May 05, 2024

ஜபம்-பதிவு-965 மரணமற்ற அஸ்வத்தாமன்-97 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-965

மரணமற்ற அஸ்வத்தாமன்-97

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


விதுரர்  : எந்த நடைமுறையைச் சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : அனைத்தும் தெரிந்தவர் தாங்கள். உங்களுக்குத் தெரியாத உலக நடைமுறை என்று என்ன இருக்கிறது. நான் சொல்லித் தான் அதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 


அனைத்தும் தங்களுக்கே தெரியும்.


பீஷ்மர் :  நீ சொல்வது புதியதாக இருக்கிறது. என்ன நடைமுறையைச் சொல்ல வருகிறாய். எந்த நடைமுறையை துரியோதனன் பின்பற்றி செய்தான் என்கிறாய். புரியும்படிச் சொல்.


அஸ்வத்தாமன் : புரியும் படி விவரமாகச் சொல்வதற்கு நான் ஒன்றும் விதுரர் அளவிற்கு பெரிய அறிவாளி இல்லை. அனைத்தும் அறிந்தவன் இல்லை. எனக்கு தெரிந்த உலக நடைமுறையைச் சொன்னேன். விதுரருக்கே தெரியாத நடைமுறை இந்த உலகத்தில் என்ன இருக்கிறது 


கிருபர் : நீ ஏதோ தவறாக சொல்கிறாய். ஒருவருக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 


அஸ்வத்தாமன் : விதுரருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாது போல் இருக்கலாம். உலக நடைமுறையைச் சொன்னால் துரியோதனன் செய்தது சரியானது என்று ஆகி விடும். என்ற காரணத்தினால் தனக்கு தெரிந்ததை சொல்லாமலும் இருக்கலாம். உண்மையை மறைத்தும் இருக்கலாம்.


பீஷ்மர் : என்ன சொல்ல வருகிறாய் அஸ்வத்தாமா?


அஸ்வத்தாமன் : உலகத்தில் உள்ள நடைமுறையைச் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன்.


பீஷ்மர் : விதுரரே அஸ்வத்தாமன் சொல்லும் உலக நடைமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா?


விதுரர் : அஸ்வத்தாமன் முதலில் சொல்லட்டும். அவன் சொல்வது உலக நடைமுறையில் இருக்கிறதா என்பதையும், அவன் சொல்வது சரியானது தானா என்பதையும், பின்பு ஆராய்வோம். 


அஸ்வத்தாமா நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை முதலில் சொல்.


 அஸ்வத்தாமன் : எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எல்லாம் அறிந்த மேதை விதுரருக்கே தெரியவில்லை என்பது வேடிக்கையான விஷயம். இதை நான் நம்ப வேண்டும் என்று சொல்கிறார். 


இருந்தாலும் நான் சொல்கிறேன். இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். விஷயம் தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் நடிப்பவர்களுக்காகச் சொல்கிறேன்.


சூதாட்டத்தில் தன்னையும் தம்பிகளையும் பணயமாக வைத்துத் தோற்ற தருமனும், அவனுடைய தம்பிகளும் உடனே கௌரவர்களுக்கு அடிமையாகிறார்கள். 


துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.

துரியோதனன் முதலாளியாகிறான், பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.


முதலாளிகளுக்கு அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த உரிமையுண்டு.

இடம், நேரம், காலம், சூழ்நிலை பொறுத்து அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமையை முதலாளிகள் பெற்று உள்ளனர்.


அடிமைகள் மேல் சட்டையைப் போடுவதில்லை. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

அடிமைகள் மேல் சட்டையைப் போடக் கூடாது. மேல் சட்டை போடாமல் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள். அடிமைகள் மேல் சட்டை போடாமல் இருப்பது தான் அவர்கள் அடிமை என்பதற்கு அடையாளம்.


முதலாளிகள் என்ன செயலைச் செய்யச் சொல்கிறார்களோ? அந்த செயலைச் செய்ய வேண்டியது அடிமைகளின் கடமை. 


செய்யவில்லை என்றால் செய்ய வைக்க வேண்டியது முதலாளியின் கடமை. செய்யவில்லை என்றால் தண்டனை கூட கொடுக்கலாம் முதலாளிகள்.

அடிமைகளின் மேல் முதலாளிக்கு முழு அதிகாரம் உண்டு.


அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த முழு உரிமை உண்டு.

அந்த அடிப்படையில் தான் துரியோதனன் தனக்கு அடிமைகளாக பாண்டவர்கள் கிடைத்தவுடன் முதல் காரியமாக அவர்களுடைய சட்டையை கழட்ட சொன்னான்.


பாண்டவர்கள் துரியோதனனுடைய அடிமைகள் என்று இந்த உலகத்திற்குக் காட்ட வேண்டும் என்றால் பாண்டவர்கள் மேல் சட்டை போடக் கூடாது.


துரியோதனின் அடிமைகள் பாண்டவர்கள் என்று 

இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காவும், 


பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்று 

இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


பாண்டவர்களுக்கு இனி துரியோதனன் தான் முதலாளி 

பாண்டவர்கள் அவனுக்கு அடிமைகள் என்று 

இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,  


துரியோதனன் சொற்படி தான் பாண்டவர்கள் கேட்க வேண்டும் என்று 

இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் 


அவர்களுடைய மேல் சட்டையை முதலில் கழட்ட வைத்தான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment