February 14, 2012

இயேசு கிறிஸ்து-திருமூலர்-படமாட-பதிவு-10




  இயேசு கிறிஸ்து-திருமூலர்-படமாட-பதிவு-10

                                 “”பதிவு பத்தை விரித்துச் சொல்ல
                                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
நாம் யாருக்கு எதைச் செய்தால் ஆண்டவன் ஏற்றுக் கொள்வார்  என்பதைப் பற்றி இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்-1:
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ , அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .“
                                                                             மத்தேயு - 25 : 40

சோகத்தின் சுமையை சுமந்து கொண்டு செல்வோர் ;
கவலையின் நிழலில் கண்ணீர்  சிந்துவோர் ;
துன்பச் சூறாவளியில் துவண்டு கிடப்போர் ;
தோல்வியின் கனலில் எரிந்து  தவிப்போர் ;
ஏமாற்றப் பட்டோரால் ஏங்கி இருப்போர் ;
துரோகத்தால் துன்பப்பட்டு கிடப்போர் ;
அறியாமையால் அழுது தவிப்போர் ;
ஏழ்மையால் வருந்தி இருப்போர் ;
காலத்தால் பாதிக்கப் பட்டோர் ;
சமுதாயத்தால் ஒதுக்கப் பட்டோர் ;
ஜாதியால் தள்ளி வைக்கப் பட்டோர் ;
மதத்தால் பாதிக்கப் பட்டோர் ;
இனத்தால் ஏமாற்றப் பட்டோர் ;
மொழி வெறியால் ஏமாற்றப் பட்டோர் ;
மனதால் பாதிக்கப் பட்டோர் ;

போன்ற
பல்வேறு நிலைகளில்,
கவலைகள் பல தன்னுள் கொண்டோர்
உதவி என்று வந்தால் அந்த எளியவர்களுக்கு,
எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு,
உன்னால் முடிந்த உதவியைச் செய்தால்
அவர்களுக்கு நீ செய்த உதவியானது
எனக்கு
அதாவது இயேசுவுக்கு
அதாவது கடவுளுக்கு - சேரும்
என்று
உண்மையாக சத்தியமாக சொல்லுகிறேன் என்கிறார்   இயேசு .
ஏழைக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்கிறார் இயேசு



வசனம்-2 :
மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ , அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .”
                                                                          மத்தேயு - 25 : 45

மிகவும் எளியவர்களாகிய,
மிகவும் துன்பப்பட்டவர்களாகிய ,
மிகவும் கவலை கொண்டவர்களாகிய ,
மிகவும் விரக்தி கொண்டவர்களாகிய ,
மிகவும் வறுமையில் வாழ்க்கையை ஓட்டும்
இவர்களுடைய கண்ணிலிருந்து சிந்தும் கண்ணீரை துடைக்காமல்,
இதயத்திலிருந்து சிந்தும் இரத்தத்தைத் தடுக்காமல்,
உதவி என்று கரம் நீட்டியவருக்கு உதவி செய்யாமல் விட்டால்,
அந்த எளியோருக்கு செய்யாத உதவி

எனக்கு
அதாவது இயேசுவுக்கு
அதாவது ஆண்டவனுக்கு செய்ய வில்லை .
எளியவர்களுக்கு செய்யாதது எனக்கு செய்யாதது ,
எளியவர்களுக்கு செய்யாதது ,
ஆண்டவனுக்கு செய்யாதது என்கிறார்  இயேசு .




நீங்கள் எளியவர்க்கு இரங்கினால் ஆண்டவர்  உங்களை ஏற்றுக் கொண்டார் என்று பொருள் .
நீங்கள் எளியவர்க்கு இரங்கவில்லை எனில் ஆண்டவர்  உங்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்
என்கிறார்  இயேசு.



திருமூலர் :
               “””””படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
                        நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
                       நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
                      படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
                                                     ---------திருமூலர்---திருமந்திரம்-----

படமாடக் கோயில் என்றால் கோயிலில் உள்ள கடவுள் சிலை என்று பொருள் .
நடமாடக் கோயில் என்றால் அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதன் என்று பொருள் .

         “””””படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
                  நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா””””
கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு
பலவிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு
பன்னீர் , இளநீர் , பால் , சந்தனம், விபூதி
போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம் .
சாமி சிலைகளை குளிப்பாட்டுகிறோம் .

பல வித ஆடைகள் கொண்டு
வேளைக்கு ஒன்று அல்லது நாளுக்கு ஒன்று
என்று உடை உடுத்துகிறோம் .

பலவிதமான அணிகலன்களை அணிவிக்கிறோம்
பலவகையான அணிகலன்களை சூட்டி
அலங்காரம் செய்கிறோம் .
அழகு செய்கிறோம் .

கோயிலில் இருக்கும் சாமி சிலைக்கு உணவு படைக்கிறோம் ;
பலவிதமான சுவை மிக்க உணவு படைக்கிறோம்  ;
பலவிதமான உணவுகள் கொண்டு படையல் போடுகிறோம் ;

இவற்றையெல்லாம் கோயிலில் உள்ள சாமி சிலைக்கு செய்வதால் என்ன பயன்?
இவற்றையெல்லாம் கல்லாக இருக்கும் சிலைக்கு செய்வதால் என்ன பயன்?
ஒரு பயனும் இல்லை .

கோயிலில் உள்ள கடவுளுக்கு செய்வது ,
செய்யும் செயல்கள் ,
வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ,
ஏழ்மையில் நடமாடிக் கொண்டிருக்கும் ,
மனிதருக்கு ஏழைக்கு சென்று சேர்வதில்லை
அதாவது
நடமாடும் கோயிலான மனிதனுக்கு பயன் இல்லை
நடமாடும் ஏழைக்கு பயன் இல்லை
என்கிறார்  திருமூலர் .



         “”””நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
                படமாடக் கோயில் பகவற்க தாமே””””””
உண்ண வழி இல்லாமல் தவிக்கும் ஏழைக்கு;
பசித்து வற்றிப் போன வயிற்றை உடைய ஏழைக்கு;
காய்ந்து கருகிப் போன வாழ்க்கை உடைய ஏழைக்கு;
பசியினால் தினம் தினம் வருந்தும் ஏழைக்கு;
உணவு கிடைக்காமல் இறந்து கொண்டிருக்கும் ஏழைக்கு ;
உணவு கொடுக்க வேண்டும்.

உடுத்த ஆடை இல்லாமல் ,
மானத்தை மறைக்க ஆடை இல்லாமல்,
ஏழ்மையினால் கந்தலாடை அணியும் ,
ஏழைக்கு ஆடை கொடுக்க வேண்டும்.

வறுமையில் சிக்கி முன்னேறத் துடிப்பவர்க்கு,
பொருளாதார வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்க்கு,
அன்றாட வாழ்க்கைத் தேவையை நிறைவேற்ற முடியாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவருக்கு ,
பொருளாதார உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு
வறுமையில் வாடும் ஓர்  ஏழைக்கு உதவிகள் செய்தால்;
உண்ண உணவு இல்லாதவர்க்கு உணவு கொடுத்தால்;
உடுத்த உடை இல்லாதவர்க்கு உடுத்த உடை கொடுத்தால்;
இருக்க இடம் இல்லாதவர்க்கு இருக்க இடம் கொடுத்தால்;
அதை விட புண்ணியம் வேறு இல்லை.
இத்தகைய காரியத்தை இத்தகைய செயலை
எளியவருக்கு செய்வதை
மனது நிறையும் படி செய்வதை கடவுள் ஏற்றுக் கொள்வார் .
அது வீணாகாது.
இல்லாத ஒருவருக்கு கிடைக்கிறது.

அதை விடுத்து சிலைகளுக்கு
செலவு செய்வதால் என்ன பயன்?

மனது விருப்பப்பட்டு செய்யப்படும் உதவியானது ,
எந்தவிதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல்
மனிதருக்கு செய்யப்படும் உதவியானவது,
புண்ணியத்தில் சேருகிறது.


நடமாடும் கோயிலான
கடவுளை மனதில் கொண்ட மனிதனுக்கு செய்பவை ,
படமாடக் கோயிலான
கோயிலில் உள்ள கடவுள் ஏற்றுக் கொள்வார்  ,
என்கிறார்  திருமூலர்.



திருமூலர்  நாத்திகம் பேசவில்லை:
இந்த பாடலின் மூலம் திருமூலர்  கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை.
கடவுளை இல்லை என்று சொல்லி ,
கடவுளை மறுத்து , எதிர்த்து ,
நாத்திகவாதியாக பாடல் எழுதவில்லை.

புறத்தில் உள்ள கடவுளுக்கு புற வழிபாட்டின் மூலம் சேவைகள் பல கடவுளுக்கு செய்கின்றாயே,
அகத்திலே உள்ள கடவுளை முதலில் உணர்ந்து கொள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்.

அகத்தில் கடவுளைக் கொண்டவனுக்கு உதவி செய்.
அகத்தில் கடவுளைக் கொண்டவனுக்கு உதவி செய்தால் அது நேரடியாக இறைவனை சென்றடையும்.

புற வழிபாடுகள் அனைத்தும் இறைவனை அகத்தில் உணர்வதற்கு அமைக்கப்பட்டது தான்.
புறத்தில் உள்ள கடவுளை மட்டும் காணும் நீ அகத்தில் உள்ள கடவுளைக் காணத் தவறி விடுகிறாய்.

புறத்தில் உள்ள கடவுளுக்கு ,
அகத்தில் உள்ள கடவுளுக்கு ,
இரண்டில் எந்த நிலையில் உள்ள கடவுளுக்கு ,
எந்த கடவுளுக்கு செய்யும் சேவைகள் கடவுளை அடையும் .
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
அதை உணர்ந்து செய்ய வேண்டும் என்கிறார்  திருமூலர் .

புறத்தில் கடவுளுக்கு செய்யும் சேவைகள்,
அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதனுக்கு சென்று சேராது.
அகத்தில் கடவுளைக் கொண்ட மனிதனுக்கு செய்யும் சேவைகள்,
புறத்தில் உள்ள கடவுளுக்கு சேரும் .
கடவுள் ஏற்கும் என்கிறார்  திருமூலர்.



அகவழிபாடு-புறவழிபாடு:
அகவழிபாட்டை உணராமல் , புறவழிபாட்டை அதில் உள்ள தன்மையை தவறாக உணர்ந்து கொண்டதால் தான் இந்த சமுதாயத்தில்
பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட காரணம்;
பல்வேறு கலகங்கள் ஏற்பட காரணம்;
இவை அறியாமை என்ற களங்கம் இதயத்தை சூழ்ந்து இருப்பதால் உண்டாவது .

மக்கள் முன்னேற்றத்திற்கு தடைகளாய் உள்ளவைகளை வரிசைப் படுத்தினால் ,
அனைத்திற்கும் அடித் தளமாக,
தலையானதாக இருப்பது அறியாமை.
அறியாமையே எல்லாவற்றிற்கும் மூலமாக உள்ளது.
அறியாமையே மக்கள் முன்னேற்றத்தில் தடையாக இருந்து முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

அறியாமை என்ற வேரிலிருந்து தான் பிரிவினை என்ற மரம் உருவாகி,
பேராசை , சினம் , கடும்பற்று ,முறையற்ற பால்கவர்ச்சி ,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்ற கிளைகள் வளர்ந்து
பொய் ,சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல்
போன்ற இவைகள் செழித்து வளர்கின்றன .

இதன் மூலம் மதச் சண்டை , சாதி பாகுபாடு , மொழி வெறி,
மலர்கள் பூத்து அமைதியென்னும் மணத்தை
இச்சமுதாயத்தில் பரவ விடாமல் செய்து விடுகின்றன.
இதன் காரணமாக
வேலையில்லாத் திண்டாட்டம் ,வறுமை
போன்ற
கிருமிகள் உருவாகி இச்சமுதாயத்தை அரித்து விடுகின்றன;
மக்களின் சிந்தனையை மழுங்க வைக்கின்றன;
அறிவுச் சாளரம் மூடப் படுகிறது ;
இதனால் மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது;

களைகளைக் களைவதோ,
முட்களை வெட்டுவதோ,
சமுதாய முன்னேற்றத்திற்கான தீர்வாக அமையாது.
மக்கள் முன்னேற்றத்திற்கு தடையாக
அடித்தளமாக உள்ள அறியாமையை விரட்டுவதே,
மக்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் வழி ஆகும்.
அறிவு விளக்கு மனிதனின் மனதில் ஏற்றப் பட்டாலொழிய ,
அறியாமை இருள் அகற்றப் பட முடியாது.

அன்பென்னும் கோயில் கட்டி,
அறிவென்னும் தீபம் ஏற்றி,
சமதானமென்னும் கடவுளை வணங்கி,
அமைதியென்னும் பக்தியை பரப்புவதே,
மக்களை முன்னேற்றுவதற்கான வழி ஆகும்.

அறியாமை நெஞ்சம் கொண்டவர்களால் ,
அறிந்து கொள்ளும் ஆசை இல்லாதவர்களால்,
புற வழிபாட்டின் உண்மை நிலை அறியாமல்,
புற வழிபாட்டின் ரகசியம் புரியாமல்,
அக வழிபாட்டிற்குள் செல்லாமல் இருப்பதே
பிரச்சினைகள் பல தோன்றுவதற்கு காரணம்.
கடவுளின் உண்மை நிலை உணர வேண்டும் என்கிறார்  திருமூலர்.



இயேசு கிறிஸ்து - திருமூலர் :
இயேசு ,ஏழைகளுக்கு செய்வது ஆண்டவனுக்கு செய்வது என்கிறார் .

அவ்வாறே,
திருமூலரும் ,கடவுளுக்கு செய்தால் ஏழைகளுக்கு சென்று சேராது ;
ஏழைகளுக்கு செய்தால் ஆண்டவனுக்கு சென்று சேரும் ;
என்கிறார்  திருமூலர்.


                   “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுபத்து  ந்தான்முற்றே “”