November 27, 2011

ஐயப்பன்- விரதமுறைகள்- பதிவு-5



                                         ஐயப்பன்- பதிவு-5

“”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””
ஐயப்பன் - விரதமுறைகள்
சபரி மலை யாத்திரைக்கு அதாவது சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கோள்ளும் ஒவ்வொரு பக்தருக்கும்  பின்பற்ற வேண்டிய விரத முறைகள், செய்ய வேண்டிய பூஜை முறைகள், புனித யாத்திரையின் பொழுது கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றின் விவரங்கள், விதிமுறைகள் தெரிந்து இருக்க வேண்டும் அதில் உள்ள ரகசியங்கள் புரிந்து இருக்க வேண்டும்
அப்பொழுது தான் அதை முறையாக கடைபிடித்து செயலாற்றி இடையில் வரும் இடையூறுகளைக் களைந்து அடைய நினைக்கும் இலக்கை அடைந்து கொண்ட கொள்கையை முடித்து வெற்றி பெற முடியும்.

ஐயப்பன் விரதம் - விதிமுறைகள்
விரத நாட்கள்
சபரி மலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடினமான விரதம் மேற்கொள்ள வேண்டும் ஐயப்பனுக்காக மேற்கொள்ளப் படும் விரதத்தின் நாட்கள் 41 நாட்களாகவோ அல்லது 45 நாட்களாகவோ கணக்கில் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்
41 நாட்களைக் கூட்டினால் 5 வருகிறது 5 என்பது பஞ்ச பூதங்களை குறிப்பதால் 41 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
45 நாட்களைக் கூட்டினால் 9 வருகிறது 9 என்பது நவ கிரகங்களைக் குறிப்பதால் 45 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 45 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
 
கழுத்தில் அணியும் மாலை
ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் துவக்க நாளன்று ருத்ராட்சக் கொட்டைகளினால்  செய்யப் பட்ட மாலையையோ (அல்லது) துளசி மணிகளால் செய்யப் பட்ட மாலையையோ கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்
கழுத்தில் பெரிய மாலை சிறிய மாலை என்று இரண்டு விதமான மாலைகளை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள் சிறிய மாலை துணைமாலை என்றும் அழைக்கப் படுகிறது

பெரிய மாலை 108 எண்ணிக்கை கொண்ட பெரிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட பெரிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ பெரிய மாலை இருக்கும்
சிறிய மாலையில் 108 எண்ணிக்கை கொண்ட சிறிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ (அல்லது) 108 எண்ணிக்கை கொண்ட சிறிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ சிறிய மாலை இருக்கும்
பெரிய மாலையிலும் சிறிய மாலையிலும் ஐயப்பனின் படமும், விநாயகரின் படமும் கொண்ட டாலர்  மாட்டப் பட்டிருக்கும்.

ஐயப்பனுக்காக மாலை அணிந்த நாள் முதல் விரத நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விடும் விரத நாட்கள் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் விரத நாட்களில் அனுசரிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய முறைகள் இருக்கின்றன
இதை ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கண்டிப்பாக தன் விரத நாட்களில் பின்பற்றியே ஆக வேண்டும் அதை இப்பொழுது பார்ப்போம்

குளிப்பது
விரதம் இருக்கும் பக்தன் அதிகாலை சூரிய உதயத்திறகு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் .குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  .தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்

பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்து விட்டு காலையில் எழுந்து செய்தது போலவே செய்ய வேண்டும்
பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும்  தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும் பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


செல்ல வேண்டிய கோயில்
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும் சிறிது நேரம் கோயிலிலேயே அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஐயப்பன் கோயில் இருந்தால் அங்கு சென்று வணங்கலாம் ஐயப்பன் கோயில் இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு தெய்வம் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கலாம்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

உணவு
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் கையால் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் (அல்லது) வேறு ஒரு ஐயப்ப பக்தர்  செய்து கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டும் இதனைத் தவிர்த்து மற்றவர்கள் கையால் செய்யப் பட்ட உணவையும் உணவகங்களில் செய்யப்பட்ட உணவையோ சாப்பிடக் கூடாது

உறக்கம்
ஐயப்ப பக்தர்கள் காலையிலோ மத்தியானத்திலோ உறங்கக் கூடாது அப்படி உறங்கினால் உறங்கி எழுந்தவுடன் குளிக்க வேண்டும் குளித்து முடித்து விட்டுத் தான் மற்றைய வேலைகளைச் செய்ய வேண்டும்

