December 31, 2023

ஜபம்-பதிவு-949 மரணமற்ற அஸ்வத்தாமன்-81 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-949

மரணமற்ற அஸ்வத்தாமன்-81

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : என்னுடைய பாக்கியம், மும்மூர்த்திகளின் அம்சமாக இருக்கும் அஸ்திரங்களில் ஒன்றான நாராயணாஸ்திரத்தை நான் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கொடு கிருஷ்ணா, எனக்குக் கொடு.

(என்று அஸ்வத்தாமன் கிருஷ்ணனின் முன்னர் மண்டியிட்டு இருக்கிறார். கிருஷ்ணர் தன் வலது கையை நீட்டுகிறார். அவர் கையில் நாராயணாஸ்திரம் வருகிறது. அதை எடுத்து அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார்.)

அஸ்வத்தாமா! நாராயண அஸ்திரத்தைப் பெற்றுக் கொள்ள தகுதியானவன் நீ. இதைப் பெற்றுக் கொள் என்று கிருஷ்ணன் நாராயண அஸ்திரத்தைத் தருகிறார். இந்தா அஸ்வத்தமா இந்த அஸ்திரத்தை பெற்றுக் கொள்

(என்று கிருஷ்ணர் அஸ்திரத்தை அஸ்வத்தாமனிடம் கொடுக்கிறார். அஸ்வத்தாமன் நாராயணாஸ்திரத்தைப் பெற்றுக் கொள்கிறான்.)

இந்த அஸ்திரத்தை வரவழைக்கும் மந்திரம், செலுத்தும் மந்திரம், திருப்பி வரவழைக்கும் மந்திரம், மறைய வைக்கும் மந்திரம் ஆகியவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்

(என்று சொல்லச் சொல்ல அஸ்வத்தாமன் அதை கவனத்துடன் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.)

அஸ்வத்தாமா! திரிஅஸ்திரங்கள் என சொல்லப்படக்கூடியவை பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம். மூம்மூர்த்திகளுடைய அஸ்திரம் என்ற காரணத்தால் இது திரி அஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.

திரி அஸ்திரங்களில் ஒன்றான நாராயண அஸ்திரத்தை உனக்கு கொடுத்து விட்டேன். அடுத்து என்ன செய்யப் போகிறாய்.

அஸ்வத்தாமன் : பிரம்மாஸ்திரம் பெறப்போகிறேன்.

கிருஷ்ணர் : பிரம்மாவை நோக்கி தவம் செய்யப் போகிறாயா?

அஸ்வத்தாமன் : இல்லை

கிருஷ்ணர் : பிறகு?

அஸ்வத்தாமன் : என் தந்தையிடம் கற்றுக் கொள்ளப் போகிறேன்

கிருஷ்ணர் : உன் தந்தை உனக்கு கற்றுக் கொடுப்பார் என்று நினைக்கிறாயா

அஸ்வத்தாமன் : நான் சீடனாக இருந்து கேட்டால் எனக்குக் கற்றுக் கொடுக்க மாட்டார். அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். மகனாக இருந்து கேட்கும் எதையும் எனக்கு அவர் மறுக்க மாட்டார். கண்டிப்பாக கற்றுக் கொடுப்பார். நான் அவருடைய மகனாக இருந்து கேட்கப் போகிறேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன்.

கிருஷ்ணர் : பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே. அதனை பிரயோகம் செய்வதால் கஷ்டங்கள், துன்பங்கள், வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீ மரணமற்றவன். இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் வரை அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடப் போகிறது. அதனால் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளாதே.

நான் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் கஷ்டப்படத்தான் வேண்டும் என்பது என்னுடைய விதி என்றால் அது பிரம்மாஸ்திரத்தின் மூலம் மட்டும் தான் வரும் என்று கிடையாது. வேறு எந்த ஒன்றினாலும் வரலாம் அல்லவா?

அஸ்வத்தாமன் : நான் தயாராகி விட்டேன். பிரம்மாஸ்திரத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் விடைபெறுகிறேன் கிருஷ்ணா.

(என்று சொல்லி விட்டு அஸ்வத்தாமன் கிளம்பி செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்)

விதியை யாராலும் மாற்ற முடியாது. கடவுளாலும் மாற்ற முடியவில்லையே

(என்று அஸ்வத்தாமன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்)

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-948 மரணமற்ற அஸ்வத்தாமன்-80 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-948

மரணமற்ற அஸ்வத்தாமன்-80

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : எனக்கு அந்த முறைகளைச் சொல் நான் செய்கிறேன்.

கிருஷ்ணர் :  உனக்கு அந்த முறைகளைச் சொல்லித் தர முடியாது.

அஸ்வத்தாமன் : ஏன் முடியாது.

கிருஷ்ணர் :  நீ ஒரு வரம் தான் கேட்டாய். அந்த ஒரு வரமும் சுதர்சன சக்கரம் வேண்டும் என்பது தான். நான் சொன்னது போல் சுதர்சன சக்கரத்தை உனக்குக் கொடுத்து விட்டேன். உன்னால் அதை எடுக்க முடியவில்லை.  அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

இப்போது இரண்டாவது வரமாக சுதர்சன சக்கரத்தைச் சித்தி செய்யும் முறைகளைச் சொல்லித் தரச் சொல்கிறாய். நான் எப்படி உனக்கு சொல்லித் தர முடியும்.

நீ ஒரு வரம் கேட்டாய். கொடுத்து விட்டேன். நான் சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டேன். என்னுடைய கடமை முடிந்தது.

அஸ்வத்தாமன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும். வெறுங்கையுடன் திரும்பிச் செல்லவா.

கிருஷ்ணர் : என்னை நம்பி வந்தவர்களை நான் வெறுங்கையுடன் அனுப்ப மாட்டேன். அனுப்பியதும் கிடையாது, உன்னை ஏமாற்றத்துடன் செல்ல அனுமதிக்க மாட்டேன் உனக்கு சுதர்சன சக்கரத்திற்கு இணையான ஒரு அஸ்திரம் தருகிறேன்.

அஸ்வத்தாமன் : என்ன அஸ்திரம்?

கிருஷ்ணர் : நாராயணாஸ்திரம். நாராயணாஸ்திரம் என்பது திரி அஸ்திரங்களில் ஒன்று. திரி அஸ்திரங்கள் எனப்படுபவை, பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம்.  பிரம்மாவுக்கு உரியது பிரம்மாஸ்திரம், நாராயணனுக்கு உரியது நாராயணாஸ்திரம், சிவனுக்கு உரியது பாசுபதாஸ்திரம்.

நாராயணாஸ்திரம் விஷ்ணுவினுடைய நேரடி அம்சம். இந்த அஸ்திரம் விஷ்ணுவினுடைய நேரடி அம்சம் என்ற காரணத்தினால் அவரிடம் இருந்து மட்டும் தான் அதை நேரடியாகப் பெற முடியும்.

 

இதை ஒரு படையின் மீது பிரயோகம் செய்தால் முதலில் இரண்டு தட்டுகள் கொண்ட ஒரு சக்கரம் உருவாகும்.

வீரர்களின் வலிமைக்கு எற்ற வகையில் அஸ்திரங்கள், ஈட்டிகள், வேல்கள், அம்புகள், கத்திகள் என்று இந்த தட்டு போன்ற சக்கரத்தின் மையத்திலிருந்து வெளிப்படும்.

நாராயணாஸ்திரத்தை ஒரு படையை எதிர்த்து ஒரு முறை ஏவி விட்டால் அது கோடிக்கணக்கான அஸ்திரங்களை தொடர்ந்து எதிரிகள் மீது ஏவிக் கொண்டே இருக்கும். எதிரிகள் அனைவரையும் அழிக்கும் வரை அஸ்திரங்களை அது ஏவிக் கொண்டே இருக்கும்.

தோன்றிய அனைத்து ஆயுதங்களும் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும். மிகப்பெரிய அழிவை உண்டாக்கும்.

நாராயணாஸ்திரத்தை எதிர்க்க எதிர்க்க அதன் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.

அதனை எவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்க்கிறோமோ அந்த அளவுக்கு அது ஆக்ரோஷமாக செயல்படும்.

அதனை எந்த அளவுக்கு கோபத்துடன் எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு அது கோபத்துடன் செயல்படும்.

அது எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்து விடும் சக்தி வாய்ந்தது.

நாராயணாஸ்திரத்தை யாராலும் எதிர்க்க முடியாது. யாராலும் எதிர்த்து போரிட முடியாது.

ஒரு படையில் ஒரு சாதாரண வீரன் இருந்தால் அவனை அழிப்பதற்கு ஒரு சாதாரண அம்பு உருவாகும். அந்த அம்பு அவனை நோக்கி வரும் போது அந்த அஸ்திரத்தை அந்த வீரன் எதிர்த்தால் அந்த அம்பு அவனை அழிக்கும்.

அதைப்போல அந்தப் படையில் சக்தி வாய்ந்த ஒருவர் இருந்தால் அவரை அழிப்பதற்கு சக்தி வாய்ந்த அஸ்திரம் உருவாகும். அந்த அஸ்திரம் அவரை நோக்கி வரும் போது அந்த அஸ்திரத்தை அந்த சக்தி வாய்ந்த வீரன் எதிர்த்தால் அந்த அஸ்திம் அவரை அழிக்கும்.

உடலால் மண்டியிடுவதாக நடித்து, மனதால் கோபத்துடன் அதனை எதிர்த்தாலும், ஈரேழு பதினாலு லோகத்துக்குச் சென்றாலும் அந்த அஸ்திரம் தேடி வந்து கொல்லும் வலிமை வாய்ந்தது.

நாராயணாஸ்திரத்தை தனி நபர் மீது பிரயோகம் செய்யலாம். ஆனால் அந்த தனி நபர் யாராலும் வீழ்த்த முடியாத சக்தி படைத்த மாவீரனாக இருக்க வேண்டும்.

உனக்கு நான் இந்த நாராயணாஸ்திரத்தை இரண்டாவது வரமாகத் தரவில்லை. உன்னுடைய நண்பன் மேல் நீ வைத்திருக்கும் நட்பின் காரணமாக நான் இந்த அஸ்திரத்தை உனக்குத் தருகிறேன்.

என்னை நம்பி வந்து விட்டாய். வெறுங்கையுடன் உன்னை அனுப்ப மாட்டேன்.

என்னுடைய அம்சமாக இருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை உனக்குத் தருகிறேன்.

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

 

 

ஜபம்-பதிவு-947 மரணமற்ற அஸ்வத்தாமன்-79 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-947

மரணமற்ற அஸ்வத்தாமன்-79

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் : நீ மனிதனாக இருந்தால் உன்னைத் தேடி வந்து சுதர்சன சக்கரத்தைக் கேட்டிருக்க மாட்டேன். உன்னை அனைவரும் கடவுள் என்கிறார்கள். அதனால் உன்னைத் தேடி வந்தேன்.

 

கடவுளுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன் நல்லவன் கெட்டவன் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது.

 

உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு நீ வரம் தருவாய் என்று நம்பி வந்தேன்

 

என்னிடம் உண்மையான பக்தி இருக்கிறது. எனக்காக எதையும் நான் கேட்கவில்லை. என் நண்பனுக்காக கேட்கிறேன். என் நண்பனின் வாழ்க்கைக்காக கேட்கிறேன். என் நண்பன் நன்றாக இருக்க வேண்டும் அதற்காகக் கேட்கிறேன்.

 

உண்மையான பக்தி என்பது, தனக்காகவும், தன்னுடைய குடும்பத்திற்காகவும், தன்னுடைய சந்ததிகளுக்காகவும், நலனை வேண்டி இறைவனை வேண்டுவது கிடையாது.

 

பிறருக்காகவும், பிறருடைய நலனுக்காகவும் வேண்டுவது தான் உண்மையான பக்தி.

அந்த உண்மையான பக்தியில் தான் கேட்கிறேன், என்னுடைய நண்பன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறேன்.

 

நான் வைத்திருக்கும் உண்மையான பக்தியைப் புரிந்து கொண்டு எனக்கு சுதர்சன சக்கரத்தைக் கொடு.

 

நான் சுதர்சன சக்கரத்தை இனாமாகக் கேட்கவில்லை, வரமாகக் கேட்கிறேன்

 

உன்னிடம் இருக்கும் சுதர்சன சக்கரத்தை எனக்கு வரமாகக் கேட்கிறேன்

 

உன்னுடைய சுதர்சன சக்கரத்தை எனக்கு வரமாகத் தா.

 

கிருஷ்ணர் : நீ உன் நண்பன் துரியோதனனின் மேல் வைத்திருக்கும் நட்பைக் கண்டு பிரமித்து நிற்கிறேன். உனக்கு நான் சுதர்சன சக்கரத்தைத் தருகிறேன்.

பக்திக்காக உனக்கு நான் சுதர்சன சக்கரத்தைத் தரவில்லை.  நீ உன் நண்பன் துரியோதனனின் மேல் வைத்திருக்கும் நட்புக்காக நான் சுதர்சன சக்கரத்தைத் தருகிறேன்.

சுதர்சன சக்கரம் அந்த மேசையின் மீது இருக்கிறது. எடுத்துக் கொள்.

(அஸ்வத்தாமன் சுதர்சன சக்கரத்தை எடுக்கிறான் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் எடுக்க முடியவில்லை.)

அஸ்வத்தாமன் : கிருஷ்ணா சுதர்சன சக்கரத்தை எடுக்க முடியவில்லை.

கிருஷ்ணர் : உனக்கு நான் சுதர்சன சக்கரம் தருகிறேன் என்று சொன்னேன், தந்து விட்டேன், உன்னால் எடுக்க முடியாவிட்டால் என்ன செய்ய முடியும்.

எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடு. சுதர்சன சக்கரத்தை மறந்து விடு. உனக்கு அது சொந்தமில்லை என்று நினைத்துக் கொள். உனக்காக அது உருவாக்கப்படவில்லை என்று நினைத்துக் கொள்.

 அஸ்வத்தாமன் : கிருஷ்ணா சுதர்சன சக்கரம் எனக்கு கண்டிப்பாக வேண்டும். ஏன் என்னால் எடுக்க முடியவில்லை.

கிருஷ்ணர் : அஸ்வத்தாமா சுதர்சன சக்கரம் ஒரு யந்திரம், அதற்குரிய மந்திரம் இருக்கிறது. தந்திரமும் இருக்கிறது.

சுதர்சன சக்கரம் என்பது ஒரு யந்திரம், அதற்கென்று தனிப்பட்ட மந்திரம் இருக்கிறது, தந்திரம் இருக்கிறது.

மந்திரத்தை உச்சாடணம் செய்து, தவமுறைகளைப் பின்பற்றி தவங்கள் செய்து, விரதமுறைகளைப் பின்பற்றி விரதங்களை செய்தால் மட்டுமே சுதர்சன சக்கரம் சித்தியாகும்.

சுதர்சன சக்கரத்தை யார் சித்தி செய்கிறாரோ அவரால் மட்டும் தான் சுதர்சன சக்கரத்தைத் தொட முடியும். தந்திரத்தைப் பயன்படுத்தி பிரயோகம் செய்ய முடியும். அவருக்கு மட்டும் தான் சுதர்சன சக்கரம் கீழ்படியும். அவர் சொல்படி தான் நடக்கும். அவர் சொல்வதைத் தான் செய்யும், அவரைத் தவிர வேறு யாருக்கும் சுதர்சன சக்கரம் கட்டுப்படாது என்பதை நினைவில் கொள்.

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////