December 31, 2023

ஜபம்-பதிவு-943 மரணமற்ற அஸ்வத்தாமன்-75 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-943

மரணமற்ற அஸ்வத்தாமன்-75

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கிருஷ்ணர் : அப்படி எந்த ஒன்றை என்னிடம் பெறுவதற்காக வந்தாய்?

 

அஸ்வத்தாமன் : சுதர்சன சக்கரம்!

 

கிருஷ்ணர் : அது எதற்கு உனக்கு?

 

அஸ்வத்தாமன் : நாளை பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சண்டை நடக்கும் போது நீ கண்டிப்பாக பாண்டவர்கள் பக்கம் தான் நிற்பாய்.

 

கிருஷ்ணர் : எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?

 

அஸ்வத்தாமன் : பாண்டவர்கள் உன்னுடைய சொந்த அத்தை மகன்கள் என்ற காரணத்தினால் தான்.

 

கிருஷ்ணர் : என்ன அத்தை மகன்களா?

 

அஸ்வத்தாமன் : ஆமாம்!

 

யாதவர்களின் தலைவனாக இருந்த சூரசேனருக்கு பிருதை என்ற மகளும், வசுதேவர் என்ற மகனும் பிறந்தனர்.

 

சூரசேனன் தான் முன்பே வாக்குக் கொடுத்தபடி பிள்ளை இல்லாமல் இருந்த தனது நண்பனும், மைத்துனனும் அதாவது தந்தையின் சகோதரியின் மகனாக இருந்த குந்தி போஜனுக்கு தனது மகளான பிருதையை சுவீகாரமாகக் கொடுத்தான். பிருதை குந்தி போஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்று அழைக்கப்பட்டாள்.

 

வசுதேவரின் பிள்ளைகள் பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை

குந்தியின் மகன்கள் தர்மர், பீமன், அர்ஜுனன்,

மாதுரியின் மகன்கள் நகுலன், சகதேவன்

 

வசுதேவருக்கு குந்தி உடன் பிறந்த சகோதரி.

இந்த உறவுப்படி பார்த்தால் பலராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் குந்தி அத்தை.

பாண்டவர்கள் என்று அழைக்கப்படும் ஐந்து பேரும் சொந்த மைத்துனர்கள்.

அந்த வகையில் பார்க்கும் போது குந்தி உன்னுடைய சொந்த அத்தை.

பாண்டவர்கள் உன்னுடைய சொந்த மைத்துனர்கள்,

சொந்த அத்தைக்காகவும், மைத்துனர்களுக்காகவும் தான் நீ பாண்டவர்கள் பக்கம் நிற்பாய்.

பாண்டவர்களுடன் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்துப் போரிடுவாய்.

நீ செய்யும் செயலை நியாயப்படுத்த நீதி என்பாய், நியாயம் என்பாய், தர்மம் என்பாய்,

தர்மத்தின் பக்கம் நிற்கிறேன் என்பாய்,

தர்மத்தை காப்பாற்றுவதற்காக பாண்டவர்கள் பக்கம் நிற்கிறேன் என்பாய்,

தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக கௌரவர்களை எதிர்த்து நிற்கிறேன் என்பாய்,

அதர்மத்தை அழிக்கப் போகிறேன் என்பாய்.

அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்டப் போகிறேன் என்பாய்.

ஆனால், நீ உன்னுடைய சொந்த அத்தை மகன்களான பாண்டவர்களுக்காகப் போரிடப் போகிறாய் என்பதும், அதற்காகத் தான் அவர்களுடன் சேரப் போகிறாய் என்பதும் இந்த உலகத்திற்குத் தெரியாது.

இதைப் புரிந்து கொள்ளாத இந்த உலகமும் கிருஷ்ணன் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பாண்டவர்களுடன் சேர்ந்தான் என்று சொல்லும்.

கௌரவர்களை எதிர்த்து நின்றான் என்று சொல்லும்.

ஆனால், நீ உன்னுடைய சொந்த அத்தை மகன்களுக்காக பாண்டவர்களுடன் சேர்ந்தாய், பாண்டவர்களுக்கு நாட்டை பெற்றுக் கொடுக்க பாண்டவர்களுடன் சேர்ந்தாய், கெளரவர்களை எதிர்த்தாய் என்பது இந்த உலகத்திற்கு தெரியவே தெரியாது.

இந்த உலகமும் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்காது.

நீ சொல்வதை அப்படியே நம்பும்.

சுயசிந்தனை இல்லாமல் அப்படியே நம்பும்.

கண்ணை மூடிக்கொண்டு அப்படியே நம்பும்.

கிருஷ்ணர் : நான் பாண்டவர்களுடன் சேரக்கூடாது என்கிறயா?

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment