரணத்தை
உன்னுடைய தாய்
உலூபியை சந்தித்து
சொல்லி விட்டு ,
களப்பலியாவதற்கு
ஆசிகளைப் பெற்று விட்டு ,
இரவில் வந்து - இந்த
மாளிகையில் தங்கி இரு “

“இன்று இரவு அழகிய
பெண் ஒருத்தி
உன்னைத் தேடி - இந்த
மாளிகைக்கு வருவாள்  ;
அந்த பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு தாம்பத்ய
சுகம் அனுபவிப்பாய் ; “

“இன்று இரவு
இந்த மாளிகையில்
தங்கி இருந்து
உன்னைத் தேடி
வரப்போகும்
அந்த பெண்ணுக்காக
காத்துக் கொண்டிரு
அரவான் “

“காத்துக் கொண்டிரு “

(அரவான்
கிருஷ்ணனுடைய
பாதங்களில் விழுந்தபோது
கிருஷ்ணன் அரவான்
தலையில் கை
வைத்து விட்டு
எதுவும் பேசாமல்
சிறிது நேரம்
அமைதியாக இருந்தார் ;
எதுவும் பேசாமல்
அமைதியாக இருந்த
கிருஷ்ணன் அந்த
அறையை விட்டு
வெளியேறினார்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 11-03-2020
//////////////////////////////////////////