May 05, 2024

ஜபம்-பதிவு-966 மரணமற்ற அஸ்வத்தாமன்-98 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-966

மரணமற்ற அஸ்வத்தாமன்-98

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


துரியோதனனின் அடிமைகள் இந்த பாண்டவர்கள் என்பதை இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை முட்டி போட்டு இருக்க சொல்லி இருக்கிறான்.


பாண்டவர்களைப் பொறுத்தவரை துரியோதனன் செய்தது சரி தான். ஒரு முதலாளி அடிமைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ? அப்படித் தான் துரியோதனன் நடந்து கொண்டிருக்கிறான்.


இதில் தவறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. துரியோதனன் செய்த செயல் தவறு என்று சொல்ல முடியாது.

துரியோதனன் முதலாளி என்ற நிலையில் அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நட்த்தியிருக்கிறான்

இதில் ஒன்றும் தப்பு இல்லை. அடிமைகளை இந்த சமுதாயம் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே துரியோதனன் தனக்கு அடிமையான பாண்டவர்களை நடத்தினான்.


பாஞ்சாலியும் தருமனால் சூதில் பணயமாக வைத்து தோற்கப்படுகிறாள். அதனால் அவளும் கௌரவர்களுக்கு அடிமை ஆகிறாள். துரியோதனனுக்கு அடிமையாகிறாள். அடிமையானதாலேயே அவளது மேலாடை நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது 

மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை துரியோதனன் அறிந்து வைத்திருந்த காரணத்தினால் துச்சாதனன் மூலம் பாஞ்சாலியை அழைத்து வரச்செய்து அவளுடைய மார்புத் துணியை நீக்கச் சொன்னான்.


மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை இந்த அவையில் இருக்கும் பீஷ்மர், விதுரர், என்னுடைய தந்தை துரோணர், கிருபர், அரசப் பிரநிதிகள்,  அறிஞர்கள், மேதைகள், மக்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். 


இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்து இருந்த காரணத்தினால், 

துரியோதனன் செய்யச் சொன்ன செயல் சரியான செயல் என்ற காரணத்தினாலும், 

துச்சாதனன் செய்த செயல் சரியானது என்ற காரணத்தினாலும் தான், 

துச்சாதனன் பாஞ்சாலியின் மேலாடையை நீக்கும் போது 

அனைவரும் தயவு செய்து நிறுத்து என்று கெஞ்சினார்களே தவிர

அவர்கள் நிறுத்தவுமில்லை,

அவர்களால் நிறுத்தவும் முடியாது.. 


அடிமைகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட ஒன்றாக இந்த சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது இங்கே அமர்ந்திருக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கும், அதிகாரம் கொண்டவர்களுக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் தெரியாதது போல் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


துரியோதனன் கட்டளையின் படி துச்சாதனன் அரசவையில் வைத்து பாஞ்சாலியின்  சேலையை உரியக் காரணம் பாஞ்சாலியை அவமானப்படுத்துவதற்காகக் கிடையாது. பாஞ்சாலியை அடிமைப்படுத்துவதற்காகத் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


ஏனென்றால், அன்று முதல் இன்று வரை மேலாடை அணியும் உரிமை என்பது சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமான உரிமையாக இருந்து கொண்டிருக்கிறது. மேலாடை அணியும் உரிமை அடிமைகளுக்கு கிடையாது.


இந்த உண்மை துரியோதனனுக்கும் தெரியும். இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் 

இந்த சமுதாயம் இருக்கிறது 

இந்த கொடுமையான நிலை நீக்கப்பட வேண்டும். 

இந்த இழிநிலைவான நிலை மாற்றப்பட வேண்டும் 

அதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும்.


சட்டம் கொண்டு வந்து 

இந்த கொடுமையான நிலையை மாற்ற வேண்டும் 

என்று துரியோதனன் பலமுறை சொன்ன போது 

வாய் மூடி மௌனமாக இருந்தவர்கள் 

இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் 

அரச குடும்பத்து பெண் பாதிக்கப்பட்டாள் என்பதற்காகவா?


அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 

இவ்வளவு நாள் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் 

அவர்கள் கண்ணில் படவில்லையா? 

அல்லது 

இந்தக் கொடுமை நிலை அவர்களுக்கு தெரிந்தும் 

தெரியாதது போல் இருந்து விட்டார்களா? 

அல்லது

கண்டும் காணாதது போல் நடந்து கொண்டார்களா? 

அல்லது 

இந்தக் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு 

கல் நெஞ்சம் கொண்டு இருந்தார்களா ?


அரச குடும்பத்து பெண்ணின் மேலாடையை கழட்டும் போது சண்டைக்கு வரும் அவர்கள் அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை இல்லாமல் இருக்கும் போது எங்கே சென்றார்கள்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment