ஜபம்-பதிவு-968
மரணமற்ற அஸ்வத்தாமன்-100
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
சாதாரண குடும்பமும், அரச குடும்பமும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறது. இன்று வேறு ஒரு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு நாளை நம் அரச குடும்பத்திலும் நடக்கும் என்பதை அறியாமல் இருந்தீர்கள். இப்போது நடந்து விட்டது. சத்தம் போடுகிறீர்கள்
வீட்டை திருத்த முயற்சி செய்கிறீர்கள்.
நாட்டை திருத்தினால் வீடு திருந்தும் என்பது தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள்.
பாதிப்பு யாருக்கோ ஏற்படுகிறது என்று கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தீர்கள். உங்களுக்கு ஏற்படும் போது சத்தம் போடுகிறீர்கள்
தவறை துரியோதனன் செய்யவில்லை.
நீங்கள் அனைவரும் செய்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு இனிமேலாவது சமுதாயத்தை திருத்த முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.
சமுதாயம் திருந்தவில்லையா, சமுதாயம் மாறவில்லையா சட்டம் கொண்டு வாருங்கள்.
இந்த செயல் தொடர்கதையாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்
விதுரர் : நீ சொல்வது அவ்வளவு எளிதானது கிடையாது சமுதாயத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. நீ சொன்னதை செய்தால் அரசாங்கத்திற்கே ஆபத்து ஏற்படும்.
ஆட்சிக்கே பாதிப்பு ஏற்படும். சமுதாயத்தில் குழப்பம் தான் மிஞ்சும்.
அஸ்வத்தாமன் : அப்படி என்றால் இங்கே நடப்பதை தவறு என்று சொல்லாமல், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல், வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ளாமல், கோபப்படாமல், சத்தம் போடாமல், அமைதியாக இருங்கள் நடந்து கொண்டிருக்கும் செயலைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
துரியோதனன் : அற்புதம், அபாரம் அஸ்வத்தாமா! உண்மையை அனைவருடைய மனதிலும் ஏறும்படி அடித்துக் கூறி இருக்கிறாய். உரக்கச் சொல்லி இருக்கிறாய்.
இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறாய். இனியும் இவர்கள் நான் செய்தது தவறு என்று சொல்வார்களேயானால், அவர்கள் பாண்டவர்கள் மேல் உள்ள அன்பினால் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்பவன் தான் நண்பன் என்பதை நிரூபித்து விட்டாய் அஸ்வத்தாமா! நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்த சமுதாயத்திற்கு சொன்ன சொற்கள்.
உண்மையைக் கொண்ட சொற்கள். என் மேல் உள்ள களங்கத்தை நீக்கும் சொற்கள். என்னை கெட்டவனாக நினைக்க வைக்க சில சதிகார்களின் வார்த்தைகளை பொய்யாக்கும் சொற்கள். நான் குற்றவாளி இல்லை நல்லவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தும் சொற்கள். நான் செய்த செயல் சரியானது தான் என்பதை நிரூபிக்கும் சொற்கள்.
இந்தத் துரியோதனன் கெட்டவன் இல்லை நல்லவன் என்பதை நிரூபிக்கும் சொற்கள். உலக நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்தச் செயல்களைச் செய்தான் இந்த துரியோதனன் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிக்கும் சொற்கள்.
நண்பா அஸ்வத்தாமா! என் மேல் உள்ள களங்கத்தை நீக்கி விட்டாய். என்மேல் சாட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை நீக்கி விட்டாய். நான் நல்லவன் களங்கமில்லாதவன். நீதி நெறி தவறாதவன், சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவன், உலக நடைமுறைகளைத் தான் பிற்பற்றுபவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி விட்டாய்.
துரியோதனன் செய்த செயல் தவறானது என்று
நாளைய உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும்,
இந்தத் துரியோதனன் செய்த செயல் சரியானது தான் என்று
நாளைய உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,
யாரைக் கண்டும் பயப்படாமல்,
எதனைக் கண்டும் பயப்படாமல்,
அதிகாரவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல்,
பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல்,
ஆதிக்கவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்டாமல்,
துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசினால்
எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்,
உன்னைப் பற்றிக் கவலைப்படாமல்,
உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல்,
உன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்,
நீ பேசிய பேச்சுக்கள் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.
இந்த உலகம் உள்ளவரை, நட்புக்கு இலக்கணமாக உன்னுடைய பெயரே இருக்கும். அப்படி இல்லை என்றால் தேவைப்படுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக வேறு ஒருவர் பெயரை நட்புக்கு இலக்கணமாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
அஸ்வத்தாமன் : நீ என்னை உன்னுடைய உண்மையான நண்பனாக
ஏற்றுக் கொண்டாயோ இல்லையோ எனக்குத் தெரியாது.
ஆனால் நான் உன்னை என்னுடைய
உண்மையான நண்பனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
அதனால் பேசினேன்.
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
----05-05-2024
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment