August 04, 2024

ஜபம்-பதிவு-1002 மரணமற்ற அஸ்வத்தாமன்-134 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1002

மரணமற்ற அஸ்வத்தாமன்-134

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : விரைவாக வருகிறேன். பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியுடன் வருகிறேன்.

 

வாருங்கள் செல்வோம்

 

கிருபர் : எங்கே செல்கிறோம்

 

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் மேல் போர் தொடுப்பதற்கு

 

கிருபர் : இந்த இரவிலா?

 

அஸ்வத்தாமன் : ஆமாம், இந்த இரவில் தான். போர் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் பகல் என்றும் பார்க்கக் கூடாது, இரவு என்றும் பார்க்கக் கூடாது போர் செய்ய வேண்டும்

 

கிருபர் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது

 

அஸ்வத்தாமன் : இரவில் போர் புரிவது போர் முறை கிடையாது என்றால் இரவில் போர் புரியும் முறையை புதியதாக உருவாக்குவோம், அதை இந்த உலகத்திற்கு அளிப்போம். அதை பாண்டவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவோம்.

 

வாருங்கள் முதலில் பாண்டவர்கள் இருக்கும் பாசறைக்குச் செல்வோம். பிறகு அனைத்தையும் யோசிப்போம்.

 

அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் மூவரும் தென்திசையை நோக்கிச் சென்றனர். பாண்டவர்களுடைய பாசறைக்கு அருகில் வந்தார்கள். களைப்பால் கிருபரும், கிருதவர்மனும் உறங்கி விட்டார்கள். அஸ்வத்தாமன் உறங்கவில்லை.

 

அவர்கள் அமர்ந்திருந்த ஆலமரத்தில் உறங்குகின்ற பல காக்கைகளை ஒரு கோட்டான் வந்து கொன்று குவித்ததை அஸ்வத்தாமன் பார்த்தான். அதை தனக்கு வழங்கப்பட்ட உபதேசமாக அஸ்வத்தாமன் எடுத்துக் கொண்டான். அஸ்வத்தாமன் உறங்கிக் கொண்டிருந்த கிருபரையும், கிருதவர்மனையும் எழுப்பினான்

 

அஸ்வத்தாமன் : இந்தக் கோட்டான் உறங்கிக் கொண்டிருக்கின்ற காக்கைகளை கொன்றது போல் உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவர் படைகளையும், பாஞ்சாலர்களையும் கொல்ல வேண்டும்.

 

கிருபர் : தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றவில்லையா?

 

கிருபர் : ஒருவர் தவறான முறையைப் பின்பற்றுகின்றார் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றக் கூடாது

 

பாண்டவர்கள் தவறான முறையைப் பின்பற்றினார்கள் என்பதற்காக நாமும் தவறான முறையைப் பின்பற்றினால் அவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது

 

பீஷ்மர் துரோணர் கர்ணன் சல்லியன் போன்ற மாபெரும் வீரர்கள் இருந்தும் கௌரவப் படைகள் தோற்றதற்குக் காரணம் அவர்கள் பக்கம் அதர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் தோற்றார்கள்

 

பாண்டவர்கள் பக்கம் தர்மம் இருந்தது அதனால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

பாண்டவர்கள் பக்கம் கிருஷ்ணர் இருந்தார். கடவுள் யார் பக்கம் இருக்கிறாரோ அந்தப் பக்கம் தான் வெற்றி பெறும். அதனால் தான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள்.

 

அஸ்வத்தாமன் : இதை நீங்கள் சொல்கிறீர்களா

 

கிருபர் : இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த உலகமே சொல்கிறது

 

அஸ்வத்தாமன் : நீங்கள் மட்டுமில்லை.

இந்த உலகமும் அறியாமல் சொல்கிறது

உண்மையை உணராமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ளாமல் சொல்கிறது

எது உண்மை என்று தெரிந்து கொள்ளாமல் சொல்கிறது

உண்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் சொல்கிறது

 

ஒருவர் சிந்திக்காமல் சொன்னால்

அதையே உண்மை என்று நினைத்துக் கொண்டு

இந்த உலகம் திரும்ப திரும்பச் சொல்கிறது

 

பணம் பதவி அதிகாரம் படைத்தவர்கள் சொன்னால்

அடிமை நிலையில் ஏற்றுக் கொண்டு சொல்கிறது

 

இந்த உலகத்திற்கு உண்மை எது

பொய் எது என்று தெரியவில்லை

அதனால் உண்மையை பொய்யாகவும்

பொய்யை உண்மையாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது

 

இந்த உலகம் உண்மையானவர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

போலியானவர்களை எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது

அதனால் இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பிவழிகிறது.

