April 19, 2012

இயேசு கிறிஸ்து-வாலசாமி-வாசலிலே- பதிவு - 34




              இயேசு கிறிஸ்து-வாலசாமி-வாசலிலே- பதிவு - 34

              “”பதிவு முப்பத்திநான்கை விரித்துச் சொல்ல
                                  ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் ; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது ; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்
                                                                ---------மத்தேயு - 7 : 13

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் , வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்
                                                              ---------மத்தேயு - 7 : 14

சிந்தனையை தட்டிய கவிதை
ஏட்டிற்கு வர மறுத்து விட்டது !

சட்டைப்பையில் குடியேறிய பணம்
வியாபாரத்திற்கு வர மறுத்து விட்டது !

சிந்திக்க வந்த மனம்
செயல் செய்ய மறுத்து விட்டது !

சாதனைக்கு வந்த வரலாறு
சரித்திரத்தை முத்தமிட மறுத்து விட்டது !

ஏட்டை விற்ற எழுத்து
எழுத்தாணியை தொட மறுத்து விட்டது !

கவிதையை தொட்ட கருத்து
காவியம் ஆக மறுத்து விட்டது !

பாசத்தை விற்ற பதவி
பாவத்தை வாங்க மறுத்து விட்டது !

இதயத்தை தொட்ட இரக்கம்
இறங்கி வர மறுத்து விட்டது !

பாவத்தை பூசிக்கொண்ட பாசம்
பாவக்கணக்கை கூற மறுத்து விட்டது !

பாடி வந்த ராகம்
அரங்கம் ஏற மறுத்து விட்டது !

தேடி வந்த செல்வம்
தேவைக்கு வர மறுத்து விட்டது !

கடைக் கண் காட்டிய அழகு
காட்சி தர மறுத்து விட்டது !

விடியலில் வந்த உதயம்
நிலவைப் பார்க்க மறுத்து விட்டது !

என்று இன்பக் கதவு சாத்தப்பட்டது ;
துன்பத்தின் துயர மேகங்கள் சூழ்ந்து கொண்டது ;
வாழ்வின் இருண்ட பக்கங்கள்
துயில் கலைந்து விழித்துக் கொண்டது ;
நிஜம் உண்மையாகி விட்டது ;
நிழலில் கோரத் தாண்டவம் ஆடுகிறது - என்று
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்தவர்கள்
கவலை என்னும் ஈட்டி
இதயத்தை துளைத்து , உயிரை மாய்த்தாலும் ,

கொண்ட கொள்கையில் மாறாமல்
எடுத்த இலக்கை அடையாமல்
குறிக்கோளிலிருந்து  பின்வாங்காமல்
எண்ணத்தில் விழுந்து தவறான செயல்களைச் செய்து
பாவப் பதிவுகளை உண்டு பண்ணி
ஜீவனை அசுத்தப் படுத்த மாட்டேன் .
எவ்வளவு தான் துன்பம் வந்தாலும்
நேர்மையாக வாழ்ந்து
உண்மையைக் கடைப்பிடித்து
பாவத்தை சேர்க்காமல்
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பேன் என்ற
எண்ணம் கொண்டு வாழ்பவர்கள் ஒரு வகை !

தழுவத் துடித்த நேரத்திலே - தென்றல்
விலை பேசப் பட்டது ஏன்?

மீட்ட நினைத்த அளவிலே - வீணை
இசையை மறந்தது ஏன்?

இதழ் சொட்டும் நேரத்திலே - தேன்
சிறைப் பிடிக்கப்பட்டது ஏன்?

பேச நினைத்த அளவிலே - வார்த்தை
தற்கொலை செய்துகொண்டது ஏன்?

எழுத துடித்த நேரத்திலே - எழுத்து
தொலைந்து போனது ஏன்?

காண நினைத்த அளவிலே - கன்னி
களவு போனது ஏன்?

ஊடல் கொள்ளும் நேரத்திலே -உயிர்
உடலை விட்டது ஏன்?

மையல் கொள்ளும் அளவிலே - மயக்கம்
மனதை விட்டுஅகன்றது ஏன்?

சிரிக்க நினைத்த நேரத்திலே - சிந்தனை
சில்லறை வேலைசெய்தது ஏன்?

துயில் கொள்ளும் அளவிலே - துhக்கம்
துhரம் சென்றது ஏன்?

படுக்க நினைத்த அளவிலே - படுக்கை
பள்ளியறையை விற்றது ஏன்?

காட்சி கண்ட நேரத்திலே - கண்
கருத்தை இழந்தது ஏன்?

என்று சோகத்தின் துயர மேகங்கள்
விழிகளில் நுழைந்து இதயத்தை துளைத்த போது
கொண்ட கொள்கையிலிருந்து நழுவி
எடுத்துக் கொண்ட குறிக்கோளிலிருந்து விலகி
நேர்மை தவறி ஒழுக்க வரையறைகளை அழித்து
நல்லவைகளின் சாவுமேட்டில் கெட்டவைகளின்
ராஜ்யத்தை நிறுவி இன்பம் சிம்மாசனம் ஏற
முன்னேற்றம் மணிமுடி தாங்க
ஏற்றங்கள் அரசாள வேண்டி
தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து
பாவக்குழியில் விழுந்து
ஜீவனை அசுத்தப் படுத்திக் கொண்டு
ஆண்டவனின் ராஜ்யத்தில் பிரவேசிக்க
முடியாமல் தடுமாறுபவர்  மற்றொரு வகை .

மேலே சொல்லப்பட்ட விதத்தில்,
உலகத்தில் வாழ்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு
பாவம் செய்யாமல் ஜீவனை துhய்மையாக
வைத்துக் கொண்டு இருப்பவர்  ஒரு வகை.

துன்பங்களின் கொடுமையைத் தாங்க முடியாமல்
பாவம் செய்து ஜீவனை அசுத்தப்படுத்தி
வைத்திருப்பவர்  மற்றொரு வகை.

பாவங்கள் செய்து ஜீவனை
அசுத்தப்படுத்தி வைத்திருப்பவர்கள்  தேர்ந்தெடுக்கும் வாசல்
விசாலமாக இருக்கிறது ; விரிந்து இருக்கிறது ;
பெரியதாக இருக்கிறது ; அகலமாக இருக்கிறது;

பாவங்கள் செய்கிறவருடைய செயலானது
    அசுத்தம் நிறைந்ததாகவும் ;
    பொய்மைகள் சேர்ந்ததாகவும் ;
    கபடம் உள்ளதாகவும் ;
    உண்மைகள் அற்றதாகவும் ;
    நியாயங்கள் இறந்ததாகவும் ;
    அசுத்தங்கள் கலந்ததாகவும் ;
    நீதிகள் மரித்ததாகவும் ;
    நல்லவைகள் அழிந்ததாகவும் ;
    தீயவைகள் செயலாற்றுவதாகவும் ;
    மடமைகள் பெற்றதாகவும் ;
    ஒழுக்கங்கள் கழன்றதாகவும் ;
    அறநெறி தவறியதாகவும் ;
    சூதுக்கள் மலர்ந்ததாகவும் ;
    கற்புநெறி விட்டதாகவும் ;
    மாசுக்கள் இணைந்ததாகவும் ;
    அறியாமை சேர்ந்ததாகவும் ;

இருக்கின்ற காரணத்தால் அவர்களுடைய பாதை
செல்லும் வாசல் விசாலமாக இருக்கிறது ;
விரிந்து இருக்கிறது ;
அதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையில்
இந்த விசாலமான வாசல் வழி சென்று
பாவங்கள் செய்து ஜீவனை அசுத்தப் படுத்தி
கொள்கின்றனர் .

பாவவழி செல்லாமல் உண்மை வழி  செல்பவர்  செயலானது ;
   அடிவருடிகள் கழன்று ஓட ,
   ஆளுமைகள் அடங்கி ஓட ,
   இயலாமைகள் அரற்றி ஓட ,
   ஈரமில்லாநெஞ்சம்  மயங்கி ஓட ,
   உதாசீனசெயல்கள் அழுது ஓட ,
   ஊதாரித்தனங்கள் தலைதெறிக்க ஓட ,
   எகத்தாளம் பிடரிஇடிபட ஓட ,
   ஏமாற்றுவித்தைகள் தலைகழன்று ஓட ,
   ஐதிகம் சுக்குநுறாகி ஓட ,
   ஒடுக்குமுறை மூளைகலங்கி ஓட ,
   ஓட்டைமனம் இதயம்வாடி ஓட ,

செயல்கள் பல செய்து
இந்த அவனியில் உள்ள உயிர்களின்
     உண்மைத் தோழனாய் ;
     உண்மைத் தலைவனாய் ;
     உண்மைக் காவலனாய் ;
     உண்மை வழிகாட்டியாய் ;

    அன்பிற்கு இலக்கணமாய் ;
    ஆணவத்தை அடக்குபவனாய் ;
    இன்பத்திற்கு விளக்கமாய் ;
    ஈகைக்கு எடுத்துக்காட்டாய் ;
    உண்மைக்கு உருவமாய் ;
    ஊருக்கெல்லாம் தலைவனாய் ;
    எளிமையின் பிம்பமாய் ;
    ஏழைகளின் காவலனாய் ;
    ஐயத்திற்கு தெளிவாய் ;
    ஒற்றுமைக்கு உயர்வாய் ;
    ஓர்மத்திற்கு பொருளாய் ;
    ஓளஷத குணமாய் ;
    அஃதே பண்பு ;
அத்தகைய பண்புகளைக் கொண்டவனே
நேர்வழியில் நின்று பாவங்கள் பால் விழாமல்
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பவன் .

இவர்கள் செல்லும் பாதையானது
கஷ்டங்கள் நிறைந்தது ;
கவலைகள் உடையது ;
கரடுமுரடான பாதைகொண்டது ;
இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது
இத்தகைய வாசலை தேர்ந்தெடுப்பவர்  ஒரு சிலரே!

கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு ,
துன்பங்களை தாங்கிக் கொண்டு ,
தோல்விகளை சுமந்து கொண்டு ,
கண்ணீரை சிந்திக் கொண்டு ,
எத்தகைய துன்பம் வந்தாலும் பாவங்கள் செய்யாமல்
உண்மை வழி நின்று , நேர்வழி சென்று ,
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பவர்
செல்லும் பாதை இடுக்கமாயிருக்கும்
இப்பாதையில் சென்றால் ஆண்டவன் அருளைப் பெறலாம்
என்று உணர்ந்து இதன் வழி செல்பவர்  மிகச் சிலரே!

அதலால் தான் இயேசு பாவங்களைச் செய்யாமல்
ஜீவனை துhய்மையாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
செல்லும் வாசல் வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது
துன்பங்கள் நிறைந்ததாகவும் ; கவலைகள் தோய்ந்ததாகவும் ;
இருக்கிறது என்கிறார் .

பாவங்களைச் செய்து ஜீவனை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
செல்லும் வாசல் விரிவும் , வழி விசாலமும் இருக்கிறது .
பொய்மைகள் சூழப்பட்டதாகவும் ,
கபடங்கள் நிரப்பப்பட்டதாகவும் ,
இருக்கிறது என்கிறார்.

அதனால் தான் இயேசு
பாவங்களைச் செய்யாமல் ஜீவனை
துhய்மையாக வைத்திருக்க வேண்டுபவர்கள்
நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய
வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது என்கிறார் .

அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்து
உட்பிரவேசியுங்கள் என்கிறார்.
இத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்து
உட்பிரவேசிக்கிறவர்களால் மட்டுமே
இறைவனுடைய ராஜ்யத்தில் இடம்பெறும்
தகுதியை உடையவர்.

பாவத்தைக் கழிக்க
துன்பம் மிகுந்த பாதையான இடுக்கமான வாசல்
வழியாக உட்பிரவேசியுங்கள் .

பாவத்தைக் கழிக்காமல் இருக்க மேலும்
பாவத்தை பெருக்கிக் கொள்ள இன்பம் மிகுந்த
பாதையான விசாலமான வாசல் வழியாக
செல்லுங்கள் என்கிறார்  இயேசு .



வாலசாமி:

“”வாசலி லேயொரு மேல்வா சலந்த
    வாசலி லேசிறு வாசலுண்டு
 நேச முடன்றிரு வாசலிற் பூட்டு
    நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே””

“””அட்சர மாமௌ னாட்சர மாவது
      ஆனால் நல்ல திறவுகோலாம்
  உச்சித மாகாத் திறந்தா லேயந்த
       உச்சி வழிகாணும் ஞானப்பெண்ணே”””

               --------மதுரை வாலசாமி----பெரியஞானக் கோவை---

நமது உடலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன
இந்த ஒன்பது ஓட்டைகளைத் தான் ஒன்பது வாசல் என்கிறோம் .

வாசல் என்பது ஒரு வழிப்பாதையாகவோ அல்லது
இருவழிப்பாதையாகவோ இருக்கும்
நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்கள்
இதில் எத்தகைய தன்மையைக் கொண்டவை என்பதை நம்

சிந்தனைக் கதவைத் தட்டி
அறிவுக் கத்தியைத் தட்டி
புத்தி சாதுரியத்தைத் தட்டி
விளக்கத்தைப் பெற்று
       உணர்வு பெறுவோம் ;
       மயக்கம் தெளிவோம் ;
       குழப்பம் தவிர்ப்போம் ;
       மறைபொருள் உணர்வோம் ;
       ரகசியங்கள் அறிவோம் ;
       சூட்சுமங்கள் பெறுவோம் ;
       கற்பனைகள் கலைப்போம் ;
       தெளிவு அடைவோம் ;
       கனவுகள் தொலைப்போம் ;
       பொய்மை எரிப்போம் ;
       உண்மையில் கரைவோம் ;

பல்வேறு ரகசியங்களை தன்னுள் கொண்ட ஒன்பது வாசல்கள்
இவை நவ துவாரங்கள் என்றும் அழைக்கப்படும் .

இரண்டு செவிகள் ,
இரண்டு கண்கள் ,
மூக்கின் இரண்டு துவாரங்கள் ,
ஒரு வாய் ,
மூத்திர துவாரமான ஒரு லிங்கம் ,
மல துவாரமான ஒரு குதம் ,

இந்த ஒன்பது வாசல்களைவிட
உயர்ந்த வாசல் ஒன்று உண்டு
அது தான் பத்தாவது வாசல்
இந்த பத்தாவது வாசல் நம்முடைய சிரசில் இருக்கிறது
பத்தாவது வாசலை கடந்து உள்ளே சென்றால் தான்
    ஞானம் அடைய முடியும் ;
    உள்ளம் தெளிவு பெற முடியும் ;
    மடமைகள் விலக முடியும் ;
    அறியாமை ஓட முடியும் ;
    ஆணவம் அழிய முடியும் ;
    கடவுளை உணர முடியும் ;
    கடவுளை காண முடியும் ;
    கடவுளாய் மாற முடியும் ;
    சக்திகள் பெற முடியும் ;
    மோட்சம் அடைய முடியும் ;
    முக்தியை நுகர முடியும் ;
    பிறப்பு இறப்பு சுழற்சியை நிறுத்த முடியும் ;
    அஷ்டமா சித்திகள் அடைய முடியும் ;
    கர்மவினைகளை எரிக்க முடியும் ;
    பாவ-புண்ணியங்களை துறக்க முடியும் ;
    பற்றுகளை கழற்ற முடியும் ;
    ஆசைகளை துறக்க முடியும் ;
    சினத்தை புதைக்க முடியும் ;
    எண்ணத்தை உணர முடியும் ;
    கவலையை கழிக்க முடியும் ;
   முக்காலத்தில் பிரவேசிக்க முடியும் ;
   பரம்பொருளை உணர முடியும் ;

பத்தாவது வாசலைத் திறந்து
உள்ளே பிரவேசிப்பவர்களால் மட்டும் தான்
உள்ளே பிரவேசிக்கும் சூட்சுமத்தை அறிந்தவர்களால் மட்டும் தான்
இறைவனை உணர முடியும் ;
இறைத்தன்மை அடைய முடியும் ;
இறைநிலை பெற முடியும் ;
இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் .

பத்தாவது வாசலைத் திறந்து உள்ளே பிரவேசித்து
இறைவனை உணர இரண்டு முறைகள் உண்டு
முதல் முறை:
ஒன்று கர்மவினைகள் முழுவதும் கழிக்கப்பட்டால்
பத்தாவது வாசல் திறக்கும்.
இரண்டாவது முறை:
பத்தாவது வாசலைத் திறந்து உள்ளே நுழைந்து விட்டால்
கர்மவினைகள் முழுவதும் கழிந்து விடும்.

முதல்முறை நாமே முயன்று பத்தாவது வாசலைத் திறப்பது
இரண்டாவது முறை ஏற்கெனவே பத்தாவது வாசலைத் திறந்து
உயர்நிலை பெற்று இறைநிலை உணர்ந்தவர்கள் நம்முடைய
பத்தாவது வாசலைத் திறப்பது .

இரண்டாவது முறை மிகவும் அரிதான முறை .
தன்னுடைய பத்தாவது வாசலைத் திறந்தவர்கள் அரிது .
அப்படியே பத்தாவது வாசலை திறந்தவர்கள் இருந்தாலும்
அவர்களை நாம் காண்பது அரிது .
அப்படியே நாம் அவர்களைக் கண்டாலும் அவர்கள்
வழிகாட்டுதல் இல்லாமல் நம்முடைய
பத்தாவது வாசலைத் திறப்பது அதை விட அரிது.

பத்தாவது வாசலைத் திறந்து
இறைஉணர்வு பெற்றவர்கள்
மக்களோடு மக்களாய் எளிமையாய் இருப்பார்கள் ;
தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள் ;
ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள் ;
புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார்கள் ;
செல்வத்தைத் தேடிஓட மாட்டார்கள் ;
விளம்பரத்தை நாட மாட்டார்கள் ;

நாமும் உயர்  தன்மை பெற , இறைநிலை உணர ,
ஆன்மீக தாகம் தீர , பத்தாவது வாசலைத் திறக்க வேண்டும்.
பத்தாவது வாசலைத் திறக்க
பூட்டி வைக்கப்பட்ட பத்தாவது வாசலைத் திறக்க
பூட்டுக்கள் போட்டு பூட்டி வைக்கப்பட்ட
பத்தாவது வாசலைத் திறக்க
நல்ல திறவுகோல் ஒன்று உள்ளது .

ஆன்மீகத்தில் முழுமை அடையவும் ;
இறைநிலையில் இரண்டறக் கலக்கவும் ;
சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் ;
சித்தர்களால் கடைபிடிக்கப்பட்டு இருப்பதும் ;
சித்தர்களால் பாடல்களில் குறிக்கப்பட்டு இருப்பதும் ;
மிக உயர்ந்த திறவுகோலாகிய
மொனவித்தை என்னும் பேசாமந்திரத்தை பயன்படுத்த வேண்டும் .

இருப்பு நிலை மௌனம் கொண்டது
மௌனமாகிய இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
மௌனத்தை தன்னுள் கொண்ட
அரவத்தை எழுப்பாத ; சத்தத்தை உண்டாக்காத ;
ஒலி அமைப்புகளை தன்னுள் கொண்டுள்ளாத ;
ஒரு கலையால் ஒரு வித்தையால் தான் முடியும் .
இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
இருப்பு தன்மைகளைத் தன்னுள் கொண்ட
ஓன்றை கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி
செயல்படுத்தினால் மட்டுமே
இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள முடியும்

அதைப்போல மௌனமாகிய இருப்புநிலையுடன்
தொடர்பு கொள்ள மௌனத்தை தன்னுள் கொண்ட
வித்தையைக் கண்டு பிடித்து பயன்படுத்தி
செயல்படுத்தினால் மட்டுமே
இருப்புநிலையுடன் தொடர்பு கொள்ள முடியும்

மௌனத்தை தன்னுள் கொண்ட வித்தையாதலால்
மொளன வித்தை என்று அழைக்கப்படுகிறது .
மந்திரங்கள் அனைத்தும் பேசுபவை
பேசுபவை என்றால் ஒலி அமைப்புகளைக் கொண்டவை என்று பொருள்
ஓலியற்ற இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
பேசாத ஒலியற்ற மந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் .
அதனால் தான் அந்த வித்தைக்குப் பேசா மந்திரம்
என்ற பெயரும் உண்டு.

இதற்கு மேலும் பல பெயர்கள் உண்டு
இதனை ஆராய்ந்து உணர்ந்து தெளிவு பெறுங்கள் .

இந்த மௌனவித்தை என்னும் பேசா மந்திரத்தை பயன்
படுத்தும் போது பத்தாவது வாசல் திறக்கும் .
பத்தாவது வாசல் எவ்வாறு திறக்கும் ?
மௌனவித்தையைப் பயன்படுத்தும்  போது
பிராணனும் , அபானனும் ஒன்றுடன் ஒன்று மோதி
அக்னிக் கனல் உருவாகிறது .
இந்த அக்னிக் கனல் குண்டலினி சக்தியை எழுப்புகிறது .

குண்டலினி சக்தி விழிப்பெற்று எழுந்து
ஆறு ஆதாரங்களைத் துளைத்து சக்தியைப் பெற்று மேலேறுகிறது .

நம்முடைய கர்ம வினைகள் எந்த அளவுக்கு
கழிந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஏற்ப
குண்டலினிசக்தி மேலேறும் ஆறாதாரங்களை கடக்கும்
சக்திகளை அளிக்கும்
ஏழாவது ஆதாரமான  பிரம்மரந்திரத்தில் நுழைந்து
குண்டலினி சக்தி இறைவனுடன் சேர்ந்து இறைநிலை உணர்கிறது
தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது .

ஏழாவது ஆதாரமான பிரம்மரந்திரத்தில்
நுழைய ஒரு வாசலுண்டு

குண்டலினிசக்தி இந்த பத்தாவது வாசல் வழியாகத் தான்
பிரம்மரந்திரத்தில் நுழைய முடியும் ;
இறைவனை அடைய முடியும் ;
இறைத்தன்மை பெற முடியும் ;

மேல் வாசல் என்றால் இறைவனை அடையக்கூடிய
வாசலைக் கொண்ட பிரம்மரந்திரம் என்று பொருள் .

வாசலிலே சிறுவாசல் என்றால் பிரம்மரந்திரத்தில்
நுழைவதற்கான பத்தாவது வாசல் என்று பொருள் .

இந்த வாசல் நெருக்கமும் குறுகியதுமாக இருக்கிறது
இந்த குறுகிய வாசல் வழியாக சென்றால் மட்டுமே
இறைவனை தரிசிக்க முடியும் .

இந்த குறுகிய வாசல் வழியாக
செல்ல நமது கர்ம வினைகள் அனைத்தும்
கழிந்து இருக்க வேண்டும் .
தன்னுடைய ஒன்பது வாசலை உணர்ந்து
கர்மவினைகளைக் கழித்து பத்தாவது வாசலான
குறுகிய வாசலைத் திறந்து
உட்பிரவேசித்து இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் .
இறைத்தன்மை பெற முடியும்
என்கிறார்  மதுரை வாலசாமி .



இயேசு கிறிஸ்து- வாலசாமி:
இயேசு , தன்னுடைய பாவங்களைக் கழிக்க இடுக்கமான
வாசல் வழியாக உட்பிரவேசிப்பவர் கள் மட்டுமே தேவனுடைய
ராஜ்யத்தில் இடம் பெற முடியும் என்கிறார் .

அவ்வாறே , வாலசாமியும் ,
தன்னுடைய கர்மவினைகளைக் கழித்து
பத்தாவது வாசலான குறுகிய வாசலைத் திறந்து
உட்பிரவேசிப்பவர்களால் மட்டுமே இறைவனுடன்
இரண்டறக் கலக்க முடியும் என்கிறார்.
                                                          
      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                            போற்றினேன் பதிவுமுப்பத்துநான்கு  ந்தான்முற்றே “”

April 14, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-எத்தனைநாள்-பதிவு-33






       இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-எத்தனைநாள் - பதிவு - 33

       “”பதிவு முப்பத்திமூன்றை விரித்துச் சொல்ல
                           ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

என்னத்தை உண்போம் , என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் ; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப் படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்;  ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?”
                                                          -------மத்தேயு - 6:25

இந்த உலகத்தில் உள்ளவர்கள்
தனக்காக வாழ்வதில்லை பிறருக்காக வாழ்கிறார்கள் .
இதற்கு சுயநலத்தை விடுத்து பொது நல
எண்ணம் கொண்டு வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல .
தனக்காக வாழாமல் , தன் இன்பத்திற்காக வாழாமல்,
தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழாமல்,
சுற்றத்தார்  தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் ;
உறவினர்கள் தன்னை மதிக்க வேண்டும் ;
குடும்பத்தார்  தன் நல்லெண்ணங்களைப் போற்ற வேண்டும் ;
என்பதைக் கருத்தில் கொண்டு ,
என்பதை நினைவில் கொண்டு ,
என்பதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு
தன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தாமல் ;
தன் இயல்பான குணங்களை வெளிப்படுத்தாமல் ;
தன் சிறு சிறு இன்பங்களைக்கூட வெளிப்படுத்தாமல் ;
சமுதாயம் வரையறை செய்துள்ள ,
சமுதாயம் எழுதாத விதியாக வைத்துள்ள ,

           ஒழுக்கநெறி கோட்பாட்டுக்குள் ,
           ஒழுக்கநெறி கூண்டுக்குள் ,
           ஒழுக்கநெறி கட்டுப்பாட்டுக்குள் ,
           ஒழுக்கநெறி வலைக்குள் ,
           ஒழுக்கநெறி நியதிக்குள் ,
           ஒழுக்கநெறி மாயைக்குள் ,
சிக்குண்டு மனிதன் தன் இயல்பான மகிழ்ச்சியைக் கூட
அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான் .

இதனால் வாழ்க்கையை தனக்காக வாழாமல்
             மற்றவர்  விருப்பப்படி ;
             சமுதாய வரையறைப்படி ;
            கலாச்சார இலக்கணப்படி ;
            பண்பாட்டு நெறிப்படி ;
             ஒழுக்க விதிப்படி ;
             நாகரிக விளக்கப்படி ;
வாழ்வதால் நிகழ் காலத்தை தவறவிட்டு
எதிர்காலத்தில் மாட்டிக் கொள்கிறான் .

எதிர்காலத்தில் தன் நிலை
பாதுகாப்பானதாக இருக்க ;
மகிழ்ச்சியானதாக இருக்க ;
கவலையற்றதாக இருக்க ;
துன்பங்களற்றதாக இருக்க ;
ஏழ்மையற்றதாக இருக்க ;
செயல்களை வகுக்கிறான்;  சிந்திக்கிறான் ;
சீர்துhக்குகிறான் ;செயல்படுகிறான் ;
உடுத்த உடையையும், உண்ண உணவையும், தேடித் திரிகிறான் ;
அவைகள் எதிர்காலத்தில் தடையின்றி
கிடைக்க திட்டங்கள் தீட்டி சேமித்து வைக்கிறான் .

வாழ்க்கையை ஸ்திரப் படுத்திக் கொள்ள
உணவையும் , நீரையும் , உடையையும் தேடும் மனிதன்
உயர்ந்தவைகள் எவை என்று
உணராமல் மதி தடுமாறி அலைகிறான் .
உணவை விட ,உயிரும் உடையை விட, இந்த உடலும்
உயர்வானவைகள் அல்லவா?
கிடைக்கக் கூடியவைகளுக்காக தேடி அலையும் மனிதன்
அரிதாக கிடைத்த மானிடப் பிறப்பையும் , மானிடப் பிறப்பின்
நோக்கத்தையும் அறியாமல்

உடலையும் , உயிரையும் பேணிக் காத்து
இவைகளை துhய்மைப்படுத்தும் நிலைகளை அறியாமல் ;
துhய்மைப்படுத்தும் நிலைகளை பின்பற்றாமல் ;
உடலையும் , உயிரையும் பயன்படுத்தி
ஆண்டவனை உணராமல் ;
உண்ணும் உணவுக்காகவும் , உடுத்தும் உடைக்காகவும் ,
பருகும் நீருக்காகவும் அலைந்துதிரிந்து
எதிர்கால தேவையை நிறைவுசெய்ய ,
பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ள ,
மனிதன் அலைந்து திரிகிறான் என்கிறார்  இயேசு .



ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள் ;அவைகள் விதைக்கிறதுமில்லை , அறுக்கிறதுமில்லை ,களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”
                                                      --------மத்தேயு - 6:26

ஆகையால் , என்னத்தை உண்போம் ,என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்.”
                                                     ---------மத்தேயு - 6:31

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.”
                                                    ----------மத்தேயு - 6:32

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் , அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்.”
                                                 -----------மத்தேயு - 6:33

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் ;நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் .அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”
                                                     --------மத்தேயு - 6:34

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படக் கூடிய
நிலம் , நீர், நெருப்பு, காற்று ,விண் ஆகியவற்றில்
ஊடுருவி நிறைந்து இருக்கக் கூடிய காந்த ஆற்றல்
அழுத்தம் ,ஒளி ,ஒலி ,சுவை ,மணம் என்ற
பஞ்சதன் மாத்திரைகளாக தன் மாற்றம் அடைகிறது .
இந்த பஞ்சதன் மாத்திரைகள் புலன்கள்
வழியாக வெளிப்படும் நிலையைப்
பொறுத்து உயிரினங்கள் வகைப்படுத்தப் படுகின்றன .


தொடு உணர்ச்சியுள்ள ஓர்  அறிவு - தாவரம்
தொடு , சுவை உணர்ச்சியுள்ள ஈரறிவு - புழு
தொடு , சுவை,  நுகர்  உணர்ச்சியுள்ள
மூன்றறிவு- எறும்பு , தேனீ ,

தொடு, சுவை, நுகர், பார்வை உணர்ச்சியுள்ள
நான்காவது அறிவு-பாம்பு
இரு அறிவு உயிரினங்களுக்கும் , மூவறிவு உயிரினங்களுக்கும்
கண்களும், காதுகளும் கிடையாது.
பாம்பு போன்ற ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கு
கண்கள் உண்டு ; காதுகள் கிடையாது .

தொடு, சுவை ,நுகர், பார்வை ,கேட்கும் உணர்ச்சியுள்ள
ஐந்து அறிவு- பறவைகள் ,விலங்குகள்.

இவற்றுடன் , இந்த ஐந்துடன் மனதைப் பயன்படுத்தும்
ஆறாவது அறிவு உள்ளவன் மனிதன் மட்டுமே .

ஐயறிவு உயிரினங்கள் என்று நம்மால் சொல்லப்படும்
பறவைகள் தங்கள் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள
விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை
எதிர்கால தேவைக்காக தனக்காக சேமித்து வைப்பதும் இல்லை
எதிர்காலத்தில் தனக்கு உணவு கிடைக்குமா?
என்பதைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை .

ஐயறிவு கொண்ட உயிர்களையே  பரமபிதா
காப்பாற்றி வழி நடத்தும் போது
ஆறறிவு படைத்தவர்களல்லவா நாம் 
அவைகளை விட உயர்ந்தவர்களல்லவா நாம்
ஆதலால் நமக்கு உணவு கிடைக்குமா?
உடுத்த உடை கிடைக்குமா? - என்று
நாளைய தினத்தை நினைத்து கவலைப்பட்டு
இன்றைய தினத்தை இழக்காதீர்கள்
இன்றைய மகிழ்ச்சியை துறக்காதீர்கள்
இன்றைய இன்பம் நிறைந்த வாழ்வை
தவற விட்டு விடாதீர்கள்
உங்களுக்கு என்ன தேவை ?
எந்த காலத்தில் என்ன தேவை ?
எந்த விதத்தில்  தேவை ?
எந்த முறையில் தேவை ?
எதை எப்பொழுது ? எங்கே  ?எந்த விதத்தில் ?
எந்த காலத்தில்? எந்த தருணத்தில் ?
அளிக்க வேண்டும் என்பதை பரமபிதா அறிந்திருக்கிறார்.
உங்களுக்கு என்று பிதா கொடுப்பதை யாரும்
கவர்ந்து செல்ல முடியாது .
உங்களுக்கு என்று பிதா கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது .

வாழ்வென்றால் போராடும் போர்க்களம் என்று நினையாதீர்கள் .
போர்க்களமாக நினைத்து விட்டால் நீங்கள் உங்கள்
வாழ்க்கையில் எத்தகைய செயலுடனும்
வெற்றி பெறுவதற்காக சண்டை போடுவீர்கள்
சிந்திக்க மறந்து விடுவீர்கள்.

வாழ்க்கை என்பது ஒரு திருவிழா
அதை கொண்டாடி பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு ஓவியம்
அதை ரசித்துப் பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சிக்கடல்
அதில் நீந்திப் பாருங்கள் !

வாழ்க்கை என்பது ஒரு கருணை மழை
அதில் நனைந்து பாருங்கள்!

வாழ்க்கை என்பது ஒரு ஐஸ்கிரீம்
அது உருகுவதற்கு முன் அதை சுவைத்துப் பாருங்கள் !

வாழ்க்கையை திருவிழாவாக நினைப்பவனால் மட்டுமே
வாழ்க்கையை மகிழ்ச்சியாக நிகழ்காலத்தில்
அந்த அந்த கணத்தில் வாழ்க்கையில் எதிர்ப்படும்
இடையூறுகளை ஊதித்தள்ளி முன்னேற முடியும் .

வாழ்க்கையை போர்க்களமாக நினைப்பவன்
இறந்த காலத்தில் புதையுண்டு ,
எதிர் காலத்தில் சிக்குண்டு ,
நிகழ் காலத்தை தவறவிட்டு ,
பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டு
களைய முடியாமல் சிந்தனை தடுமாறி
கவலையென்னும் குழியில் விழுந்து
துன்பத்தில் தள்ளாடுவான் .
ஆகவே எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட வேண்டாம் ;
தேவைகளை சேமித்து வைக்க போராட வேண்டாம் ;
மனதை கவலைக்குள் தள்ள வேண்டாம் ;

நீங்கள் தேட வேண்டியது எல்லாம் வல்ல ஆண்டவனை ,
கேட்டதை அளிக்கும் கொடையாளியை ,
துன்பத்தை நீக்கும் கருணை உள்ளத்தை ,
இன்பத்தை அளிக்கும் இரக்க சுபாவத்தை ,
அத்தகைய ஆண்டவனை தேடினால் ;
பரம பிதாவை நாடி ஓடினால் ;
பரம பிதாவுக்குள் அடைக்கலம் புகுந்தால் ;
பரலோக ராஜ்யத்தின் வழியை நாடினால் ;
பரமபிதாவின் நீதியை கடைபிடித்தால் ;
ஆண்டவரின் வசனங்களை கைக் கொண்டால் ;
ஆண்டவருடன் இணையும் பேறு பெற்றால் ;
ஆண்டவரின் ஆசி பெற்றால் ;
இந்த உலகத்தில் வாழ்வதற்குரிய வாழ்க்கைத் தேவைகள்
உங்களுக்குக் கிடைக்கும் ;
ஆண்டவரால் அளிக்கப்படும் ;
முக்காலும் ஆண்டவர்  உம்முடன் இருந்து உன்னை வழி
நடத்தி உன் தேவைகளை பூர்த்தி செய்வார்  என்கிறார்  இயேசு .

நாளைக்காக கவலைப்பட்டு
நாளை என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று
வருத்தப்பட்டு வேதனைப்பட்டு
இன்றைய நாளை வீணாக்கி விடாதேயுங்கள் ;
இன்று உள்ள இன்பத்தை அனுபவியுங்கள் ;
இன்று உள்ள வாழ்க்கையை அனுபவியுங்கள் ;
நாளைய தினத்தை , வருங்காலத்ததை
வருங்காலத்தில் பார்த்துக் கொள்வோம்
வருங்காலத்தில் ஏற்படக்கூடிய துன்பங்களையும்
இழப்புகளையும் மனதில் கொண்டு
இன்றைய நாளில் இன்றைய தினத்தில்
உள்ள இன்பத்தை நுகர தவறி விடாதீர்கள் .
கணத்திற்கு கணம் வாழுங்கள்
கணத்திற்கு கணம் வாழ்பவனால் இன்பமாக வாழ முடியும்
கணத்திற்கு கணம் வாழாதவனால் மட்டுமே வாழ்க்கையை
தொலைத்து விட்டு எதிர்கால கவலையில் மண்டையை குழப்பி
துன்பச் சேற்றில் மாட்டிக் கொள்ள முடியும் .

ஆகவே வாழ்க்கையை
போர்க்களாமாக பார்க்காமல்
பூந்தோட்டமாக பாருங்கள் - அதன்
        நறுமணத்தில் களித்திருங்கள் ;
        சுகத்தில் சுகித்திருங்கள் ;
        இன்பத்தில் களித்திருங்கள் ;
        மகிழ்ச்சியில் நனைந்திருங்கள் ;
         இறந்த காலத்தை மறந்திருங்கள் ;
         எதிர்காலத்தை துறந்திருங்கள் ;
          நிகழ்காலத்தில் வாழ்ந்திருங்கள் ;
         கனவுகளில் மிதந்திருங்கள் ;
        கற்பனைகளில் திளைத்திருங்கள் ;
        வாழ்க்கையை அனுபவித்திருங்கள் ;

காலத்தோடு போட்டி போட்டு காலத்திற்கு
முன்னால் ஓடாதீர்கள் ;வருத்தத்தை தேடாதீர்கள் ;
காலத்திற்கு பின்னால் சென்று துன்பத்திற்குள் மூழ்காதீர்கள்;
காலத்தோடு இணைந்து சென்று ஆண்டவன் அளித்த பெரும்
கொடையான இந்த மானிட வாழ்க்கையை மகிழ்ச்சியாக
நடத்தும் விதம் அறிந்து அறிவு தெளிவு பெறுங்கள் ;
நாளைக்காக வாழாதீர்கள் ;
எதிர்காலத்திற்காக வருந்தாதீர்கள் ;
வருங்காலத்திற்காக கலங்காதீர்கள் ;
ஆண்டவனிடம் வாழ்க்கையை முழுவதுமாக ஒப்படைத்து விட்டு
ஏதிர்காலத்தில் நிம்மதியாக இருங்கள்.

எல்லாம் வல்ல ஆண்டவர்  நமக்கு தேவையானவற்றை
தேவையான காலத்தில் வழங்குவார்
என்று உறுதி கொள்ளுங்கள் .

யார்  ஒருவர்  கடவுளை உணர்கிறாரோ அவர்
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்வை பெறுவார்
என்கிறார்  இயேசு.



பட்டினத்தார்:

   “”எத்தனைநாள் கூடி  யெடுத்த சரீரமிவை
       அத்தனையு மண்தின்ப தல்லவோ- வித்தகனார்
       காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
       மேலைக் குடியிருப்போ மே””””
                -------பட்டினத்தார்----பெரியஞானக் கோவை----


“”எத்தனைநாள் கூடி  யெடுத்த சரீரமிவை
  அத்தனையு மண்தின்ப தல்லவோ”””
நாம் பிறந்த தாயின் கருவறையில் இருந்தது
10 மாதங்கள் , அதாவது 300 நாட்கள்
இத்தனை நாட்கள் தாயின் கருவறையில் உருவாகி
இந்த அவனியில் வாழ்வதற்காக
எத்தனை நாட்களை தாயின் கருவறையில் கழித்து
அணுவாகி , உடலாகி , உயிராகி , குழந்தையாகி ,
மனிதனாக இந்த அவனியில் வாழ பிறந்திருக்கிறோம் .

உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க இடம்
ஆகியவற்றிற்காக அல்லும் பகலும் ,அலைந்து ,தேய்ந்து
நம்மை காத்துக் கொள்ள துயர்படுகிறோம்

எதிர்காலத்தில் தேவைகள் தடையின்றி கிடைக்கவும்
தற்பொழுது உள்ள தேவையை விட வருங்கால தேவை
இடையூறின்றி கிடைக்கவும் முயற்சி செய்கிறோம் .
எதிர்கால வாழ்க்கை
இன்பத்தின் வாயிலாகவும் ;
மகிழ்ச்சியின் சாயலாகவும் ;
முன்னேற்றத்தின் அடிப்படையாகவும் ;
சுகத்தின் மாளிகையாகவும் ;
இருக்க ஆசைப்படுகிறோம் - அதற்காக

        உறக்கத்தை துறக்கிறோம் ;
       முயற்சியை விதைக்கிறோம் ;
       உழைப்பைத் துhவுகிறோம் ;
       உறுதியைப் பாய்ச்சுகிறோம் ;
       கடமையை நினைக்கிறோம் ;
       கருத்தாக உழைக்கிறோம் ;
        அறிவை தீட்டுகிறோம் ;
        செல்வத்தை பெருக்குகிறோம்;
வருங்கால கனவுகளுக்காக ,
நிகழ்கால சுகத்தை சுகிக்க மறக்கிறோம்.
நிகழ்காலத்தில் வாழ்வதை தவிர்க்கிறோம் .
கணத்திற்கு கணம் வாழும் நிலையை துறக்கிறோம்.

எதிர்காலத்தை நித்தியம் என்று எண்ணிக் கொண்டு
நிகழ்காலத்தில் வாழாமல் தவிர்க்கிறோம் .
எதிர்கால முன்னேற்றத்தை மனதில் கொண்டு
நிகழ் கால இன்பங்களை அனுபவிக்க முடியாமல் விடுகிறோம்.

நாளை என்ன நடக்கும் ?அடுத்து என்ன நடக்கும் ?
என்று யாருக்கும் தெரியாது.

பணக்காரன் ஏழையாகலாம் ;
ஏழை பணக்காரனாகலாம்;

உயர்ந்தவன் தாழ்ந்தவனாகலாம்;
தாழ்ந்தவன் உயர்ந்தவனாகலாம்;

அறிவாளி முட்டாளாகலாம்;
முட்டாள் அறிவாளியாகலாம் ;

சேர்ந்தவர்  பிரியலாம்;
பிரிந்தவர்  சேரலாம்;

நாளை நடப்பது , நாளை என்ன நடக்கும் ,
நடப்பது எது என்று யாருக்கும் தெரியாது .
அப்படி இருக்கும் போது
நாளைக்காக , எதிர்காலத்திற்காக , வருங்காலத்திற்காக,
எதற்கு கவலைப்பட வேண்டும் ;
எதற்கு வருத்தப்பட வேண்டும் ;
எதற்கு துன்பப்பட வேண்டும் ;
எதற்கு மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டும் ;
எதற்கு பிரச்சினையை இழுத்துக் கொள்ள வேண்டும் ;
எதற்கு நிகழ்கால சுகத்தை இழக்க வேண்டும் ;
எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று சொல்லி
எதற்காக நிகழ்கால வாழ்க்கையை இழக்க வேண்டும்.

உடலில் இருந்து உயிர்  போனால்
பிணமாகி நாற்றத்தை உண்டு பண்ணி
புதைக்கப் பட்ட பின்பு மண்ணால்
அரிக்கப்படும் இந்த உடலுக்கா ?
எப்போது இந்த உடலை விட்ட உயிர்  போகும்
என்று விவரம் தெரியாத இந்த உடலுக்கா ?
நித்தியமில்லாத இந்த உடலுக்கா ?
அழிந்துபோகும் இந்த உடலுக்கா ?
நிகழ்காலத்தை விட்டு விட்டு
எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கிறோம் .
கணத்திற்கு கணம் இன்பமாக இருந்து வாழ்க்கையை
நடத்துவதோடு மட்டுமில்லாமல்
சிற்றின்பத்தை நிலை பெறச் செய்ய
சீர்துhக்கி செயல் செய்யாமல்
பேரின்பத்தின் நுழைவு வாயிலில் நுழையும் திறன் அறிந்து
எல்லாம் வல்ல இறைநிலையுடன் ஒன்றாகக் கலந்து
எல்லாவற்றையும் பெற்று வாழும்
முறையின் முறையின் தன்மையை பட்டினத்தார்
கீழ்க்கண்டஅடிகளில் கூறுகிறார்.



                                                                        “””- வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக் கங்குல்பக லற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே””””

இந்த அடிகளுக்கு இரண்டு முறைகளில் விளக்கம் சொல்லலாம்

விளக்கம் - 1 :
வித்தகனார் - இந்த உலகத்தில் மனிதனாகப்
பிறக்க காரணமான ஆண்டவர் என்று பொருள்.

ஆண்டவருடைய திருவடிகளைப் பற்றி
அல்லும் பகலும் அவரையே சிந்தனையில் நிறுத்தி ,
அவருடைய நாமங்கள் அவருக்குரிய மந்திரங்களை ,
உச்சாடணம் செய்து இறை சிந்தனையுடன்
தெய்வ சிந்தனையுடன் வாழ்ந்தால்
உயர்ந்த நிலைகளை அடைந்து
வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து
காலத்திற்கு தேவையானவைகளை
காலத்திற்கு உகந்தபடி பெற்று
உயர்நிலையான மோட்ச நிலை அடைவர்
என்பது ஒரு முறையில கூறப்படும் விளக்கம் .



விளக்கம் -2 :
வித்தகனார்- இந்த உடலுக்குள் உயிர்  இருப்பதற்கு
காரணமான காற்று என்று பொருள்.

இந்த உடலுக்குள் உயிர் இருப்பதற்கு
காரணமான காற்றை உணர்ந்து ,
காற்றின் செயல்முறை அறிந்து ,
காற்றின் அளவுமுறை சிந்தித்து ,
பிராண , அபான வாயுவை மோத விட்டு
உண்டான அக்கினி மூலம் காலையும் மாலையும்
தொடர்ந்து பயிற்சி செய்து அக்கினியை உருவாக்கி
குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறாதாரங்களைத் துளைத்து சக்தி பெற்று
ஏழாவது ஆதாரமான பிரம்மரந்திரத்தில் நுழைந்து
அமுதத்தை பருகி மேல் நிலையில் நின்று
ஒன்றாகக் கலந்து தான் அவனாக மாறும் போது
காலம் என்பதே கிடையாது .

அனைத்தையும் அளிக்கும் நித்திய

சன்மானம் கிடைத்து விட்டால்
அநித்திய அலங்கோலம் எதற்கு?
நிகழ்காலத்தை தவறவிடாது
கணத்திற்கு கணம் வாழ்ந்து அல்லும் பகலும்
இறைவனை நாடி நித்திய வாழ்வை
பெற நினைப்பவர்  வாழ்க்கை

தேடலின் போதும் ,
தேடிக் கொண்டிருக்கும் போதும் ,
தேடில் முடிந்த போதும் ,
தேடல் நிறைவடைந்த போதும் ,
தேடல் தேடலை முடித்த போதும் ,
தேடலின் கடமை முடிந்த போதும் ,
தேடலின் இலக்கு பூர்த்தியான போதும் ,

இறைவனால் அளிக்கப் பெறும்
துன்பம் நீக்கிய இன்ப நிகழ்வுகளை சுவைத்து
எதிர்காலத்தை கணக்கில் கொள்ளாமல்
வருங்காலத்தைப் பற்றி வருத்தப் படாமல்
நிகழ்கால நித்தியத்தில் நிம்மதியாக இருப்பர்.

ஆண்டவனை அறிய நினைப்பவர்க்கு
ஆண்டவனை உணர்ந்தவர்க்கு
நடக்க வேண்டியது நடக்க வேண்டிய காலத்தில்
நடந்தே தீரும் என்ற மனத் தெளிவைப் பெறுவர்.

நாளைய விடியலை இறைவனுக்கு அளித்து
நிகழ்கால வாழ்வை இன்பத்தில் நனைக்கும்
முறை அறிந்து செயல்பட வேண்டும் .

யார்  ஒருவர் கடவுளை உணர்கிறாரோ அவர்
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்வை பெறுகிறார்
என்கிறார்  பட்டினத்தார் .



இயேசு கிறிஸ்து- பட்டினத்தார் :
இயேசு,  யார்  ஒருவர்  கடவுளின் நியதியை புரிந்து கொள்கிறாரோ ,
கடவுளை உணர்ந்து கொள்கிறாரோ அவருடைய வாழ்க்கையானது
துன்பம் நீக்கிய இன்பமான வாழ்க்கையாக இருக்கும் என்கிறார்.


அவ்வாறே ,
பட்டினத்தாரும் , யார்  ஒருவர் கடவுள் வகுத்த சட்டங்களை
புரிந்து கொள்கிறாரோ , கடவுளை உணர்ந்து கொள்கிறாரோ ,
அவருடைய வாழ்க்கையானது துன்பம் நீக்கிய இன்பமான
வாழ்க்கையாக இருக்கும் என்கிறார்.

                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                            போற்றினேன் பதிவுமுப்பத்திமூன்று  ந்தான்முற்றே “”