February 04, 2012

இயேசு கிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-காட்டானை-பதிவு-5

  


    இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-பதிவு-5
                     “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு வசனங்கள் மூலம் விளக்கிய இயேசு ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான வழி முறைகள் எவை என்பதைப் பற்றி ,
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார்:

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகா விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
                                                                  மத்தேயு  - 18 : 3

குழந்தை என்னும் நிலையை அடைந்தால் ஒழிய ,
குழந்தையின் மனநிலையைப் பெற்றால் ஒழிய ,
குழந்தையின் குணநலன்களால் நிரப்பப் பட்டால் ஒழிய ,
குழந்தையின் களங்கமில்லாத ,
          அசுத்தமில்லாத ,
          தீயவை நினைக்காத ,
          இன்பம் கண்டு வெறி பிடித்து ஆடாத ,
          துன்பம் கண்டு துவழாத ,
          பிறருக்கு கெடுதல்களை நினைக்காத ,
          இறந்த காலத்தை நினைத்து வருத்தப்படாத ,
          எதிர்  காலத்தை நினைத்து பயப்படாத ,
          கணத்திற்கு கணம் வாழ்ந்து கொண்டிருக்கும்
          குழந்தையின் தன்மையை ,
          அடைந்தவர்கள் மட்டுமே
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார் இயேசு .
அதாவது நீங்கள் குழந்தையாக மாறினாலொழிய பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்கிறார்  இயேசு.மனதின் தன்மைகள் :
ஓருவன்
தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட் பற்று - ஆகிய
இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டு இருப்பதால் ,

அறியாமை  , அலட்சியம்  , உணர்ச்சி வயப்படுதல் - ஆகிய
மூன்று விதமான நிலைகளில் தவறுகளைச் செய்கிறான் .

இதனால்
இன்பம் , துன்பம் , அமைதி , பேரின்பம் - ஆகிய
நான்கின் - நாலறிவின்
உற்பத்தி ஸ்தானம் எழும் இடம் எது என்று அறிய முடியாமல்  தவிக்கிறான் .

இதன் காரணமாக
பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்பு நெறி பிறழ்தல்
ஆகிய ஐந்து விதமான
பஞ்சமா பாதகங்களை,

தன்னுள் எழும்
பேராசை , சினம் , கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி , உயர்வு - தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் - ஆகிய
ஆறுவகையான குணங்களைக் கொண்டு தவறுகளைச் செய்கிறான் .

இதன் காரணமாக
ஏழேழு ஜென்மங்களாக
கர்ம வினையில் மாட்டிக் கொண்டு துன்பச் சகதியில் நீந்துவதால்,

பிறப்பு - இறப்பு அறுத்து ,
முக்தி என்னும் நிலையை அடைவது என்பது ,

எட்டும் கனியாக இருக்க வேண்டியது,
எட்டாக் கனி ஆகி விடுகிறது .

மனம் தெளிவு பெற்று
ஒன்பது ஓட்டைகளை , 
அடைக்கும் திறன் அறியப் பெறும் போது மனிதன் ,

பத்தாவது வாசலைத் திறந்து ,
அமுதத்தை உண்டு முக்தி அடைகிறான்.மனந்திரும்புங்கள் :
மனதை அடக்க நினைத்தால் அலையும் ,
அறிய நினைத்தால் அடங்கும்.
மனதை அடக்கி நாம் எந்த செயலையும் நமக்கு தேவையானவற்றையும் சக்திகளையும் பெற முடியாது.
மனம் சாதாரண நிலையிலேயே அதன் பலன் அதிகம் .
மனதை மேலும் அடக்க அடக்க அதன் சக்தியானது அதிகரித்துக் கொண்டே போகும் .
மனதை ஒரு அளவுக்கு மேல் அடக்க முடியாது , அப்படியே அடக்கினாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அடங்காது வெளிக்கிளம்பி விடும் .

                               அதன் ஆவேசத்தில் ,
                               அதன் அக்னிப் பிரவாகத்தில் ,
                               அதன் உணர்ச்சி துடிப்பில் ,
நாம் பல வித துன்பங்களை இழப்புகளை சோதனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே மனதை அடக்க நினைக்கக் கூடாது .
மனதை அறிய வேண்டும்.
மனம் எங்கிருந்து கிளம்புகிறதோ அங்கேயே திருப்ப வேண்டும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி மேலே எறியப்பட்ட கல் , மீண்டும் பூமியை நோக்கி கண்டிப்பாக வந்தே தீரும் .பூமியில் வந்து விழுந்ததும் அது அமைதி அடைகிறது .
பூமியிலிருந்து மேலே துhக்கி எறியப்பட்ட கல் மீண்டும் பூமிக்கே வந்த பிறகு அமைதி நிலையை அடைகிறது .
எந்த இடத்திலிருந்து , எங்கிருந்து கிளம்பி சென்றதோ , மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்து விட்ட பிறகு அந்த பொருள் அமைதி நிலையை அடைகிறது  .

அதைப் போல் ,
மனம் எங்கிருந்தோ கிளம்பியதோ அந்த இடத்தைக் கண்டு பிடித்து இணைத்து விட்டால் மனம் அமைதி பெறும் அலையாது சுற்றித் திரியாது .
உயிரின் படர்க்கை நிலை தான் மனம் .
உயிர்  விரிந்து படர்க்கை நிலை அடைந்து இயங்கும் போது மனமாக மாற்றம் அடைகிறது .
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு மனமானது அதாவது உயிருக்கே திரும்பும் போது மனம் அமைதி அடைகிறது .
இதைத் தான் இயேசு மனந் திரும்புங்கள் என்கிறார் .துhய்மையடையும் நிலை :
மனம் உயிருடன் இணைத்து விட்ட முறை அறிந்த பின் மனதை உயிருடன் இணைத்து உயிரைத் துhய்மைப் படுத்த வேண்டும் .

உயிர்  துhய்மை பெற வேண்டுமென்றால் ,
                                 களங்கமில்லா உள்ளம் ,
                                கவலைப் படாத நெஞ்சம் , 
                                எதற்கும் அஞ்சாத துணிவு ,
                                தோல்வி கண்டு துவழா மனம் ,
                                வெற்றி கண்டு ஆடா செயல் ,
                                   பிறரை மதிக்கும் பண்பு,

மற்றவரை வருத்தப்பட வைக்காத சிந்தனை ,
ஏழ்மையை துhற்றாத சொல் ,
அறியாமையை பயன்படுத்தாத மனிதத் தன்மை ,
ஆகியவற்றை தன்னுள் கொண்டு,

கயமைத்தனமான எண்ணங்களும் ,
பொய் பித்தலாட்டங்களைக் கொண்ட பேச்சுக்களும் ,
கொலை வெறி பாதகங்களும் ,
வேசித் தன்மை கொண்ட சூழ்ச்சிகளும் ,
ஜாதி ,மத ,இன ,மொழி வேறுபாடுகளும் ,
உயர்வு -  தாழ்வு மனப்பான்மை கொண்ட வெறியாட்டங்களும் ,
களைந்து துhய்மை பெறும் பொழுது ,
உயிரானது சுத்தமாகி படர்க்கை நிலை அடையும் பொழுது ,
குழந்தைத் தனமாகி விடுகிறது.
பிள்ளைகளுக்குரிய குணநலன்களைப் பெற்று விடுகிறது .


அத்தகைய தன்மையை அடைந்து விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற்றால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .

இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெறாதவர்கள் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற முடியாதவர்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது .
என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார்  இயேசு .அழுகுணிச் சித்தர் :

      “””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
               நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ
               நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
               காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
                                                     -------அழுகுணிச் சித்தர் -------

 “””காட்டானை””””
கடவுள் இந்த உலகத்தில் பல்வேறு வடிவங்கள் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறான் .
நீக்கமற நிறைந்து இருக்கிறான் .
இறைவன் அறிவாக இருக்கிறான் .
இறைவன் அன்பாக இருக்கிறான் .
இறைவன் கருணையாக இருக்கிறான் .

இவ்வாறு பல்வேறு வடிவங்கள் கொண்டு தன்மைகள் கொண்டு இறைவன் இருந்தாலும்,
மனிதர்களால் அவனை எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது,
இறைவனை அறிந்து கொள்ள முடியாது ,
இறைவனை புரிந்து கொள்ள முடியாது,

காட்டானை என்றால் கடவுள் தான் யார் என்பதையும் ,
               தன்னுடைய சிறப்புகள் என்ன என்பதையும் ,
               தன்னுடைய சக்திகள் எவை என்பதையும் ,
வெளிக் காட்டாதவன் வெளியில் காட்டிக் கொள்ளாதவன் என்று பொருள்.
“””””காட்டானை மேலேறி “””””
காட்டானை மேலேறி என்றால்
சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக
குண்டலினி சக்தியை மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது என்று பொருள் .கடைத்தெரு
கடைத்தெரு என்றால் கடைசி நிலையான இறை நிலை , இருப்பு நிலை, பரம்பொருள் என்று பொருள்
மனிதர்கள் உயிர்  வாழ்வதற்கு ,
வாழ்க்கையை நடத்துவதற்கு ,
பொருட்களை பரிமாறி கொள்வதற்கு ,
அன்றாட தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு ,
ஊரின் கடைசியில் ஒரு தெரு வைத்திருந்தனர் .
அந்தத் தெருவில் பொருட்களை மாற்றிக் கொள்வதற்கும் பண்டங்களை மாற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தினர் .

இந்த பிரபஞ்சம் நிலம் , நீர் , நெருப்பு, காற்று ,விண் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது .
இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளது ,
மூல நிலையாக உள்ளது, இயக்க நிலையான விண் என்ற உயிர்  ஆகும் .

இந்த இயக்க நிலையான விண் என்ற உயிர்  இருப்பு நிலையான இறை நிலையிலிருந்து எழுச்சி பெற்றது என்ற சொல்லும் போது பஞ்சபூதங்களுக்கு முடிவாக உள்ளது பரம்பொருள் என்ற இருப்பு நிலை ஆகும் .
அதனால் தான் பஞ்சபூதங்களுக்கு கடைசியாக உள்ள இறைநிலையை, இருப்பு நிலையை பரம்பொருளை கடைத்தெரு என்றனர்  அதாவது கடைசியாக உள்ள நிலை என்று பொருள் .“””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
         நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ”””””””
தான் யார்  என்று வெளிக்காட்டாமல் இருப்பவனை அறிந்து கொள்வதற்காக ,
ரகசியங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்வதற்காக ,
குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சஹஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் வைத்து தவங்கள் இயற்றி ,
ஐந்து புலன்களில் இயங்கிப் பெற்ற அனுபவங்களைத் தன்னுள் கொண்டு ,
வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை மனதில் நிறுத்தி ,
இறுதி நிலையான கடை நிலையான இறுதி நிலையாக உள்ள ,
                               இறை நிலையை நோக்கி   ,
                               இருப்பு நிலையை நோக்கி ,
                               சுத்த வெளியை நோக்கி ,
வெட்ட வெளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது ,

உலக வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த அனுபவங்கள் பெற்ற கர்ம வினைகள் ஒவ்வொன்றும் ,
நாம் அந்த இறை நிலையை அடைய விடாமல் தடுக்கின்றன .

கர்ம வினையின் முழுத்தாக்கங்கள் -
                           கழிக்க முடியாத சோகங்கள் ,
                           மாற்ற முடியாத துன்பங்கள் ,
                           ஆற்ற முடியாத கவலைகள் ,
                           தோல்வியின் துயர ரேகைகள் ,
                            துன்பங்களின் நிலைகள் ,
நம்மை ஆட்டி வைத்து இரத்த கண்ணீரை வரவழைத்து -
                            இன்பத்தின் இதய வீணைகள் ,
                             மகிழ்ச்சியின் சுகபோகங்கள் ,
                             வெற்றியின் தாலாட்டுகள் ,
                             முன்னேற்றத்தின் அருஞ்சுவைகள் ,
ஆகிய இன்பங்களின் நிலைகளையும் கொடுத்து ,

இறை நிலையை நீ அடைந்து விடுவாயா ? என்று அதை அடையும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று ,
எள்ளி நகையாடி சிரித்து மகிழ்ந்து நம்மைப் பார்ப்பர் .
ஏளனம் செய்வர் .      “”””நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
            காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
நம்மை இறை நிலையை அடைய விடாமல் தடுத்தாலும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளித்தும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளிக்காது ,
தடுத்து நம்மிடையே விளையாடினாலும் ,
குண்டலினி சக்தியை மேலேற்றி தவங்கள் பல இயற்றி ,
தடைகள் பல வென்று ,
சூழ்ச்சிகள் பல கொன்று ,
இறுதி நிலையான அந்த இறை நிலையை இருப்பு நிலையை அடைவேன் என்கிறார்  அழுகுணிச் சித்தர் .இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர் :
இயேசு நம்மிடமுள்ள தீயவைகளை விலக்கி குழந்தையாக மாறினால் பரலோக ராஜ்ஜியத்தை அடையலாம் என்கிறார்  
( பாவங்களை நீக்கி இறைவனை அடையலாம் )

அவ்வாறே
அழுகுணிச் சித்தரும் கர்ம வினைகளின் மூலம் பெறப்பட்டவைகளை நீக்கிய பிறகு இறை நிலையை அடையலாம் என்கிறார்  
( கர்ம வினைகளை நீக்கி இறைவனை அடையலாம் )  


                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”