July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-91


                ஜபம்-பதிவு-583
          (அறிய வேண்டியவை-91)

காந்தாரி :
“கதாயுதப் போரில் உன்
இடுப்பிற்குக் கீழே
அடிக்க மாட்டார்கள்
என்று எப்படி நீ
நினைக்கிறாய் ?”

துரியோதனன் :
“அது அதர்மச் செயல்
தாயே அதனால்
தான் சொல்கிறேன்”

காந்தாரி :
“தர்மத்தை மீறி
அதர்மச் செயலைப்
புரிந்து கொண்டே
நான் தர்மத்தின்படித்
தான் செய்கிறேன்
என்று சொல்வதே
குருஷேத்திரப் போரின்
முக்கிய அங்கம்
ஆகி விட்டது”

“குருஷேத்திரப் போரில்
தர்மம் இறந்து
எவ்வளவோ நாட்கள்
ஆகி விட்டது
துரியோதனா”

“தர்மத்தின் படி
நடக்கும் கதாயுதப்
போரில் நீ
கலந்து கொண்டால்
நீ தான் வெற்றி
பெறுவாய் உன்னை
யாராலும் வெற்றி
கொள்ள முடியாது
ஆனால் அதர்மத்தின்
படி கதாயுதப் போர்
நடந்தால் எதிரிகள்
உன்னுடைய தொடையை
உடைத்துத் தான்
உன்னைக் கொல்வார்கள்”

துரியோதனன் :
“என்னுடைய
இடுப்பிற்குக் கீழே
தொடையானது
வலிமையற்று இருப்பதும்
இடுப்பிற்கு மேலே
வலிமையுடையதாக
இருப்பதும் யாருக்கும்
தெரியாது தாயே!”

காந்தாரி :
“யாருக்கும் தெரியாது
என்று நீ நினைத்துக்
கொண்டிருக்கிறாய்
அவ்வாறு நினைத்துக்
கொண்டிருப்பது
உன்னுடைய தவறு
துரியோதனா?”

“நீ பிறந்த மேனியாக
என் முன்னால்
வந்து நின்று
என்னுடைய சக்தியைப்
பெற்று விட்டால்
யாராலும் வெல்ல
முடியாத உடலை
நீ பெற்று விடுவாய்
என்ற காரணத்தில் தான்
உன்னுடைய மனதில்
சந்தேகத்தை விதைத்து
இடுப்பிற்குக் கீழே
தொடைப்பகுதியில்
வாழை இலையைக்
கட்டிக் கொண்டு
என் முன்னால்
வந்து நிற்கச் செய்து
இடுப்பிற்குக் கீழே
தொடைப் பகுதி
பலவீனமான பகுதியாக
இருக்கும் படியும்
இடுப்பிற்கு மேலே
உள்ள பகுதியானது
வலிமை மிக்க
பகுதியாகவும் மாறும்படிச்
செய்ததே வாசுதேவ
கிருஷ்ணன் தான்”

“சூழ்ச்சி செய்தது
கிருஷ்ணன் என்று
இருக்கும் போது - அதை
ரகசியம் என்று எப்படி
சொல்ல முடியும்
கிருஷ்ணனுக்கு
தெரிந்தால் இந்த
உலகத்தில் உள்ள
அனைவருக்கும்
தெரிந்த மாதிரி தான் “

“வாசுதேவ கிருஷ்ணன்
சூழ்ச்சி செய்து
பாண்டவர்களைக்
காப்பாற்றுவதற்காக
உன்னுடைய
பலவீனத்தைப்
பயன்படுத்தி உன்னுடைய
தொடையை உடைத்து
உன்னை வீழ்த்துவதற்கு
சதித் திட்டம் தீட்டி
அதை செயல்படுத்தினால்
என்ன செய்வாய்
துரியோதனா “

“உன்னை உன்னால்
காப்பாற்றிக் கொள்ள
முடியும் என்று
நினைக்கிறாயா
உன்னுடைய சாவை
தடுத்து நிறுத்த முடியும்
என்று நினைக்கிறாயா
துரியோதனா “

துரியோதனன் :
“எனக்கு என்ன நடக்க
வேண்டும் என்று காலம்
கணக்கு போட்டிருக்கிறதோ
அதை ஏற்றுக்
கொள்வதற்கு நான்
தயாராக இருக்கிறேன் தாயே!”

“என்னுடைய உடலில்
இறுதி மூச்சு இருக்கும்
வரை பாண்டவர்களை
அழிப்பதற்காகப்
போரிடுவேன் - முன்
வைத்த காலை நான்
என்றும் பின்
வைக்க மாட்டேன்
தொடர்ந்து போரிடுவேன்”

“இழப்புகளால் ஏற்பட்ட
காயங்களின் வலியானது
என்னுடைய மனதை
அழுத்தி வேதனைப்
படுத்திய போதும்
வேதனையின் வலியைப்
பொறுத்துக் கொண்டு
நான் போர்க்களம் சென்று
போரிட இருக்கிறேன்”

“என்னுடைய
உயிரில் கலந்து
உயிர்த்துடிப்பாக இருந்து
என்னை வழிநடத்திய
பாசமானவர்களின்
இழப்புகள் அனைத்தையும்
தாங்கிக் கொண்டு நான்
போர்க்களம் சென்று
போரிட இருக்கிறேன்”

“கதாயுதப் போரில் தர்மம்
வழுவாமல் நான்
போரிடுவேன் - எதிரியும்
அவ்வாறு போரிடுகிறானா
என்று பார்ப்போம்”

“கதாயுதப் போரில்
எதிரி தர்மத்தைக்
கடைபிடித்து சண்டை
செய்யாமல் அதர்மத்தின்
படி நடந்து கொண்டு
என்னுடைய தொடையை
உடைத்து என்னை
காயப்படுத்தி என்னை
கொன்றான் என்றால்
என்னுடைய முடிவு
என்னுடைய
தொடையில் எழுதி
வைக்கப்பட்டிருக்கிறது
என்று பொருள் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment