February 18, 2022

ஜபம்-பதிவு-688 (சாவேயில்லாத சிகண்டி-22)

 ஜபம்-பதிவு-688

(சாவேயில்லாத

சிகண்டி-22)

 

பீஷ்மரை

வீழ்த்துவதற்காக

செலுத்தப்பட்ட

அம்புகள் ஒன்று கூட

பீஷ்மரை

துளைக்கவே இல்லை

காயத்தை

ஏற்படுத்தவே இல்லை

 

பீஷ்மர் வாள்

எடுத்து சுழன்ற போது

தான் வீரம் என்றால்

என்ன என்பதை

அந்த சுயம்வர

மண்டபத்தில்

இருந்தவர்கள்

தெரிந்து கொண்டனர்

 

காசி மன்னர்

என்ன செய்வது

என்று தெரியாமல்

விழி பிதுங்கி

நின்று கொண்டிருந்தார்

 

அங்கு நடக்கும்

நிகழ்வுகளை

வைத்த கண்

வாங்காமல்

பார்த்துக் கொண்டு

இருந்தார்

 

தன்னுடைய மூன்று

மகள்களுக்காகவே

இத்தகைய நிகழ்ச்சிகள்

நடைபெற்றுக்

கொண்டிருக்கிறது என்ற

வருத்தத்துடன்

நடப்பவைகளை

உன்னிப்பாகக் கவனித்துக்

கொண்டு இருந்தார்

 

தன்னை எதிர்ப்பவர்கள்

யாரும் இல்லை

என்று முடிவு

செய்த பிறகு

பீஷ்மர்

காசி நாட்டு

மன்னனை நோக்கி

பேசத் தொடங்கினார்)

 

பீஷ்மர்:

மன்னா

காசி நாட்டு

இளவரசிகளான

உன்னுடைய மூன்று

மகள்களை

நான் சிறையெடுத்துச்

செல்லப் போகிறேன்

 

நீயாக அவர்களை

அனுப்பி வைக்கப்

போகிறாயா

அல்லது

அவர்களை நான்

வலுக்கட்டாயமாக

சிறை

எடுத்து செல்லட்டுமா

 

பீமதேவன் :

தேவையில்லை

 

இதற்கு மேல்

இழப்புகள் ஏற்பட

நான் விரும்பவில்லை

 

விரும்பத்தகாத

விளைவுகள்

ஏற்பட நான்

விரும்பவில்லை

 

என் மகள்கள்

பொருட்டு இனி

மேலும் யாரும்

காயம்பட நான்

விரும்பவில்லை

 

காசி நாடு அழிவதையும்

காசி நாட்டு மக்கள்

துன்பப்படுவதையும்

பார்த்துக் கொண்டு

சும்மா இருக்க நான்

விரும்பவில்லை

 

என்னுடைய மகள்களை

நானே வழியனுப்பி

வைக்கிறேன்

 

(என்று சொல்லி விட்டு

தன் மகள்களை

நோக்கி பீஷ்மருடன்

செல்லுமாறு கைகளால்

சைகை செய்தார்.

 

கைகளில் வைத்திருந்த

மணமாலைகளை

கீழே வைத்து விட்டு

மூன்று இளவரசிகளும்

பீஷ்மருடன் சென்று

அவருடன் தேரில் ஏறி

அஸ்தினாபுரத்தை

நோக்கி சென்று

கொண்டிருந்தனர்.

 

சில அரசர்கள்

ஒன்று சேர்ந்து

ஆயுதங்களை

ஏந்திக் கொண்டு

தேரில் வந்து

அவரை எதிர்த்தனர்

 

பீஷ்மர் அவர்களுடைய

வில்லை உடைத்து

தேரை உடைத்து

அவர்களுக்கு

காயங்களை ஏற்படுத்தி

அவர்களை தரையில்

விழச் செய்து

எழுந்திருக்க

முடியாமல்

படுத்த

படுக்கையாக்கி விட்டு

தேரில் ஏறி

மூன்று இளவரசிகளுடன்

அஸ்தினாபுரம் நோக்கி

சென்று கொண்டிருந்தார்

 

அப்போது

 

பீஷ்மா எங்கே ஓடுகிறாய்

என் அம்புகளுக்கு

பதில் சொல்லி

விட்டு போ

என்ற குரலைக் கேட்டு

குரல் வந்த திசையை

நோக்கி திரும்பினார்

பீஷ்மர்

 

அங்கு

சௌபால நாட்டு

மன்னன் சால்வன்

நின்று கொண்டிருந்தான்.)

 

சால்வன் :

எதிர்த்தவர்களை

வீழ்த்தி விட்டோம்

காயம் பட்டவர்கள்

ஓடி விட்டார்கள்

இனி திரும்பி

வர மாட்டார்கள்

என்று நினைத்தாயா

பீஷ்மா

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-687 (சாவேயில்லாத சிகண்டி-21)

 ஜபம்-பதிவு-687

(சாவேயில்லாத

சிகண்டி-21)

 

பீஷ்மர் :

நான் முறையற்று

வரவில்லை

 

நீங்கள் முறையற்று

நடந்து இருந்தாலும்

நான் முறையான

செயலைத் தான்

செய்ய வந்திருக்கிறேன்

 

பீமதேவன் :

எதை முறையுள்ள

செயல் என்கிறீர்கள்

 

பீஷ்மர் :

என் தம்பி

விசித்திர வீர்யனுக்காக

உங்கள் மூன்று

பெண்களை

திருமணம்

செய்து வைக்க

வேண்டும் என்பதற்காக

 

திருமண

முறைகளில் ஒன்றான

இராட்சசம்

என்ற முறையில்

மூன்று

இளவரசிகளையும்

சிறையெடுத்துச்

செல்ல வந்திருக்கிறேன்

 

பீமதேவன் :

இது தான்

முறையுள்ள செயலா

 

பீஷ்மர் :

நீங்கள் முறையாக

அழைத்து இருந்தால்

முறையாக மூன்று

இளவரசிகளையும்

அழைத்து சென்றிருப்பேன்

 

நீங்கள் முறையற்று

நடந்து இருந்ததால்

நீங்கள் முறையற்றதாக

நினைத்து கொண்டிருக்கும்

முறையுள்ள

செயல் மூலம்

மூனறு

இளவரசிகளையும்

அழைத்துச்

செல்ல இருக்கிறேன்

 

பீமதேவன் :

அப்படி என்றால்

 

பீஷ்மர் :

உங்கள் மூன்று

பெண்களையும்

சிறை எடுத்து

அஸ்தினாபுரம் கொண்டு

செல்ல வந்திருக்கிறேன்

 

(காசி நாட்டு

மன்னன் பீமதேவன்,

சுயம்வரத்திற்கு

வந்திருக்கும் அரசர்கள்

மற்றும் அனைவருக்கும்

பீஷ்மர் அறைகூவல்

விடுக்கிறார்)

 

பீஷ்மர் :

இனி

இங்கு நடைபெறப்போவது

சுயம்வரம் கிடையாது

எட்டு வகை

திருமணங்களில்

ஒன்றான

ராட்சசம்

 

ஆமாம்

கன்யையின்

பந்துக்களையும்,

காவலாளிகளையும்

யுத்தத்தில் சிதறடித்து

அவளைப்

பலாத்காரமாய்

கொண்டு போகும்

ராட்சசம் என்ற

திருமண முறை

தான் இங்கு இனி

நடைபெறப் போகிறது

 

ஆமாம்

காசி நாட்டு மன்னன்

பீமதேவனின் மூன்று

பெண்களையும்

என்னுடைய தம்பி

விசித்திரவீர்யனுக்கு

மனைவியாக்கி

அஸ்தினாபுத்தின்

அரசியாக்க

சிறை எடுத்து

செல்ல இருக்கிறேன்.

 

அரசே நீங்களோ

உங்கள் படைகளோ

என்னைத் தடுக்க

நினைத்தால் தடுக்கலாம்

இங்கிருக்கும் யார்

வேண்டுமானாலும்

என்னைத் தடுக்கலாம்

என்னை தடுக்க

நினைப்பவர்கள்

யாராக இருந்தாலும்

தடுக்கலாம்

என்னைத் தடுக்க

நினைக்கும் தைரியம்

யாருக்கு இருக்கிறதோ

அவர்கள் தடுக்கலாம்

 

(பீஷ்மர் பேச்சைக் கேட்டு

சுயம்வர மண்டபத்தில்

இருந்த அனைவரும்

கொதித்தெழுந்து

பீஷ்மரை எதிர்ப்பதற்காக

தங்கள் கைகளில்

வாளை ஏந்திக் கொண்டு

பீஷ்மர் முன்னால்

பாய்ந்தனர்.

 

பீஷ்மரின் வில்லில்

இருந்து புறப்பட்ட

அம்பு

 

அவரைத் தாக்க

வந்தவர்களை

காயம் பட்டு கீழே

விழச்செய்தது

 

வாள் ஏந்திய

கைகளின் இரத்தத்தை

சுவைத்துப் பார்த்தது

 

பலருக்கு ஆற

முடியாத காயங்களை

அளித்து விட்டுச்

சென்றது

 

பீஷ்மரின்

அம்பு மழையின்

தாக்கத்தைத் தாங்க

முடியாமல் பீஷ்மரை

எதிர்த்தவர்கள்

அனைவரும் போய்

ஒளிந்து கொண்டனர்

 

பீஷ்மரின் வில்லில்

இருந்து புறப்பட்ட

அம்பானது அவரை

எதிர்த்து நின்றவர்கள்

அனைவரையும்

பதம்பார்த்தது

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-686 (சாவேயில்லாத சிகண்டி-20)

 ஜபம்-பதிவு-686

(சாவேயில்லாத

சிகண்டி-20)

 

பீஷ்மர் :

அழைப்பிதழ் அனுப்பாததால்

அழைக்காமல்

வந்திருக்கிறேன்

காசி நாட்டு மன்னா

 

பீமதேவன் :

அழைக்காத இடத்திற்கு

செல்வது மரியாதை

கிடையாது என்பது

பீஷ்மருக்கு மட்டும்

தெரியாதா

அல்லது

அஸ்தினாபுரத்திற்கே

தெரியாதா

 

பீஷ்மர் :

மரியாதை என்றால்

என்ன என்று

தெரியாதவர்களுக்கு

மரியாதையை கற்றுக்

கொடுக்க வந்திருக்கிறேன்

 

மரியாதை என்றால்

என்ன என்பதை

காசி நாட்டு

மன்னனுக்கு

மட்டும்

கற்றுக் கொடுத்தால்

போதுமா

அல்லது

காசி நாட்டிற்கே

கற்றுத் தர

வேண்டுமா

 

பீமதேவன் :

கற்றுக் கொள்ள

வேண்டிய அவசியமும்

எங்களுக்கு இல்லை

 

ஏனென்றால்

மரியாதை என்றால்

என்ன என்று

எங்களுக்குத் தெரியும்

 

பீஷ்மர் :

மரியாதை தெரிந்து

இருந்தால் சுயம்வரத்திற்கு

அழைப்பிதழ் அனுப்பாமல்

இருந்திருக்க மாட்டீர்கள்

 

பீமதேவன் :

யாருக்கு அழைப்பிதழ்

அனுப்ப வேண்டும்

 

யாருக்கு அழைப்பிதழ்

அனுப்பக் கூடாது

 

என்பது

என்னுடைய

தனிப்பட்ட விருப்பம்

 

பீஷ்மர் :

