May 25, 2020

அறிய வேண்டியவை-பதிவு-5


             ஜபம்-பதிவு-497
        (அறிய வேண்டியவை-5)

குந்தி :
“நாங்கள் செய்ததில்
எந்த செயலை
தவறான செயல்
என்கிறாய்”

கிருஷ்ணன் :
“நீங்கள் அனைவரும்
செய்த செயல்
தவறான செயல்”

“பிஷையில் கிடைத்தது
பொருளாக இருந்தால்
மட்டுமே அதை
பிஷை என்று
சொல்ல வேண்டும்;
உயிருள்ள
திரௌபதியை
பிஷை என்று
சொன்னது
பாண்டவர்களாகிய
நீங்கள் அனைவரும்
செய்த தவறு “

“ஒரு தாயானவள்
தன்னுடைய
பிள்ளைகளுக்கு
அழியாத அன்பை
மட்டுமே
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியும்;
அழியக்கூடிய
எந்த ஒன்றையும்
சமமாக பிரித்துக்
கொடுக்க முடியாது ;
ஒருவருடைய
கர்ம வினைப்
பயனால் தான்
ஒருவருக்கு
என்ன கிடைக்க
வேண்டுமோ ?
அது அவருக்கு
கிடைக்கும் ;
என்பதை உணர்ந்து
இருக்க வேண்டும்
பெற்ற பிள்ளைகள்
வாழ்வில் அடையும்
உயர்வும் தாழ்வும்
அவரவர் செய்த
கர்ம வினைப்பயனால்
தான் என்பதை
பெற்ற தாயான
அத்தை நீங்கள்
தெரிந்து வைத்து
இருக்க வேண்டும்”

“ஆனால் இத்தகைய
விஷயங்கள் எதையும்
நீங்கள் தெரிந்து
வைத்துக் கொள்ளாமல்
ஐவரும் சமமாக
பிரித்துக்
கொள்ளுங்கள் என்று
சொன்னது அத்தை
உங்களுடைய தவறு”

“கடவுளிடம்
என்ன வரத்தைக்
கேட்க வேண்டும் ;
எப்படி
கேட்க வேண்டும்
என்று தெரியாமல்
தவறாகக் கேட்டது
திரௌபதியின் தவறு“

“ஆக நீங்கள்
அனைவரும்
உங்களுடைய
நிலையை மறந்து
எத்தகைய தவறான
செயலைச்
செய்யக் கூடாதோ
அந்த செயலைச்
செய்துவிட்டீர்கள் “

“எந்த ஒரு
செயலைச் செய்தாலும்
அதற்கு விளைவு
என்ற ஒன்று
உண்டு - அந்த
விளைவிலிருந்து யாரும்
தப்பிக்க முடியாது “
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்”

“இனி ஏற்படப் போகும்
விளைவுகளை நீங்கள்
அனைவரும்
ஏற்றுக் கொள்ளத்
தயாராக இருங்கள் “

குந்தி :
ஏற்படப் போகும்
விளைவுகளை தடுத்து
நிறுத்த முடியாதா
நீ தடுத்து நிறுத்த
மாட்டாயா கிருஷ்ணா

கிருஷ்ணன் :
“கடவுளே என்றாலும்
மனிதனுக்கு
ஏற்படக்கூடிய
விளைவை தடுத்து
நிறுத்தக் கூடாது
தடுத்து நிறுத்தவும்
முடியாது - ஆனால்
விளைவின் தாக்கத்தை
குறைக்க முடியும் “

குந்தி :
“கிருஷ்ணா ! நீ
எங்களுடன் இருந்தாலே
விளைவானது எங்களை
தாக்காதே கிருஷ்ணா “

கிருஷ்ணன் :
“இப்போது தான்
உண்மை என்றால் என்ன
என்று உணர்ந்து
இருக்கிறீர்கள் அத்தை “

(என்று சொல்லி விட்டு
கிருஷ்ணன் அங்கிருந்து
சென்று விடுகிறார்)

“இந்தக் கதையில்
உள்ள அறிய
வேண்டிய
உண்மைகளை
அறிந்து கொண்டாலே
அறிய வேண்டியவை
எவை என்பதை
உணர்ந்து
கொள்ள முடியும் “

“இந்த பிரபஞ்சத்தில்
அறிய வேண்டியவைகள்
கணக்கிலடங்காத
எண்ணிக்கையில்
இருக்கிறது - அறிய
வேண்டியவைகளை
அறிந்து கொள்ள
வேண்டாமா ?
அறிய வேண்டியவை
எவை என்று
பார்ப்போமா ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-4


              ஜபம்-பதிவு-496
          (அறிய வேண்டியவை-4)

மேலும் சிவபெருமான்
“நீ கேட்ட குணங்கள்
அனைத்தையும் ஒருங்கே
கொண்ட மனிதன்
இந்த உலகத்தில்
கிடைப்பது என்பது
இயலாத காரியம்
எனவே இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமற்றவைகளைக்
கேட்காமல் இந்த
உலக நடைமுறைக்கு
சாத்தியமான
வரங்களைக்
கேட்பாயாக “ என்றார்

அதற்கு திரௌபதி
“எத்தகைய விளைவுகள்
வந்தாலும் அதை நான்
பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு வரங்களை
அருளுங்கள்” என்றாள்

“சிவபெருமானும்
வரத்தை
அளித்து விட்டார்
திரௌபதியும்
அந்த வரத்தை
சென்ற ஜென்மத்தில்
பெற்று விட்டாள் “

“சென்ற ஜென்மத்தில்
திரௌபதி
கேட்ட வரங்கள்
இந்த ஜென்மத்தில்
இயக்கத்திற்கு
வந்து விட்டது  ;
அதாவது
நடைமுறைக்கு
வந்து விட்டது ;”

“சென்ற ஜென்மத்தில்
தொட்டு விட்டு
விட்டு விட்டு வந்தது
இப்போது திரௌபதியை
தொற்றிக் கொண்டது “

“இப்போது
இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருப்பது – தர்மர்
சிவன் அருளிய
முதல் வரம்”

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப் போன்று
சிறந்த பலசாலியாக
இருப்பது – பீமன்
சிவன் அருளிய
இரண்டாவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
யாராலும்
வீழ்த்த முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை வீரனாக
இருப்பது – அர்ஜுனன்
சிவன் அருளிய
மூன்றாவது வரம் “

“இப்போது
இந்த உலகமே
நின்று மயங்கி
வேடிக்கை பார்க்கும்
அளவுக்கு அழகு
நிறைந்தவராய்
இருப்பது – நகுலன்
சிவன் அருளிய
நான்காவது வரம் “

“இப்போது
இந்த உலகத்தில்
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
வாழ்ந்து கொண்டு
இருப்பது – சகாதேவன்
சிவன் அருளிய
ஐந்தாவது வரம் “

“இப்போது சொல்லுங்கள்
திரௌபதி
சிவபெருமானிடம்
சென்ற ஜென்மத்தில்
கேட்ட வரங்களின்படி
இப்போது இந்த
உலகத்தில்
ஐவரும் இருக்கிறார்கள் ;
இப்போது
இந்த உலகத்தில்
பாண்டவர்களாக
இருக்கும் ஐவரையும்
திரௌபதி திருமணம்
செய்யலாமா
வேண்டாமா என்பதை
அத்தை நீங்களும்
திரௌபதி
பாண்டவர்கள்
ஆகிய அனைவரும்
தான் முடிவு
செய்ய வேண்டும் “

குந்தி :
“முடிவு எடுக்கும்
பொறுப்பை ஏன்
எங்களிடமே ஒப்படைத்து
விட்டாய் கிருஷ்ணா”

கிருஷ்ணன் :
“மனிதன் எந்த
ஒரு செயலைச்
செய்யும் போதும்
ஒன்றுக்கு பலமுறை
யோசித்து தான்
செய்ய வேண்டும் ;
அவ்வாறு செயலைச்
செய்யும் போது
தான் செய்யும் செயல்
நல்ல செயலா
அல்லது
தவறான செயலா
என்பதை யோசித்துப்
பார்த்துத் தான்
செய்ய  வேண்டும் ;
யோசித்த பிறகே
எந்த ஒரு செயலையும்
செய்ய வேண்டும்  ; “

“ஏனென்றால்
எந்த ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு ;
ஒரு செயலைச்
செய்து விட்டு
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்ப
முடியாது என்பதை
உணர்ந்து செயலைச்
செய்ய வேண்டும் ;”

“ஆனால், நீங்கள்
அனைவரும்
செயலைச்
செய்வதற்கு முன்னர்
யோசிக்கவே இல்லை ;
செய்யும் எந்த
ஒரு செயலுக்கும்
விளைவு உண்டு
என்பதையும் ;
செயலைச்
செய்து விட்டு
விளைவிலிருந்து
யாரும் தப்ப முடியாது
என்பதையும் l
யோசிக்காமல்
தவறான செயலைச்
செய்து இருக்கிறீர்கள் “

“செய்யக் கூடாத
தவறுகள்
அனைத்தையும்
செய்து விட்டு
முடிவுகளை மட்டும்
நான் எப்படி
எடுக்க முடியும் ;
முடிவை நீங்கள்
அனைவரும் தான்
எடுக்க வேண்டும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-3


               ஜபம்-பதிவு-495
           (அறிய வேண்டியவை-3)

“விட்ட குறை
தொட்ட குறை என்று
ஒரு வார்த்தை உண்டு
அந்த வார்த்தையைக்
கேள்வி பட்டிருக்கிறீர்களா”

“போன ஜென்மத்தில்
ஒரு செயலைச்
செய்ய வேண்டும்
என்று ஆரம்பித்து
அந்த செயலைச் செய்து
கொண்டிருக்கும் போது
அந்த செயல்
முடிவடைதற்குள்ளாகவே
மரணம் என்பது
ஏற்பட்டு விட்டால்
அந்த செயலை
முடிப்பதற்காக
அடுத்தாற்போல் மீண்டும்
ஒரு ஜென்மம் எடுத்து
சென்ற ஜென்மத்தில்
தொட்டு பிறகு
விட்டு விட்டு வந்த
அந்த செயலை இந்த
ஜென்மத்தில் தொடர
வேண்டும் என்பதே
அதற்கு அர்த்தம் “

“திரௌபதியின்
வாழ்க்கையிலும்
இத்தகைய ஒரு
நிகழ்வு தான்
நடந்து இருக்கிறது”

“திரௌபதி சென்ற
ஜென்மத்தில் கடலை
சங்குக்குள் அடைக்க
முற்பட்டாள் ;
காற்றை குடுவைக்குள்
அடைக்க முற்பட்டாள் ;
இந்த உலகத்தில்
யாரும் செய்ய
முடியாத செயலை
செய்ய முற்பட்டாள் ;
ஆம் திரௌபதி
சென்ற ஜென்மத்தில்
யாரும் நினைத்து
பார்க்க முடியாத
யாரும் இது வரை
கேட்காத வரத்தைப்
பெற வேண்டும்
என்று சிவபெருமானை
நோக்கி கடும்
தவம் புரிந்தாள் “

“அவளுடைய கடுமையான
தவத்தை மெச்சிய
சிவபெருமான் நேரில்
தோன்றி திரௌபதிக்கு
வரத்தை தர
முயற்சித்த போது
தனக்கு இந்த வரங்களை
இந்த ஜென்மத்தில்
அளித்து அதை
அடுத்த ஜென்மத்தில்
அனுபவிக்கும் படி
செய்தால் போதும்
என்று சொல்லி விட்டாள் “

“ஒரு வரத்திற்குள்
ஐந்து வரங்களை
சிவபெருமானிடம்
கேட்டாள் திரௌபதி
அனைத்தையும்
அளிக்கவல்ல
சிவபெருமான் அவள்
கேட்டதையும்
அளித்து விட்டார் “

குந்தி :
“அப்படி என்ன வரம்
கேட்டாள் திரௌபதி”

கிருஷ்ணன் :
“சிவபெருமானிடம்
அவள் என்ன
வரங்களைக் கேட்டாள்
என்று தெரியுமா
அவளுக்கு
வாய்க்கும் கணவன்

இந்த உலகத்திலேயே
சிறந்த தர்மவானாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும்
வெல்ல முடியாத
ஆஞ்சநேயரைப்
போன்று சிறந்த
பலசாலியாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்தில்
யாராலும் வீழ்த்த
முடியாத
பரசுராமனைப்
போன்ற சிறந்த
வில் வித்தை
வீரனாக
இருக்க வேண்டும் ;

இந்த உலகமே
நின்று வேடிக்கை
பார்க்கும் அளவுக்கு
அழகு நிறைந்தவராய்
இருக்க வேண்டும் ;

இந்த உலகத்திற்கே
பொறுமைக்கு ஒரு
எடுத்துக் காட்டாய்
இருப்பவராய்
இருக்க வேண்டும் ;

என்ற வரங்களைக்
கேட்டாள் திரௌபதி “

அதற்கு சிவபெருமான்
”கடவுளை வணங்கி
தனக்கு என்ன
தேவையோ அதை
கேட்கும் போது
வார்த்தைகளைச்
சரியாக பயன்படுத்தி
கவனமாக
கேட்க வேண்டும் ;
ஏற்படப் போகும்
விளைவுகளை
உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகள் என்பது
மிக முக்கியம்
என்பதை உணர்ந்து
கேட்க வேண்டும் ;
வார்த்தைகளில் உள்ள
முக்கியத்துவத்தை
அறிந்து
கேட்க வேண்டும் ;
தான் கேட்பவை
தனக்கு பாதிப்பை
உண்டாக்குமா
என்பதை அறிந்து
கேட்க வேண்டும் ;
அப்படி உணர்ந்து
கேட்கவில்லை எனில்
தான் கேட்டவைக்குரிய
விளைவுளைகளை
அனுபவித்துத் தான்
ஆக வேண்டும் ;
கடவுளிடம்
வரங்களைக் கேட்கும்
போது வார்த்தைகளைப்
பார்த்து அதில்
உள்ள அர்த்தங்களை
அறிந்து தான் கேட்க
வேண்டும் “ என்றார்

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 25-05-2020
//////////////////////////////////////////