June 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35

அமைச்சர்கள்
அரசரைப் பார்த்து
இதுவரை
ஆராய்ச்சி மணியை
பசு அடித்து
நீதி கேட்டதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
அதைப்போல
பசுவதைக்காக
மனிதனைக் கொன்றதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
என்றனர்.

பசுவின் துயரை
நீக்குந் திறமையில்லாத
நான் அதன்
துன்பத்தை அடைதலே
செய்யத் தக்கதாகும்
ஆகவே மகனை
இழந்து நான்
வாட வேண்டும்
அதற்காக என் மகன்
கொல்லப்பட வேண்டும்
என்று கூறி
காவலரை அனுப்பி
தன் மகனை வரவழைத்து
கொலை புரிந்தார்க்குரிய
நிலையில் நிறுத்தி
விசாரணை நடத்தி
முடித்தபின்
தன் அமைச்சர்களில்
ஒருவராகிய கலாவல்லபரை
நோக்கி அமைச்சரே
வீதிவிடங்கனை பசுவின்
கன்று இறந்த இடத்தில்
படுக்க வைத்து
அவன் மேல்
தேர் ஏற்றிக்
கொல்வாயாக என்றார்
மனுநீதிச் சோழன்

அமைச்சர் அந்த
இடத்தில் இருந்து
விலகிச் சென்று
சிறுமகனை எப்படி
கொல்வேன்
அரச கட்டளையை
எப்படி மீறுவேன்
சிறுமகனை நான்
கொல்வதும் குற்றம்
அரச கட்டளையை
மீறுவதும் குற்றம்
நான் என்ன
செய்வேன்
அரசவையில்
பலர் இருக்க
அரசர் என்னை ஏன்
தேர்ந்து எடுத்தார்
அரசன் மகனுக்காக
நானே உயிரை விடுவேன்
என்று சிந்தனை செய்து
கன்று இறந்த
இடம் சென்று
தன்னுயிரைத் தானே
துறந்து இறந்தார்
இச்செய்தியைத்
தூதர் மூலம்
கேட்டறிந்தார் அரசர்

என் மகன்
பசுவின் கன்றைக்
கொன்றான்
நான் அமைச்சரைக்
கொன்றேன்
என் நீதிநெறி
தவறாத ஆட்சி
நீதிநெறி தவறி விட்டதே
கன்றுக்காக மகனையும்
அமைச்சருக்காக நானும்
உயிரை விடுவதே
இனி நான்
செய்ய வேண்டிய
செயலாகும் என்று
மகனின் முகம்
நோக்காமல்
மகனிடம்
பசுவின் கன்று
இறந்த இடத்திற்கு
போய் படுக்குமாறு
கட்டளை இட்டார்

மகன் தந்தையின்
சொல் கேட்டு
கன்று இறந்த
இடத்திற்கு சென்று
மல்லாந்து படுத்துக்
கண்களை மூடிக்
கொண்டு படுத்தார்.

இந்நிகழ்வைக் கண்ட
மாந்தர்கள் அனைவரும்
ஐயோ இது என்ன
கொடுமை என்று
கதறி அழுதனர்

மனுநீதிச் சோழர்
சிவபெருமானை சிந்தை
செய்து தேரின் மீது ஏறி
மகன் உடம்பின் மீது
தேரை ஏற்றினார்.
வீதி விடங்கருடைய
உடல் தேர்ச்சக்கரத்தில்
சிக்குண்டு
அரைப்பட்டது சிதைந்தது

மக்கள் கண்ணிலிருந்து
கண்ணீர் பொழிய
விண்ணிலிருந்து
மலர்மாரி பொழிந்தது

சிவபெருமான்,
உமையம்மையாரோடு
காட்சி தந்து
மனுநீதி சோழா
உன் புகழ்
உலகமெல்லாம் ஓங்குக
உன் செங்கோல்
வாழ்க என்று
வாழ்த்தி அருள்
புரிந்தார்
சிவபெருமானின்
அருளால்
வீதிவிடங்கரும்,
பசுவின் கன்றும்,
அமைச்சரும்
உயிர் பெற்று எழுந்தனர்

இந்த அதிசயத்தைக்கண்டு
அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர்

ஒருவன்
தெரிந்து பாவம்
செய்தாலும்
தெரியாமல் பாவம்
செய்தாலும்
பாவத்திற்குரிய
தண்டனை கிடைக்கும்
என்பதையும்
ஒருவன்
குற்றம் செய்தால்
செய்த குற்றம்
கண்டுபிடிக்கப்பட்டால்
குற்றத்தை விசாரித்து
குற்றத்திற்குரிய
தண்டனையை வழங்கி
அந்த குற்றத்தை
செய்தவனை
உடனே அனுபவிக்கச்
செய்வான் அரசன்
என்பதையும்
அரசன் அன்றே
கொல்வான் என்பதற்கான
அர்த்தத்தையும்
இந்தக் கதையின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தக் கதைதான்
அரசன் அன்றே
கொல்வான்
என்பதற்கு அர்த்தம்

தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தத்தை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////


June 29, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-34



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-34
                     
மனுநீதிச் சோழன்
மணியோசையைக் கேட்டு
எழுந்து வந்து
யாருக்கு என்ன
குறை நேர்ந்தது
ஒரு நாளும்
அடிக்கப்படாமல் இருந்த
மணியை அடித்தது யார்
என்று கேட்டார்.

காவலர் அரசரை
வணங்கி
இந்தப் பசு தான் மணியை
அடித்தது என்றனர்,

அழுத படி
சோகமாய் நிற்கும்
பசுவைக் கண்ட
மனுநீதி சோழன்
மனம் வருந்தி
தன் அருகில் நிற்கும்
அமைச்சர்களை அழைத்து
இந்த பசு ஏன் அழுகின்றது
இந்த பசுவுக்கு தீங்கு
செய்தவன் யார்
என்று கேட்டார்

அமைச்சர்களில்
ஒருவர் அரசே
நமது இளவரசர்
தேரேறிச் சென்றபோது
இப்பசுவின் கன்று
யார் கண்ணிற்கும்
படாமல் துள்ளிக்
குதித்துச் சென்று
தேர்ச்சக்கரத்தில்
அகப்பட்டு இறந்து விட்டது
அளவற்ற துன்பம்
அடைந்த இப்பசு
வருத்தம் அடைந்து
இந்த ஆராய்ச்சி மணியை
அடித்தது என்றார்

மனுநீதிச் சோழன்
என் ஆட்சியில் எந்த
ஒரு சிறிய உயிருக்கும்
தீங்கு நேர்ந்ததில்லை
பசு இறந்த
தன்னுடைய கன்றிடம்
அளவற்ற அன்பு
வைத்து இருந்திருக்குமே
அளவுக்கு அதிகமாக
தன் கன்றிடம்
அன்பு வைத்து
இருந்ததற்கு
அடையாளமாகத் தான்
பசுவின் கண்களில்
இருந்து
கண்ணீர் வருகிறது
இதைப் பார்த்த
பிறகும் கூட
என் உயிர் பிரியாமல்
இருக்கிறதே
என்று வருந்தினார்

மன்னரின் நிலையைக்  
கண்ட அமைச்சர்கள்
கருணையின் வடிவமான
தாங்கள் எப்படி
இந்த நிகழ்வைக் கண்டு
வருந்துகிறீர்களோ
அதைப் போலத் தான்
கருணை வடிவமான
தங்கள் மகனும்
தெரியாமல் கன்றைக்
கொன்று விட்டு
வருந்தினார்
எனவே, இதற்கு
தாங்கள் பரிகாரம்
தேடுவதே முறை
என்றனர்

அமைச்சர்களே
நீதி தவறாத நான்
நீதி தவறலாமா
என் மகன் செய்தான்
என்பதற்காக
பிராயச்சித்தமும்
பிறர் செய்தால்
மரண தண்டனையும்
விதித்தால்
அது நீதியாகுமா
அறமாகுமா
கன்றை இழந்த
பசு எவ்வாறு
வருந்துகிறதோ அவ்வாறே
நானும் மகனை
இழந்து துன்பப்படுவதே
நியாயமாகும் என்றார்
மனுநீதிச் சோழன்

அரசரின் சொல்லைக்
கேட்ட அமைச்சர்கள்
மன்னரை
நோக்கி அரசே
பசுவதை புரிந்தவருக்கு
அறநூல்களில்
பிராயச்சித்தம்
வகுக்கப்பட்டுள்ளது
இறந்த பசுவின்
தோலைப்
போர்த்துக் கொண்டு
பசுமந்தையில் வசித்தும்,
கோநீரால் குளித்தும்
பசுக்கள் புல் மேயும்போது
வெயிலில் காய்ந்தும்,
பசு மழையில்
நனையும்போது
தானும் நனைந்தும்,
பன்னிரண்டு ஆண்டுகள்
இருக்க வேண்டும்
என்பது கழுவாயாகும்
ஆகவே இந்த
பிராயச்சித்தத்தை
செய்தால் போதும்
மகனை கொல்ல
வேண்டிய அவசியமில்லை
என்றனர் அமைச்சர்கள்

பசு வதைக்குக் கழுவாய்
அறநூலில் கூறியிருப்பதை
நான் அறிவேன்
என் மகன்
செய்த செயலுக்கு
நான் பிராயச்சித்தம்
செய்தால்
பசுவின் துயரம் நீங்குமா
தன்னுடைய கன்றை
இழந்து பசு
எவ்வாறு வருந்துகிறதோ
அவ்வாறே நானும்
அழ வேண்டும்
என்றார்.

அமைச்சர்கள்
பசு ஐந்தறிவு கொண்ட
விலங்கு ஐந்தறிவு
கொண்ட விலங்கை
கொன்றதற்கு
ஆறறிவு கொண்ட
மனிதனை கொல்வது
நியாயமாகாது என்றனர்

உயர்வு, தாழ்வு
என்பது பிறப்பையும்
உடம்பையும்
சார்ந்தது அன்று
உயர்வு தாழ்வு
என்பது அறிவைக்
குறித்ததே ஆகும்
யாராவது தமக்கு
தீங்கு செய்வாராயின்
இம்மணியை அடித்தால்
நான் நேரில் வந்து
நீதி வழங்குவேன்
என்று மணியை
அடித்து நீதியை
எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருக்கும்
இப்பசுவை ஐந்தறிவு
படைத்த விலங்கு
என்று கூறமுடியுமா
மனிதக் கொலைக்கு
ஏற்ற தண்டனையே
இதற்கு உரியதாகும்
எனவே, என் மகனைக்
கொல்வதே சிறந்த
நீதியாகும்
என்றார் மனு நீதிச்
சோழன்

----------இன்னும் வரும்
////////////////////////////////////////////


June 28, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-33



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-33

திருவாரூரை தலைநகராகக்
கொண்டு மனுநீதிச் சோழன்
என்னும் மன்னர் அறநெறி
வழுவாது ஆண்டு வந்தார்.

மனுநீதிச் சோழருக்கு
மகப்பேறு இல்லாததால்
தனக்கு பிறகு
நீதி நெறியை
நிலை நிறுத்தி
ஆளும்
மன்னனைப் பெறாது
இந்த உலகில்
உள்ள அனைத்து
உயிர்களும் துன்புறுமே
என்று துன்புற்று
தியாகேசப் பெருமானை
காலையும், மாலையும்
தொழுத காரணத்தினால்
மனுநீதி சோழனுக்கு
ஒரு ஆண் குழந்தை
பிறந்தது

அந்தக் குழந்தைக்கு
தியாகராஜப் பெருமானுடைய
திருநாமமாகிய
வீதிவிடங்கன்
என்ற பெயரை சூட்டினார்.

வீதிவிடங்கர்
நீதி நூல்களைப் பற்றியும்
அரசியலைப் பற்றியும்
போர்க்கலைகளைப்
பற்றியும்
தெளிவுறக் கற்றார்
அன்பு, அறிவு,
அமைதி, அடக்கம்,
கொண்டவராகத்
திகழ்ந்தார்.

ஒரு நாள்
வீதிவிடங்கர்
சிவாலயம் சென்று
சிவபெருமானை
வழிபடுவதற்காகத்
தேரேறி சென்றபோது
ஒரு பசுவின் கன்று
யார் கண்ணிலும்
படாமல் துள்ளிக்குதித்து
வந்து தேர்ச்சக்கரத்தில்
அகப்பட்டு,
குடல் சரிந்து
உடல் நசிந்து
உயிர் துறந்தது.

கன்றின் தாயாகிய
பசு அங்கு வந்து
இறந்து கிடந்த
தன் கன்றை கண்டு
துன்பமுற்று
கதறியழுது
மூர்ச்சித்து
விழுந்தது.

இந்த நிகழ்வைக்
கண்ட வீதிவிடங்கர்
தேரை விட்டு
கீழே இறங்கி
ஐயோ என்ன பாவம்
செய்தேன்
என் தந்தைக்கு
அழியாத பெரும்
பழியை
தேடி வைத்தேனே
நான் கண்ணில்லாத
பாவியாகி இந்த
பாவத்தை செய்தேனே
இனி இந்த
உலகத்தில் நான்
வாழ்வது முறையாகது
நான் வாழ்வதை
விட உயிரைக்
கொன்ற நான்
உயிர் துறப்பதே
மேல் என்று
வீதிவிடங்கர்
அழுது புலம்பினார்.

அமைச்சர்கள்
அவரைத் தொழுது
இளவரசே தாங்கள்
இதற்காக வருத்தப்பட
வேண்டாம்
தாங்கள் வேண்டுமென்றே
இந்த பாவத்தை
செய்யவில்லையே
தாங்கள் அறியாமல்
செய்த தவறு
தானே இது
தாங்கள் இதற்காக
உயிரை விட வேண்டிய
அவசியமில்லை

அறநூல் வல்ல
ஆன்றோரை அணுகி
சான்றோர் பால்
சென்று
பிராயச்சித்தம்
செய்து கொள்ளலாம்
வாருங்கள்
இளவரசே என்று
வீதிவிடங்கரை
அழைத்துக் கொண்டு
சென்றனர்.

பசு மூர்ச்சை தெளிந்து
எழுந்து கண்ணீர்
வடித்தது
இறந்து கிடந்த
தன் கன்றைக் கண்டு
துன்பத்தால் துடி
துடித்தது.
பசு சிறிது நேரம்
கதறி அழும்
மூர்ச்சித்து விழும்
மீண்டும் எழும்
இறந்து கிடக்கும்
தன் கன்றை
நினைத்து வருந்தும்

பொய், சூது,
கொலை, கொள்ளை
கற்பு நெறி பிறழ்தல்
ஆகிய பஞ்சமா
பாதகங்களை
செய்யாத மக்கள்
வாழும் இந்த ஊரில்
நீதி வழுவாமல்
ஆட்சி செய்யும்
இந்நகரை ஆளுகின்ற
மன்னரை அணுகி
நீதி கேட்பேன்
என்று புலம்பியது
கன்றை இழந்த பசு

குடிமக்களுக்கு குறை
ஏற்பட்டால்
அரசனுக்கு தெரிவிக்க
அரண்மனை வாயிலில்
ஓர் ஆராய்ச்சி மணி
கட்டி தொங்க விடப்
பட்டிருந்தது.
அது ஒரு நாளும்
அடிக்கப்படாமல்
இருந்தது.

பசு பரிதாபத்துடன்
ஓடிவந்து
தனது கோட்டால்
அம்மணியைக் கணீர்
கணீர் என்று
அடித்தது.
  
---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////