October 20, 2019

கல்யாணநாள் வாழ்த்துக்கு நன்றி -19-10-2019


கல்யாணநாள் வாழ்த்துக்கு

நன்றி -19-10-2019 


அன்பிற்கினியவர்களே!

19-10-2019-ம் தேதி அன்று
திருமண நாள் கண்ட
எங்களுக்கு
வாழ்த்து தெரிவித்த
உலகெங்கும் உள்ள
என்னுடைய நண்பர்கள் !
என்மேல் அன்பு கொண்ட
நல்ல உள்ளங்கள் !
நேரில் வீட்டிற்கு வந்து
வாழ்த்து தெரிவித்த
நட்பின் இதயங்கள் !
ஆகிய அனைவருக்கும்
எங்களுடைய  நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்”

“நான் தனியார் கம்பெனியில்
வேலை பார்த்துக்
கொண்டிருந்த சமயம்
நான் கவிதை எழுதுவது
அந்த கம்பெனியில் உள்ள
அனைவருக்கும்  தெரியும் ;
இதில் ஒரு விஷயம்
என்னவென்றால் அந்த
கம்பெனியில் என்னைப்போல்
கவிதை எழுதக் கூடியவன்
என்னுடைய நண்பன்
ஒருவனும் இருந்தான்;”

“இருவருமே தலைப்பு
கொடுத்து கவிதை
எழுதச் சொன்னாலோ ?
(அல்லது)
காட்சியைக் காட்டி
கவிதையை எழுதச்
சொன்னாலோ ?
(அல்லது)
ஒரு நிகழ்ச்சியை
சொல்லி கவிதை
எழுதச் சொன்னாலோ?
இருவருமே கவிதை
எழுதி விடுவோம்”

“இருவரையுமே போட்டி
போட வைத்து கவிதை
எழுதச் சொல்லி
பார்த்து ரசிப்பது
அந்த கம்பெனியில்
உள்ளவர்களின் பழக்கம்”

“எங்களுக்குள் நடுவர்
என்பவர் யாரும் இல்லை ;
போட்டி வைக்கும்
போது யார் கவிதை
எழுதவில்லையோ அவர்
தோற்றதாக அர்த்தம்
என்று வைத்திருந்தோம்”

“இரண்டு பேரும்
போட்டியில் கவிதை
எழுதாமல் இருந்ததில்லை!
அதனால் இருவருமே
தோற்றதில்லை ;
அந்த கம்பெனியில்
இருந்தவர்கள் யோசித்து
பலபேரை சந்தித்து
பல புத்தகங்களை படித்து
கஷ்டமாக இருக்கும்படி
தலைப்புகளைம் ;
காட்சிகளையும் ;
நிகழ்ச்சிகளையும் ;
அளித்தாலும் நாங்கள்
இருவருமே கவிதை எழுதி
விட்ட காரணத்தினால்
கிட்டதட்ட பல மாதங்கள்
எங்களுக்குள்ளே கவிதை
போட்டி நடந்து
கொண்டே இருந்தது ;”

“இத்தகைய சூழ்நிலையில்
ஒரு நண்பன் ஒரு
கஷ்டமான விதி சொல்லி
எங்கள் இருவரையும்
அரை மணி நேரத்திற்குள்
கவிதை எழுதச் சொன்னான்;
இருவரும் எதிர்எதிரே
அமர்ந்து கொண்டோம் ;
இருவருக்கும் பேப்பர்
பேனா தரப்பட்டது ;”

அந்த விதி இது தான்:

“கவிதையின் ஆரம்பம்
முதல் முடிவு வரை
கவிதையின் கடைசி வார்த்தை
ஒன்றாக இருக்க வேண்டும் ;
வரிசையின் கடைசி
வார்த்தைக்கு முந்தின
வாத்தையிலிந்து தான்
அடுத்த வரிசை
ஆரம்பிக்க வேண்டும் ;”

“இந்த விதி ரொம்ப
சிக்கலானது கவிதை
எழுதுவது கடினம் ;
நேரம் ஆரம்பானது
5 நிமிடம் 10 நிமிடம்
15 நிமிடம் இரண்டு
பேருமே எழுதவில்லை ;
20வது நிமிடம் என்னுடைய
நண்பன் எழுதத் தொடங்கி
விட்டான் 30 நிமிடம் எழுதி
முடித்து விட்டான் 30 நிமிடம்
முடிந்து விட்டது நான்
ஒன்றுமே எழுதவில்லை ;”

“ஒரு நண்பன் பேச
தொடங்கினான் பாலா
எழுதவில்லை என்ற
காரணத்தினால் அவன்
தோற்றுவிட்டதாக அறிவித்து
விடலாம் என்றனர் ;
நான் எழுதவில்லை ஆனால்
சொல்லமாட்டேன் என்று
சொல்லவில்லையே என்று
சொல்ல ஆரம்பித்து
சொல்லி முடித்தேன் - கவிதை
எழுதிய என்னுடைய நண்பன்
என்னை கட்டிப்பிடித்து பாலா
நீ தான் வென்றாய் நான்
தோற்று விட்டேன் என்று
சொல்லி தன்னுடைய
கவிதையை கிழித்து விட்டான்;”

“நண்பர்கள் அனைவரும்
பாலா வெற்றி பெற்றதாக
அறிவித்து விடலாம் என்றனர்;
நான் சொன்னேன் வெற்றி
பெற்றது நான் இல்லை
என்னுடைய நண்பன் தான்
பிறருடைய திறமையை
பாராட்டுவதற்கு பரந்த
மனப்பான்மை வேண்டும்
இருவருமே கவிஞர்கள்
என்ற போதிலும் என்னுடைய
திறமையை பாராட்டியதன்
மூலம் பண்பில் அவன்
உயர்ந்து நிற்கிறான் ;
நான் தோற்று இருந்தால்
என்னுடைய நண்பனை நான்
பாராட்டி இருக்க மாட்டேன் ;
உண்மையில் அவன்
தான் வென்றான்
நான் தோற்றேன் என்றேன்”

“என் வாழ்க்கையில்
எதிர்ப்படுபவருடைய நல்ல
குணநலன்களை நான் பின்பற்றி
கடைபிடித்து வருவது என்னுடைய
வழக்கம் - அந்த வகையில்
உயர்ந்தவராக இருந்தாலும்
தாழ்ந்தவராக இருந்தாலும்
யாராக இருந்தாலும் உண்மையான
திறமை யாரிடம் இருக்கிறதோ
அவரை பாராட்டும் தன்மையை
நான் என்னுடைய நண்பனிடம்
இருந்து கற்றுக் கொண்டேன்;”

நான் சொன்ன கவிதை
இது தான் : -

“செடியில் மலர் கண்டேன்
மலரின் இதழ் கண்டேன்
இதழின் அழகு கண்டேன்
அழகில் ஆசை கண்டேன்
ஆசையில் சொர்க்கம் கண்டேன்
சொர்க்கத்தில் இன்பம் கண்டேன்
இன்பத்தின் பொருள் கண்டேன்
பொருளின் பலன் கண்டேன்
பலனின் விளைவு கண்டேன்
விளைவின் துன்பம் கண்டேன்
துன்பத்தின் முடிவு கண்டேன்
முடிவின் தொடக்கம் கண்டேன்
தொடக்கத்தில் அன்பு கண்டேன்
அன்பின் தடை கண்டேன்
தடையின் எல்லை கண்டேன்
எல்லையின் வேற்றுமை கண்டேன்
வேற்றுமையின் அர்த்தம் கண்டேன்
அர்த்தத்தின் ஆழம் கண்டேன்
ஆழத்தில் ஒளி கண்டேன்
ஒளியின் தெளிவு கண்டேன்
தெளிவின் அடக்கம் கண்டேன்
அடக்கத்தில் உயர்வு கண்டேன்
உயர்வின் எழுச்சி கண்டேன்
எழுச்சியின் இலக்கணம் கண்டேன்
இலக்கணத்தின் இறுதி கண்டேன்
இறுதியில் கடவுளைக் கண்டேன்
கடவுளில் என்னைக் கண்டேன்”


----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
  
-----------20-10-2019
///////////////////////////////////////////