செய்யக் கூடாதவை
செருப்பு போடக் கூடாது, முடி வெட்டக் கூடாது ,நகத்தை வெட்டக் கூடாது, ஷேவ் செய்யக் கூடாது ,அலங்காரம் செய்யக் கூடாது, வாசனைத் திரவியங்களைச் சூட்டிக் கொள்ளக் கூடாது.
மது அருந்துதல் ,சிகரெட், பீடி பிடித்தல் போன்ற எந்த விதமான போதையையும் உண்டாக்கக் கூடிய போதை வஸ்துகளைப் பயன்படுத்தக் கூடாது
உயிர் வதை செய்வது ,உயிர்களைக் கொல்லுவது ,புலால் உண்ணுவது ,அசைவ உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது 

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி ,உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்ற ஆறு வகை குணங்களும் நம்முள் வெளிப்படாதவாறும் செயல்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆறு வகை குணங்களும் கண்டிப்பாக வெளிப்படக் கூடாது
பொய் ,சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை சிந்தையாலும் ,செயலாலும் தொடக் கூடாது
பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்; பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்; பெண்களை நினைவாலும் உடலாலும் தொடக் கூடாது

செய்ய வேண்டியவை
எண்ணம் சொல் செயலால் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும்
தன் வீட்டில் விருந்தாளியாக வருபவர்களுக்கு உணவு படைத்து உபசரிக்க வேண்டும்

நினைவு
சாதி மதம் இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு போன்ற வேறுபாடுகளை எந்த உயிர்களிடத்தும் காட்டாமல் மற்றவர்கள் மனம் வருத்தப் படக் கூடிய வார்த்தைகளையோ ,ஆபாசமான சொற்களையோ ,மற்றவர்களை இழிவு படுத்தும் வார்த்தைகளையோ உபயோகப் படுத்தாமல் , எண்ணம் ,சொல் ,செயலால் எப்பொழுதும் ஐயப்பனையே நினைக்க வேண்டும். ஐயப்பன் நாமத்தையே சொல்ல வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும் இறைவன் என்று நினைக்க வேண்டும்; அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த நினைப்பு ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் நினைவிலும் செயலிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே பார்க்கும் அனைத்து உயிர்களையும்     ""சாமி ""     என்று கூப்பிட வேண்டும் என்ற சடங்கு முறை உள்ளது

தரிசித்தல்
யோக நிலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க முதல் 3 வருடம் செல்பவர்கள் குருவின் அடையாளமாக மஞ்சள் ஆடைகளை அணியலாம்
அதன்பின் 15 ஆண்டுகளுக்குக் கருநீல ஆடை அணிந்து சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கலாம்
18 ஆண்டுகள் தரிசனத்தை முடித்தவர்கள் யோக நிலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்க முழுவதும் காவி உடை அணிந்து தரிசித்தால் சிறந்த பலனை அடையலாம்

உணர வேண்டியது
மேலே சொல்லப்பட்ட விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றாமல் காலத்திற்கு ஏற்றவாறும் தனக்கு உகந்தவாறும் தன்நிலைக்கு எவையெல்லாம் சரியாக வருமோ அவற்றை மட்டும் பின்பற்றி ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டிக்கின்றனர்
வேலையின் காரணமாகவோ தொழில் நிமித்தமாகவோ மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாமல்  இருப்பது ஐயப்பனை இழிவு படுத்துவது போலாகும் இதனை செய்ய முடியாதவர்கள் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதை தவிர்த்தல் நல்லது
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் தனக்கு பொருந்தக் கூடிய தனக்கு உகந்த தன்னால் முடிந்த அளவு பின்பற்றக் கூடிய விதிமுறைகளை மட்டும் பின்பற்றி விரதம் இருப்பவர்கள் உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருக்கவில்லை என்பதை அவரவர்கள் மனசாட்சிக்கே விட்டு விடுவோம்
உண்மையாகவே ஐயப்பனுக்காக விரதம் இருப்போம் வாழ்வில் தேவையான நலன்களைப் பெற ஐயப்பனை வணங்குவோம் 


அடுத்து ஐயப்பனுக்காக செய்யப்படும் பூஜைமுறைகளின் விவரங்களைப் பார்ப்போம்

“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
   போற்றினேன் பதிவுஐந் தும்தான்முற்றே “”

November 25, 2011

ஐயப்பன்- வழிபடும்முறை-பதிவு- 4

                     

