December 01, 2011

ஐயப்பன்-18 படி-பதிவு-9




                         ஐயப்பன் - பதிவு-9

“”பதிவு ஒன்பதை விரித்துச் சொல்ல
                   ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - 18 படி:
சத்தியம் என்றால் என்ன என்றும் சத்தியத்தை அடையும் வழி எது என்றும் உணரத் துடிக்கும் பக்தனின் சத்திய தாகத்தை தீர்த்து வைக்கும் உன்னதமான ஒரு புனித யாத்திரை தான் ஐயப்பனின் சபரிமலை யாத்திரை .
அந்த யாத்திரையில் பக்தன் தன் ஆன்மாவின் துhய்மையையும் வாழ்வின் ரகசியங்களையும் வார்த்தைகளால் குறிப்பிட்டுக் காட்ட முடியாத ஞான விளக்கங்களையும் பெறுகிறான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த புனித யாத்திரையின் ஓரு அங்கமாக இருப்பது தான் 18 படிகளைக் கடந்து சென்று இறைவனை தரிசித்தல் என்ற சடங்காகும் .
18 படிகள் என்று சொல்லக் கூடாது .18 புனிதப் படிகள் என்று சொல் தான் வழக்கில் உள்ளது.
இந்த புனிதமான 18 படிகளைப் பற்றி உலக அளவில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன .அத்தனை கருத்துக்களையும் நாம் ஏட்டினில் எழுத்தாக கொண்டு வந்து நிறுத்த முடியாது .அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட எழுத்திலும் ,சொல்லிலும் உள்ள புனிதமான 18 படிகளின் சிறப்பை மட்டும் இப்பொழுது பார்ப்போம்.

ஆரம்பத்தில் இந்த 18 படிகள் கிரானைட்டால் உருவாக்கப் பட்டிருந்தது பிறகு பஞ்ச உலோகங்கள் எனப்படும்  தங்கம் ,வெள்ளி ,இரும்பு, செம்பு, ஈயம் ஆகியவற்றால் 1985 ல் 18 படிகளை மூடி அலங்காரம் செய்யப்பட்டது.

ஐயப்பனுக்காக 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டு தலையில் இருமுடி தரித்து செல்பவர்களுக்கு மட்டுமே 18 படிகளை கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப் படுகிறது .
18 படிகளில் ஏறுவதற்கு முன் தேங்காயை உடைத்து முதலில் வலது கால் வைத்து மேலே ஏறிய பிறகே 18 படிகளைக் கடந்து செல்கின்றனர்.

புராணங்கள்
18 படிகள் 18 புராணங்களைக் குறிப்பிடுவதாக சிலர்  கூறுகின்றனர் 18 புராணங்கள் எனப்படுபவை:
பிரமம், பத்மம், வைணவம் ,சைவம், பாகவதம், பவிஷ்யம், நாரதீயம், மார்க்கண்டேயம் ,ஆக்னேயம், பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், வாமனம், கூர்மம் ,மத்ஸ்யம், காருடம், ஸ்காந்தம், பிர்மாண்டம் ஆகியவை ஆகும்

மலைகள்
18 படிகள் சபரிமலையில் உள்ள 18 மலைகளைக் குறிப்பதாக சிலர் கூறுகின்றனர் .
 18 படியில் உள்ள ஒவ்வொரு படியும் ஒவ்வொரு மலையைக் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது .18 மலைகள் எனப்படுபவை:
பொன்னம்பலமேடு,  கெண்டமலை ,நாகமலை ,சுந்தரமலை ,சிற்றம்பலமேடு, கல்கிமலை ,மாதங்கமலை ,மயிலாடும்மேடு, ஸ்ரீபாதமலை ,தேவன்மலை, நிலைக்கல்மலை ,தலைப்பாறைமலை ,நீலிமலை, கரிமலை, புதுச்சேரிமலை ,காளைகெட்டிமலை ,இஞ்சிப்பாறைமலை, சபரிமலை ஆகியவை 18 மலைகளாகும்.
சாதாரண பக்தனால்  18 மலைகளைக் கடந்து செல்ல முடியாது என்பதால் 18 படிகளை 18 மலைகளாகக் கொண்டு 18 மலைகளை வழிபட்டு கடந்து செல்லும் ஒரு வாய்ப்பாகவே அமைந்திருப்பது 18 படிகளின் சிறப்பாகும்

வீடுபேறு
மனிதன் வீடுபேறு அடைவதற்கு அதாவது முக்தி அடைவதற்கு அவன் கடக்க வேண்டிய 18 படிகளைத் தான் இந்த 18 படிகள் குறிப்பிடுகின்றன என்றும் சிலர்  சொல்லுகிறார்கள்.

வீடு பேறு என்றால் என்ன என்ற விளக்கத்தை முதலில் பார்ப்போம்:
வீடு என்றால் இடம் நாம் எங்கே உட்கார்ந்து இருக்கிறோம் தரையிலே உட்கார்ந்து இருக்கிறோம்.
தரை எங்கே இருக்கிறது உலகத்தில் இருக்கிறது ;
உலகம் எங்கே இருக்கிறது பிரபஞ்சத்தில் இருக்கிறது;
பிரபஞ்சம் எங்கே இருக்கிறது சுத்தவெளியில் இருக்கிறது;
சுத்தவெளி அது தான் வீடு ,அதற்கு ஒரு வீடு இல்லை , வீடு இல்லாத வீடு

மனிதனின் அறிவு உயர்ந்து தன்னை அறிந்து  கொள்ளும் நிலையில் அறிவே தெய்வமாக, இருப்பு நிலையாக ,மெய்ப்பொருளாக காட்சியளிப்பதை அறியும் அறிவாக அறியும் பேறு பெற்றால் அது தான் வீடுபேறு எனப்படும்.

வீடுபேறை விளக்கும் வகையில்  18 படிகள் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தப் படுகிறது:

முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற  மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற  சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர்  உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர்  கூறுகின்றனர்.

தத்துவம்
18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து  கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .

அதாவது 18 படிகளில் ஒவ்வொரு படியாக ஐயப்ப பக்தர்  அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.

1ம் படி-காமம்                        11 ம் படி----இல்லறப்பற்று
2ம் படி----குரோதம்           12 ம் படி----புத்திரபாசம்   
3 ம் படி---லோபம்               13 ம் படி----பணத்தாசை
4 ம் படி---மோகம்                14 ம் படி---பிறவி வினை
5 ம் படி---மதம்                      15 ம் படி----செயல்வினை
6 ம் படி---மாச்சர்யம்           16 ம் படி----பழக்கவினை
7 ம் படி---வீண்பெருமை  17 ம் படி----மனம்
8 ம் படி---அலங்காரம்         18 ம் படி-----புத்தி
9 ம் படி---பிறரை இழிவுபடுத்துதல்
10 ம் படி---பொறாமை



18 ம் படிக்கு மேலும் பலப்பல விளக்கங்கள் சொல்லப்படுகிறது அதைப்பற்றியும் நாம் பார்ப்போம்:--
தமிழ் இலக்கியங்கள்
தமிழ் இலக்கியங்களில் எண் 18 ஒரு முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது
பிங்கள நிகண்டு 18 தேவர்களையும் ,18 தர்ம சாஸ்திரங்களையும் ,18 யுகங்களையும், 18 குற்றங்களையும் பற்றி பேசுகின்றது.
மூலகுரு சுருக்கமும் ,அகத்தியர்  பரிபாஷையும் 18 மொழிகளைக் குறிக்கின்றன.
அகஸ்தியர்  கௌமுதி 18 நோய்களைக் குறிப்பிடுகின்றது.
அகஸ்தியர்  வைத்திய சூரணம் 18 ஜாதிகளைப் பற்றி இயம்புகிறது.
சுப்பிரமணியர்  ஞானம் 18 யுகங்களை விவரிக்கின்றது.
தாண்டகம் 18 வகையான இசைக்கருவிகளைப் பற்றி பேசுகிறது.
தமிழில் 18 மெய்யெழுத்துக்கள் இருக்கிறது.

தமிழ் ஆதாரங்கள் பெரும்பாலும் பதிணென் சித்தர்கள் என்ற பதினெட்டுச் சித்தர்  வரிசையைக் குறிப்பிடுகின்றன

சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் 18 என்ற எணணுக்கு  ஒரு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டு ஒரு முக்கியமான எண்ணாகக் கருதப்படு வருகிறது
மச்சமுனி என்ற சித்தர்  18 மூலிகைகளைப் பற்றி தன்னுடைய மச்சமுனி - மெய்ஞ்ஞானப் பெருநுhல்காவியம்- 800 - என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்

சித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்க்கண்ட 18 உறுப்புக்களைக் கொண்டதாகும் என்று சொல்லப்படுகிறது :
பஞ்ச பூதங்கள் 5 :- நிலம் ,நீர் , நெருப்பு, காற்று, விண்
ஞானேந்திரியங்கள 5: - மெய், வாய் ,கண், மூக்கு, செவி
பஞ்ச தன் மாத்திரைகள் 5: - அழுத்தம் ,ஒலி, ஒளி, சுவை ,மணம்
இவற்றோடு 3: -மனம் ,புத்தி, அகங்காரம் என்று மொத்தம் 18

உலக அளவில்
பதினெட்டுச் சூனியங்களின் கோட்பாட்டின் நிலைகளை அசங்கரும் ,திக் நாகரும் வரிசைப் படுத்தி இருப்பதாக சசிபூஷண்தாஸ் குப்தா தன்னுடைய நுhலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சீன புராண இலக்கியங்களின் படி 18 லோஉறன்கள் (அருகதர்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ராஸேஸ்வர தரிசனம் என்ற புத்தகத்தில் பாதரசத்தை 18 முறைகளில் விரிவு படுத்தும் செய்தி பேசப்படுகிறது.
ஷ்யாம் சுந்தர்  கோஸ்வாமி என்பவர்  சாண்டில்ய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் . அதன்படி நம் தேகத்தில் 18 இடங்களில் உணர்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன.

இந்தியா
தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது.
ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது.
பாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது.
குருஷேத்திரப் போர்  18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில்  18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர்  கூறுகின்றனர்.
பகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்கள் 18 படிகளைக் குறிப்பிடுவதாக சிலர்  கூறுகின்றனர்.
18 ஆகமங்கள் உள்ளது.

சோதிடம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் கேதுவைக் குறிக்கிறது .
அது ஞானக்காரகன் ,மோட்சக்காரகன் என்று அழைக்கப்படுகிறது கேது ஞானத்தைக் குறிக்கும் ஒரு கோளாகும்.
எனவே 18 என்ற எண்ணும் உயர்ந்த ஞானத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.

நவக்கிரகம்
18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் நவக்கிரகங்களைக் குறிக்கிறது
நவக்கிரகங்கள் எனப்படுபவை சூரியன் ,சந்திரன் ,செவ்வாய், புதன் ,குரு, சுக்ரன், சனி, ராகு ,கேது ஆகியவை ஆகும்
நவக்கிரகங்கள் தான் மனிதனுடைய வாழக்கையில் நடைபெறக்கூடிய இன்பம், துன்பம், அமைதி ,பேரின்பம் என்ற பல்வேறு நிலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது நவக்கிரகங்கள் தான் ஒரு மனிதனை ஆட்டி வைக்கிறது என்று சோதிடம் கூறுகிறது.

சூட்சும ரகசியம்
நவக்கிரகங்கள் இயக்கநிலையில் உள்ளது இயக்க நிலை கழிந்தால் அதாவது இயக்க நிலை கடந்து சென்றால் இருப்பு நிலை அடையலாம் அதைப் போல் 18 படி என்ற இயக்க நிலையை கடந்து யார்  ஒருவர்  செல்கின்றாரோ அவரே இருப்பு நிலை என்று சொல்லப்படுகின்ற மெய்ப்பொருளாகிய ஐயப்பனை அடையலாம் என்பதே 18 படிகளை கடப்பதற்கும் ஐயப்பனை தரிசிப்பதற்கும் இடையே உள்ள சூட்சும ரகசியம் ஆகும்  

முடிவான கருத்து
உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் 18 என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நிலை விழிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் 18 படிகள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்

அடுத்து ஐயப்பனை தரிசனம் செய்யும் முறையை பற்றி பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
              போற்றினேன் பதிவுஒன்பது தான்முற்றே

No comments:

Post a Comment