April 23, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-வேணும்-பதிவு -35




           இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-வேணும்-பதிவு -35

            “”பதிவு முப்பத்திஐந்தை விரித்துச் சொல்ல
                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

உள்ளவனெவவோ அவனுக்குக் கொடுக்கப்படும் ; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.”
                                                                   --------லுhக்கா - 8:18

உலகத்தை இரண்டே வார்த்தைகளில் பிரித்து விடலாம்:
உள்ளவன் – இல்லாதவன்.
உலகில் உள்ள மற்ற அனைத்தும் இந்த
இரண்டு வார்த்தைகளுக்குள் தான் அடக்கம் பெற்று இருக்கிறது .

பணம் உள்ளவன்   - பணம் இல்லாதவன் ,
செல்வம் உள்ளவன் - செல்வம் இல்லாதவன் ,
அறிவு உள்ளவன்   - அறிவு இல்லாதவன் ,
இரக்க மனம் உள்ளவன்     - இரக்க மனம் இல்லாதவன் ,
கொடுக்கும் மனம் உள்ளவன்  - கொடுக்கும் மனம் இல்லாதவன் ,
உதவும் குணம் உள்ளவன்    - உதவும் குணம் இல்லாதவன் ,
சிந்திக்கும் திறன் உள்ளவன்  - சிந்திக்கும் திறன் இல்லாதவன் ,
என்று வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம் .

இந்த உலகம் ,
உள்ளவனை உற்று நோக்குகிறது
இல்லாதவனை உதாசீனப் படுத்துகிறது .

உள்ளவனை அண்டுகிறது
இல்லாதவனை சீண்டுகிறது

உள்ளவனைப் பார்த்து மதிக்கிறது
இல்லாதவனைப் பார்த்து சிரிக்கிறது

உள்ளவனை மதிக்கிறது
இல்லாதவனை மிதிக்கிறது

உள்ளவனை புகழ்கிறது
இல்லாதவனை இகழ்கிறது

உள்ளவனை போற்றுகிறது
இல்லாதவனை துhற்றுகிறது

புத்தகத்தில் உள்ளதை படித்து தேர்வு எழுதி
தேர்வில் வெற்றி பெற்றவனை
அறிவு உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
புத்தகத்தில் உள்ளதை படித்து
தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற முடியாதவனை
அறிவு இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவனை
திறமை உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறாதவனை
திறமை இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றவனை
வியாபார சிந்தனை உள்ளவன் என்கிறது இந்த உலகம் .
வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறாதவனை
வியாபார சிந்தனை இல்லாதவன் என்கிறது இந்த உலகம் .

ஒருவன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில்
தன் திறமையை நிருபித்து வெற்றி பெற்றால் மட்டுமே
அவனை இந்த உலகம் திறமைசாலி என்று அங்கீகரிக்கிறது .

ஒருவன் இந்த சமுதாயத்தால்
திறமைசாலி உழைப்பாளி அறிவில் சிறந்தவர்  - என்று
புகழாரம் சூட்டப்பட்டு போற்றப்பட வேண்டுமானால்
ஏதேனும் ஒரு துறையில் ,
வாழ்க்கையில் வெற்றி பெறும் போது மட்டுமே
இந்த சமுதாயம் அவருக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

சமுதாயத்தால் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது
குடும்பத்தாரால் சிறப்பும் ,
உறவினர்களால் உயர்வும் ,
சுற்றத்தால் மதிப்பும் ,
கிடைக்கிறது .

வெற்றி பெறாதவனை இந்த சமுதாதயம்
திறமைசாலி என்று அங்கீகரிப்பதில்லை .
   ஏற்றுக் கொள்வதில்லை ;
   மதிப்பு கொடுப்பதில்லை ;
   கௌரவம் அளிப்பதில்லை ;
   நட்புகள் பாராட்டுவதில்லை ;
   புகழ்ச்சிகள் சூட்டப்படுபதில்லை ;
   உயர்வுகள் அளிப்பதில்லை ;
   சிறப்புகள் செய்வதில்லை ;
   மரியாதை தருவதில்லை ;

ஆனால் அவர்கள் மேல்
   ஏளனங்கள் வீசப்படுகிறது ;
   கோபங்கள் காட்டப்படுகிறது ;
   சினங்கள் விதைக்கப்படுகிறது ;
   சோகங்கள் தரப்படுகிறது ;
   உயர்வுகள் மறைக்கப்படுகிறது ;
   கண்டனங்கள் கொடுக்கப்படுகிறது ;
     கவலைகள் காட்டப்படுகிறது ;
    துன்பங்கள் எழுப்பப்படுகிறது ;

இதனால் தோல்வி கண்ட நெஞ்சம் துவண்டு விடுகிறது
சில முறை தோல்வி கண்டு
வெற்றியின் விலாசத்தைத் தொட்டவனை
வெற்றியின் ருசியைச் சுவைத்தவனை
இந்த உலகம் கண்டு கொள்கிறது
அங்கீகாரம் அளிக்கிறது .

பல முறை முயற்சி செய்தும் பல தோல்விகளை கண்டும்
துன்பங்கள் பலவற்றை நுகர்ந்தும்
வெற்றியின் விலாசத்தை காண முடியாமல்
தன் வாழ்நாளின் இறுதி கட்டம் வரை
உயிர்  உடலை விட்டுப் பிரியும் வரை
வெற்றியின் சுவாசத்தை சுவைக்க முடியாதவன்
மண்ணில் புதையுண்டால்
காலத்தால் கவனிக்கப் படாமல்
புறக்கணிக்கப் பட்டு இருக்கிறான் .

வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்
சில தோல்விகளை கண்டு விட்டு வெற்றி பெற்றவனை
அறிவு உள்ளவன் திறமை உள்ளவன் என்று
உலகம் அவன் பின்னால் ஓடுகிறது .
வெற்றி பெற்றவன் அனுபவம் முக்கியம் என்று
அவன் வாழ்க்கையை அலசுகிறது ,
அவன் திறமைகளை ஆராய்கிறது ,
அவன் அனுபவங்களை சிந்திக்கிறது ,
மற்றவர்களுக்கு உதாரணம் காட்டுகிறது ,
மற்றவர்களை கடைபிடிக்க சொல்கிறது,
மற்றவர்களை பின்பற்ற சொல்கிறது .

தோல்வி மட்டுமே கண்டு வெற்றியை பெற முடியாமல்
இறந்தவனின் அனுபவத்தை இந்த உலகம்
கவனிக்க தவறி விடுகிறது - அவனை
திறமையை பிரயோகிக்க தெரியாதவன் ;
அறிவை உபயோகிக்க தெரியாதவன் ;
வெற்றியின் விலாசம் தெரியாதவன் ;
உழைக்கும் திறன் இல்லாதவன் ;
சிந்திக்கும் வலிமை இல்லாதவன் ;
என்ற முத்திரை அவர்கள் மேல் குத்தப்பட்டதே
அவர்கள் அனுபவத்தை இந்த உலகம்
தவற விட்டதற்கு காரணம் .

வெற்றி பெற்றவனிடம் உள்ள அனுபவத்தை விட
வெற்றியே பெறாதவனிடம் உள்ள அனுபவம் மிக முக்கியம் .

அவனிடம் தான் அவனிடம் மட்டும் தான்
எதையும் தாங்கும் இதயம் இருக்கும் ;
எதையும் சமாளிக்கும் திறன் இருக்கும் ;
எதையும் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும் ;
எதையும் எதிர்  கொள்ளும் துணிவு இருக்கும் ;
எதையும் சுமக்கும் தைரியம் இருக்கும் ;
எதனுடனும் போராடும் போர்க்குணம் இருக்கும் ;
எதை இழந்தாலும் முன்னேறும் ஆர்வம் இருக்கும் ;

இத்தகைய பல்வேறுபட்ட தன்மைகள்

  விளங்கிக் கொள்ள முடியாத அனுபவங்கள் ;
  புரிந்து கொள்ள முடியாத காரியங்கள் ;
  சிந்திக்க முடியாத திறன்கள் ;
  உணர முடியாத பக்குவங்கள் ;
  பகுத்துணர முடியாத பண்புகள் ;
  தீட்ட முடியாத விளக்கங்கள் ;
  வார்க்க முடியாத தைரியங்கள் ;
  செதுக்க முடியாத சிந்தனைகள் ;
  காட்ட முடியாத காவியங்கள் ;
  விளக்க முடியாத உண்மைகள் ;

அவனுள் இருக்கும் .
அவன் வாழ்க்கையில் இருக்கும் .
அவன் அனுபவத்தில் ஒளிந்து இருக்கும் .

தோல்வியுற்றவன் ஒன்றும் இல்லாதவன் என்று
பலரை பல்வேறு அனுபவங்கள் கொண்டவரை
நாம் கவனிக்க தவறுவதால் தான்
நல்ல அனுபவங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருக்கின்றன .
சமுதாயத்திற்கு உதவாமல் அழிந்து விட்டிருக்கின்றன .

சமுதாயம் வெற்றி பெற்றவனை - உள்ளவனை
மட்டுமே நோக்குவதால் ,
வெற்றியே பெறாதவனை - இல்லாதவனை
இந்த சமுதாயம் கவனிக்காமல் தவற விட்டு விடுகிறது .

அனுபவம் என்பது வெற்றி பெற்றவனிடம் மட்டும் இல்லை
தோல்வியுற்றவனிடமும் உள்ளது என்பதை
இந்த சமுதாயம் உணர வேண்டும் .

அதனால் தான் இயேசு இல்லாதவனிடம் இருந்து
எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார்  - அதாவது
வாழ்க்கையில் வெற்றியைக் காணாமல்
  தோல்வியை மட்டுமே ருசித்தவனுக்கு ,
  கவலையில் மட்டுமே மூழ்கியவனுக்கு ,
  துன்பத்தில் மட்டுமே கரைந்தவனுக்கு ,
  சோகத்தில் மட்டுமே துவண்டவனுக்கு ,
வாழ்க்கையில் கிடைத்த
  அனுபவத்தின் விளக்கத்தை
  அனுபவத்தின் சாராம்சத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும்

இல்லாதவனிடம் என்ன இருக்கும் ,
அவனுக்கு என்று என்ன இருக்கும் ,
அவனுக்கு என்று சேர்த்து வைத்தது எதுவாக இருக்கும் ,
அவன் தனக்கு என்று வைத்துக் கொண்டது எதுவாக இருக்கும் ,
தனக்கு உரிமையாக வைத்துக் கொண்டது எதுவாக இருக்கும் ,
அது தான் அனுபவமாக இருக்கும்
அந்த அனுபவத்தை இல்லாதவனிடம் இருந்து
   எடுத்துக் கொள்ளப்படும் அனுபவத்தை ,
   வாழ்க்கையின் விளக்கத்தை ,
   சூட்சுமத்தின் ரகசியத்தை ,
   மறைபொருளின் அர்த்தத்தை ,
   உணர்வுகளின் வெளிச்சத்தை ,
உள்ளவனிடம் கொடுக்க வேண்டும்
அதாவது வெற்றி பல பெற்றும்
உண்மையான அனுபவம் எது என்று தெரியாதவனுக்கு
அனுபவத்தின் சுயரூபம் தெரியாதவனுக்கு
உண்மையின் விளக்கம் புரியாதவனுக்கு
கொடுக்க வேண்டும் .

எல்லாவற்றையும் இழந்தால் மட்டுமே
உண்மையை உணர முடியும்
எல்லாவற்றையும் இழக்கும் தைரியம்
உடையவனால் மட்டுமே உண்மையை உணர முடியும் .

மரணத்தைப் பார்த்து பயப்படாதவனால் மட்டுமே
உண்மை என்றால் என்ன என்று உணர முடியும் .

அதனால் தான் இயேசு ,
எல்லாவற்றையும் இழந்து மனம் தெளிவு பெற்று
அதன் மூலம் கிடைத்த அனுபத்தை
இல்லாதவனிடம் உள்ள அனுபவத்தை
மனம் தெளிவு பெறாமல்
அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை
உடையவர்க்கு உள்ளவனுக்கு
உண்மையான அனுபவத்தை
அவர்களுக்கு அளிக்க வேண்டும்
என்கிறார்  இயேசு .



சிவவாக்கியர்:

“””வேணும் வேணுமென்றுநீர்  வீணுழன்று தேடுவீர்
வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே
வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணுமென்றவப் பொருள் விரைந்து காணலாகுமே””””
                         -------சிவவாக்கியர்---சிவவாக்கியம் - 1000-----

“””வேணும் வேணுமென்றுநீர்  வீணுழன்று தேடுவீர்”””
வாழ்வில் வசந்தம் குறைவின்றி வீச
மகிழ்ச்சியின் சாளரங்கள் வேண்டும் !

மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்து இருக்க
செல்வத்தின் திறவுகோல்கள் வேண்டும்!

செல்வத்தில் தேவையானதைப் பெற்றுக்கொள்ள
உயர்வின் அரியணைகள் வேண்டும் !

உயர்வுகள் முடிசூட்டிக் கொள்ள
வெற்றியின் விலாசங்கள் வேண்டும்!

வெற்றியில் மயங்கி சுகித்து இருக்க
புகழ்ச்சியின் போதைகள் வேண்டும்!

புகழ்ச்சியில் தன்னை மறந்து இருக்க
இன்பத்தின் பாசறை வேண்டும்!

இன்பத்தில் காலம் ஓட்டிச் செல்ல
அறிவின் தெளிவு வேண்டும்!

அறிவு தெளிவு பெறவில்லையெனில்
    கண்ணில் பட்டவைகள் ;
    நெஞ்சத்தை வருடியவைகள் ;
    இருதயத்தை துளைத்தவைகள் ;
    மனதை பாதித்தவைகள் ;
    எண்ணத்தை வருடியவைகள் ;
    ஆசைகளை எழுப்பியவைகள் ;
    அறிவை மயக்கியவைகள் ;
    புத்தியை நனைத்தவைகள் ;
    புகழ்ச்சியை ஏற்படுத்துபவைகள் ;
    உயர்வை ஊட்டுபவைகள் ;
    மாற்றத்தை உருவாக்குபவைகள் ;
    ஏற்றத்தை அளிப்பவைகள் ;
    சிந்தனையை தட்டுபவைகள் ;
    வாழ்வை மாற்றுபவைகள் ;
    இல்லறத்தை உயர்த்துபவைகள் ;
    உண்மையை மறைப்பவைகள் ;
    பொய்மையை விதைப்பவைகள் ;
    துன்பங்களை உண்டாக்குபவைகள் ;
    துயரங்களை ஏற்படுத்துபவைகள் ;
    காலத்தால் கருத்திழந்தவைகள் ;
    மடமைகளால் முடிசூட்டப்பட்டவைகள் ;
    அறியாமையால் மறைகழன்றவைகள் ;
    போலித்தனத்தால் பாதிக்கப்பட்டவைகள் ;

என்று பல்வேறு பட்டவைகள் பின்னால் மனம் செல்லும்
அனைத்தும் பெற மனம் துடிக்கும்
இது வேண்டும் , அது வேண்டும் என்று மனம் கொண்டு
எது வேண்டும் என்று மனது தெளிவில்லாமல்
அதை பெற செயல்கள் செய்யும் மனித மனம் .

அன்றாட வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்ய மட்டும் ஓடாமல்
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும்
சொத்து சேர்க்க வேண்டும்
உயர்வுகள் பெற வேண்டும் என்று
வீணாக அலைந்து திரிந்து உழைத்து கஷ்டப்பட்டு
காலத்தை வீணாக்கி ,
இளமையை வீணாக்கி ,
இன்பத்தை பாழாக்கி ,
மனிதர்கள் தங்கள் விருப்பப் பட்டவைகளை
தேடி பின்னால் ஓடுகின்றனர்.



“””வேணுமென்று தேடினாலு முள்ளதல்ல தில்லையே”””
விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டாகி விட்டது
நடக்க வேண்டியது
நடக்க வேண்டிய காலத்தில்
நடந்தே தீரும் .
விதைக்கப்பட்ட விதையானது
காலம் கனியும் போது
செடியாகி , மரமாகி,  பூவாகி , காயாகி, கனியாகும்
இந்த சுழற்சியின் சக்கரம்
வரிசைக் கிரமமாக கால சூழ்நிலைக்கேற்ப ,
பருவக் காலங்களின் தாக்குதலுக்கேற்ப ,
பஞச பூதங்களின் அரவணைப்புக்கேற்ப ,
இயற்கையின் துhண்டுதலுக்கேற்ப ,
காலநிலைகளின் மாறுதலுக்கேற்ப ,
நடக்க வேண்டிய காலத்தில்
நடக்க வேண்டியது நடந்தே தீரும் .

இது மாறுதலுக்கு உட்பட்டதல்ல
நம்மால் மாற்றம் செய்யக் கூடியதுமல்ல .

தனக்கு விருப்பப்பட்டவைகள்
தான் ஆசைப்பட்டவைகள்
இந்த காலத்தில் இந்த நேரத்தில் வேண்டும் - என்று
ஆசைப்பட்டு தேடினால், ஓடினால் ,
வாடினால் ,அரற்றினால் ,புலம்பினால்
கிடைத்து விடுமா ?

நமக்கென்று விதிக்கப்பட்டவைகள்
நமக்கென்று ஒதுக்கப்பட்வைகள்
நமக்கென்று அளிக்கப்பட்டவைகள்
நமக்கென்று தரப்பட்டவைகள்
கிடைக்க வேண்டிய காலத்தில்
கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில்
தான் கிடைக்கும்
என்ற உண்மை உணர்ந்து மனது தெளிவு பெற வேண்டும் .

மனது தெளிவு பெற வாழ்வின் நிகழ்வுகளை
வரிசைப் படுத்த வேண்டும்
யோசித்துப் பார்க்க வேண்டும்
சிந்தனையில் நிறுத்த வேண்டும்.

அவ்வாறு சிந்தித்து செயலை செய்து
அனுபவ ரீதியாக உணரும் போது
அனுபவ விளக்கம் பெறும் போது
ஓடி ஓடி அலைந்தாலும்
நாடி நாடி களைத்தாலும்
வாடி வாடி முயற்சித்தாலும்
யாருக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ?
யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் - என்று
வகுக்கப்பட்டிருக்கிறதோ
அது தான் கிடைக்கும் அதை தவிர்த்து
ஊசி முனை அளவு கூட கிடைக்காது
என்பதை உணர்ந்து கொள்ளலாம் .



“”வேணுமென்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணுமென்றவப் பொருள் விரைந்து காணலாகுமே””””
மனம் தெளிவு பெற்று அனுபவம் வாய்த்த பின்
தேடுவதை நிறுத்த வேண்டும்
தேடுவது தன்னால் கிடைக்கும் என்ற ஞானம் வரும் .

விதி - மதி:
இயற்கையமைப்பும் இயற்கை நியதிகளும் விதி .
இயற்கையமைப்போடு மனிதன் தொடர்பு கொள்ளும் போது
மனிதனுக்கு ஏற்படும் இன்பம் ,துன்பம் ,அமைதி, பேரின்பம் மதி .

இயற்கை அமைப்புகளை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி
என்ன நன்மைகளை காணலாம் என்பதை அறிந்து
மாறாத இயற்கை நிகழ்ச்சிகளிலிருந்து
தனக்கு துன்பம் நேராமல் காத்துக் கொள்ளும் நுண்ணறிவே மதி .

விதியை மாற்ற முடியாது - ஆனால்
மதியைப் பயன்படுத்தி அதன்
பாதிப்பிலிருந்து சற்று தப்பிக்கலாம் .
அதன் பாதிப்பை குறைத்துக் கொள்ளலாம் .
அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம் .

மழை பெய்வது என்பது விதி
மழையை நிறுத்த முடியாது .
மதியைப் பயன்படுத்தி குடையின் மூலம்
தன் மேல் விழும் மழையைத் தடுத்து
தன்னுடைய உடலை மழையால் நனையாமல்
சிறிது காத்துக் கொள்ளலாம் .

விதியை மாற்ற முடியாது என்ற
உணரும் அறிவு சுயமாக வராது
அனுபவ ரீதியாகத் தான் வரும் .

இதை அனுபவ ரீதியாக யார்  ஒருவர்  உணர்கிறாரோ
அவரால் மட்டுமே தேடுவதை நிறுத்த முடியும்
தேடுவதை நிறுத்த ஞான விளக்கம் பெற வேண்டும் .
ஞானவிளக்கம் பெற்று உண்மைப் பொருள் உணர்ந்து
தான் அவனாக மாறினால் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் .

அழியும் சிற்றின்பப் பொருளை வேண்டும் என்று
நாடி ஓடுவதால் ஒரு பயனும் இல்லை
அழியாத பேரின்பப் பொருளை நாடி அதனை பெறும் போது
வேண்டிய எல்லாம் கிடைக்கும் .

கர்மவினையின் பதிவுகளுக்கேற்ப ;
பாவ புண்ணியத்தின் தாக்குதலுக்கேற்ப ;
பிறவிகளின் வரிசைக் கேற்ப ;
ஜென்மங்களின் முறைகளுக்கேற்ப ;
முறைப்படுத்தப்பட்டவைகள் ;
வரிசைப்படுத்தப்பட்டவைகள் ;
எழுதிவைக்கப்பட்டவைகள் ;
கால மாற்றத்தின் கணக்கைத் தீர்க்க ,
ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டியவை
கிடைக்க வேண்டிய காலத்தில் தான்  கிடைக்கும்.

தேடி அலைந்தாலும்
அழுது புரண்டாலும்
கண்ணீர்  சிந்தினாலும்
உள்ளம் வருந்தினாலும்
நமக்கென்று விதிக்கப்பட்டவைகள்
தான் கிடைக்கும் .

இதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் மட்டுமே
சிற்றின்பத்தின் சாளரத்தை நாட மாட்டார்கள் .
பேரின்பத்தின் வாயிலை திறக்க முயற்சி செய்து
தான் அவனாக மாறி பேரின்ப வெள்ளத்தில நீந்தி
பிறவிப் பெருங்கடலை உடைத்து
உண்மைப் பொருள் உணர்ந்து உயர்வடைவர்
என்கிறார்  சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து- சிவவாக்கியர் :
இயேசு , உண்மையான அனுபவமே மாறுபட்டு
செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கான
உயர்வுக்கு கொண்டு செல்வதற்கான வழி என்கிறார்.

அவ்வாறே ,
சிவவாக்கியரும், உண்மையான அனுபவமே
சிற்றின்பத்தை தேடி ஓடும் சமுதாயத்தை
பேரின்பத்தை நோக்கி செலுத்துவதற்கான
உயர்வான இலக்கை அடைவதற்கான வழி என்கிறார்.

                                                       
         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                    போற்றினேன் பதிவுமுப்பத்துஐந்து  ந்தான்முற்றே “”


April 19, 2012

இயேசு கிறிஸ்து-வாலசாமி-வாசலிலே- பதிவு - 34




              இயேசு கிறிஸ்து-வாலசாமி-வாசலிலே- பதிவு - 34

              “”பதிவு முப்பத்திநான்கை விரித்துச் சொல்ல
                                  ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :    

இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் ; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது ; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்
                                                                ---------மத்தேயு - 7 : 13

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் , வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்
                                                              ---------மத்தேயு - 7 : 14

சிந்தனையை தட்டிய கவிதை
ஏட்டிற்கு வர மறுத்து விட்டது !

சட்டைப்பையில் குடியேறிய பணம்
வியாபாரத்திற்கு வர மறுத்து விட்டது !

சிந்திக்க வந்த மனம்
செயல் செய்ய மறுத்து விட்டது !

சாதனைக்கு வந்த வரலாறு
சரித்திரத்தை முத்தமிட மறுத்து விட்டது !

ஏட்டை விற்ற எழுத்து
எழுத்தாணியை தொட மறுத்து விட்டது !

கவிதையை தொட்ட கருத்து
காவியம் ஆக மறுத்து விட்டது !

பாசத்தை விற்ற பதவி
பாவத்தை வாங்க மறுத்து விட்டது !

இதயத்தை தொட்ட இரக்கம்
இறங்கி வர மறுத்து விட்டது !

பாவத்தை பூசிக்கொண்ட பாசம்
பாவக்கணக்கை கூற மறுத்து விட்டது !

பாடி வந்த ராகம்
அரங்கம் ஏற மறுத்து விட்டது !

தேடி வந்த செல்வம்
தேவைக்கு வர மறுத்து விட்டது !

கடைக் கண் காட்டிய அழகு
காட்சி தர மறுத்து விட்டது !

விடியலில் வந்த உதயம்
நிலவைப் பார்க்க மறுத்து விட்டது !

என்று இன்பக் கதவு சாத்தப்பட்டது ;
துன்பத்தின் துயர மேகங்கள் சூழ்ந்து கொண்டது ;
வாழ்வின் இருண்ட பக்கங்கள்
துயில் கலைந்து விழித்துக் கொண்டது ;
நிஜம் உண்மையாகி விட்டது ;
நிழலில் கோரத் தாண்டவம் ஆடுகிறது - என்று
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்தவர்கள்
கவலை என்னும் ஈட்டி
இதயத்தை துளைத்து , உயிரை மாய்த்தாலும் ,

கொண்ட கொள்கையில் மாறாமல்
எடுத்த இலக்கை அடையாமல்
குறிக்கோளிலிருந்து  பின்வாங்காமல்
எண்ணத்தில் விழுந்து தவறான செயல்களைச் செய்து
பாவப் பதிவுகளை உண்டு பண்ணி
ஜீவனை அசுத்தப் படுத்த மாட்டேன் .
எவ்வளவு தான் துன்பம் வந்தாலும்
நேர்மையாக வாழ்ந்து
உண்மையைக் கடைப்பிடித்து
பாவத்தை சேர்க்காமல்
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பேன் என்ற
எண்ணம் கொண்டு வாழ்பவர்கள் ஒரு வகை !

தழுவத் துடித்த நேரத்திலே - தென்றல்
விலை பேசப் பட்டது ஏன்?

மீட்ட நினைத்த அளவிலே - வீணை
இசையை மறந்தது ஏன்?

இதழ் சொட்டும் நேரத்திலே - தேன்
சிறைப் பிடிக்கப்பட்டது ஏன்?

பேச நினைத்த அளவிலே - வார்த்தை
தற்கொலை செய்துகொண்டது ஏன்?

எழுத துடித்த நேரத்திலே - எழுத்து
தொலைந்து போனது ஏன்?

காண நினைத்த அளவிலே - கன்னி
களவு போனது ஏன்?

ஊடல் கொள்ளும் நேரத்திலே -உயிர்
உடலை விட்டது ஏன்?

மையல் கொள்ளும் அளவிலே - மயக்கம்
மனதை விட்டுஅகன்றது ஏன்?

சிரிக்க நினைத்த நேரத்திலே - சிந்தனை
சில்லறை வேலைசெய்தது ஏன்?

துயில் கொள்ளும் அளவிலே - துhக்கம்
துhரம் சென்றது ஏன்?

படுக்க நினைத்த அளவிலே - படுக்கை
பள்ளியறையை விற்றது ஏன்?

காட்சி கண்ட நேரத்திலே - கண்
கருத்தை இழந்தது ஏன்?

என்று சோகத்தின் துயர மேகங்கள்
விழிகளில் நுழைந்து இதயத்தை துளைத்த போது
கொண்ட கொள்கையிலிருந்து நழுவி
எடுத்துக் கொண்ட குறிக்கோளிலிருந்து விலகி
நேர்மை தவறி ஒழுக்க வரையறைகளை அழித்து
நல்லவைகளின் சாவுமேட்டில் கெட்டவைகளின்
ராஜ்யத்தை நிறுவி இன்பம் சிம்மாசனம் ஏற
முன்னேற்றம் மணிமுடி தாங்க
ஏற்றங்கள் அரசாள வேண்டி
தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து
பாவக்குழியில் விழுந்து
ஜீவனை அசுத்தப் படுத்திக் கொண்டு
ஆண்டவனின் ராஜ்யத்தில் பிரவேசிக்க
முடியாமல் தடுமாறுபவர்  மற்றொரு வகை .

மேலே சொல்லப்பட்ட விதத்தில்,
உலகத்தில் வாழ்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்:
எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு
பாவம் செய்யாமல் ஜீவனை துhய்மையாக
வைத்துக் கொண்டு இருப்பவர்  ஒரு வகை.

துன்பங்களின் கொடுமையைத் தாங்க முடியாமல்
பாவம் செய்து ஜீவனை அசுத்தப்படுத்தி
வைத்திருப்பவர்  மற்றொரு வகை.

பாவங்கள் செய்து ஜீவனை
அசுத்தப்படுத்தி வைத்திருப்பவர்கள்  தேர்ந்தெடுக்கும் வாசல்
விசாலமாக இருக்கிறது ; விரிந்து இருக்கிறது ;
பெரியதாக இருக்கிறது ; அகலமாக இருக்கிறது;

பாவங்கள் செய்கிறவருடைய செயலானது
    அசுத்தம் நிறைந்ததாகவும் ;
    பொய்மைகள் சேர்ந்ததாகவும் ;
    கபடம் உள்ளதாகவும் ;
    உண்மைகள் அற்றதாகவும் ;
    நியாயங்கள் இறந்ததாகவும் ;
    அசுத்தங்கள் கலந்ததாகவும் ;
    நீதிகள் மரித்ததாகவும் ;
    நல்லவைகள் அழிந்ததாகவும் ;
    தீயவைகள் செயலாற்றுவதாகவும் ;
    மடமைகள் பெற்றதாகவும் ;
    ஒழுக்கங்கள் கழன்றதாகவும் ;
    அறநெறி தவறியதாகவும் ;
    சூதுக்கள் மலர்ந்ததாகவும் ;
    கற்புநெறி விட்டதாகவும் ;
    மாசுக்கள் இணைந்ததாகவும் ;
    அறியாமை சேர்ந்ததாகவும் ;

இருக்கின்ற காரணத்தால் அவர்களுடைய பாதை
செல்லும் வாசல் விசாலமாக இருக்கிறது ;
விரிந்து இருக்கிறது ;
அதன் காரணமாகவே அதிக எண்ணிக்கையில்
இந்த விசாலமான வாசல் வழி சென்று
பாவங்கள் செய்து ஜீவனை அசுத்தப் படுத்தி
கொள்கின்றனர் .

பாவவழி செல்லாமல் உண்மை வழி  செல்பவர்  செயலானது ;
   அடிவருடிகள் கழன்று ஓட ,
   ஆளுமைகள் அடங்கி ஓட ,
   இயலாமைகள் அரற்றி ஓட ,
   ஈரமில்லாநெஞ்சம்  மயங்கி ஓட ,
   உதாசீனசெயல்கள் அழுது ஓட ,
   ஊதாரித்தனங்கள் தலைதெறிக்க ஓட ,
   எகத்தாளம் பிடரிஇடிபட ஓட ,
   ஏமாற்றுவித்தைகள் தலைகழன்று ஓட ,
   ஐதிகம் சுக்குநுறாகி ஓட ,
   ஒடுக்குமுறை மூளைகலங்கி ஓட ,
   ஓட்டைமனம் இதயம்வாடி ஓட ,

செயல்கள் பல செய்து
இந்த அவனியில் உள்ள உயிர்களின்
     உண்மைத் தோழனாய் ;
     உண்மைத் தலைவனாய் ;
     உண்மைக் காவலனாய் ;
     உண்மை வழிகாட்டியாய் ;

    அன்பிற்கு இலக்கணமாய் ;
    ஆணவத்தை அடக்குபவனாய் ;
    இன்பத்திற்கு விளக்கமாய் ;
    ஈகைக்கு எடுத்துக்காட்டாய் ;
    உண்மைக்கு உருவமாய் ;
    ஊருக்கெல்லாம் தலைவனாய் ;
    எளிமையின் பிம்பமாய் ;
    ஏழைகளின் காவலனாய் ;
    ஐயத்திற்கு தெளிவாய் ;
    ஒற்றுமைக்கு உயர்வாய் ;
    ஓர்மத்திற்கு பொருளாய் ;
    ஓளஷத குணமாய் ;
    அஃதே பண்பு ;
அத்தகைய பண்புகளைக் கொண்டவனே
நேர்வழியில் நின்று பாவங்கள் பால் விழாமல்
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பவன் .

இவர்கள் செல்லும் பாதையானது
கஷ்டங்கள் நிறைந்தது ;
கவலைகள் உடையது ;
கரடுமுரடான பாதைகொண்டது ;
இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது
இத்தகைய வாசலை தேர்ந்தெடுப்பவர்  ஒரு சிலரே!

கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு ,
துன்பங்களை தாங்கிக் கொண்டு ,
தோல்விகளை சுமந்து கொண்டு ,
கண்ணீரை சிந்திக் கொண்டு ,
எத்தகைய துன்பம் வந்தாலும் பாவங்கள் செய்யாமல்
உண்மை வழி நின்று , நேர்வழி சென்று ,
ஜீவனை துhய்மையாக வைத்திருப்பவர்
செல்லும் பாதை இடுக்கமாயிருக்கும்
இப்பாதையில் சென்றால் ஆண்டவன் அருளைப் பெறலாம்
என்று உணர்ந்து இதன் வழி செல்பவர்  மிகச் சிலரே!

அதலால் தான் இயேசு பாவங்களைச் செய்யாமல்
ஜீவனை துhய்மையாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்
செல்லும் வாசல் வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது
துன்பங்கள் நிறைந்ததாகவும் ; கவலைகள் தோய்ந்ததாகவும் ;
இருக்கிறது என்கிறார் .

பாவங்களைச் செய்து ஜீவனை அசுத்தமாக வைத்திருப்பவர்கள்
செல்லும் வாசல் விரிவும் , வழி விசாலமும் இருக்கிறது .
பொய்மைகள் சூழப்பட்டதாகவும் ,
கபடங்கள் நிரப்பப்பட்டதாகவும் ,
இருக்கிறது என்கிறார்.

அதனால் தான் இயேசு
பாவங்களைச் செய்யாமல் ஜீவனை
துhய்மையாக வைத்திருக்க வேண்டுபவர்கள்
நினைப்பவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய
வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது என்கிறார் .

அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்து
உட்பிரவேசியுங்கள் என்கிறார்.
இத்தகைய பாதையைத் தேர்ந்தெடுத்து
உட்பிரவேசிக்கிறவர்களால் மட்டுமே
இறைவனுடைய ராஜ்யத்தில் இடம்பெறும்
தகுதியை உடையவர்.

பாவத்தைக் கழிக்க
துன்பம் மிகுந்த பாதையான இடுக்கமான வாசல்
வழியாக உட்பிரவேசியுங்கள் .

பாவத்தைக் கழிக்காமல் இருக்க மேலும்
பாவத்தை பெருக்கிக் கொள்ள இன்பம் மிகுந்த
பாதையான விசாலமான வாசல் வழியாக
செல்லுங்கள் என்கிறார்  இயேசு .



வாலசாமி:

“”வாசலி லேயொரு மேல்வா சலந்த
    வாசலி லேசிறு வாசலுண்டு
 நேச முடன்றிரு வாசலிற் பூட்டு
    நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே””

“””அட்சர மாமௌ னாட்சர மாவது
      ஆனால் நல்ல திறவுகோலாம்
  உச்சித மாகாத் திறந்தா லேயந்த
       உச்சி வழிகாணும் ஞானப்பெண்ணே”””

               --------மதுரை வாலசாமி----பெரியஞானக் கோவை---

நமது உடலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன
இந்த ஒன்பது ஓட்டைகளைத் தான் ஒன்பது வாசல் என்கிறோம் .

வாசல் என்பது ஒரு வழிப்பாதையாகவோ அல்லது
இருவழிப்பாதையாகவோ இருக்கும்
நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்கள்
இதில் எத்தகைய தன்மையைக் கொண்டவை என்பதை நம்

சிந்தனைக் கதவைத் தட்டி
அறிவுக் கத்தியைத் தட்டி
புத்தி சாதுரியத்தைத் தட்டி
விளக்கத்தைப் பெற்று
       உணர்வு பெறுவோம் ;
       மயக்கம் தெளிவோம் ;
       குழப்பம் தவிர்ப்போம் ;
       மறைபொருள் உணர்வோம் ;
       ரகசியங்கள் அறிவோம் ;
       சூட்சுமங்கள் பெறுவோம் ;
       கற்பனைகள் கலைப்போம் ;
       தெளிவு அடைவோம் ;
       கனவுகள் தொலைப்போம் ;
       பொய்மை எரிப்போம் ;
       உண்மையில் கரைவோம் ;

பல்வேறு ரகசியங்களை தன்னுள் கொண்ட ஒன்பது வாசல்கள்
இவை நவ துவாரங்கள் என்றும் அழைக்கப்படும் .

இரண்டு செவிகள் ,
இரண்டு கண்கள் ,
மூக்கின் இரண்டு துவாரங்கள் ,
ஒரு வாய் ,
மூத்திர துவாரமான ஒரு லிங்கம் ,
மல துவாரமான ஒரு குதம் ,

இந்த ஒன்பது வாசல்களைவிட
உயர்ந்த வாசல் ஒன்று உண்டு
அது தான் பத்தாவது வாசல்
இந்த பத்தாவது வாசல் நம்முடைய சிரசில் இருக்கிறது
பத்தாவது வாசலை கடந்து உள்ளே சென்றால் தான்
    ஞானம் அடைய முடியும் ;
    உள்ளம் தெளிவு பெற முடியும் ;
    மடமைகள் விலக முடியும் ;
    அறியாமை ஓட முடியும் ;
    ஆணவம் அழிய முடியும் ;
    கடவுளை உணர முடியும் ;
    கடவுளை காண முடியும் ;
    கடவுளாய் மாற முடியும் ;
    சக்திகள் பெற முடியும் ;
    மோட்சம் அடைய முடியும் ;
    முக்தியை நுகர முடியும் ;
    பிறப்பு இறப்பு சுழற்சியை நிறுத்த முடியும் ;
    அஷ்டமா சித்திகள் அடைய முடியும் ;
    கர்மவினைகளை எரிக்க முடியும் ;
    பாவ-புண்ணியங்களை துறக்க முடியும் ;
    பற்றுகளை கழற்ற முடியும் ;
    ஆசைகளை துறக்க முடியும் ;
    சினத்தை புதைக்க முடியும் ;
    எண்ணத்தை உணர முடியும் ;
    கவலையை கழிக்க முடியும் ;
   முக்காலத்தில் பிரவேசிக்க முடியும் ;
   பரம்பொருளை உணர முடியும் ;

பத்தாவது வாசலைத் திறந்து
உள்ளே பிரவேசிப்பவர்களால் மட்டும் தான்
உள்ளே பிரவேசிக்கும் சூட்சுமத்தை அறிந்தவர்களால் மட்டும் தான்
இறைவனை உணர முடியும் ;
இறைத்தன்மை அடைய முடியும் ;
இறைநிலை பெற முடியும் ;
இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் .

பத்தாவது வாசலைத் திறந்து உள்ளே பிரவேசித்து
இறைவனை உணர இரண்டு முறைகள் உண்டு
முதல் முறை:
ஒன்று கர்மவினைகள் முழுவதும் கழிக்கப்பட்டால்
பத்தாவது வாசல் திறக்கும்.
இரண்டாவது முறை:
பத்தாவது வாசலைத் திறந்து உள்ளே நுழைந்து விட்டால்
கர்மவினைகள் முழுவதும் கழிந்து விடும்.

முதல்முறை நாமே முயன்று பத்தாவது வாசலைத் திறப்பது
இரண்டாவது முறை ஏற்கெனவே பத்தாவது வாசலைத் திறந்து
உயர்நிலை பெற்று இறைநிலை உணர்ந்தவர்கள் நம்முடைய
பத்தாவது வாசலைத் திறப்பது .

இரண்டாவது முறை மிகவும் அரிதான முறை .
தன்னுடைய பத்தாவது வாசலைத் திறந்தவர்கள் அரிது .
அப்படியே பத்தாவது வாசலை திறந்தவர்கள் இருந்தாலும்
அவர்களை நாம் காண்பது அரிது .
அப்படியே நாம் அவர்களைக் கண்டாலும் அவர்கள்
வழிகாட்டுதல் இல்லாமல் நம்முடைய
பத்தாவது வாசலைத் திறப்பது அதை விட அரிது.

பத்தாவது வாசலைத் திறந்து
இறைஉணர்வு பெற்றவர்கள்
மக்களோடு மக்களாய் எளிமையாய் இருப்பார்கள் ;
தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள் ;
ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள் ;
புகழ்ச்சிக்கு மயங்க மாட்டார்கள் ;
செல்வத்தைத் தேடிஓட மாட்டார்கள் ;
விளம்பரத்தை நாட மாட்டார்கள் ;

நாமும் உயர்  தன்மை பெற , இறைநிலை உணர ,
ஆன்மீக தாகம் தீர , பத்தாவது வாசலைத் திறக்க வேண்டும்.
பத்தாவது வாசலைத் திறக்க
பூட்டி வைக்கப்பட்ட பத்தாவது வாசலைத் திறக்க
பூட்டுக்கள் போட்டு பூட்டி வைக்கப்பட்ட
பத்தாவது வாசலைத் திறக்க
நல்ல திறவுகோல் ஒன்று உள்ளது .

ஆன்மீகத்தில் முழுமை அடையவும் ;
இறைநிலையில் இரண்டறக் கலக்கவும் ;
சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் ;
சித்தர்களால் கடைபிடிக்கப்பட்டு இருப்பதும் ;
சித்தர்களால் பாடல்களில் குறிக்கப்பட்டு இருப்பதும் ;
மிக உயர்ந்த திறவுகோலாகிய
மொனவித்தை என்னும் பேசாமந்திரத்தை பயன்படுத்த வேண்டும் .

இருப்பு நிலை மௌனம் கொண்டது
மௌனமாகிய இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
மௌனத்தை தன்னுள் கொண்ட
அரவத்தை எழுப்பாத ; சத்தத்தை உண்டாக்காத ;
ஒலி அமைப்புகளை தன்னுள் கொண்டுள்ளாத ;
ஒரு கலையால் ஒரு வித்தையால் தான் முடியும் .
இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
இருப்பு தன்மைகளைத் தன்னுள் கொண்ட
ஓன்றை கண்டுபிடித்து அதைப் பயன்படுத்தி
செயல்படுத்தினால் மட்டுமே
இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள முடியும்

அதைப்போல மௌனமாகிய இருப்புநிலையுடன்
தொடர்பு கொள்ள மௌனத்தை தன்னுள் கொண்ட
வித்தையைக் கண்டு பிடித்து பயன்படுத்தி
செயல்படுத்தினால் மட்டுமே
இருப்புநிலையுடன் தொடர்பு கொள்ள முடியும்

மௌனத்தை தன்னுள் கொண்ட வித்தையாதலால்
மொளன வித்தை என்று அழைக்கப்படுகிறது .
மந்திரங்கள் அனைத்தும் பேசுபவை
பேசுபவை என்றால் ஒலி அமைப்புகளைக் கொண்டவை என்று பொருள்
ஓலியற்ற இருப்பு நிலையுடன் தொடர்பு கொள்ள
பேசாத ஒலியற்ற மந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் .
அதனால் தான் அந்த வித்தைக்குப் பேசா மந்திரம்
என்ற பெயரும் உண்டு.

இதற்கு மேலும் பல பெயர்கள் உண்டு
இதனை ஆராய்ந்து உணர்ந்து தெளிவு பெறுங்கள் .

இந்த மௌனவித்தை என்னும் பேசா மந்திரத்தை பயன்
படுத்தும் போது பத்தாவது வாசல் திறக்கும் .
பத்தாவது வாசல் எவ்வாறு திறக்கும் ?
மௌனவித்தையைப் பயன்படுத்தும்  போது
பிராணனும் , அபானனும் ஒன்றுடன் ஒன்று மோதி
அக்னிக் கனல் உருவாகிறது .
இந்த அக்னிக் கனல் குண்டலினி சக்தியை எழுப்புகிறது .

குண்டலினி சக்தி விழிப்பெற்று எழுந்து
ஆறு ஆதாரங்களைத் துளைத்து சக்தியைப் பெற்று மேலேறுகிறது .

நம்முடைய கர்ம வினைகள் எந்த அளவுக்கு
கழிந்திருக்கிறதோ அந்த அளவுக்கு ஏற்ப
குண்டலினிசக்தி மேலேறும் ஆறாதாரங்களை கடக்கும்
சக்திகளை அளிக்கும்
ஏழாவது ஆதாரமான  பிரம்மரந்திரத்தில் நுழைந்து
குண்டலினி சக்தி இறைவனுடன் சேர்ந்து இறைநிலை உணர்கிறது
தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது .

ஏழாவது ஆதாரமான பிரம்மரந்திரத்தில்
நுழைய ஒரு வாசலுண்டு

குண்டலினிசக்தி இந்த பத்தாவது வாசல் வழியாகத் தான்
பிரம்மரந்திரத்தில் நுழைய முடியும் ;
இறைவனை அடைய முடியும் ;
இறைத்தன்மை பெற முடியும் ;

மேல் வாசல் என்றால் இறைவனை அடையக்கூடிய
வாசலைக் கொண்ட பிரம்மரந்திரம் என்று பொருள் .

வாசலிலே சிறுவாசல் என்றால் பிரம்மரந்திரத்தில்
நுழைவதற்கான பத்தாவது வாசல் என்று பொருள் .

இந்த வாசல் நெருக்கமும் குறுகியதுமாக இருக்கிறது
இந்த குறுகிய வாசல் வழியாக சென்றால் மட்டுமே
இறைவனை தரிசிக்க முடியும் .

இந்த குறுகிய வாசல் வழியாக
செல்ல நமது கர்ம வினைகள் அனைத்தும்
கழிந்து இருக்க வேண்டும் .
தன்னுடைய ஒன்பது வாசலை உணர்ந்து
கர்மவினைகளைக் கழித்து பத்தாவது வாசலான
குறுகிய வாசலைத் திறந்து
உட்பிரவேசித்து இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் .
இறைத்தன்மை பெற முடியும்
என்கிறார்  மதுரை வாலசாமி .



இயேசு கிறிஸ்து- வாலசாமி:
இயேசு , தன்னுடைய பாவங்களைக் கழிக்க இடுக்கமான
வாசல் வழியாக உட்பிரவேசிப்பவர் கள் மட்டுமே தேவனுடைய
ராஜ்யத்தில் இடம் பெற முடியும் என்கிறார் .

அவ்வாறே , வாலசாமியும் ,
தன்னுடைய கர்மவினைகளைக் கழித்து
பத்தாவது வாசலான குறுகிய வாசலைத் திறந்து
உட்பிரவேசிப்பவர்களால் மட்டுமே இறைவனுடன்
இரண்டறக் கலக்க முடியும் என்கிறார்.
                                                          
      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                            போற்றினேன் பதிவுமுப்பத்துநான்கு  ந்தான்முற்றே “”