January 04, 2012

உரோமரிஷி - பஞ்ச பட்சி சாஸ்திரம் - வரலாறு- பதிவு-3





             உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-வரலாறு-பதிவு-3

                         “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                                             ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்வோம் .

பஞ்ச பட்சி சாஸ்திரம் - வரலாறு :


பாடல்-1
     “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                       சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்
               விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                                     வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்
               வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                     கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்
                நன்னாகநான் வெளியாயப் பட்சிவித்தை
                                       நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
                                                                      ------உரோமரிஷி---பஞ்சட்சி சாஸ்திரம்--
   “”””””சொன்னாரே சூரனை சம்மாரம்பண்ணி
                                சுப்ரமண்யக் கல்லோசிவன் உபதேசித்தார்”””””
கொடுமைகள் பல செய்து , தொல்லைகள் பல கொடுத்து , தீய செயல்கள் பல செய்து , அட்டுழியம் தொடர்ந்து செய்து கொண்டிருந்த சூரனை அழித்து அமைதியை உண்டாக்குவதற்காக பார்வதி தேவி தன் சக்தியெல்லாம் ஒன்றாக திரட்டி தன் அம்சமாக வேலை சுப்பிரமணியருக்குக் கொடுத்தார் .

அக்கிரமங்களை வீழ்த்தி , அமைதியை நிலைநாட்ட , சிவபெருமான் -மகிமையை வார்த்தைகளில் சொல்ல முடியாத மிக உயர்ந்த சாஸ்திரமாகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  சுப்பிரமணியருக்கு உபதேசித்து வெற்றி பெறுவதற்கான திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தார் .

இங்கே ஒன்றை நாம் தெரிந்து கொள்வோம் : -
பஞ்சபட்சி சாஸ்திரத்தில் உள்ள வெற்றிக்கான திறவுகோல் என்ன என்று இப்பொழுது பார்ப்போம் .
ஒருவருடைய வாழ்நாளில் நல்ல காலம்  , கெட்ட காலம் என இரண்டு காலங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் .
நல்ல காலத்தில் ஒருவர்  எத்தகைய  தீமையான செயல்கள் செய்தாலும் அவரை எளிதாக யாராலும் வெற்றி கொள்ள முடியாது .அவரை அவ்வளவு எளிதாக யாராலும் தண்டிக்க முடியாது .
ஆனால் அந்த நல்ல நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கெட்ட காலம் நடைபெறும் .

கெட்ட காலம் நடைபெறும் அந்த சரியான காலத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்தினால் எவ்வளவு பலசாலியான எதிரியாக இருந்தாலும் , சக்திகள் பல பெற்ற எதிரியாக இருந்தாலும் , எதிரியை வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் .

இந்த நேரங்களின் சூட்சும ரகிசயங்களை விரிவாக உரைப்பது தான் பஞ்ச பட்சி சாஸ்திரம் .
இத்தகைய சிறப்பு வாய்ந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தைத் தான் சிவபெருமான் முருகனுக்கு உபதேசித்தார் .



”””விண்ணான சூரனை சம்பாரம்செய்து
                    வெகுகாலம்சென்றபின்பு குருமுனிக்கு உபதேசித்தார்””””””
சுப்பிரமணியர்  பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதனை சரியான காலத்தில் பயன்படுத்தி சூரனை அழித்து வெற்றி கொண்டார் .
பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்ட சுப்பிரமிணயர், சூரர்களை அழித்து , ஒழித்து வெகுகாலம் ஆன பின்பு உலகத்திலேயே உயர்ந்த சாஸ்திரங்களில் ஒன்றாகக் கருதப்படும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
முனிவர்களுக்கு எல்லாம் தலைவராகிய ,
முனிவர்களுக்கு எல்லாம் குருவாகிய ,
அகத்திய முனிவருக்கு சுப்பிரமணியர் உபதேசித்தார் .



      “”””””வண்ணான கும்பமுனி பதிணென்பேர்க்கும்
                                   கலந்துஉற வாகியல்லோ உபதேசித்தார்”””””
சித்தர்களின் தலைவராகிய அகத்திய முனிவர் ,
சித்தர்களின் குருவாகிய அகத்திய முனிவர் ,

18 சித்தர்கள் என்று சொல்லப்படக் கூடிய ,
                                 1 நந்தி                        11 காலங்கி
                                2 அகத்தியர்                          12 அழுகண்ணர்
                                 3 புண்ணாக்கீசர்                13 பாம்பாட்டி
                                 4 புலத்தியர்                         14 அகப்பேய்ச் சித்தர்
                                5 பூனைக்கண்ணர்           15 தேரையர்
                                6 இடைக்காடர்                  16 குதம்பைச் சித்தர்
                                7 போகர்                                 17 சட்டநாதர்
                               8 புலிப்பாணி
                              9 கருவூரார்
                              10 கொங்கணர்

இவர்களில் சிலருக்குப் பதில் உரோமரிஷி , கும்பமுனி , மச்சமுனி , கோரக்கர் என்ற பலரையும் கூட்டித் தொகையைப் பதினெட்டாகப் பல பட்டியல்களையும் கொள்வர் .

18 சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட மேலே சொல்லப்பட்டவர்களுக்கு அகத்திய முனிவர்  உபதேசம் பண்ணியதோடு நின்று விடவில்லை. அவர்களுடன் ஒன்றாக கலந்து இருந்து ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படக் கூடிய விளைவுகளையும் ,
கிடைக்கக் கூடிய பலன்களையும் ,
பெறக் கூடிய சக்திகளையும் ,
அவர்களுக்கு வெளிப்பட செயல்படுத்திக் காட்டி செயல் விளைவுத் தத்துவத்துடன் விளக்கி உபதேசித்தார் .



  “””””””நன்னாகநான் வெளியாய்ப் பட்சிவித்தை
                                நாட்டினேன் உலகத்தில் நன்றாய்த்தானே””””””
இவ்வாறாக பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
யாரும் அறியக்கூடாது என்று மறைத்து வைக்கப் பட்ட பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் பாடல்களாக்கி இந்த உலகத்திற்கு வெளிப்படையாக அளித்திருக்கிறேன் என்கிறார்  உரோம ரிஷி .



பாடல்- 2
      “””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                    நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு
                குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                  குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்
               வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                  வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு
                தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                                   தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
                                                              ---------உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரம்---

   “”””””””நன்றென்றுஉலகமதில் சொன்னேன் சூட்சம்
                                  நழுகாதே சத்தியமாய் எண்ணிக்கொண்டு””””””””
இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் , சூட்சும ரகசியங்களை எல்லாம் உள்ளடக்கி , பாடல்களாக்கி,  பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொன்னேன் .
நல்லோரை நசுக்க வேண்டும் என்றோ ,
பகைத்தோரை அழித்து இன்பம் காண வேண்டும் என்றோ ,
தீய செயல்களில் ஈடுபட்டு உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றோ ,
அறியாமையில் வாடும் நெஞ்சங்களை அழ வைக்க வேண்டும் என்றோ ,

நினைத்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்தாமல் ,
நேர்மையான எண்ணம் கொண்டு ,
சத்திய வழியில் நடந்து ,
பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .



 “”””””குன்றென்ற கோபத்தால் கொடுமைநினையாதே
                                   குலநாசம் பிறப்பதரிது குலைக்கும்ஜென்மம்”””””””””
தனக்கு எதிராக தகாத செயல்கள் பல செய்து
தன்னை துன்பத்தில் ஆழ்த்தியவரின் ,
தன்னை மனம் கலங்க வைத்தவரின் ,
தன்னை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு சென்றவரின் ,
செய்கையால் தன் நிலையில் மாற்றம் அடைந்து , தடுமாற்றத்திற்கு உட்பட்டு, கோபாவேசத்துடன்
உணர்ச்சி வயப்பட்டோ , சிந்தனை தடுமாறியோ , கோபநிலைக்கு தள்ளப்பட்டோ , மனம் தன் நிலையில் இல்லாமல் அவருக்கு எதிராக பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது .

அப்படி தவறாக பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் நமது குடும்பம் சிதறிப்போகும் .
கர்மவினை நம்மை ஜென்ம , ஜென்மமாக பின் தொடர்ந்து வந்து நமது குலத்தை நாசம் செய்யும் .
ஓவ்வொரு ஜென்மத்திலும் நமக்கு வாழ்க்கையை துன்பம் நிறைந்ததாக கொடுத்து நம்மை வருத்தப்பட வைக்கும் என்கிறார்  உரோமரிஷி .



“”””””வண்டென்ற பட்சியல்லோ மதுவையுண்டு
                                 வகையதுபோல் இதினுடைய சூட்சங்கண்டு””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று , அதன் சூட்சும ரகசியங்களை அறிந்து, அதன் பலன்களை உணர்ந்து, அதன் மகிமைகளை தெரிந்து ,அதன் சக்திகளை அடைந்த பின் ,
புகழ் பெற வேண்டும் என்ற ஆசையில் அதனை வெளி உலகுக்கு வெளிப்படுத்தாமல் அமைதியாக இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் .     

வண்டு என்னும் பறவையானது மலரிலுள்ள தேனை சுவைத்து விட்டு அந்த ஆனந்தத்தில் தள்ளாடிக் கொண்டு செல்வது போல்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சக்தியை அடைந்த பின் அந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலேயே இருக்க வேண்டுமே ஒழிய ,
தன் சக்தியை அனைவரும் அறியும் படி படம் பிடித்துக் காட்டக் கூடாது என்கிறார்  உரோமரிஷி .



”””””தொண்டென்ற தொண்டர்கள்போல் உலகமீதில்
                             தோணாமல் வெகுநினைவாய் வாழ்வார்பாரே””””””””
வருத்தப்பட்டு கண்ணீர்  சிந்தி வருபவருக்கு கண்ணீரைத் துடைக்கும் கையாகவும் ,
துன்ப வடுக்களால் காயம் பட்டவருக்கு மருந்தாகவும் ,
திக்கு தெரியாதவருக்கு திசை காட்டும் வழிகாட்டியாகவும் ,
இருளில் தத்தளிபவருக்கு வெளிச்சத்தைக் காட்டும் ஒளியாகவும் ,
வாழ்க்கையைத் தவற விட்டவருக்கு புது வாழ்வை தரும் இன்பமாகவும் ,
இந்த உலகத்தில் இருந்து கொண்டு சமுதாயத்திற்கு தான் யார்  என்பதையும், தன் சக்தி எத்தகையது என்பதையும் ,வெளிப்படுத்தாமல்
இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கு தொண்டுகள் பல செய்து மற்றவர்களின் இன்பத்தில் தான் இன்பத்தைக் கண்டு வாழ வேண்டும் என்கிறார்  உரோமரிஷி.

 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சிறப்புகளையும் வரலாற்றையும் பார்த்த நாம் அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
யாருக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதை பற்றிப் பார்ப்போம் .


                             “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                  போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”

No comments:

Post a Comment