May 27, 2020

அறிய வேண்டியவை-பதிவு-7


                ஜபம்-பதிவு-499
           (அறிய வேண்டியவை-7)

கிருஷ்ணன் :
“தர்மர் என்ற சொல்
உடம்பு கிடையாது ;
அது வெறும்
வார்த்தை மட்டுமே ;
உன்னுடைய அண்ணன்
மனது வருத்தப்படும் படி
ஏதேனும் வார்த்தையால்
அவரை நீ திட்டினால்
உன்னுடைய அண்ணனான
தர்மரைக் கொன்றதாக
அர்த்தம் - உன்னுடைய
சபதமும் நிறைவேறும் ;
நீயும் சபதத்தை மீறியவன்
ஆக மாட்டாய் - உனக்கும்
பாவம் வந்து சேராது “

“கிருஷ்ணனுடைய
சொல்லைக் கேட்ட
அர்ஜுனன் - தன்னுடைய
வாளைக் கீழே
போட்டான் தர்மருடைய
மனம் வருத்தப்படும்படி
திட்டத் தொடங்கினான் “

அர்ஜுனன் :
“அண்ணா ! நீ எந்தப்
போருக்குப் போனாய் ;
உனக்கு என்ன
ஆற்றல் உண்டு ; “

(இந்த இரண்டு
வார்த்தைகளை மட்டுமே
சொன்னான் அர்ஜுனன்

நீங்கள் என்று
பன்மையில் மரியாதையாகச்
சொல்லாமல் - நீ என்று
ஒருமையில் மரியாதைக்
குறைவாகச் சொன்னான்

உங்களுக்கு என்று
பன்மையில் மரியாதையாகச்
சொல்லாமல் - உனக்கு என்று
ஒருமையில் மரியாதைக்
குறைவாகச் சொன்னான்

மரியாதையாக
அண்ணனிடம் பேசாமல்
மரியாதையற்று பேசினான்

இவ்வாறு மரியாதையற்று
பேசி முடித்த பின்
அர்ஜுனன் தன்னுடைய
வாளை எடுத்து
தன்னுடைய கழுத்தில்
வைத்தான் தற்கொலை
செய்து கொள்ள முயன்றான்)

இக்காட்சியைக் கண்ட
கிருஷ்ணன் அர்ஜுனனைத்
தடுக்க ஓடினார் )

கிருஷ்ணன் :
“என்ன அர்ஜுனா !
எத்தகைய காரியத்தை
செய்யத் துணிந்தாய் ;
உனக்கு என்ன புத்தி
பேதலித்து விட்டதா ?
சிந்தை தடுமாறி விட்டதா?
மனம் குழம்பி விட்டதா?
எதற்காக உன்னை
நீயே கொலை செய்து
கொள்ள முயல்கிறாய்
எதற்காக தற்கொலை
செய்து கொள்ள துடிக்கிறாய்”

அர்ஜுனன் :
“என்னுடைய அண்ணன்
எனக்கு கடவுள் மாதிரி ;
தந்தையினும் மேலானவர் ;
அமைதியின் சொரூபம் ;  
தர்மத்தின் வடிவம் ;
அத்தகையவரை
“நீ ! உனக்கு ! “ என்ற
மரியாதைக் குறைவான
வார்த்தையால் பேசி
திட்டி விட்டேன் ;
என்னுடைய இதயமே
வெடித்து விடும்
போல இருக்கிறது ;
நான் இந்த உலகத்தில்
உயிர் வாழ தகுதியற்றவன் ;
என்னை விடு பரந்தாமா
நான் தற்கொலை செய்து
கொள்ளப் போகிறேன் “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா! நில் ! நான்
சொல்வதைக் கேள் ;
நீ தற்கொலை செய்து
கொள்வதால் பிரச்சினைகள்
அனைத்தும் தீர்ந்து விடுமா? “

“எவன் ஒருவன்
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்கிறானோ
அவன் தன்னைத் தானே
தற்கொலை செய்து
கொண்டவனாகிறான் ;
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்வது
தற்கொலை செய்து
கொள்வதற்குச் சமம் ; “

“உன்னை நீயே புகழ்ந்து
கொள் - உன்னை நீயே
புகழ்ந்து கொண்டால்
உன்னையே நீ தற்கொலை
செய்து கொண்டவனாகிறாய்”

(அர்ஜுனன் வாளை கீழே
எறிந்து விட்டு தன்னைத்
தானே புகழ்ந்து
கொள்ளத் தொடங்கினான்)

அர்ஜுனன் :
“இந்த உலகத்திலேயே
வீரத்திற்கு ஒரே
எடுத்துக் காட்டாய்
இருப்பவன் நான்
ஒருவன் மட்டுமே ;
எனக்கு இணையாக
வில்லைப் பயன்படுத்தக்
கூடியவர்கள் இந்த
உலகத்தில்
யாருமே இல்லை; -போரில்
என்னை யாராலும்
வீழ்த்த முடியாது ;
பாசுபதாத்திரம்
பெற்றவன் நான் ;”

(என்று சொல்லி விட்டு
அர்ஜுனன் வெட்கத்தால்
தலை குனிந்தான் - தர்மரை
கண்களால் வணங்கினான் ;
கண்ணீரால் தர்மருடைய
பாதங்களைக் கழுவினான் ;
தர்மர் அவனுக்கு கண்களால்
ஆறுதல் சொன்னார் ;

பிறகு அர்ஜுனன்
போர்க்களம் சென்று
கர்ணனைக் கொன்றான் ; “

இந்தக் கதையில்
அறிய வேண்டிய
உண்மை என்னவென்றால்
பெரியவர்களை
நீ என்றும்
உனக்கு என்றும்
ஒருமையில்
மரியாதைக் குறைவாக
அழைப்பது பாவம் என்பதும் ;
தன்னைத் தானே
புகழ்ந்து கொள்வது
தற்கொலை செய்து
கொள்வதற்கு சமம்
என்பதும் விளங்கும் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 27-05-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-6


              ஜபம்-பதிவு-498
        (அறிய வேண்டியவை-6)

“உலகமே இரண்டாகப்
பிரிந்து நடைபெற்ற
குருஷேத்திரப் போரில்
பாண்டவர்களுக்கும்
கௌரவர்களுக்கும்
இடையே கடுமையான
போர் நடைபெற்றுக்
கொண்டிருந்தது ;
பிணமலைகள்
குவிந்து கொண்டிருந்தன ;
இரத்த ஆறு ஓடிக்
கொண்டிருந்தது ; “

“கர்ணனை எதிர்த்து போர்
புரிந்தால் ஏற்பட்ட காயம்
தர்மரின் உடல் முழுவதும்
நிரம்பி இருந்தது ;
காயத்தால் ஏற்பட்ட வலி
உடலை வாட்டியது ;
வேதனை மனதை வாட்டியது ;
இதனால் தர்மர் பாசறை
சென்று படுத்து விட்டார் “

“விவரங்களைக் கேள்விபட்ட
அர்ஜுனன் கிருஷ்ணனை
அழைத்துக் கொண்டு
தன்னுடைய அண்ணனான
தர்மரைக் காண
பாசறை சென்றான்”

“கர்ணனுடைய ஆயுதங்களால்
தாக்கப்பட்டு வேதனையால்
அவதிப்பட்டுக் கொண்டிருந்த
தர்மர் கிருஷ்ணனையும்
அர்ஜுனனையும் கண்டார்”

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் அவனுடைய
ஆயுதங்களால் என்னைத்
தாக்கி என்னை துன்புறச்
செய்து விட்டான் ;
வலியால் என்னை
வேதனைப்படச்
செய்து விட்டான் ;
மிகுந்த வலியால்
துன்புற்றுக் கொண்டு
இருக்கிறேன் ;

நீ அவனைக்
கொன்று விட்டாயா ?
கர்ணன் இறந்து விட்டானா ?
கர்ணன் இறந்து விட்டான்
என்ற செய்தியை என்னிடம்
சொல்ல வந்தாயா ? “

“உன்னுடைய வீரமே வீரம்
உன்னை வெல்வதற்கு
இந்த உலகத்தில்
யாருமே இல்லை “

அர்ஜுனன் :
“கர்ணனை நான் இன்னும்
கொல்லவில்லை - கர்ணன்
இன்னும் இறக்கவில்லை ;
தாங்கள் காயம்
பட்டிருப்பதாகக் கேள்வி
பட்டேன் - அதனால்
பாசறையில் வந்து
தங்களை காண்பதற்காக
ஓடோடி வந்தேன் “

தர்மர் :
“அர்ஜுனா! கர்ணனை
போர்க்களத்தில் சந்திக்காமல்
பாசறையில் என்னை
ஏன் சந்திக்க வந்தாய் ?
நான் உயிரோடு
இருக்கிறேனா அல்லது
இறந்து விட்டேனா என்பதைப்
பார்ப்பதற்காக வந்தாயா ?
கர்ணனின் வீரத்தைப்
பார்த்து பயந்து ஓடி
வந்து விட்டாயா ?
பகைவன் உன்னை விட
வீரம் நிறைந்தவனாக
இருக்கிறான் என்பதைக்
கண்டு போர் செய்ய
முடியாமல் பயந்து 
ஓடி வந்து விட்டாயா? “

“கர்ணனை நானே என்
கையால் கொல்வேன்
என்று சொல்லிக்
கொண்டு திரிந்தாயே !
வீரத்தை வாளால் காட்டாமல்
வாயால் காட்டினாயா ?
உனக்கு காண்டீபம் எதற்கு ?
காண்டீபத்தைக் கையில்
வைத்துக் கொண்டு போர்
புரியாத உனக்கு
காண்டீபம் எதற்கு?”

அர்ஜுனன் :
“என்ன வார்த்தை சொல்லி
விட்டீர்கள் - எத்தகைய
வார்த்தையை சொல்லக்
கூடாதோ - அத்தகைய
வார்த்தையை சொல்லி
விட்டீர்கள் ; - உங்களைக்
கொல்லாமல் விட மாட்டேன்;”

“என்று சொல்லிக் கொண்டே
அர்ஜுனன் கோபத்துடன்
தன்னுடைய வாளை
உருவினான் - தர்மரை
நோக்கி சென்றான் ;
தர்மருடைய தலையை
வெட்டுவதற்கு
வாளை ஓங்கினான் ;
இந்தக் காட்சியைக் கண்ட
கிருஷ்ணன் ஓடிச் சென்று
அர்ஜுனனைத் தடுத்தார் ; “

கிருஷ்ணன் :
“அர்ஜுனா! எத்தகைய
பாவத்தை செய்யத் துணிந்தாய் ; 
எத்தகைய விபரீதமான
செயலைச் செய்ய
துணிந்தாய் ; - என்பதை
யோசித்துப் பார்த்தாயா?”

“தர்மத்தின் காவலனாகவும் ;
தந்தைக்கு நிகராகவும் ;
இருக்கும் உன்னுடைய
அண்ணனைக் கொல்வதற்கு
எப்படி துணிந்தாய்
உன்னுடைய வீரத்தை
இழிவு படுத்தியால்
இத்தகைய செயலை
செய்யத் துணிந்தாயா ?”

“நில் அர்ஜுனா நில் “

அர்ஜுனன் :
“என்னை தடுக்காதே
கிருஷ்ணா - என்னுடைய
வில்லை யார் இகழ்ந்தாலும்
அவரைக் கொல்வதாகச்
சபதம் செய்துள்ளேன் ;
என்னுடைய அண்ணன்
என்னுடைய வில்லை
இகழ்ந்தார் - நான்
என்னுடைய அண்ணன்
மேல் அதிக அளவு
மதிப்பும் மரியாதையும்
வைத்துள்ளேன் ;
என்னுடைய அண்ணனை
நான் தெய்வமாக
மதிக்கிறேன் - உயிரினும்
மேலாக அவரைப்
போற்றுகின்றேன் ;
இதயத்தில் வைத்து
பூஜிக்கிறேன் - ஆனால்
அவர் என்னுடைய
வில்லினை இகழ்ந்துள்ளார் ;
அண்ணன் என்பதற்காக
என்னுடைய சபதத்தை
விட முடியாது ;
என்னுடைய அண்ணன்
என்ற காரணத்திற்காக
அவரை நான் கொல்லவில்லை
என்றால் நான் சத்தியத்தை
தவறியவன் ஆவேன் ;
சத்தியம் தவறியதால்
உண்டாகக்கூடிய
பாவத்திற்கு உள்ளாவேன் ;
இதனால் நான்
நரகத்தை அடைவேன் ;
இப்போது நான் என்ன
செய்வது சொல் பரந்தாமா“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 27-05-2020
//////////////////////////////////////////