Showing posts with label spirituality. Show all posts
Showing posts with label spirituality. Show all posts

December 20, 2019

பரம்பொருள்-பதிவு-102

                  பரம்பொருள்-பதிவு-102

சகுனி :
"சகாதேவன் "

துரியோதனன் :
"பாண்டவர்களில்
ஒருவனா? "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"நம்முடைய எதிரிகளில்
ஒருவனான சகாதேவனா "

சகுனி :
"ஆமாம்"

துரியோதனன் :
"பாவம்
அமைதியானவன்  ;
ஒன்றும் அறியாதவன் ;
பரிதாபத்திற்குரியவன் ; "

சகுனி :
"எதிரியின் திறமையை
குறைவாக மதிப்பீடு செய்யக்
கூடாது மருமகனே ! "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு
செய்யத் தெரியாதவன்
எதிரியிடம் தோற்கத்
தான் வேண்டும் "

"எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரிந்தவனால் மட்டுமே
எதிரியை வெல்ல முடியும்
என்பதை நினைவில்
வைத்துக் கொள் மருமகனே ! "

"சகாதேவன்
சாதாரணமான
ஆள் இல்லை  ;
சோதிட சாஸ்திரத்தில்
ஆதி முதல் அந்தம் வரை
அறிந்து வைத்திருப்பவன் ;
சோதிட சாஸ்திரத்தின்
அனைத்து சூட்சும
விஷயங்களையும்
ஐயமின்றி கற்றுத்
தேர்ந்தவன் ;
திரிகால ஞானத்தை
முறைப்படி பயன்படுத்தும்
முறை அறிந்தவன் ;

"உலகிலுள்ள அனைத்து
உயிர்களுக்கும்
இறந்த காலம் எதிர்காலம்
ஆகியவற்றை சோதிடத்தின்
மூலம் துல்லியமாகக்
கணித்து சொல்லக் கூடிய
திறமை இந்த உலகத்தில்
சகாதேவனைத் தவிர
வேறு யாருக்கும் இல்லை"

"களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாள் எந்த
நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு தகுதியான
ஆள் யார் என்றும் ;
சகாதேவன் குறித்து
கொடுத்து அதை நாம்
செயல்படுத்தி விட்டோம்
என்றால் மூவுலகமும்
சேர்ந்து வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
மூம்மூர்த்திகளே
ஒன்றாக வந்து
நம்மை எதிர்த்தாலும் ;
நம்மை யாராலும்
தோற்கடிக்க முடியாது
மருமகனே !"

"வெற்றி நமக்குத் தான் !"

துரியோதனன் :
"ஆனால் சகாதேவன்
எதிரியாயிற்றே  !"

"அவன் எப்படி நாம்
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
குறித்துக் கொடுப்பான் "

"அப்படியே குறித்து
கொடுத்தாலும்
உண்மையைத் தான்
சொல்வான் என்பதை
நாம் எப்படி நம்புவது : "

சகுனி :
"சோதிட சாஸ்திரத்தில்
முக்கியமான இரண்டு
விதிகள் இருக்கிறது
மருமகனே ! "

" சோதிடம் பார்க்க
வருபவர் எதிரியாக
இருந்தாலும் அவர்
கேட்கும் கேள்விகளுக்கு
உண்மையை மறைக்காமல்
சொல்ல வேண்டும்
என்பது முதல்விதி "

"அதைப்போல சோதிடம்
பார்ப்பவர் சோதிடத்தை
யாருக்கு பார்க்கிறாரோ
அவரைப் பற்றிய
தகவல்களை யார்
கேட்டாலும் சொல்லக்
கூடாது என்பது
இரண்டாவது விதி "

"இந்த இரண்டு
விதிகளையும் உண்மையாக
யார் பின்பற்றுகிறாரோ
அவர் தான் சோதிட
சாஸ்திரம் அறிந்த
உண்மையான சோதிடர்  "

"இந்த இரண்டு
விதிகளையும் உயிரென
கடைபிடிப்பவன் சகாதேவன் "

"சகாதேவன்
எதிரியாயிற்றே என்று
நினைக்காமல் சகாதேவனை
நேரில் போய் சந்தித்து
களப்பலி கொடுப்பதற்கு
உகந்த நாளையும் ;
களப்பலியாக கொடுப்பதற்கு
தகுதியான ஆளையும் ;
கேட்டு அறிந்து கொண்டு
வா மருமகனே ! "

துரியோதனன் :
"அப்படியே ஆகட்டும்
மாமா "

(துரியோதனன்
சகாதேவனை
சந்திப்பதற்காக
செல்கிறான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 20-12-2019
//////////////////////////////////////////

December 18, 2019

பரம்பொருள்-பதிவு-101


           பரம்பொருள்-பதிவு-101

(அரண்மனைக்குள்
உள்ள ஒரு
அறையில் சகுனி
தீவிரமான சிந்தனையில்
ஆழ்ந்து இருக்கும்
போது துரியோதனன்
உள்ளே நுழைகிறான்)

துரியோதனன்  :
“மாமா ! எதைப் பற்றி
தாங்கள் தீவிரமாக
சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்கள் “

சகுனி :
“போரில் எப்படி
வெற்றி பெறுவது
என்பதைப் பற்றி
யோசித்துக்
கொண்டிருக்கிறேன்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதில் யோசிக்க
வேண்டியது என்ன
இருக்கிறது மாமா !
போரில் வெற்றி
பெறப்போவது
நாம் தானே ! “

சகுனி :
“எதையுமே
சாதாரணமாக
எடுத்துக் கொள்ளக்
கூடாது மருமகனே  !

“மாயங்கள் செய்வதில்
வல்லவனும் ;
சூழ்ச்சி வலை
பின்னுவதில் திறமை
படைத்தவனும் ;
கண்கட்டு வித்தை
காட்டுவதில்
கை தேர்ந்தவனும் ;
ஏமாற்றுச் செயல்கள்
புரிவதில்
தன்னிகரற்றவனும் ;
கபட வேடதாரியுமான
கிருஷ்ணன்
பாண்டவர்கள் பக்கம்
இருக்கும் வரை
நாம் எதையுமே
சாதாரணமாக
எடுத்துக்
கொள்ளக்கூடாது
மருமகனே ! “

“பாண்டவர்களை
வெற்றி பெறச்
செய்வதற்கு எத்தகைய
குறுக்கு வழிகளையும்
கையாள்வான் ;
அந்த குறுக்கு
புத்திக்கார
கிருஷ்ணன் ;
நாம் அதற்கு
இடம் கொடுக்கவே
கூடாது மருமகனே ! “.

துரியோதனன் :
“என்ன செய்ய
வேண்டும்
என்று சொல்ல
வருகிறீர்கள் மாமா ! “

சகுனி :
“நாம் போரில்
வெற்றி பெற
வேண்டும் என்றால்
கண்டிப்பாக
களப்பலி கொடுக்க
வேண்டும்
என்பதை மறந்து
விட்டாயா மருமகனே ! “

துரியோதனன் :
“மறக்கவில்லை
மாமா !
களப்பலி
கொடுப்பதைப் பற்றி
பேசத் தான்
நான் உங்களிடம்
வந்தேன் “

சகுனி :
“ களப்பலி
கொடுப்பவர்களை
யாராலும் வெல்ல
முடியாது என்ற
விவரம்
உனக்கு தெரியுமா ? ”
மருமகனே !”

துரியோதனன் :
“தெரியும் மாமா ! “

சகுனி :
“போரில் நாம்
வெல்வதற்கு
களப்பலி கொடுக்க
வேண்டிய நாள்
எந்த நாள் என்றும் ;
களப்பலியாக
கொடுப்பதற்கு
தகுதியுடையவர்
யார் என்றும் ;
அறிந்து
கொள்ள வேண்டும்
மருமகனே ! “

துரியோதனன் :
“இதனை
துல்லியமாகக்
கணித்து சொல்லக்
கூடிய
சோதிட சாஸ்திரம்
தெரிந்தவர்கள்
இந்த உலகத்தில்
யார் இருக்கிறார்கள்
மாமா ! “

சகுனி :
“ஒருவன்
இருக்கிறான்
மருமகனே ! “

துரியோதனன் :
“யார் மாமா………….?”

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 18-12-2019
//////////////////////////////////////////

December 17, 2019

பரம்பொருள்-பதிவு-100


          பரம்பொருள்-பதிவு-100

கிருஷ்ணன் :
"அர்ஜுனா ! நீ எப்போதோ
விதைத்து விட்டு வந்த
விதை ஒன்று இப்போது
மரமாக வளர்ந்து
அரவான் என்ற பெயரில்
பலன் தர உன்னைத் தேடி
நேரில் வந்து இருக்கிறது. "

"நீ ! யாருக்கும் தெரியாது
என்று செய்து விட்டு
வந்த செயலுடைய
விளைவானது உன்
முன்னால் அரவான்
என்ற பெயரில்
நிற்பதிலிருந்து
தெரிந்து கொள்………………?
செயலைச் செய்து விட்டு
விளைவிலிருந்து யாரும்
தப்ப முடியாது என்பதை !
நீ செய்து விட்டு
வந்த செயலுக்குரிய
விளைவாக அரவான்
உன் முன்னால்
வந்து நிற்கிறான் "

"அரவான் செய்யப் போகும்
வீரச் செயலை - இந்த
உலகத்தில் - இது
வரை யாரும் செய்து
இருக்க மாட்டார்கள்  ;
இனிமேலும் யாராலும்
செய்யவே முடியாது ; '"

"அரவான் செய்யப் போகும்
தியாகச் செயலைக் கண்டு
இந்த உலகமே
அரவானைப் பார்த்து
தலை தாழ்த்தி
வணங்கத் தான் போகிறது  "

"குருஷேத்திரப் போரின்
அஸ்திவாரமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
பாண்டவர்களின்
வெற்றிக்கு காரணமாக
இருக்கப் போகிறவன்
அரவான் !
தர்மம் வெற்றி பெற
வேண்டும் என்பதற்காக
தன்னையே
தரப் போகிறவன்
அரவான் !
அதர்மத்தை அழிப்பதற்காக
மிகப்பெரிய
தியாகச் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் அழியாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக யாராலும்
செய்ய முடியாத
யாரும் செய்யவும்
யோசிக்கக் கூடிய
மிகப் பெரிய செயலை
செய்யப் போகிறவன்
அரவான் !
இந்த உலகம் முழுவதும்
தேடிப்பார்த்தாலும்
இத்தகைய ஒரு
தைரியமான மனத்தைக்
கொண்டவனை
பார்க்க முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில் செயலைச்
செய்யப் போகிறவன்
அரவான் !"

" நாளை இந்த உலகம்
கிருஷ்ணன் என்ற
கடவுளைக் கூட மறந்து
போய் இருக்கலாம்  ;
அர்ஜுனன் என்ற
ஒருவன் இருந்தானா
என்பதை தேடுவதற்காக
ஒரு கும்பலே
அலைந்து திரிந்து
கொண்டிருக்கலாம் ;
ஆனால் இந்த உலகம்
அழியும் வரை
அரவானை நினைத்துக்
கொண்டிருக்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானுக்காக கண்ணீர்
வடிக்கக் கூடியவர்கள்  
இந்த உலகத்தில் இருந்து
கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;
அரவானை தெய்வமாக
வணங்கக் கூடியவர்கள் 
இந்த உலகத்தில்
வசித்துக் கொண்டு தான்
இருக்கப் போகிறார்கள் ;"

"அரவான்
நாளைய உலகத்தின்
விடிவெள்ளி !
எதிர்காலத்தின்
நம்பிக்கை நட்சத்திரம் !
இருண்ட வீட்டில்
ஒளி விளக்கு !
கோடை காலத்தின்
குளிர் நிலவு !
என்பதை நினைவில்
கொண்டால்
அரவானின் பெருமை
உனக்குப் புரியும் "

அர்ஜுனன்  :
"கிருஷ்ணா ! அரவான்
எத்தகைய வீரச்
செயலை புரிவான்  ;
எத்தகைய தியாகச்
செயலைச் செய்வான் ;
என்பதை அறிவதற்கு
என் மனம்
ஆவலால் துடிக்கிறது ;
எனக்கு அதை விவரமாகச்
சொல்வாயா கிருஷ்ணா "

கிருஷ்ணன்  :
"நாளை என்ன
நடக்கப்போகிறது
என்பதை அறிந்தால்
இன்றைய வாழ்க்கை
நரகமாகி விடும் என்ற
காரணத்தினால் தான்
நாளை நடக்கப்
போகிறவைகள்
மறைபொருளாக
வைக்கப்பட்டிருக்கிறது ;  
இன்று நடக்கப்
போகிறவைகளைப்
பற்றி சிந்தி அர்ஜுனா !
நாளை நடக்கப்
போகிறவைகளை நான்
பார்த்துக் கொள்கிறேன் ! "

"ஆனால் ஒன்று அர்ஜுனா
நாளை இந்த உலகம்
அர்ஜுனனின் மகன்
யார் என்று கேட்காது  ?
அரவானின் தந்தை
யார் என்று தான்
கேட்கப் போகிறது ?
என்பதை மட்டும்
நினைவில் கொள்
அர்ஜுனா !"

அர்ஜுனன்  :
(கிருஷ்ணன் சொல்வதைக்
கேட்டுக் கொண்டிருந்த
அர்ஜுனன் அரவானைப்
பற்றிய சிந்தனையில்
ஆழ்ந்தான்)

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 17-12-2019
//////////////////////////////////////////