November 22, 2011

ஐயப்பன்- பிறப்பு- பதிவு-2

              

             ஐயப்பன்- பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
      ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - பிறப்பு :
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன்  
அரி அர புத்திரன் ஐயப்பன் என்பது சமுதாயத்தில் உள்ள ஒரு வழக்கு
அரி என்றால் திருமால் என்று பொருள் 
அரன் என்றால் சிவன் என்று பொருள்
அரிக்கும் அரனுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று பொருள்
இதில் உள்ள சூட்சும ரகசியத்தை புரிந்து கொண்டால் நமக்கு சில விளக்கங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சிவம் - சக்தி
பரம் பொருளாகிய மெய்ப் பொருளாகிய சிவம் பின்ன நிலையடைந்த நிலையிலே எப்பொழுது வேகங் கொண்டு இயங்குகிறதோ விரைவு கொள்ளுகிறதோ  அதற்குச் சக்தி என்று பெயர்.
சிவம் என்ற சொல்லை மாற்றிச் சக்தி என்ற சொல்லால் பயன்படுத்துவது மனிதன் புரிந்து கொள்வதற்காகத் தான்.
சக்தி என்று சொன்னாலும் அதனுடைய அர்த்தம் மாறுபடவில்லை .
நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு வைத்த பெயர்  தான் இது.
இருப்பு நிலையை சிவம் என்றும் சிவத்தின் இயக்க நிலையை சக்தி என்றும் இரு வேறு பெயரிட்டு இருப்பு நிலையை அழைப்பது மக்கள் இருப்பு நிலைக்கும் இயக்க நிலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

சிவம் என்பது பூரணம் சக்தி என்பது அதிலேயிருந்து பின்னம் ஆனது அதாவது சிவமே இயக்கநிலையில் சக்தி ஆனது.
சக்தி உட்புறமாகத் தானே இருக்க வேண்டும் சிவத்துக்குள் அடக்கம் பெற்றுத் தானே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெட்டு என்று சொல்லலாம்.
அதனைச் சுற்றி ஆண்டு கொண்டிருப்பதை ஆண் என்றும் பெட்டு என்பதைப்  பெண் என்றும் வைத்துக் கொண்டு சிவனை ஆணாகவும் சக்தியை பெண்ணாகவும் உருவம் கற்பித்தனர்.

விநாயகர்  
சிவம் என்று சொல்லப் படக்கூடிய சுத்தவெளியும் சக்தி என்று சொல்லப் படக்கூடிய விண்ணின் எண்ணிக்கையும் ஒரு குறிப்பிட்ட பருமன் அளவில் அமையும் தன்மைக் கேற்ப அதாவது இணையும் தன்மைக் கேற்ப விண் என்னும் ஆகாசமே தனது திண்மைக் கேற்ப வேறுபாடுகளைக் கொண்டு பஞ்ச பூதங்களாக வேறுபட்டுக் காணப் படுகிறது.
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை நிலம் ,நீர் , நெருப்பு. காற்று. விண் ஆகியவை ஆகும் .
சிவனும் சக்தியும் இணைந்து பஞ்ச பூதங்கள் உருவானதால் இதனை விநாயகராக உருவகப் படுத்தி ஐங்கரத்தான் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு சிவனுக்கும் ,சக்திக்கும் பிறந்தவன் விநாயகர்  என்ற பெயரிட்டு அழைக்கிறோம் .

ஆறுமுகன்
சுத்த வெளி என்று சொல்லப் படக் கூடிய சிவனை விண்  என்று சொல்லப் படக்கூடிய சக்தி உரசுவதால் காந்தம் தோன்றுகிறது இந்த காந்தமே அழுத்தம் ,ஒலி ,ஒளி , சுவை ,மணம் என்று பஞ்ச தன் மாத்திரைகளாக மாற்றம் அடைகிறது
சிவத்திற்கும் சக்திக்கும் பிறந்தவன் காந்தன் என்றும் அந்தக் காந்தத்தின் தன்மாற்றம் தான் பஞ்ச தன் மாத்திரைகள் என்றும் அதை உணரும் மனதையும் சேர்த்து ஆறாக்கி காந்தனை கந்தனாக்கி கந்தனை ஆறுமுகனாக்கி விட்டார்கள்

இது தொடர்ச்சியாக ஒன்றன் ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமின்றி ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெறுவதால் ஒரு குடும்பமாக உருவகப்படுத்தி ஒரே குடும்பமாக கூறுகின்றனர்

ஐயப்பன்
இதில் ஐயப்பன் எங்கிருந்து வந்தார்  என்று பார்ப்போம்

சுத்தவெளி என்று சொல்லப் படக்கூடிய சிவனிலிருந்து பிரிந்த விண் என்று சொல்லப்படக்கூடிய சக்தி சுத்த வெளியுடன் உரசும் போது அதிக சத்தமும் ஒளியும் உருவாகிறது
அதனால் தான் விஷ்ணு கையில் சத்தத்திற்கு காரணமான சங்கையும் ஒளிக்கு காரணமாக சங்கு சக்கரத்தையும் கொடுத்தார்கள்
சிவத்தில் சக்தி உரசும் போது உருவாகும் விஷ்ணு எனனும் அலையானது சிவத்தில் கரையும் போது பஞ்ச தன் மாத்திரைகள் உருவாகிறது அதனை உயிரிகள் ஐம்புலன்கள் வழியாக உணருகிறது

எனவே தான் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று சொல்லி ஐம்புலன்களின் தலைவனாக ஐயப்பனை வைத்திருக்கிறார்கள்
அதனால் தான் ஐயப்பனை ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றும் அரி அர புத்திரன் ஐயப்பன் என்று சொல்லப் படக் காரணம்

ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”