May 05, 2024

ஜபம்-பதிவு-964 மரணமற்ற அஸ்வத்தாமன்-96 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-964

மரணமற்ற அஸ்வத்தாமன்-96

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் சேலை அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில்)


பீஷ்மர் : துரியோதனா போதும் நிறுத்து !


துரியோதனன் : நான் தவறா செய்து கொண்டிருக்கிறேன் நிறுத்துவதற்கு? 


பீஷ்மர் : தவறு செய்பவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்றும் தெரியாது. செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


துரியோதனன் : யாராவது தவறு செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் போய் சொல்லுங்கள், தவறு செய்யாதீர்கள் என்று.


பீஷ்மர் : தவறுக்கு மேலான தவறை செய்து கொண்டிருப்பதால் தான் உன்னிடம் சொல்கிறேன். செய்த தவறு போதும் . இதற்கு மேல் செய்யாதே என்று. 


துரியோதனன் : அப்படி என்ன தவறை செய்து கொண்டிருக்கிறேன். நிறுத்துவதற்கு?


பீஷ்மர் : பாண்டவர்களுக்கு நீ நடத்தும் கொடுமைகளைச் சொல்கிறேன்.


துரியோதனன் : அறிவு நிறைந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள் நான் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டார்கள். 


அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படித் தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.


பீஷ்மர் : பொறுமைக்கும் எல்லை உண்டு, பொறுமை எல்லை கடந்தால் என்ன  நடக்கும் தெரியுமா?


துரியோதனன் : நான் தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை. ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் 

பொறுமைக்கு எல்லை என்பதே கிடையாது. 


எல்லை என்ற ஒன்று உண்டு என்றால் அது பொறுமையாக இருக்கவே முடியாது. 

நான் வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவர்களை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படி தானே நடத்திக் கொண்டிருக்கிறேன். 


நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என்னுடைய செயலில் என்ன தவறைக் கண்டீர்கள்? 


விதுரர்  : நீ அவமானப்படுத்திக் கொண்டிருப்பது உன் உடன் பிறந்தவர்களை!


துரியோதனன் : எங்களை எப்போது பாண்டவர்கள் உடன்பிறந்தவர்களாக நினைத்து இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை உடன்பிறந்தவர்களாக நினைப்பதற்கு?


விதுரர்  : பாண்டவர்கள் யாரையும் விரோதிகளாக நினைப்பதில்லை.


துரியோதனன் : என்னிடம் நண்பனாக இருப்பதற்குத் தகுதி தேவையில்லை. ஆனால், விரோதியாக இருப்பதற்குத் தகுதி வேண்டும். எந்தத் தகுதியும் இல்லாத பாண்டவர்களை நான் எப்படி விரோதியாக நினைக்க முடியும்.


பாண்டவர்கள் வெற்றி பெற்று கௌரவர்கள் தோற்றால் இப்படி பேசுவீர்களா?

 பாண்டவர்கள் என்பதால் பாசம் ஓடி வருகிறதா?


கிருபர் : யாராக இருந்தாலும் தவறு செய்தால் தவறை தவறு என்று தான் சொல்வோம்! இத்துடன் நிறுத்திக் கொள்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் எந்தத் தவறும் செய்யவில்லை. பிறகு எதற்கு நிறுத்த வேண்டும். நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


விதுரர்  : அஸ்வத்தாமா!  நீயா இவ்வாறு சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : ஆமாம் நான் தான் சொல்கிறேன். இந்த அஸ்வத்தாமன் தான் சொல்கிறேன். துரியோதனன் செய்தது தவறு இல்லை என்று சொல்கிறேன்.


கிருபர் : துரியோதனன் செய்ததை சரி என்கிறாயா?


அஸ்வத்தாமன் : ஆமாம்! துரியோதனன் செய்தது சரி தான். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. துரியோதனன் செய்த செயல் சரியாக இருக்கும் போது அதில் தவறு எப்படி இருக்கும்.


பீஷ்மர் : துரியோதனன், அக்கிரமமான வேலை செய்து கொண்டிருக்கிறான். அதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : அவன் அக்கிரமமான செயல் எதுவும் செய்யவில்லை. 

என்ன செய்ய வேண்டுமோ? அதைச் செய்திருக்கிறான். 

எப்படி செய்ய வேண்டுமோ? அதை சரியாகச் செய்திருக்கிறான்.


விதுரர்  : எதை வைத்து துரியோதனன் செய்வதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்த செயலை வைத்துத் தான்.


கிருபர் : அவன் இரக்கமற்ற செயலை அல்லவா செய்திருக்கிறான்.


அஸ்வத்தாமன் : இந்த சமுதாயத்தில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதைத் தானே செய்திருக்கிறான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment