November 24, 2011

ஐயப்பன்- திருமூலர்-பதிவு-3

             

                 ஐயப்பன்- பதிவு-3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

 ஐயப்பன்-திருமூலர்:
ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் குறிப்பிடுகிறார்

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
           வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்
              தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்
           கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””””””””
                                                ------------திருமூலர்---------------

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்””””””
முதலில் கோயிலுக்கும் ஆலயத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்வோம்
கோ +  இல் ---------கோயில்
கோ என்றால் அரசன் இறைவன் தலைவன் என்று பொருள்.
இல் என்றால் உறைவிடம் என்று பொருள்.
கோயில் என்றால் இறைவன் உறைவிடம் (அல்லது) இறைவன் இருக்குமிடம் என்று பொருள்.

ஆ +  லயம்-------ஆலயம்
ஆ என்றால் ஆன்மா என்று பொருள்.
ஆலயம் என்றால் ஆன்ம லயத்திற்கு ஏற்ற வழி கண்டறிந்து பின்பற்றி உயர்வடைதலே ஆலயம் என்பதற்குப் பொருள் .

ஊன் என்றால் சதை என்று பொருள் சதையால் செய்யப்பட்ட அல்லது சதையால் ஆக்கப்பட்ட இந்த உடம்பு ஆலயம் ஆகும் .
இந்த உடலுக்குள் உள்ளம் என்ற பெருங்கோயிலுக்குள் இறைவன் இருக்கிறான்.
இந்த உடலாகிய ஆலயத்தின் கர்ப்பகிரகம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானமே கோயில் அது நமது உள்ளே சிரசில் பிரம்மரந்திரத்தில் உள்ளது          ”- வும்     ,     -வும்       உள்ளே சேரும் இடமே உள்ளம் ஆகும் அங்கே இருக்கிறது நம் உயிர்  ஜீவன்
உயிர் (அல்லது) ஆன்மாவே இறைவன் என்றும் அந்த இறைவன் தங்கும் இந்த உடல் ஓர் ஆலயம் என்றும் கூறுகிறார்  திருமூலர்

சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்குமிடத்தை பெருங்கோயில் என்கிறார்  திருமூலர்  பெருங்கோயில் என்றால் பெருமைப் படக்கூடிய கோயில் என்று பொருள் இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது பெருங்கோயில் என்றால் பெரிய கோயில் என்றும் பொருள் படும்
சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கும் இடம் பெருங்கோயில் என்றால் இந்த உலகத்தில் உள்ள மற்ற கோயில்கள் அனைத்தையும் இதனுடன் ஒப்பிட்டு காட்ட முடியாது என்று பொருள்
புறவழிபாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட கோயில்கள் அனைத்திலும் மட்டுமே மனதை செலுத்திக் கொண்டே இருந்தால் அகத்தே சொல்லப்பட்ட இந்த கோயிலின் ரகசியங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிறார் திருமூலர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றால் ஊன் என்று சொல்லப்படக்கூடிய சதையால் ஆக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிரசில் பெருங்கோயில் என்று சொல்லப்படக் கூடிய பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது


“”””””வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்””””
பிராணன் என்றால் சீவன் என்று பொருள்.
வள்ளல் என்றால் வாரி வாரி வழங்கக் கூடியவர் என்று பொருள் .
வள்ளல் பிராணன் என்றால் அனைத்து விதமான சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும் வாரி வழங்கக் கூடிய சீவன் என்று பொருள்.
பிராணன் எப்பொழுது வள்ளல் பிராணனாக மாறும் என்றால் சீவன் சிவனுடன் சேரும் போது தான் உண்டாகிறது.
சீவன் எப்படி சிவனுடன் சேரும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி விழிப்பெற்றெழுந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேரும் பொழுது சீவன் சிவனாக மாறுகிறது.
சீவன் சிவனுடன் சேருவதற்கான நுழைவு வாயில் பிரம்மரந்திரத்தில் உள்ளது பிரம்மரந்திரததில் உள்ள வாயிலைத் தான் கோபுர வாசல் என்கிறோம்.

வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல் என்றால்,
அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக சீவன் மாற வேண்டுனெறால் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர பிரம்மரந்திரத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று பொருள்.



சீவனை சிவனாக மாற்ற பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்க எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும் என்பதை கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்  திருமூலர்
“”””””தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்”””””
நமது உடலில் சீவன் என்று சொல்லப் படக் கூடிய உயிராகிய ஜீவாத்மா இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமாத்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதுடன் நமது உடலில் சிரசில் பிரம்மரந்திரத்தில் சிவனாக இருக்கிறது
இதனை எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைக் கடக்கச் செய்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது சீவன் சிவனாக  மாறுகிறது
மேற்கண்ட முறையில் சீவன் சிவனாக மாறும் பொழுது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனே நம் உடலில் சீவனாக இருக்கிறது என்பதை உணர முடியும்



சீவன் சிவனாக மாறவிடாமல் தடுப்பவை கள்ளப்புலன்கள் இந்த கள்ளப்புலன்கள் பற்றிய விளக்கத்தை திருமூலர்  கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்

“”””””கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாகச் செயல்பட்டு மனிதனுக்கு ஆறு குணங்களை உண்டாக்கி பஞ்சமா பாதகங்களைச் செய்ய வைப்பதால் மனிதன்  இரு வினையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் நீந்துகிறான்
பஞ்ச தன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்வதால் வினைவழி புறத்தே செயல்படும் ஐம்புலன்களை கள்ளப் புலன்கள் என்கிறார்  திருமூலர்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைத் துளைத்து பிரம்மரந்திரத்தில் உள்ள இறைவனுடன் சேரும் போது ஒளி தெரிகிறது இந்த ஒளியைத் தான் மணி விளக்கு என்கிறார் திருமூலர்
இந்த மணிவிளக்கைத் தெரியாமல் செய்வது தான் கள்ளப்புலன்கள்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றால்
ஐந்து புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகள் புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்பதால் கள்ளப் புலன்களாகி மணி விளக்கைத் தெரியாமல் செய்து விடுகிறது
ஆனால் ஐந்து புலன்கள் வழியாக பஞ்ச தன் மாத்திரைகள் அகத்தே செயல்படும் பொழுது மணிவிளக்கு தெரியும் என்று பொருள்

முதல் அடியில் கடவுள் இருக்கும் இடத்தையும் ,
இரண்டாம் அடியில் கடவுளை அடையும் வழியையும் ,
மூன்றாம் அடியில் கடவுளை எப்படி அடைவது என்ற முறையையும் ,
நான்காம் அடியில் கடவுளை அடைவதற்கு தடையாக உள்ளவைகளையும்
விளக்குகிறார்  திருமூலர்.


திருமூலர்  சொன்னபடி பஞ்ச தன் மாத்திரைகளை புறத்தே விடாமல் அகத்தே அனுப்ப வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது தான் ஐயப்பனுக்காக மேற் கொள்ளப் படும் விரத முறைகள்


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”




No comments:

Post a Comment