இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-உடையார்முன்-பதிவு-11
“”பதிவு பதினொன்றை விரித்துச் சொல்ல
ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
இயேசு கிறிஸ்து :
குடும்பத்தில் உள்ளவர்கள் ,
உறவு முறைகள் ,
நெருக்கமான நண்பர்கள் ,
நெருக்கமில்லாத நண்பர்கள் ,
வீட்டிச் சுற்றி இருந்தவர்கள்,
வீட்டைச் சுற்றி இருந்து விட்டு சென்றவர்கள் ,
அலுவலகத்தில் உடன் பணி புரிவோர் ,
ஏதேனும் விழா நடத்தினால்,
விழாவுக்கு நம்மை வரும்படி அழைத்தால்,
நாம் செய்ய வேண்டியவை யாவை ? என்பதை இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் கூறுகிறார் :
வசனம்-1:
“நீ அழைக்கப் பட்டிருக்கும் போது போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே , உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும் போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு கனமுண்டாகும்.”
-----லுhக்கா - 14 : 10
பணம் பல வழிகளில் அடைந்து உயர்ந்தாலும் ;
செல்வச் செழிப்பில் திளைத்து மகிழ்ந்தாலும் ;
தொழில்கள் பல செய்து வெற்றி பெற்றாலும் ;
நிலங்கள் பலவற்றை வாங்கி வைத்திருந்தாலும் ;
வீடுகள் பலவற்றை கட்டி , நல்ல நிலைதனை அடைந்தாலும் ;
அறிவாளி என்று பலர் பாராட்டினாலும் ;
புத்திசாலி என்று பலர் சிறப்பித்தாலும் ;
ஏவல் செய்வதற்கு பணியாள் பல வைத்திருந்தாலும் ;
பதவி சுகத்தில் திளைத்தாலும் ;
அதிகார போதையில் மிதந்தாலும் ;
சமுதாயம் உயர்ந்தோன் என்று அடையாளக் குறி வைத்து
அழைக்கக் கூடிய தகுதிகள் பல பெற்றாலும் ;
பிறர் உங்களை கையெடுத்து கும்பிடும் அளவுக்கு
மதிப்பு உங்களுக்கு இருந்தாலும் ;
திருமணம் சடங்கு விழாக்களுக்கு சென்றால் ,
அமர்வதற்கு என்று வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் நாற்காலிகளில் ,
கடைசி வரிசையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொள்ள வேண்டும் .
விழாவை நடத்துவோர் ,
விழாவை நடத்துபவருடைய குடும்பத்தார் ,
விழாவை நடத்துபவருடைய உறவினர்கள் ,
விழாவை நடத்துபவருடைய சுற்றத்தார் ,
நம்மை அடையாளம் கண்டு கொண்டு
அன்பாகவும் , அமைதியாகவும் ,பண்பாகவும்
முன் வரிசையில் வந்து அமருங்கள் என்று நம்மை கேட்பார்கள் .
நாம் அதை மறுத்தால் ,
அவருடைய கோரிக்கையை , ஏற்க மணமில்லாமல் ,
கடைசி வரிசையிலேயே அமர்ந்து கொள்கிறேன் என்று சொன்னால்,
அவர்கள் அன்பின் மேலிட்டால்
அன்பு அதிகமாகி நம்மை
நம்முடைய கையைப் பிடித்து இழுத்துச் சென்று முன் வரிசையில் அமர வைப்பார்கள் .
இந்தக் காட்சியைக் காண்பவர்கள் ,
இந்தக் காட்சியைக் காணும் அன்பர்கள் ,
விழாவிற்கு வந்தவர்கள் ,
விழாவை சிறப்பிக்க வந்தவர்கள் ,
நம்மை ஆச்சரியக் கண் கொண்டு
வியப்பு மேலிட்டால் பார்த்து ,
சிறப்பான தகுதிகள் பலவற்றை கொண்டவராக இருப்பார் ;
சமுதாயத்தில் உயர்ந்தவராக இருப்பார் ;
விழாவுக்கு வந்திருப்பவர்களில் சிறந்தவராக இருப்பார் ;
சமுதாய அங்கீகாரத்தை பெற்றவராக இருப்பார் ;
அவ்வளவு பெற்றும் அவர் அமைதியாக, அடக்கமாக ,
எந்த விதமான ஆடம்பரமும் இல்லாமல் ,பின் வரிசையில் அமர்ந்திருக்கிறார்;
எவ்வளவு உயர்ந்தவர் இவர் ,
மனதில் சிறந்தவர் இவர் ,
அடக்கத்தில் அருமையானவர் இவர் - என்று
இந்த சமுதாயமும் , சமுதாய மக்களும் விழாவுக்கு வந்திருப்பவர்கள் ;
அவரை நம்மை போற்றி புகழ்வார்கள் ;
ஆச்சரியக் கண் கொண்டு பார்ப்பார்கள்;
அதிசயத்தில் திளைப்பார்கள் ;
இதைத் தான் இயேசு ,
தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்கிறார் .
வசனம் -2,3 :
“ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப் பட்டிருக்கும் போது , பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே ; உன்னிலும் கனமுள்ளவன் ஒரு வேளை அவனால் அழைக்கப் பட்டிருப்பான்.”
------லுhக்கா - 14 : 8
“அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து; இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போக வேண்டியதாயிருக்கும்.”
--------லுhக்கா - 14 : 9
நாம் நம்மை தாழ்த்திக் கொண்டு கடைசி வரிசையில் அமராமல் ,
ஆணவத்தை மண்டையில் ஏற்றிக் கொண்டு ,
கர்வத்தை மனத்தில் பதித்துக் கொண்டு ,
அறிவில் தெளிந்தவன் ;
ஆன்மீகத்தில் உயர்ந்தவன் ;
இன்பத்தைத் துய்ப்பவன் ;
ஈகையில் சிறந்தவன் ;
உண்மையே பேசுபவன் ;
ஊருக்கெல்லாம் உழைப்பவன்;
எளிமையில் விளங்குபவன் ;
ஏழ்மைக்கு உதவுபவன் ;
ஐயத்தை விளக்குபவன் ;
ஓற்றுமையை உணர்த்துபவன் ;
ஓர்மையில் தெளிந்தவன் ;
ஓளஷதத்தில் சிறந்தவன் ;
எஃதையும் வெல்லுபவன் ;
என்று தன்னை நினைத்துக் கொண்டு ,
அறிவு தெளிவு பெறாமல் ,
சிந்தனை சீர்திருத்தம் பெறாமல் ,
முன் வரிசையில் சென்று அமர்ந்தால் ,
நம்மை விட உயர்ந்தவர் யாரேனும் விழாவுக்கு வந்தால் ,
விழாவை நடத்துவோர் நாற்காலி இல்லை அமர இடம் தேவை - என்ற
காரணங்களைக் காட்டி நம்மை பின் வரிசையில் உள்ள நாற்காலியில்
சென்று அமரச் சொல்வர் .
விழாவுக்கு வந்திருப்போர் ,
இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் ,
வினாக் குறிகளை விழிகளில் தேக்கிக் கொண்டு பார்க்கும்;
சுட்டெரிக்கும் சுடர் நெருப்பில் நமது மனம் வெந்து சாம்பலாகும் ;
அவமானத்தால் தலை கவிழும் ;
இதயம் உடையும்;
கோபம் எழ நேரம் பார்க்கும் ;
கண்ணீர்த் துளிகள் கண்களை விட்டு
இந்த உலகத்தை எட்டி பார்க்க நேரம் பார்க்கும் ;
அதனால் தான் இயேசு ,
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் என்கிறார் .
வசனம்-4 :
“தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான் , தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான் என்றார்.”
- லுhக்கா - 14 : 11
பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு ,அதிகாரம்- என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை தாழ்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் உயர்த்தப் படுவான் .
பணம் ,பதவி ,புகழ் ,செல்வாக்கு, அதிகாரம்- என்று
பலவற்றை தன்னகத்தே கொண்டிருந்தாலும்
சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் கொள்கிறவன் எவனும்
இந்த சமுதாயத்தால் தாழ்த்தப் படுவான்.
என்கிறார் இயேசு .
திருவள்ளுவர்:
“””””உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்”””””
----திருவள்ளுவர்---திருக்குறள்----
பணம் படைத்தவனிடம் ,
பணம் இல்லாதவன் ,
பணிந்து தான் இருக்க வேண்டும் .
அதிகாரம் உள்ளவனிடம் ,
அதிகாரம் இல்லாதவன் ,
அடங்கித்தான் இருக்க வேண்டும் .
பதவி உள்ளவனிடம் ,
பதவி இல்லாதவன் ,
ஒடுங்கித்தான் இருக்க வேண்டும் .
உயர்ந்தவனிடம் ,
தாழ்ந்தவன் ,
அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .
பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
இவைகள் இல்லாதவன்
பணிந்து ,அடங்கி ,அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .
என்ற எழுதப்படாத ஒரு விதி இந்த சமுதாயத்தில் இருக்கிறது .
அது சமுதாயத்தை மட்டுமில்லை
மக்கள் மனங்களையும் அரித்து விட்டிருக்கிறது .
இதை மாற்ற நினைத்தவர்கள்
சீர்திருத்த முற்பட்டவர்கள் தான்
மாண்டு போனார்களே ஒழிய
சமுதாயம் மாறவில்லை;
மக்கள் திருந்தவில்லை ;
அறியாமை விலகவில்லை ;
அறிவொளி பரவவில்லை ;
சமுதாயம் தன்னுடைய சட்ட திட்டங்களை மாற்றவில்லை ;
சமுதாயம் தன்னுடைய கொடுமைக்கார முகமூடியைக் கழற்றவில்லை ;
பணம் படைத்தவனிடம் ,
அதிகாரம் உள்ளவனிடம் ,
பதவி உள்ளவனிடம் ,
உயர்ந்தவனிடம் ,
உள்ள சமுதாய மேன்மைக்கான
அடையாளக் குறியீடுகள் உள்ளவனிடம்
அவைகள் இல்லாதவன்
பணிந்து ,வணங்கி ,அடங்கி
அடிமையாகத் தான் இருக்க வேண்டும் .
நான் அடங்கிப் போக மாட்டேன் ,
எனக்கு மானம் இருக்கிறது ,
சுயமரியாதை இருக்கிறது ,
தன்மானம் இருக்கிறது ,
என்று வீர வசனங்கள் பேசி ,
கொடுமை கண்டு ஆர்த்தெழுவேன் ;
மடமை முன் மண்டியிட மாட்டேன் ;
சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன் ;
மானத்தை மண்டியிடச் செய்து விட்டு வாழ மாட்டேன் ;
என்று வீண் வசனம் பேசி திரிந்து கொண்டு ,
இந்த அவனியில் எந்த மூலையிலும் சென்று ,
நிம்மதியாக வாழ முடியாது .
பணம் படைத்தவனிடம் பல்லிளிக்கிறது சமுதாயம் ;
பதவி உள்ளவனிடம் அடிபணிகிறது சட்டம் ;
அதிகாரம் உள்ளவனிடம் வளைந்து கொடுக்கிறது நீதி ;
என்ற நிலை இச் சமுதாயத்தில்
இருக்கும் வரை ,
உடையவனிடம் இல்லாதவன்
பணிவாகத் தான் இருக்க வேண்டும் .
அத்தகையை ஒரு நிலையை நம் வாழ்க்கையில்
ஏற்படுத்திக் கொண்டால் தான்
நாம் நம் வாழ்க்கையை
நிம்மதியாக , அமைதியாக ஓட்ட முடியும் .
அதைப் போல ,
அறிவு விளக்கம் பெற்றவனிடம் ;
புத்தி தெளிவு பெற்றவனிடம் ;
ஞானத் தன்மை அடைந்தவனிடம் ;
சிந்தனை சீர்பெற்று விளங்குபவனிடம் ;
கலைகளை கசடறக் கற்றவனிடம் ;
மறைபொருளை மறைப்பின்றி உணர்ந்தவனிடம் ;
சூட்சுமத்தின் ரகசியத்தை அறிந்தவனிடம் ;
இன்பத்தின் இனிமையை அனுபவித்தவனிடம் ;
துன்பத்தைக் களைய படித்தவனிடம் ;
இத்தகைய தன்மைகள் உள்ளவனிடம்
இத்தகைய தன்மைகள் இல்லாதவர்கள்
இத்தகைய தன்மைகளில்
எத்தகைய தன்மையை பெறவேண்டும்
என்று நினைக்கிறார்களோ,
அத்தகையவரிடம் சென்று ,
அன்பாக ,பணிவாக ,அடக்கமாக
உடையவன் முன் இல்லாதவன் எவ்வாறு
தன் வாழ்விற்கு
தேவையான நிம்மதியைப் பெற்றுக் கொண்டு
அமைதியாக இருக்கிறானோ ?
நிம்மதியாக வாழ்க்கையை நடத்துகிறானோ ?
அத்தகைய ஒரு நிலையில் ,
அடிமையாக இருந்து ,
அமைதியாக இருந்து ,
பணிவாக இருந்து ,
தனக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் .
இத்தகைய ஒரு நிலையில் ,
அமைதியாக ,அடக்கமாக , பணிவாக
அடிமையாக இருந்து கற்க முடியாது என்றால்
அவரால் வாழ்க்கையில்
எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியாது .
தனக்குத் தெரியாத ஒன்றை கற்றுக் கொள்ள முயற்சி செய்பவன் சீடன்
கற்றுக் கொள்ள நினைப்பவனுக்கு கற்றுக் கொடுப்பவர் குரு
என்பதை மனதில் கொண்டால் இயற்கையாகவே
அமைதி பணிவு வந்து விடும்
என்கிறார் திருவள்ளுவர் .
இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர்:
இயேசு , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;
தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான் ;
என்கிறார் .
அவ்வாறே
திருவள்ளுவரும் , தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறவன் எவனும் இந்த சமுதாயத்திற்குத் தேவையானவைகளை பெற்றுக் கொள்வதால்,
இந்த சமுதாயத்தால் மதிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் உயர்த்தப்படுவான் ;
தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாமல் , உயர்த்திக் கொள்கிறவன் இந்த சமுதாயத்திற்கு தேவையானவைகளைப் பெற முடியாமல் போவதால் ,
இந்த சமுதாயத்தால் அவமானம் அடையக் கூடிய சூழ்நிலை உருவாகி இந்த சமுதாயத்தால் தாழ்த்தப்படுவான்;
என்கிறார்.
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
போற்றினேன் பதிவுபதினொன் றுந்தான்முற்றே “”
அருமையான தத்துவம்...இதில் ஒரு சந்தேகம் எனக்கு...இக்கருத்துக்கள் கிட்டத்திட்ட ஒரே பொருளை தான் குறிக்கின்றது...யார் முதலில் கூறியிருப்பார்கள் இயேசுவா அல்லது திருவள்ளுவரா?...இந்த கேள்விக்கான காரணம் தமிழ் இனத்தின் தொன்மையை அறியும் நோக்கில் தான்...நன்றி...
ReplyDelete