January 05, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்ல வேண்டும்- பதிவு-4




உரோமரிஷி-பஞ்ச பட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்ல வேண்டும்-
                                                        பதிவு-4

                           “”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
                                                        ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் -யாருக்கு சொல்ல வேண்டும் :

பாடல்-1


     “””””””பாரப்பாபஞ்ச பட்சிசுருக்கம் சொல்வேன்
                                பார்தனிலே ஒருவருக்குஞ் சொல்லவேண்டாம்
               நேரப்பா கலியுகத்தில் பழிக்கஞ்சார்கள்
                               நேர்மையுள்ள மனமுள்ளோர்  தேடிப்பார்த்து
              ஆரப்பா கோடியிலே ஒருவனுண்டு
                               அமர்ந்திருப்பார்  ஞானநிலை அரிவுதங்கி
               சீரப்பா யிருந்தோதா மனஞ்சோதித்து
                               தெள்ளுதமிழ் பட்சிவித்தை செப்புவாயே”””””””
                                     --------உரோமரிஷி----பஞ்சபட்சி சாஸ்திரம்--------

    
“””””””பாரப்பாபஞ்ச பட்சிசுருக்கம் சொல்வேன்
                                 பார்தனிலே ஒருவருக்குஞ் சொல்லவேண்டாம்
                நேரப்பா கலியுகத்தில் பழிக்கஞ்சார்கள்””””””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தும் முறை ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி காணும் முறை ,

ஆகிய அனைத்தையும் எளிமையாக பயின்று பயன்படுத்தும் வகையில் பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் உனக்கு சுருக்கமாக சொல்கிறேன் .
அவ்வாறு நான் சுருக்கமாக சொல்லும் பொழுது அனைத்து ரகசியங்களும் அதில் உள் அடங்கி இருக்குமாறு உனக்கு சொல்கிறேன் .
இத்தகைய சிறப்புகள் பல பெற்ற இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் உள்ள ஒரு மனிதருக்கும் சொல்ல வேண்டாம் .

ஏன் ஒரு மனிதருக்கும் சொல்லக் கூடாது என்றால் ,
இப்பொழுது நடப்பது கலியுகம்.
கலியுகத்தில் பாவம் செய்வதற்கு யாரும் அஞ்சுவதில்லை .
அப்படியே பாவம் செய்தாலும் தண்டனை உண்டு என்று உணர்ந்தும் யாவரும் கவலை கொள்வதில்லை .

ஏழையின் ரத்தத்தை குடிக்கும் கயவர்கள் ,
அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் புல்லுருவிகள் ,
சாதியின் பெயரால் கயமைத் தனம் புரியும் கசடர்கள் ,
மதத்தின் பெயரால் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ,
கடவுளை வியாபாரப் பொருளாக்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ,
அடிமைத் தனத்தை ஊக்குவிக்கும் அறிவிலிகள் ,
மனிதர்களை சிந்திக்க விடாத சுயநலக் கிருமிகள் ,
பிறர்  வாழப் பொறுக்காத மானிடப் பிறவிகள் ,

நிறைந்துள்ள இந்த உலகத்தில் ,
எத்தகைய பாவச் செயலையும் துணிந்து செய்யும் பாவிகள்  இந்த உலகத்தில் நிறைந்துள்ளதால் ,
வாழ்க்கைக்கு , வெற்றியைத் தேடித் தரும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார்  உரோமரிஷி .
             


                          “””””நேர்மையுள்ள மனமுள்ளோர்  தேடிப்பார்த்து
                ஆரப்பா கோடியிலே ஒருவனுண்டு”””””””
இத்தகைய பாவங்கள் பல செய்து வாழக் கூடிய இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு இடையில் ,
துhய்மையான உள்ளம் கொண்டவராக இருப்பவரை ,
துன்பம் தந்தவனையும் நேசிக்கும் தன்மை கொண்டவரை ,
மற்றவர்  கண்ணில் வரும் கண்ணீரை துடைக்கும் இதயம் கொண்டவரை ,
ஏழையாக வாழ்பவரை ஏற்றி விடும் ஏணியாக இருப்பவரை ,
அறியாமையில் தள்ளாடுபவரை சிந்திக்க வைக்கும் சீர்திருத்தவாதியாக இருப்பவரை ,
திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டவரை மீட்டெடுக்கும் வழியாகாட்டியாக இருப்பவரை ,
மரணத்தின் வாசல் வரை தொட்டு விட்டு வந்தவருக்கு வாழ்கைக்கு உயிராக இருப்பவரை ,

தேடிக் கண்டு பிடித்து அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை என்கிறார்  உரோமரிஷி .
மேலே சொல்லப்பட்ட தன்மைகள் கொண்டவனை இந்த உலகத்தில் தேடிப்பார்த்தால் கோடி மக்களில் ஒருவன் தான் இருப்பான் என்கிறார் உரோமரிஷி .

             

                   “”””””””அமர்ந்திருப்பார்  ஞானநிலை அரிவுதங்கி
          சீரப்பா யிருந்தோதா மனஞ்சோதித்து
                               தெள்ளுதமிழ் பட்சிவித்தை செப்புவாயே”””””””
இந்த உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களில் நல்ல மனம் கொண்டவன் ஒருவன் தான் இருப்பான் .
அவன் எப்படி இருப்பான் என்றால் ,

பாவம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்தவனாக இருப்பான்.
ஓவ்வொரு செயலுக்கும் விளைவு கண்டிப்பாக உண்டு என்று அறிந்தவனாக இருப்பான் .
பிற உயிர்களை நேசிப்பவனாக இருப்பான் .

மேலும் இத்தகைய தன்மைகளைப் பெற்றவன் கண்டிப்பாக ,
உண்மையான ஞானத்தைத் தேடி அலைபவனாக இருப்பான் .
ஞானத்திற்கான திறவுகோலை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டு இருப்பான் .
உண்மையான ஞானம் அடைந்தவரை ஆசானாக ஏற்றுக் கொள்ள தேடிக் கொண்டு இருப்பான் .
அத்தகையவனை தேடிக் கண்டு பிடித்து அவனுடைய குணங்களையும், பண்புகளையும் மனதையும் சோதித்து அறிய வேண்டும் .

பிறகு அழகான தமிழில் எழுதி வைக்கப் பட்டுள்ள பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லித் தர வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .



பாடல்-2

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லித் தர வேண்டும் என்று சொன்ன ரோமரிஷி , எப்பொழுது பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லித் தர வேண்டும் என்று கீழ்க் கண்ட பாடலில் சொல்லுகிறார் .


    “””””செப்புவாய் வருஷமது பனிரன்டானால்
                                 திடமான மனதென்று அறிந்துகொண்டு
            ஒப்புவாய் சூட்சஷாதி சூட்சஷமெல்லாம்
                              ஒளித்துவைத்து மத்ததெல்லாம் சொல்லுவாய்நீ””””””
                                            --------உரோமரிஷி----பஞ்சபட்சி சாஸ்திரம்-----


சீடனாக இருப்பவரை அவருடைய குணநலன்களை அறிந்து கொண்டு அவருடைய மனப் பக்குவத்தை உணர்ந்து கொண்டு,
எதனைக் கண்டும் அஞ்சாதவர் ,
மன உறுதி படைத்தவர் ,
தோல்விகண்டு துவண்டு விழாதவர் ,
கவலை தன்னை அழுத்திய பொழுதும் கலங்காதவர் ,
என்பதை அவரைப்பற்றி முழுமையாக நன்றாக அறிந்து கொண்டு 12 வருடங்கள் கழித்து ,

பஞ்சபட்சி சாஸ்திரத்தின் அதி சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்  .
காலம் வரும் பொழுது மட்டும் அதிசூட்சும ரகசியங்களை விளங்க வைக்க வேண்டும் சொல்லித் தர வேண்டும் என்கிறார்  உரோமரிஷி .

பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும் என்று சொன்ன உரோமரிஷி .
பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்லக் கூடாது என்று உரோமரிஷி கூறும் பாடல்களை அடுத்து பார்ப்போம் .

                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                      போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  எத்தகைய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும்  உபதேசிக்க வேண்டும் என்று உரோமரிஷி கீழ்க்கண்ட பாடல்களில் விளக்குகிறார் .