November 29, 2011

ஐயப்பன்- சபரிமலை- பதிவு-8



                ஐயப்பன் - பதிவு-8

“”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - சபரிமலை
ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே வருகிறது இந்த எண்ணிக்கையை உலகம் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும்
உலகம் முழுவதும் இருந்து சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தோராயமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சுமார்  50 மில்லியன் முதல் 55 மில்லியன் மக்கள் என்று சொல்லலாம்
இந்த எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம்
எண்ணிக்கை எப்படி இருந்தாலும் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையை சிந்தித்து பார்த்தோமானால் ஐயப்பனின் மகிமையை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் ;பக்தர்கள் ஐயப்பன் மேல் வைத்திருககும் பக்தி எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளலாம் ;
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ,அதிகமான அளவில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக சபரிமலை கருதப் படுகிறது

ஐயப்பன் - சமத்துவம்
சாதி ,மதம் ,இனம் ,மொழி , கலாச்சாரம் ,பண்பாடு ,சமூக அந்தஸ்து ,பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், போன்ற எந்த ஒரு  ஏற்றத் தாழ்வுகளையும் வெளிப்படுத்தாமல் ஐயப்பன் ஒருவரே கடவுள்; ஐயப்பன் நாமத்தை உச்சரிப்பதே நம் பிறவிக் கடனைக் கழிக்க வழி; என்பதை மனதில் கொண்டு விரதம் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதே சபரிமலையின் தனிச்சிறப்பு மட்டுமில்லாமல்
        “”””ஒன்றே குலம் ஓருவனே தேவன்”””””
என்ற திருமூலரின் தாரக மந்திரத்தை இந்த சமுதாயம் உணர்ந்து கொள்ளச் செய்யும் படி ஐயப்பனின் வழிபாட்டு முறை உள்ளது. மேலும் சபரிமலை யாத்திரை இதில் ஒரு அங்கமாக உள்ளது.

அனைவரும் சமம் என்பதை இந்த சமுதாயம் உணர்ந்து கொள்ளும் படியும் ,ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகவும், எத்தனையோ சமுதாய இயக்கங்கள் பாடுபட்டாலும் தன் வழிபாட்டு முறையிலேயே மறைமுகமாக சமத்துவ ,சமதர்ம ,சமுதாயத்தை உருவாக்கி வருகிறது சபரிமலை புனித யாத்திரை  .

ஐயப்பன் - பெண்கள்
ஐயப்பனின் வழிபாட்டு முறையில் ஒரு முக்கியமான நடைமுறை பின்பற்றப் படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் :
10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கப் படுதில்லை .சமூக ரீதியான காரணங்களுக்காகவும், ஐயப்பனின் வழிபாட்டு முறையில் உள்ள விதிமுறைகளின் படியும் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கப் படுவதில்லை.
ஐயப்பனின் வரலாற்றை சொல்லும் ஐயப்ப கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தாலும் ,பல்வேறு காரணங்களாலும் ,10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள  சபரிமலை யாத்திரைக்கு வருவதில்லை.
மேலும் ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற காரணங்களாலும் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

சபரிமலை - அமைவிடம்
சபரிமலை அமைந்துள்ள நாடு               -  இந்தியா
சபரிமலை அமைந்துள்ள மாநிலம்      -  கேரளா
சபரிமலை அமைந்துள்ள மாவட்டம்    -  பத்தனம்தித்தா மாவட்டம்

சபரிமலை என்பது கேரளா மாநிலத்தில் உள்ள மேற்கு மலைத் தொடரில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு வாய்ந்த புண்ணியத்தலம் ஆகும்
ஐயப்பன் மகிஷி என்ற கொடிய செயல்களைச் செய்த பலம் வாய்ந்த அரக்கியை கொன்று அழித்த பிறகு ஐயப்பன் சென்று தியானம் செய்த இடமே சபரிமலை என்று வரலாறு கூறுகிறது

18 மலைகளுக்கு இடையே ஐயப்பனின் கோயில் இருக்கிறது .இந்தக் கோயில் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மலையின் உச்சியில் உள்ளது .மேலும் இதன் உயரத்தை சராசரியாக கூறும் பொழுது கடல்மட்டத்துடன் ஒப்பிடும் பொழுது 914 மீட்டர் உயரத்தில் உள்ளது என்று கூறலாம்.
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு கோயிலாகவும் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலையை சூழ்ந்து  உள்ள ஒவ்வொரு மலையிலும் பல்வேறு தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன.

கரிமலை ,காளகெட்டி ,நிலக்கல் போன்ற இடங்களில் இன்றும் நடைமுறை வழிபாட்டில் உள்ள கோயில்கள் உள்ளன என்று சொல்லப் படுகிறது .மேலும் பழங்காலத்து கோயில்களில் இயற்கை சீற்றத்தால் பிழைத்துக் கொண்ட எஞ்சிய பாகங்கள் கொண்ட கோயில்களும் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது.

ஐயப்பன் - யாத்திரை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் சபரிமலை யாத்திரையை எருமேலியில் இருந்தே தொடங்குகிறார்கள் .
எருமேலியில் இருந்து தொடங்கி காட்டு வழிப்பாதை வழியாக சுமார்  45 கிலோ மீட்டர்  துhரம் கொண்ட மலைப் பாதைகளில் காலணிகள் ஏதும் அணியாமல் நடந்து செல்லும் சபரிமலை யாத்திரையையே விரும்புகின்றனர் .

எருமேலியில் இருந்து சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை யாத்திரை கீழ்க்கண்டவாறு அமைகிறது:
முதலில் எருமேலியில் இருந்து தொடங்கும் சபரிமலை யாத்திரை அழுதா நதி வரை செல்கிறது .பிறகு அழுதா மலையை கடந்து கரியம் தோடினை அடைகிறது .இப்பொழுது புனிதமான மலையாகக் கருதப்படும் கரிமலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
அதைக் கடந்த பின் செறியன வட்டம் ,வலியன வட்டம் ஆகிய இடங்களைக் கடக்க வேண்டும் இந்த இடங்களை எல்லாம் கடந்து முடித்த பின் பம்பா நதியை அடைய வேண்டும் .

புனித பயணம் மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து பல விதமான வழிகளைப் பயன்படுத்தி பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.
இவ்வாறாக இரண்டு விதமான நிலைகளில் ஐயப்ப பக்தர்கள் பம்பா நதிக்கரையை அடைகின்றனர்.


பம்பா நதிக்கரையை அடைந்த ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சுமார்  4 கிலோ மீட்டர்  துhரம் கொண்ட செங்குத்து நிலை கொண்ட நீலிமலை காட்டுப் பாதையில் ஏற வேண்டும் .இந்த பாதையில் நடந்து கடந்து சென்றே இந்த மலையில் ஏறியே சபரிமலையை அடைய வேண்டும்

ஒரு காலத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் காட்டுப் பாதையாகவும் ,இருள் சூழ்ந்த நிலையிலும், இருந்த ஒற்றை வழிப் பாதை தற்பொழுது சீரமைக்கப் பட்டு பலவிதமான வசதிகள் செய்யப்பட்டு, ஒற்றை வழிப் பாதையின் இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு சபரிமலையை அடைகின்றனர்.

அடுத்து 18 படிகளைப் பற்றியும் ஐயப்ப தரிசனத்தைப் பற்றியும் பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                போற்றினேன் பதிவுஎட்டும் தான்முற்றே “”