Showing posts with label சிவவாக்கியர். Show all posts
Showing posts with label சிவவாக்கியர். Show all posts

November 12, 2011

சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்


            சிவவாக்கியர் -ராம நாம ஜெபம்
சிவம் என்றால் என்ன என்று உணர்ந்தவர்  சிவவாக்கியர் தான் உணர்ந்த சிவத்தை எழுத்தாக்கி வார்த்தையாக்கி வாக்கியமாக்கி அனைவரும் சிவம் என்பதின் உண்மைப் பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற  உயரிய நோக்கில் பாடலாக்கியவர்  சிவவாக்கியர்

சமுதாயத்தில் நிலவிவரும் தவறான கடவுள் கொள்கைகளை பின்பற்றுபவர்களை சமுதாயத்தில் நிலவிவரும் தவறான நடவடிக்கைகளை  தவறு என்று தைரியமாக சுட்டி காட்டி சிவத்தின் உண்மைப் பொருளை இந்த உலகத்திற்குச் சுட்டிக் காட்ட வாக்கியத்தில் எழுதிவைத்ததால் இவர் சிவவாக்கியர்

இவருடைய பாடலில் சில வரிகளில் ராம நாம என்ற வார்த்தை வருவதால் இந்த பாடல் இவர்  எழுதவில்லை என்கின்றனர் சிலர்
இப்பாடல்கள் வைஷ்ணவர்  காலத்தில் எழுதப்பட்டது என்கின்றனர்  சிலர்
எது எப்படி இருந்தாலும் இப்பாடல்களின் அர்த்தத்தை நாம் இப்பொழுது பார்ப்போம்



“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
    சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
    சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
    எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””
                                                                           --------சிவவாக்கியர்-------------
“””””””அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் “””””””
அந்தி - பகல் பொழுது முடியும் நேரம் - அதாவது அந்தி மயங்கி இருட்டத் தொடங்கியது என்று பொருள்
மாலை - பிற்பகலுக்கு பின்னர்  சூரியன் மறையும் வரை உள்ள நேரம் - சாயங்காலம்
உச்சி - பகல் பன்னிரண்டு மணி

இந்த மூன்று வேளைகளிலும் உடலைத் துhய்மைப்படுத்துகிறோம் உடலைத் துhய்மைப்படுத்தி புற வழிபாடு செய்வதால் என்ன பயன் இருக்கிறது ஒரு பயனும் இல்லை
அக வழிபாட்டின் மூலம் பெறப்படும் பயன்களை அடுத்த அடிகளில் குறிப்பிடுகிறார்



””””””சந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்”””””””””””””””
சந்தி
பகலும் இரவும் சந்திக்கும் நேரம்-சந்தி எனப்படுகிறது
இதைப் பகலும், இரவும் பிரியும் நேரம் என்றும் சொல்லலாம்
இந்த சந்தி ஒரு நாளில் இரண்டு முறை நடைபெறுகிறது இரண்டு பெயர்களால் அழைக்கப்படுகிறது
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் - விடியல் என்றும்
பகலும் இரவும் சந்திக்கும் நேரம் - மாலைப் பொழுது என்றும் கூறப்படுகிறது

இறந்தவரை நினைத்துக் காலையில் ஒப்பாரி  வைப்பதைச் சந்தி அழுகை என்பார்கள்
அதாவது சந்தியில் ஜபம்
சந்தி வேளையில் செய்யப்படும் தர்ப்பணங்கள் தபங்கள் செபங்கள் இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய செய்யப்படுபவை

சந்தி வேளையில் செய்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையுமா என்ன முறையைக் கையாண்டால் இறந்த ஆத்மா சாந்தி அடையும் என்பதைப பற்றிப்  பார்ப்போம்

இரவு பகல் என்றால்
இரவுக்கு அதிபதி நிலா - அதை இடது நாடி இடகலை என்றும,
பகலுக்கு அதிபதி அதாவது பகலை ஆள்வது சூரியன் - வலது நாடி - பிங்கலை என்றும்
இந்த இரண்டு நாடிகளும் சந்திக்கும் இடம் நெற்றிக் கண் அங்கே பார்த்தால் அருள் இருக்கும்

இந்த இடத்தில் வைத்து இறந்தவர்களை நினைத்து தபங்கள் தர்ப்பணங்கள் செபங்கள் செய்ய ஆத்மா சாந்தி அடையும்
இதை அகவழிபாடு மூலம் செய்ய வேண்டும்

புற வழிபாடு மூலம்  செய்வதால் எந்த பயனும் இல்லை புற வழிபாட்டால் எந்த ஆத்மாவும் சாந்தி அடையர்து
இரண்டு நாடிகளும் சேர்ந்தால் ஆத்மா சாந்தி அடையும் என்பதைப் பற்றி சொன்ன சிவவாக்கியர் எப்படி சேர வேண்டும் என்பதை அடுத்த இரண்டு அடிகளில் சொல்கிறார்



“”””””””சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம் 
       எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””””” 
இரண்டு நாடிகளும் சேர வேண்டுமென்றால், தினம் செபிக்கும் மந்திரம் ஒன்று ஒன்று உண்டு அது என்ன என்று விளக்குகிறார்

ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன உள்ளே இழுக்க வேண்டும்
என வெளியே விட வேண்டும்
இதுவே ராம நாம ஜெபம் எனப்படுகிறது

ராம ராம ராம ராம என்று தொடர்ந்து ஜெபிக்க அதாவது ராம நாம ஜெபம் என்னும் மூச்சுப் பயிற்சியைச் செய்ய படர்க்கையாக விரிந்த நிலையில் உள்ள மனம் அடங்கி நம் கட்டுக்குள் வந்து உயிருடன் இணைகிறது
இதை விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது என்று சொல்லலாம்

ஏவ்வாறெனில் ராம என்று சொல்ல மூச்சுக்காற்றான பிராணன் அக்கினியாக உருவாகி குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி சகஸ்ராரத்தின் வாசல்களைத் திறந்து சிவனுடன் இணையச் செய்கிறது
இங்கே ராம ராம என்ற சொல் வினைவேக ஊக்கியாகச் செயல்படுகிறது   

மேற்கண்ட ரகசியங்களை யார் ஒருவர்  உணர்ந்து கொண்டு ராம ராம - என்ற வார்த்தையைப் பயன்படுத்தி மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கச் செய்கிறார்களோ அவர்களே  முக்தி அடைய முடியும் என்று சிவவாக்கியர் கூறுகிறார்



சிவவாக்கியர்----ராம நாம ஜெபம்----கர்ம வினைகள்
ராம நாம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியைப் பயன் படுத்தி எவ்வாறு கர்ம வினைகளைத் தீர்ப்பது என்பதைப் பற்றி  சிவவாக்கியர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்


“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
        இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
        சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே”””””””””””

                                                                           ----------------சிவவாக்கியர்-------------


எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்தை கண்டு பிடித்து எதற்காக பிறந்தோமோ அந்த கடமையை முடித்து விட்டு எதில் போய் சேர வேண்டுமோ? அதில் போய் சேர்ந்து பிறவிப் பெருங்கடலை முடிக்க வேண்டும்

“””””””””கதாவு பஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்”””””””””””
இந்த பிறவிப் பெருங்கடலைக் கடக்க தடையாக இருப்பவை கர்மவினைகள் இந்த கர்மவினைகள் எப்படி தோன்றுகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்
கர்ம வினைகள்
மனிதனிடம் ஆறு வகையான குணங்கள் இருக்கின்றன ஆறு வகையான குணங்கள் எனப்படுபவை  காம குரோத லோப மோக மத மாச்சரியம் எனப்படும்

இதனையே தமிழில் பேராசை சினம் கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி உயர்வு தாழ்வு மனபான்மை வஞ்சம் என்று கூறுவர்

இந்த ஆறு வகையான குணங்களில் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்வது பஞ்சமா பாதகங்கள் எனப்படும் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய் சூது கொலை கொள்ளை கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்

இந்த ஆறு வகையான குணங்களில் ஒருவன் மாட்டிக் கொண்டு ஒருவன் செய்யும் பஞ்சமா பாதகங்கள் கர்ம வினைகளை தோற்றுவிக்கின்றன இந்த கர்மவினைகளே ஒருவனை பிறவிப் பெருங்கடலில் சிக்க வைத்து துன்பச் சகதியில் சுழல வைக்கிறது
இத்தகைய துன்பங்களை கொடுக்கக் கூடிய கர்ம வினைகளை தீர்ப்பதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்


”””இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்””””
இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்கும் இந்த மந்திரம் கர்ம வினைகளைத் தீர்க்காது என்றும் சரியான மந்திரம் அதாவது உண்மையான மந்திரம் எது என்றும் தெரியாதவர்களை ஏழைகள் என்கிறார்  சிவவாக்கியர்

அவர் பணமில்லாதவர்களை ஏழைகள் என்று சொல்லவில்லை உண்மை மந்திரம் எது என்ற உண்மை நிலை தெரியாதவர்களைத் தான் ஏழைகள் என்று சொல்கிறார்

பாடலில் தொடர்ந்து கர்ம வினைகளை தீர்க்க ஒரு மந்திரம் உண்டு உண்டு என்று சொல்லி வந்த சிவவாக்கியர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரிப்பதின் மூலம் கர்ம வினையை தீர்க்கக் கூடிய மந்திரம் என்னவென்று அடுத்த அடிகளில் சொல்கிறார்



“”””””””””சதா விடாமல் ஓதுவார்  தமக்கு நல்ல மந்திரம்
        இதாம் இதாம் ராம ராம ராம என்னும் நாமமே””””””””””

மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
என்று வெளியே விட வேண்டும்
இதே மாதிரி தொடர்ந்து ராம ராம ராம என்று தொடர்ந்து செய்யும் பொழுது மனம் சுருங்கி உயிராகி உயிர்  பரத்துடன் இணைவதன் மூலம் கர்ம வினை கழிகிறது

கர்ம வினை கழிய ராம ராம மந்திரம் என்னும் மூச்சுப் பயற்சி சிறந்த மந்திரமாக இருக்கிறது என்கிறார்   சிவவாக்கியர்
கர்ம வினைகளை கழிக்க மிகச் சிறந்த மந்திரம் ராம ராம ஜெபம் எனப்படும் - மூச்சுப் பயற்சியே என்கிறார்  சிவவாக்கியர்



சிவவாக்கியர்-----ராம நாம ஜெபம்---- ஆதி மூல ரகசியம்
ராம நாம ஜெபத்தைப் பயன் படுத்தி எவ்வாறு பிரபஞ்சத்தின் ஆதி மூல ரகசியத்தைத் தெரிந்து கொள்வது என்பதைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலின் மூலம் விளக்குகிறார்
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா
        கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே
    ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
    ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே””””””””””””””

                                                                                                                 ------------ சிவவாக்கியர்---------
“””””””நான தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா””””””””
நான் என்ற உடலுக்குள் உயிராக நிறைந்திருப்பது எது?
நீ என்ற உடலுக்குள் உயிராக நிறைந்து இருப்பது எது?
நான் நீ என்று சொல்லப்படும் இந்த உடலுக்குள் இருக்கும் உயிரானது தோன்றுவதற்கு பொதுவான காரணமாக இருப்பது எது என்று தெரியுமா?



“””””””கோண தேது? குருவ தேது? கூறிடும் குலாமரே”””””
கோ - என்றால் அரசன் நாட்டை ஆள்பவன் என்று பொருள்
கோன தேது என்றால் இருப்பு நிலையிலிருந்து நுண்ணலையான விண் என்ற ஐPவன் தோன்றி இயக்க நிலையாகி பிரபஞ்ச தோற்றங்களாகி இந்த பிரபஞ்சம் முழுவதும் உயிராக இருப்பதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருப்பது எது? என்று பொருள்

குரு - என்றால் வழி தவறி நடக்காமல் வழி காட்டுபவன் என்று பொருள்
இந்த பிரபஞ்சம் முழுமையும் நிறைந்திருக்கும் அனைத்து உயிர்களையும் இயக்க விதி மாறாமல் வழி நடத்திச் செல்வது எது? என்று பொருள்

இந்த ரகசியம் யாருக்கேனும் தெரிந்தால் கூறுங்கள் என்கிறார்  சிவவாக்கியர்


“””””””ஆன தேது? ஆழிவ தேது? அப்புறத்தில் அப்புறம்
      ஈன தேது? ராம ராம ராம என்ற நாமமே”””””””””””””
 இந்த உலகம் என்று சொல்லக் கூடிய இயக்க நிலையில் உள்ள உயிர் தோன்றுவதற்கு மூல காரணமாக இருந்தது எது
இந்த உலகம் எல்லாம் அழிந்த பிறகு உலகமெல்லாம் எஞ்சி இருக்கும் நீக்கமற நிறைந்து இருக்கக் கூடிய உயிரானது சென்று சேரும் இடம் எது?

உலகமெலாம் தோன்றுவதற்கு முன்பு இருந்தது எது? உலகமெலாம் அழிந்த பிறகு எஞ்சி இருப்பது எது?

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ராம ராம ராம ஜெபம் செய்ய வேண்டும் என்கிறார்  சிவவாக்கியர்
ராம நாம ஜெபம்
மூச்சுக் காற்றான பிராணனை ராஎன்று உள்ளே இழுக்க வேண்டும்
”  என்று வெளியே விட வேண்டும்

இந்த ராம ராம ராம என்று சொல்லும் ராம நாம ஜெபத்தை அதாவது மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து வர விரிந்த மனம் சுருங்கி உயிராகி பரத்துடன் இணைகிறது
அதாவது மனம் அடக்கம் பெற்று ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட பிரம்ம ரகசியங்கள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்

எனவே ராம ராம ஜெபம் எனப்படும் மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்து பிரபஞ்ச ரகசியங்களைத் தெரிந்து கொள்வோம் என்கிறார்  சிவவாக்கியர்


October 19, 2011

சிவவாக்கியர் -கடவுள்





கடவுள் இருக்கின்றானா

சித்தம் என்றால் உயிர் சித்தர்கள் என்றால் உயிரை உணர்ந்தவர்கள் என்று பொருள்.

சித்தர்கள் தனது தவத்தின் மூலம் கடவுள் நிலை உணர்ந்தார்கள். கடவுள் நிலை உணர்ந்த சித்தர்கள் கடவுளைப் பற்றி சாதாரண மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனே  பல்வேறு பாடல்களை இயற்றியுள்ளனர்.

அந்த பாடல்கள் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு ஆன்மா வளர்ச்சி அடைந்த மனிதர்களின் பல்வேறு நிலைகளுக்கு ஏற்ப புரியும் விதத்தில் அமைந்திருப்பது தான் அந்த பாடல்களின் சிறப்பாகும்.

மேலும் சித்தர்கள் தங்கள் பாடல்களில் கடவுளைப் பற்றியும், கடவுளை அடையும் வழிகளைப் பற்றியும் , மருத்துவம் , சோதிடம் என்று பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றியும், இந்தச் சமுதாயம் பயன் பெறும் வகையில் குறியீடுகளாக அமைத்திருக்கின்றனர்.

ஆத்தகைய சிறப்பு வாய்ந்த பாடல்களை பல்வேறு சித்தர்கள் பல்வேறு நிலைகளில் இந்த உலகம் பயன்பெறும் வகையில் பாடியுள்ளனர்.

அதில் சிவவாக்கியர் பாடல்கள் சிலவற்றை இங்கே நினைவு கூர்வோம்.


கடவுள் உள்ளே இருக்கிறான் :

கடவுளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி சிவவாக்கியர் கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார்.


               ””””ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
                      நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
                      வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
                      கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே””
                                                                         -----------சிவவாக்கியர்-----

நமது உடலில் சோதி வடிவமாக உள்ள இறைவனை நமது உடலில் எந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியாமல் அவனை அடையக் கூடிய வழி புரியாமல் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை செய்து நமது பிராணனை ஓட விட்டு சோதி வடிவமாக உள்ள இறைவனை அடைய முடியாமல் நாட்களை கழித்து மனம் வாடி இறந்து போன மனிதர்கள் எண்ணிக்கையில் அடக்க முடியாத கோடி என்கிறார் சிவவாக்கியார் .

நமது உடலில் கடவுள் இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களே கோடி கணக்கில் என்றால் கடவுளை வெளியே தேடி அலைந்து கொண்டிருப்பவர்களை எண்ணிக்கையில் கூற முடியாது என்று சிவவாக்கியர் மனம் வருந்தி பாடுகிறார் .



கடவுள் வெளியே இருக்கிறான்:

கடவுள் உள்ளே இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அடைய முடியாமல் இறந்தவர்களைப் பற்றி பாடிய சிவவாக்கியர் கடவுளை வெளியே தேடி அலையும் மனிதர்களைப் பற்றி மிகவும் கோபாவேசமாகப் பாடுகிறார்.



                    ””””நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாற்றியே
                          சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா
                          நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில்
                          சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ””
                                                              ---------சிவவாக்கியர்--------



ஒரு கல்லை நட்டு அதை தெய்வம் என்று சொல்லிக் கொண்டு பூக்களை அதற்கு சூட்டி அந்த கல்லை சுற்றி சுற்றி வந்து தான் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக அந்த கல்லை எந்த தெய்வம் என்று நினைக்கிறார்களோ ,

அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சாடணம் செய்து தனது காரியத்தை நிறைவேற்றச் சொன்னால் நட்ட அந்த கல்லுக்குள் இருக்கும் கடவுள் உன் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லுமா என்கிறார.



மேலும் சாப்பிடுவதற்காக சட்டியில் காய்கறிகளைப் போட்டு செய்யும் குழம்பு ,ரசம் ,பொறியல் போன்றவற்றின் சுவையை சமைப்பதற்கு பயன்படுத்தப் படும் சட்டி எப்படி அறியாதோ

அதைப் போலவே தெய்வம் என்று நம்பி நட்ட கல்லும் நம்முடைய உணர்வுகளை உணர்ந்து கொள்ள முடியாது என்கிறார்.


கடவுள் நம் உள்ளே இருக்கிறான் என்று உணராமல் கடவுளை வெளியே தேடிக் கொண்டு அலையும் மனிதர்களின் முட்டாள்தனமான முறைகளின் மூலம் கடவுளை வணங்குகிறவர்களின் செய்கைகளைத் தான் சிவவாக்கியர் கண்டிக்கிறாரே தவிர ,

கடவுள் இல்லையென்று நாத்திகவாதி போல் நாத்திகம் பேசவில்லை.

இனிமேலாவது சிவவாக்கியரை நாத்திகர் என்று பேசுவதை தயவு செய்து தவிர்ப்போம்.



மறுபிறப்பு


”””கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
                  உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
                  விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
                  இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை இல்லையே””
                                                                        ----------சிவவாக்கியர்-----


கறந்தபால் முலைப்புகா:
பசுவின் மடியிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் மடியில் கொண்டு சேர்க்க முடியாது , அதாவது முலையிலிருந்து கறக்கப்பட்ட பால் என்று சொல்லும்போது உலகில் வாழும் பெண் உயிரிகளின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலை மீண்டும் அதன் முலை வழியாக அதன் உடலுக்கு உள்ளே செலுத்த முடியாது என்று பொருள்.




கடைந்தவெண்ணெய் மோர்புகா:
மோரை நன்றாக கடைந்தால் அதிலிருந்து வெண்ணெய் தனியாக பிரியும் .

தனியாக பிரித்து எடுக்கப்பட்ட வெண்ணெயை மீண்டும் மோரினுள் செலுத்தி அதை பழையபடி மோராக மாற்ற முடியாது.



உடைந்துபோன சங்கினோசை (உயிர்களும்) உடற்புகா:
உடைந்து போன சங்கின் ஓசை என்றால் சங்கிலிருந்து தனியாக பிரிந்த ஓசை என்று பொருள்.

சங்கை ஊதும் போது அதில் இருந்து ஓசை எழுப்பப் படுகிறது. எழுப்பப்பட்ட ஓசையானது காற்றில் கலந்து விடுகிறது.
அவ்வாறு காற்றில் கலந்த ஓசையை தனியாக பிரித்து மீண்டும் அந்த சங்கினுள் கொண்டு சென்று அடைக்க முடியாது.




விரிந்தபூ யுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா:
மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த பூவும் மரத்திலிருந்து தனியாக பிரிந்து கீழே விழுந்த காயும் மீண்டும் போய் மரத்தில் இணையாது இணையவும் முடியாது.

பூவிரிந்தால் அதாவது மலர்ந்தால் மீண்டும் அது மொட்டாக முடியாது என்று சிலர் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .

இந்த பாடலில் உள்ள கருத்துக்களை ஊன்றி கவனித்தால் ஒன்று மற்றொன்றாக ஆவதைப் பற்றி சொல்லவில்லை . ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிவதைத்தான் சொல்கிறார்கள்.

எனவே மரத்திலிருந்து பூ உதிர்ந்து கீழே விழுவதையும் , மரத்திலிருந்து காய் உதிர்ந்து கீழே விழுவதையும் , உற்று நோக்கினால் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதைத் தௌ்ளத் தெளிவாக உணரலாம்.




இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே:
பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இந்த ஜென்மம் ஏற்படுகிறது. இந்த ஜென்மத்தில் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி ஏற்படும் இல்லையென்றால் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப மறு ஜென்மம் ஏற்படுகிறது.

இங்கே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் பிறவி என்பது வேறு. ஜென்மம் என்பது வேறு. பிறவியைப் பற்றி பிறகு தெரிந்து கொள்ளலாம். இபபொழுது ஜென்மத்திற்குள் செல்லலாம்.

ஒரு ஆன்மாவுக்கு 7 ஜென்மம் 7 ஜென்மத்திற்குள் அந்த ஆன்மாவானது தனது கர்ம வினையை கழிக்கா விட்டால் 7x7= 49 ஜென்மம். 49 ஜென்மத்திற்குள்ளும் தனது கர்ம வினையை கழிக்காவிட்டாலும் அந்த ஆன்மாவானது  தானாகவே தனது பயணத்தை முடிக்க சுத்த வெளியில் கலந்து விடும்.

அதனால் தான் நாம் அடிக்கடி ஏழேழு ஜென்மம் என்று சொல்வதற்கு காரணம்.

இந்த ஜென்மத்தில் நாம் நம் கர்ம வினைகள் அனைத்தையும் கழித்து விட்டால் முக்தி கிடைக்கும். முக்தி கிடைத்து விட்டால் நமக்கு மறு பிறப்பு கிடையாது.

யாருக்கு பிறப்பு கிடையாதோ அவருக்கு இறப்பு கிடையாது. பிறப்பு இறப்பு அற்ற நிலை எப்படி கடவுளுக்கு உண்டோ அப்படியே நமக்கும்.


””””தத்வமவே த்வமேவதத்””  அதாவது நீயே அது அதுவே நீ என்ற நிலை உருவாகி விட்டால் பிறப்பு இறப்பு கிடையாது. பிறவிச் சுழல் கிடையாது மறுஜென்மம்  என்பது கிடையாது.

உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டால் உயிரின் கர்ம வினை கழிந்து விட்டால் மறு பிறப்பு கிடையாது. உயிரின் கர்ம வினை கழியா விட்டால் மறு பிறப்பு உண்டு.

இங்கே இந்த பாடலில் உயிர்களும் உடற்புகா என்றால் தனது கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மாவானது பிறப்பு எடுக்க மீண்டும் ஒரு உடலைத் தேடிச் சென்று இணையாது என்று பொருள்.

இறந்தவர் என்றால் கர்ம வினையை கழித்து விட்ட ஆன்மா.
இறந்தவர் பிறப்பதில்லை என்றால் கர்ம வினையை கழித்து விட்டு முக்தி அடைந்த ஆன்மா பிறப்பதில்லை என்று பொருள்.

இந்த பாடலின் மூலம் சிவவாக்கியார் என்ன சொல்ல வருகிறார் என்றால்

பரிணாம வளர்ச்சியில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து விட்டால் மீண்டும் அது பழைய நிலைக்கு திரும்பாது , இணையாது குரங்கிலிருந்து மனிதன் பிரிந்து வந்து விட்ட பிறகு குரங்கு குரங்காக இருக்கிறது . மனிதன் மனிதன் மனிதனாக இருக்கிறான் . இரண்டு வேறு பட்ட நிலை உருவாகி விட்டது.


அதைப் போல

உடலிலிருந்து பால் பிரிந்து விட்டால் பால் வேறு உடல் வேறு.

மோரிலிருந்து வெண்ணெய் பிரிந்து விட்டால் மோர் வேறு வெண்ணெய் வேறு.

சங்கிலிருந்து ஓசை பிரிந்து விட்டால் சங்கு வேறு ஓசை வேறு.

மரத்திலிருந்து பூ பிரிந்து விட்டால் மரம் வேறு பூ வேறு.

மரத்திலிருந்து காய் பிரிந்து விட்டால் மரம் வேறு காய் வேறு.

அதைப்போல பல்வேறு ஜென்மங்களாக உடலோடு ஒட்டி வந்த உயிரானது கர்ம வினைகளை தீர்த்து முக்தி அடைந்து விட்டால் உயிரானது வேறு உடலைச் சென்று சேராது மறுபிறப்பு எடுக்காது.

””””உடல் வேறு உயிர் வேறு என்று ஆகிவிடும்”” என்று சொல்கிறார்.


இறந்தவர் பிறப்பதில்லை என்பதன் மூலம் சிவவாக்கியர் மறு பிறப்பு இல்லை என்று சொல்ல வரவில்லை.

எந்த உயிருக்கு மறு பிறப்பு உண்டு எந்த உயிருக்கு மறுபிறப்பு இல்லை என்று தான் சொல்ல வருகிறார்.