June 02, 2020

அறிய வேண்டியவை-பதிவு-9


              ஜபம்-பதிவு-501
         (அறிய வேண்டியவை-9)

(துரோணர் குருகுலத்தில்
அமர்ந்து கொண்டிருந்தார் ;
துரியோதனன் துச்சாதனன்
மற்றும் அவருடைய
சகோதரர்கள் துரோணரிடம்
வந்து நின்றனர் )

துரியோதனன் :
“வணங்குகிறோம் குருவே !”

துரோணர் :
“வாருங்கள் ஏதேனும்
சொல்ல வந்தீர்களா ?
அல்லது ஏதேனும்
கேட்க வந்தீர்களா ? “

துரியோதனன் :
“இல்லை எங்களுக்கு
ஏற்பட்டிருக்கும்
சந்தேகத்தை தீர்த்துக்
கொள்வதற்காக வந்தோம்”

துரோணர் :
“சந்தேகம் என்பது
நமக்கு உள்ளே
நுழைந்தால்
நிம்மதி என்பது
நம்மை விட்டு
வெளியேறி விடும் ;
சந்தேகம் என்பது
உள்ளே வரும் போது
தனியாக வருவதில்லை ;
கூடவே கோபத்தையும்
பகைமையையும் சேர்த்தே
கூட்டிக் கொண்டு வரும் ;”

“ஆகவே , சந்தேகம்
என்பது ஏற்பட்டால்
உடனே அதனை
தீர்த்து விட வேண்டும்  ;
இல்லை என்றால்
அது வாழ்க்கையை
சூன்யமாக்கி விடும் “

“உங்களுக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகம் தான் என்ன?”

துரியோதனன் :
“குருவாக இருப்பவர்
சீடர்களுக்கு பாடங்களைக்
கற்றுத் தரும் போது
அனைவரையும்
சமமாகப் பாவித்து
அனைவருக்கும்
சமமான கல்வியைத்
தானே கற்றுத்
தர வேண்டும் “

துரோணர் :
:ஆமாம்! “

துரியோதனன் :
“ஆனால் குருவாக
இருக்கும் தாங்கள்
சீடர்களுக்கு கல்வியை
சமமாக கற்றுத்
தருவதில்லை ;
உங்களுக்கு
பிடித்தவர்களுக்கு
ஒரு மாதிரியும் ;
பிடிக்காதவர்களுக்கு
வேறு மாதிரியும் ;
கல்வியைக் கற்றுத்
தருகிறீர்கள் என்றும்
வேண்டப்பட்டவர்களுக்கு
மட்டும் முக்கியமான
விஷயங்களை
கற்றுத் தருகிறீர்கள் ;
என்றும் - நாங்கள்
சந்தேகப் படுகிறோம் “

துரோணர் :
“எதனால் இந்த
சந்தேகம் உங்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது ? “

துரியோதனன் :
“அர்ஜுனன் எங்களை
விட அனைத்து
கலைகளிலும்
சிறந்தவனாக
விளங்குகிறான் ;
நீங்களும் அவனிடம்
தனிப்பட்ட பிரியம்
காட்டுகிறீர்கள் ;
பிரதான சீடன்
என்ற நிலையில்  
அர்ஜுனனை
வைத்திருக்கிறீர்கள் ;
எங்களுக்கு கற்றுத்
தராத கல்வியை
அர்ஜுனனுக்கு
தனிப்பட்ட முறையில்
கற்றுத் தருகிறீர்கள்
என்ற சந்தேகம்
எங்களுக்கு
ஏற்பட்டிருக்கிறது ;”

துரோணர் :
“உங்களுக்கு என் மீதும்
நான் கற்றுக்
கொடுக்கும்
கல்வியின் மீதும்
சந்தேகம் ஏற்பட்டுள்ளது  ;
உங்களுக்கு ஏற்பட்டுள்ள
இந்த சந்தேகத்தை
நான் தீர்க்காமல்
கல்வியைத்
தொடர்ந்தால்
நான் சொல்லிக்
கொடுக்கும்
கல்வியால் யாருக்கும்
எந்தவிதமான நன்மையும்
ஏற்படப்போவதில்லை”

“உங்கள் மனதில்
ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை தீர்க்காமல்
நான் கல்வி
போதிப்பதை தொடர்ந்தால்
நீங்கள் - என்னுடைய
ஒவ்வொரு அசைவையும்
கண்காணிப்பீர்கள் ;
நான் எங்கே செல்கிறேன் ;
எங்கே போகிறேன் ;
என்று வேவு பார்ப்பீர்கள் ;
யாரிடம் பேசினாலும்
உங்களுக்கு
சந்தேகம் ஏற்படும் ;
அர்ஜுனனை - நான்
சந்தித்து பேசினாலும்
தனிப்பட்ட முறையில்
கல்வியை போதிப்பதாக
நினைத்துக் கொள்வீர்கள் ;
என்னை தனிமையில்
இருக்கவும் விட
மாட்டீர்கள் ;
நான் தனிமையில்
என்ன செய்து
கொண்டிருக்கிறேன்
என்று பார்த்துக்
கொண்டிருப்பீர்கள் ;
என்னுடைய
சுதந்திரம் பறிபோகும் ;”

“நான் என்ன
வார்த்தைகளை
பயன்படுத்தி சொன்னாலும்
எத்தகைய
உதாரணங்களைக்
காட்டினாலும்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை
தீர்க்க முடியாது”

“சந்தேகம் என்பது
ஒரு மன வியாதி ;
அனுபவமே சந்தேகத்தை
தீர்க்கும் மருந்து ;”

“நாளை காலை வாருங்கள்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள
சந்தேகத்தை
நீங்களே உங்களுக்கு
ஏற்படப் போகும்
அனுபவத்தின் மூலம்
தீர்த்துக் கொள்ளப்
போகிறீர்கள்”

(அனைவரும்
சென்று விடுகின்றனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 02-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment