June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-12


               ஜபம்-பதிவு-504
           (அறிய வேண்டியவை-12)

துரோணர் :
“அக்னி ஏற்பட்டால்
வருணமந்திரத்தைச்
சொல்லும் போது
நீர் வரும் அதைப்
பயன்படுத்தி தீயை
அணைக்க வேண்டும்
என்று நான்
எப்படி சொல்லிக்
கொடுத்தேனோ
அதை மட்டுமே
யோசித்துக் கொண்டு
தீயை அணைக்க மட்டுமே
வருணமந்திரம்
பயன்படும் - மற்ற
எதற்காகவாவது
பயன்படுமா என்பதை
சிந்திக்காமல் விட்டு
விட்டீர்கள்”

“வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
நீர் வரும் என்றால்,
நமக்கு நீர்
தேவைப்படும் சமயத்தில்
வருணமந்திரத்தைப்
பயன்படுத்தினால்
வரும் நீரை
பயன்படுத்திக் கொள்ளலாம்
என்பதை அர்ஜுனன்
உணர்ந்து கொண்டான் ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும் - இந்த
நிலையில் நின்று
யோசிக்கவேயில்லை ;

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
மாறுபட்ட
கோணத்தில் யோசித்து
பயன்படுத்தவில்லை ;”

“அர்ஜுனனைத் தவிர
வேறு யாரும்
நீரை வரவழைக்கும்
வருணமந்திரத்தை
எப்படி எல்லாம்
பயன்படுத்தலாம்
என்பதை யோசித்து
பயன்படுத்தவில்லை ;”
எத்தகைய சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்
யோசிக்கவில்லை ; “

“மந்திரங்கள் என்பவை
மனப்பாடமாக
மனதில் இருக்க
வேண்டும்;
அப்போது தான் எந்த
ஒரு சூழ்நிலையிலும்
மந்திரத்தை
பயன்படுத்த முடியும் ;
அர்ஜுனனைத் தவிர
நீங்கள் யாரும்
மந்திரங்களை
மனப்பாடமும்
செய்யவில்லை;
மந்திரங்களை
மனதில்
நிறுத்தவுமில்லை;
எந்த சூழ்நிலையில்
மந்திரத்தை பயன்படுத்த
வேண்டும் என்று
தெரியவுமில்லை ;
மந்திரங்களை
பயன்படுத்துவதற்கு
தகுந்த சூழ்நிலை
வாய்த்தும்
பயன்படுத்தவுமில்லை;”

“குருவானவர் அளிக்கும்
நிலையில் இருக்கிறார்
சீடர்கள் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
இருக்கிறார்கள்;
குருவானவர் அளிப்பதில்
எந்தவிதமான
மாறுபாட்டையும்
காட்டுவதில்லை;
ஆனால் ஏற்றுக்
கொள்ளும் நிலையில்
தான் சீடர்கள்
மாறுபடுகிறீர்கள் ;”

“கல்வியை உங்கள்
அனைவருக்கும் நான்
சமமாகத் தான்
பயிற்றுவித்தேன் - ஆனால்
அர்ஜுனனைத் தவிர
கற்றுக் கொடுத்த
கல்வியை நீங்கள்
எங்கே ? எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசிக்கவேயில்லை ;
பயிற்சியும்
செய்யவில்லை ;
முயற்சியும்
செய்யவில்லை ;“

“ஆனால் அர்ஜுனன்
மட்டுமே நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
முயற்சி செய்து
பயிற்சி செய்தான் ;
நான் கற்றுக்
கொடுத்த கல்வியை
எங்கே ?எப்படி ?
எப்போது ?
எந்த வகையில் ?
பயன்படுத்த
வேண்டும் என்று
யோசித்தான் ;
பயன்படுத்தினான்;”

“அது மட்டுமில்லை
அர்ஜுனன் - நான்
கற்றுக் கொடுத்த
கல்வியை அப்படியே
பயன்படுத்தாமல்
அதை எப்படி
பயன்படுத்தலாம்
என்பதையும்
யோசித்தான் ;
ஆனால் நீங்கள் யாரும்
அப்படி யோசிக்கவில்லை “

“இப்பொழுது
புரிந்து கொண்டீர்களா
அர்ஜுனன் ஏன் உங்களை
விட சிறந்தவனாக
இருக்கிறான் என்பதை”

(அனைவரும் தலை
குனிந்து நின்றனர்)

“இந்த கதையில்
அறிந்து கொள்ள
வேண்டிய உண்மை
என்னவென்றால்
ஒருவர் நம்மை
விடதிறமைசாலியாக
இருந்தால்
நாமும் நம்முடைய
திறமையை வளர்த்து
அவரைப் போல
திறமை சாலியாக
முயற்சி செய்ய
வேண்டுமே ஒழிய
அவரைப் பார்த்து
பொறாமைப்படக்
கூடாது என்பதையும்;

குருவானவர்
சீடர்கள் அனைவருக்கும்
கல்வியை ஒரே மாதிரி
தான் போதிக்கிறார் ;
அதை ஏற்றுக் கொள்ளும்
வகையில் தான் சீடர்கள்
மாறுபடுகிறார்கள்
என்பதும் புலப்படுகிறது “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-11


               ஜபம்-பதிவு-503
          (அறிய வேண்டியவை-11)

துரோணர் :
“நான் உங்களுக்கு
வருண மந்திரத்தை
உபதேசித்து
இருக்கிறேன் அல்லவா?”

துரியோதனன் :
“ஆமாம்”

துரோணர் :
“அதை ஏன்
பயன்படுத்தவில்லை”

துரியோதனன் :
“அக்னி உருவானால்  
வருணமந்திரத்தை
பயன்படுத்த வேண்டும்
என்று நீங்கள்
சொல்லிக் கொடுத்து
இருக்கிறீர்கள்;
அக்னி உருவாகாததால்
நாங்கள்
வருணமந்திரத்தைப்
பயன் படுத்தவில்லை “

துரோணர் :
“வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்பது
உண்மை தானே?”

துரியோதனன் :
“ஆமாம்! குருநாதா”

துரோணர் :
“நீங்கள் குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருண மந்திரத்தை
சொல்லி இருந்தால்
குடம் நிரம்பி
இருக்குமா இருக்காதா?”

துரியோதனன் :
“ஆமாம்! நிரம்பி இருக்கும்”

துரோணர் :
“ஆமாம்! அர்ஜுனன்
இந்த செயலைத்
தான் செய்தான் ;
குடத்தை நீரில்
அழுத்திப் பிடித்துக்
கொண்டு
வருணமந்திரத்தை
செபித்தான் ;
குடத்தில் நீர்
நிரம்பி விட்டது “

“அர்ஜுனனுடைய குடம்
நிரம்பியதற்கான
காரணத்தை நீங்கள்
தெரிந்து கொண்டு
விட்டீர்கள் அல்லவா?”

துரியோதனன் :
“தெரிந்து
கொண்டு விட்டோம்”

துரோணர் :
“சரி உங்களுடைய
குடங்களை
எடுத்துக் கொண்டு
மீண்டும் செல்லுங்கள்;
குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருணமந்திரத்தை
செபித்து குடத்தை
நிரப்பி கொண்டு
வாருங்கள் ;
அனைவரும் செல்லுங்கள் ;”

(அனைவரும் குடத்தை
எடுத்துக் கொண்டு
ஆற்றை அடைந்தனர் ;
குடத்தை ஆற்று
நீரில் அழுத்திப்
பிடித்துக் கொண்டு
வருணமந்திரத்தை
சொல்ல முயற்சி
செய்த போது
யாராலும் சரியாக
வருணமந்திரத்தை
சரியாக உச்சரிக்க
முடியவில்லை ;
பலருக்கு வருணமந்திரம்
மறந்து விட்டது ;
அதனால் யாராலும்
குடத்தில் ஆற்று நீரை
நிரப்ப முடியவில்லை ;
தோல்வியுடன்
குருவை நாடி வந்தனர் ;
துரோணர் முன்பு
குடத்தை வைத்தனர் )

துரோணர் :
“யாராவது
குடத்தில் நீரை
நிரப்பி இருக்கிறீர்களா ?”

துரியோதனன் :
“எங்களால் முடியவில்லை”

துரோணர் :
“துரியோதனா நான்
வருணமந்திரத்தை
உங்கள் அனைவருக்குமே
சொல்லிக் கொடுத்தேன் ;
வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்றும்
சொல்லிக் கொடுத்தேன்;
குடத்தில் நீரை நிரப்பி
வாருங்கள் என்று
நான் அனைவரிடமும்
சொன்ன போது
அர்ஜுனன் மட்டுமே
வருணமந்திரத்தை
பயன்படுத்தினால்
நீர் வரும்
என்பதை உணர்ந்து
வருணமந்திரத்தை
எந்த சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும்
என்பதை உணர்ந்து
வருணமந்திரத்தைப்
பயன்படுத்தி குடத்தில்
நீரை நிரப்பி
நீர் நிரம்பிய
குடத்தைக்
கொண்டு வந்தான்;
வருணமந்திரத்தை
எந்த சூழ்நிலையில்
எப்படி பயன்படுத்த
வேண்டுமோ
அப்படி பயன்படுத்தி
குடத்தில் நீரை
நிரப்பி குடத்தை
கொண்டு வந்தான் ;
நீங்கள் யாரும்
அவ்வாறு
செய்யவில்லை ;”

“மீண்டும் உங்களுக்கு
சொன்னேன் ;
வருணமந்திரத்தை
சொன்னால் குடத்தில்
நீர் நிரம்பும்
என்று சொன்னேன் ;
நீரை நிரப்பி
வாருங்கள் என்று
சொன்னேன் - உங்களில்
சிலர் வருணமந்திரத்தை
மறந்து விட்டனர் ;
பலர் வருணமந்திரத்தை
சரியாக
உச்சரிக்கவில்லை ;
அதனால் உங்களால்
குடத்தில் நீரை நிரப்ப
முடியவில்லை “

“நான் வருணமந்திரத்தை
சொன்னால் நீர்
வரும் என்று
அனைவருக்கும்
சொல்லிக் கொடுத்தேன்
அர்ஜுனன் மட்டுமே
வருணமந்திரத்தை
எங்கே பயன்படுத்த
வேண்டும் ;
எப்படி பயன்படுத்த
வேண்டும் ;
எந்த நிகழ்வில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த நேரத்தில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த காலத்தில்
பயன்படுத்த வேண்டும் ;
எந்த இக்கட்டான
சூழ்நிலையில்
பயன்படுத்த வேண்டும் ;
என்று யோசித்தான் ;
பயன்படுத்தினான் ;
வெற்றி பெற்றான் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-10


                 ஜபம்-பதிவு-502
           (அறிய வேண்டியவை-10)

(மறுநாள் காலை
பாண்டவர்கள் மற்றும்
கௌரவர்கள்
அனைவரும் துரோணர்
முன்பு வந்து
வந்து நின்றனர்;

துரோணர் முன்பு
குடங்கள் அடுக்கி
வைக்கப்பட்டிருந்தன)

துரோணர் :
“இந்தக் குடங்களில்
ஆளுக்கொன்று
எடுத்துக் கொள்ளுங்கள் ;
அருகில் இருக்கும்
ஆற்றிற்குச் சென்று
இந்தக் குடம்
முழுவதும் நீர்
நிரப்பி கொண்டு
வாருங்கள் - யார்
முதலில் வருகிறாரோ
அவரே வெற்றி
பெற்றவர் “

“எனவே ஆளுக்கொரு
குடத்தை எடுத்துக்
கொண்டு உடனே
செல்லுங்கள் “

(பாண்டவர்கள் ஐவர்
மற்றும் கௌரவர்கள்
அனைவரும்
ஆளுக்கொரு குடத்தை
எடுத்துக் கொண்டு
குடத்தைப்  பார்த்தனர் ;
அனைவருக்கும் அதிர்ச்சி
குடத்தின் வாய்
மூடப்பட்டிருந்தது ;
குடத்தின் வாயில்
ஒரு சிறு துளை
மட்டுமே இருந்தது)

