April 21, 2024

ஜபம்-பதிவு-953 மரணமற்ற அஸ்வத்தாமன்-85 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-953

மரணமற்ற அஸ்வத்தாமன்-85

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :  அர்ஜுனனை உலகத்திலேயே சிறந்த வில்லாளி ஆக ஆக்கிக் காட்டுகிறேன் என்று அர்ஜுனனுக்கு வாக்கு கொடுத்தீர்கள்

 

ஏகலைவன் அர்ஜுனனை விட மிகச் சிறந்த வில்லாளி ஆகி விடக்கூடாது என்பதற்காக ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டு வாங்கி அவனுடைய வாழ்க்கையை அழித்தீர்கள்.

 

தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி கர்ணனுக்கு கல்வியைக் கற்றுத் தராமல் அவனைப் புறக்கணித்தீர்கள்.

 

அர்ஜுனனை விட யாரும் உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக எல்லாச் செயல்களையும் செய்தீர்கள்.

 

அர்ஜுனனுக்கு திறமை இல்லாவிட்டாலும்

அவனை திறமைசாலி என்று வளர்த்து விட்டவர்களில் நீங்களும் ஒருவர்.

 

துரோணர் : தேவையற்றதை பேசுகிறாய்?

 

அஸ்வத்தாமன் : கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றாலும் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றாலும் தேவையற்ற கேள்வி கேட்கிறாய் என்று தான் சமுதாயம் சொல்லும்.

 

அதை நீங்களும் கற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் அதனால் அந்த வார்த்தையையே சொல்கிறீர்கள்.

 

துரோணர் : என்னிடம் பேச வேண்டும் என்று சொல்லி விட்டு

என்னை திட்டிக் கொண்டு இருக்கிறாய்.

 

அஸ்வத்தாமன் :  உங்களை நான் திட்டவில்லை அர்ஜுனன் பேசினால் உங்களுக்கு பிடிக்கும் நான் பேசினால் உங்களுக்குப் பிடிக்காது

திட்டுவது போல் தான் இருக்கும்.

 

உங்களுக்கு அர்ஜுனன் மேல் தான் அன்பு

என் மேல் உங்களுக்கு அன்பு இல்லை.

 

துரோணர் : சீடன் என்ற முறையில் அர்ஜுனன் மேல் அன்பு வைத்து இருக்கிறேன் மகன் என்ற முறையில் உன் மேல் அன்பு வைத்து இருக்கிறேன். உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது

 

அஸ்வத்தாமன் : நீங்கள் சொல்வது உண்மையா?

 

துரோணர் : உண்மை தான்!

 

அஸ்வத்தாமன் : என் மேல் நீங்கள் உண்மையாகவே அன்பு வைத்திருக்கிறிர்கள் என்பதை எப்படி நான் நம்புவது?

 

துரோணர் : அன்பு என்பது ஒரு வார்த்தை. அன்பு என்பது ஒரு உணர்வு

அன்பை எப்படி நிரூபிக்க முடியும்.

 

அஸ்வத்தாமன் : கடவுள் என்பதும் ஒரு வார்த்தை தான். கடவுள் என்பதும் ஒரு உணர்வு தான். கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்ததால் தானே இந்த உலகத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் இருக்கிறார் அவர் அனைத்தையும் படைத்து காத்து அழித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்

 

அதைப் போல் அன்பை நிரூபியுங்கள்

 

இந்த உலகத்தில் பெரும்பாலானவர்கள்

பேச்சில் வீரர்களாக இருக்கிறார்கள்

 

பேச்சில் இருக்கும் வீரத்தை

செயலில் காட்டுவதில்லை

 

எனக்கு பேசிக் கொண்டு இருப்பவர்களைப் பிடிக்காது

செயல் செய்பவர்களைத் தான் பிடிக்கும்

 

என் மேல் உங்களுக்கு அன்பு உண்டு என்றால்

அதை நிரூபித்துக் காட்டுங்கள்

 

துரோணர் : எப்படி காட்ட வேண்டும் என்கிறாய்

 

அஸ்வத்தாமன் : எனக்கு பிரம்மசாஸ்திரம் கற்றுக் கொடுங்கள்

என் மேல் உங்களுக்கு அன்பு இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன்

 

துரோணர் : பிரம்மாஸ்திரத்தைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?

 

அஸ்வத்தாமன் : எதுவும் தெரியாது.

 

துரோணர் : எதுவுமே தெரியாத உனக்கு, எப்படி நான் சொல்லித் தருவது?

 

அஸ்வத்தாமன் : ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அதைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் என்றால், இந்த உலகத்தில் உள்ளவர்களில் ஒருவராலும் இந்த உலகத்தில் உள்ள எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாது.

 

தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்

முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும்

முதலில் கற்றுக் கொடுங்கள் பிறகு தெரிந்து கொள்கிறேன்

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment