January 20, 2012

மஞ்சள்- வேப்பமரம்- பதிவு-3-சுபம்




              மஞ்சள்-வேப்பமரம்-பதிவு-3-சுபம்

                                   “”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
                                                                       ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

அம்மை நோய் – விளக்கம் :
அம்மை நோய் உடலில் ஆரம்பித்து , அந்நோய் குணமாகி , நோயாளி தேறி, முழுவதுமாக குணமாகி வரும் வரையிலும் ,
நோயின் தாக்கத்திலிருந்தும் , அதன் பாதிப்புகளிலிருந்தும் ,அதன் கடுமையான பக்க விளைவுகளிலிருந்தும் ,
அதன் தாக்கத்தை கட்டுப்படுத்தி ,குணமாக்கக் கூடிய அனைத்து விதமான மருந்துக் குணங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது வேப்பிலை என்பதை நம்முடைய அறிவிற் சிறந்த முன்னோர்கள் நடைமுறை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்ந்ததின் அடிப்படையில் 

வேப்பிலை ஒன்றினால் தான்
அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும் முடியும்,
அம்மை நோயைக் குணப்படுத்துவதும் முடியும் ,
அம்மை நோயைப் பரவவிடாமல் பாதுகாக்கவும் முடியும்,
என்பதை உணர்ந்து,
சமுதாயத்தில் வாழும் மக்கள் அம்மை நோயினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேப்பிலையை அம்மை நோய்க்கு சர்வரோக நிவாரணியாக அதாவது மருந்தாக வைத்திருக்கின்றனர்.

நம் முன்னோர்களின் வழிகாட்டுதலின் படி தான் நாம் இன்றும் வேப்பிலையை அம்மை நோய்க்கு எதிராக பயன்படுத்தி வருகிறோம்.


அறிந்தும் அறியாமலும்,  உணர்ந்தும் - உணராமலும் , தெரிந்தும் -தெரியாமலும் , அம்மை நோய்க்கு எதிராக வேப்பிலையை பயன்படுத்தி வரும் நாம் அதனுடைய சக்திகளை அறிந்து கொண்டால் அதனுடைய சூட்சும ரகசியங்கள் நமக்கு வெளிப்பட்டு விடும் .

அதனைப்பற்றி இப்பொழுது விரிவாகப் பார்ப்போம் .


அம்மை நோய் - தெய்வம்:
அம்மை நோய் தானே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது அம்மை நோய் ஓர்  பயங்கரமான கடுமையான நோய் .
அந்நோய் பலருக்கும் தொற்றி மேலும் பரவி பாதிப்புகளை ஏற்படத்தக் கூடிய சக்தியுள்ள நோய் .இந்த நோயைச் சரிவரக் களையாவிட்டால் அதன் வீரியத்தை அறிந்து தகுந்த படி குணப்படுத்தா விட்டால் நோயாளியை மரணப் படுக்கை வரை கூட கொண்டு சென்று விடும் .
அம்மை நோய் கண்டவருடைய வீடு சுத்தமாக இருக்க வேண்டும்.
வீட்டிலிருப்பவர்களும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினால் அவர்கள் சுத்தத்தைக் கடைப் பிடிக்காமல்,
அறிவாளிகள் போல் தங்களை பாவித்துக் கொண்டு வீணாண தத்துவங்களை பேசிக் கொண்டும் , தேவையற்ற வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டும்,
பிறரிடம் வம்புகள் இழுத்துக் கொண்டும் அலைவார்கள்.
இதனால் நோயாளிக்குத் துன்பங்களும் , கஷ்டங்களும் ,அபாயக் கட்டமும் கூட ஏற்படலாம் .
மேலும் நோயாளியினால் மற்றவர்களுக்கும்  சுற்றி உள்ளவர்களுக்கும் கஷ்டம் உண்டாக்கக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்.


இதனால் தான் அம்மை நோய் தாக்காதிருக்க அம்மை நோயால் பாதிப்புகள் எதுவும் நேர்ந்து விடாமல் இருப்பதற்காக வேப்பிலையைத் தவிர சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை என்பதை நன்கறிந்த நம் முன்னோர்கள் ,
இந்த அம்மை வியாதியை ஒரு தெய்வமென்றும் ,அதற்கு வேப்பிலையே தேவையென்றும் ,அதுவே சிறந்து மருந்து என்றும் நமக்குக் கூறிச் சென்று விட்டனர்.
அம்மை நோயைத் தெய்வமென்று கூறினால் தான் மக்கள் பயந்து அந்நோய் வந்தவர்களை நல்ல முறையிலே கவனிப்பார்கள்.
நோயாளி இருக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று நமது முன்னோர்கள் கருதியதில் எந்த விதமான தவறுகளும் இல்லை.


வேப்பமரத்தின் சக்தியை அறிந்த சித்தர்கள் வைத்திய முறையில் இதற்குப் பல மறைமொழிப் பெயர்களைக் கொடுத்திருக்கின்றனர் .
பல அரிய வைத்திய நுhல்களில் வேப்பமரத்திற்கு ஆதி சக்தி மூலிகை , பராசக்தி மூலிகை , வேம்பு என்றும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.



அம்மை நோய் - வேப்பிலை சொருகுவது:
அம்மை நோய் என்று தெரிந்தவுடனேயே ஒரு கொத்து வேப்பிலையைக் கொண்டு வந்து அம்மை நோய் கண்டவர் வீட்டில் வீட்டு வாசல் படிக்கு மேலே செருகி வைத்து விடுவார்கள் .
இந்தப் பழக்கம் இன்றளவும் தொடர்ந்து பின்பற்றப் பட்டு வருகிறது அதாவது இந்தக் காலத்தில் கூட கிராமங்களிலும் சில நகர வீடுகளிலும் கடை பிடிக்கப் பட்டு வருகிறது .

அம்மை நோய் கண்ட வீட்டில் வேப்பிலையைச் செருகி வைப்பது அநாகரீகம் என சிலர்  கருதுகின்றனர் .
உண்மையைத் தெரியாதவர்கள் ,உண்மை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப் படாதவர்கள், தான் இதைப் போன்ற மூளையற்ற வார்த்தைகளை பேசுவார்கள்.
இதனால் ஏற்படும் நன்மைகளை அவர்கள் அறியாதவர்கள் .
வேப்பிலைக்கு விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு என்று அறிவுடையோர்  ஏற்றுக் கொள்வர்.

எனவே வேப்ப இலையை வீட்டின் வாசல் படியின் மேல் செருகி வைத்தால் வீட்டிலுள்ள நோயாளியிடமிருந்து கிளம்பும் விஷக் கிருமிகள் வெளியே செல்லும் பொழுது , இந்த வேப்பிலை அந்தக் கிருமிகளை அழித்து விடும். அந்த நோய் மற்றவர்களைத் தொற்றாது .
இந்த நோய் ஊரிலும் பரவாது .

இந்தக் கருத்தைக் கொண்டு தான் இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். அதே பழக்கத்தையே இக்காலத்திலும் நாமும் பின்பற்றுகின்றோம் .

வேப்பிலையை வாசல் படியில் செருகி இருந்தால் வேப்பிலை செருகப்பட்ட வீட்டினுள் அசுத்தமானவர்கள் செல்லமாட்டார்கள் .வேப்பிலை செருகப்பட்ட வீட்டில் அம்மை நோய் கண்டிருக்கிறது என்பதே இந்த வேப்பிலையின்  அடையாளமாகும் .
இச்செயல் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக ஒரு அபாய அறிவிப்புக் கொடி போல அமைகின்றது .
இதனால் அந்த வீட்டில் எவரும் அனாவசியமாக நுழைய மாட்டார்கள் தொற்று நோய்க் கிருமிகள் வேறு இடத்திற்குப் பரவவும் முடியாது.



அம்மை – படுக்கை :
அடுத்து அம்மை நோய் கண்டவர்களை வௌளைத் துணியின் மேல் வேப்பிலையைப் பரப்பி அதில் தான் படுக்க வைக்க வேண்டும் .இதனால் நோய்க் கிருமிகள் சீக்கிரமே அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.
நோயாளியைச் சுற்றிலும் ,நோயாளியின் அடியிலும் ,வேப்பிலைப் பரப்பப் பட்டிருப்பதால் அதிலிருந்து வெளி வந்து கொண்டு இருக்கும் மருத்துவக் காற்று நோயாளியின் சுவாசத்துடன் உள்ளே சென்று உள்ளே இருக்கும் நோய்க் கிருமிகளையும் அழிக்கும் .
அம்மைக் கொப்புளம் அல்லது துடிப்பு மறையும் பொழுது நோயாளியின் உடலில் அரிப்பு ஏற்படும் .

இந்தச் சமயம் நோயாளியைச் சொரிய விடக்கூடாது இந்த அரிப்பைத் தடுக்க வேப்பிலைக் கொத்தையே உபயோகிக்க வேண்டும் .
அம்மை நோய் இறங்கியபின் தலைக்குத் தண்ணீரில் நிறைய வேப்பிலையைப் போட்டு வெயிலில் வைத்த பிறகே அந்த நீரையே தலைக்கு விட வேண்டும்.

அம்மை நோய் கடுமையாக இருந்த சில சமயம் தேகத்தில் அம்மைப்புண் ஏற்பட்டு விடுவதுமுண்டு.
இந்தச் சமயம் வேப்பிலையையும் ,மஞ்சளையும் சேர்த்து அறைத்து அதைப் புண்ணின் மேல் போட்டு வந்தால் புண் சீக்கிரமே ஆறிவிடும்.



அம்மை நோய்-வராமல் இருக்க:
அருகில் உள்ள வீட்டில் அம்மை வந்துள்ளது என அறிந்ததும்,
ஒரு கைப்பிடி வேப்பிலையையும் அதில் நான்கில் ஒரு பங்கு மஞ்சளையும் இளநீர்  விட்டு நன்கு அறைத்து மூன்று நாட்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் .
இப்படிச் செய்தால் கண்டிப்பாக நமக்கு அம்மை வராது. அப்படியே வந்தாலும் ஒரிரு நாட்களில் அதிகம் பார்க்காமல் சென்று விடும்
என்று சித்த வைத்திய நுhல்கள் கூறுகின்றன இருந்தாலும் இதை யோசித்து சிறந்த சித்த வைத்திய மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து அறிவுரை பெற்ற பிறகே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .



சாம்பிராணி புகை:
இரவு படுக்கப் போவதற்கு முன்பு வேப்பங் கொட்டைத் தோலையும் வசம்பையும் துhள் செய்து சாம்பிராணி போல நியைப் புகை போட்டு விட்டால் கொசுக்கள் எல்லாம் ஓடிவிடும் மறுபடி அங்கே கொசுக்கள் வராது.

இத்தகைய செயல்முறையைத் தான் நமது முன்னோர்கள் செயல்படுத்தி பார்த்து அதன் மூலம் கிடைத்த பலன்களை அனுபவித்தனர்.

இந்த சூட்சும ரகசியத்தை அடிப்படையாக வைத்தே தற்பொழுது இந்தக் காலத்தில் கொசு விரட்டி வர்த்தி தயாரிக்கப்பட்டு பலப்பல பெயர்களில் கடைகளில் விற்பவைகளைத் தான் நாம் பயன்படுத்தி வருகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

மஞ்சள் மற்றும் வேப்பிலையின் சிறப்புகளை உணர்ந்து கொண்டோம்.

                 முன்னோர்களின் சிந்தனைகளை மதிப்போம்,
                  அவர்களின் சேவைகளை உணர்வோம்,
                  அறிவு விளக்கம் பெறுவோம்,

                 பழையவற்றை ஆராய்ந்து பார்ப்போம்,
                  நன்மைகளை பின் பற்றுவோம்,
                  துன்பங்களை புதைத்து விடுவோம்,

                  தேவையற்ற வார்த்தைகளை விலக்குவோம்,
                   வீணர்களின் மமதையை அடக்குவோம்,
                  பொல்லாங்கு பேசுவோரை மிதிப்போம்,

புதிது புதிதாக தன்னை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு கிறுக்கும் கிறுக்குத் தனமான குப்பைகளை விட்டு விட்டு ,
பழைய எழுத்துக்களில் உள்ள பல்வேறு ரகசியங்களை தன்னுள் கொண்ட புத்தகங்களை பாதுகாத்தாலே ,
அன்றாடம் நாம் கடை பிடித்து வரும் நடை முறைகளில் உள்ள சூட்சும ரகசியங்களை உணர்ந்து கொள்ள முடியும்.
அறிவு தெளிவு பெற முடியும்.
முன்னோர்களின் அனுபவ அறிவை நினைத்து நாம் பெருமைப்பட முடியும்.


                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                       போற்றினேன் மஞ்சள்வேப்பமரந்  தான்முற்றதாமே “”