நீங்கள் மூன்று

பெண்களுக்கு ஒரு

தந்தையாக

இருந்திருந்திருந்தால்

அழைப்பிதழ்

அனுப்புவதும்

அனுப்பாததும்

உங்களுடைய தனிப்பட்ட

விருப்பமாக

இருந்திருக்கலாம்

 

ஆனால் நீங்கள்

மூன்று

இளவரசிகளின் தந்தை

காசி நாட்டின் மன்னர்

 

மன்னர் பிள்ளைகளின்

திருமணம் நாடுகள்

சம்பந்தப்பட்டது

என்பதை மறந்து

விட்டீர்கள்

 

அஸ்தினாபுரம் இரத்த

சம்பந்தமுள்ள

உறவு நாடு

என்பதை மறக்காமல்

இருந்திருந்தால்

அழைப்பிதழ் அனுப்பி

இருப்பீர்கள்

 

அஸ்தினாபுரம்

இரத்த சம்பந்தமுள்ள

உறவு நாடு

என்பதை

மறந்து விட்டீர்கள்

 

அதனால் அழைப்பிதழ்

அனுப்பவில்லை

 

(பீமதேவனுக்கு

அமைச்சர் சொன்னது

தன்னுடைய நினைவுக்கு

வருகிறது.

பீமதேவனும், அமைச்சரும்

ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொண்டனர்)

 

பீமதேவன் :

நான் எதையும்

மறக்க வில்லை

உறவை புதுப்பித்துக்

கொள்ள விரும்பவில்லை

அதனால் தான்

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

 

பீஷ்மர் :

ஆனால்,

என்றுமே அஸ்தினாபுரம்

எந்த உறவையும்

அறுக்க விரும்பியதில்லை

 

பீமதேவன் :

அஸ்தினாபுரத்தின்

உறவே வேண்டாம்

என்று முடிவெடுத்து

விட்ட பிறகு

உறவைப்பற்றி பேச

நான் விரும்பவில்லை

 

நீங்கள்

ஏன் வந்திருக்கிறீர்கள்

 

எதற்காக வந்திருக்கிறீர்கள்

 

என்ன காரணத்திற்காக

வந்திருக்கிறீர்கள்

 

அமைதியாக நடந்து

கொண்டிருக்கும் விழாவை

சீர்குலைக்க வேண்டும்

என்ற எண்ணத்தில்

வந்திருக்கிறீர்களா

 

அல்லது

 

மகிழ்ச்சியுடன் நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்ச்சியினை

மகிழ்ச்சியற்று

ஆக்க வேண்டும்

என்ற எண்ணத்தில்

வந்து இருக்கிறீர்களா

 

அழையாத இடத்திற்கு

முறையற்று ஏன்

வந்திருக்கிறீர்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

ஜபம்-பதிவு-685 (சாவேயில்லாத சிகண்டி-19)

 ஜபம்-பதிவு-685

(சாவேயில்லாத

சிகண்டி-19)

 

கணியர் :

காசி நாட்டு மன்னரின்

மூன்றாவது மகள்

அம்பாலிகை

 

இயற்கையை ரசிப்பவர்

இயற்கை அழகில்

கரைந்தவர்

 

இயற்கையின் எழில்களை

ஓவியத்தில் கொண்டு

வருவதில் வல்லவர்

 

ஓவியத்தின் உயர்

நிலைகளைக் கடந்தவர்

 

அவருடைய ஓவியங்கள்

இயற்கையின்

பல்வேறு பரிமாணங்களை

உயிர்ப்பித்துக் காட்டும்

 

இயற்கை

உயிருள்ளதாக

இருக்கிறது

என்பதை

அவருடைய

ஓவியங்கள் காட்டும்

 

பேசாதவைகள் கூட

அவர் கை பட்டு

ஓவியமானால் பேசும்

 

அவருடைய ஓவியத்தில்

உள்ள நீரோடைகள்

உயிர்

பெற்றவைகளாக ஓடும்

 

அவர் எந்த ஒன்றை

ஓவியமாகத் தீட்டினாலும்

அந்த ஒன்று

உயிர்ப்பெற்று

காலம் காலமாய்

இந்த உலகத்தில்

உயிர் வாழும்

 

காசி நாட்டு மன்னரின்

மூன்றாவது மகள்

அம்பாலிகை

வருகிறார்

வருகிறார்

வருகிறார்

 

(இரண்டு கைகளினாலும்

ஒரு

மணமாலையை

பிடித்துக் கொண்டு

இளவரசி அம்பாலிகை

சுயம்வர மண்டபத்திற்குள்

நுழைந்து

அனைவரையும்

இருகரம் கூப்பி

வணங்கி விட்டு

அம்பை

அம்பிகை

ஆகியோர்

அருகில் சென்று

அவர்களுடன்

நின்று கொண்டார்.

 

காசி நாட்டு

மன்னரின்

மூன்று மகள்களும்

தங்களுடைய

கைகளில்

மணமாலைகளை

ஏந்திக் கொண்டு

தங்களுடைய

கணவரை

தேர்ந்தெடுப்பதற்காக

காத்துக்

கொண்டிருந்தனர்.

 

அப்போது

சுயம்வர மண்டபத்திற்குள்

சலசலப்பு எழுந்தது

பீஷ்மர்

பீஷ்மர்

என்ற பெயரை

அனைவருடைய

வாயும் உச்சரித்தது

 

பீஷ்மர் என்ற

சொல்லே அந்த

சுயம்வர மண்டபம்

முழுவதும்

எதிரொலித்தது

 

கழுத்தைத் தாண்டி

தொங்கும்

தலைமுடியைக்

கொண்டவராய்

கறுப்பு முடியும்

வெள்ளை முடியும்

கலந்த தாடியைக்

கொண்டவராய்

தோளில்

அம்பறாத் துணியும்

கைகளில் வில்லும்

கொண்டவராய்

இடுப்பில் வாளைச்

செருகியவராய்

பயணம் செய்ததால்

அழுக்கு அடைந்த

ஆடைகளை

அணிந்தவராய்

சபை நடுவே

வந்து நின்றார்

பீஷ்மர்.

 

சுயம்வரத்திற்கு

வந்தவர்கள்

பீஷ்மரைப் பார்த்து

ஏளனம் செய்யும்

வகையில் பேசினர்)

 

மன்னர் 1 :

பீஷ்மர் வழி தவறி

வந்து விட்டாரா

 

மன்னர் 2 :

இல்லை அவர்

சரியான வழியைப்

பார்த்துத் தான்

வந்திருக்கிறார்

 

மன்னர் 3 :

சுயம்வர மண்டபம்

என்று தெரிந்து

தான் வந்திருக்கிறார்

சுயம்வரத்தில் கலந்து

கொள்வதற்காக

 

மன்னர் 4 :

அழகான பெண்களைக்

கண்டதும்

தான் பிரம்மச்சாரி

என்பதை

மறந்து விட்டார்

போலும்

 

மன்னர் 5 :

தான் மேற்கொண்ட

சபதத்தை

அஸ்தினாபுரத்திலேயே

விட்டு விட்டு

வந்து விட்டார்

என்று நினைக்கிறேன்

 

மன்னர் 6 :

அழகான பெண்களைக்

காணும் வரை தான்

பிரம்மச்சரியத்தைக்

கடை பிடித்திருக்கிறார்

அழகான பெண்களைக்

கண்டதும்

பிரம்மச்சரியத்தைக்

கைவிட்டு விட்டார்

போலும்

 

(பீஷ்மர் தன் மேல்

விழுந்த

வார்த்தைகளைக்

கேட்டு விட்டு

காசி மன்னர்

பீமதேவனை நோக்கி

பேசலானார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////