May 05, 2024

ஜபம்-பதிவு-972 மரணமற்ற அஸ்வத்தாமன்-104 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-972

மரணமற்ற அஸ்வத்தாமன்-104

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


ஆரம்பத்தில் சிறிது சிறதாக பந்தயப் பொருளை வைத்தவன், போகப்போக பந்தயப் பொருள்களை பெரிதாக வைத்தான். நாட்டை வைத்தான், நகரத்தை வைத்தான், தடைசியில் தன்னை வைத்தான், தன் தம்பிகளை வைத்தான், தன் மனைவியை வைத்தான்.


இப்போது அவனிடம் ஒன்றும் இல்லை. தர்மன், அவன் தம்பிகள், அவனுடைய மனைவி பாஞ்சாலி ஆகிய அனைவரும் கௌரவர்களுக்கு அடிமையாகி விட்டார்கள். 


துரியோதனனுடைய அடிமையாகி விட்டார்கள். 

தர்மனால் அவனுக்கு அவமானம், அவன் தம்பிகளுக்கு அவமானம், அவர்கள் மனைவிக்கு அவமானம். சூதாடினால் குடும்பம் கஷ்டப்படும், அனைத்தையும் இழக்க நேரிடும், மானம் போய் விடும், மரியாதை போய் விடும், குடும்பம் தெருவுக்கு வந்துவிடும், குடும்பம் அவமானப்பட நேரிடும், அசிங்கப்பட நேரிடும், ஏளனப்பட நேரிடும் என்பது தர்மன் சூதாடி இந்த உலகத்திற்கு நிரூபித்து விட்டான்.


தர்மனுடைய இந்த செயலைப் பார்த்தாவது தர்மனுடைய வரலாற்றைப் படித்தாவது வருங்கால தலைமுறைகள் சூதாடினால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


 சூதாடக்கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். சூதாடிகள் சூதாடாமல் இருந்தால் தான் குடும்பத்திற்கு நல்லது அனைத்திற்கும் நல்லது என்பதை உணர வேண்டும். 


தர்மனை ஒரு முன் உதாரமாணமாகக் கொண்டு சூதாடிகள் சூதாடுவதை நிறுத்த வேண்டும். 


ஒரு சூதாடி சூதாடினால் எப்படி இருப்பான் என்பதற்கு வரலாற்றில் தர்மன் ஒரு உதாரணமாகி விட்டான். 

நாளைய வரலாறு சூதாடிகளுக்கு தர்மன் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கட்டும்

அடிமைகளாக இருக்கும் பாண்டவர்கள் மீது அதிக அக்கறை கொண்டு அந்த அடிமைகளின் சார்பாக பேசினீர்கள். தர்மன் என்ற சூதாடியை பெருமையாக பேசினீர்கள்.


 பாஞ்சாலியை பெண்களுக்குள் உயர்ந்தவள் என்று பேசினீர்கள். இதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது ஒன்றும் இல்லை. இதற்குப் பிறகு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அந்த முடிவை எடுங்கள். 


அந்த முடிவையாவது நீதி தவறாமல், நியாயம் தவறாமல், பாண்டவர்கள் மேல் உள்ள அன்பால் அவர்களுக்கு சாதமான முடிவை எடுக்காமல், பாண்டவர்களைச் சார்ந்து ஒரு சார்பாக முடிவு எடுக்காமல் துரியோதனனை எதிரியாகப் பார்க்காமல், அவனுக்கு எதிராக முடிவு எடுக்காமல், உண்மையாக எடுங்கள், நேர்மையாக எடுங்கள், நியாயமாக நடந்து கொள்ளுங்கள், வருங்காலம் உங்களை தவறாக சொல்லும் படி வைத்துக் கொள்ளாதீர்கள்.


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் மேலாடை கழட்ட முயற்சி நடந்த செயலுக்குப் பிறகு அனைவருடைய வாக்கு வாதங்களும் முடிந்து விட்டது.


பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் பாண்டவர்கள் 12 வருடங்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டும், தங்கள் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஏதாவது ஒரு நகரில் மக்களோடு மக்களாக 1 வருட காலம் வாழ வேண்டும். 


மறைந்து வாழும் போது கண்டுபிடிக்க முடியாவிட்டால் அவர்களுடைய ராஜ்ஜியம் அவர்களுடையது என்பதை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வனவாசம் புறப்பட்டனர்.)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

////////////////////////////////

ஜபம்-பதிவு-971 மரணமற்ற அஸ்வத்தாமன்-103 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-971

மரணமற்ற அஸ்வத்தாமன்-103

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)



தர்மன் என்ற பெயர் யுதிஷ்டிரன் தானம், தர்மம் செய்ததினால்

வந்த பெயரும் கிடையாது.

தர்மத்தின் வழியில் நடந்ததால் 

யுதிஷ்டிரனுக்கு தர்மன் என்ற பெயர் வரவுமில்லை.


குந்தி எமதர்மனுடன் சேர்ந்து யுதிஷ்டிரனைப் பெற்றாள். யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன்.

யுதிஷ்டிரன் எமதர்மனுடைய மகன் என்பதில் உள்ள எம என்ற சொல் மறைந்து தர்மன் என்பது மட்டுமே நிலை பெற்று யுதிஷ்டிரனைக் குறிக்க தர்மன் என்ற சொல் வந்துவிட்டது.


தர்மன் என்ற சொல் யுதிஷ்டிரன் எமதர்மன் மகன் என்பதைக் குறிப்பதாகும். யுதிஷ்டிரன் தர்மம் செய்ததால் இந்த பெயர் யுதிஷ்டிரனுக்கு கிடைக்கவில்லை.   


பீஷ்மர் : தர்மனை சூது செய்து சூதாட்டத்தில் தோற்கடித்து விட்டார்கள்.


அஸ்வத்தாமன் : சூது செய்து யாரும் தர்மனைத் தோற்கடிக்கவில்லை. 


சூதாட வேண்டும் என்று யாரும் அவனை கட்டாயப்படுத்தவில்லை. அவனே விருப்பப்பட்டு தான் வந்தான். அவனே விருப்பத்துடன் தான் விளையாடினான். 


ஏனென்றால், சூதாட்டத்தில் விருப்பம் கொண்டவன் தர்மன். அதுவும் தர்மன் மிகச்சிறந்த சூதாடி.

சூதாடிகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட குணம் ஒன்று உண்டு. சூதாட்டம் ஆடத் தொடங்கிய பிறகு அதிலிருந்து எழுந்திருக்கவே அவர்களுக்கு மனம் வராது. 

அதிலும் எதையாவது இழந்து விட்டாலோ, விட்டதை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறி கொண்டு தொடர்ந்து சூதாடுவார்கள். அதனால் மேலும் மேலும் தங்களிடம் உள்ளதை இழந்து கொண்டே தான் இருப்பார்கள். 


அந்த மாதிரி சமயங்களில் அவர்களுடைய சுயபுத்தி என்பது வேலை செய்யவே செய்யாது.இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று பணிந்து கேட்டுக் 

கொண்டாலும், இதற்கு மேல் ஆட வேண்டாம் என்று வலியுறுத்தி சொன்னாலும், சூதாட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எடுத்துச் சொன்னாலும், தயவு செய்து ஆட வேண்டாம் என்று அறிவுரை சொன்னாலும், சூதாடிகள் அவர்கள் பேச்சைக் கேட்கவே மாட்டார்கள். 

வீடு, குடும்பம், வேலை, நண்பர்கள், உறவினர்கள், படித்த படிப்பு, எந்த ஒன்றும் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. 


சாதாரணமான ஒன்றாகத் தான் தெரியும். 

சூதாட்டத்தில் தோற்று அனைத்தையும் இழந்தால் குடும்பத்தின் மானம் போய் விடும், தனக்குள்ள மரியாதை கெட்டு விடும், குடும்பம் தாளமுடியாத கஷ்ட நிலைக்குத் தள்ளப்படும், மீளவே முடியாத பழிக்கு தன்னை ஆளாக்கி விடும் என்பதை மனதில் கொள்ளாமல், இதை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் தான் சூதாடிகள் சூதாடுவார்கள்.


சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் அழிந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. சூதாடிகள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்ததால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் எவ்வளவோ இருக்கிறது. 

சாதாரண மனிதர்களாக இருந்தால் தங்களிடம் இருப்பதை சூதாட்டத்தில் இழந்ததுமே எழுந்து சென்று விடுவார்கள். 


ஆனால், இவர்களைப் போன்ற பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்கள் இவர்களைப் போன்ற மன்னர்களோ ஒருவரை ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கடைசி வரை விடாமல் எவ்வளவு தான் இழந்தாலும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பார்கள். 


அதனால் அவர்களிடம் அமைதி, பொறுமை, நிதானம், சிந்திக்கும் தன்மை, அறிவு என்பது சுத்தமாக இருக்கவே இருக்காது. 

அரசகுலத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக போர்க்கலைகள் மீது தான் அதிக அளவில் ஆர்வம் இருக்கும். ஆனால், தர்மனுக்கு அப்படி அல்ல சூதாட்டத்தின் மீது தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். தர்மன் சூதாட்டத்தில் ஆர்வம் உள்ளவன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும்.


தர்மனுக்கு சின்ன வயதில் இருந்து அவனுக்கு கங்கன் என்ற பெயர் உண்டு. கங்கன் என்றால் சூதாடி என்று பொருள். தர்மன் நன்றாக சூதாடுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் அவனை சூதாட விட்டனர். 


தர்மன் நன்றாக சூதாடுவான், சூதாட்டத்தில் வல்லவன், சிறிய வயது முதல் சூதாடி பழக்கப்பட்டவன், சூதாட்டம் என்று வந்து விட்டால் எதையும் நினைக்க மாட்டான், சூதாட்டத்தில் திறமைசாலியாக இருக்கிறான், சூதாட்டத்தில் வெற்றி பெறுவான் என்ற காரணத்தினால் தான் தர்மன் தம்பிகள் தர்மனை சூதாட அனுமதி அளித்தனர்.


துரியோதனன் தன் மாமா சகுனி ஆடுவார் என்று சொன்னபோது கூட, தர்மன் தன்னுடைய மாமா கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லவில்லை. சூதாட்டத்தில் தன் மேல் உள்ள நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை விட திறமைசாலி யாரும் இல்லை என்ற காரணத்தினால், சூதாட்டத்தில் தன்னை விட யாரும் சிறப்பாக சூதாட முடியாது என்ற நம்பிக்கையால், சூதாட்டத்தில் தன்னை வெல்ல யாரும் கிடையாது என்ற நம்பிக்கையால் தர்மன் நானே சூதாடுகிறேன் என்று சூதாடினான்.


சூதாட்டம் தொடங்கும் போது தர்மனின் சூதாடும் திறமையைக் கண்டு சந்தோஷப்பட்ட பாண்டவர்கள் தர்மன் தோற்க தோற்க பயந்தார்கள். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-970 மரணமற்ற அஸ்வத்தாமன்-102 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-970

மரணமற்ற அஸ்வத்தாமன்-102

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


துரியோதனன் பாஞ்சாலிக்கு எத்தகைய கெடுதலைச் செய்தாலும், எத்தகைய கொடுமைகளைச் செய்தாலும், அந்த கொடுமையான செயலை எங்களால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், அந்த கிருஷ்ண பரமாத்மாவே பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்றினார்.     


அஸ்வத்தாமன் : பாஞ்சாலியின் மானத்தை கிருஷ்ணன் காப்பாற்றியதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.


விதுரர் : எதையுமே வேறுபட்ட பார்வையில் பார்க்கிறாயே கிருஷ்ணன் பாஞ்சாலியைக் காப்பாற்றியதில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது.


அஸ்வத்தாமன் : ராஜசுய யாகத்திற்கு துரியோதனன் இந்திரபிரஸ்தம் வந்த போது அரண்மனையில் உள்ள ஒரு இடத்தில் கடினமாக தரை என்று நினைத்து சலனமற்ற தண்ணீர் தடாகத்தில் காலடி வைத்து நிலை தடுமாறி விழுந்தான். 


அப்போது இந்த காட்சியைக் கண்ட பாஞ்சாலி சிரித்து விட்டாள். சிரித்ததோடு நிற்காமல் குருடன் மகன் குருடன் என்றாள். ஒரு நாட்டின் மன்னனாக இருக்கும் துரியோதனனை அவமானப்படுத்தினாள். 


இந்த நிகழ்ச்சியால் துரியோதனன் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானான். இது அவள் செய்த பாவம். 

பாஞ்சாலி அன்று துரியோதனனை பார்த்து சிரித்து பாவத்தை செய்த காரணத்தினால், அஸ்தினாபுரத்தின் அவையில் பலபேர்கள் கூடியிருக்கும் அவையில் பாஞ்சாலி இழுத்து வரப்பட்டு பாஞ்சாலியின் மேலாடை அவிழ்க்க முயற்சி செய்யப்பட்டது. 


பாவத்தின் பலனை அவள் சரியாக அனுபவித்து விட்டாள்.

ஒரு சமயத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பாஞ்சாலி கிருஷ்ணனுக்கு உடை கொடுத்து அவன் மானத்தைக் காப்பாற்றி புண்ணியம் செய்த காரணத்தினால், பாஞ்சாலியின் மேலாடை அவிழ்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்ற போது கிருஷ்ணன் பாஞ்சாலியின் மானத்தைக் காப்பாற்ற ஆடை கொடுத்து காப்பாற்றினான். 


பாஞ்சாலி செய்த புண்ணியத்தின் விளைவு அவளுடைய மானத்தைக் காப்பாற்றியது.


உயர்ந்தவராக இருந்தாலும், தாழ்ந்தவராக இருந்தாலும், 


ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும்,


படித்தவனாக இருந்தாலும், படிக்காதவனாக இருந்தாலும்,


இந்த உலகத்தில் யாராக இருந்தாலும்,

புண்ணியம் செய்தால் புண்ணியத்திற்குரிய பலன் உண்டு

பாவம்செய்தால் பாவத்திற்குரிய பலன் உண்டு

என்பதை பாஞ்சாலியின் மேலாடை அவிழ்க்கப்பட்ட செயலில் 

இருந்து தெரிந்து கொள்ளலாம்.


துச்சாதனன் பாஞ்சாலியின் மேலாடையை அவிழ்க்க முயற்சி செய்தது, பாஞ்சாலி துரியோதனனுக்கு செய்த பாவத்தின் பலன் விளைவாக வந்தது.


கிருஷ்ணன் பாஞ்சாலிக்கு ஆடை தந்து காப்பாற்றியது அவள் கிருஷ்ணனுக்கு செய்த புண்ணியத்தின் பலன் கிருஷ்ணன் மூலமாக வந்தது.


பீஷ்மர் : பாஞ்சாலிக்கு மட்டுமல்ல, தர்மனுக்கு நடந்த அவலத்தையும் கண்டு மனம் வருந்துகிறேன். 


அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுத்தவன், 

வாரி வழங்கும் வள்ளலாக இருந்தவன். 

இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியவன்,

தர்மத்தின் காவலனாக இருந்தவன். 

அவனிடமிருந்தே அனைத்தையும் பிடுங்கி விட்டார்கள் 

தர்மம் தலை கவிழ்ந்து இருக்கிறது


தர்மத்தை தலை கவிழ வைத்து விட்டார்கள்.

தர்மமாக வாழும் தர்மருக்கே இந்த நிலை ஏற்பட்டு விட்டது


கிருபர் : தர்மனுக்கு நேர்ந்த அவலத்தைக் கண்டு நானும் மனம் வருந்துகிறேன். 


துரோணர் : தர்மனுக்கு நடந்த செயல். இனி இந்த உலகத்தில் யாருக்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


அஸ்வத்தாமன் : யுதிஷ்டிரனுக்கு தர்மன் என்ற பெயர், யுதிஷ்டிரன் தர்மம் செய்த காரணத்தினால் வந்தது இல்லை. 

யுதிஷ்டிரனுக்கு தர்மம் என்றால் என்ன என்று தெரியுமா?


யுதிஷ்டிரனுக்கு தர்மத்தின் அர்த்தம் தெரியுமா?


யுதிஷ்டிரன் யாருக்காவது தர்மம் செய்து இருக்கிறாரா?  

யுதிஷ்டிரன் தர்மம் செய்தார் என்பதற்கு எந்த ஒரு சாட்சியாவது உண்டா?


யுதிஷ்டிரன் எனக்கு தர்மம் செய்தார் என்று யாராவது கூறியிருக்கிறார்களா? 

தர்மம் என்றாலும் கொடையாளி என்றாலும் 

இந்த உலகத்தில் ஒரே ஒருவனைத் தான் குறிக்கும் 

அது கர்ணனைத் தான் குறிக்கும். 


கர்ணன் தான் தர்மத்தில் உயர்ந்தவன்.

கர்ணன் தான் தர்மத்தில் சிறந்தவன்.

கர்ணன் தான் தர்மத்தின் தலைவன். 

கர்ணன் தான் தர்மத்திற்கு எடுத்துக்காட்டு.

கர்ணன் தான் தர்மத்தின் பிதாமகன். 

கர்ணன் தான் தர்மத்தின் காவலன். 



-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-969 மரணமற்ற அஸ்வத்தாமன்-101 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-969

மரணமற்ற அஸ்வத்தாமன்-101

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


நண்பன் மேல் அவப்பெயர் விழக்கூடாது என்பதற்காகப் பேசினேன். 

நல்லவன் ஒருவன் கெட்ட பெயர் 

வாங்கி விடக்கூடாது என்பதற்காகப் பேசினேன். 

உண்மையைப் பேசினேன். அதுவும் உரக்கப் பேசினேன். 


உண்மையைப் பேசுவதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 

பொய்யைப் பேசுவதற்குத் தான் பயப்பட வேண்டும். 


நண்பன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது 

பார்த்துக் கொண்டிருந்தால் நான் நண்பன் கிடையாது. 

அதனால் பேசினேன். 


நான் பெயர் பெற வேண்டும் என்பதற்காகவோ, 

புகழ் பெற வேண்டும் என்பதற்காகவோ, 

பதவி பெற வேண்டும் என்பதற்காகவோ பேசவில்லை.


தவறானதை தவறு என்றேன். 

சரியானதை சரியானது என்றேன்.


தவறு செய்தவர்களை தவறு செய்தவர்கள் என்றேன்.

தவறு செய்யாதவர்களை தவறு செய்யாதவர்கள் என்றேன்.


நியாயத்தை உரைத்தேன்

அநியாயத்தைக் கண்டித்தேன்


நல்லவைகளை சுட்டிக் காட்டினேன்

அல்லவைகளை விளக்கிக் காட்டினேன்


உண்மையை ஏற்றுக் கொள்ளச் சொன்னேன்

பொய்யை விலக்கச் சொன்னேன்


நல்லவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டாம் என்று சொன்னேன்

கெட்டவர்களை நல்லவர்களாக மாற்ற வேண்டாம் என்று சொன்னேன்


தேவையற்றவைகளை மாற்றுங்கள் என்றேன்

தேவையுள்ளவைகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றேன்.


விதுரர் : துரியோதனன் பாஞ்சாலியை நடு சபையில் வைத்து அவமானப்படுத்தி இருக்கிறான் அதை சரி என்கிறாய்?


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்தது தவறானது என்றால் நீங்கள் அனைவரும் எதிர்த்து இருக்க வேண்டியது தானே? 


செய்யாதே என்று தடுத்து இருக்க வேண்டியது தானே! 


விதுரர் :ஏன் நாங்கள் எதிர்த்தோமே! அக்கிரமத்தை எதிர்த்து பேசினோமே! அநியாயத்தை நிறுத்த சொன்னோமே!


அஸ்வத்தாமன் : அனைத்தையும் பேச்சோடு நிறுத்தி விட்டீர்கள். செயலில் என்ன செய்தீர்கள்


விதுரர் : எங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 


அஸ்வத்தாமன் : உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்லாதீர்கள். துரியோதனன் வெற்றி பெற்று விட்டான், பாண்டவர்கள் தோற்று விட்டார்கள் துரியோதனனுக்கு பாண்டவர்கள் அடிமையாகி விட்டார்கள் 

நீங்கள் துரியோதனனிடம் தோற்ற பாண்டவர்களை விட்டு விடு என்று தான் சொல்ல முடியும். 


பணிவாகத் தான் கேட்க முடியும். கண்டிப்புடன் கேட்க முடியாது. துரியோதனனை உங்களால் சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது.


ஏனென்றால், துரியோதனன் சட்டத்திற்கு உட்பட்டு தான் அனைத்தையும் செய்தான். அதனால் தான் துரியோதனனை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  


பாண்டவர்களை விட்டு விடு என்று கெஞ்சிக் கொண்டிருந்தீர்கள். பாண்டவர்களுக்காக மன்றாடிக் கொண்டிருந்தீர்கள். 


பாண்டவர்களுக்காக சுயமரியாதையை விட்டு நடந்து கொண்டிருந்தீர்கள்.


  அர்ஜுனன் : உன்னுடைய வார்த்தைகள் எங்கள் அனைவரையும் அவமானப் படுத்துகிறது. அஸ்வத்தமா வார்த்தையை அளந்து பேசு பேசுவதற்கு நாக்கு இருக்காது.


அஸ்வத்தாமன் : அர்ஜுனா! இப்போது நீ ஒரு அடிமை. அடிமை நிலையை உணர்ந்து பேசு. அது தான் உனக்கு நல்லது.


விதுரர் : உலகில் மிகச்சிறந்த வீரர்களை இதை விட கேவலமாக யாராலும் செய்ய முடியாது.


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்யவில்லை. அவர்கள் தோற்றார்கள் அடிமையானார்கள். இந்த கதி அடைந்தார்கள். இது அவர்களாகவே தேடிக் கொண்டது. துரியோதனனும் சரி, நாங்களும் சரி, யாரும் இந்த செயலை திட்டமிட்டு செய்யவில்லை. இதை பாண்டவர்களாகவே தேடிக் கொண்டது.


விதுரர் : பாஞ்சாலி நல்லவள், 

யாருக்கும் கெடுதல் செய்யாதவள், 

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள், 

மற்றவர்களுக்காக வாழ்பவள், 

மற்றவர் நலம் ஒன்றே தன் நலம் என்று நினைப்பவள், 

மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவள், 

பத்தினி தெய்வம், 

பெண்களில் உயர்ந்தவள், 

பெண்களில் மாசு குறையாத மாணிக்கம், 

இந்த உலகம் முழுவதும்  தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம், 

அவளை போற்ற வேண்டும், அவமானப்படுத்தக் கூடாது


அத்தகைய சிறப்பு வாய்ந்த பாஞ்சாலிக்கு துரியோதனன் கெடுதலைச் செய்தான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

[15:47, 5/5/2024] Balagangadharan: ஜபம்-பதிவு-970

ஜபம்-பதிவு-968 மரணமற்ற அஸ்வத்தாமன்-100 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-968

மரணமற்ற அஸ்வத்தாமன்-100

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


சாதாரண குடும்பமும், அரச குடும்பமும் இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறது. இன்று வேறு ஒரு வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு நாளை நம் அரச குடும்பத்திலும் நடக்கும் என்பதை அறியாமல் இருந்தீர்கள். இப்போது நடந்து விட்டது. சத்தம் போடுகிறீர்கள்

வீட்டை திருத்த முயற்சி செய்கிறீர்கள். 


நாட்டை திருத்தினால் வீடு திருந்தும் என்பது தெரியாமல் இருந்து இருக்கிறீர்கள்.

பாதிப்பு யாருக்கோ ஏற்படுகிறது என்று கண்டும் காணாதது போல் அமைதியாக இருந்தீர்கள். உங்களுக்கு ஏற்படும் போது சத்தம் போடுகிறீர்கள்

தவறை துரியோதனன் செய்யவில்லை. 


நீங்கள் அனைவரும் செய்து இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு இனிமேலாவது சமுதாயத்தை திருத்த முயற்சி செய்யுங்கள். சமுதாயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள். 


சமுதாயம் திருந்தவில்லையா, சமுதாயம் மாறவில்லையா சட்டம் கொண்டு வாருங்கள்.

இந்த செயல் தொடர்கதையாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுங்கள்


விதுரர் : நீ சொல்வது அவ்வளவு எளிதானது கிடையாது சமுதாயத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறையை அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. நீ சொன்னதை செய்தால் அரசாங்கத்திற்கே ஆபத்து ஏற்படும். 


ஆட்சிக்கே பாதிப்பு ஏற்படும். சமுதாயத்தில் குழப்பம் தான் மிஞ்சும்.


அஸ்வத்தாமன் : அப்படி என்றால் இங்கே நடப்பதை தவறு என்று சொல்லாமல், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல், வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ளாமல், கோபப்படாமல், சத்தம் போடாமல், அமைதியாக இருங்கள் நடந்து கொண்டிருக்கும் செயலைப் பார்த்துக் கொண்டிருங்கள். 


வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருங்கள்.

துரியோதனன் : அற்புதம், அபாரம் அஸ்வத்தாமா! உண்மையை அனைவருடைய மனதிலும் ஏறும்படி அடித்துக் கூறி இருக்கிறாய். உரக்கச் சொல்லி இருக்கிறாய். 


இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்படி கூறியிருக்கிறாய். இனியும் இவர்கள் நான் செய்தது தவறு என்று சொல்வார்களேயானால், அவர்கள் பாண்டவர்கள் மேல் உள்ள அன்பினால் அவ்வாறு சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்பவன் தான் நண்பன் என்பதை நிரூபித்து விட்டாய் அஸ்வத்தாமா! நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும் இந்த சமுதாயத்திற்கு சொன்ன சொற்கள்.


 உண்மையைக் கொண்ட சொற்கள். என் மேல் உள்ள களங்கத்தை நீக்கும் சொற்கள். என்னை கெட்டவனாக நினைக்க வைக்க சில சதிகார்களின் வார்த்தைகளை பொய்யாக்கும் சொற்கள். நான் குற்றவாளி இல்லை நல்லவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தும் சொற்கள். நான் செய்த செயல் சரியானது தான் என்பதை நிரூபிக்கும் சொற்கள்.


இந்தத் துரியோதனன் கெட்டவன் இல்லை நல்லவன் என்பதை நிரூபிக்கும் சொற்கள். உலக நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்தச் செயல்களைச் செய்தான் இந்த துரியோதனன் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிக்கும் சொற்கள்.


நண்பா அஸ்வத்தாமா! என் மேல் உள்ள களங்கத்தை நீக்கி விட்டாய். என்மேல் சாட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை நீக்கி விட்டாய். நான் நல்லவன் களங்கமில்லாதவன். நீதி நெறி தவறாதவன், சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவன், உலக நடைமுறைகளைத் தான் பிற்பற்றுபவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி விட்டாய்.


துரியோதனன் செய்த செயல் தவறானது என்று 

நாளைய உலகம் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவும், 


இந்தத் துரியோதனன் செய்த செயல் சரியானது தான் என்று 

நாளைய உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


யாரைக் கண்டும் பயப்படாமல், 

எதனைக் கண்டும் பயப்படாமல், 

அதிகாரவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

பணம், பதவி, அதிகாரம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், 

ஆதிக்கவர்க்கத்தைப் பற்றிக் கவலைப்டாமல், 

துரியோதனனுக்கு ஆதரவாகப் பேசினால் 

எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன்னைப் பற்றிக் கவலைப்படாமல், 

உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல், 


உன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், 

நீ பேசிய பேச்சுக்கள் ஒரு நண்பன் எப்படி இருக்க வேண்டும் 

என்பதற்கு உதாரணமாக இருக்கிறது.


இந்த உலகம் உள்ளவரை, நட்புக்கு இலக்கணமாக உன்னுடைய பெயரே இருக்கும். அப்படி இல்லை என்றால் தேவைப்படுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக வேறு ஒருவர் பெயரை நட்புக்கு இலக்கணமாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.


அஸ்வத்தாமன் : நீ என்னை உன்னுடைய உண்மையான நண்பனாக 

ஏற்றுக் கொண்டாயோ இல்லையோ எனக்குத் தெரியாது. 

ஆனால் நான் உன்னை என்னுடைய 

உண்மையான நண்பனாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். 

அதனால் பேசினேன். 


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-967 மரணமற்ற அஸ்வத்தாமன்-99 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-967

மரணமற்ற அஸ்வத்தாமன்-99

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டால் அது பாதிப்பு கிடையாது 

ஆனால், அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது பாதிப்பா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் கஷ்டப்பட்டால் அது கஷ்டம் கிடையாது 

ஆனால்,அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது கஷ்டமா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

அவமானப்படுத்தப்பட்டால் மட்டும் அது அவமானம் கிடையாது

ஆனால், அரச குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டும் அது அவமானமா?


அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் அசிங்கப்பட்டால் மட்டும் அது அசிங்கம் கிடையாது 

ஆனால், அரச குடும்பம் அசிங்கப்பட்டால் மட்டும் அது அசிங்கமா?


அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரு நீதி?

அரச குடும்பத்துக்கு மட்டும் ஒரு நீதியா?


நன்றாக இருக்கிறது உங்கள் நீதி, நியாயம்


இந்த உலகத்தில் இந்த செயல் யாருக்கும் நடக்காதது போலவும்,

உலகத்திலேயே இந்த செயல் 

எந்தப் பெண்ணுக்கும் நடக்காதது போலவும்,

உலகத்திலேயே இந்த செயல் 

முதன் முதலாக பாஞ்சாலிக்குத் தான் நடந்தது போலவும்,

பாஞ்சாலிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டது போலவும், 

உலகத்திலேயே பாஞ்சாலிக்கு நடந்தது 

வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் நடக்காதது போலவும்,

கத்தி, ஆர்ப்பாட்டம் போட்டுக் கொண்டு, கதறி அழுது கொண்டு இருக்கிறீர்கள்


பாஞ்சாலிக்கு நடந்தது இந்த உலகத்தில் பெண்களுக்கு

காலம் காலமாக நடந்து கொண்டு தானே இருக்கிறது.


ஆதிக்கவர்க்கத்தினாரால் இந்த செயல் தொடர்ந்து

நடந்து கொண்டுதானே இருக்கிறது.


ஆதிக்கவாதிகள் அடிமைகளான பெண்களை 

இவ்வாறு நடத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்.


இப்போதும் பாஞ்சாலிக்கு நடந்தது 

அடிமைப் பெண்களுக்கு நடந்து கொண்டு தானே இருக்கிறது.


அப்போது எல்லாம் அதை தடுக்க முன்வராதவர்கள்,

அப்போது எல்லாம் அதை நிறுத்த முன்வராதவர்கள்,

அப்போது எல்லாம் அதை தவறு என்று சொல்ல முன்வராதவர்கள்,

இப்போது எதற்காக தவறு என்கிறீர்கள்.


ஏனென்றால், பாதிக்கப்பட்டது 

அதிகார வர்க்கத்து பெண் ,

அரச குடும்பத்து பெண்,

அடிமைப்பெண் கிடையாது


இது பாஞ்சாலிக்கு மட்டும் நேர்ந்த கொடுமைகளின் உச்சம் என்பவர்கள்

முன்னர் அடிமைகள் தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆகிய அனைவருக்கும் 

நடந்த கொடுமைகளின் உச்சத்தை என்ன என்று சொல்வார்கள்.


அவர்கள் சந்தித்த கொடுமைகளின் சிறு துளி கூட பாஞ்சாலி அனுபவிக்கவில்லை.


சாதாரண வீட்டில் இந்த விஷயம் நடந்து இருந்தால் இது பெரியதாகத் தெரிந்து இருக்காது.


அரச குடும்பத்தில் அல்லவா நடந்து இருக்கிறது. அதனால் தான் இந்த விஷயம் பெரிதுபடுத்தப்படுகிறது.

இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை. 

நடந்த விஷயத்திற்காகக் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.


இந்த விஷயத்தில் எந்த ஒரு தவறும் நடக்கவுமில்லை,

யாரும் எந்த ஒரு தவறும் செய்யவுமில்லை, 

துரியோதனன் செய்த செயலில் எந்த தவறும் இருக்கவுமில்லை.


விதுரர் : தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருமே ஆண் பெண் பேதமின்றி மேலாடை அணியும் உரிமை இந்த சமுதாயத்தில் மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது. 

பெண்களின் மேலாடை அணியும் உரிமை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளின் கைகளில் தான் இருந்தது. 


அவர்கள் தான் மேலாடை அணிவதை ஆதிக்கத்தின் பெயரால் தடை செய்தார்கள்.


அஸ்வத்தாமன் : தவறான ஒன்று நடைமுறையில் இருக்கும் போது அதை நீக்க சட்டம் கொண்டு வர வேண்டியது தானே. 


அலட்சியமாக இருந்தீர்கள். 

பக்கத்து வீடு தீப்பற்றி எரியும் போது அதை அணைக்காமல் வேடிக்கை பார்த்தீர்கள். 


இப்போது உங்கள் வீடு தீப்பற்றி எரியும் போது மட்டும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறீர்கள்

இந்த சமுதாயத்தில் உள்ளதை கண்டும் காணாமல் இருந்தீர்கள் இப்போது உங்கள் வீட்டில் நடக்கும் போது சத்தம் போடுகிறீர்கள்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-966 மரணமற்ற அஸ்வத்தாமன்-98 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-966

மரணமற்ற அஸ்வத்தாமன்-98

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


துரியோதனனின் அடிமைகள் இந்த பாண்டவர்கள் என்பதை இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை முட்டி போட்டு இருக்க சொல்லி இருக்கிறான்.


பாண்டவர்களைப் பொறுத்தவரை துரியோதனன் செய்தது சரி தான். ஒரு முதலாளி அடிமைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ? அப்படித் தான் துரியோதனன் நடந்து கொண்டிருக்கிறான்.


இதில் தவறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. துரியோதனன் செய்த செயல் தவறு என்று சொல்ல முடியாது.

துரியோதனன் முதலாளி என்ற நிலையில் அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நட்த்தியிருக்கிறான்

இதில் ஒன்றும் தப்பு இல்லை. அடிமைகளை இந்த சமுதாயம் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே துரியோதனன் தனக்கு அடிமையான பாண்டவர்களை நடத்தினான்.


பாஞ்சாலியும் தருமனால் சூதில் பணயமாக வைத்து தோற்கப்படுகிறாள். அதனால் அவளும் கௌரவர்களுக்கு அடிமை ஆகிறாள். துரியோதனனுக்கு அடிமையாகிறாள். அடிமையானதாலேயே அவளது மேலாடை நீக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது 

மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை துரியோதனன் அறிந்து வைத்திருந்த காரணத்தினால் துச்சாதனன் மூலம் பாஞ்சாலியை அழைத்து வரச்செய்து அவளுடைய மார்புத் துணியை நீக்கச் சொன்னான்.


மார்பிலே துணியைத் தாங்கும் வழக்கம் அடிமைக்கில்லை என்பதை இந்த அவையில் இருக்கும் பீஷ்மர், விதுரர், என்னுடைய தந்தை துரோணர், கிருபர், அரசப் பிரநிதிகள்,  அறிஞர்கள், மேதைகள், மக்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். 


இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்து இருந்த காரணத்தினால், 

துரியோதனன் செய்யச் சொன்ன செயல் சரியான செயல் என்ற காரணத்தினாலும், 

துச்சாதனன் செய்த செயல் சரியானது என்ற காரணத்தினாலும் தான், 

துச்சாதனன் பாஞ்சாலியின் மேலாடையை நீக்கும் போது 

அனைவரும் தயவு செய்து நிறுத்து என்று கெஞ்சினார்களே தவிர

அவர்கள் நிறுத்தவுமில்லை,

அவர்களால் நிறுத்தவும் முடியாது.. 


அடிமைகளும், தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட ஒன்றாக இந்த சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பது இங்கே அமர்ந்திருக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கும், அதிகாரம் கொண்டவர்களுக்கும் மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் தெரியாதது போல் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


துரியோதனன் கட்டளையின் படி துச்சாதனன் அரசவையில் வைத்து பாஞ்சாலியின்  சேலையை உரியக் காரணம் பாஞ்சாலியை அவமானப்படுத்துவதற்காகக் கிடையாது. பாஞ்சாலியை அடிமைப்படுத்துவதற்காகத் தான் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


ஏனென்றால், அன்று முதல் இன்று வரை மேலாடை அணியும் உரிமை என்பது சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமான உரிமையாக இருந்து கொண்டிருக்கிறது. மேலாடை அணியும் உரிமை அடிமைகளுக்கு கிடையாது.


இந்த உண்மை துரியோதனனுக்கும் தெரியும். இங்குள்ள அனைவருக்கும் தெரியும். 

அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் 

மேலாடை அணியும் உரிமை அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் 

இந்த சமுதாயம் இருக்கிறது 

இந்த கொடுமையான நிலை நீக்கப்பட வேண்டும். 

இந்த இழிநிலைவான நிலை மாற்றப்பட வேண்டும் 

அதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும்.


சட்டம் கொண்டு வந்து 

இந்த கொடுமையான நிலையை மாற்ற வேண்டும் 

என்று துரியோதனன் பலமுறை சொன்ன போது 

வாய் மூடி மௌனமாக இருந்தவர்கள் 

இப்போது மட்டும் ஏன் கத்துகிறார்கள் 

அரச குடும்பத்து பெண் பாதிக்கப்பட்டாள் என்பதற்காகவா?


அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் 

இவ்வளவு நாள் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள் 

அவர்கள் கண்ணில் படவில்லையா? 

அல்லது 

இந்தக் கொடுமை நிலை அவர்களுக்கு தெரிந்தும் 

தெரியாதது போல் இருந்து விட்டார்களா? 

அல்லது

கண்டும் காணாதது போல் நடந்து கொண்டார்களா? 

அல்லது 

இந்தக் கொடுமைகளை பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு 

கல் நெஞ்சம் கொண்டு இருந்தார்களா ?


அரச குடும்பத்து பெண்ணின் மேலாடையை கழட்டும் போது சண்டைக்கு வரும் அவர்கள் அடிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மேலாடை இல்லாமல் இருக்கும் போது எங்கே சென்றார்கள்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-965 மரணமற்ற அஸ்வத்தாமன்-97 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-965

மரணமற்ற அஸ்வத்தாமன்-97

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


விதுரர்  : எந்த நடைமுறையைச் சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : அனைத்தும் தெரிந்தவர் தாங்கள். உங்களுக்குத் தெரியாத உலக நடைமுறை என்று என்ன இருக்கிறது. நான் சொல்லித் தான் அதை தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 


அனைத்தும் தங்களுக்கே தெரியும்.


பீஷ்மர் :  நீ சொல்வது புதியதாக இருக்கிறது. என்ன நடைமுறையைச் சொல்ல வருகிறாய். எந்த நடைமுறையை துரியோதனன் பின்பற்றி செய்தான் என்கிறாய். புரியும்படிச் சொல்.


அஸ்வத்தாமன் : புரியும் படி விவரமாகச் சொல்வதற்கு நான் ஒன்றும் விதுரர் அளவிற்கு பெரிய அறிவாளி இல்லை. அனைத்தும் அறிந்தவன் இல்லை. எனக்கு தெரிந்த உலக நடைமுறையைச் சொன்னேன். விதுரருக்கே தெரியாத நடைமுறை இந்த உலகத்தில் என்ன இருக்கிறது 


கிருபர் : நீ ஏதோ தவறாக சொல்கிறாய். ஒருவருக்கு எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 


அஸ்வத்தாமன் : விதுரருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாது போல் இருக்கலாம். உலக நடைமுறையைச் சொன்னால் துரியோதனன் செய்தது சரியானது என்று ஆகி விடும். என்ற காரணத்தினால் தனக்கு தெரிந்ததை சொல்லாமலும் இருக்கலாம். உண்மையை மறைத்தும் இருக்கலாம்.


பீஷ்மர் : என்ன சொல்ல வருகிறாய் அஸ்வத்தாமா?


அஸ்வத்தாமன் : உலகத்தில் உள்ள நடைமுறையைச் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன்.


பீஷ்மர் : விதுரரே அஸ்வத்தாமன் சொல்லும் உலக நடைமுறை பற்றி உங்களுக்கு தெரியுமா?


விதுரர் : அஸ்வத்தாமன் முதலில் சொல்லட்டும். அவன் சொல்வது உலக நடைமுறையில் இருக்கிறதா என்பதையும், அவன் சொல்வது சரியானது தானா என்பதையும், பின்பு ஆராய்வோம். 


அஸ்வத்தாமா நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை முதலில் சொல்.


 அஸ்வத்தாமன் : எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எல்லாம் அறிந்த மேதை விதுரருக்கே தெரியவில்லை என்பது வேடிக்கையான விஷயம். இதை நான் நம்ப வேண்டும் என்று சொல்கிறார். 


இருந்தாலும் நான் சொல்கிறேன். இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். விஷயம் தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் நடிப்பவர்களுக்காகச் சொல்கிறேன்.


சூதாட்டத்தில் தன்னையும் தம்பிகளையும் பணயமாக வைத்துத் தோற்ற தருமனும், அவனுடைய தம்பிகளும் உடனே கௌரவர்களுக்கு அடிமையாகிறார்கள். 


துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.

துரியோதனன் முதலாளியாகிறான், பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகிறார்கள்.


முதலாளிகளுக்கு அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த உரிமையுண்டு.

இடம், நேரம், காலம், சூழ்நிலை பொறுத்து அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமையை முதலாளிகள் பெற்று உள்ளனர்.


அடிமைகள் மேல் சட்டையைப் போடுவதில்லை. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.

அடிமைகள் மேல் சட்டையைப் போடக் கூடாது. மேல் சட்டை போடாமல் இருந்தால் தான் அவர்கள் அடிமைகள். அடிமைகள் மேல் சட்டை போடாமல் இருப்பது தான் அவர்கள் அடிமை என்பதற்கு அடையாளம்.


முதலாளிகள் என்ன செயலைச் செய்யச் சொல்கிறார்களோ? அந்த செயலைச் செய்ய வேண்டியது அடிமைகளின் கடமை. 


செய்யவில்லை என்றால் செய்ய வைக்க வேண்டியது முதலாளியின் கடமை. செய்யவில்லை என்றால் தண்டனை கூட கொடுக்கலாம் முதலாளிகள்.

அடிமைகளின் மேல் முதலாளிக்கு முழு அதிகாரம் உண்டு.


அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்த முழு உரிமை உண்டு.

