September 22, 2012

இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-மனையாளும்-பதிவு-53



            இயேசு கிறிஸ்து-பட்டினத்தார்-மனையாளும்-பதிவு-53

          “”பதிவு ஐம்பத்துமூன்றை விரித்துச் சொல்ல 
                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

அவர்கள் , பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு , பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
                                                -------மாற்கு - 12 : 13

அவர்கள் வந்து : போதகரே , நீர்  சத்தியமுள்ளவரென்றும் , எவனைக் குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் , அறிந்திருக்கிறோம். நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய் போதிக்கிறீர் , இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ , கொடுக்கக் கூடாதோ? என்று  கேட்டார்கள் .
                                                ------மாற்கு - 12 : 14

அவர்களுடைய மாயத்தை அவர்  அறிந்து : நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் ? நான் பார்க்கும் படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார் .”
                                                -------மாற்கு - 12 : 15

அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள் . அப்பொழுது அவர்  : இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார் ; இராயனுடையது என்றார்கள்.
                                                  -----மாற்கு - 12 : 16

அதற்கு இயேசு : இராயனுடையதை இராயனுக்கும் , தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்  . அவர்கள் அவரைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
                                                ------மாற்கு - 12 : 17

தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் இரண்டு நிலைகள் உள்ளது .
ஒன்று : ஒருவரிடமுள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி
அதன் மூலம் அவர்  குறைகளை நீக்கி
அவரை உயர்நிலைக்கு கொண்டுவர வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கில் செய்யப்படுவது .

மற்றொன்று: ஒருவரிடம் தவறுகள் இல்லாவிட்டாலும்
உன்னிடம் இத்தகைய தவறுகள் உள்ளன
இந்தக் குறைகளை நீக்கிக் கொள் என்று சொல்வதன் மூலம்
அவருடைய மனநிலையை குழப்பதில் ஆழ்த்தி
தாழ்ந்த நிலைக்குகொண்டு வர வேண்டும் என்ற
கீழ்த்தரமான நோக்கில் செய்யப்படுவது.

முன்னேற்றத்திற்கான செயல்களை வகுப்பவர் ;
ஏழ்மை நிலையிலிருந்து மேல் நிலைக்கு
வர போராடிக் கொண்டிருப்பவர் ;
வறுமைப் பிடியிலிருந்து மீண்டு
சுகபோகத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்க வேண்டும்
என்று உழைத்துக்கொண்டிருப்பவர் ;
சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டவர் ;
சமுதாயத்தால் தாழ்த்தி வைக்கப்பட்டவர் ;
சமுதாயத்தால் தள்ளி வைக்கப்பட்டவர் ;
சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் ;
சமுதாயத்தால் அடக்கி வைக்கப்பட்டவர் ;
சமுதாயத்தால் அடிமையாக வைக்கப்பட்டவர் ;
தன் சுயத்தை உணர்ந்து
தானும் ஒரு மனிதனாக
மனிதரோடு மனிதராக சமமாக மதிக்கப்பட வேண்டும்
என்ற நினைவை மனதில் கொண்டு
வாழ்க்கையின் தரத்தை உயர்த்த போராடிக் கொண்டிருப்பவர் ;
அடக்கி வைக்கப்பட்டவரும் சமுதாயத்தில்
சரிநிகர்  சமமாக வாழ வேண்டும் என்று
செயல்களை செய்து கொண்டிருப்பவர் ;
இலக்கியங்களை படைப்பவர் ;
சித்திரங்களை தீட்டுபவர் ;
சிற்பங்களை செதுக்குபவர் ;
படைப்புகளை உருவாக்குபவர் ;
என்று பல்வேறு நிலைகளில் இருந்து
செயல்படுபவர்களின் செயல்களை கண் கொண்டு பார்ப்போர் ;
அதில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து அதைச் சுட்டிக் காட்டி
இதில் உள்ள குறைகளை நீக்குவதன் மூலம்
செய்யப்படும் செயல்கள் புனிதம் பெறும் ;
அதன் மூலம் சமுதாயம் உயர்வு பெறும் ;
நன்மைகள் பெருகும் ; நல்லவைகள் உருவாகும்;
என்பதை கருத்தில் கொண்டு
உயர்வானவைக்குள் இருக்கும் சிறு பிழைகளை நீக்க
தவறுகளை சுட்டி காட்டி அறிவுரை வழங்குவது ஒரு வகை .

இத்தகைய அறிவுரை வழங்க
உயர்ந்த மனப்பான்மை வேண்டும் ;
நல்ல ஒழுக்க நெறிகள் வேண்டும் ;
பரந்த உள்ளம் வேண்டும் ;
மற்றவரை போற்றும் இதயம் வேண்டும் ;
பிறர்  திறமையை மதிக்கும் உள்ளம் வேண்டும் ;
பிறர் சிந்தனையை மதிக்கும் நெஞ்சம் வேண்டும் ;
தன்னை விட அவர்  உயர்ந்து விடுவார்  என்ற எண்ணம் இல்லாமல் ,
தன்னை விட அவர்  உயர்ந்து விட்டால்
தன்னை மதிக்க மாட்டார்  என்ற குறுகிய மனம் இல்லாமல் ,
இந்த நிலையிலே இந்த ஆட்டம் போடுகிறார்  இன்னும் உயர்ந்தால்
இதற்கு மேல் ஆடுவார்  என்ற சிந்தனை இல்லாமல் ,
இவர் உயர் வதால் தான் தாழ்த்தப்படுவோம் ;
அவமதிக்கப்படுவோம் ; ஓரம் கட்டப்படுவோம் ;
அடக்கி வைக்கப்படுவோம் ; என்ற எண்ணம் இல்லாமல் ,
செயல்படுபவரால் மட்டுமே
ஒருவரிடம் உள்ள உண்மையான தவறுகளை சுட்டி காட்டி
குறைகளை நீக்கி உயர்வு பெற ஒத்துழைப்பார் ;
இத்தகையவர்கள் ஒரு பிரிவினர்.

உண்ண உணவு இல்லாமல் திரிந்தவர் ;
உடுக்க சரியான ஆடை இல்லாமல் தவித்தவர் ;
இருக்க இடம் நாடி அலைந்தவர் ;
உழைக்க வேலை தேடி சுற்றியவர் ;
படிப்புக்கான தொகை செலுத்த முடியாமல் தவித்தவர் ;
அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற முடியாமல் வாடியவர் ;
சிறிய இன்பங்களைக் கூட நுகர முடியாமல் தவித்தவர் ;
ஏழ்மையில் வாடியவர் ;
வறுமையில் தள்ளாடியவர் ;
சோகத்தில் சுகமிழந்தவர் ;
கவலையில் கண்ணீர்  சிந்தியவர் ;
துன்பத்தில் வருந்தியவர் ;
கால மாற்றத்தால் , கடின உழைப்புக்கு கிடைத்த பரிசால் ,
அயராது பாடுபட்டத்திற்கு கூலியாய்
அரியணைகள் அவரை நாடி வரும் போது ,
பதவிகள் அவரைப் பார்த்து பல்லிளிக்கும் போது ,
மகிழ்வுகள் அவர்  தோளில் ஏறி நாட்டியம் ஆடும் போது ,
இன்பங்கள் அவர்  கை பிடித்து வீதியில் நடந்து வரும் போது ,
சந்தோஷங்கள் அவர்  பற்களில் அமர்ந்து
பல்லாங்குழி ஆடும் போது ,
அதனைக் கண்டு பொறாமைக் கொண்ட நெஞ்சம்
அதிர்ஷ்ட தேவதை அவரை உயர்த்தி வைத்திருக்கிறது
என்று உழைப்பிற்கு மதிப்புகொடுக்காமல்,
அவரை தாழ்த்த வேண்டும் தாழ்ந்த நிலைக்கு
கொண்டு வர வேண்டும் என்று நினைவில் கொண்டு ,
வஞ்சக எண்ணத்துடன் , குரூர புத்தியுடன் ,
இழிவான குணத்துடன் , கொடுமையான நெஞ்சத்துடன் ,
களங்கமுள்ள உள்ளத்துடன்,
உயர்வானவைக்குள் பிழைகள் இல்லாவிட்டாலும்
தவறுகள் இருக்கிறது என்று குற்றங்கள் பலவற்றை சுட்டிக் காட்டி
வார்த்தை ஜாலத்தினால் மயக்கும் எழுத்தினால்
மனதில் குழப்பத்தை உண்டாக்கி நிம்மதி இழக்க செய்து
அவரை அழிவுக்கு கொண்டு வர துடித்துக் கொணடிருப்பவர் ;
மற்றொரு பிரிவினர்.

இத்தகைய நிலை கொண்டவர்கள் மற்றவர்கள் செய்யும்
நல்ல காரியத்தை அங்கீகரிக்க மாட்டார்கள்.
தானும் நல்லது செய்ய மாட்டார்கள் ,
மற்றவர்களும் நல்லது செய்ய விட மாட்டார்கள் .

நல்லது செய்யும் மற்றவர்களுடைய செயல்களில்
தவறுகள் இருக்கிறது என்று குற்றம் கண்டு பிடித்து
அவர்களை குற்றவாளியாக்கி
அவர்களை தண்டனைக்குட்படுத்த பட வேண்டும்
என்ற சிந்தனை கொண்டு சுற்றி திரிபவர்கள்
இத்தகைய நிலை கொண்ட ஒரு கும்பல் தான்
இயேசுவை குற்றவாளியாக்க வேண்டும் என்ற நிலை கொண்டு
அவரை தேடி வருகிறது .

அவரை பேச வைத்து
வார்த்தைகளை வர வழைத்து
அவரை குற்றவாளியாக்கி விட வேண்டும் என்ற நோக்கில்
பரிசேயரிலும் ,ஏரோதியரிலும் சிலர்  அவரை தேடி வந்தார்கள் .
அவரை கேள்விகள் கேட்டு
பதில் சொல்ல முடியாமல் திணற வைத்து ,
மக்கள் மத்தியிலே அவரை அவமானப் படவைத்து ,
அவர்  மேல் உள்ள நன்மதிப்பை குலைக்க வைத்து ,
மக்கள் அவர்  மேல் கொண்ட அன்பை வெறுப்பாக மாறவைத்து ,
மக்களை அவருக்கு எதிராக திரும்ப வைத்து ,
மக்கள் அவரை தவறானவர்  என பேச வைத்து ,
மக்கள் அவர்  மேல் விரோதம் கொள்ள வைத்து ,
மக்கள் அவருக்கு எதிராக செயல்கள் செய்ய வைத்து,
அவருடைய செயல்கள் போலியானவை
என்று மக்களை நம்ப வைத்து
மக்களை அவருக்கு எதிராக திருப்ப
மக்கள் மனங்களை மாற்ற அவர்கள் வந்தனர்.

பேச்சிலே இனிமையையும்
உள்ளத்திலே நஞ்சினையும் வைத்துக் கொண்டு
அவர்கள்: நீர்  சத்தியவான்
சத்தியத்தை உணர்ந்தவர் ;
சத்தியத்தின் உருவானவர் ;
சத்தியத்தின் வழி நடப்பவர் ;
சத்தியத்தை உணர்ந்து
சத்தியத்தின் உருவாக இருந்து
சத்தியத்தின் வழிநடந்து
சத்தியமாகவே இருப்பவர்
யாருக்கும் எதற்கும் கவலைப்படமாட்டார்.
யாருக்கும் , எதற்கும் , எத்தகைய நிலைக்கும் ,
எத்தகைய தன்மைக்கும் ,
ஒருவர்  கவலைப்பட வில்லை எனில்
அவர்  சத்தியவானாகத் தான் இருப்பார்.
அத்தகைய நிலையில் உள்ளவர்  நீங்கள்
அத்தகைய தன்மையை கொண்டவர்  நீங்கள்

மேலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ,
பணக்காரன் – ஏழை ,
என்ற வேறுபாடு இல்லாமல்,
ஏற்றத்தாழ்வு பார்க்காமல்
அனைவர்  வாழ்வும் சிறக்க வேண்டும்
என்ற உயரிய நோக்கில் நல்லெண்ணம் கொண்டு
சத்தியத்தை போதிக்கிறீர்
சத்தியத்தின் வழி நடக்க வழி காட்டுகிறீர்
என்று இயேசுவை புகழ்வது போல்
புகழ்ந்து அவரிடம் ஒரு கேள்வி கேட்டனர்.

எங்களுக்கு ஒரு ஐயம் உள்ளது
அதற்கு தங்கள் பதில் கூற வேண்டும்
என்று கேள்வியை கேட்டனர்.

இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ ?
நாம் கொடுக்கலாமோ? கொடுக்கக் கூடாதோ? என்று கேட்டார்கள்.
சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்
சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.
சில கேள்விகளுக்கு ஒரு பதில் உண்டு
சில கேள்விகளுக்கு பல பதில் உண்டு.
கேள்வியைப் பொறுத்தும்
பதில் சொல்பவரின் தகுதி அறிவுத் திறமை , சிந்தனை ஆற்றல் ,
ஆகியவற்றைப் பொறுத்தும் பதில்களின் நிலை மாறும் .
இராயனுக்கு வரி கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா?
என்ற கேள்வியில் ,
இராயனுக்கு வரி கொடுக்கலாம்
இராயனுக்கு வரி கொடுக்கக் கூடாது
என்ற இரண்டு பதில்கள் தான் உண்டு என்று நினைத்தனர் .

இராயனுக்கு வரி கொடுக்கலாம் என்றால்
ஏழைகள் மேல் கருணை கொண்டவர் ;
அன்பு உள்ளவர் ;
இரக்கம் உடையவர் ;
துயர் கண்டு துடைப்பவர் ;
கருணை வடிவமானவர் ;
வறியவர் மேல் இரங்குபவர்  ;
என்று மக்கள் அவர் மேல் கொண்ட
நம்பிக்கையை சிதைத்து
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார் ;
பணக்காரர்களின் கைப்பாவையாக இயங்குகிறார் ;
ஆளும் வர்க்கத்தின் சாயலாக இருக்கிறார் ;
என்று வார்த்தைகளை வீசி
தவறானர்  என்ற சாயம் பூசி
மக்களை அவருக்கு எதிராக திருப்பலாம் .
மக்களை அவர்  மேல் விரோதம் கொள்ளச் செய்யலாம்.
என்று ஒரு நிலையிலும் ,

இராயனுக்கு வரி கொடுக்கக்கூடாது என்றால்
அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுகிறார் ;
சட்ட திட்டங்களை அவமதிக்கிறார் ;
அதிகாரத்திற்கு எதிராக இயங்குகிறார் ;
என்று சொல்லி அவரை குற்றவாளியாக்கி
தண்டனைக்கு உட்படுத்தலாம்
என்று மற்றொரு நிலையிலும் ,
என்ற இரு வேறுபட்ட நிலையில் இருந்தனர் .

எத்தகைய பதில் சொன்னாலும் ,
கொடு என்று சொன்னாலும் , கொடுக்காதே என்று சொன்னாலும்
இயேசுவை குற்றவாளியாக்கி விடலாம் என்ற நிலையில்
கேள்வி கேட்டவர்கள் இருந்தனர்.

கேள்வி கேட்டவரையும் கேள்வியின் தன்மையையும்
உணர்ந்து கொண்ட இயேசு
என்னை சோதிக்கப் பார்க்கிறீர்கள் ;
என்னை சோதனைக்குள் சிக்க வைத்து
உங்கள் எண்ணம் நிறைவேற முயற்சி செய்கிறீர்கள் ;
நீங்கள் எண்ணிய எண்ணம் நிறைவேற
என்னை நாடி வந்துள்ளீர்கள் ;
இருந்தாலும் பரவாயில்லை ,
நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.
நான் ஒருபணத்தை பார்க்க வேண்டும்
பணத்தை நான் பார்க்கும் வகையில்
எனக்கு ஒரு பணத்தை கொடுங்கள் என்றார்.

பணத்தை பார்த்த இயேசு
இந்தப் பணத்தில் உள்ள உருவமும் ,
அதில் உள்ள எழுத்தும் யாருடையது என்று கேட்டார் .
அதற்கு , அவர்கள் இராயனுடையது என்றார்கள்.
அதனைக் கேட்ட இயேசு,
அவர்கள் சொன்ன பதிலைக் கேட்ட இயேசு ,
விவரங்களை அறிந்து கொண்ட இயேசு,
இராயனுடையதை இராயனுக்கும் ,
தேவனுடையதை தேவனுக்கும் ,
செலுத்துங்கள் என்றார் .

இரண்டு பதில்களில் ஒன்று தான் வரும்
என்று எதிர்பார்த்தவர்கள் ;
இராயனுக்கு வரி கொடுக்க வேண்டும்
இராயனுக்கு வரி கொடுக்க கூடாது
என்ற இரண்டு பதில்களில் ஒன்றைத் தான் எதிர்பார்த்தவர்கள் ;
அவரை குற்றவாளியாக்கலாம் என்று எதிர்பார்த்தவர்கள் ;
மக்களை அவருக்கு எதிராக விரோதியாக்கலாம்
என்று எதிர்பார்த்தவர்கள் ;
மக்களை அவரிடமிருந்து
பிரித்து விடலாம் என்று எதிர்பார்த்தவர்கள் ;
அவருடைய பதிலைக் கண்டு
அதிர்ச்சி அடைந்தனர் .
ஆச்சரியம் கொண்டனர்.
அதிர்ந்து நின்றனர் .
அவருடைய பதிலைக் கண்டு கேட்டு தடுமாறி நின்றனர்.
இராயனுடையதை இராயனுக்கும் ,
தேவனுடையதை தேவனுக்கும் ,
யாரும் எதிர்  பாராத பதில் .

இந்த சமுதாயத்திற்குள் வாழும் போது
சமுதாயம் ஆக்கி வைத்திருக்கும்
சமுதாய சட்ட திட்டங்களுக்குள்
சமுதாய ஒழுக்க நெறி கோட்பாடுகளுக்குள் வாழும் போது
செய்ய வேண்டிய செயல்களைச்
செய்து வாழும் அதே வேளையில்
இந்த அவணி எல்லாம் படைத்து , காத்து ,
வழி நடத்திக் கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல தேவனை
உணர்ந்து அறிந்து
அவர்  காட்டும் வழி அறிந்து
அவருடன் இணைந்து அவரின் ஆசி பெற்று
உயர்நிலை அடைய வேண்டும் என்கிறார்  இயேசு .



பட்டினத்தார் :

“”மனையாளும் மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயான மட்டேவழிக் கேதுதுணை
தினையாம் அளவெள்  ளளவா கினுமுன்பு செய்ததவந்
தனையாள என்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே””
                                ----பட்டினத்தார்---பெரியஞானக் கோவை----

நிறை - குறை என்ற இருவேறுபட்ட நிலைகள் உண்டு .
நிறைவுடையவன் – நிறைவற்றவன் ,
குறைவுடையவன் – குறைவற்றவன் ,
நிறைவுடையது – குறைவுடையது ,
என்ற இரு வேறுபட்ட நிலைகள் தான் உண்டு .

முழுமையான நிறைவுடையது என்றோ,
முழுமையான குறைவுடையது என்றோ,
எதையுமே சுட்டிக் காட்ட முடியாது
உதாரணம் காட்டி விளக்கிட முடியாது.
  
ஏனென்றால் நிறைவான ஒன்றுக்குள் குறையும் இருக்கும்
குறைவான ஒன்றுக்குள் நிறையும் இருக்கும்.
நிறைவான தன்மைகள் அனைத்தையும் தன்னுள்கொண்ட
முழுமையானது என்று ஒன்றையும்,
குறைவுத் தன்மைகள் அனைத்தையும் தன்னுள் கொண்ட
முழுமையானது என்று ஒன்றையும்
எடுத்துக் காட்ட முடியாது.

நிறைவுத் தன்மைகள் அனைத்தும் கொண்ட ஒருவனையும்,
குறைவுத் தன்மைகள் அனைத்தும் கொண்ட ஒருவனையும்,
நிறைவுத் தன்மைகள் அனைத்தையும் கொண்ட ஒரு பொருளையும்,
குறைவுத் தன்மைகள் அனைத்தையும் கொண்ட ஒரு பொருளையும்,
இப்பிரபஞ்சத்தில் நாம் காண இயலாது.

முழுமையான நிறை கொண்டது என்று சொன்னாலும்
அதில் ஒரு குறை இருக்கும்.
முழுமையான குறை கொண்டது என்று சொன்னாலும்
அதில் ஒரு நிறை இருக்கும்.

அன்பில் திளைக்கிறேன் ;
ஆசையில் களிக்கிறேன் ;
இன்பத்தில் குளிக்கிறேன் ;
வெற்றியில் மகிழ்கிறேன் ;
உயர்வில் சிறக்கிறேன் ;
பாராட்டில் நனைகிறேன் ;
அரவணைப்பில் மூழ்குகிறேன் ;
பதவியில் சுகிக்கிறேன் ;
நட்பில் கரைகிறேன் ;
காதலில் மயங்குகிறேன் ;
திருமணத்தில் சிரிக்கிறேன் ;
சந்ததியில் உயர்கிறேன் ;
தொழிலில் முன்னேறுகிறேன் ;
செல்வத்தில் நீந்துகிறேன் ;
என்று செல்வ வளங்கள் அனைத்தையும் பெற்றவர் ;
இன்ப வளங்கள் அனைத்தையும் நுகர்ந்தவர் - என்று
முழுமையான நிறைவு கொண்டவர்  யாரும் இல்லை .
அவர்  வாழ்விற்குள்ளும் அவர்  அடைய முடியாத
சில கற்பனைகள் குறையாக இருக்கும் .

அன்பில்லாமல் தவிக்கிறேன் ;
ஆதரவில்லாமல் வாடுகிறேன்;
இன்பமில்லாமல் வருந்துகிறேன் ;
உயர்வில்லாமல் இருக்கிறேன் ;
தோல்வியினால் குமுறுகிறேன் ;
பகையினால் மாள்கிறேன் ;
துரோகத்தால் துவள்கிறேன் ;
ஏமாற்றத்தால் மாய்கிறேன் - என்று
குறைகள் தான் என் வாழ்க்கையில் உண்டு
நிறைவுகள் இல்லை என்று கூறுபவர்  வாழ்க்கையிலும்
குறைவுக்குள்ளும் நிறைவுகள் இருக்கும்.

நிறைவுக்குள் இருக்கும் குறையையும் ,
குறைவுக்குள் இருக்கும் நிறையையும் ,
அலசி ஆராயததே துன்பம் நிகழ காரணம்.

தன்னிடம் உள்ள நிறையையும்
குறையையும் அறிந்து அவற்றை வேறுபடுத்தி ஆராய்ந்து
குறையை நீக்கும் முறை அறிந்து அதை நீக்கி
நிறையை வளர்த்துக் கொள்வதன் மூலம்
ஒருவர்  உயர்வைப் பெறலாம்
நிறை நிரம்ப, நிரம்ப குறை தன்னால் ஓடி விடும்.
குறையை விலக்கி நிறையை நிரப்பலாம் அல்லது
நிறையை நிரப்புவதன் மூலம் குறை காணாமல் போய் விடும்.

அழுக்கடைந்த பாத்திரத்தில் முதலில்
அழுக்கை நீக்கி பிறகு பூச்சு பூச வேண்டும் .
அழுக்கை நீக்காமல் பூச்சை நேரடியாகப் பூசினால்
பூச்சு நிலையாக நிற்காது.
அதைப் போல குறையை நீக்கி நிறையை நிரப்பினால் மட்டுமே
நிறை நீடித்து நிலை பெற்று நிற்கும்.
குறையை நீக்காமல் நிறையை மட்டுமே நிரப்பினால்
நிறை நீடித்து நிற்காமல் உதிர்ந்து விடும்.
ஆகவே நம்மிடம் உள்ள குறைகளை நிறைகளை உணர வேண்டும்
சமுதாயம் நம்மிடம் எதை குறை என்று சொல்கிறதோ
எதை நிறை என்று சொல்கிறதோ
அதை ஆராய வேண்டும்.

சமுதாயத்திற்குள் இருக்கும் நாம்
சமுதாயத்தின் சட்ட திட்டங்களுக்குள்
வாழ்ந்து தான் ஆக வேண்டும்.
சமுதாயத்தின் ஒழுக்க நெறிக்குக்
கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும்.
அத்தகைய நிலையில் நாம் வாழும் போது
நம்முடைய நிறை குறைகளை ஆராய்ந்து வாழ வேண்டும்.

கல்வி கற்க வேண்டும் ;
வேலை செய்ய வேண்டும் ;
குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ;
திருமணம் செய்ய வேண்டும் ;
குழந்தை பெற வேண்டும் ;
செல்வம் சேர்க்க வேண்டும் ;
சேமிப்பு இருக்க வேண்டும் ;
எதிர்கால தேவைக்காக ,
வருங்கால பாதுகாப்பிற்காக ,
சந்ததியின் நலனுக்காக ,
பாதுகாப்பை உண்டு பண்ண வேண்டும்
என்ற நிலையில் இருக்கிறது சமுதாயம் .

பாதுகாப்பு வளையத்திற்குள் தாங்கள்
இருப்பது போல் கற்பனை செய்பவர்கள்
உண்மையிலேயே தாங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள்
தான் இருக்கிறோமோ என்று சிந்தித்து பார்ப்பதில்லை.

அழியக் கூடிய ,நித்தியம் அற்ற ,
சிற்றின்பத் தேடல்களை பாதுகாப்பு
என்று நினைத்துக் கொண்டு
சிற்றின்ப தேவைகளை நிறைவு செய்யும்
சிற்றின்ப தேடல்களை
பாதுகாப்பு வளையம் என்று போட்டுக் கொண்டு
அதில் தன் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

உடலை விட்டு உயிர்  போனவுடன்
பிணம் என்ற பெயர்  இடுகின்றனர்.
மயான கடமைக்காக ,மயானத்திற்கு கொண்டு செல்லும் போது,
கட்டிய மனைவி ; பெற்ற மக்கள் ; கிடைத்த வாழ்வு;
சேர்த்த செல்வம் ; வாயில் வரை தான் வரும் .
இணைந்த உறவும் , பிணைந்த நட்பும்,
சிறந்த சுற்றமும் ; மயானம் வரை தான் வரும்

சமுதாயத்தில் நாம் வாழும் போது
நம்முடன் பின்னிப் பிணைந்தவை ,
நம்முடன் இணைந்து கிடந்தவை ,
நம்முடன் உறவாடி கலந்தவை ,
நம்முடன் கலந்து சிறந்தவை ,
நம்முடன் சிறந்து உயர்ந்தவை ,
நம்முடன் உயர்ந்து பெருமையடைந்தவை ,
சிற்றின்பத் தேவைகள் அனைத்தும்
அவைகளின் நிலைகளுக்கேற்ப
ஒரு எல்லை வரை தான் வரும் .
அதற்கு மேல் வராது என்பதை உணர வேண்டும்.
உணர்ந்து மனம் தெளிவு பெற வேண்டும் .

எது நித்தியம் ; எது உண்மை ;
எது நம்மோடு வருவது ,
எது நாம் கொண்டு செல்வது ,
என்பதை சிந்திப்பவரால் மட்டுமே
என்பதை உணர்பவரால் மட்டுமே
இச்சமுதாயத்தில் வாழும் போது
சிற்றின்பத் தேவையை நாடும் போது
பேரின்பத்தின் திறவுகோலையும் அறியமுடியும் .

சிற்றின்பத் தேவையை
வரையறுக்கப்பட்ட சமுதாயக் கடமையை
சரிவர முடிக்க வேண்டும்
என்பதை நினைவில் கொண்டு செயலாற்றுபவர்களால் மட்டுமே
பேரின்பத்தின் வாயிலை அடைய முயற்சிக்க முடியும் .

வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்களை
எதிர்த்துச் செயல்பட முடியாதவனால் ,
கவலைகளை எண்ணி கண்ணீர்  விடுபவனால் ,
துயரங்களைக் கண்டு துன்பப் படுபவனால் ,
அழிக்கக் கூடியவைகளில் சிக்கி திண்டாடுபவனால் ,
அழியாத ஒன்றை நாடி செல்ல முடியாது .
அழியாத ஒன்றை அறிய வேண்டுமானால் ,
அழியக் கூடியவைகளின் அறிவு நமக்கு வர வேண்டும் .

அழியக் கூடியவைகள் ஏன் அழிக்கின்றன
என்பதை உணர்பவனால் மட்டுமே
அழியாத ஒன்று ஏன் அழியாமல் இருக்கிறது
என்பதை உணர முடியும் .

தன்னை உணர்பவனால் மட்டுமே
தன் தலைவனை உணர முடியும்.
தான் அவனாக மாறினால் ஒழிய
அவனை அறிய முடியாது.
அதற்கு நாம் செய்ய வேண்டியது
இந்த நிலை அடைய நாம் செய்ய வேண்டியது
இத்தகைய ஓர்  உயர்வான நிலையை அடைய
நாம் செய்ய வேண்டியது தவம் .

தினை அளவாவது , எள் அளவாவது ,
அதாவது சிறிய அளவாவது ,
முன் ஜென்மங்களில் நாம் தவங்கள்
செய்து இருப்போமேயானால் நமக்கு பரலோகஞ்சித்திக்கும்
நித்திய வாழ்வு சித்திக்கும் என்கிறார் .

சிறிதளவு தவத்தால் எப்படி நமக்கு
மிக உயர்ந்த பரலோக சித்தி கிடைக்க வழிவகுக்கும்
என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
கடந்த ஜென்மங்களில் செய்த சிறிதளவு
தவத்தின் பயனாக எடுக்கும் பிறவியானது
நல்லதையே நினைக்க துhண்டும் ,
நல்லதையே சொல்ல துhண்டும் ,
நல்லதையே செய்ய துhண்டும் ,
அதன் விளைவாக
தனி மனித ஒழுக்கமும் ; கருணை மனமும்;
இரக்க குணமும் ஓங்கி வளரும்.

சிற்றின்பம் நிலையற்றது ; பேரின்பம் நிலையானது ;
என்பதில் தெளிந்து ,
சிற்றின்பம் நித்தியமற்றது ; பேரின்பம் நித்தியமானது ;
என்பதை உணர்ந்து ,
சிற்றின்பத் தேடலுக்கு நடுவே
பேரின்பத் தேடலையும் நாடி
பேரின்ப வாயிலுக்கான திறவுகோலை பெறும் வழிகளை ஆராய்ந்து
அதன் வழி செல்லக் கூடி சாத்தியக் கூறுகளை உருவாக்கி
தான் அவனாக மாறக்கூடிய நிலையையும்
பரலோக சித்தியையும் கொடுக்கும் .

நாம் செய்யும் சிறதளவு தவம்
சிறிதளவு செய்யும் தவத்திற்கே
இவ்வளவு உயர்வுகள் இருக்கும் போது ,
சிற்றின்பத் தேவையை நிறைவு செய்ய
சிற்றின்பத் தேடலில் ஈடுபடும் நாம்
பேரின்ப நுழைவு வாயிலில்
நுழைவதற்கான திறவுகோலைப் பெறவும் ;
நித்திய வாழ்வைப் பெறவும் ;
ஞான தன்மையை உணரவும் ;
முக்தி நிலையை அடையவும்
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுக்கவும் ;
கர்மவினையை எரிக்கவும் ;
கருமையத்தை உணரவும் ;
ஜென்ம ரகசியத்தை புரிந்து கொள்ளவும் ;
பிறவிப் பெருங்கடலைக் கடக்கவும் ;
முழுமுதற் பொருளை உணரவும் ;
ஆதி - அந்தமில்லாததை அறியவும் ;
பேரின்பத் தேடலில் ஈடுபட வேண்டும்
என்கிறார்  பட்டினத்தார் .



இயேசு கிறிஸ்து - பட்டினத்தார் :
இயேசு ,
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு
சமுதாய சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொண்டு
சமுதாயத்தில் வாழ்க்கையை நடத்தும் அதே வேளையில்
ஆண்டவரை உணர்ந்து ,
ஆண்டவரை அறிந்து ,
ஆண்டவருடன் இணைந்து ,
ஆண்டவரின் ஆசி பெற்று ,
உயர்வடைய வேண்டும் என்கிறார்.

அவ்வாறே ,
பட்டினத்தாரும் ,
சமுதாயத்தில் சட்ட திட்டங்களை மதித்து
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு
சிற்றின்பத் தேவையை நிறைவு செய்ய
சிற்றின்பத் தேடலில் ஈடுபடும் நாம்
பேரின்ப நுழைவாயிலில் நுழைவதற்கான திறவுகோலைப் பெற
பேரின்பத் தேடலிலும் ஈடுபட வேண்டும் என்கிறார் .
               
               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுஐம்பத்துமூன்று ந்தான்முற்றே “”