                                     ஐயப்பன்- பதிவு- 4
“”பதிவு நான்கை விரித்துச் சொல்ல
    ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - வழிபடும் முறை :
ஐயப்பனை வழிபடும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை வழிபட மேற்கொள்ளும் வழிபாட்டு முறைகளான விரத முறைகள், பூஜை முறைகள் ,செய்யும் சடங்குகள் ,பிரார்த்தனை முறைகள் ,தியான முறைகள் ஆகியவை தாங்கள் அறிந்தோ ,அறியாமலோ (அல்லது) உணர்ந்தோ ,உணராமலோ  கிரியா என்னும் மார்க்கத்தைப் பின்பற்றி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கிரியா மார்க்கம் எனப்படுவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபாடு செய்யும் முறையைக் குறிக்கிறது
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் அகத்தே வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடும் பக்தர்கள் புறத்தே வழிபடுவதற்கான முறைகளையும் பின்பற்றி வழிபாடு செய்வார்கள்
இந்த இரணடு முறைகளையும் ஒன்றாக இணைத்து அதாவது இறைவனை அகத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ,இறைவனை புறத்தே வைத்து வழிபடுவதற்கான முறைகளையும் ஒன்றாக்கி வழிபடும் முறைகளை கொண்டது தான் ஐயப்பனை வழிபடும் முறைகள் ஆகும்
இந்த முறையைத் தான் கிரியா மார்க்கம் என்று அழைக்கிறோம்

மார்க்கம்
மார்க்கம் என்றால் வழி என்று பொருள்
இறைவனை அடைவதற்கு, அதாவது முக்தி அடைவதற்கு உரிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்து அதனைப் பின்பற்றி உயர்வு அடைவதையே மார்க்கங்கள் குறிப்பிடுகின்றன

முக்தி அடைவதற்கு உரிய மார்க்கங்களை நான்காகப் பிரித்து வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்
நான்கு விதமான மார்க்கங்கள் எனப்படுபவை சரியை ,கிரியை, யோகம், ஞானம் ஆகியவை ஆகும்
சரியை  - இறைவனை புறத்தே வைத்து வழிபாடு செய்வது;
கிரியை  - இறைவனை அகத்தேயும் புறத்தேயும் வைத்து வழிபாடு செய்வது;
யோகம்  - இறைவனை அகத்தே கண்டு வழிபாடு செய்வது;
ஞானம்  -  எங்கும் இறைவனது காட்சியைக் கண்டு களிப்பது;


ஐயப்பனை கிரியா மார்க்கத்தில் வழிபடும் பொழுதே மேலும் இரண்டு மார்க்கங்களான சரியை மார்க்கமும், யோக மார்க்கமும் ஒன்றுக்குள் ஒன்றாக அடங்கி விடுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

இறைவனை புறத்தே வைத்து வழிபடும் சரியை மார்க்கமும் ,
இறைவனை அகத்தே வைத்து வழிபடும் யோக மார்க்கமும்,
இரண்டையும் ஒன்றாக்கி வழி படும்  அதாவது இறைவனை அகத்தேயும், புறத்தேயும் வைத்து வழிபடும் கிரியை மார்க்கமும் ஆக மூன்று மார்க்கமும் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறையாக இருந்து வருகிறது

மூன்று மார்க்கத்தின் சாராம்சம் அனைத்தையும் தன்னுள் கொண்ட ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இறுதியில் நான்காவது மார்க்கமான ஞான மார்க்கத்தை அடையக் கூடிய திறவு கோலை பெறுவதற்குரிய ஒரு ரகசியமான சூட்சுமமான வழிபாட்டு முறையாக ஐயப்பனின் வழிபாட்டு முறை இருந்து வருகிறது

மொத்தமாக ஐயப்பனின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து பார்த்தால் நான்கு மார்க்கங்களின் சாராம்சத்தைத் தன்னுள் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாகவே ஐயப்பனின் வழிபாட்டு முறைகள் இருந்தது இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும்

இந்த  நான்கு மார்க்கங்களை  முறையே தாஸ மார்க்கம் ,சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம் ,சன் மார்க்கம் எனவும் அழைக்கப் படுகிறது
இவைகள் முறையே கர்மம் ,பத்தி ,யோகம், ஞானம் எனவும் அழைக்கப் படுகிறது

மேற்கண்ட நெறிகளை பின்பற்றி உயர்வடைந்த ஆன்மாக்கள் சாலோக்கியம் ,சாமீப்பியம் ,சாரூப்பியம், சாயுச்சியம் என்ற பதவிகளை அடைகிறது

சாலோக்கியம்
இந்த உலகத்தை ஒட்டி அதாவது இந்த பூமியை ஒட்டி இயக்கத்தில் இருக்கும் இந்த உலகத்தை ஒட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பூமியின் புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட ஒரு களத்தை சாலோக்கியம் என்பர்

சாமீப்பியம்
பூமியைக் கடந்த பிறகு அடுத்து உள்ளது சூரியன் சூரியனைச் சுற்றி உள்ள களம் சூரிய களம் எனப்படுகிறது இந்த சூரிய களத்தை சாமீப்பியம் என்பர்

சாரூப்பியம்
இந்த சூரிய களத்தை கடந்து போனால் அதற்கு அப்பால் 12வீடுகள் 27 நட்சத்திரங்கள் மற்றும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கும் இயக்க மண்டல களத்தை சாரூப்பியம் என்பர்

சாயுச்யம்
இவை அனைத்தையும் கடந்து போனால் முடிவாக இருப்பது அதாவது இயக்க மற்று இருப்பது சுத்தவெளி இந்த சுத்த வெளியைத் தான் சாயுச்யம் என்பர்

ஆன்மாக்கள் தாங்கள் பெற்ற கர்ம வினைகளின் பதிவுகளுக்கு  ஏற்ப மேற்கண்ட ஏதேனும் ஒரு நிலையை அடையும்

சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம் ஆகிய மூன்று பதவிகளும் பதமுத்தி என்று அழைக்கப் படுகிறது
நான்காவதாகிய சாயுச்சியம் ஞானத்தால் அடையும் பதவி ஆகும் எனவே ஞானத்தால் அடையும் முத்தி பர முத்தியாகும்

தாயுமானவர்  இந்த நால்வகை மார்க்கங்களையும் அரும்பு, மலர்,  காய், கனி இவற்றிற்கு ஓப்பிடுகிறார்
”””””விரும்பும் கரியை முதல்மெய்ஞ் ஞானம்நான்கும்
        அரும்புமலர்  காய்கனிபோல் அன்றோ பராபரமே”””””
                     -----தாயுமானவர்----
அரும்பு இன்றி மலரும்  ,மலர்  இன்றி காயும் ,காய் இன்றி கனியும் உண்டாகாது அதைப் போல் சரியை இன்றி கிரியையும் ,கிரியை இன்றி யோகமும், யோகம் இன்றி ஞானமும், உண்டாகாது என்கிறார்  தாயுமானவர்.
சரியை, கிரியை ,யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களை ஆன்மாவானது மேற்கொண்டு ஒழுகி முக்தியைப் பெறுகிறது
இறைவனை அடைவதற்கு முக்தி அடைவதற்கு ஞானம் அடைவதற்கு இந்த நான்கு வகையான மார்க்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்பற்றி அல்லது ஒன்றுக்குள் ஒன்றாக பின்பற்றி உயர்வடைய வேண்டும்  என்கிறார் தாயுமானவர்

நாம் தெரிந்து கொண்ட விவரங்களை கீழ்க்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்

நாலு மார்க்கங்கள்                                           பதவி                           அடையும் நிலை உவமை 
 சரியை                 தாஸ மார்க்கம்             சாலோக்கியம்          பத முத்தி                      அரும்பு
கிரியை                சற்புத்திர மார்க்கம்     சாமீப்பியம்               பத முத்தி                       மலர்
யோகம்               சக மார்க்கம்                   சாரூப்பியம்             பத முத்தி                       காய்
ஞானம்               சன்மார்க்கம்                     சாயுச்யம்                    பர முத்தி                       கனி

இத்தகைய சிறப்பு வாய்ந்த நான்கு விதமான மார்க்கங்களையும்  சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டு இருக்கும் ஒரு வழிபடும் முறையே ஐயப்பனின் வழிபடும் முறை என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்


சபரி மலை யாத்திரைக்கு செல்பவர்  மேற்கொள்ள வேண்டிய விரத முறைகளையும் பூஜை முறைகளையும் பற்றி இப்பொழுது பார்ப்போம்
“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
     போற்றினேன் பதிவுநான் குந்தான்முற்றே “”





November 24, 2011

ஐயப்பன்- திருமூலர்-பதிவு-3

             

                 ஐயப்பன்- பதிவு-3

“”பதிவு மூன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

 ஐயப்பன்-திருமூலர்:
ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  கீழ்க்கண்ட பாடலின் மூலம் குறிப்பிடுகிறார்

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
           வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்
              தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்
           கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””””””””
                                                ------------திருமூலர்---------------

“”””””உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்””””””
முதலில் கோயிலுக்கும் ஆலயத்திற்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்து கொள்வோம்
கோ +  இல் ---------கோயில்
கோ என்றால் அரசன் இறைவன் தலைவன் என்று பொருள்.
இல் என்றால் உறைவிடம் என்று பொருள்.
கோயில் என்றால் இறைவன் உறைவிடம் (அல்லது) இறைவன் இருக்குமிடம் என்று பொருள்.

ஆ +  லயம்-------ஆலயம்
ஆ என்றால் ஆன்மா என்று பொருள்.
ஆலயம் என்றால் ஆன்ம லயத்திற்கு ஏற்ற வழி கண்டறிந்து பின்பற்றி உயர்வடைதலே ஆலயம் என்பதற்குப் பொருள் .

ஊன் என்றால் சதை என்று பொருள் சதையால் செய்யப்பட்ட அல்லது சதையால் ஆக்கப்பட்ட இந்த உடம்பு ஆலயம் ஆகும் .
இந்த உடலுக்குள் உள்ளம் என்ற பெருங்கோயிலுக்குள் இறைவன் இருக்கிறான்.
இந்த உடலாகிய ஆலயத்தின் கர்ப்பகிரகம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானமே கோயில் அது நமது உள்ளே சிரசில் பிரம்மரந்திரத்தில் உள்ளது          ”- வும்     ,     -வும்       உள்ளே சேரும் இடமே உள்ளம் ஆகும் அங்கே இருக்கிறது நம் உயிர்  ஜீவன்
உயிர் (அல்லது) ஆன்மாவே இறைவன் என்றும் அந்த இறைவன் தங்கும் இந்த உடல் ஓர் ஆலயம் என்றும் கூறுகிறார்  திருமூலர்

சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்குமிடத்தை பெருங்கோயில் என்கிறார்  திருமூலர்  பெருங்கோயில் என்றால் பெருமைப் படக்கூடிய கோயில் என்று பொருள் இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது பெருங்கோயில் என்றால் பெரிய கோயில் என்றும் பொருள் படும்
சிரசில் பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கும் இடம் பெருங்கோயில் என்றால் இந்த உலகத்தில் உள்ள மற்ற கோயில்கள் அனைத்தையும் இதனுடன் ஒப்பிட்டு காட்ட முடியாது என்று பொருள்
புறவழிபாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட கோயில்கள் அனைத்திலும் மட்டுமே மனதை செலுத்திக் கொண்டே இருந்தால் அகத்தே சொல்லப்பட்ட இந்த கோயிலின் ரகசியங்கள் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிறார் திருமூலர்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்றால் ஊன் என்று சொல்லப்படக்கூடிய சதையால் ஆக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிரசில் பெருங்கோயில் என்று சொல்லப்படக் கூடிய பிரம்மரந்திரத்தில் இறைவன் இருக்கிறான் என்பதைக் குறிக்கிறது


“”””””வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல்””””
பிராணன் என்றால் சீவன் என்று பொருள்.
வள்ளல் என்றால் வாரி வாரி வழங்கக் கூடியவர் என்று பொருள் .
வள்ளல் பிராணன் என்றால் அனைத்து விதமான சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும் வாரி வழங்கக் கூடிய சீவன் என்று பொருள்.
பிராணன் எப்பொழுது வள்ளல் பிராணனாக மாறும் என்றால் சீவன் சிவனுடன் சேரும் போது தான் உண்டாகிறது.
சீவன் எப்படி சிவனுடன் சேரும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தி விழிப்பெற்றெழுந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேரும் பொழுது சீவன் சிவனாக மாறுகிறது.
சீவன் சிவனுடன் சேருவதற்கான நுழைவு வாயில் பிரம்மரந்திரத்தில் உள்ளது பிரம்மரந்திரததில் உள்ள வாயிலைத் தான் கோபுர வாசல் என்கிறோம்.

வள்ளற் பிரானர்க்கு வாய்கோ புரவாசல் என்றால்,
அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக சீவன் மாற வேண்டுனெறால் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர பிரம்மரந்திரத்தில் உள்ள வாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும் என்று பொருள்.



சீவனை சிவனாக மாற்ற பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்க எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும் என்பதை கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்  திருமூலர்
“”””””தெள்ளத் தெளிதார்க்குச் சீவன் சிவலிங்கம்”””””
நமது உடலில் சீவன் என்று சொல்லப் படக் கூடிய உயிராகிய ஜீவாத்மா இந்த பிரபஞ்சம் முழுவதும் பரமாத்மாவாக நீக்கமற நிறைந்திருப்பதுடன் நமது உடலில் சிரசில் பிரம்மரந்திரத்தில் சிவனாக இருக்கிறது
இதனை எப்படி உணர்ந்து கொள்ள முடியும் என்றால் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைக் கடக்கச் செய்து பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் சேர்க்கும் பொழுது சீவன் சிவனாக  மாறுகிறது
மேற்கண்ட முறையில் சீவன் சிவனாக மாறும் பொழுது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனே நம் உடலில் சீவனாக இருக்கிறது என்பதை உணர முடியும்



சீவன் சிவனாக மாறவிடாமல் தடுப்பவை கள்ளப்புலன்கள் இந்த கள்ளப்புலன்கள் பற்றிய விளக்கத்தை திருமூலர்  கீழ்க்கண்ட அடிகளில் கூறுகிறார்

“”””””கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே””””
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாகச் செயல்பட்டு மனிதனுக்கு ஆறு குணங்களை உண்டாக்கி பஞ்சமா பாதகங்களைச் செய்ய வைப்பதால் மனிதன்  இரு வினையில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் நீந்துகிறான்
பஞ்ச தன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்வதால் வினைவழி புறத்தே செயல்படும் ஐம்புலன்களை கள்ளப் புலன்கள் என்கிறார்  திருமூலர்
மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களைத் துளைத்து பிரம்மரந்திரத்தில் உள்ள இறைவனுடன் சேரும் போது ஒளி தெரிகிறது இந்த ஒளியைத் தான் மணி விளக்கு என்கிறார் திருமூலர்
இந்த மணிவிளக்கைத் தெரியாமல் செய்வது தான் கள்ளப்புலன்கள்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே என்றால்
ஐந்து புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகள் புறத்தே செயல்பட்டு கர்மவினைகளைத் தேடிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்பதால் கள்ளப் புலன்களாகி மணி விளக்கைத் தெரியாமல் செய்து விடுகிறது
ஆனால் ஐந்து புலன்கள் வழியாக பஞ்ச தன் மாத்திரைகள் அகத்தே செயல்படும் பொழுது மணிவிளக்கு தெரியும் என்று பொருள்

முதல் அடியில் கடவுள் இருக்கும் இடத்தையும் ,
இரண்டாம் அடியில் கடவுளை அடையும் வழியையும் ,
மூன்றாம் அடியில் கடவுளை எப்படி அடைவது என்ற முறையையும் ,
நான்காம் அடியில் கடவுளை அடைவதற்கு தடையாக உள்ளவைகளையும்
விளக்குகிறார்  திருமூலர்.


திருமூலர்  சொன்னபடி பஞ்ச தன் மாத்திரைகளை புறத்தே விடாமல் அகத்தே அனுப்ப வேண்டும் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது தான் ஐயப்பனுக்காக மேற் கொள்ளப் படும் விரத முறைகள்


“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                 போற்றினேன் பதிவுமூன் றுந்தான்முற்றே “”




November 22, 2011

ஐயப்பன்- பிறப்பு- பதிவு-2

              

             ஐயப்பன்- பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
      ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன் - பிறப்பு :
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன்  
அரி அர புத்திரன் ஐயப்பன் என்பது சமுதாயத்தில் உள்ள ஒரு வழக்கு
அரி என்றால் திருமால் என்று பொருள் 
அரன் என்றால் சிவன் என்று பொருள்
அரிக்கும் அரனுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றால் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று பொருள்
இதில் உள்ள சூட்சும ரகசியத்தை புரிந்து கொண்டால் நமக்கு சில விளக்கங்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சிவம் - சக்தி
பரம் பொருளாகிய மெய்ப் பொருளாகிய சிவம் பின்ன நிலையடைந்த நிலையிலே எப்பொழுது வேகங் கொண்டு இயங்குகிறதோ விரைவு கொள்ளுகிறதோ  அதற்குச் சக்தி என்று பெயர்.
சிவம் என்ற சொல்லை மாற்றிச் சக்தி என்ற சொல்லால் பயன்படுத்துவது மனிதன் புரிந்து கொள்வதற்காகத் தான்.
சக்தி என்று சொன்னாலும் அதனுடைய அர்த்தம் மாறுபடவில்லை .
நிலையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு வைத்த பெயர்  தான் இது.
இருப்பு நிலையை சிவம் என்றும் சிவத்தின் இயக்க நிலையை சக்தி என்றும் இரு வேறு பெயரிட்டு இருப்பு நிலையை அழைப்பது மக்கள் இருப்பு நிலைக்கும் இயக்க நிலைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

சிவம் என்பது பூரணம் சக்தி என்பது அதிலேயிருந்து பின்னம் ஆனது அதாவது சிவமே இயக்கநிலையில் சக்தி ஆனது.
சக்தி உட்புறமாகத் தானே இருக்க வேண்டும் சிவத்துக்குள் அடக்கம் பெற்றுத் தானே இருக்க வேண்டும் என்ற காரணத்தால் பெட்டு என்று சொல்லலாம்.
அதனைச் சுற்றி ஆண்டு கொண்டிருப்பதை ஆண் என்றும் பெட்டு என்பதைப்  பெண் என்றும் வைத்துக் கொண்டு சிவனை ஆணாகவும் சக்தியை பெண்ணாகவும் உருவம் கற்பித்தனர்.

விநாயகர்  
சிவம் என்று சொல்லப் படக்கூடிய சுத்தவெளியும் சக்தி என்று சொல்லப் படக்கூடிய விண்ணின் எண்ணிக்கையும் ஒரு குறிப்பிட்ட பருமன் அளவில் அமையும் தன்மைக் கேற்ப அதாவது இணையும் தன்மைக் கேற்ப விண் என்னும் ஆகாசமே தனது திண்மைக் கேற்ப வேறுபாடுகளைக் கொண்டு பஞ்ச பூதங்களாக வேறுபட்டுக் காணப் படுகிறது.
பஞ்ச பூதங்கள் எனப்படுபவை நிலம் ,நீர் , நெருப்பு. காற்று. விண் ஆகியவை ஆகும் .
சிவனும் சக்தியும் இணைந்து பஞ்ச பூதங்கள் உருவானதால் இதனை விநாயகராக உருவகப் படுத்தி ஐங்கரத்தான் என்ற வார்த்தையால் குறிப்பிட்டு சிவனுக்கும் ,சக்திக்கும் பிறந்தவன் விநாயகர்  என்ற பெயரிட்டு அழைக்கிறோம் .

ஆறுமுகன்
சுத்த வெளி என்று சொல்லப் படக் கூடிய சிவனை விண்  என்று சொல்லப் படக்கூடிய சக்தி உரசுவதால் காந்தம் தோன்றுகிறது இந்த காந்தமே அழுத்தம் ,ஒலி ,ஒளி , சுவை ,மணம் என்று பஞ்ச தன் மாத்திரைகளாக மாற்றம் அடைகிறது
சிவத்திற்கும் சக்திக்கும் பிறந்தவன் காந்தன் என்றும் அந்தக் காந்தத்தின் தன்மாற்றம் தான் பஞ்ச தன் மாத்திரைகள் என்றும் அதை உணரும் மனதையும் சேர்த்து ஆறாக்கி காந்தனை கந்தனாக்கி கந்தனை ஆறுமுகனாக்கி விட்டார்கள்

இது தொடர்ச்சியாக ஒன்றன் ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமின்றி ஒன்றுக்குள் ஒன்றாக நடைபெறுவதால் ஒரு குடும்பமாக உருவகப்படுத்தி ஒரே குடும்பமாக கூறுகின்றனர்

ஐயப்பன்
இதில் ஐயப்பன் எங்கிருந்து வந்தார்  என்று பார்ப்போம்

சுத்தவெளி என்று சொல்லப் படக்கூடிய சிவனிலிருந்து பிரிந்த விண் என்று சொல்லப்படக்கூடிய சக்தி சுத்த வெளியுடன் உரசும் போது அதிக சத்தமும் ஒளியும் உருவாகிறது
அதனால் தான் விஷ்ணு கையில் சத்தத்திற்கு காரணமான சங்கையும் ஒளிக்கு காரணமாக சங்கு சக்கரத்தையும் கொடுத்தார்கள்
சிவத்தில் சக்தி உரசும் போது உருவாகும் விஷ்ணு எனனும் அலையானது சிவத்தில் கரையும் போது பஞ்ச தன் மாத்திரைகள் உருவாகிறது அதனை உயிரிகள் ஐம்புலன்கள் வழியாக உணருகிறது

எனவே தான் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்று சொல்லி ஐம்புலன்களின் தலைவனாக ஐயப்பனை வைத்திருக்கிறார்கள்
அதனால் தான் ஐயப்பனை ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றும் அரி அர புத்திரன் ஐயப்பன் என்று சொல்லப் படக் காரணம்

ஐம்புலன்கள் வழியாக வெளியே செல்லும் பஞ்சதன் மாத்திரைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி திருமூலர்  என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம்

       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                        போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”

November 21, 2011

ஐயப்பன்- ஐம்புலன்கள்-பதிவு-1

                                        

                                   ஐயப்பன் - பதிவு-1
“”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
   ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

ஐயப்பன்-ஐம்புலன்கள் :
  +    அப்பன் ----------ஐயப்பன்
ஐ என்றால் ஐந்து என்று பொருள்
அப்பன் என்றால் தலைவன் என்று பொருள்
ஐயப்பன் என்றால் ஐந்து புலன்களின் தலைவன் என்று பொருள்

ஐந்து புலன்கள் எனப்படுபவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஆகும் ஐந்து புலன்கள் வழியாகச் செயல்படுவது பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படும் பஞ்ச தன் மாத்திரைகள் எனப்படுபவை அழுத்தம் ,ஒலி, ஒளி ,சுவை ,மணம் ஆகியவை ஆகும்
பஞ்சதன் மாத்திரைகள் ஐம்புலன்கள் வழியாக வெளியே செயல்படும் பொழுது மனிதனுக்கு ஆறு விதமான குணங்கள் ஏற்படுகிறது ஆறுவிதமான குணங்கள் எனப்படுபவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம். மாச்சரியம் எனப்படும்
தமிழில் இதை பேராசை, சினம் ,கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் என்கின்றனர்

இந்த ஆறு வகை குணங்கள் ஒரு மனிதனுக்கு உருவாகி விட்டால் மனிதன் பஞ்சமா பாதகங்களைச் செய்கிறான் பஞ்சமா பாதகங்கள் எனப்படுபவை பொய், சூது ,கொலை ,கொள்ளை ,கற்புநெறி பிறழ்தல் ஆகியவை ஆகும்
பஞ்சமா பாதகங்களை ஒரு மனிதன் செய்யும் பொழுது அவன் இருவிதமான கர்ம வினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் மாட்டிக் கொள்கிறான்

வட எழுத்தாளர்கள்  வினைகளை மூன்றாகப் பிரித்தார்கள் அவை சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ,ஆகாம்ய கர்மம் ஆகியவை ஆகும்
தமிழில் வினைகளை இரண்டாகப் பிரித்தார்கள் அவை பழவினை ,புகுவினை  ஆகியவை ஆகும்
வட எழுத்தாளர்கள் சொல்லும் மூன்று வினைகளும் தமிழில் சொல்லப்படும் இரு வினைகளும் ஒரு பொருளைத் தான் குறிக்கிறது வார்த்தை தான் வேறுபடுகிறதே தவிர அதில் சொல்லப் படும் கருத்து ஒன்றைத் தான் அவை குறிப்பதும் ஒரே பொருளைத் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பழவினை :
தமிழ்ச் சான்றோர்கள் சஞ்சித கர்மம் ,பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளைச் சேர்த்து பழவினை என்று குறிப்பிடுகின்றனர்
சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர்  முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது

பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும் செயல்களின் விளைவுப் பதிவு தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்

புகுவினை :
தமிழ்ச் சான்றோர்கள் ஆகாம்ய கர்மத்தை புகுவினை என்று குறிப்பிடுகின்றனர்
ஆகாம்ய கர்மம்
ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால் இனி என்ன செய்ய வேண்டும் என்று துhண்டப்படும் எண்ணங்களும் செயல்களும் ஆகாம்ய கர்மம் எனப்படும்

மனிதன் மேலே கூறப் பட்ட இருவினைகளில் மாட்டிக் கொண்டு பிறவிப் பெருங்கடலில் அவதிப் பட்டு துன்பப் படுவதற்குக் காரணம் ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விட்டது தான் காரணம்

ஐம்புலன்கள் வழியாக பஞ்சதன் மாத்திரைகளை வெளியே விடாமல் உள்ளே திருப்பினால் அதாவது அகத்தில் திருப்பினால் ஜோதிரூபமாக இருக்கும் இறைவனை தரிசிக்கலாம் என்பதை விளக்குவதே ஐயப்பனை  வழிபடும் முறையில் உள்ள சடங்குகள் மற்றும் விரதங்கள் ஆகும்

ஐயப்பனை பற்றி நடைமுறையில் உள்ள சொற்கள் விரத முறைகள் சடங்குகள் ஆகியவற்றில் உள்ள ரகசியங்கள் மற்றும் அதில் உள்ள தத்துவங்கள ஆகியவற்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்

                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”