July 18, 2012

இயேசு கிறிஸ்து-வால்மீகர்-ஆமப்பா-பதிவு-47



                  இயேசு கிறிஸ்து-வால்மீகர்-ஆமப்பா-பதிவு-47
               
         “”பதிவு நாற்பத்திஏழை விரித்துச் சொல்ல    
                         ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் பிரவேசித்து , இயேசுவை அழைத்து : நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
                                                                 -------யோவான் - 18 : 33

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக் குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.”
                                                               ------யோவான் - 18 : 34

பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா ? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக் கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.
                                                              -------யோவான் - 18 : 35

இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக் கொடுக்கப்படாத படிக்கு என் ஊழியக்காரர்  போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.”
                                                             --------யோவான் - 18 : 36

அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர்  சொல்கிறபடி நான் ராஜா தான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.”
                                                                ------யோவான் - 18 : 37

அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான் .மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.
                                                                  -----யோவான் -18 : 38

கேள்வி இரண்டு நிலைகளில் கேட்கப்படுகிறது
ஒன்று : அறியாததை அறிந்து கொள் வேண்டும் என்று
அடக்க நோக்கில் கேட்கப்படுவது,
இரண்டு : தனக்கு எல்லாம் தெரியும் மற்றவருக்கு தெரியுமா?
என்று ஆணவ நோக்கில் கேட்கப்படுவது .

அடக்கமாக இருப்பவனால் மட்டுமே
அறியாததை அறிந்து கொள்ள முடியும்.
ஆணவத்துடன் இருப்பவனால் ஒன்றையும் அறிய முடியாமல்
விளக்கம் பெற முடியாமல் ,தன்னை உயர்ந்தவன் என்று
தன்னைத் தானே நினைத்துக் கொண்டு
மூளை பிசகிய நிலையில் இருந்து கொண்டு
சமுதாயத்தில் தன்னை பகட்டாய் அறிவாளியாய் உயர்ந்தவனாய்
எல்லாம் தெரிந்தவனாய் காட்டிக் கொண்டு
உண்மையின் உரு தெரியாமல்
அறியாமையில்  மாட்டிக் கொண்டு
மண்ணோடு மண்ணாக மக்கித்தான் போக முடியும்.
காலத்தை கடந்து நிற்க முடியாது.

முட்டாள்தனமான கேள்வி என்று எதுவுமில்லை
முட்டாள்தனமான பதில் தான் உண்டு.

ஒருவர்  சொல்லும் பதிலை வைத்தே அவர்
ஒன்றைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறார்
ஒன்றில் எவ்வளவு தெளிந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு ஆழ்ந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு விளக்கம் பெற்றிருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு அறிவு பெற்றிருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு புத்தி உயர்வு அடைந்திருக்கிறார் ;
ஒன்றில் எவ்வளவு ஆழம் சென்றிருக்கிறார் ;
என்பதை உணர்ந்து கொள்ள முடியும் .

ஒருவரின் முட்டாள்தனமான பதிலைக் கொண்டு அவரின்
ஆளுமைத் தன்மையினை அறிந்து கொள்ள முடியும்.
இத்தகைய முட்டாள்தனமான பல கேள்விகள்
முட்டாள் தனமானவர்களால் இயேசுவை குற்றவாளியாக்க
இயேசுவை சிக்கலில் மாட்ட வைக்க
பல்வேறு நிலைகளில் , பல்வேறு சந்தர்ப்பங்களில்,
பல்வேறு காலங்களில் ,பல்வேறு தரப்பட்டவர்களால்,
பல்வேறு வார்த்தைகளைக் கொண்டு கேட்கப் பட்டன.
ஆனால் கேள்வி கேட்டவர்களே சிக்கலில் மாட்டிக் கொண்டு
தலைகுனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டது.
கேள்வி என்பது அறிந்து கொள்ள வேண்டும்
என்ற நோக்கில் இருக்க வேண்டும்.

பிலாத்து இயேசுவை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்றான்
அதற்கு இயேசு இதை நீ ,
அறிந்து கொண்டு கேட்கிறீரா ?அறியாமல் கேட்கிறீரா?
அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேட்கிறீரா?
மற்றவர்கள் சொன்னதை கருத்தில் கொண்டு கேட்கிறீரா?
மற்றவர்கள் என்னைப் பற்றி சொன்னதை
உண்மையாக இருக்குமா? பொய்யாக இருக்குமா?
என்ற மனநிலையில் இருந்து கொண்டு கேட்கிறீரா என்றார்.

அதற்கு பிலாத்து பிரதான ஆசாரியாரும் ,உன் ஜனங்களும் தானே
உன்னை குற்றவாளியாக்கி என்னிடம் ஒப்புக் கொடுத்து இருக்கிறார்கள்.
அப்படி இருக்க நீ என்ன செய்தாய் ஒன்றும் செய்யவில்லையே,
எதுவும் செய்யவில்லையே ,
அமைதியாகத் தானே இருக்கிறாய் என்றான்.

அதற்கு இயேசு நான் அமைதியாக இருக்கிறேன்
ஏனென்றால் என் ராஜ்யம் இவ்வுலகத்துக்கு உரியது அல்ல,
இவ்வுலகத்துக்குள் உட்பட்டதும் அல்ல,
இவ்வுலகத்துக்கு மட்டுமே உரியதும் அல்ல,
என் ராஜ்யம் இந்த உலகத்துக்கு மட்டுமே உரியதானால்
என் ராஜ்யம் இந்த உலகத்திற்கு மட்டுமே இருக்குமேயானால்
என் ஊழியக்காரர்கள் என்னை யூதர்களிடத்தில்
ஒப்புக் கொடுக்காத படிக்கு போராடியிருப்பார்கள்.
இந்தச் செயலிலிருந்து ,
இந்தச் செயல்கள் நிகழாமல் இருப்பதிலிருந்து,
இந்த நிகழ்வுகள் நடைபெறாததிலிலிருந்து,
தெரிந்து கொள்ள வேண்டாமா?
என் ராஜ்யம் இந்த உலகத்திற்குள் உட்பட்டதுமல்ல,
என் ராஜ்யம் இந்த உலகத்திற்கு மட்டுமே உரியதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் உட்பட்டதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் கட்டுப்பட்டு இருப்பதுமல்ல,
குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்கம் பெற்று கிடப்பதுமல்ல,
எல்லைகளை கடந்து நிற்பது என்கிறார்.

அப்படியென்றால் நீ ராஜாவோ என்றான் பிலாத்து
அதற்கு இயேசு நான் ராஜா தான்
நீர்  சொல்லுகிறபடி நான் ராஜா தான்
நீ நினைக்கிறபடி நான் ராஜா தான் என்கிறார்.
எதற்கு ராஜா ,எதன் அடிப்படையில் ராஜா,
என்பதை கீழ்க்கண்ட வசனங்கள் மூலம்
தெளிவு படுத்துகிறார்  இயேசு.

சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன்
அதற்காகவே நான் இந்த உலகத்தில் வந்தேன்.
சத்தியத்தை உணரத் துடிப்பவர்
சத்தியத்தை அறிய விருப்பப்படுபவர்
ஆகியோருக்கு நான் சத்தியமாக வழிகாட்டியாக
சத்தியத்தை உணர வைக்கும் வழிகாட்டியாக
சத்தியத்தின் சாயலாக
சத்தியத்தின் பிம்பமாக
இருப்பதால் சத்தியத்திற்கு ராஜாவாக இருக்கிறேன்.
ஏன் இருக்கிறேன்
எப்படி இருக்கிறேன்
எந்த விதத்தில் இருக்கிறேன்
எந்த வகையில் இருக்கிறேன்
என்று சத்தியத்தைப் பற்றி விளக்குகிறார்  இயேசு.

சத்தியம் என்றும் இருப்பது ,
எல்லாவற்றுள்ளும் இருப்பது ,
எதனுள்ளும் இருப்பது ,
எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது ,
எதிலும் இருப்பது ,
என்றும் இருப்பது ,
எப்பொழுதும் இருப்பது ,
எக்காலமும் இருப்பது ,

சத்தியம் மாறக் கூடியதல்ல ,
மாற்றத்திற்கு உட்பட்டதல்ல ,
மாறும் நிலையைப் பெற்றதல்ல ,
மாறக்கூடிய தன்மையை உடையதல்ல ,
மாறாமல் இருப்பது சத்தியம்.
மாறினால் அது சத்தியமல்ல.

அனைத்திற்குள்ளும் இருந்து
அனைத்தையும் இயக்க ஒழுங்கு விதிப்படி மாறாமல்
அனைத்தையும் காத்து இயக்கி வருவது சத்தியம் .

சத்தியமே எல்லாவற்றும் ஆதி
சத்தியமே எல்லாவற்றும் அந்தம்
சத்தியமே எல்லாவற்றும் மூலம்
சத்தியமே எல்லாவற்றும் முதன்மை
சத்தியமே எல்லாவற்றும் அடிப்படை
இத்தகைய தன்மைகள் பலவற்றை
தன்னுள் கொண்ட சத்தியத்தை
சத்தியம் என்றால் என்ன என்றும் ,
அது எத்தகைய தன்மைகளைத்
தன்னுள் கொண்டுள்ளது என்றும் ,
சத்தியத்தின் உண்மைத் தன்மை என்ன என்றும் ,
சத்தியத்தின் பொருள் உணராமல் ,
சத்தியத்தின் உண்மை அறியாமல் ,
சத்தியத்தின் விளக்கம் தெரியாமல் ,
அறியாமையில் சிக்கிக் கொண்டு
மடமையில் மாட்டிக் கொண்டு
துன்பச் சகதியில் சிக்கி
கொன்றழிக்கும் கவலை என்னும் குழியில் வீழ்ந்து
மனிதர்கள் தள்ளாடுகின்றனர் ;
கண்ணீரில் வீழ்ந்து மூழ்குகின்றனர் ;
கொன்றழிக்கும் கவலையில் அழிகின்றனர் ;
மனம் வாடுகின்றனர் ;
அறிவை இழக்கின்றனர் ;
சிந்தனை தடுமாறுகின்றனர் ;
அறியாமையில் வீழ்கின்றனர் ;
மடமையில் மாட்டுகின்றனர் ;
புத்தியை விடுகின்றனர் ;

இந்த நிலை மாற வேண்டும்
மக்கள் மனம் தெளிய வேண்டும்
சத்தியம் உணர வேண்டும்
சத்தியத்தின் பொருளை அறிய வேண்டும்
என்ற நோக்கத்திலேயே  சத்தியத்திற்கு
சாட்சி கொடுக்கவே நான் பிறந்தேன்
சத்தியத்தை வலியுறுத்தவே சத்தியத்தின் உண்மைப் பொருளை
விளங்க வைக்கவே இந்த உலகத்தில் வந்தேன்

சத்தியத்தை அறிய நினைப்பவர்
சத்தியத்தின் உண்மைப் பொருளை உணரத் துடிப்பவர்
சத்தியத்தின் வழியைத் தேடுபவர்
சத்தியம் என்றால் என்று ஆராய்பவர்
நான் சொல்லும் சத்தியத்தை
சத்தியத்தின் உண்மைப் பொருளை
கேட்டு அறிந்து நடந்து பின்பற்றி உயர்வடைவான்
என்கிறார்  இயேசு.

அதற்கு பிலாத்து சத்தியம் என்றால் என்ன என்று
கேட்டதற்கு இயேசு பதில் உரைக்கவில்லை.
மௌனம் காத்தார் ; மௌனம் உரைத்தார் ;
மௌனம் வெளிப்படுத்தினார் ;

சத்தியத்தை வார்த்தைகளில் உரைக்க முடியாது ;
வார்த்தைகளில் உரைத்தால் அது சத்தியமாக இருக்காது ;
சத்தியம் மாறாதது ;
சத்தியம் அழிவில்லாதது ;
என்றும் இருப்பது ;
அனைத்தையும் காப்பாற்றுவது ;
எல்லாவற்றையும் வழிநடத்துவது ;
அனைத்தையும் இயக்குவது ;

என்றும் இருப்பது ;
எப்பொழுதும் இருப்பது ;
எக்காலத்தும் இருப்பது;
அத்தகைய சத்தியமே ஆண்டவர்; ஆண்டவரே சத்தியம்;

தன்னலமில்லா இருதயம் கொண்டு
கள்ளமில்லா உள்ளம் கொண்டு
கபடமில்லா நெஞ்சம் கொண்டு
அன்பினால் உயிர்களை அனைத்து
கருணையில் மனங்களை வாழவைத்து
இரக்கத்தினால் செயல்களை கைக்கொண்டு
சுயநலமில்லா பாதை கொண்டு
விசுவாசத்துடன் நம்பிக்கையுடன்
உயர்நெறி நடப்பவர்க்கே
சத்தியமே ஆண்டவர் ஆண்டவரே சத்தியம்
என்பதை உணர்ந்து கொள்வார்.

உள்ளம் உருகி கண்ணீரால் நனைத்து
இதயத்தால் நம்பி தேடும் சத்தியத்தை எப்படி
வார்த்தைகளை அடுக்கி மொழிகளை பயன்படுத்தி
சத்தியத்தை விளக்க முடியும்.
இயேசுவை உணர்ந்தவர் ; சத்தியத்தை உணர முடியும்;
சத்தியத்தை உணரத் துடிப்பவர்; இயேசுவை உணர வேண்டும்.

அதனால் தான் இயேசு என்னை உணர்ந்து பின்பற்றுபவன்
சத்தியத்தை உணர்வான்.
சத்தியத்தை உணர வேண்டுமானால் என்னை பின்பற்றினால்
சத்தியத்தை உணர்ந்து கொள்ளலாம் என்கிறார்  இயேசு.

இயேசுவின் வார்த்தைகளையும்
மௌனத்தின் தன்மைகளையும்
தன்னுள் கிரகித்துக் கொண்ட பிலாத்து
நான் அவரிடத்தில் குற்றத்திற்கான எந்த ஒரு
தன்மையையும் , குணங்களையும் காணவில்லை
என்று வெளியே வந்து யூதர்களிடத்தில் கூறினான்.

இதன் மூலம் இயேசு சத்தியத்தை
வார்;த்தைகளால் உரைக்க முடியாது
தன்னை அறிந்து உணர்ந்து பின்பற்றுவதன் மூலம்
சத்தியத்தை உணர்ந்து
கொள்ள முடியும் என்கிறார்.


வால்மீகர்:

ஆமப்பா வுலகத்தில் பெருநுhல் பார்த்தோர்
                அவர்வர்கண்  டதையெலாம் சரிதை யென்பார்
ஓமப்பா கல்செம்பைத் தெய்வ மென்றே
                உருகுவார்  பூசிப்பார்  கிரியை யென்பார்
வாமப்பா யோகமென்று கனிகாய் தின்று
                வாய்பேசா வூமையைப் போல் திரிகுவார்கள்
காமப்பா ஞானமென விண்டு மேலும்
                காக்கைபித்தன் மிருகம்போல் சுற்று வாரே
                                ----வால்மீகர்--சூத்திர ஞானம் - 16 -------

எந்தக் கேள்விக்கும் பதில்களால் பதில் அளிக்க முடியாது
எப்படி நடக்கிறது என்று பதில் சொல்ல முடியும்
ஏன் நடக்கிறது என்று பதில் சொல்ல முடியாது.
ஹைட்ரஜனும் , ஆக்ஸிஜனும் சேர்ந்து
தண்ணீர்  எப்படி உருவாகிறது என்று கேட்டால்
அது உருவாகும் முறையை
அது உருவாகும் விதத்தை
அது உருவாகும் விதிமுறைகளை
அது அப்படித்தான் நடக்கிறது
அது அப்படித்தான் என்று
அறிவியல் அறிஞர்கள் கூறுவார்கள்.

அது ஏன் நிகழ்கிறது எவ்வாறு நிகழ்கிறது என்று கேட்டால்
பதில் சொல்ல முடியாது.
ஹைட்ரஜனும் ,ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தான் நீர்  கிடைக்குமா?
ஹைட்ரஜனும் ,ஆக்ஸிஜனும் சேராமல் நீர் கிடைக்காதா?
என்று கேட்டால் அவர்கள்
எங்களால் எப்படி நடக்கிறது என்று சொல்ல முடியும்
ஏன் நடக்கிறது என்று சொல்ல முடியாது என்பார்கள்.

விஞ்ஞானம் பகுத்தறிவுக்கு சான்றாக
தன்னை அடையாளபடுத்திக் கொள்கிறது.
மெய்ஞ்ஞானம் ஒரு போதும் தன்னை அடையாளப்
படுத்திக் கொள்வதுமில்லை.
பகுத்தறிவு பாசறையாக தன்னை
பிரகடனப்படுத்திக் கொள்வதுமில்லை.
அதனால் தான் விஞ்ஞானத்தால் ஏன்
என்பதற்கான பதிலை கண்டறிய முடிவதில்லை.
விஞ்ஞானத்தால் ஏன் என்பதற்கான
பதிலை சொல்ல முடிவதில்லை.
விஞ்ஞானம் ஏன் என்பதற்கான பதிலை
தேடுகிறது ,தேடுகிறது,
தேடிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் மெய்ஞ்ஞானம் ,
எல்லாவற்றையும் கடந்து செல்கிறது ;ஆழ்ந்து செல்கிறது;
பிரபஞ்ச ரகசியங்களை தெரிந்து கொள்கிறது;
ஏன் என்பதற்கான பதிலை அறிந்து கொள்கிறது;
எல்லாவற்றுக்கும் மூலம் பூரணம்
என்பதை உணர்ந்து கொள்கிறது .

ஆத்மாவோ ஒன்று , அதுவோ அசைவற்றது
ஆனாலும் விரைவானது மனதை விடவும்
அனைத்திற்கு முன்னும் அது சென்று விட்டதால்
அடையவோ முடியவிலலை ஐம்புலன்களாலும்,
ஆத்மாவோ ஓடுவதில்லை,  நிலைபெற்றே நிற்கிறது
ஆனாலும் முந்துகிறது ஓடுகின்ற அனைத்தையுமே
ஆத்மாவின் இருப்பினால் பிராணன் , ஜீவர்களின் இயக்கங்கள்
அனைத்தையுமே அதுவே தாங்குகின்றது .

அது அசைகிறது ஆனாலும் அது அசைகிறதில்லை
அது தொலைவில் உள்ளது , அதுவே அருகிலும் உள்ளது
எல்லாவற்றிலும் உள்ளே இருப்பதும் அதுவே
எல்லாவற்றிலும் வெளியே இருப்பதும் அதுவே
ஆத்மாவில் அனைத்தும் அடங்கி யிருத்தலையும்
ஆத்மாவான தான் அனைத்துள்ளும் அடங்கியிருத்தலையும்
அறிகின்ற ஞானிக்கு பகை ஏது? பாசந்தான் ஏது?
அனைத்தையும் ஆத்மாவாக காணுகின்ற ஞானிக்கு
அனைத்தையும் ஒன்றெனவே அறிகின்ற ஞானிக்கு
அல்லல் ஏது? சோகந்தான் ஏது?
விருப்பு ஏது வெறுப்புத் தான் ஏது
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
அருளொடு நின்றொளி வீசுவது அது
அதுவோ ரணமும் அற்றது , ஆசையும் அற்றது , உடலும் அற்றது
அது துhயது , அறியாமையை அறியாதது
அனைத்தையும் அறிந்தது , முக்காலத்தையும் உணர்ந்து
தானே உண்டாகித் தன்னையும் கடந்தது.
எக்காலத்தும் வேற்றுமையிலும் இணக்கமே கண்டது.

என்பதை இருப்பு நிலையான , இறைநிலையான  , மூலநிலையை
மெய்ஞ்ஞானம் உணர்ந்து கொள்கிறது .

உண்மையான மெய்ஞ்ஞான உணர்வு பெற்றவர்களால் மட்டுமே
முழுமை அடைந்தவர்களால் மட்டுமே
ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.
ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள்
முழுமை அடையாதவர்கள் மெய்ஞ்ஞானம் உணராதவர்கள்
மற்றவர்கள் வார்த்தையைக் களவாடி காலத்தை ஓட்டுபவர்கள்
என்று தெரிந்து கொள்ளலாம்.

உண்மையை உணர்ந்தவர்கள்
வார்த்தை ஜாலம் காட்ட மாட்டார்கள்
எழுத்துக்கள் மூலம் மயக்க மாட்டார்கள் , ஏனென்றால்
உண்மையை வார்த்தைகள் மூலமோ , எழுத்துக்கள் மூலமோ,
சொல்ல முடியாது என்று ,
உண்மையை உணர்ந்தவர்களுக்கு தெரியும்.


