March 16, 2012

இயேசுகிறிஸ்து-குதம்பைச்சித்தர்-மாங்காய்-பதிவு-24




          இயேசு கிறிஸ்து-குதம்பைச் சித்தர்-மாங்காய்-பதிவு-24

                 “”பதிவு இருபத்துநான்கை விரித்துச் சொல்ல
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
தன்னுடைய சொந்தங்கள் யார்  என்றும் ,
அவர்கள் எத்தகைய தன்மையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் ,
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார் :

உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்க வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்
                                                                          --------லுhக்கா - 8 : 20

அதற்கு அவர்  தேவனுடைய வசனத்தைக் கேட்டு , அதன்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்
                                                                             ------லுhக்கா - 8 : 21

ரோஜாவுக்கு அழகு உண்டு
மல்லிகைக்கு மணம் உண்டு

ரோஜாவுக்கு மணம் இல்லை
மல்லிகைக்கு அழகு இல்லை

ரோஜாவுக்கு மணம் இல்லை என்று
அதை ஒதுக்கி விடுவதும் இல்லை
மல்லிகைக்கு அழகு இல்லை என்று
அதைத் தள்ளி விடுவதும் இல்லை

மணம் இல்லையென்ற குறையே
ரோஜாவை உயர்த்திக் காட்டுகிறது
அழகு இல்லையென்ற குறையே
மல்லிகையை உயர்த்திக் காட்டுகிறது

ரோஜாவுக்கு மணம் இல்லை என்ற குறையை
அதன் அழகு நிவர்த்தி செய்கிறது
மல்லிகைக்கு அழகு இல்லை என்ற குறையை
அதன் மணம் நிவர்த்தி செய்கிறது

ரோஜாவின் அழகே அதற்கு மணம்
தேவையில்லை என்பதை நீக்கி விடுகிறது
மல்லிகையின் மணமே அதற்கு அழகு
தேவையில்லை என்பதை நீக்கி விடுகிறது

அதன் நிறையே அதன் குறையை நிவர்த்தி செய்கிறது
அதன் குறையே அதனை விரும்பும் படிச் செய்கிறது
உன்னிடமுள்ள குறை கண்டு கவலைப் படாமல் காரியம் ஆற்று
உன்னுடைய குறையை நிறை பூர்த்தி செய்யும் .
உன்னுடைய நிறை வெற்றி நடை போட வழி செய்யும் .

தன்னிடம்  உள்ள  நிறைகளைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  அழகுணர்ச்சியைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  அறிவின்  மேன்மையைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  உழைப்பின்  தன்மைகளைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  சிந்தனையின்  ஊற்றுகளைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  திறமைகளின்  மதிப்புகளை  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  பொதுநலத்தின்  மேன்மையைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  வீரத்தின்  வெளிப்பாட்டைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  விவேகத்தின்  அடிச்சுவட்டைக்  காணாமல் ;
தன்னிடம்  உள்ள  கற்பனைகளின்  கவித்துவத்தை  உணராமல் ;

தன்னிடம்  இல்லாதவைகளை ;
தன்னிடம்  உள்ள  குறைகளை ;
முன்னேற்றத்திற்கு  முட்டுக் கட்டைகளாய்  உள்ளவைகளை ;
ஏற்றத்திற்கு  தடைக்கற்களாய்  உள்ளவைகளை ;
மட்டும் நிறுத்திக் கொண்டு இல்லாதவைகளுக்காக
அலைந்து திரியும் மானிடர்  இருப்பவைகளை உணராமல் ;
இருப்பவைகளை பயன்படுத்தும் வழி தெரியாமல் ;
இருப்பவைகளை செயல்படுத்தும் வகை உணராமல் ;

காலத்தின் மேல் பழியைப் போட்டு விட்டு
கருத்திழந்து இருக்கின்றனர்;
இவ்வுலக வாழ்க்கையை நடத்துவதற்கு
தேவையானவற்றை அடையும் முறையை அறியாமல்
பெறும் ரகசியத்தை உணராமல் இருப்பவர்களால் - எவ்வாறு
விண்ணுலகத்தின் பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை உணரமுடியும் .
பிதாவைப் பற்றி அறிய முடியும்

பிதாவைப் பற்றி அறிந்தவர் ;
பிதாவின் மகிமைகளை உணர்ந்தவர் ;
பிதாவின் அன்பில் நனைந்தவர் ;
பிதாவின் கருணையில் திளைத்தவர் ;
பிதாவுக்குள் அடைக்கலம் ஆனவர் ;
அவர்களே என் உறவுகள் ; என்னுடைய சொந்தங்கள் ;
மற்றவர்  யாரும் என்னுடைய சொந்தங்கள் இல்லை

பிதாவை கைக் கொள்ளாதவர்  யாரும் என் சொந்தங்கள் இல்லை
பிதாவை உணர்ந்தவர்  மட்டுமே என் சொந்தமாக இருக்க முடியும் .
பிதாவை உணராதவர்  எவ்வாறு என் சொந்தமாக இருக்க முடியும் .

பிதாவை உணராதவர்  யாரும் இல்லை எனில் ,
இந்த உலகத்தில் எனக்கு சொந்தங்கள் இல்லை என்று பொருள் .
பிதாவை உணர்ந்தவர்  யாரேனும் உண்டு எனில் ,
அவர்  மட்டுமே என் சொந்தமாக இருக்க முடியும் .

உலக வாழ்க்கையில் ஈடுபட்டு வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்ய
அலைந்து கொண்டிருக்கும் சாதாரண மனிதர்களை விட
உயர்ந்த மனப்பான்மை கொண்டு , மனது தெளிவு பெற்று ,
பிதாவை உணர்ந்தவர்  மட்டுமே என் சொந்தக் காரராக இருக்க முடியும் .

பெற்றெடுத்த தாயும் , கூடப் பிறந்த சகோதரரும் ,
என்னுடன் உறவு முறையின் மூலம்
பிணைக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக,
அவர்கள் எவ்வாறு என் சொந்தங்களாக ஆக முடியும் .

பிதாவை உணர்ந்தவர்கள் மட்டுமே என்
சொந்தக் காரராக முடியும் என்கிறார்  இயேசு.
 


குதம்பைச் சித்தர் :

""“மாங்காய்ப்பா லுண்டுமலைமே லிருப்போர்க்குத்
              தேங்காய்ப்பா லேதுக்கடி - குதம்பாய்
             தேங்காய்ப்பா லேதுக்கடி
                   -----குதம்பைச் சித்தர்----பெரிய ஞானக் கோவை--
   
ஐம்புலன்கள் எனப்படுபவை ,
மெய் , வாய் , கண் , மூக்கு , செவி ஆகிய ஐந்து ஆகும் .
ஐம்புலன்கள் வழியாக உணரப்படுபவை
பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் .
பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை ,
அழுத்தம் , ஒளி , ஒலி , சுவை , மணம் ஆகியவை ஆகும் .

பஞ்ச தன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக
கீழ்க்கண்டவாறு உணரப்படுகிறது :
     மெய் வழியாக அழுத்தம் ,
     வாய் வழியாக சுவை ,
     கண் வழியாக ஒளி ,
     மூக்கு வழியாக மணம் ,
     செவி வழியாக ஒலி - என்று
ஐம்புலன்கள் வழியாக பஞ்ச தன் மாத்திரைகள் உணரப்படுகிறது .

வாய் என்ற புலன் வழியாக உணரப்படும் சுவையானது
அறுசுவைகளைத் தன்னுள் கொண்டது .
அறு சுவை எனப்படுபவை :
இனிப்பு , புளிப்பு , உவர்ப்பு , துவர்ப்பு , உறைப்பு , கசப்பு ,
ஆகியவை ஆகும் .

ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒரு சுவை உண்டு
சிலவற்றில் சில உணவுப் பொருள்களில்
இரண்டு அல்லது மூன்று சுவைகளும் உண்டு .
அறுசுவையும் அதாவது ஆறு சுவைகளையும்
தன்னுள் கொண்டது மாங்காய் .
இனிப்பு , புளிப்பு , உவர்ப்பு ,துவர்ப்பு , உறைப்பு ,கசப்பு
ஆகிய ஆறு சுவைகளையும் தன்னுள் கொண்டது .
தன்னகத்தே கொண்டது
தன்னகத்தே பெற்றிருப்பது மாங்காய் .
உணவுப் பொருளில் பல்வேறு உணவுப் பொருளில்
பல்வேறு சுவைகளை தேடிப்பிடித்து
சுவைத்து மகிழ விருப்பப்படுபவர்

ஒவ்வொரு சுவையையும் கொண்ட
உணவுப் பொருளைத் தேடி அலைவதை விட ,
அதற்காக நேரத்தை செலவிடுவதை விட ,
அதற்காக காலத்தை விரயமாக்குவதை விட ,
அதற்காக உழைப்பை வீணாக்குவதை விட ,
அதற்காக முயற்சிகளை செயல் படுத்துவதை விட ,
அதற்காக எண்ணத்தை உபயோகிப்பதை விட ,
அதற்காக செயல் திட்டங்கள் வகுப்பதை விட ,
அதற்காக செல்வத்தை செலவழிப்பதை விட ,

அறுசுவையும் அளிப்பது எது என்று உணர்ந்தால்
அறுசுவையும் தன்னுள் கொண்டது எது என்று அறிந்தால்
அறுசுவையும் எதில் கிடைக்கும் என்று தெரிந்தால்

அந்த உணவுப் பொருளை அடையாளம் காண்பதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளை அடைவதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளை பெறுவதன் மூலம் ,
அந்த உணவுப் பொருளிலிருந்து அறுசுவையையும்
ஒருங்கே ஒரு உணவுப் பொருளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் .


அதைப் போல ,
        நமக்குத் தேவையானவைகளை ;
        நாம் விருப்பப் படுபவைகளை ;
        நம்முடைய கனவுகளை ;
        நம்முடைய தேவைகளை ;
        நம்முடைய எதிர்பார்ப்புகளை ;
        நம்முடைய இன்பங்களை ;

தரக்கூடியவரை தேடி அலைந்து ஒவ்வொருவர் முன்பும்
கைகட்டி பெற்றுக் கொள்வதை விட ,

இவை அனைத்தையும் ஒருங்கே அளிப்பவன் ;
இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவன் ;
இத்தகைய தகுதியை உடையவன் ;
இத்தகைய தன்மைகளை உடையவன் ;
யார்  என்று ஆராய்ந்து பார்த்து அவரிடம் கேட்க வேண்டும்.

நம் தேவைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியவர் ;
வந்த மனக்குறைகளை நீக்குபவர் ;
மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துபவர் ;
இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை
என்பதை உணர்ந்து அவரிடம் கேட்க வேண்டும் .

மேலும் தான் அவனாக மாறும் போது
அனைத்தும் கிடைக்கும் ,
பேரின்பத்தின் வாசல் திறக்கும் ,
அமுதம் சுரக்கும் ,
அமுதத்தை உண்டவனுக்கு காலம் என்பது கிடையாது .

 மேலும் பல்வேறு சிறப்புகளை ,
               சத்தியத்தின் நிகழ்வுகளை ;
               உண்மைகளின் சாட்சியங்களை ;
               மறைபொருளின் மர்மங்களை ;
              உணர்வுகளின் வெளிச்சங்களை ;
              மனங்களின் அடித்தளங்களை ;
              உயிர்களின் பிறப்பிடங்களை ;
             இன்பங்களின் எழிலோவியங்களை ;
             துன்பங்களின் சாவுமேடுகளை ;
             நித்தியத்தின் நிரந்தரங்களை ;
            மாற்றங்களின் மறுமலர்ச்சிகளை ;
           விதைக்கப்பட்டவைகளின் விருட்சங்களை ;
           புதைக்கப்பட்டவைகளின் புதுமைகளை ;
           மறைக்கப்பட்டவைகளின் வெள்ளோட்டங்களை ;
           கிரகங்களின் உள்ளிருப்புகளை ;
           பஞ்சபூதங்களின் ஆணிவேர்களை ;
           இயக்கநிலைகளின் ரகசியங்களை ;

கண்டு சிந்தை தெளியலாம் .


நானே அவனாக மாறி பேரின்ப வெள்ளத்தில்
நீந்திக் கொண்டிருப்பவருக்கு
வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யும் சிற்றின்பங்கள்
எதற்கு என்கிறார்  குதம்பைச் சித்தர் .

மாங்காய்ப்பால் என்றால் ,
அழிவில்லாத , சத்தியமான , நிரந்தரமான பேரின்பம் என்று பொருள் .
தேங்காய்ப்பால் என்றால் ,
வாழ்க்கைத் தேவையான சிற்றின்பங்கள் என்று பொருள் .

மலைகள் ஆதாரங்களுடன் ஒப்பிடப் படுகிறது .
ஏழு ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் இந்த ஏழு ஆதாரங்கள் தான்

          மூலாதாரம்  -------- முதல் மலை
           சுவாதிட்டானம் ----- இரண்டாம் மலை
          மணிப்பூரகம்---------- மூன்றாம் மலை
         அனாகதம்------------- நான்காம் மலை
         விசுக்தி----------------- ஐந்தாம் மலை
         ஆக்கினை------------ ஆறாம் மலை
         துரியம்----------------- ஏழாம் மலை

மூலாதாரம் என்ற முதல் மலையில் குடி கொண்டுள்ள
குண்டலினி சக்தியானது ,

ஓவ்வொரு ஆதாரமாக அதாவது ஒவ்வொரு மலையாகக் கடந்து
ஏழாவது மலை என்று சொல்லப்படக்கூடிய
பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்வதே
ஏழுமலையின் தத்துவம்
அதனால் தான் குதம்பைச் சித்தர்  மலைமேல் என்றார்.

மூலாதாரத்தில் குடி கொண்டுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ,
ஆறு ஆதாரங்களைத் துளைத்து ,
அவற்றில் உள்ள சக்திகளைப் பெற்று ,
ஆறு ஆதாரங்களைக் கடந்து படிப்படியாக மேலேறி ,
அதாவது மலை மேல் ஏறி ,
ஏழுமலை என்று அழைக்கப் படக்கூடிய ,
ஏழுமலை என்று உருவகப் படுத்தக்கூடிய ,
ஏழு ஆதாரங்களை கடந்து ,
ஏழாவது மலையான பிரம்மரந்திரத்தில் உள்ள ,
சிவனுடன் குண்டலினி சக்தி இணையும் போது ,
அமுதம் சுரக்கிறது .

மாங்காயை சாப்பிட்டால் எப்படி அறு சுவையும் கிடைக்குமோ?
அதைப் போல உலகத்தில் உள்ள அனைத்தும்
கிடைக்க வழி வகை செய்யும்
அமுதத்தை சாப்பிட்டு விட்டு ,

பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்திக் களிப்பவனுக்கு
அன்றாட வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்யும்
சிற்றின்பங்கள் எதற்கு என்கிறார்  குதம்பைச் சித்தர்.



இயேசு கிறிஸ்து - குதம்பைச் சித்தர்:
இயேசு , வாழ்க்கைத் தேவைகளை நிறைவாக அடைந்து
இன்பத்தை பெறுவதைக் காட்டிலும்
பிதாவை உணர்வது தான் முக்கியம் என்கிறார்.

அவ்வாறே ,
குதம்பைச் சித்தரும் , வாழ்க்கைத் தேவைகளான
சிற்றின்பத்தை அடைந்து இன்பத்தை பெறுவதைக் காட்டிலும்
பேரின்பமான இறைவனை உணர்வது தான் முக்கியம் என்கிறார்.

                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                          போற்றினேன் பதிவுஇருபத்துநான்கு  ந்தான்முற்றே “”


March 14, 2012

இயேசு கிறிஸ்து-காரியாசான்- கதம்நன்று-பதிவு-23

    


                  இயேசு கிறிஸ்து-காரியாசான்- கதம்நன்று-பதிவு-23

                    “”பதிவு இருபத்துமூன்றை விரித்துச் சொல்ல
                                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
இந்த உலகத்தில் உள்ள மக்கள் நலம் பல பெற்று , சிறப்புடன் வாழ ,
பல்வேறு கருத்துக்களை உவமைகளாக்கி ,
வசனங்களால் கூறிய இயேசு ,
ஒரு சிறப்பு மிக்க கருத்தை வசனமாக்கி கூறுகிறார் :

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் ,
அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
                                                                        --------மத்தேயு -5:39

என்ற சிறப்பு மிக்க வசனத்தைக் கூறிய இயேசு,
தான் கூறியவற்றை தானே தன்
வாழ்க்கையில் எவ்வாறு கடைபிடித்தார் ;
எத்தகைய நிலையில் கடைபிடித்தார்  ;
எத்தகைய வழி முறைகளை பின்பற்றி கடைபிடித்தார் ;
அந்த வசனத்திற்கு அவர்  எவ்வாறு உதாரணமாக திகழ்ந்தார் ;
தான் சொன்ன வார்த்தை படி தன் வாழ்வில் எப்படி நடந்து காட்டினார் ;
தான் ஒரு வசனத்தை சொல்லி விட்டு மக்கள்
பின்பற்றினால் பின்பற்றட்டும் , பின்பற்றா விட்டால் போகட்டும்
என்று விட்டு விடவில்லை .
தான் சொன்ன வசனத்தை தன் வாழ்நாளில் தானே கடை பிடிக்கப்
பட வேண்டிய சூழ்நிலை வரும் போது
அதை எவ்வாறு கடைபிடித்தார்  எவ்வாறு கடை பிடித்து
உதாரணமாகத் திகழ்ந்தார்  என்று பார்ப்போம் :



வசனம் - 1 :
பிரதான ஆசாரியன் இயேசுவைப் பற்றியும் ,
அவருடைய சீஷரைப் பற்றியும் விசாரித்தான்
அதற்கு இயேசு கூறியவையும் , நடந்த நிகழ்வுகளையும்
கூர்ந்து ஆராய்ந்து நோக்க வேண்டும் :

நான்  வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன் ; ஜெப
ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடி வருகிற
தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன் ;
அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை.”
                                                  -------------யோவான் - 18 : 20

நான் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டும் ,
மக்களுக்கு தெரியாமல் ஒளிந்து கொண்டும்,
நான் என் கருத்துக்களை பேசவில்லை .
மக்கள் முன் வெளிப்படையாகப் பேசினேன் ;
மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் பேசினேன் ;
நான் ஜெப ஆலயங்களிலும் ,
மக்கள் கூடி இருக்கிற இடங்களிலும் ,
என்னுடைய கருத்துக்களை
இறைவனால் எனக்கு அருளப்பட்டவைகளை ,
இறைவனால் எனக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளை ,
மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளுமாறு ,
மக்கள் அனைவரும் அறிந்து பின்பற்றுமாறு ,
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில்
மக்களிடம் நான் நேரடியாகப் பேசினேன்
நான் மறைவாகவும் அந்தரங்கத்திலும்
தனியாக எதுவும் பேசவில்லை
என்றார்  இயேசு .



வசனம் - 2 :

நீர்  என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான்
சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும் ; நான்
பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார் .”
                                                                 ------யோவான்-18:21

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியது என்ன இருக்கிறது
நான் பேசியவைகள் எவை என்றும்;
அவை எத்தகைய தன்மைகளைக் கொண்டவை என்றும் ;
எவற்றை விளக்குபவை என்றும் ;
எவற்றை சொல்ல வருபவை என்றும் ;
எந்த ரகசியங்களை சொல்ல வருகின்றன என்றும் ;
எந்த ரகசியங்களை கட்டவிழ்த்து விடுகின்றன என்றும் ;
எவற்றை அடைய நமக்கு வழிகாட்டுகின்றன என்றும் ;
எவற்றை அடைந்தால் நம் வாழ்வு நிம்மதி பெறும் என்றும் ;
பாவத்தை போக்கும் வழி எது என்றும் ;
புண்ணியத்தைச் சேர்க்கும் முறை எது என்றும் ;
என் பேச்சில் நான் சொன்னவைகளை - அதைக்
கேட்டவர்களிடத்தில் விசாரியுங்கள்
நான் பேசியவைகளை அவர்கள்
அறிந்திருக்கிறார்கள் என்றார்  இயேசு .



வசனம் - 3 :

இப்படி அவர்  சொன்ன பொழுது சமீபத்தில் நின்ற சேவகரில்
ஒருவன்; பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது
என்று , இயேசுவை ஒரு அறை அறைந்தான்
                                                            -------யோவான்-18:22

நம்மை விட உயர்ந்தவர்கள் ;
நம்மை விட பதவியில் உயர்ந்தவர்கள் ;
நம்மை விட பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் ;
நம்மை விட அதிகாரத்தில் உயர்ந்தவர்கள் ;
நம்மிடம் கேள்வி கேட்கும் போது நாம் பதில் சொல்ல
வேண்டுமே தவிர எதிர்  கேள்வி கேட்கக் கூடாது.

அப்படி எதிர்  கேள்வி கேட்டால் ஆதிக்கவாதிகளுக்கு
கோபம் வருகிறதோ இல்லையோ
அதை வெளிக்காட்டுகிறார்களோ இல்லையோ
அவருக்கு சேவை செய்கிறவர்கள்
தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி ,
தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி ,
தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி ,
தங்கள் மறுப்பை வெளிப்படுத்தி ,
தாங்கள் அவருடைய ஆதரவாளர்  என்று வெளிப்படுத்திக்
கொள்ளும் விதத்தில் செயல்படுவர்
அவரை மனம் குளிர வைக்கும்படி நடந்து கொள்வர் .

பிரதான ஆசாரியன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன
இயேசுவின் நிலையைப் பார்த்து ,
பிரதான ஆசாரியன் அருகில் இருந்த சேவகரில் ஒருவன்
யாரிடம் என்ன பேசுகிறாய் அவர்  நிலை என்ன ?
அவர்  தகுதி என்ன ? அவர்  திறமை என்ன ?
அவர்  பதவி என்ன ? அவரிடமே நீ கேள்வி கேட்கிறாயா என்று
அதன் அடிப்படையில் அதன் நிகழ்வின் அடிப்படையில்
பிரதான ஆசாரியனிடத்தில் இப்படியா
பேசுவது என்று இயேசுவை ஒரு அறைந்தான் .



வசனம்-4 :
இயேசுவின் ஒரு கன்னத்தில் அறைந்து விட்டார்கள் .
இந்த இடத்தில் ; இந்த நிகழ்வில் - இயேசு
மறு கன்னத்தை காட்டி இருக்க வேண்டும் .
இயேசு எத்தகைய செயலை செய்ய வருகிறார் .
இயேசு எத்தகைய சொல்லை சொல்ல வருகிறார்
என்று இப்பொழுது பார்ப்போம் .

இயேசு அவனை நோக்கி : நான் தகாத விதமாய்ப்
பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி ; நான் தகுதியாய்ப்
பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய் என்றார் .”
                                                   --------யோவான்---18:23

இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க வேண்டும் ;
இந்த இடத்தில் ஒன்றை சிந்திக்க வேண்டும் ;
இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூர்தல் வேண்டும் ;
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் ;
என்று சொன்ன இயேசு ,
அவரை ஒரு சேவகன் கன்னத்தில் அறைந்தபோது ,,
அவர்  தன்னுடைய மறு கன்னத்தைக் காட்டியிருக்க வேண்டும் .

ஆனால் அவர்  தன் மறு கன்னத்தைக் காட்டாமல்
என்னை ஏன் அடிக்கிறாய் என்று கேட்கிறார் .
இந்த நிகழ்வின் அடிப்படையில் பார்த்தால் ,
இந்த நிகழ்வின் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்
என்பதை அறிந்து கொள்ள முடியும் .

நீ செய்த செயலால் சமுதாயத்திற்கோ , மற்றவருக்கோ
துன்பத்தையோ , மனக்கவலையோ கொடுத்தால்
உன் செயலால் மற்றவர்  பாதிக்கப்பட்டால் ;
உன் செயலால் சமுதாயம் பாதிக்கப் பட்டால் ;
உன் செயல் சமுதாய சட்டதிட்டங்களுக்கு மீறியதாக இருந்தால் ;
உன் செயல் சமுதாய கோட்பாடுகளை அவமதிப்பதாக இருந்தால் ;
நீ செய்த செயலுக்கு சமுதாயம் தண்டனை கொடுத்தால் ;
ஏற்றுக் கொள்ள வேண்டும் .

உன் செயலால் சமுதாயம் பாதிக்கப் படாமல்

              நன்மையை உண்டாக்குவதாக இருந்தால் ;
              நல்லவைகளை ஏற்படுத்துவதவாக இருந்தால் ;
              நல்லவைகளை செயல்படுத்துவதாக இருந்தால் ;
              நல்வவைகளை உருவாக்குவதாக இருந்தால் ;
              அறிவை தெளிவு படுத்துவதாக இருந்தால் ;
              மனதை துhய்மை படுத்துவதாக இருந்தால் l
               சிந்தனையை செதுக்குவதாக இருந்தால் ;
              அறியாமையை விலக்குவதாக இருந்தால் ;
              உண்மையை உணர்த்துவதாக இருந்தால் ;
              ஏழ்மையை நீக்குவதாக இருந்தால் ;
              வறுமையை மாற்றுவதாக இருந்தால் ;
              ஏற்றத்தை கொடுப்பதாக இருந்தால் ;
              இல்லாமையை போக்குவதாக இருந்தால் ;
              உயர்வை அளிப்பதாக இருந்தால் ;
              உண்மையை நிலை நாட்டுவதாக இருந்தால் ;
              பொய்மையை விலக்குவதாக இருந்தால் ;
              நன்மைகளை விதைப்பதாக இருந்தால் ;
              துன்பங்களை நீக்குவதாக இருந்தால் ;
              துயரங்களை ஒதுக்குவதாக இருந்தால் ;
              மாற்றத்தை கொண்டு வருவதாக இருந்தால் ;
              மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தால் ;

சமுதாயம் தண்டனை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது .
எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் ,
உண்மைக்காக வாதாட வேண்டும் ,

அதாவது,
எவை சரி என்று அறிந்து கொண்டு செயல்பட முடியாதவர்களிடம்
அமைதியாக பெருந்தன்மையோடு நடந்து கொள்வதை விட
அவர்கள் மேல் கோபத்தைக் காட்டுவதே நன்மை தரும்
என்பதைத் தான் இயேசு சொல்ல வருகிறார் .



காரியாசான் :

 “”””கதம்நன்று சான்றாண்மை தீது கழிய
       மதம்நன்று மாண்புஇலார்  முன்னர்  - விதம்நன்றால்
       கோய்வாயின் கீழ்உயிர்க்குஈது உற்றக் குரைத்துஎழுந்த
        நாய்வாயுள் நல்ல தசை”””””
                          --------காரியாசான்----சிறுபஞ்ச மூலம்---

ஒழுக்கம் பால் செல்லாதவர்  மீதும் ;
ஒழுக்கத்தை கடை பிடியாதவர்  மீதும் ;
ஒழுக்கநெறி வழி நில்லார்  மீதும் ;
ஒழுக்கத்தின் மாண்பை உணராதவர்  மீதும் ;
ஒழுக்கம் தவறி நடப்பவர்  மீதும் ;
ஒழுக்கவழி செல்லாதவர்  மீதும் ;
ஒழுக்கம் என்றால் என்ன என்று தெரியாதவர்  மீதும் ;
ஒழுக்கத்தின் சிறப்பை அறியாதவர்  மீதும் ;

தவறு என்று உணர்ந்தும் ,
செய்வது தவறு என்று தெரிந்தும் ,
செயல் முறையற்றது என்று அறிந்தும் ,
வார்த்தை கரை படிந்தது என்று உணர்ந்தும் ,
திருந்தும் மனப்போக்கை கொள்ளாதவர்  மீதும் ;
திருந்த மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்  மீதும் ;

திருந்தும் மனப்பான்மை இல்லாதவர் மீதும் ;
தன்னை திருத்திக் கொள்ளாதவர் மீதும் ;
திருந்தும் வழியை ஆராயாதவர்  மீதும் ;
தான் செய்வது சரி என்று வாதிடுபவர்  மீதும் ;
தன் சொல் சரியானது என்று உரைப்பவர்  மீதும் ;
தன் தவறை ஒத்துக் கொள்ளாதவர்  மீதும் ;
தவறு செய்யாதது போல நடிப்பவர்  மீதும் ;

இழி குணத்தோர் ; ஏமாற்றுவோர் ; மாசு மணம் கொண்டோர்;
போன்ற கீழ் மக்களிடம் எவ்வளவு தான் உரைத்தாலும் ,
அவர்களுக்கு உண்மை நிலை புரியாது ;
உண்மைத் தன்மை தெரியாது ;
நல்லவை எவை என்று தெரியாது ;
அல்லவை எவை என்று புரியாது ;
அத்தகையவரிடம் கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும் .

பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அமைதியாக இருப்பது ;
பொறுமையாக இருப்பது ;
எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது ;
வலிகளை ஏற்றுக் கொண்டு இருப்பது ;
பேச்சுக்களை சகித்துக் கொண்டு இருப்பது ;
செயல்களை தாங்கிக் கொண்டு இருப்பது ;
ஏளன வார்த்தைகளை பொறுத்துக் கொண்டு இருப்பது ;
தீமையையே கொடுக்கும் .
துன்பத்தையே கொடுக்கும் .
வருத்தத்தையே கொடுக்கும் .
மனசஞ்சலத்தையே கொடுக்கும் .
கவலைகளையே கொடுக்கும் .

தீமைகள் ஒழிய ,நன்மைகள் பிறந்து செழிக்க வேண்டுமானால்
ஒழுக்கம் இல்லாத நெஞ்சரிடம்,
திருந்தும் மனப்போக்கு இல்லாத கயவரிடம்,
பெருந்தன்மையோடு நடந்து கொண்டு
கோப்படாமல் இருப்பது கூடாது.
கோபப்பட்டு அவர்கள் செய்தது தவறு என்று
சுட்டி காட்டி வன்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தீது கழிந்து நன்மை பிறக்க வேண்டுமென்றால்
தவறு செய்பவனிடம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாமல்
கோபப்பட்டு வன்மையாக நடந்து கொள்ள வேண்டும் .

அதாவது,
ஒழுக்கமும்,  திருந்தும் போக்கும்
இல்லாத கீழ்மக்களிடம் கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும்.
அத்தகையவரிடம் பெருந்தன்மையோடு
நடந்து கொள்வது தீமையை மட்டுமே கொடுக்கும்
தீமைகள் ஒழிய அவர்கள் மீது வன்மையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவதே நன்மை தரும்
என்கிறார் சிறுபஞ்சமூலத்தில் காரியாசான் .

கள்ளைக் குடித்து குழறும் வாயைக் கொண்ட குடிகாரர்களுக்கு
பசி தீர்க்க உணவு கொடுக்கும் செயலை விட
நம்மைப் பார்த்து குறைத்த படியே ஓடிவரும்
கடிக்க ஓடிவரும் நாயின் வாயில் மாமிசத்தை
வீசுவது நல்லது என்கிறார் .

அறியாது செய்யும் தவறை சுட்டிக் காட்டுவதை விட
அறிந்து செய்யும் தவறை சுட்டிக் காட்ட வேண்டும்
என்பது இதற்கு பொருள்  .


கள் குடிப்பவன் தன் உடம்பை தானே கெடுத்துக் கொள்கிறான்
கள் குடித்தால் உடம்பு கெடும் ;
அவமானங்கள் ஏற்படும் ; நிம்மதி குலையும் ;
கெட்ட பெயர்  ஏற்படும் வாழ்க்கை சிதைக்கப்படும் ;
என்ற விவரங்களை அறியாமல் உணராமல்,
தான் செய்வது தவறு என்று தெரியாமல் ,
தான் செய்வது துன்பத்தை உண்டாக்கும் என்பதை உணராமல் ,
அறியாமல் செய்கிறான் என்பதை உணர்ந்து - அவர்களுக்கு
நீங்கள் செய்வது தவறு என்று எவ்வளவு தான் உரைத்தாலும் ,
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலும் இருக்க மாட்டார்கள்
அத்தகையவர்களுக்கு அறிவுரை சொல்வது தேவையற்றது .

“”கள் குடிப்பவனுக்கு உணவளிப்பது தேவையற்றது “”  -  என்பதற்கு
அறியாதவர்களுக்கு ,
அறிய வேண்டும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ,
உண்மையை அறிய வேண்டும் என்ற மனம் இல்லாதவர்களுக்கு ,
உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற
பக்குவம் இல்லாதவர்களுக்கு,
அறிவுரை சொல்லி ஒரு பயனும் இல்லை என்று பொருள் .

அதாவது ஒருவர்  அறியாது செய்யும் செயலை
சுட்டிக் காட்டுவது தேவையற்றது என்று பொருள் .


கடிக்க வரும் நாய் தெரிந்தே வருகிறது
அதன் கோபத்தை அடக்க வேண்டுமென்றால் ,
அதன் ஆவேசத்தைக் கட்டுப் படுத்த வேண்டுமென்றால் ,
அதன் வேகத்தைக் குறைக்க வேண்டுமென்றால் ,
அதற்கு மாமிசத்தை வீச வேண்டும் .
இல்லையென்றால் அது நம்மையே பதம் பார்த்து விடும்
நாய் செய்வது தெரிந்து செய்யும் தவறு
தெரிந்து செய்யும் தவறை கட்டுப்படுத்த வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை சுட்டிக் காட்ட வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை மாற்ற முற்பட வேண்டும் ;
தெரிந்து செய்யும் தவறை உணர்த்த வேண்டும்

அதைப் போல தெரிந்தே தவறு செய்பவரிடம்
நாம் நம் கோபத்தை வெளிப்படுத்தாவிட்டால்
அது நமக்கு கேடாக முடியும் என்று பொருள் .

ஒழுக்கம் இல்லாத ,நன்னெறி தவறிய ,
திருந்தும்  மனப்பான்மை இல்லாதவரிடம் ,
பெருந்தன்மையோடு நடந்து கொள்ளாமல்
கோபமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார்
சிறுபஞ்ச மூலத்தில் காரியாசான் .



இயேசு கிறிஸ்து - காரியாசான் :

இயேசு , எவை சரி என்று அறிந்து கொண்டு
செயல்பட முடியாதவர்களிடம்
அமைதியாக பெருந்தன்மையோடு நடந்து கொள்வதை விட
அவர்கள் மேல் கோபத்தைக் காட்டுவதே நன்மை தரும் என்கிறார் .

அவ்வாறே ,
காரியாசானும் , ஒழுக்கம் எவை என்று தெரியாதவரிடம்
அவர்கள் முன்னால் மென்மையாக நடந்து கொள்வதை விட
கோபமாக நடந்து கொள்வதே நன்மை தரும் என்கிறார்.

                             
                                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஇருபத்துமூன்று  ந்தான்முற்றே “”