June 09, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 21


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 21

புத்தர் ஞானம்
அடைந்த பின்
பன்னிரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு
தன்னுடைய ஊர் திரும்புகிறார்

புத்தர் ஞானம் பெற்றவராக
புத்தர் என்ற உயர்ந்த
நிலையை அடைந்தவராக
அனைவராலும்
அறியப்பட்டிருந்த காலம்.

எல்லாத்
திசைகளிலும் இருந்து
புத்தரைக் காண வந்து
அவர் காலடியில் வீழ்ந்து
உண்மை அறிய வேண்டும்
என்ற எண்ணத்தில்
புத்தரை மக்கள் வணங்கினார்கள்

ஆனால் அவர் தயக்கத்துடன்
பார்க்க சென்றது
தன் மனைவி
யசோதரையைத் தான்
தன் மனைவி யசோதரை
என்ன சொல்வாள்
என்று தயக்கத்துடன் சென்றார்

தன் மனைவி
யசோதரை முன் போய் நின்றார்

யசோதரை அவரை
ஞானம் பெற்ற புத்தராக
பார்க்கவில்லை
அவரைத் தன் கணவனாகத்
தான் பார்த்தாள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு நாள்
நள்ளிரவில்
தன்னையும் தன்
பிள்ளையையும் தனியாக
விட்டு விட்டுச் சென்ற
தன் கணவனாகவே
பார்த்தாள்

அவர் கைவிட்டு போன
இரவுக்கு மறுநாள்
காலையில்
எழுந்து பார்த்தபோது
தன் கணவன் இல்லை
என்று தெரிந்ததும்
அவள் எப்படிக் கவலையும்
மன வேதனையும்
அடைந்து இருப்பாள்

தன் கணவன்
எங்கே சென்றார்
என்று தெரியாமல்
அவர் உயிருடன் இருக்கிறாரா
உயிருடன் இல்லையா
என்பது தெரியாமல்
யசோதரை 12 ஆண்டுகள்
எவ்வளவு கவலையுடன்
இருந்திருப்பாள்.

அதே கவலையுடன் தான்
தன்னை நடு இரவில்
விட்டு விட்டு சென்ற
கணவனாகவே யசோதரை
புத்தரை பார்த்துக் கேட்டாள்

ஏன் எங்களை இரவில்
தனியாக விட்டு விட்டு
எதுவும் சொல்லாமல்
சென்றீர்கள்
என்று கேட்டாள்

அதற்கு புத்தர் எந்தவித
பதிலும் அளிக்கவில்லை
புத்தர் பதில்
சொல்லி இருக்கலாம்
பெரிய அரண்மனை
உதவி புரிய பணியாட்கள்
அதிகப்படியான செல்வம்
கொடுத்து விட்டு தானே
சென்றிருக்கிறேன் என்று
ஆனால் அவரால்
அப்படி சொல்ல முடியாது
அது சரியான பதில்
இல்லை என்பது
புத்தருக்குத் தெரியும்

ஏனென்றால் அவைகள்
யாவும் ஒரு பெண்
மணந்து கொண்ட
கணவனுக்கு ஈடாகாது
என்பது அவருக்கு தெரியும்
அதனால் புத்தர்
எதுவும் பேசவில்லை

யசோதரை மீண்டும் கேட்டாள்
ஏன் நீங்கள் அடைந்த
ஞானத்தை
இந்த அரண்மனையிலேயே
மனைவி குழந்தைகளுடன்
இருந்து அடைந்து
இருக்க முடியாதா என்று
யசோதரை கேட்டாள்
புத்தர் யசோதரை கேட்ட
இந்த கேள்விக்கும்
பதிலே சொல்லவில்லை
மௌனம் காத்தார்

12 வருடமாக அடக்கி
வைத்திருந்த கோபதாபங்களும்,
மன வேதனைகளும்,
கவலைகளும் அழுகைகளாக
வெடித்துச் சிதறியது
12 ஆண்டுகால இதய
வேதனை புயலாய்ப்
பொங்கிச் சீறியது
கணவன்
அருகில் இல்லாமல்
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
தனது மனைவியிடம்
எந்த பதில் சொன்னாலும்
அது சரியாக இருக்காது
என்பது புத்தருக்குத் தெரியும்

அதனால் தான் புத்தர்
யசோதரையிடம் பதில்
எதுவும் சொல்லாமல்
அமைதி காத்தார்

உலகம் முழுக்க
புத்தரை தெய்வமாக
வணங்கும் இந்த உலகம்
யசோதரையை
கவனிக்கத் தவறி
விட்டது

புத்தரை போற்றிய
அளவிற்கு இந்த உலகம்
யசோதரையை நினைவு
கொள்ளவில்லை என்பது
வேதனையான விஷயம்

உலகம் மறந்து விட்ட
யசோதரையை
பத்தினி தெய்வமாக
நாம் ஏற்று
அவருக்கு உரிய
மரியாதையை செலுத்துவோம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////

June 08, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-20


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-20
  
அரிச்சந்திரன் கதையில்
அரிச்சந்திரன் மனைவியான
சந்திரமதியை பத்தினியாகப்
பார்க்கத் தவறி விட்டோம்

அரிச்சந்திரன் விசுவாமித்திரருக்கு
கொடுத்த வாக்குறுதியின்படி
நாட்டை அவரிடம்
ஒப்படைத்து விட்டு
ஊரை விட்டு சென்றபோது
அரசியாக வாழ்ந்த
அவருடைய மனைவி
சந்திரமதி எந்த கேள்வியையும்
கேட்காமல் அவர்
பின்னால் சென்றார்

அரிச்சந்திரன் தான்
பட்ட கடனை
அடைப்பதற்காக
தன் மனைவி சந்திரமதியையே
பொன்னிற்காக விற்கும்
நிலை வந்த போது கூட
சந்திரமதி கணவனுக்காக
தன்னை அடிமையாக விற்பதற்கும்
தான் அடிமையாக இருப்பதற்கும்
சம்மதித்தாள்  

அடிமையாக வேலை செய்தாள்
அவ்வளவு கஷ்டத்திலும்
கணவன் சொல்லை தட்டாமல்
கவலையுடன் வாழ்ந்தாலும்
கற்புநெறி தவறாத
பத்தினியாக வாழ்ந்தாள்

சந்திரமதியின் மகன்
லோகிதாஸ் இறந்துவிட்ட
காரணத்தினால்
சுடுகாட்டில் எரிப்பதற்காகச்
சென்ற போது
எரிப்பதற்கு பணம் இல்லாத
காரணத்தினால்
மிகவும் வேதனை அடைந்தாள்
அங்கே பிணம் எரிப்பவராக
அரிச்சந்திரனே இருந்தார்

அரிச்சந்திரனுக்கு தெரியாது
அவள் தன் மனைவி
சந்திரமதி என்று

சந்திரமதிக்கு தெரியாது
அவர் தன் கணவன்
அரிச்சந்திரன் என்று

அதனால் அரிச்சந்திரன்
சந்திரமதியைப் பார்த்து
மயானக் கடனை
செலுத்தி விட்டு மகனை
எரிக்கலாம் என்கிறார்.
சந்திரமதி
பணம் இல்லை என்றாள்.

அரிச்சந்திரன் பணம் இல்லை
என்றால் என்ன
உன் கழுத்தில்
இருக்கும் தாலியை
விற்று பணம்
கொண்டு வா என்கிறார்.
பிணம் எரிக்கும் வேலையில்
இருந்த அரிச்சந்திரன்

அப்பொழுது தான்
சந்திரமதி சொல்கிறாள்
தேவருக்கும், மூவருக்கும்
தெரியாத தாலி
பிறக்கும் போதே தன்னுடன்
பிறந்த தாலி
தன்னுடைய கணவனைத்
தவிர வேறு யாருடைய
கண்ணிற்கும் தெரியாத தாலி
உன் கண்ணுக்கு எப்படி
தெரிந்தது என்கிறாள்.


அரிச்சந்திரன்
மனைவி சந்திரமதியின் தாலி
அரிச்சந்திரனுக்கு மட்டுமே
தெரியும் வேறு யாருடைய
கண்ணிற்கும் தெரியாது

அதனால் சந்திரமதி
தன்னுடைய பத்தினி தன்மைக்கு
களங்கம் ஏற்பட்டு விட்டதா
என்று வருத்தப்பட்டாள்
அப்புறம் தான்
அரிச்சந்திரன் தெரிந்து
கொண்டான் வந்திருப்பது
தன் மனைவி
சந்திரமதி என்று

சந்திரமதி
பத்தினி தெய்வமாக
வாழ்ந்திருக்கிறாள்,

இறுதியில் அரிச்சந்திரன்
மனைவி சந்திரமதி
கொலைகாரி என்று
குற்றம் சாட்டப்பட்டு
தலையை துண்டிக்க
வேண்டும் என்று
அரிச்சந்திரனுக்கே
உத்தரவு வந்த போது
தன் கடமையை நிறைவேற்ற
அரிச்சந்திரன்
சந்திரமதியின் தலையை
துண்டிக்க சென்றான்

கணவன்
சொல்லை தட்டாமல்
தன் தலையை
அரிச்சந்திரன் வெட்டுவதற்கு
தயார் நிலையில்
இருந்தாள் சந்திரமதி

இறுதியில் வந்த கடவுள்
அரிச்சந்திரா உன் சத்தியத்தை
மெச்சினேன் நீயே
சத்தியவான்
உன்னை சத்தியவான்
என்று உலகமே புகழும்
சத்தியம் இருக்கும் வரை
உன் புகழும் இருக்கும்
என்று பட்டம் கொடுத்து
பாராட்டி விட்டு
சென்ற இறைவன்

கணவனுக்காககவே வாழ்ந்து
கணவன் சொல்
தட்டாமல் நடந்து
கணவனுக்காகவே
உயிர் விடத் துணிந்த
பத்தினியான சந்திரமதியை
பத்தினி என்று
அறிவிக்காமல்
இறைவன்
மறந்து விட்டு
சென்று விட்டார்

கடவுள் பத்தினி
என்று அறிவிக்கத் தவறிய
சந்திரமதியை நாம்
பத்தினியாக ஏற்றுக்
கொள்வோம்


--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////

June 07, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-19


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-19

இராமாயணத்தை
எடுத்துக் கொண்டால்
சீதையை மட்டும்
பத்தினியாக பார்த்த நாம்
ஒரு முக்கிய கதாபாத்திரம்
பத்தினியாக இருந்ததை
நாம் மறந்து விட்டோம்

அவள் தான் ஊர்மிளா
ஊர்மிளா ஜனகர்
மகாராஜாவின் மகள்

ஜனகர் உழுத போது
ஒரு பெட்டி கிடைத்தது
அதைத் திறந்து
பார்த்தபோது
அந்த பெட்டியில் ஒரு பெண்
குழந்தை இருந்தது
அது மகாலட்சுமி
மாதிரி இருந்தது
ஜனகர் சீதை
என்று பெயரிட்டார்.

ஆறு மாதம் கழித்து
ஜனகருக்கும் அவருடைய
மனைவி ஸுநயனிக்கும்
பிறந்தவள் தான் ஊர்மிளா

இராமர் சீதா தேவியை
திருமணம் செய்து கொண்டார்
ஜனகருடைய மகள்
ஊர்மிளாவை
இலட்சுமணர் திருமணம்
செய்து கொண்டார்
ஜனகருடைய தம்பி
குசத்துவசருடைய
மகள் மாண்டவியை பரதர்
திருமணம் செய்து கொண்டார்
மாண்டவியின் தங்கை
சுருத கீர்த்தியை
சத்ருக்னர் திருமணம்
செய்து கொண்டார்

கைகேயி இராமரை
காட்டுக்கு போக
சொன்னபோது
இராமருடன்
தானும் வருவேன்
என்று சீதை சொன்னதால்
இராமர் சீதையை
அழைத்துச் சென்றார்
அண்ணணுக்கு  
சேவை செய்ய தானும்
செல்ல வேண்டும்
என்று இலட்சுமணர்
சொன்னதால்
இலட்சுமணர் இராமருடன்
கூட சென்றார்

ஆனால்
இலட்சுமணர்
இராமருடன் கூட
சென்றபோது
மனைவி ஊர்மிளாவை
கூட்டிக் கொண்டு
செல்லவில்லை

இராமர் தன் மனைவியை
கூட்டிக் கொண்டு
சென்ற போது
இலட்சுமணரும்
தன் மனைவியை
கூட்டிக் கொண்டு
சென்றிருக்க வேண்டும்
ஆனால் அவர்
கூட்டிக் கொண்டு
செல்லவில்லை

இராமராவது சொல்லி
இருக்க வேண்டும்
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு வா என்று
சீதையாவது சொல்லி
இருக்க வேண்டும்
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு வா என்று
யாரும் சொல்லவில்லை

யாரும் சொல்லவில்லை
என்றாலும்
இலட்சுமணராவது
ஊர்மிளாவை அழைத்து
கொண்டு சென்றிருக்க வேண்டும்
ஆனால் இலட்சுமணரும்
அழைத்து செல்லவில்லை

அனைவரும் புதிதாக
திருமணம் ஆனவர்கள்
சீதையும் இளம் மனைவி
ஊர்மிளாவும் இளம் மனைவி
சீதை கணவருடன்
சென்ற போது
ஊர்மிளா மட்டும் எப்படி
கணவரை விட்டு
பிரிந்து இருப்பாள்

ஊர்மிளா மனம்
எப்படி வருத்தப்பட்டிருக்கும்
கணவரை பிரிந்து
தவித்த தவிப்பு
வருந்திய துயரம்
பட்ட கவலை
ஆகியவற்றை
வார்த்தைகளால்
சொல்ல முடியாது
கணவரை பிரிந்து
எவ்வளவு வேதனை
அனுபவித்திருப்பாள்

அதுவும் கணவரை
விட்டு பிரிந்து
பதினான்கு வருடங்கள்
தனிமையில்
அதுவும் சகல
வசதிகளுடன் கூடிய
அரண்மனையில்
எப்படி தனிமையில்
இருந்திருப்பாள்

எவ்வளவு செல்வங்கள்
இருந்தால் என்ன
எவ்வளவு பணியாட்கள்
இருந்தால் என்ன
கணவன் உடன் இல்லை
என்றால் எப்படி மனம்
உளைச்சல் அடைந்திருக்கும்

ஆனால் அவள்
கணவனை நினைத்து
பதினான்கு வருடங்கள்
தனிமையில் இருந்திருக்கிறாள்
கணவனையே நினைத்து
வருந்தியிருக்கிறாள்
பத்தினி தெய்வமாகவே
வாழ்ந்திருக்கிறாள் ஊர்மிளா

ஆனால் இவ்வளவு
பெருமை வாய்ந்த
ஊர்மிளாவை
நாம் பத்தினி என்று
பார்க்கத் தவறி விட்டோம்

ஊர்மிளாவை
நாம் பத்தினியாக
பார்க்கத் தவறியது
நம்முடைய குற்றம்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////

June 05, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-18


                 நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-18

திருவள்ளுவரின்
மனைவி வாசுகி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

இராமாயணத்தை
எடுத்துக் கொண்டால்
சீதேவியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
சீதேவி உயர்ந்த
குலத்தில் பிறந்தவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் வாழ்ந்தவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் சீதேவி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

மகாபாரதத்தை
எடுத்துக் கொண்டால்
திரௌபதியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
திரௌபதி உயர்ந்த
குலத்தில் பிறந்து
உயர்ந்த குலத்தில் வளர்ந்து
உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களை
திருமணம் செய்து கொண்டவள்
ஒழுக்கம் நிறைந்த
மக்களுடன் வாழ்ந்து பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் திரௌபதி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

சிலப்பதிகாரத்தை
எடுத்துக் கொண்டால்
கண்ணகியை பத்தினியாக
ஏற்றுக் கொண்டோம்
கண்ணகி செல்வச்
செழிப்பான குடும்பத்தில்
பிறந்தவள்
செல்வச் செழிப்பில்
வளர்ந்தவள்
உயர்ந்த குணம்
கொண்டவர்களுடன்
வாழ்ந்து பழகியவள்
சுற்றுப்புற சூழ்நிலையும்
கெட்டுப் போவதற்கு
வாய்ப்பு ஏதுமில்லை
அதனால் கண்ணகி
பத்தினியாக இருந்ததில்
ஆச்சரியமப்படுவதற்கு ஒன்றுமில்லை

வாசுகி,
சீதை,
திரௌபதி,
கண்ணகி
போன்றோர்
பத்தினியாக
இருந்ததில்
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை
ஏனென்றால் அவர்கள்
பிறந்த இடம்
வளர்ந்த இடம்
வாழ்ந்த இடம்
அத்தகைய இடம்

ஆனால் நாம்
மாதவியை பத்தினியாக
ஏற்றுக் கொள்வதில்
தயங்குகிறோம்

மாதவி
கணிகையர் குலத்தில் பிறந்தவள்
கணிகையர்களுடன் வளர்ந்தவள்
கணிகையர்களுடன் பழகியவள்
ஆனால் அவள்
மனதாலும், உடலாலும்
யாரையும் தீண்டவில்லை

கோவலனை மட்டுமே
தன் கணவனாக நினைத்தாள்
அவன் கூட
மட்டுமே வாழ்ந்தாள்
அவனையே நினைத்திருந்தாள்
வேறு ஆடவனை அவள்
நினைக்கவில்லை

கோவலன் மாதவியை
விட்டு பிரிந்து சென்ற
பிறகும் கூட
அவள் வேறு ஆடவனை
நினைக்கவில்லை
துறவறம் பூண்டாள்

அத்தகைய சிறப்புமிக்க
மாதவி வேறு
ஒருவளுடைய கணவனை
தன் கணவனாக பாவித்தாள்
என்ற காரணத்தால்
மாதவியை நாம் பத்தினியாக
ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்

நல்ல குடும்பத்தில்
பிறந்த பெண்கள்
தவறு செய்யாமல் இருந்தால்
ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை
ஆனால்
கணிகையர் குலத்தில்
பிறந்த ஒரு பெண்
பத்தினியாக இருந்தால்
அது ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

ஆமாம் மாதவி
கணிகையர் குலத்தில் பிறந்து
பத்தினியாக வாழ்ந்தவள்

நல்ல குடும்பத்தில்
பிறந்த ஒருவன்
நல்ல பழக்கவழக்கங்களுடன்
இருப்பதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை
ஆனால்
திருடனுக்கு பிறந்தவன்
திருட்டு தொழில் செய்யாமல்
நல்ல பழக்க வழக்கங்களுடன்
இருந்தால்
அது தான் ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

மாதவியும் அப்படித்தான்
கணிகையர் குலத்தில் பிறந்து
பத்தினியாக வாழ்ந்தவள்

இத்தகைய உயர்ந்த
குணங்களைப்
பெற்ற மாதவியை
நாம் பத்தினியாக
ஏற்றுக் கொள்ளாமல்
தவறு செய்து விட்டோம்
என்பதை மட்டும்
நினைவில் கொள்ள வேண்டும்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////