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

உண்மை என்று நம்புகிறது

அதைப் பின்பற்றுகிறது

போலியானவர்களும்

போலியான விஷயங்களை

உண்மைக்கு புறம்பான விஷயங்களை

உண்மை என்று மக்களை நம்ப வைத்து விடுகின்றனர்

போலியானவைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையை

உருவாக்கி வைத்து விடுகின்றனர்

இந்த உலகம் போலியானவர்களால் நிரம்பி விட்டதால்

போலியானவர்கள் சொல்லும் பொய்களை

போலியானவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்

உண்மையானவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்

 

உண்மையாக இருப்பவனை

சுயமான சிந்திப்பவனை

சுதந்திரமாக சிந்தித்து செயல்படுபவனை

யாருக்கும் அடிமையாக இல்லாமல் இருப்பவனை

அடிமையாக இருக்க மறுப்பவனை

தன் சொந்த கால்களில் நிற்பவனை

இந்த சமுதாயம் கெட்டவன் என்கிறது

திமிர் பிடித்தன் என்கிறது

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-1001 மரணமற்ற அஸ்வத்தாமன்-133 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1001

மரணமற்ற அஸ்வத்தாமன்-133

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

செத்த பாம்பைக் கூட அர்ஜுனன் நேருக்கு நேராக நின்று

அவனால் கொல்ல முடியவில்லை

சதி செய்து கொன்றான் அவன் எல்லாம் ஒரு வீரன்

வில்லுக்கு விஜயன் என்ற பட்டம் வேறு

 

இத்தகைய கர்ணனை

நட்புக்கு துரோகம் செய்த கர்ணனை

நட்பு என்றால் என்ன என்று தெரியாத கர்ணனை

துரோகியாக உன்னுடன் இருந்த கர்ணனை

இடையில் வந்த கர்ணனை நண்பன் என்றாய்

 

ஆனால் இளமைக்காலம் முதல் இருந்த என்னை

உனக்காக வாழ்ந்து கொண்டிருந்த என்னை

உனக்காக எதுவும் செய்யத் துணிந்த என்னை

சந்தேகம் கொண்டு என்னை

நண்பன் என்ற நிலையில் இருந்து விலக்கி வைத்தாய்

 

சந்தேகம் கொண்டாலும் அழிந்து விடுவர்

நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு தெரியாவிட்டாலும்

அழிந்து விடுவர் என்பதற்கு நீ மிகச் சிறந்த உதாரணம் ஆகிவிட்டாய்

 

துரியோதனன் : நடந்து விட்ட தவறுக்காக என்னை மன்னித்து விடு

 

அஸ்வத்தாமன் : இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன் ஏற்படப் போகிறது

உன் வாழ்க்கை முடியப் போகிறது

இருந்தாலும் நான் உன் நண்பன்

 

நீ உயிர் துறப்பதற்கு முன் உன் கனவுகளை நிறைவேற்றுகிறேன்

நீ என்ன நினைக்கிறாயோ அதை செய்து காட்டுகிறேன்

பாண்டவர்களை அழித்துக் காட்டுகிறேன்.

பாண்டவர்களுக்கு வீரம் என்றால் என்ன என்று காட்டுகிறேன்

வீரன் எப்படி இருப்பான் என்பதைக் காட்டுகிறேன்

நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை

இந்த உலகத்திற்கு நிரூபித்துக் காட்டுகிறேன்

 

நண்பா இது வரை யாரும் செய்யாத செயலை

இந்த உலகம் இது வரை கண்டிராத செயலை

இந்த உலகம் இனி காண முடியாத செயலை

நான் உனக்காக செய்து காட்டுகிறேன்

 

பாண்டவர்களை நான் கொன்று காட்டுகிறேன்

பாண்டவர்களின் படைகளை நான் அழித்துக் காட்டுகிறேன்

 

துரியோதனன் :  நண்பா உன்னை நான் கௌரவர்களின் படைத்தளபதியாக நியமிக்கிறேன்

 

அஸ்வத்தாமன் : பதவிக்காக ஆசைப்படும் பாண்டவர்கள் என்று என்னை நினைத்து விட்டாயா?

 

எந்தப் பதவியும் எனக்குத் தேவையில்லை. எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டவன் கிடையாது.

 

துரியோதனன் :  எனக்காக நீ கௌரவர்களின் படைத்தளபதியாக வேண்டும் இது என் விருப்பம்

 

உன்மேல் நான் கொண்ட சந்தேகம் தவறானது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நண்பனின் வேண்டுகோளாக இதை ஏற்றுக் கொள்.

 

அஸ்வத்தாமன் : அடிபட்டுக் கிடந்தாலும் சிங்கம் சிங்கம் தான். சிறு நரியாகி விடாது.

 

வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டாலும் நீ எனக்கு எப்போதும் நண்பன் தான்

மன்னன் தான்

 

நண்பா நீ என்னைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் சொன்னேன்

என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்

என்பதற்காகத் தான் சொன்னேன்

 

என்னைப் பற்றி தெரியாமல் நீ இறந்து விட்டால்

என்னைப் பற்றி உணராமல் நீ இறந்து விட்டால்

என்னுடைய மதிப்பு உனக்குத் தெரியாமல் போய் விடும்

என்னுடைய நட்பின் பெருமை உனக்குத் தெரியாமல் போய் விடும்

என்ற காரணத்தினால் தான் நான் சொன்னேன்

 

நீ ஒரு அரசன் என்னிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது

நீ என்னிடம் கையேந்தக் கூடாது நீ கட்டளையிடு நான் செய்கிறேன்

 

துரியோதனன் :  அரசன் என்ற முறையில் நான் உனக்கு கட்டளையிட விரும்பவில்லை. நண்பன் என்ற முறையில் நான் கேட்கிறேன்

 

கௌரவர்களின் படைத்தளபதியாக நீ ஆக வேண்டும்

 

அஸ்வத்தாமன் : நீ அரசனாக இருந்தாலும் நண்பனாக இருந்தாலும் உன் பேச்சை நான் என்றும் தட்டியது இல்லை. உனக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் இந்த நண்பன் படைத்தளபதியாக மாட்டானா

 

நான் ஆகிறேன்

கௌரவர்களின் படைத்தலைவனாக ஆகிறேன்

பாண்டவர்களை அழிக்கிறேன்

 

துரியோதனன் :  எனக்கு இது போதும்

 

துரியோதனன் அஸ்வத்தாமனை கௌரவர்களின் படைத்தளபதியாக

நியமிக்கிறான் பீஷ்மர், துரோணர், கர்ணன் ,சல்லியன்

என்ற வரிசையில் அஸ்வத்தாமன்

கௌரவர்களின் படைத்தளபதியாக ஐந்தாவதாக பொறுப்பேற்றான்

 

துரியோதனன் :  பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்கு நான் காத்துக் கொண்டிருப்பேன். உயிரைப் பிடித்துக் கொண்டு உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். விரைவாக வந்து விடு.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1000 மரணமற்ற அஸ்வத்தாமன்-132 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1000

மரணமற்ற அஸ்வத்தாமன்-132

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

நீ என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை

என்னுடைய திறமையைப் பற்றி நீ தெரிந்து கொள்ளவில்லை

நான் சிரஞ்சீவி

மரணமற்றவன் - இந்த

அஸ்வத்தாமன் மரணமற்றவன்

மரணமற்றவன் அஸ்வத்தாமன்

 

இந்த உலகத்தின் கடைசி உயிர் இறந்த பின் தான் இறப்பேன்

என்னுடைய இறப்பு இந்த உலகத்தின் இறப்பு

என் மேல் நீ சந்தேகம் கொள்ளவில்லை எனில்

என்னைப் பற்றி நீ தெரிந்து கொண்டிருப்பாய்

உன்னுடைய சந்தேகம் என்னைப் பற்றித்

தெரிந்து கொள்ள முடியாமல் உன்னைச் செய்து விட்டது

என்னைப் பற்றிய ரகசியங்களை

உன்னைத் தெரிந்து கொள்ள விடாமல் செய்து விட்டது

அதுவே உன்னுடைய அழிவிற்கும் காரணமாகி விட்டது

 

என்னை மட்டும் நீ கௌரவர்களின் படைத் தலைவனாக ஆக்கி இருந்தால்

நீ தான் வெற்றி பெற்று இருப்பாய்

போர் எப்போதோ முடிந்து போய் இருக்கும்

உனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது

 

எனக்கு இறப்பு கிடையாது

என்னை யாராலும் கொல்ல முடியாது

நான் இறந்தால் இந்த உலகம் அழிந்து விடும்

என்ற காரணத்தினால் என்னை கொல்ல மாட்டார்கள்

ஆனால் நான் அனைவரையும் கொல்லலாம்

இந்த விஷயம் தெரிந்த காரணத்தினால் தான்

கிருஷ்ணன் என் மேல் சந்தேகம் வரும் படி செய்தான்

 

நீ என்னைப் பற்றி யோசிக்காமல்

என் நட்பைப் பற்றி யோசிக்காமல்

என் மேல் சந்தேகம் கொண்ட காரணத்தினால்

அடிபட்ட நிலையில் இருக்கிறாய்

 