துரியோதனன் :
“குருதேவா! இந்தக்
குடத்தின் வாயில்
உள்ள துளையானது
மிளகு நுழையும்
அளவிற்குத் தான்
உள்ளது-அதுவும்
மிகச் சிறியதாக
இருக்கிறது
இந்தக் குடத்தில்
எப்படி ஆற்று நீரை
நிரப்பி கொண்டு வருவது”

துரோணர் :
“நான் சொன்னதை
செய்யுங்கள்  ;
செல்லுங்கள் “

(அனைவரும்
அங்கிருந்து அகன்றனர் ;
ஆற்றை நோக்கி
சென்றனர் – ஆற்று
நீரில் குடத்தை அழுத்தி
பிடித்துக் கொண்டு
நீரை நிரப்ப
அனைவரும் முயற்சி
செய்து கொண்டிருந்தனர் ;
அர்ஜுனன் குடத்தை
ஆற்று நீரில்
சிறிது நேரம் அழுத்தி
பிடித்துக் கொண்டான் ;
குடத்தை எடுத்தான் ;
யாரிடமும் எதுவும்
பேசவில்லை ;
குடத்தை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து
சென்று விட்டான்)

துச்சாதனன் :
“அண்ணா! அர்ஜுனன்
உடனே சென்று விட்டான் “

துரியோதனன் :
“அர்ஜுனனால் முயற்சி
செய்து கூட பார்க்க
முடியவில்லை ;
தன்னால் இச்செயலைச்
செய்ய முடியவில்லை
என்று மன்னிப்பு கேட்க
குருவைத் தேடிச்
சென்றிருப்பான் ;
நாம் செய்ய நினைக்கும்
முயற்சியைக் கூட
அவனால் செய்ய
முடியவில்லை ;
இதிலிருந்து தெரிகிறதா
அர்ஜுனன் ஒரு
கோழை என்று ;”

நாம் முடிந்த அளவு
முயற்சி செய்வோம் ;
பிறகு குருவை
சந்திக்க செல்லலாம் ;”

(கெளரவர்களோடு
மீதியுள்ள பாண்டவர்களும்
எவ்வளவோ முயற்சி
செய்தும் அவர்களால்
குடத்தில் ஒரு சில
துளிகள் மட்டுமே
நீரை நிரப்ப முடிந்தது ;
அந்த குடத்தை
எடுத்துக் கொண்டு
சென்று குருவின்
முன்னால் வைத்தனர்)

துரியோதனன் :
“எங்களால் முடிந்த
அளவு முயற்சி செய்து
இந்த குடத்தில் நீரை
சேகரித்திருக்கிறோம்  ;
ஆனால், அர்ஜுனன்
முயற்சி ஏதும் செய்யாமல்
பயந்து உடனே ஓடி
வந்து விட்டான் “

துரோணர் :
“நீங்கள் அனைவரும்
இங்கு வந்து
அர்ஜுனனுடைய
குடத்தில் நீர்
நிரம்பி இருக்கிறதா ?
இல்லையா ?
என்று பாருங்கள் “

(அனைவரும் வந்து
அர்ஜுனன் குடத்தை
தூக்கினர் குடம்
முழுவதும் நீர்
நிரம்பி இருந்தது)

துரியோதனன் :
“எப்படி இது சாத்தியம் ;
இது நடப்பதற்கு
வாய்ப்பே இல்லை ;
எங்கள் முன்னால்
ஓடி வந்தவனுடைய
குடத்தில் எப்படி
ஆற்று நீர்  
நிரம்பி இருக்கும் ;
குடத்தை செய்யும்
போதே நீரை ஊற்றி
செய்து இருப்பார்களோ?”

துரோணர் :
“குடத்தை செய்யும்
போது எப்படி நீர்
நிரப்ப முடியும்
யோசிக்காமல்
பேசுகிறாயே
துரியோதனா ? “

(அனைவரும்
சிரிக்கின்றனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////