December 24, 2011

போகர்-7000- சாயா தரிசனம்- செய்யும் முறை- பதிவு-7




            போகர்  - 7000- சாயா தரிசனம் - செய்யும் முறை - பதிவு -7

                                   “”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
                                                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - செய்யும் முறை:
பாடல் - 3

                “””””அறியவே நுட்பமது என்னசொல்வேன்
                                          ஆகாகா நாதாக்கள் கண்டதில்லை
                      முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல்
                                          முனையான தன்சிரசைத் தானும்பார்த்து
                      குறியுடனே ஆகாயம் தன்னைநோக்கி
                                          கொற்றவனே பார்க்குமந்தச் சமயம்தன்னில்
                     நெறியுடனே உமைப்போல ரூபங்காணும்
                                          நேர்மையுடன் ரூபமதன் வினயங்கேளே”””””
                                                                                         ----------போகர்----- 7000----------
        “””””அறியவே நுட்பமது என்னசொல்வேன்
                                  ஆகாகா நாதாக்கள் கண்டதில்லை””””””
சாயா தரிசனத்தின் ரகசியங்கள் , சூட்சுமங்கள் , பலன்கள் , சக்திகள் ஆகியவற்றை எழுத்துக்களில் எழுதிக் காட்ட முடியாது .
வார்த்தைகளில் சொல்ல முடியாது .
சாயா தரிசனத்தின் சக்திகளை சாதாரண மனிதர்கள் கண்டதில்லை அதாவது சாயா தரிசனம் செய்யாதவர்களுக்கு சாயா தரிசனத்தின் சக்திகள் தெரிவதில்லை , கண்டதில்லை என்கிறார்  போகர்.


      
“”””””முறியவே நேத்திரங்கள் இமைகொட்டாமல்
                                    முனையான தன்சிரசைத் தானும்பார்த்து””””
 நேத்திரங்கள் என்றால் நெற்றி என்று சிலர்  சொல்லுகிறார்கள் .
நேத்திரங்கள் என்றால் கண்கள் என்று சிலர்  சொல்லுகிறார்கள் .
போகர்   இந்த இடத்தில் நேத்திரங்கள் என்று கண்களைக் குறிப்பிடுகிறார். அதாவது கண்களை இமை கொட்டாமல் நிழலில் உள்ள சிரசை அதாவது தலையை உற்று நோக்க வேண்டும் .

இங்கே ஒன்றை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
சாயா தரிசனம் செய்பவர்கள்  தன்னுடைய நிழலில் முதலில் தலையைப் பார்க்க வேண்டும் .
பிறகு படிப்படியாக பார்வையை இறக்கிக் கொண்டே வந்து கழுத்து , மார்பு, கைகள் , இடுப்பு , கால்கள் , பாதம் என்று உடல் முழுவதும் பார்க்க வேண்டும். தன்னுடைய நிழலைத் தலை முதல் பாதம் வரை முழுவதுமாக பார்க்க வேண்டும் .
சிறிது நேரம் தொடர்ந்து பார்க்க வேண்டும் ஆரம்பத்தில் உள்ளவர்கள் சிறிது நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் .

சாயா தரிசனம் சில ஆண்டுகள் செய்த பிறகு அதாவது சில ஆண்டுகள் கழித்த பிறகு 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வரை தொடர்ந்து பார்க்க வேண்டும் .
அதாவது தொடர்ந்து 15 - நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் இமை கொட்டாமல் தன் நிழலைத் தானே பார்க்க வேண்டும் .


        “””””””குறியுடனே ஆகாயம் தன்னைநோக்கி
                                       கொற்றவனே பார்க்குமந்தச் சமயம்தன்னில்””””””
தன்னுடைய நிழலைப் பார்த்து முடித்த பின் கண்களை இமைக்காமல் பூமியிலிருந்து தான் நிற்கும் தரையிலிருந்து மெதுவாக படிப்படியாக மேலே தொடர்ந்து தன் பார்வையை உயர்த்த வேண்டும் .
ஆகாயத்தை நோக்கிப் பார்க்க வேண்டும் .

அவ்வாறு ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது நடைபெறுபவை எவை என்பதைப் பற்றி போகர்  பின்வரும் அடிகளில் கூறுகிறார் .


       “”””””நெறியுடனே உமைப்போல ரூபங்காணும்
                                     நேர்மையுடன் ரூபமதன் வினயங்கேளே”””””
அவ்வாறு ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது உருவம் முதலில் வெண்மை நிறமாக பூமியிலிருந்து படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கும் .

ஆகாயத்தில் காணும் அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுகிறேன் கேள் என்று போகர்  கூறுகிறார் .



பாடல் -4

            “”””””பனையளவு உயரமப்பா உந்தன்ரூபம்
                                             பாரினிலே தானிருந்து காணலாமே
                     காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன்
                                             கண்ணிற்கு ஆகாயம் தன்னிலப்பா
                     தோணவே சுடரொளி போலும்தன்ரூபம்
                                            தோற்றுமப்பா கண்ணிற்கு கூச்சங்காணும்
                     சாணளவு ரூபமது கொண்டுமல்லோ
                                            சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
                     நீணவே மாயாதி ரூபந்தானும்
                                           நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே””””””””””
                                                                             -----------போகர் -------7000---------- 
          “”””””பனையளவு உயரமப்பா உந்தன்ரூபம்
                                       பாரினிலே தானிருந்து காணலாமே””””””
ஒவ்வொருவரும் தங்கள் உருவத்தை உடலை கைகளால் அளந்தால் சாண் அளவு கொண்டு அளந்தால் உடலானது எண் சாண் அளவு தான் இருக்கும் .
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் உருவத்தை அளந்தால் ஒவ்வொருவடைய உருவமும் எண்சாண் அளவு தான் இருக்கும் .
அதனால் தான் எண் சாண் கொண்டது மனிதனது உருவம் என்றனர்  நமது முன்னோர்கள் .

இத்தகைய எண் சாண் கொண்ட நமது உடலானது பனையளவு கொண்ட தோற்றமாக இருந்தால் எப்படி இருக்கும் அதனை கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும் .
அத்தகைய  பனையளவு உயரம் கொண்ட உருவமாக நம்முடைய உருவம் இருப்பதை நாமே பார்க்கலாம் எப்பொழுது பார்க்கலாம்  .
இந்த உலகத்தில் உயிரோடு வாழ்ந்தபடியே , இருந்த படியே நம்முடைய உருவத்தை , பனையளவு உருவம் கொண்ட உருவமாக பார்க்கலாம்.
யார் பார்க்கலாம் என்றால் சாயா தரிசனம் செய்பவர்  தன்னுடைய உருவத்தை பனையளவு உருவம் கொண்ட உருவமாக பார்க்கலாம் .
சாயா தரிசனம் செய்பவர்  தன்னுடைய எண் சாண் உடலை பனையளவு உருவம் கொண்ட உருவமாக எப்படி பார்க்கலாம் என்பதை போகர் பின்வரும் அடிகளில் கூறுகிறார்.

          
             ”””””காணவென்றால் சொரூபமது முறைமைசொல்வேன்
                                        கண்ணிற்கு ஆகாயம் தன்னிலப்பா”””””
சாயா தரிசனம் செய்பவர்  சாயா தரிசனத்தை செய்யும் பொழுது தெரியும் பனையளவு உருவம் கொண்ட தனது உருவத்தை ஆகாயத்தில் காணும் பொழுது ,
அந்த உருவம் எவ்வாறு இருக்கும் எப்படி இருக்கும் அதன் தன்மை என்ன என்பதைக் கூறுகிறேன் கேட்பாயாக என்கிறார் போகர்.            


              ””””””தோணவே சுடரொளி போலும்தன்ரூபம்
                                             தோற்றுமப்பா கண்ணிற்கு கூச்சங்காணும்
                        சாணளவு ரூபமது கொண்டுமல்லோ
                                             சட்டமுடன் பனையளவாய்த் தோற்றும்பாரு
                       நீணவே மாயாதி ரூபந்தானும்
                                             நிட்களங்க மாகவல்லோ தோற்றும்பாரே””””

ஆகாயத்தை நோக்கி நாம் பார்க்கும் பொழுது சுடரிலிருந்து வெளிப்படும் ஒளி எவ்வளவு பிரகாசத்தைத் தருமோ,  
எவ்வளவு பிரகாசத்தை உண்டு பண்ணுமோ ,
அத்தகைய ஒரு பிரகாசத்தை போல நம்முடைய உருவம் நமக்கு எதிரே தோன்றும் .

அந்த உருவத்தை நாம் காணும் பொழுது நம்முடைய கண்கள் கூசும் விதத்தில் எதிரே உள்ள உருவம் தெரியும்
அதாவது பனைளயவு உருவம் கொண்ட நமது உருவத்தை காணும் பொழுது கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு பிரகாசமாக இருப்பதால்
கண்களால் பார்க்கும் பொழுது நம்முடைய கண்கள் கூசும் .

எண்சாண் அளவு கொண்ட நமது உருவமானது பனை அளவு உயரம் அளவுக்கு உருவம் தெரியும் .

பனையளவு உயரம் கொண்டு எதிரே தெரியும் உருவம் நம்மைப் போலவே அச்சு அசலாக உண்மையாக ஒரு உருவம் இருப்பது போலவே தெரியும் .
அது எப்பொழுது தோன்றுமென்றால் ஆரம்ப கட்டத்தில் அச்சு அசலாகத் தெரியாது .
சாயா தரிசனத்தில் உயர்ந்த நிலை அடைந்த பின்னர்  அதாவது வருடங்கள் பல கடந்தப் பின்னர்  தான் அவ்வாறாகத் தெரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .


                      """“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                போற்றினேன் பதிவுஏழு  ந்தான்முற்றே “”