கர்ணனை விட நான் என்ன விதத்தில் குறைந்து விட்டேன்

 

கர்ணன் உன் மேல் கொண்ட அன்பை

உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்

நீயும் கர்ணனும் கொண்ட அன்பை

இந்த உலகம் உண்மையான அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறது

நட்புக்கு எடுத்துக் காட்டாக உங்கள் நட்பை சொல்லிக் கொண்டிருக்கிறது

 

இந்த உலகம் போலியானவர்களைத் தான்

உண்மையானவர்கள் என்று நம்பும்

உண்மையானவர்களை நம்பாது

 

போலியானவர்கள் பின் தான் செல்லும்

உண்மையானவர்கள் பின் செல்லாது

 

போலியானவர்கள் இந்த உலத்திற்கு வழிகாட்டுவதினால் தான்

உண்மையானவர்கள் மறைக்கப்பட்டு விடுகிறார்கள்

ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள்

 

உண்மையானவர்கள் எத்தகைய தன்மையைப் பெற்றவர்கள் என்பதை

இந்த உலகம் அறிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது

 

உண்மையானவர்கள் ஒதுக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

உண்மையானவர்கள் புறக்கணிக்கப்படுகின்ற காரணத்தினால் தான்

போலியானவர்கள் தலை விரித்து ஆடுகின்றனர்

 

நீ கர்ணன் மேல் வைத்த நட்பு உண்மையாக இருக்கலாம்

ஆனால் கர்ணன் உன் மேல் வைத்த நட்பு

உண்மையான நட்பு கிடையாது

போலியான நட்பு

 

கர்ணனின் மானத்தை நீ காப்பாற்றிய போது

உனக்காக உயிரையே கொடுப்பேன் என்று கர்ணன் கூறினான்

ஆனால் அதை அவன் செய்யவில்லை

உனக்காக அவன் உயிரைக் கொடுக்கவில்லை

அவன் உயிர் எடுக்கப்பட்டது

அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டதற்கு காரணம்

சதிவேலைகள் பாசம் என்று

பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்

உண்மையான காரணம்

அவன் உன் மேல் உண்மையான

நட்பு கொள்ளாமல் இருந்தது தான்

 

கர்ணன் உன் மேல் உண்மையான

நட்பு கொண்டிருந்திருப்பானேயானால்

உனக்காக உயிரைக் கொடுத்து இருப்பான்

ஆனால் அவன் உயிரைக் கொடுக்கவில்லை

 

அவன் உன் மேல் உண்மையான நட்பு கொள்ளவில்லை

அதனால் அவன் உயிர் எடுக்கப்பட்டு விட்டது

 

அவன் ஒரு நம்பிக்கை துரோகி

நண்பன் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவன்

 

கர்ணன் உன் மேல் உண்மையான நட்பு கொண்டு இருப்பான் என்றால்

உனக்கா உயிரையே கொடுப்பேன் என்று சொன்னது உண்மை என்றால்

உனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று சொன்னது உண்மை என்றால்

கர்ணன் என்ன செய்து இருக்க வேண்டும்

 

இந்திரன் கவச குண்டலங்களைக் கேட்டு வந்த போது

அதை இந்திரனுக்குக் கொடுத்திருக்கக் கூடாது

 

அவனுடைய தாய் குந்தி தேவி கேட்ட போது

அர்ஜுனனை மட்டும் தான்கொல்வேன்

மற்ற பாண்டவர்களைக் கொல்ல மாட்டேன்

என்றும்

அர்ஜுனன் மேல் ஒரு முறை தான் நாகாஸ்திரத்தை

பிரயோகம் செய்வேன்

என்று சத்தியம் செய்து தந்து இருக்கக் கூடாது

 

இவ்வளவையும் செய்து விட்டுத் தான்

உனக்கு துரோகம் செய்து விட்டுத் தான்

நட்புக்கு களங்கம் விளைவித்து விட்டுத் தான்

போருக்கு வந்தான்

 

செத்த பாம்பாகத் தான் கர்ணன் போருக்கு வந்தான்

செத்த பாம்பு போருக்கு வந்து என்ன பயன்

ஒரு பயனும் இல்லை.

செத்த பாம்பாக வந்தவனைத் தான் அர்ஜுனன் கொன்றான்

செத்த பாம்பைத் தான் கொன்றான்

அதுவும் நேருக்கு நேராக நின்று கொல்லவில்லை

கர்ணன் ஆயுதம் இல்லாத போது தான் அவனைக் கொன்றான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////