உண்மையை உணராதவர்கள்
உணமையை உணர்ந்தது போல நடிப்பவர்கள்
புத்தகங்கள் பலவற்றைப் படித்து
புத்தகத்தில் உள்ளது உண்மை என்று நம்பி
புத்தகத்தில் சொல்லப்பட்டது தனக்கு நடந்ததாக சரிபார்த்து
ஓப்பிட்டு நோக்கி தான் கண்டது உண்மை சத்தியம்
என்பார்கள்.

கல்லினால் செய்யப்பட்ட சிலையையும்
செப்பினால் வார்க்கப்பட்ட உருவத்தையும்
உண்மையான தெய்வம் என்று நம்பி பூஜிப்பார்கள்
உண்மை எது என்று தெரியாமல் வணங்குவார்கள்
உண்மையை அடைய முடியாமல் தடுமாறுவார்கள்
உண்மையை விட்டு விடுவார்கள்
உண்மையை அடையும் நிலையை துறப்பார்கள்

உண்மையை உணர்ந்து விட்டோம் என்று
மனதில் நினைத்துக் கொண்டு
பலவித யோகங்கள் செய்து
கனி ,காயை தின்று உலாவி
ஊமையைப் போல் பேசாமல் மௌனநிலை
இது மௌனத்தின் இறுதிநிலை என்று
கூறிக் கொண்டு அலைவார்கள்.


மேலும் ஞானி என்று தன்னை சொல்லிக் கொண்டு
சமுதாயத்தில் தன்னை ஞானி என்று காட்டிக் கொண்டு
மனிதனுக்குரிய செயல்களைச் செய்தால்
மனிதனுக்குரிய செயல்களைக் கடைபிடித்தால்
தன்னை மனிதர்  என்று சொல்லி விடுவார்கள்.
மனிதர்  பட்டியலில் தன்னை சேர்த்து  விடுவார்கள்
என்று நினைத்து,
மனிதனுக்குரிய செயல்களைச் செய்யாமல்
கடவுளாக தன்னை நினைத்துக் கொண்டு
ஞானியாக தன்னை பாவித்துக் கொண்டு
உண்மை உணர்ந்தவனாக தன்னை நினைத்துக் கொண்டு
மனிதனுக்குரிய செயல்களிலிருந்து நழுவி
கடவுள் செயலாக நினைத்து
கடவுளுக்குரிய செயலாக நினைத்து
மிருகத்திற்குரிய செயலை செய்து கொண்டு
உண்மை அறியாமல்
உண்மை உணர்ந்தது போல் பேசிக் கொண்டு
மிருகம் போல சுற்றித்திரிவார்கள்.

உண்மையை உணர்ந்தவர்களை இந்த சமுதாயம் கண்டு கொள்ளும்
எவ்வளவு தான் அவர்கள் தங்களை மறைத்துக் கொண்டாலும்
உண்மையை உண்மையாக உணர்ந்தவர்கள்
இந்த சமுதாயத்தில் வெளிப்பட்டே ஆக வேண்டும்.


உண்மையை உணர்ந்தது போல் நடிப்பவர்கள்
தங்களை தாங்களே அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும்
உயர்ந்தவர்  போல் காட்டிக் கொள்ள வேண்டும்.

உண்மையை உணராதவர்கள்
உண்மையை வார்த்தையில் கூறுகிறேன் என்று
கிளம்பும் போது தெரிந்து கொள்ளலாம்
அவர்கள் உண்மையை உணரவில்லை என்று.

உண்மையை வார்த்தைகளில் கூறமுடியாது
வார்த்தைகளில் கூறினால் அது உண்மையாக
இருக்க முடியாது என்கிறார்  வால்மீகர்.



இயேசு கிறிஸ்து - வால்மீகர்:

இயேசு,
சத்தியத்தை வார்த்தையால் கூற முடியாது.
இறைவனை விசுவாசித்து இறைவனுடன் இரண்டறக் கலப்பதன்
மூலமே சத்தியத்தை உணர முடியும் என்பதை விளக்குவதற்காக
மௌனத்தை கடைபிடித்து தனது செயலின் மூலம்
நிரூபித்துக் காட்டினார்.

அவ்வாறே,
வால்மீகரும்,
உண்மையை வார்த்தைகளால் சொல்ல முடியாது
வார்த்தையால் உண்மைகளை சொல்கிறேன் என்பவர்கள்
உண்மையை உணராமல் ஞானிகள் போல் தன்னை
காட்டிக் கொண்டு மிருகம் போல் அலைபவர்கள்
என்கிறார்.


       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுநாற்பத்திஏழு  ந்தான்முற்றே “”

July 08, 2012

இயேசு கிறிஸ்து-அகப்பேய் சித்தர்-பிச்சை-பதிவு-46

  

     

           இயேசு கிறிஸ்து-அகப்பேய் சித்தர்-பிச்சை-பதிவு-46   
               
         “”பதிவு நாற்பத்திஆறை விரித்துச் சொல்ல   
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
அவர்  சமாரியா நாட்டின் வழியாய்ப் போக வேண்டியிருந்தபடியால்,”
                                                                  ----யோவான் - 4 : 4
யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார்  என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.”
                                                                  ----யோவான் - 4 : 5
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது ; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்;  அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி வேளையாயிருந்தது.
                                                                  ----யோவான் - 4 : 6
அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும் படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்.
                                                                  ----யோவான் - 4 : 7
அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர்  மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி : தாகத்துக்குத்தா என்றார்.
                                                                  ----யோவான்  - 4 : 8
யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங் கலவாதவர்களானபடியால், சமாரிய ஸ்திரீ அவரை நோக்கி: நீர்  யூதனாயிருக்க, சமாரியா ஸ்தீரியாகிய என்னிடத்தில்,  தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
                                                                  ----யோவான் - 4 : 9
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர்  இன்னார்  என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர்  உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பார்  என்றார்.”
                                                                   ----யோவான்- 4 : 10
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டு கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத் தண்ணீர்  உண்டாகும்.
                                                                -----யோவான் - 4 : 11
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்
                                                              ------யோவான் - 4 : 13
நான் கொடுக்கிற தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர்  அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்
                                                              -----யோவான் - 4 : 14

செய்யும் தொழிலின் அடிப்படையில் இருந்த சாதி - இன்று
பிறப்பின் அடிப்படையில் மாறிவிட்டது.
ஒருவரை உயர்த்திக் காட்டுவதற்கும் ,
உயர்ந்த நிலையில் வைப்பதற்கும் ,
தாழ்த்திக் காட்டுவதற்கும் ,
தாழ்ந்த நிலையில் வைப்பதற்கும் ,
அடிமைப்படுத்தி வைப்பதற்கும் ,
அடையாளச் சின்னமாக சாதி சமுதாயத்தில் ,
பயன்படுத்தப் பட்டு வருகிறது.
சமுதாயத்தில் தள்ளி வைக்கப்பட்டவர்கள் ;
தாழ்த்தி வைக்கப்பட்டவர்கள் ;
அடக்கி வைக்கப்பட்டவர்கள் ;
ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ;
அனைவருடனும் இணைந்து சரிநிகர்  சமமாக
ஏற்றத்தாழ்வு இல்லாமல் ,
அடிமையாக இல்லாமல் மனிதரோடு மனிதராக
மனிதர்  என்ற நிலையை அடைந்து வாழவேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்தில்
சீர்திருத்த எண்ணம் கொண்டு
புரட்சிகர செயல்கள் பல செய்து
சமுதாயம் திருந்துவதற்கு
சமுதாயம் தன் நிலையை மாற்றிக் கொள்வதற்கு
சமுதாயம் துhய்மை நிலையை அடைவதற்கு
தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி
தனி மனிதன் திருந்த, சமுதாயம் திருந்தும்
தனி மனிதன் சிந்தனை சமுதாய சிந்தனையாக
மாற வேண்டும் என்ற கருத்து
வலுப்பெற வேண்டும் ; நிலைப்பெற வேண்டும் ;
மக்கள் மனது தெளிய வேண்டும் ;
மாற்றம் பெற வேண்டும் ;
மமதை அழிய வேண்டும் ;
ஆணவம் விலக வேண்டும் ;
அடிமைத் தனம் மாற வேண்டும் ;
கருணை சுரக்க வேண்டும் ;
அன்பு பொழிய வேண்டும் ;
அறம் தழைக்க வேண்டும் ;
மாற்றங்கள் உருவாக வேண்டும் ;
மனம் துhய்மையுற வேண்டும் ;
உள்ளம் தெளிவாக வேண்டும் ;
சமுதாயம் திருந்த வேண்டும் ;
பகைமை மாய வேண்டும் ;
புரட்சி பூக்க வேண்டும் ;
சமதர்மம் வளர வேண்டும் ;
சுயசிந்தனை பெருக வேண்டும் ;
பொதுநலம் ஓங்க வேண்டும் ;
சுயநலம் மாள வேண்டும் ;
அறிவு அரசாள வேண்டும் ;
மடமையை புதைக்க வேண்டும் ;
உண்மை ஓங்க வேண்டும் ;
பொய்மை எரிய வேண்டும் ;
நல்லவை நடக்க வேண்டும் ;
தீயவை சாக வேண்டும் ;

என்ற உயர்ந்த நோக்கத்தில்
சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்
அழகிய பூந்தோட்டமான இந்த சமுதாயத்தை
சில பன்றிகள் புகுந்து பாலைவனமாக்கி விட்டன
நல்ல நீரை அசுத்தமாக்கி விட்டன
என்பதை நினைவில் கொண்டு ,
நல்லெண்ணம் கொண்டோர்  இந்த சமுதாயத்தை
மாற்ற முற்பட்டு மாண்டு போனார்களே ஒழிய ?
சமுதாயத்தில் சாதி ,
பிளவினை  ஏற்படுத்தித் தான் வைத்திருக்கிறது

இயேசுவின் காலத்தில் சமாரியர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று
யூதர்களால் ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தனர்.
சாதி தன் சுய உருவத்துடன்
உலவிக் கொண்டு தான் இருந்தது அந்த கால கட்டத்தில்.
பிதா தனக்கு அளித்தவற்றை ,
பிதா தனக்கு உணர்த்தியவற்றை ,
பிதா தனக்கு வெளிப்படுத்தியவற்றை ,
பிதா தனக்கு காட்டியவற்றை ,
பிதா தனக்கு கொடுத்தவற்றை ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள்
அனைவரும் அறிய வேண்டும்
அறிந்துமனம் தெளிய வேண்டும்
ஆண்டவரை உணர வேண்டும் என்ற காரணத்திற்காக
இயேசு பல்வேறு இடங்களுக்கு சென்றார்
ஆண்டவர்  கருணையை பல்வேறு இடங்களில் பரப்பினார்
ஆண்டவர்  அன்பை பல்வேறு மக்களின் மேல் பாய்ச்சினார் .

அத்தகைய காலகட்டத்தில் - அவர்
சமாரியா நாட்டின் வழியாய்ப் போக வேண்டியிருந்தது.
இயேசு சமாரியப் பகுதியில் உள்ள சிக்கார்  என்ற ஊருக்கு வந்தார்.
பயணத்தால் ஏற்பட்ட களைப்பு உடலைத் தாக்க
கிணறு அருகே அமர்ந்தார்.

இயேசுவின் சீடர்கள் உணவைப் பெறும் பொருட்டு
ஊருக்குள்ளே சென்று இருந்தார்கள்
இயேசு சமாரியப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறார்
அப்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீர்  கேட்கிறார்
அவள் வியப்படைகிறாள் .ஏனெனில் ,
யூதர்கள் சமாரியர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதினர்.
அவர்கள் வீட்டில் தண்ணீர்  கூட குடிக்க  மாட்டார்கள்.
யூதர்கள் சமாரியருடன் சம்பந்தங் கலவாதவர்கள்.
இப்படியிருக்க அந்த ஸ்திரீ வியப்பு மேலிட்டால்
நீர்  யூதன் என்ற நிலையில் சமுதாயத்தால்
உயர்த்தி வைக்கப் பட்டிருப்பவர்.
சமாரியர்களாகிய நாங்கள் சமுதாயத்தால்
தாழ்த்தி வைக்கப்பட்டவர்கள்.
இப்படியிருக்க சமாரிய பெண்ணாகிய என்னிடத்தில்
தாகத்துக்கு தண்ணீர்  தா என்று எப்படி நீர்  கேட்கலாம் என்றாள்.

பிதாவின் குமாரர்,
இந்த அவனியை ரட்சிக்க வந்தவர்,
உயிரினங்களின் மேல் கருணை மழை பொழிய வந்தவர்,
பாவங்களை போக்க வந்தவர்,
தன்னிடம் தண்ணீர் கேட்கிறார்
என்பதை உணராத நிலையிலேயே
அந்த பெண்ணின் நெஞ்சம் இருக்கிறது.
உலகில் உள்ள பெரும்பான்மையானோர்
உண்மை ஆண்டவரை உணர முடியாமல்
துன்பத்தில் உழன்று கொண்ருக்கிறார்கள்.

அதனால் தான் இயேசு ஆண்டவரையும்,
ஆண்டவரின் செயல்களையும் ,
ஆண்டவரின் வெளிப்படுத்துதல்களையும் ,
ஆண்டவரின் மகிமைகளையும் ,
நீ உணர்ந்திருந்தாயானால் உன்னிடம்
தண்ணீர்  கேட்பவர்  யார் ? எதற்காக கேட்கிறார்?
எந்த நோக்கத்திற்காக கேட்கிறார்?
எந்த ஒன்றை வெளிப்படுத்த கேட்கிறார்?
எந்த ஒன்றை உணர்த்த கேட்கிறார்?
எந்த ஒன்றை சுட்டிக்காட்ட கேட்கிறார்?
எந்த ஒன்றை வலியுறுத்த கேட்கிறார்?
எந்த ஒன்றை நிலைநிறுத்த கேட்கிறார்?
எந்த ஒன்றை ஏற்படுத்த கேட்கிறார்?
என்பதை உணர்ந்திருந்தாயானால்
உணரக்கூடிய அறிவைப் பெற்றிருந்தாயானால்
அவரே உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுப்பார்.
ஆத்மா துhய்மை அடையக் கூடிய
நிலையைக் காட்டுவார்  என்று பொருள்.

அழுக்கு நிறைந்த துணியை நீர்  எப்படி
துhய்மைப் படுத்துகிறதோ அதைப் போல
பாவங்களால் சூழப்பட்ட ,
பாவங்களால் பாதிக்கப்பட்ட ,
பாவங்களால் நிரப்பப்பட்ட ,
பாவங்களால் களங்கப்பட்ட ,
அழுக்கடைந்த ஆத்மாவை துhய்மைப் படுத்தும்
முறையை உனக்கு அளித்து
ஆத்மாவை துhய்மைப்படுத்துவார்  என்கிறார்  இயேசு .

ஜீவத் தண்ணீர்  என்றால் ஆத்மாவை துhய்மைப் படுத்தும்
வழிமுறைகள் என்று பொருள் .
ஜீவத் தண்ணீரை  தாகம் தீர்க்கும் தண்ணீர் ,
உடல் பசியைத் தீர்க்கும் தண்ணீர் ,
உடல் தேவையைத் தீர்க்கும் தண்ணீர்,
என்று தவறாக புரிந்து கொண்ட அந்தப் பெண்
கிணற்றிலிருந்து நீரை மொள்ள
உம்மிடத்தில் ஒரு பாத்திரமுமில்லை
அப்படியிருக்க நீர்  எப்படி எனக்கு
ஜீவத் தண்ணீரை கொடுக்க முடியும் என்றாள் .

இயேசு ஜீவத் தண்ணீர்  என்று சொன்னது
ஆத்மாவை துhய்மைப் படுத்தும் வழிமுறைகள் அதாவது
ஆத்மாவை துhய்மைப் படுத்தும் தண்ணீர்.
அந்த பெண் ஜீவத் தண்ணீர்  என்று நினைத்துக் கொண்டது
உடல் பசியைத் தீர்க்கும் தண்ணீர்.
தவறான அர்த்தம் கொண்டு கேள்வி கேட்ட
அந்த பெண்ணின் கேள்விக்கு இயேசுவின் பதில்
மிக உயர்ந்தது ஆகும் .

மனிதர்களுக்கு பல்வேறு தாகங்கள்

மாணவனுக்கு மதிப்பெண் மேல் தாகம் ;
பட்டதாரிக்கு வேலையின் மேல் தாகம் ;
போட்டியிடுபவனுக்கு வெற்றியின் மேல் தாகம் ;
உழைப்பாளிக்கு கூலியின் மேல் தாகம் ;
படைப்பாளிக்கு புகழின் மேல் தாகம் ;
அரசியல்வாதிக்கு ஆட்சியின்மேல் தாகம் ;
போராளிக்கு கொள்கையின் மேல் தாகம் ;
ஏழைக்கு முன்னேற்றத்தின் மேல் தாகம் ;
வீரனுக்கு வெற்றியின் மேல் தாகம் ;
என்று தாகங்கள் பல உண்டு .

மனதை புறத்தே செலுத்தி
புறத் தேவைகளின் மீது தாகம் கொண்டவனுக்கு
தாகம் தீர்க்கும் மருந்து எவ்வளவு தான்
கிடைத்தாலும் அவன் தாகம் தீர்வதில்லை.

வற்றாத ஜீவ ஊற்றாக தொடர்ந்து வெளிப்பட்டவண்ணம் இருக்கும்
புறப்பொருள்களின் மேல் நாம் கொண்ட தாகம்.
மனதை புறத்தே செலுத்தி புறப்பொருள்களை அனுபவித்தல்;
புறப்பொருள்களை சுகித்தல்;
புறப்பொருள்களோடு தொடர்பு கொள்ளுதல்;
புறப்பொருட்களை உரிமை ஆக்கிக் கொள்ளுதல்;
புறப்பொருட்களின் மேல் ஆதிக்கம் செலுத்துதல்;
புறப்பொருட்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருதல்;
புறப்பொருட்களை தன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுதல்;
புறப்பொருட்களின் மேல் புறத்தே உள்ளவைகளின் மேல்
ஆதிக்கம் செலுத்துதல் ; அழிக்க நினைத்தல்;
களவாட துடித்தல் ; என்று மனதை புறத்தே செலுத்தியவனுக்கு
புறத்தேவைகளின் மேல் கொண்ட தாகம் தீராது.
புறப்பொருட்களின் மேல் நாம் கொண்ட
தாகம் தீர்க்கும் மருந்து எதுவென்று மனிதன் உணரவில்லையெனில்
தாகத்தை தீர்க்க முடியாமல்
தாகத்தின் தாக்கத்தை
தாங்க முடியாமல் மனதளவில்
தட்டுத் தடுமாறி தாழ்வான எண்ணம் கொண்டு
தன் நிலை மறந்து
தகாத செயல்கள் பல செய்து
தாழ்வான நிலை அடைந்து
தாளாத துயரத்தில்
தள்ளப்பட்டு
வாழ்க்கையை வாழ முடியாமல்
திண்டாடி திணறிக் கொண்டு அலைவான்.

புறத் தேவைகளின் மேல் பற்று வைத்தவனுக்கு
அதன் மேல் கொண்ட தாகம் தீராது.
தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.
பெருகிக் கொண்டே இருக்கும்.
அதனால் தான் இயேசு இந்தத் தண்ணீரை
குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும் என்கிறார்.
அதாவது புறத் தேவைகளின் மேல்
ஆசை கொண்டவனுக்கு
அதை மேலும் மேலும் அடைய வேண்டும்;
இன்பம் அனுபவிக்க வேண்டும்;
ஆசையை துய்க்க வேண்டும்;
என்ற பேராசை எழுமேயன்றி அவனுடைய ஆசை தீராது.
அதனால் தான் இயேசு இந்தத் தண்ணீரை ,
குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும் என்கிறார்.

புறத் தேவைகளின் பின்னால் செல்பவனுடைய
தாகம்  தீரவேண்டுமானால்
அவன் புறத் தேவைகளை விடுத்து ,
புறப் பொருட்கள் நிரந்தரமற்றவை என்பதை உணர்ந்து
புறப்பொருட்களைக் கடந்து
அகத்திற்குள் செல்ல வேண்டும் ;
ஆண்டவரை உணர வேண்டும் ;
ஆண்டவருடன் கலக்க வேண்டும் ;
அவ்வாறு இணையும் பேறு பெற்றவனால் மட்டுமே
புறப்பொருட்களின் மேல் கொண்ட தாகம்
அநித்தியமானது ; அழிந்து விடக் கூடியது ;
என்ற உண்மையை உணர முடியும் .

அத்தகைய  நிலை கொண்டவனால் மட்டுமே
புறப்பொருட்களின் மேல் கொண்ட தாகம் எத்தகைய
தன்மை உடையது என்பதை உணர முடியும்.
அழியக் கூடிய புறப்பொருட்களின் மேல் ஆசை
வைத்தோம் என்பதை அறிய முடியும்.

நான் காட்டும் வழியினைப் பின்பற்றுபவனுக்கு
புறப்பொருட்களின் மேல் உள்ள ஆசையிலிருந்து விடுபட்டு
அகத்திலுள்ள ஆண்டவருடன் இணையும் பேறு பெற்று
நித்தியமாய் வாழ்வதற்குரிய தகுதியைப் பெற முடியும்.
ஆகவே அழியக் கூடிய நிலையிலுள்ளவைகளின் மேல் உள்ள
ஆசையை விடுத்து என்றும் நித்தியமாய் இருக்கும்
ஆண்டவரை உணர்ந்து
ஆண்டவருடன் இணையும் வழி முறைகளைப் பின்பற்றி
நித்தியமாய் வாழ்வதற்குரிய பெரும் பேற்றினை
அடைய முடியும் .
ஆண்டவருடன் இணைந்து நித்தியமாய்
வாழ முடியும் என்கிறார்  இயேசு.



அகப்பேய்ச் சித்தர்:
      “”பிச்சை யெடுத்தாலும் அகப்பேய்
                    பிறவி தொலையாதே
        இச்சை யற்றவனிடம் அகப்பேய்
                   எம்மிறை கண்டாயே”””
                          ----அகப்பேய்ச் சித்தர்----பெரியஞானக் கோவை--
ஆத்திகத்திற்கும் , நாத்திகத்திற்கும்
வேறுபாடு உள்ளது.

கடவுளை உணர்ந்தவன் ஆத்திகன்
கடவுளை உணராதவன் நாத்திகன்

கடவுளை அறிந்தவன் ஆத்திகன்
கடவுளை அறியாதவன் நாத்திகன்

கடவுளில் கலந்தவன் ஆத்திகன்
கடவுளில் கலக்காதவன் நாத்திகன்

கடவுளைக் கண்டவன் ஆத்திகன்
கடவுளைக் காணாதவன் நாத்திகன்

அதை விடுத்து
கடவுள் உண்டு என்று சொல்பவன் ஆத்திகன்
கடவுள் இல்லை என்று சொல்பவன் நாத்திகன்
என்று மனித மனங்களை குறிப்பிட்ட
எல்லைக்குள் வரம்பிற்குள் இயக்க பழக்கப்படுத்தி விட்ட
காரணத்தினால் வார்த்தைகளுக்குள் இருக்கும்
அர்த்தம் புரியாமல் , புரிந்து கொள்ள முடியாமல்
மனிதன் திண்டாடுகிறான்.

எல்லையற்ற ஒன்றை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
கொண்டு வர முயற்சிக்கிறான்.
எல்லைக்குள் இருப்பவனால் எல்லைக்குட்பட்டவற்றை
மட்டுமே சிந்திக்க முடியும்.

எல்லையற்றதை உணர்ந்தவனால் மட்டுமே
எல்லையற்றதை உணர முடியும் ;
எல்லையற்றதை சிந்திக்க முடியும் ;
எல்லையற்றதில் தெளிவு பெற முடியும் ;
எல்லையற்றதின் விளக்கம் அறிய முடியும் ;
எல்லையற்றதின் மறைபொருள் உணர முடியும் ;

எல்லையற்றதை உணர்ந்தவனால்
எல்லைக்குட்பட்டவற்றை உணர முடியும் .
எல்லைக்குட்பட்டவனால் எல்லையற்றதை உணர்வது கடினம்
எல்லைக்குட்பட்டவன் எல்லையற்றதை அறிய முயற்சி
செய்ய வேண்டும் .
எல்லையற்ற ஒன்று எல்லை இன்றி
இருப்பதில் தெளிவு பெற வேண்டும் .
எல்லைக்குட்பட்ட நிலையில் இருந்துகொண்டு
எல்லையற்றதை அறிய முடியாது .

எல்லைக்குட்பட்டவைகளிலிருந்து மனம் விடுபட்டு
எல்லையற்ற நிலையில் அறிவு நிலை பெறும் போது
எல்லையற்ற ஒன்றை எல்லைக்குட்பட்டவனால்
உணரமுடியும்.
மனிதன் எல்லைக்குள்ளேயே வாழ்ந்து பழகி விட்டான்.
எல்லையை மீறி வெளியே வர மாட்டான்.
எல்லையை மீறும் போது தான் ;
எல்லையை எரிக்கும் போது தான் ;
எல்லையை விலக்கும் போது தான் ;
எல்லையை உடைக்கும் போது தான் ;
எல்லையை அறுக்கும் போது தான் ;
எல்லையை தாண்டும் போது தான் ;
மனிதன் எல்லையற்றதுடன் இணைய முடியும் .
எல்லையற்றதை உணர முடியும் .
எல்லையற்றதாகவே மாற முடியும் .

இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தை
அன்னையின் அன்பு என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
தந்தையின் கட்டுப்பாடு என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
சாதி முத்திரை என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
மதக் கோட்பாடு என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
திருமண பந்தம் என்ற எல்லைக்குள்  இருக்கிறது ;
குழந்தைச் செல்வம் என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
சமுதாய நியதி என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
ஒழுக்க நெறிகள் என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
கட்டுப்பாட்டு முறைகள் என்ற எல்லைக்குள் இருக்கிறது ;
இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே
சுழன்று சுழன்று இயங்கி அலைந்த மனித மனம்
இயங்கிய மனிதன் எவ்வாறு தன் எல்லையை
உடைத்து வெளியே வந்து எல்லையற்ற ஒன்றை உணர முடியும் .

எல்லையற்றது ஒரு குறிப்பிட்ட இயக்க நியதிக்குள்
இயங்குகிறது என்பதை உணர வேண்டுமானால்,
எல்லைக்குட்பட்டது எந்த இயக்க ஒழுங்குக்குள்
இயங்குகிறது என்பதை அறிய வேண்டும் .

விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டாகி விட்டது
நடக்க வேண்டியது நடக்க வேண்டிய காலத்தில்
நடந்தே தீரும் அதை யாராலும் மாற்ற முடியாது
என்பதை அனுபவத்தால் உணர்ந்து
என்பதில் புத்தி தெளிந்து
என்பதில் விளக்கம் பெற்று
என்பதில் சிந்தை தெளிந்த நிலையில்

கர்ம வினையின் தாக்கம் இருக்கும் வரை
பிறவிப் பெருங்கடல் நீண்டுகொண்டே செல்லும் .
கர்மவினை கழிக்காமல் இறப்பை அறுக்க முடியாது .
பிறப்பை எரிக்க முடியாது .
கர்மவினை இருக்கும் வரை பிறப்பு இறப்பு
சுழற்சி இருந்து கொண்டே தான் இருக்கும்
என்பதை உணர முடியும் .

கர்மவினை என்றால் என்ன என்றும் ,
அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ,
எத்தகைய நிலைகளை உண்டாக்கும் என்றும் ,
எத்தகைய இன்ப துன்பங்களை உருவாக்கும் என்றும் ,
எத்தகைய ஏற்ற இறக்கங்களை கொணரும் என்றும் ,
எத்தகைய வெற்றி தோல்விகளை நிலைப்படுத்தும் என்றும் ,
என்பதை உணர முடிந்தவனால் மட்டுமே ,
கர்ம வினையை கழிக்க முடியும் .

பிறப்பு - இறப்பை அழிக்க முடியும் .
முக்தி என்னும் மெய்ஞ்ஞான நிலையை அடைய முடியும் .
அதை விடுத்து எல்லைக்குட்பட்ட நிலையில் இருந்துகொண்டு ,
எல்லைக்குட்பட்டவற்றை அனுபவித்துக் கொண்டு ,
சுகபோகத்தில் திளைத்துக் கொண்டு ,
இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டு,
சிற்றின்ப மோகத்தில் மூழ்கிக் கொண்டு இருப்பேன் ;
வாழ்வின் வசந்தத்தை அனுபவிப்பேன்;
வசந்தத்தின் எல்லைகளை தொட்டிருப்பேன்;
என்ற நிலையில் ,
துன்பத்தின் சுமை எனக்கு வேண்டாம்;
துயரத்தின் கொடுமைகள் எனக்கு வேண்டாம்;
வறுமையின் வாட்டுதல் எனக்கு வேண்டாம்;
ஏழ்மையின் ஏமாற்றங்கள் எனக்கு வேண்டாம்;
கவலையின் கண்ணீர்  எனக்கு வேண்டாம்;
தோல்வியின் தாக்கங்கள் எனக்கு வேண்டாம் ;
என்று சோகங்கள் நிறைந்த,
கவலைகள் தோய்ந்த,
துன்பங்கள் குவிந்த,
இந்த வாழ்க்கை வேண்டாம்.
இன்ப வாழ்க்கை வேண்டும்;
இனிமை நிறைந்த வாழ்க்கை வேண்டும்;
எல்லாம் நிறைந்த வாழ்க்கை வேண்டும் ;
என்று இறைவனை நோக்கி இறைவா எனக்கு
துன்பம் நிறைந்த வாழ்க்கை வேண்டாம்
இன்பம் நிறைந்த வாழ்க்கை வேண்டும்
இனி எத்தனை பிறவி எடுத்தாலும்
இனி எத்தனை ஜென்மம் கடந்தாலும்
துன்பங்கள் நிறைந்த , சூழ்ந்த பிறவி வேண்டாம் என்றால்
துன்பமற்ற பிறவி கிடைக்குமா? கிடைக்காது !

பிறவி நீண்டு கொண்டே தான் செல்லும்
பிறப்பு - இறப்பு சுழல் அற வேண்டுமானால்
பிறவி தொலைய வேண்டுமானால்
கர்மவினை கழிய வேண்டும் ;
கர்மவினை எரிய வேண்டும் ;
கர்மவினை உருவாகாமல் எழும் முன்
தடுக்க வேண்டும்
மனித மனதினுள் இச்சை எழும்போது
கர்மவினை விதைக்கப்படுகிறது.
எண்ணம், சொல் ,செயலால் இச்சை அதிகரிக்க ,அதிகரிக்க
எல்லைக்குட்பட்டவற்றை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர
நினைக்கும் போது கர்மவினை செடியாகி ,மரமாகி ,பூவாகி,
காயாகி ,கனியாகி விடுகிறது.
வளர்ந்த கர்மவினை தன்னுள் உள்ளதை
மனிதனுக்கு எடுத்துக் காட்டும் போது,
மனிதன் தான் விதைத்ததை தானே காணும் போது,
தன்னால் விதைக்கப்பட்டது தனக்கே கொடுக்கப்படும் போது,

இன்பத்தின் எழில்களையும்
துன்பத்தின் கண்ணீரையும் காண்கிறான்.
இதனால் பிறவிப் பெருங்கடல் நீள்கிறது.
விதைக்கப்பட்டது புதைக்கப்படவில்லை,
புதைக்கப்படுவதில்லை,
அது இடம் ,நேரம், காலம், அழுத்தம் என்ற
நிலைகளுக்கேற்ப வெளிப்படுகிறது.
இத்தகைய கர்மவினைகள் வெளிப்படா வண்ணம்
இருக்க வேண்டுமானால் கர்மவினைகள் உருவாக வண்ணம்
இருக்க வேண்டுமானால் இச்சையற்று இருக்க வேண்டும்.

இச்சையற்று இருப்பவனிடம் கர்மவினைகள் உருவாகாது
இச்சை எழும்போதே கண்டு,
அதன் நிலை கண்டு,
அதன் தேவை கண்டு,
அதன் பிறப்பு கண்டு,
அதன் ஒழுக்கம் கண்டு,
ஆராய்வதன் மூலம் கர்மவினை உருவாகாமல் தடுக்க முடியும்.
கர்மவினை மனித வாழ்வை சிதைக்காமல் பார்க்க முடியும்.
இச்சையற்றவனிடம் கர்மவினை உருவாகாது.
கர்மவினை இல்லாதவன் மட்டுமே
இறைவனை அடைய முடியும்.
இறைவனாகவே மாற முடியும்.

அந்த நிலையில் தான்,
எல்லையற்ற ஒன்று எல்லைக்குட்பட்ட
இந்த உடலுக்குள் குடி கொண்டு
தான் அவனாக மாற முடியும்.
அதாவது இச்சையற்றவனிடம் இறைவன் இருப்பான்
என்கிறார்  அகப்பேய்ச் சித்தர்.



இயேசு கிறிஸ்து - அகப்பேய்ச் சித்தர் :
இயேசு,
புறத்தேவைகளின் மேல் உள்ள பற்றுக்களை விடுத்து
அகத்தே உள்ள ஆண்டவரை தரிசித்து
ஆண்டவர்  அருள் பெற்று ஆண்டவருடன் இணைந்து
பாவங்களைக் கழித்தவன் மட்டுமே நித்தியமாய் வாழக் கூடிய
நிலையைப் பெறுவான் என்கிறார்.

அவ்வாறே,
அகப்பேய்ச்சித்தரும்,
புறத் தேவைகளின் மேல் கொண்டுள்ள
இச்சைகளை விடுத்து கர்ம வினைகளைக் கழித்தால்
பிறப்பு - இறப்பு சுழற்சியை அறுத்து
நித்தியமாய் வாழக்கூடிய பெரும் பேற்றினை
அடைய முடியும் என்கிறார்.


                    “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                           போற்றினேன் பதிவுநாற்பத்திஆறு ந்தான்முற்றே “”