June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-25


                 ஜபம்-பதிவு-517
          (அறிய வேண்டியவை-25)

அபிமன்யு :
“துரோணர்
அவர்களே !
கங்கை மைந்தர்
பீஷ்மர்
இருக்கும் போது
உருவாக்கப்பட்ட
விதிகளின் படி
ஒருவருக்கொருவர்
தானே நேருக்கு
நேராக நின்று
எதிர்த்துப் போர்
புரிய வேண்டும் “

“கெளரவர்களுடைய
தலைமைச்
தளபதியாக
இருக்கும்
தங்களுக்கு
இந்த விதி
தெரியாதா
அல்லது
தெரிந்தும்
தெரியாதது போல்
இருக்கிறீர்களா ?”

“இந்த அக்கிரமச்
செயலை
உங்களால் எப்படி
பார்த்துக் கொண்டு
கண்டும்
காணாதது போல்
இருக்க முடிகிறது ;
ஏன் இந்த
அக்கிரமச் செயலுக்கு
துணை போகிறீர்கள் ;
அதர்மத்துக்கு
துணையாக
நிற்கிறீர்கள் “

“தவறு
செய்பவர்களுடைய
தவறை
சுட்டிக் காட்டாமல்
நீங்களும் ஏன்
சேர்ந்தே தவறை
செய்கிறீர்கள் “

(அனைவரையும்
பார்த்து
அபிமன்யு
பேசுகிறான்)

அபிமன்யு :
“என்னுடன்
போர் புரிய
ஆசைப்பட்டால்
தனித்தனியாக
ஒவ்வொருவராக
வாருங்கள் “

“ஒரு வீரனிடமிருந்து
வீரம் எப்படி
வெளிப்படும்
என்பதை
உங்களுக்கு
காட்டுகிறேன் ;
உங்கள்
வாழ்க்கையில்
இது வரை
நீங்கள் காணாத
ஒரு வீரனை
உங்களைக்
காணும்படிச்
செய்கிறேன் ;
மரணபயத்தை
உங்களுக்குள்
எழுப்பிக்
காட்டுகிறேன் ;
அச்சத்தை உங்கள்
இதயத்தில்
உருவாக்கிக்
காட்டுகிறேன் ;
கலக்கத்தை
உங்கள் கண்களில்
தோன்றச் செய்து
காட்டுகிறேன் ;
இவனுடன்
போரிட்டு
மிகப்பெரிய
தவறை செய்து
விட்டோமே என்று
எண்ணத்தை
உங்களுக்குள்
விதைத்துக்
காட்டுகிறேன்;
புறமுதுகு காட்டி
ஓடுவது எப்படி
என்பதை நீங்கள்
அறியாமல் இருந்தால்
நீங்கள் புறமுதுகு
காட்டி ஓடும் போது
அதை தெரிந்து
கொள்ளும்படிச்
செய்கிறேன் ;”

“துணிவிருந்தால்
நெஞ்சில்
தைரியமிருந்தால்
நேர்மை என்பது
உங்களுக்கு
இருந்தால்
தனித்தனியாக
ஒவ்வொருவராக
என்னுடன் போர்
செய்ய வாருங்கள் “

“தைரியம் என்பது
உங்களுக்கு
இல்லாமல்
இருந்தால் ;
துணிவு என்பது
உங்களை விட்டு
விட்டு ஓடி
விட்டிருந்தால் ;
நேர்மையை
சாகடித்து விட்டு
இங்கே
வந்திருந்தால் ;
அனைவரும்
வாருங்கள்
ஒன்றாக வாருங்கள்
இந்த சிறுவனின்
வீரத்திற்கு பதில்
சொல்லுங்கள் “

(அபிமன்யுவின்
வில்லிருந்து
புறப்பட்ட அம்பு
அனைவர்
உடலையும்
துளைத்து
காயப்படுத்துகிறது ;
அனைவருடைய
உடலிலிருந்தும்
கொட்டிய இரத்தம்
அவர்கள் உடலை
நனைத்தது ;
காயம் பட்டால்
எப்படி இருக்கும்
அதனுடைய
வேதனை
எப்படி இருக்கும்
என்பதை
அனைவரும்
உணர்ந்து
கொண்டனர் ;
குருஷேத்திரப்
போர்க்களத்தில்
சக்கர வியூகத்திற்குள்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கும்
அபிமன்யுவின்
வீரம் அவர்கள்
அனைவரையும்
மலைக்க வைத்தது ;
மட்டுமல்லாமல்
அனைவரையும்
அச்சப்படவும்
வைத்தது ;
துரியோதனன்
துரோணர் அருகில்
செல்கிறான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-24


                ஜபம்-பதிவு-516
           (அறிய வேண்டியவை-24)

(அபிமன்யு
சக்கர வியூகத்தை
ஒரு முறை
சுற்றி வந்து
பார்க்கிறான் ;
பின்னர் அபிமன்யு
சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே
செல்கிறான்
அவனைத்
தொடர்ந்து
செல்வதற்காக
தர்மர் பீமன்
நகுலன்
சகாதேவன்
ஆகியோர்
முயற்சி
செய்தனர்

பாண்டுவின்
மகன்
அர்ஜுனனைத்
தவிர்த்து
மற்ற பாண்டவர்கள்
நால்வரையும்
ஒரு நாள் மட்டும்
ஜெயத்ரதனால்
தடுக்க முடியும்
என்ற வரத்தை
சிவபெருமானிடம்
இருந்து பெற்ற
ஜெயத்ரதன்
சக்கர வியூகத்தை
அடைத்து
பாண்டவர்கள்
நால்வரையும்
சக்கர வியூகத்திற்குள்
நுழைய
விடாமல்
தடுத்து
விடுகிறான்

இவர்கள்
நால்வரும்
சக்கர வியூகத்திற்கு
வெளியே
எதுவும் செய்ய
முடியாமல் நின்று
விடுகின்றனர்
அபிமன்யு
மட்டும்
சக்கர
வியூகத்திற்குள்
மாட்டிக்
கொள்கிறான்)

கர்ணன் :
“பால் குடிக்கும்
சிறுவனுக்கு
போர்க்களத்தில்
என்ன வேலை
வீட்டில் பூப்பந்து
விளையாட
வேண்டியவன்
போர்க்களம்
என்று தெரியாமல்
வந்து விட்டாயா ?
வீட்டிற்கு சென்று
சிறுவர்களுடன்
விளையாடு - நீ
விளையாடுவதற்கு
இந்த
போர்க்களத்தில்
யாரும் இல்லை “

அபிமன்யு :
“நான் விளையாட
வரவில்லை ;
வேட்டையாட
வந்திருக்கிறேன் ;
உலகத்திலேயே
சிறந்த
வீரர்கள் என்று
சொல்லப்படுகிறார்களே
உண்மையிலேயே
அவர்கள்
உலகத்திலேயே
சிறந்த வீரர்கள்
தானா என்பதைக்
காண்பதற்காகவே
வந்திருக்கிறேன் “

“என்னைப்
பார்த்து
உங்களுக்கு
பயமாக
இருந்தால் - நான்
உங்களுக்கு
உயிர்ப்பிச்சை
தருகிறேன்
போர்க்களத்தை
விட்டு சென்று
விடுங்கள் “

கர்ணன் :
“பேச்சில்
இருக்கும் வீரம்
உன்னுடைய வில்
வீச்சில் இருக்குமா?”

அபிமன்யு :
“அதையும்
நீங்கள்
பார்க்கத் தானே
போகிறீர்கள்”

துரியோதனன் :
“நாங்கள்
வேண்டுமானாலும்
உனக்கு
உயிர்ப்பிச்சை
தருகிறோம்
ஓடி விடு
இங்கிருந்து
சிறுவனே!”

அபிமன்யு :
“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே
வந்திருக்கிறேன் ;
இப்போதும்
என்னை
சிறுவன்
என்று தான்
நினைக்கிறீர்களா ?”

(அபிமன்யுவைச்
சூழ்ந்து கொண்டு
துரோணர், கிருபர்,
துரியோதனன்,
துச்சாதனன்,
அஸ்வத்தாமன்,
கர்ணன்,
கிருதவர்மா,
விகர்ணன், சகுனி,
சல்லியன்
ஆகியோர்
ஒன்றாக
இணைந்து
தாக்குகிறார்கள்)

அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
தன்னை எதிர்த்துப்
போர் புரிவதைக்
கண்டு சிறிது கூட
பயப்படாமல்
அபிமன்யு
தன்னுடைய
வில்லின் மூலம்
அனைவரையும்
எதிர்த்துக்
கடுமையாக
போர் புரிகிறான்  ;
தன்னுடைய
வில்லிலிருந்து
புறப்படும் அம்பு
மூலம்
அனைவரையும்
காயப்படுத்துகிறான் ;
அனைவரையும்
தன்னுடைய
வீரத்தின் மூலம்
அச்சத்தை உண்டு
பண்ணுகிறான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-23


                 ஜபம்-பதிவு-515
            (அறிய வேண்டியவை-23)

தர்மர் :
“என்ன செய்வது
என்பதைப்
பற்றித் தான்
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்
ஒன்றும்
புரியவில்லை
எனக்கு
மனக்குழப்பம்
ஏற்பட்டிருக்கிறது “

அபிமன்யு :
“வணங்குகிறேன்
பெரியப்பா ! “

தர்மர் :
“பெரியவர்கள்
பேசிக்கொண்டிருக்கும்
போது சிறுவனான
உனக்கு இங்கே
என்ன வேலை
அபிமன்யு
நாங்களே
மனக்குழப்பத்தில்
இருக்கிறோம் “

அபிமன்யு :
“தங்களுடைய
மனக்குழப்பத்தை
போக்குவதற்காகத்
தான் நான்
வந்திருக்கிறேன் :

தர்மர் :
“எங்களுடைய
மனக்குழப்பதை
உன்னால் எப்படி
போக்க முடியும்?”

அபிமன்யு :
“போக்க
முடியும்”

தர்மர் :
“எப்படி?”

அபிமன்யு :
“சக்கரவியூகத்தைப்
பற்றித் தானே
கவலைப்பட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் “

தர்மர் :
“ஆமாம்!”

அபிமன்யு :
“சக்கர வியூகத்தைப்
பற்றி எனக்குத்
தெரியும் “

தர்மர் :
“உனக்கு
சக்கர வியூகத்தைப்
பற்றித் தெரியுமா?”

அபிமன்யு :
“ஆமாம்!
சக்கர வியூகத்தை
நான் அறிந்து
வைத்திருக்கிறேன்  
ஆனால்…….?”

தர்மர் :
“என்ன
ஆனால்?”

அபிமன்யு :
“எனக்கு
சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே செல்வது
எப்படி என்பது
மட்டும் தான்
தெரியும்  ;
சக்கர
வியூகத்திற்குள்
உள்ளே சென்ற
பிறகு வெளியே
வருவது
எப்படி என்பது
எனக்குத் தெரியாது “

தர்மர் :
“பரவாயில்லை
நாங்கள்
அனைவரும்
உனக்குத்
துணையாக
இருப்போம்  ;
நீ சக்கர
வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே
செல்லும் போது
உன்னைத் தொடர்ந்து
நாங்கள்
அனைவரும்
வருவோம்
உனக்குத்
துணையாக
உன்னுடனே
இருப்போம் “

அபிமன்யு :
“அப்படியே
ஆகட்டும்
பெரியப்பா ! “

தர்மர் :
“செல்
மகனே செல் “

“இன்று நீ
ஆற்றுப் போகும்
உன்னுடைய
வீரம் மிகுந்த
செயலைக் கண்டு
இந்த உலகமே
ஆச்சரியத்தால்
மிரண்டு
போகப் போகிறது
வரலாறு
படைக்கப் போகும்
உன்னுடைய
செயலைக் கண்டு
இந்த உலகமே
போற்றப் போகிறது ;”

“இனி யாராலும்
படைக்க முடியாத
மிகப் பெரிய
சரித்திரம்
இன்று உன்னால்
படைக்கப்படப்
போகிறது ;”

“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
வீழ்த்த முடியாது
என்று
சொல்லப்படக்கூடிய
உலகத்திலேயே
மிகச் சிறந்த
வீரர்களுடன் இன்று
நீ போரிடப்
போகிறாய் “

“இந்த உலகமே
உன்னுடைய
வீரத்திற்கு
தலை வணங்கக்
காத்திருக்கிறது
அபிமன்யு “

“செல் மகனே
செல்
உன்னை பின்
தொடர்ந்து
நாங்கள்
வருகிறோம்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////