அந்த அடிப்படையில் தான் துரியோதனன் தனக்கு அடிமைகளாக பாண்டவர்கள் கிடைத்தவுடன் முதல் காரியமாக அவர்களுடைய சட்டையை கழட்ட சொன்னான்.


பாண்டவர்கள் துரியோதனனுடைய அடிமைகள் என்று இந்த உலகத்திற்குக் காட்ட வேண்டும் என்றால் பாண்டவர்கள் மேல் சட்டை போடக் கூடாது.


துரியோதனின் அடிமைகள் பாண்டவர்கள் என்று 

இந்த உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காவும், 


பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையாகி விட்டார்கள் என்று 

இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 


பாண்டவர்களுக்கு இனி துரியோதனன் தான் முதலாளி 

பாண்டவர்கள் அவனுக்கு அடிமைகள் என்று 

இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,  


துரியோதனன் சொற்படி தான் பாண்டவர்கள் கேட்க வேண்டும் என்று 

இந்த உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் 


அவர்களுடைய மேல் சட்டையை முதலில் கழட்ட வைத்தான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

ஜபம்-பதிவு-964 மரணமற்ற அஸ்வத்தாமன்-96 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-964

மரணமற்ற அஸ்வத்தாமன்-96

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)


(அஸ்தினாபுரத்தின் அவையில் பாஞ்சாலியின் சேலை அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த நிலையில்)


பீஷ்மர் : துரியோதனா போதும் நிறுத்து !


துரியோதனன் : நான் தவறா செய்து கொண்டிருக்கிறேன் நிறுத்துவதற்கு? 


பீஷ்மர் : தவறு செய்பவர்களுக்கு தாங்கள் செய்வது தவறு என்றும் தெரியாது. செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


துரியோதனன் : யாராவது தவறு செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் போய் சொல்லுங்கள், தவறு செய்யாதீர்கள் என்று.


பீஷ்மர் : தவறுக்கு மேலான தவறை செய்து கொண்டிருப்பதால் தான் உன்னிடம் சொல்கிறேன். செய்த தவறு போதும் . இதற்கு மேல் செய்யாதே என்று. 


துரியோதனன் : அப்படி என்ன தவறை செய்து கொண்டிருக்கிறேன். நிறுத்துவதற்கு?


பீஷ்மர் : பாண்டவர்களுக்கு நீ நடத்தும் கொடுமைகளைச் சொல்கிறேன்.


துரியோதனன் : அறிவு நிறைந்தவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள் நான் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டார்கள். 


அடிமைகளை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படித் தானே நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.


பீஷ்மர் : பொறுமைக்கும் எல்லை உண்டு, பொறுமை எல்லை கடந்தால் என்ன  நடக்கும் தெரியுமா?


துரியோதனன் : நான் தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை. ஆனால் நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் 

பொறுமைக்கு எல்லை என்பதே கிடையாது. 


எல்லை என்ற ஒன்று உண்டு என்றால் அது பொறுமையாக இருக்கவே முடியாது. 

நான் வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவர்களை எப்படி நடத்த வேண்டுமோ? அப்படி தானே நடத்திக் கொண்டிருக்கிறேன். 


நான் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? என்னுடைய செயலில் என்ன தவறைக் கண்டீர்கள்? 


விதுரர்  : நீ அவமானப்படுத்திக் கொண்டிருப்பது உன் உடன் பிறந்தவர்களை!


துரியோதனன் : எங்களை எப்போது பாண்டவர்கள் உடன்பிறந்தவர்களாக நினைத்து இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை உடன்பிறந்தவர்களாக நினைப்பதற்கு?


விதுரர்  : பாண்டவர்கள் யாரையும் விரோதிகளாக நினைப்பதில்லை.


துரியோதனன் : என்னிடம் நண்பனாக இருப்பதற்குத் தகுதி தேவையில்லை. ஆனால், விரோதியாக இருப்பதற்குத் தகுதி வேண்டும். எந்தத் தகுதியும் இல்லாத பாண்டவர்களை நான் எப்படி விரோதியாக நினைக்க முடியும்.


பாண்டவர்கள் வெற்றி பெற்று கௌரவர்கள் தோற்றால் இப்படி பேசுவீர்களா?

 பாண்டவர்கள் என்பதால் பாசம் ஓடி வருகிறதா?


கிருபர் : யாராக இருந்தாலும் தவறு செய்தால் தவறை தவறு என்று தான் சொல்வோம்! இத்துடன் நிறுத்திக் கொள்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் எந்தத் தவறும் செய்யவில்லை. பிறகு எதற்கு நிறுத்த வேண்டும். நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


விதுரர்  : அஸ்வத்தாமா!  நீயா இவ்வாறு சொல்கிறாய்?


அஸ்வத்தாமன் : ஆமாம் நான் தான் சொல்கிறேன். இந்த அஸ்வத்தாமன் தான் சொல்கிறேன். துரியோதனன் செய்தது தவறு இல்லை என்று சொல்கிறேன்.


கிருபர் : துரியோதனன் செய்ததை சரி என்கிறாயா?


அஸ்வத்தாமன் : ஆமாம்! துரியோதனன் செய்தது சரி தான். அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. துரியோதனன் செய்த செயல் சரியாக இருக்கும் போது அதில் தவறு எப்படி இருக்கும்.


பீஷ்மர் : துரியோதனன், அக்கிரமமான வேலை செய்து கொண்டிருக்கிறான். அதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : அவன் அக்கிரமமான செயல் எதுவும் செய்யவில்லை. 

என்ன செய்ய வேண்டுமோ? அதைச் செய்திருக்கிறான். 

எப்படி செய்ய வேண்டுமோ? அதை சரியாகச் செய்திருக்கிறான்.


விதுரர்  : எதை வைத்து துரியோதனன் செய்வதை சரியானது என்கிறாய்.


அஸ்வத்தாமன் : துரியோதனன் செய்த செயலை வைத்துத் தான்.


கிருபர் : அவன் இரக்கமற்ற செயலை அல்லவா செய்திருக்கிறான்.


அஸ்வத்தாமன் : இந்த சமுதாயத்தில் என்ன நடைமுறை இருக்கிறதோ அதைத் தானே செய்திருக்கிறான்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

----05-05-2024


----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////